யெகோவாவின் குடும்பம் அருமையான ஒற்றுமையை அனுபவித்து மகிழ்கிறது
“இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது”!—சங்கீதம் 133:1.
1. இன்று பல குடும்பங்களின் நிலைமை என்னவாக இருக்கிறது?
குடும்பம் இன்று நெருக்கடி நிலையிலுள்ளது. குடும்பங்கள் பலவற்றில், திருமண இணைப்புகள் முறிவுறும் நிலையில் இருக்கின்றன. மணவிலக்கு மேன்மேலும் சர்வ சாதாரணமாக ஆகிக்கொண்டிருக்கிறது, மணவிலக்கு செய்துகொண்ட தம்பதிகளின் பிள்ளைகள் பலர், மிகுந்த துயரத்தை அனுபவிக்கின்றனர். கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சியற்றும் பிரிவுற்றும் இருக்கின்றன. எனினும், உண்மையான சந்தோஷத்தையும் மெய்யான ஒற்றுமையையும் அறிந்திருக்கிற ஒரு குடும்பம் உள்ளது. அதுவே யெகோவா தேவனின் சர்வலோகக் குடும்பம். அதில், எண்ணற்ற காணக்கூடாத தூதர்கள், தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலைகளை, கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நிறைவேற்றுகின்றனர். (சங்கீதம் 103:20, 21) ஆனால் அத்தகைய ஒற்றுமையை அனுபவித்து மகிழ்கிற ஒரு குடும்பம் பூமியில் இருக்கிறதா?
2, 3. (அ) கடவுளுடைய சர்வலோகக் குடும்பத்தின் பாகமாக இப்போது யார் இருக்கின்றனர், இன்று யெகோவாவின் சாட்சிகள் எல்லாரையும் நாம் எதற்கு ஒப்பிடலாம்? (ஆ) என்ன கேள்விகளை நாம் கலந்தாலோசிப்போம்?
2 அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பரலோகத்திலும் பூமியிலுமுள்ள ஒவ்வொரு குடும்பமும் அதன் பெயருக்குக் கடன்பட்டிருக்கிற, பிதாவுக்கு என் முழங்கால்களை மடக்குகிறேன்.” (எபேசியர் 3:14, 15, NW) பூமியிலுள்ள ஒவ்வொரு குடும்ப வழிமரபும் அதன் பெயருக்காகக் கடவுளுக்குக் கடன்பட்டிருக்கிறது, ஏனெனில் அவரே சிருஷ்டிகர். பரலோகத்தில் மனித குடும்பங்கள் இல்லையெனினும், அடையாளக் கருத்தில் பேசினால், கடவுள் தம் பரலோக அமைப்பை மணம் செய்திருக்கிறார், மேலும் இயேசு, பரலோகங்களில் தம்மோடு ஒன்றிணைக்கப்படும் ஆவிக்குரிய ஒரு மணவாட்டியை உடையவராக இருப்பார். (ஏசாயா 54:5; லூக்கா 20:34, 35; 1 கொரிந்தியர் 15:50; 2 கொரிந்தியர் 11:2) பூமியிலிருக்கும் உண்மையுள்ளவர்களான அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இப்போது கடவுளுடைய சர்வலோகக் குடும்பத்தின் பாகமாக இருக்கின்றனர். பூமிக்குரிய நம்பிக்கையுடையவர்களாக இருக்கும் இயேசுவின் “மற்ற செம்மறியாடுகள்,” அதன் எதிர்கால உறுப்பினராயிருக்க எதிர்பார்ப்பவர்கள். (யோவான் 10:16, NW; ரோமர் 8:14-17; காவற்கோபுரம், ஜனவரி 15, 1996, பக்கம் 31) எனினும், இன்று யெகோவாவின் சாட்சிகள் எல்லாரையும், ஒன்றுபட்ட, உலகளாவிய ஒரு குடும்பத்திற்கு ஒப்பிடலாம்.
3 கடவுளுடைய ஊழியர்களைக்கொண்ட இந்த அதிசயமான சர்வதேச குடும்பத்தின் பாகமாக நீங்கள் இருக்கிறீர்களா? நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்களென்றால், எவராவது பெற்றிருக்கக்கூடிய மிகப் பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றை அனுபவித்து மகிழ்கிறீர்கள். சண்டையும் ஒற்றுமையின்மையும் நிலவும் உலகப்பிரகாரமான பாலைவனத்தில், யெகோவாவின் பூகோள குடும்பம்—அவருடைய காணக்கூடிய அமைப்பு—சமாதானமும் ஒற்றுமையும் செழிக்கும் ஒரு பாலைவனச்சோலையாக உள்ளது என்பதற்கு லட்சக்கணக்கானோர் உறுதியளிப்பர். யெகோவாவின் உலகளாவிய குடும்பத்தின் ஒற்றுமையை எவ்வாறு விவரிக்கலாம்? அத்தகைய ஒற்றுமையை ஊக்குவித்து வளர்க்கும் காரணிகள் யாவை?
எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது!
4. சகோதர ஒற்றுமையைப் பற்றி சங்கீதம் 133 சொல்வதை உங்கள் சொந்த வார்த்தைகளில் நீங்கள் எவ்வாறு சொல்வீர்கள்?
4 சகோதர ஒற்றுமையை, சங்கீதக்காரனாகிய தாவீது ஆழ்ந்த முறையில் மதித்துணர்ந்தார். அதைப் பற்றி பாடுவதற்கு அவர் தேவாவியாலும்கூட ஏவப்பட்டார்! அவர் தன் சுரமண்டலத்துடன் இவ்வாறு பாடினதைக் கற்பனை செய்து பாருங்கள்: “இதோ, சகோதரர் ஒருமித்து வசிப்பது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது! அது ஆரோன் சிரசின்மேல் ஊற்றப்பட்ட அருமையான தைலத்துக்கு ஒப்பாயிருக்கும். அது அவன் தாடியிலே வடியும், அது அவன் அங்கியில் இறங்கும். சீயோன் பர்வதங்கள்மேல் இறங்குகிற எர்மோன் பனிக்கும் அது ஒப்பாயிருக்கிறது; அங்கே யெகோவா ஆசீர்வாதத்தை, என்றென்றுமுள்ள ஜீவனையே, கட்டளையிடுகிறார்.”—சங்கீதம் 133:1-3, திருத்திய மொழிபெயர்ப்பு.
5. சங்கீதம் 133:1, 2-ஐ ஆதாரமாகக் கொண்டு, இஸ்ரவேலருக்கும் கடவுளுடைய தற்கால ஊழியருக்கும் இடையே என்ன ஒப்புமையைச் செய்யலாம்?
5 கடவுளுடைய பூர்வ ஜனங்களாகிய இஸ்ரவேலர் அனுபவித்து மகிழ்ந்த சகோதர ஒற்றுமைக்கு அந்த வார்த்தைகள் பொருந்தின. தங்கள் வருடாந்தர பண்டிகைகள் மூன்றிற்காக எருசலேமில் இருந்தபோது, அவர்கள் நிச்சயமாகவே ஒன்றாக ஒற்றுமையாய் வாழ்ந்தனர். அவர்கள் பல்வேறு கோத்திரங்களிலிருந்து வந்தபோதிலும், ஒரே குடும்பமாக இருந்தனர். ஒன்றாக இருந்ததானது, இன்பமான நறுமணமுடைய சுகந்த அபிஷேகத் தைலத்தைப்போல், அவர்கள்மீது ஆரோக்கியமான பாதிப்புடையதாக இருந்தது. அத்தகைய தைலம் ஆரோனின் தலைமீது ஊற்றப்பட்டபோது, அது அவருடைய தாடியில் கீழிறங்கி, அவருடைய அங்கியின் கழுத்துப்பட்டைக்கு வடிந்தோடினது. ஒன்றாக இருந்தது, இஸ்ரவேலருக்கு நல்ல பாதிப்புடையதாக இருந்தது, அது, கூடியிருந்த முழு ஜனத்தினூடேயும் ஊடுருவிப் பரவினது. தப்பெண்ண பிணக்குகள் தெளிவாக்கித் தீர்க்கப்பட்டன, ஒற்றுமை முன்னேற்றுவிக்கப்பட்டது. அதைப்போன்ற ஒற்றுமை இன்று யெகோவாவின் பூகோள குடும்பத்தில் இருந்துவருகிறது. தவறாமல் கூட்டுறவுகொண்டு வருவது அதன் உறுப்பினரின்பேரில் ஆரோக்கியமான ஆவிக்குரிய பாதிப்பைக் கொண்டிருக்கிறது. கடவுளுடைய வார்த்தையின் அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்தி வருகையில் எந்தத் தப்பெண்ண பிணக்குகளும் அல்லது சிக்கல்களும் நீக்கப்படுகின்றன. (மத்தேயு 5:23, 24; 18:15-17) யெகோவாவின் ஜனங்கள், தங்கள் சகோதர ஒற்றுமையின் பலனாக வரும் பரஸ்பர ஊக்கமூட்டுதலை மிகுந்த நன்றியோடு மதிக்கின்றனர்.
