அப்பொல்லோ—கிறிஸ்தவ சத்தியத்தின் சொல்வன்மையுள்ள ஓர் அறிவிப்பாளர்
கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களாக அநேக வருடங்கள் இருந்தாலும் சரி அல்லது ஒருசில வருடங்கள் மட்டுமே இருந்தாலும் சரி, ராஜ்ய அறிவிப்பாளர்கள் அனைவருமே நற்செய்தியின் பிரசங்கிப்பாளர்களாக முன்னேற்றங்களைச் செய்வதில் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய நம்முடைய அறிவையும் அதை மற்றவர்களுக்குப் போதிப்பதற்கான நம் திறமையையும் அதிகரிப்பதை அது உட்படுத்துகிறது. சிலருக்கு, அது சவால்களை எதிர்ப்படுவதை, கஷ்டங்களை மேற்கொள்வதை, அல்லது அதிகரித்த நடவடிக்கைக்குத் தங்களைப் பயன்படுத்தும் நிலையில் வைத்துக்கொள்வதை அர்த்தப்படுத்தக்கூடும்.
வித்தியாசப்பட்ட வழிகளில், அதிகமான ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்வதில் வெற்றியடைந்து, தங்கள் முயற்சிகளுக்கான பலன்களை அறுவடை செய்த பக்தியுள்ள பண்டைய கால ஆண்கள் மற்றும் பெண்களின் பல உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. அவர்களில் ஒருவர் அப்பொல்லோ. வேதவசனங்கள் அவரை நமக்கு அறிமுகப்படுத்துகையில், அவர் கிறிஸ்தவ போதனைகளைக் குறித்து முழுமையான புரிந்துகொள்ளுதலில்லாத ஒரு நபராக இருக்கிறார்; என்றபோதிலும், வெறும் ஒருசில வருடங்கள் கழித்து, முதல் நூற்றாண்டு சபையின் பயண பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார். அப்படிப்பட்ட முன்னேற்றத்தைச் செய்வதற்கு அவருக்கு எது உதவியது? அவருக்கு இருந்த பண்புகளை நாம் அனைவரும் பின்பற்றுவது சிறந்ததாக இருக்கும்.
‘வேதவசனங்களை நன்கு அறிந்தவர்’
சுமார் பொ.ச. 52-ற்குள், பைபிள் எழுத்தாளராகிய லூக்காவின்படி, “அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்தவரும், சொல்வன்மை மிக்கவருமான அப்பொல்லோ என்னும் பெயருடைய ஒரு யூதன் எபேசுவுக்கு வந்தார்; அவர் வேதவசனங்களை நன்கு அறிந்தவர். இந்த மனிதர், யெகோவாவுடைய மார்க்கத்தில் வாய்மொழியாக உபதேசிக்கப்பட்டு, ஆவியில் அனலுள்ளவராக இருந்ததால், அவர் இயேசுவைப் பற்றின காரியங்களைத் திருத்தமாகப் பேசிக்கொண்டும் போதித்துக்கொண்டும் வந்தார், ஆனால் யோவானுடைய முழுக்காட்டுதலைப் பற்றி மட்டுமே அறிந்தவராக இருந்தார். இந்த மனிதர், ஜெப ஆலயத்திலே தைரியமாகப் பேச ஆரம்பித்தார்.”—அப்போஸ்தலர் 18:24-26, NW.
எகிப்திலுள்ள அலெக்ஸாந்திரியா, ரோமுக்கு அடுத்ததாக உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய நகரமாகவும், யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் அந்தச் சமயத்திலிருந்த மிக முக்கியமான பண்பாட்டு மையங்களில் ஒன்றாகவும் இருந்தது. அப்பொல்லோ, எபிரெய வேதாகமத்தைப் பற்றிய தன்னுடைய சிறந்த அறிவையும் ஓரளவு சொல்வன்மையையும், அந்த நகரின் பெரிய யூத சமுதாயத்தில் பயின்ற கல்வியின் விளைவாக பெற்றிருந்திருக்க வேண்டும். இயேசுவைப் பற்றி அப்பொல்லோ எங்கு கற்றிருந்தார் என்பதை ஊகிப்பது மிகக் கடினம். “அவர் ஒரு பயணியாக—ஒருவேளை இடம்விட்டு இடம் செல்லும் வியாபாரியாக—இருந்திருப்பார்; அவர் விஜயம் செய்த பல இடங்களில் ஏதாவதொன்றில் கிறிஸ்தவ பிரசங்கிப்பாளர்களைச் சந்தித்திருக்கலாம்,” என்று அறிஞராகிய எஃப். எஃப். ப்ரூஸ் கருத்துத் தெரிவிக்கிறார். எது எப்படியிருந்தாலும், அவர் இயேசுவைக் குறித்துத் திருத்தமாகப் பேசி, போதித்தபோதிலும், பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவுக்கு முன்னர் அவருக்குச் சாட்சி கொடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது, ஏனென்றால் அவர் “யோவானுடைய முழுக்காட்டுதலைப் பற்றி மட்டுமே அறிந்தவராக இருந்தார்.”