6, 7. எவ்வாறு இஸ்ரவேலின் ஒற்றுமை எர்மோன் மலையின் பனியைப்போல் இருந்தது, இன்று கடவுளுடைய ஆசீர்வாதத்தை எங்கே காணலாம்?
6 இஸ்ரவேலர் ஒற்றுமையோடு ஒன்றாக வசித்தது எவ்வாறு எர்மோன் மலையின் பனியைப்போலும் இருந்தது? இந்த மலைச் சிகரம், கடல்மட்டத்துக்குமேல் 2,800 மீட்டருக்கு மேற்பட்டு உயர்ந்திருந்ததால், அது பெரும்பாலும் ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்தது. எர்மோனின் பனிமூடிய உச்சியானது, இரவின் நீராவியை உறையச் செய்து, இவ்வாறு மிகுதியான பனி உண்டாகச் செய்கிறது. இது, நெடுங்காலம் நீடிக்கும் வறட்சி காலத்தின்போது தாவரவர்க்கத்தைப் பாதுகாத்து வைக்கிறது. எர்மோன் மலைத்தொடரிலிருந்து வீசும் குளிர் காற்று, அத்தகைய நீராவியை தெற்கே எருசலேமின் நிலப்பகுதி வரையாகவும் கொண்டுசெல்ல முடியும். அங்கே அது பனியாக உறைகிறது. ஆகவே, சங்கீதக்காரன், ‘சீயோன் பர்வதங்கள்மேல் இறங்குகிற எர்மோன் பனியைப்’ பற்றி திருத்தமாய்ப் பேசினார். யெகோவாவின் வணக்கத்தாரான குடும்பத்தின் ஒற்றுமையை ஊக்குவித்து வளர்க்கும் கிளர்ச்சியூட்டுகிற பாதிப்பைப் பற்றிய எத்தகைய சிறந்த ஒரு நினைப்பூட்டுதல்!
7 கிறிஸ்தவ சபை அமைக்கப்படுவதற்கு முன்பாக, சீயோன் அல்லது எருசலேம், உண்மையான வணக்கத்தின் மையமாக இருந்தது. ஆகையால் அங்கே ஆசீர்வாதம் இருக்கும்படி கடவுள் கட்டளையிட்டார். எல்லா ஆசீர்வாதங்களுக்கும் மூலகாரணர், எருசலேமிலிருந்த அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் அடையாள அர்த்தத்தில் தங்கியிருந்ததால், ஆசீர்வாதங்கள் அங்கிருந்து வரும். எனினும், உண்மையான வணக்கம் இனிமேலும் எந்த ஓர் இடத்தின்பேரிலும் சார்ந்தில்லையாதலால், கடவுளுடைய ஊழியரின் ஆசீர்வாதத்தையும், அன்பையும், ஒற்றுமையையும் இன்று பூமி முழுவதிலும் காணலாம். (யோவான் 13:34, 35) இந்த ஒற்றுமையை ஊக்குவித்து வளர்க்கும் சில காரணிகள் யாவை?
ஒற்றுமையை ஊக்குவித்து வளர்க்கும் காரணிகள்
8. ஒற்றுமையைப் பற்றி யோவான் 17:20, 21-ல் நாம் என்ன கற்றறிகிறோம்?
8 யெகோவாவின் வணக்கத்தாருடைய ஒற்றுமை, இயேசு கிறிஸ்துவின் போதகங்கள் உட்பட, திருத்தமாய்ப் புரிந்துகொண்ட கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதன்பேரில் ஆதாரங்கொண்டிருக்கிறது. சத்தியத்துக்குச் சாட்சி கொடுக்கவும், பலிக்குரிய மரணத்தில் மரிக்கவும், யெகோவா தம்முடைய குமாரனை பூமிக்கு அனுப்பினதன்மூலம், ஒன்றுபட்ட கிறிஸ்தவ சபை உருவாகி அமைவதற்கு வழி திறக்கப்பட்டது. (யோவான் 3:16; 18:37) அதன் உறுப்பினருக்குள் உண்மையான ஒற்றுமை இருக்கவேண்டுமென்பது, இயேசு இவ்வாறு ஜெபித்தபோது தெளிவாக்கப்பட்டது: “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.” (யோவான் 17:20, 21) கடவுளுக்கும் அவருடைய குமாரனுக்கும் இடையில் இருந்துவருவதைப்போன்ற ஓர் ஒற்றுமையை இயேசுவைப் பின்பற்றினோர் உண்மையில் அடைந்தனர். கடவுளுடைய வார்த்தைக்கும் இயேசுவின் போதகங்களுக்கும் இணங்க அவர்கள் செயல்பட்டதனால் இது நடந்தது. இன்று யெகோவாவின் உலகளாவிய குடும்பத்தின் ஒற்றுமைக்கு முக்கிய காரணம் இதே மனப்பான்மைதான்.