இயேசுவுக்கு முன்னோடியாக, முழுக்காட்டுபவராகிய யோவான் முழு இஸ்ரவேல் தேசத்துக்கும் ஒரு பலமான சாட்சி கொடுத்திருந்தார்; மேலும் மனந்திரும்புதலுக்கு அடையாளமாக அவரால் அநேகர் முழுக்காட்டப்பட்டனர். (மாற்கு 1:5; லூக்கா 3:15, 16) வரலாற்றாசிரியர்கள் பலர் கூறுகிறபடி, ரோம பேரரசிலிருந்த யூத மக்களில், அநேக மக்கள் இயேசுவைப் பற்றி கொண்டிருந்த அறிவு, யோர்தானின் கரைகளில் என்ன பிரசங்கிக்கப்பட்டதோ அதற்கே வரையறுக்கப்பட்டிருந்தது. “நமது ஆண்டவரின் ஊழியத் தொடக்கத்தில் இருந்த அதே நிலையிலேயே அவர்களுடைய கிறிஸ்தவம் இருந்தது,” என்று டபிள்யூ. ஜே. கானிபாரும் ஜே. எஸ். ஹயுஸன்னும் கூறுகின்றனர். “கிறிஸ்துவின் மரணத்துடைய முழு அர்த்தத்தைக் குறித்து அவர்கள் அறியாதவர்களாக இருந்தனர்; ஒருவேளை அவருடைய உயிர்த்தெழுதல் நடந்த உண்மையைக்கூட அவர்கள் அறியாதவர்களாக இருந்தனர்.” பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே அன்று பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டதைக் குறித்தும் அப்பொல்லோ அறியாதவராய் இருந்ததாகத் தோன்றுகிறது. இருந்தபோதிலும், அவர் இயேசுவைக் குறித்துச் சரியான தகவல் சிலவற்றைப் பெற்றிருந்தார், அதை அவர் தன்னோடு மட்டும் வைத்திருக்கவில்லை. உண்மையில், அவர் தான் அறிந்திருந்தவற்றைக் குறித்துப் பேசுவதற்குத் தைரியமாக வாய்ப்புகளை நாடினார். என்றபோதிலும், அவருடைய வைராக்கியமும் ஆர்வமும் இன்னும் திருத்தமான அறிவுக்கு ஏற்றவையாக இருக்கவில்லை.
வைராக்கியமாக ஆனால் மனத்தாழ்மையோடு
லூக்காவின் பதிவு தொடர்கிறது: “ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள்.” (அப்போஸ்தலர் 18:26) அப்பொல்லோவின் விசுவாசம், தங்களுடையதுடன் அதிகத்தைப் பொதுவில் கொண்டிருந்தது என்பதை ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் உணர்ந்திருப்பார்கள்; ஆனால் அவர்கள் ஞானமாக, அவருடைய முழுநிறைவு பெறாத புரிந்துகொள்ளுதலை பொது இடத்தில்வைத்து சரிசெய்ய முயற்சிக்கவில்லை. அப்பொல்லோவுக்கு உதவும் நோக்குடன், அவர்கள் ஒருவேளை அவருடன் பல தனிப்பட்ட உரையாடல்களைக் கொண்டிருந்திருப்பார்கள். ‘வேதவசனங்களில் . . . பலம்வாய்ந்த’ மனிதனாகிய அப்பொல்லோ எப்படிப் பிரதிபலித்தார்? (அப்போஸ்தலர் 18:24, கிங்டம் இன்டர்லீனியர்) அப்பொல்லோ, முழுநிறைவு பெற்றிராத தன்னுடைய செய்தியை ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் சந்திப்பதற்கு முன்னர் கொஞ்ச காலத்திற்குப் பொது மக்களிடம் பிரசங்கித்து வந்திருந்ததற்கான எல்லா சாத்தியமும் இருந்தது. பெருமையுள்ள ஒரு நபர் எவ்வித திருத்தத்தை ஏற்றுக்கொள்வதையும் மிக எளிதாக மறுத்திருக்கலாம்; ஆனால் அப்பொல்லோ மனத்தாழ்மையுள்ளவராக இருந்து, தன்னுடைய அறிவைப் பூர்த்தியாக்கிக்கொள்ள முடிந்ததற்காக நன்றியுள்ளவராய் இருந்தார்.
எபேசுவிலிருந்த சகோதரர்களிடமிருந்து கொரிந்து சபைக்குப் பரிந்துரை கடிதம் ஒன்றைக் கொண்டுசெல்ல மனமுள்ளவராய் இருந்ததிலும் அப்பொல்லோவின் பாசாங்கற்ற அதே மனநிலை தெளிவாக இருக்கிறது. அந்தப் பதிவு தொடர்கிறது: “பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.” (அப்போஸ்தலர் 18:27; 19:1) அப்பொல்லோ தன்னுடைய சொந்த மதிப்பிற்குரிய தகுதிகளை வைத்துத் தான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்கவில்லை, ஆனால் அடக்கமாக கிறிஸ்தவ சபையின் ஏற்பாட்டைப் பின்பற்றினார்.
கொரிந்துவில்
கொரிந்துவில் அப்பொல்லோவின் ஊழியத்துடைய தொடக்க பலன்கள் மிகச் சிறந்தவையாய் இருந்தன. அப்போஸ்தலர் புத்தகம் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “அவர் அங்கு சென்றபோது, கடவுளுடைய தகுதியற்ற தயவின் காரணமாக விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தார்; ஏனென்றால், இயேசுவே கிறிஸ்து என்று அவர் வேதவசனங்களை வைத்துத் தெளிவுபடுத்திக்காட்டியபோது, அவர் தீவிரத்துடன் வெளிப்படையாக, யூதர்களைத் தவறென முழுமையாக நிரூபித்தார்.”—அப்போஸ்தலர் 18:27, 28, NW.
அப்பொல்லோ, சபைக்கு ஊழியம் செய்யும் நிலையில் தன்னை வைத்துக்கொண்டார், தன்னுடைய தயாரிப்பு மற்றும் வைராக்கியத்தின் மூலமாகச் சகோதரர்களை உற்சாகப்படுத்தினார். அவருடைய வெற்றியின் திறவுகோல் என்னவாக இருந்தது? அப்பொல்லோவுக்கு நிச்சயமாகவே இயல்பான திறமையும் இருந்தது; அவர் யூதர்களுடன் ஒரு பொது விவாதத்தை நடத்துமளவுக்கு தைரியமுள்ளவராகவும் இருந்தார். ஆனால் மிக முக்கியமாக, அவர் வேதவசனங்களை வைத்து நியாயங்காட்டிப் பேசினார்.
கொரிந்தியர்கள் மத்தியில் அப்பொல்லோ பலமான செல்வாக்குடையவராக இருந்தபோதிலும், வருத்தகரமாக அவருடைய பிரசங்கிப்பு எதிர்பாராத எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. எப்படி? கொரிந்துவில் ராஜ்ய சத்தியத்தின் விதையை விதைப்பதிலும் தண்ணீர் பாய்ச்சுவதிலும் பவுலும் அப்பொல்லோவுமாக இருவருமே நன்மையான அதிகத்தைச் செய்திருந்தார்கள். அப்பொல்லோ அங்கு வருவதற்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், சுமார் பொ.ச. 50-ல் பவுல் அங்கு பிரசங்கித்திருந்தார். கொரிந்தியருக்கான தன்னுடைய முதல் கடிதத்தைப் பவுல் எழுதியபோது, சுமார் பொ.ச. 55-ற்குள், பிரிவினைகள் வளர்ந்திருந்தன. சிலர் அப்பொல்லோவைத் தங்கள் தலைவராகக் கருதினர்; அதே நேரத்தில் மற்றவர்கள் பவுலை அல்லது பேதுருவை ஆதரித்தனர் அல்லது கிறிஸ்துவை மட்டுமே தலைவராகக் கருதினர். (1 கொரிந்தியர் 1:10-12) சிலர் சொல்லிக்கொண்டிருந்தனர்: ‘நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்.’ ஏன்?