9. யெகோவாவின் ஜனங்களுடைய ஒற்றுமையில் பரிசுத்த ஆவி என்ன பாகத்தை வகிக்கிறது?
9 யெகோவாவின் ஜனங்களை ஒன்றுபடுத்தும் மற்றொரு காரணி, நமக்குக் கடவுளுடைய பரிசுத்த ஆவி, அல்லது செயல்நடப்பிக்கும் சக்தி இருப்பதாகும். இது, யெகோவாவின் வார்த்தையினுடைய வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தைப் புரிந்துகொள்ளவும், இவ்வாறு அவரை ஒற்றுமையுடன் சேவிக்கவும் நமக்கு உதவிசெய்கிறது. (யோவான் 16:12, 13) சண்டை, பொறாமை, கோபாவேசம், சச்சரவுகள் போன்ற ஒற்றுமையைக் கெடுக்கும் மாம்ச கிரியைகளைத் தவிர்க்க அந்த ஆவி நமக்கு உதவிசெய்கிறது. மாறாக, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய ஒன்றுபடுத்தும் கனிகளைக் கடவுளுடைய ஆவி நம்மில் பிறப்பிக்கிறது.—கலாத்தியர் 5:19-23.
10. (அ) ஒன்றுபட்ட ஒரு மனித குடும்பத்தில் இருந்துவரும் அன்புக்கும் யெகோவாவிடம் பயபக்தியாக இருப்போருக்குள் காணப்படுகிற அன்புக்குமிடையே என்ன இசைவுப் பொருத்தத்தைக் குறிப்பிடலாம்? (ஆ) ஆளும் குழுவின் உறுப்பினர் ஒருவர், ஆவிக்குரிய தன் சகோதரரோடு கூடிவருதைப் பற்றியதில் தன் உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்திக் கூறினார்?
10 ஒன்றுபட்ட ஒரு குடும்பத்தின் உறுப்பினர் ஒருவரையொருவர் நேசித்து, ஒன்றுகூடியிருப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். அதற்கொப்பாக, யெகோவாவின் வணக்கத்தாருடைய ஒன்றுபட்ட குடும்பத்தில் இருப்போர், அவரையும், அவருடைய குமாரனையும், உடன் விசுவாசிகளையும் நேசிக்கின்றனர். (மாற்கு 12:30; யோவான் 21:15-17; 1 யோவான் 4:21) அன்புள்ள இயல்பான ஒரு குடும்பம் ஒன்றுசேர்ந்து சாப்பிடுவதில் மகிழ்ச்சியடைவதுபோல், கடவுளிடம் பயபக்தியாக இருப்போர், கிறிஸ்தவக் கூட்டங்களிலும், அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் ஆஜராயிருந்து, நல்ல கூட்டுறவிலிருந்தும், மிகச் சிறந்த ஆவிக்குரிய உணவிலிருந்தும் இன்பமடைகின்றனர். (மத்தேயு 24:45-47; எபிரெயர் 10:24, 25) யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் ஓர் உறுப்பினர் ஒருமுறை இவ்வாறு சொன்னார்: “சகோதரரோடு கூடுவது, எனக்கு, வாழ்க்கையின் மிகப் பெரும் இன்பங்களில் ஒன்றாகவும் ஊக்குவிக்கும் காரணியாகவும் இருக்கிறது. கூடுமானால், ராஜ்ய மன்றத்தில், முதல் வருவோரோடு நான் வந்து கடைசியாக விட்டுச் செல்வோரோடு அங்கிருந்து செல்லவே எனக்குப் பிரியம். கடவுளுடைய ஜனங்களோடு பேசுகையில் உள்ளார்ந்த ஒரு மகிழ்ச்சியை உணருகிறேன். அவர்கள் மத்தியில் நான் இருக்கையில் என் சொந்த வீட்டில் என் குடும்பத்துடன் இருப்பதாக மனச் சாந்தியை உணருகிறேன்.” நீங்கள் அவ்வாறு உணருகிறீர்களா?—சங்கீதம் 27:4.
11. என்ன ஊழியத்தில் யெகோவாவின் சாட்சிகள் முக்கியமாய் சந்தோஷத்தைக் கண்டடைகின்றனர், கடவுளுடைய சேவையை நம்முடைய வாழ்க்கையின் ஒருமித்த கவனம் ஊன்றிய காரியமாக்குவதனால் என்ன பலன் உண்டாகிறது?
11 ஒன்றுபட்ட ஒரு குடும்பம், காரியங்களை ஒன்றுசேர்ந்து செய்வதில் மகிழ்ச்சியைக் கண்டடைகிறது. அவ்வாறே, யெகோவாவின் வணக்கத்தாராலாகிய குடும்பத்தில் இருப்போர், தங்கள் ராஜ்ய பிரசங்க மற்றும் சீஷராக்கும் ஊழியத்தை ஒன்றுசேர்ந்து செய்வதில் சந்தோஷத்தைக் கண்டடைகின்றனர். (மத்தேயு 24:14; 28:19, 20) அதில் தவறாமல் பங்குகொள்வது, யெகோவாவின் மற்ற சாட்சிகளோடு நெருங்கியிருக்கும்படி நம்மை கொண்டுவருகிறது. கடவுளுடைய சேவையை நம்முடைய வாழ்க்கையின் ஒருமித்தக் கவனம் ஊன்றிய காரியமாக்கி, அவருடைய ஜனங்களின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரிப்பதும், குடும்ப மனப்பான்மையை நமக்குள் மேலும் ஊக்குவித்து வளர்க்கிறது.
தேவராஜ்ய ஒழுங்கு முக்கியமானது
12. சந்தோஷமாயும் ஒன்றுபட்டும் இருக்கிற ஒரு குடும்பத்தின் தனிப் பண்புகள் யாவை, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைகளில் என்ன ஏற்பாடு ஒற்றுமையை ஊக்குவித்து வளர்த்தது?
12 திடமான ஆனால் அன்புள்ள தலைமை வகிப்பையுடையதும் ஒழுங்கை மதித்து நடப்பதுமான ஒரு குடும்பம் பெரும்பாலும் ஒன்றுபட்டதாயும் சந்தோஷமாயும் இருக்கும். (எபேசியர் 5:22, 33; 6:1) யெகோவா சமாதான ஒழுங்குக்குரிய கடவுள், அவருடைய குடும்பத்திலுள்ள எல்லாரும் அவரை ஈடற்ற ‘உன்னதமானவராக’ மதிக்கின்றனர். (தானியேல் 7:18, 22, 25, 27; 1 கொரிந்தியர் 14:33) மேலும் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, எல்லாவற்றிற்கும் சுதந்தரவாளியாக அவர் நியமித்து, வானத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரத்தையும் அவருக்கு அளித்திருக்கிறார் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். (மத்தேயு 28:18; எபிரெயர் 1:1, 2) கிறிஸ்துவை அதன் தலைவராகக் கொண்டு கிறிஸ்தவ சபை, ஒழுங்குள்ள, ஒன்றுபட்ட ஓர் அமைப்பாக உள்ளது. (எபேசியர் 5:23) முதல் நூற்றாண்டு சபைகளின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கு, அப்போஸ்தலராலும் ஆவிக்குரியப் பிரகாரமாய் முதிர்ச்சியடைந்த மற்ற ‘மூப்பராலும்’ ஆகிய ஆளும் குழு ஒன்று இருந்தது. நியமிக்கப்பட்ட கண்காணிகளையும், அல்லது மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் தனிப்பட்ட சபைகள் கொண்டிருந்தன. (அப்போஸ்தலர் 15:6; பிலிப்பியர் 1:1) தலைமை தாங்கினவர்களுக்குக் கீழ்ப்படிந்தது ஒற்றுமையை ஊக்குவித்து வளர்த்தது.—எபிரெயர் 13:17.
13. யெகோவா, ஆட்களை எவ்வாறு கவர்ந்திழுக்கிறார், இதனால் உண்டாகும் பலன் என்ன?
13 ஆனால், திறம்பட்ட பொதுமுறையான தலைமை வகிப்பே, யெகோவாவினுடைய வணக்கத்தாரின் ஒற்றுமைக்குக் காரணம் என்று, இந்த எல்லா ஒழுங்கும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறதா? இல்லவேயில்லை! கடவுளையோ அவருடைய அமைப்பையோ பற்றியதில் அன்பற்ற எதுவும் கிடையாது. அன்பைக் காட்டுவதன் மூலமே யெகோவா, ஆட்களைக் கவர்ந்திழுக்கிறார்; ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர், கடவுளுக்குத் தங்கள் முழு இருதயப்பூர்வமான ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக முழுக்காட்டப்படுவதனால், தாங்களாக மனமுவந்து மகிழ்ச்சியுடன் யெகோவாவினுடைய அமைப்பின் பாகமாகிறார்கள். அவர்களுடைய மனப்பான்மை, யோசுவாவினுடையதைப்போன்று உள்ளது, அவர் உடன் இஸ்ரவேலரைப் பின்வருமாறு ஊக்குவித்தார்: “யாரைத்தான் சேவிப்பது என்று இந்நாளிலேயே தெரிந்துகொள்ளுங்கள்; . . . நானும் என் வீட்டாருமோ யெகோவாவையே சேவிப்போம்.”—யோசுவா 24:15, தி.மொ.