பவுலாலும் அப்பொல்லோவாலும் பிரசங்கிக்கப்பட்ட செய்தி ஒன்றேதான், ஆனால் அவர்கள் வெவ்வேறு ஆளுமைகளைக் கொண்டிருந்தனர். பவுல் தானே ஒத்துக்கொள்ளுகிறபடி, அவர் ‘பேச்சிலே கல்லாதவர்,’ மறுபட்சத்தில், அப்பொல்லோ, ‘சொல்வன்மை மிக்கவர்.’ (2 கொரிந்தியர் 10:10; 11:6) கொரிந்துவிலிருந்த யூத சமுதாயத்தில் சிலரால் இவர் சாதகமாகக் கேட்கப்படுவதற்கு இவருடைய திறமைகள் இவருக்கு உதவின. பவுல் கொஞ்ச காலத்திற்கு முன்னரே ஜெப ஆலயத்தை விட்டுச் சென்றிருக்கையில், அப்பொல்லோவோ ‘யூதர்களைத் தவறென முழுமையாக நிரூபிப்பதில்’ வெற்றி கண்டார்.—அப்போஸ்தலர் 18:1, 4-6.
சிலர் அப்பொல்லோவின் பக்கமாகச் சாய்வதற்கு இது காரணமாக இருந்திருக்க முடியுமா? தத்துவஞானம் சம்பந்தமான உரையாடல்களின்மீது கிரேக்கர்களுக்கு இருக்கும் இயல்பான ஆசைதானே, அப்பொல்லோவின் மிகக் கிளர்ச்சியூட்டும் அணுகுமுறைக்குச் சாதகமாயிருக்க சிலரை வழிநடத்தி இருக்கக்கூடும் என்று பல கருத்துரையாளர்கள் ஊகிக்கிறார்கள். “[அப்பொல்லோவின்] சுவையூட்டும் மொழிநடையும் சொல்லலங்காரம் மிக்க உருவகங்களும், பகட்டில்லாத சொல்வன்மையற்ற பேச்சாளராகிய பவுலைவிட இவரை விரும்பிய பலருடைய பாராட்டுதல்களை இவருக்குப் பெற்றுத் தந்தது,” என்பதாக ஜூஸெப்பே ரிக்காட்டி கருத்துத் தெரிவிக்கிறார். உண்மையில், அப்படிப்பட்ட தனிப்பட்ட விருப்பங்கள், சகோதரர்கள் மத்தியில் பிரிவினைகளை உண்டாக்குவதற்குக் குறிப்பிட்ட சிலர் தவறாக அனுமதித்திருப்பார்களேயானால், ‘ஞானிகளுடைய ஞானம்’ மேம்படுத்தப்படுவதை பவுல் ஏன் கடுமையாகக் குறைகூறினார் என்பதைப் புரிந்துகொள்வது சுலபமாக இருக்கிறது.—1 கொரிந்தியர் 1:17-25.
என்றபோதிலும், அப்படிப்பட்ட குறைகூறுதல் பவுலுக்கும் அப்பொல்லோவுக்கும் இடையில் எவ்வித மனத்தாங்கலும் இருந்ததைக் குறிப்பதில்லை. கொரிந்தியர்களின் பாசங்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படியாகப் போராடிய கசப்பான எதிராளிகளாக இந்த இரு பிரசங்கிப்பாளர்களும் இருந்ததாக சிலர் இஷ்டம்போல கற்பனை செய்திருந்தபோதிலும், வேதவசனங்கள் அப்படிப்பட்ட எதையும் சொல்லவில்லை. ஓர் உட்பிரிவின் தலைவராகத் தன்னை அமைத்துக்கொள்வதற்கு மாறாக, அப்பொல்லோ கொரிந்துவை விட்டு எபேசுவுக்குத் திரும்பிச் சென்றிருந்து, பவுல் தன் முதல் கடிதத்தை அந்தப் பிரிவினையுற்ற சபைக்கு எழுதியபோது அவருடன் இருந்தார்.
அவர்களுக்கிடையில் எவ்வித ஒற்றுமையின்மையோ போட்டி மனப்பான்மையோ இருக்கவில்லை; மாறாக, கொரிந்துவிலிருந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இருவரும் பரஸ்பர நம்பிக்கையுடன் ஒத்துழைத்தது தெளிவாக இருந்தது. கொரிந்துவிலிருந்த சிலரைக் குறித்து பவுலுக்கு ஒருவேளை நிச்சயமற்ற உணர்வுகள் இருந்தன, ஆனால் நிச்சயமாகவே அப்பொல்லோவைக் குறித்து அல்ல. அந்த இருவரின் வேலையும் முழு ஒத்திசைவுடன் இருந்தது; அவர்களுடைய போதனைகள் ஒன்றையொன்று முழுமையாக்குகிறவையாக இருந்தன. பவுலின் சொந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டினால்: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான்,” ஏனென்றால் இருவருமே ‘தேவனுக்கு உடன்வேலையாட்களாய்’ இருந்தனர்.—1 கொரிந்தியர் 3:6, 9, 21-23.