14. யெகோவாவின் அமைப்பு தேவாட்சியையுடையது என்று நாம் ஏன் சொல்லலாம்?
14 யெகோவாவின் குடும்பத்தினுடைய பாகமாக, நாம் மகிழ்ச்சியுடன் மட்டுமல்லாமல் பாதுகாப்புடனும் இருக்கிறோம். அவருடைய அமைப்பு தேவாட்சியை உடையதாக இருப்பதால் இவ்வாறு இருக்கிறது. கடவுளுடைய ராஜ்யம் தேவாட்சியாக (கிரேக்கில் தியாஸ் என்பது கடவுள், கிரேட்டாஸ் என்பது ஆட்சி) உள்ளது. அது கடவுளால் ஆளப்படும் ஆட்சி, அவரால் அமர்த்தப்பட்டு நிலைநாட்டப்பட்டது. யெகோவாவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட “பரிசுத்த ஜனம்” அவருடைய ஆட்சிக்குக் கீழ்ப்பட்டுள்ளது, ஆகையால் அதுவும் தேவாட்சியையுடையது. (1 பேதுரு 2:9) மகா தேவ அரசராகிய யெகோவா, நம்முடைய நியாயாதிபதியாகவும், சட்ட நிரூபணராகவும், ராஜாவாகவும் இருப்பதால், நாம் பாதுகாப்பாய் உணருவதற்கு நமக்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன. (ஏசாயா 33:22, தி.மொ.) எனினும், ஏதாவது விவாதம் எழும்பி, நம்முடைய மகிழ்ச்சியையும், பாதுகாப்பையும், ஒற்றுமையையும் கெடுக்கும்படி பயமுறுத்தினால் என்ன செய்வது?
ஆளும் குழு நடவடிக்கை எடுக்கிறது
15, 16. முதல் நூற்றாண்டில் என்ன வாக்குவாதம் எழும்பினது, ஏன்?
15 ஒரு குடும்பத்தின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு, எப்போதாவது ஒரு விவாதம் தீர்க்கப்பட வேண்டியதாக இருக்கலாம். அவ்வாறெனில், பொ.ச. முதல் நூற்றாண்டில் கடவுளுடைய வணக்கத்தாராலாகிய குடும்பத்தில் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு, ஆவிக்குரிய பிரச்சினை ஒன்று தீர்க்கப்பட வேண்டியதாக இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வது? ஆளும் குழு நடவடிக்கை எடுத்து ஆவிக்குரிய காரியங்களின்பேரில் தீர்மானங்களைச் செய்தது. அத்தகைய நடவடிக்கையைப் பற்றிய வேதப் பதிவு நமக்கு இருக்கிறது.
16 ஏறக்குறைய பொ.ச. 49-ல் அந்த ஆளும் குழு, ஒரு முக்கியமான பிரச்சினையைத் தீர்த்து, அதன்மூலம் ‘தேவனுடைய வீட்டாரின்’ ஒற்றுமையைப் பாதுகாக்கும்படி எருசலேமில் கூடியது. (எபேசியர் 2:19) ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன்பாக, அப்போஸ்தலன் பேதுரு, கொர்நேலியுவுக்குப் பிரசங்கித்திருந்தார், முதல் தடவையாக புறஜாதியார், அல்லது புறதேச ஜனங்கள், முழுக்காட்டப்பட்ட விசுவாசிகளானார்கள். (அப்போஸ்தலர் 10-ம் அதிகாரம்) பவுலின் முதல் மிஷனரி பயணத்தின்போது, புறஜாதியார் பலர் கிறிஸ்தவத்தை ஏற்றனர். (அப்போஸ்தலர் 13:1–14:28) உண்மையில், புறஜாதி கிறிஸ்தவர்களாலாகிய ஒரு சபை சீரியாவிலிருந்த அந்தியோகியாவில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. மதமாறின புறஜாதியார் விருத்தசேதனம் செய்யப்பட்டு, மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்று யூதக் கிறிஸ்தவர்கள் சிலர் உணர்ந்தனர், ஆனால் மற்றவர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. (அப்போஸ்தலர் 15:1-5) இந்த வாக்குவாதம் முழு ஒற்றுமைக்கேட்டுக்கு வழிநடத்தியிருக்கக்கூடும். யூத சபை, புறஜாதி சபை என்று தனி சபைகளை அமைப்பதற்குங்கூட வழிநடத்தியிருக்கலாம். ஆகையால், கிறிஸ்தவ ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு, ஆளும் குழு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
17. அப்போஸ்தலர் 15-ம் அதிகாரத்தில் தேவாட்சிக்கிசைவாய்ப் பொருந்தி செயற்படும் என்ன முறை விவரிக்கப்பட்டிருக்கிறது?
17 அப்போஸ்தலர் 15:6-22-ன் பிரகாரம், “அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.” மேலும் அந்தியோகியாவிலிருந்து அனுப்பப்பட்ட பிரதிநிதிகளின் ஒரு குழு உட்பட, மற்றவர்களும் அங்கிருந்தனர். ‘புறஜாதியார் தன்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசித்தார்கள்’ என்று பேதுரு முதலில் விளக்கிக்கூறினார். பின்பு “கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச்” சொன்னதைக் கேட்டார்கள். அடுத்தபடியாக யாக்கோபு, அந்தக் கேள்வி எவ்வாறு தீர்மானிக்கப்படலாம் என்று யோசனை கூறினார். ஆளும் குழு ஒரு தீர்மானம் செய்த பின்பு, “தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக் கண்டது” என்று நாம் சொல்லப்படுகிறோம். ‘தெரிந்துகொள்ளப்பட்ட அவர்கள்’—யூதாவும் சீலாவும்—உடன் விசுவாசிகளுக்கு ஊக்கமூட்டும் கடிதத்தைக் கொண்டுசென்றனர்.
18. மோசேயின் நியாயப்பிரமாணத்தை உட்படுத்தின என்ன தீர்மானத்தை ஆளும் குழு செய்தது, இது, யூத மற்றும் புறஜாதி கிறிஸ்தவர்களை எவ்வாறு பாதித்தது?
18 ஆளும் குழுவின் தீர்மானத்தை அறிவித்த அந்தக் கடிதம் இந்த வார்த்தைகளைக் கொண்டு தொடங்கினது: “அப்போஸ்தலரும் மூப்பருமான சகோதரர் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலுமுள்ள புறஜாதியாரிலிருந்து வந்த சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிக்கொள்வது.” இந்தச் சரித்திரப்பூர்வ கூட்டத்துக்கு மற்ற சகோதரர்கள் வந்திருந்தனர், ஆனால் ஆளும் குழு ‘அப்போஸ்தலரும் மூப்பரும்’ அடங்கியதாக இருந்ததென்று தோன்றுகிறது. கடவுளுடைய ஆவி அவர்களை வழிநடத்தினது, ஏனெனில் அந்தக் கடிதம் இவ்வாறு கூறுகிறது: “அவசியமானவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக்கண்டது. விக்கிரகங்களுக்குப் பலியிட்டவைகளுக்கும் இரத்தத்திற்கும் நெருக்குண்டு செத்ததற்கும் வேசித்தனத்திற்கும் விலகியிருக்க வேண்டுமென்பதே அவசியமானது.” (அப்போஸ்தலர் 15:23-29, தி.மொ.; நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளவும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவும் கட்டளையிடப்படவில்லை. ஒற்றுமையாகச் செயல்படவும் பேசவும், யூத மற்றும் புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு இந்தத் தீர்மானம் உதவி செய்தது. இன்று யெகோவாவின் சாட்சிகளினுடைய ஆளும் குழுவின் ஆவிக்குரிய வழிநடத்துதலின்கீழ் கடவுளுடைய உலகளாவிய குடும்பத்தில் நடப்பதுபோல், சபைகள் களிகூர்ந்தன, அருமையான ஒற்றுமை தொடர்ந்தது.—அப்போஸ்தலர் 15:30-35.
தேவாட்சிக்குரிய ஒற்றுமையில் சேவியுங்கள்
19. யெகோவாவின் வணக்கத்தாராலாகிய குடும்பத்தில் ஒற்றுமை செழித்தோங்கி வந்திருப்பது ஏன்?