பவுலைப் போலவே, கொரிந்தியர்கள் அப்பொல்லோவை உயர்வாக மதித்தனர், அவர் மீண்டும் ஒருமுறை வந்து சந்திக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் மீண்டும் கொரிந்துவுக்குச் செல்லும்படி பவுல் அப்பொல்லோவை அழைத்தபோது, அலெக்ஸாந்திரியனாகிய அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். பவுல் சொல்லுகிறார்: “சகோதரனாகிய அப்பொல்லோவைக் குறித்தோவெனில், . . . . உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போது வருவான்.” (1 கொரிந்தியர் 16:12) மேலுமான பிரிவினை கிளப்பிவிடப்படுவதைக் குறித்துப் பயந்ததால் அப்பொல்லோ திரும்பிப் போக தயங்கியிருக்கக்கூடும், அல்லது வெறுமனே வேறு எங்கோ அலுவலாக இருந்ததன் காரணமாகவும் இருக்கலாம்.
வேதவசனங்களில் கடைசியாக அப்பொல்லோவைக் குறித்துச் சொல்லப்படுகையில், அவர் கிரேத்தாவுக்கு அல்லது ஒருவேளை அதற்கு அப்பால் பயணப்பட்டுக்கொண்டிருந்தார். அப்பொல்லோவுக்கும் அவருடைய பயணக் கூட்டாளியாகிய சேனாவுக்கும், அவர்களுடைய பயணத்துக்குத் தேவைப்படக்கூடிய எல்லாவற்றையும் கொடுத்தனுப்பும்படி தீத்துவிடம் கேட்டுக்கொள்வதன்மூலம், மீண்டும் பவுல் தன்னுடைய நண்பரும் உடன் ஊழியருமாகிய அவருக்கு தனிப்பட்ட அக்கறையைக் காண்பிக்கிறார். (தீத்து 3:13) இதற்குள்ளாக, சுமார் பத்து வருட கிறிஸ்தவ பயிற்சிக்குப்பின், அந்தச் சபையின் பயண பிரதிநிதியாகச் செயல்படும் அளவுக்கு அப்பொல்லோ போதிய முன்னேற்றத்தைச் செய்திருந்தார்.
ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவும் தெய்வீக பண்புகள்
அலெக்ஸாந்திரிய பிரசங்கிப்பாளராகிய அவர், நற்செய்தியின் நவீன நாளைய பிரசங்கிப்பாளர்கள் அனைவருக்கும், உண்மையில் ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்ய விரும்பும் அனைவருக்கும், ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தார். அவரைப் போன்றளவுக்கு சொல்வன்மை உள்ளவர்களாய் நாம் இல்லாமல் இருக்கக்கூடும்; ஆனால் வேதவசனங்களைப் பயன்படுத்துவதில் அவருடைய அறிவையும் திறமையையும் ஒத்திருப்பதற்கு நாம் நிச்சயமாகவே முயற்சிக்கலாம்; அவ்வாறு செய்வதன்மூலம் சத்தியத்தை நேர்மையாகத் தேடுகிறவர்களுக்கு உதவுகிறவர்களாய் இருப்போம். அவரது வைராக்கியமான நடவடிக்கையின் உதாரணத்தின்மூலம், அப்பொல்லோ, “விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தார்.” (அப்போஸ்தலர் 18:27, NW) அப்பொல்லோ மனத்தாழ்மை உள்ளவராக, சுய தியாகம் செய்பவராக, மற்றவர்களுக்குச் சேவைசெய்ய மனமுள்ளவராக இருந்தார். போட்டி மனப்பான்மைக்கோ புகழ் ஆர்வம் கொள்வதற்கோ கிறிஸ்தவ சபையில் இடமில்லை என்று அவர் நன்கு புரிந்துகொண்டிருந்தார், ஏனென்றால், நாம் எல்லாரும் “தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்.”—1 கொரிந்தியர் 3:4-9; லூக்கா 17:10.
அப்பொல்லோவைப் போல நாமும் ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்யலாம். யெகோவாவாலும் அவருடைய அமைப்பாலும் அதிக முழுமையாகப் பயன்படுத்தப்படும் நிலையில் நம்மை வைத்து, நம்முடைய பரிசுத்த சேவையை முன்னேற்றுவிக்க அல்லது விரிவாக்க மனமுள்ளவர்களாக நாம் இருக்கிறோமா? அப்படியானால், நாம் கிறிஸ்தவ சத்தியத்தின் வைராக்கியமான மாணவர்களாகவும் அறிவிப்பாளர்களாகவும் இருப்போம்.