19 குடும்ப உறுப்பினர் ஒருவரோடொருவர் ஒத்துழைக்கையில் ஒற்றுமை செழித்தோங்குகிறது. யெகோவாவின் வணக்கத்தாராலாகிய குடும்பத்திலும் இதுவே உண்மையாக இருக்கிறது. தேவாட்சி முறைப்படி நடப்போராய், முதல் நூற்றாண்டு சபையிலிருந்த மூப்பர்களும் மற்றவர்களும், ஆளும் குழுவுடன் முழுமையாக ஒத்துழைத்து அதன் தீர்மானங்களை ஏற்று, கடவுளைச் சேவித்தார்கள். ஆளும் குழுவின் உதவியைக் கொண்டு, மூப்பர்கள் ‘வார்த்தையைப் பிரசங்கித்தார்கள்,’ பொதுவில் சபைகளின் உறுப்பினர் ‘ஒன்றையே பேசினர்.’ (2 தீமோத்தேயு 4:1, 2; 1 கொரிந்தியர் 1:10, தி.மொ.) ஆகவே, எருசலேம், அந்தியோகியா, ரோம், கொரிந்து, அல்லது வேறு எந்த இடமாயினும், ஊழியத்திலும் கிறிஸ்தவ கூட்டங்களிலும், ஒரே வேதப்பூர்வ சத்தியங்கள் அளிக்கப்பட்டன. அத்தகைய தேவாட்சிக்குரிய ஒற்றுமை இன்று இருந்துவருகிறது.
20. நம்முடைய கிறிஸ்தவ ஒற்றுமையைப் பாதுகாத்து வைத்துக்கொள்வதற்கு, நாம் என்ன செய்ய வேண்டும்?
20 நம்முடைய ஒற்றுமையைக் காப்பதற்கு, யெகோவாவின் பூகோள குடும்பத்தினுடைய பாகமாயிருப்போரான நாம் எல்லாரும் தேவாட்சி முறைக்குரிய அன்பைக் காட்டுவதற்கு மனமார முயற்சி செய்ய வேண்டும். (1 யோவான் 4:16) நாம் கடவுளுடைய சித்தத்திற்கு நம்மைக் கீழ்ப்படுத்தி, ‘உண்மையுள்ள அடிமைக்கும்’ ஆளும் குழுவுக்கும் ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும். கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தது இருந்த பிரகாரமே, நம்முடைய கீழ்ப்படிதலும் நிச்சயமாக, நாமே மனமாரத் தெரிந்துகொள்வதும் மகிழ்ச்சியுள்ளதுமாக இருக்கிறது. (1 யோவான் 5:3) சங்கீதக்காரன் எவ்வளவு நன்றாய் மகிழ்ச்சியைக் கீழ்ப்படிதலுடன் இணைத்தார்! அவர் பாடினதாவது: “ஜனங்களே நீங்கள், யா-வைத் துதியுங்கள்! யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிக அதிக இன்பங்கொள்கிற மனிதன் சந்தோஷமுள்ளவன்.”—சங்கீதம் 112:1, NW.
21. நம்மை தேவாட்சி முறைப்படி நடப்போராக நாம் எவ்வாறு நிரூபிக்கலாம்?
21 சபையின் தலைவரான இயேசு, முழுமையாக தேவாட்சி முறைப்படி நடக்கிறவர், தம்முடைய பிதாவின் சித்தத்தையே எப்போதும் செய்கிறார். (யோவான் 5:30) ஆகையால் நாம், யெகோவாவின் அமைப்புடன் முழுமையாக ஒத்துழைத்து, தேவாட்சி முறைப்படியும் ஒற்றுமையாயும் அவருடைய சித்தத்தைச் செய்வதன்மூலம் நம்முடைய முன்மாதிரியானவரைப் பின்பற்றுவோமாக. அப்போது, இருதய ஆழத்தில் உணரும் மகிழ்ச்சியுடனும் நன்றியறிதலுடனும், சங்கீதக்காரனின் இந்தப் பாட்டை நாம் எதிரொலிக்கலாம்: “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது”!
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ எவ்வாறு நம்முடைய கிறிஸ்தவ ஒற்றுமையை 133-ம் சங்கீதத்துடன் சம்பந்தப்படுத்தலாம்?
◻ ஒற்றுமையை ஊக்குவித்து வளர்க்கும் சில காரணிகள் யாவை?
◻ கடவுளுடைய ஜனங்களின் ஒற்றுமைக்கு தேவாட்சிமுறைக்குரிய ஒழுங்கு ஏன் இன்றியமையாதது?
◻ ஒற்றுமையைப் பாதுகாத்து வைப்பதற்கு முதல் நூற்றாண்டு ஆளும் குழுவினர் எவ்வாறு செயல்பட்டனர்?
◻ தேவாட்சி முறைப்படியான ஒற்றுமையில் சேவிப்பது உங்களுக்கு எதைக் குறிக்கிறது?
[பக்கம் 13-ன் படம்]
ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு ஆளும் குழு நடவடிக்கை எடுத்தது