ஒன்றுபட்ட குடும்பமாக யெகோவாவை சேவித்தல்
ஆன்டோனியூ ஸான்டோலேரி சொன்னபடி
என் தந்தை 1919-ல் இத்தாலியை விட்டுவருகையில் அவருக்கு வயது 17. மேம்பட்ட ஒரு வாழ்க்கையைத் தேடி அவர் பிரேஸிலுக்குக் குடிபெயர்ந்தார். காலப்போக்கில், சாவோ பாலோ மாகாணத்தில் ஒரு சிறியநகரில் அவர் ஒரு முடிதிருத்தகத்தை வைத்திருந்தார்.
எனக்கு ஏழு வயதாக இருந்தபோது, 1938-ல் ஒரு நாள், அப்பா தன் கடைவழியாகச் சென்ற ஒருவரிடமிருந்து ப்ராஸிலோரா மொழிபெயர்ப்பு பைபிள் ஒன்றைப் பெற்றார். இரண்டு வருடங்கள் கழித்து அம்மா கடுமையாக நோய்வாய்ப்பட்டு, தன் மரணம் வரையாக இயலாத நிலையிலேயே இருந்தார். அப்பாவும் நோய்வாய்ப்பட்டார்; ஆகவே நாங்கள் அனைவரும்—அம்மா, அப்பா, என் சகோதரி ஆனா, நான்—உறவினர்களுடன் வாழும்படி சாவோ பாலோவுக்குச் சென்றோம்.
சாவோ பாலோவில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, வாசிப்பில், விசேஷமாக வரலாற்றுப்பூர்வ எழுத்துக்களில் ஆர்வம் மிக்கவனானேன். அவ்வப்போது அவற்றில் பைபிள் குறிப்பிடப்பட்டிருந்தது என்னைக் கவர்ந்தது. சாவோ பாலோ பொது நூலகத்திலிருந்து இரவலாக வாங்கியிருந்த புனைகதை புத்தகம் ஒன்று, மலைப் பிரசங்கத்தைப் பல முறை குறிப்பிட்டது. ஒரு பைபிளை வாங்கி அந்தப் பிரசங்கத்தை நானே வாசிக்க வேண்டும் என்று அப்போதுதான் நான் தீர்மானித்தேன். வருடங்களுக்கு முன்பாக அப்பா வாங்கி வைத்திருந்த பைபிளைத் தேடினேன்; ஏழு வருடங்களாக அது அவ்வாறே கிடந்த டிரங்குப்பெட்டியின் அடியில் அதைக் கடைசியாகக் கண்டுபிடித்தேன்.
எங்கள் குடும்பத்தினர் கத்தோலிக்கர்; ஆகவே பைபிளை வாசிக்கும்படி நான் ஒருபோதும் உற்சாகப்படுத்தப்படவில்லை. தற்போது, நான் சொந்தமாக, அதிகாரங்களையும் வசனங்களையும் எடுத்துப் பார்க்க கற்றுக்கொண்டேன். மலைப் பிரசங்கத்தை மட்டுமல்லாமல் மத்தேயுவின் முழு புத்தகத்தையும் அதோடு மற்ற பைபிள் புத்தகங்களையும் மிகுந்த சந்தோஷத்துடன் வாசித்தேன். இயேசுவின் போதனைகளும் அற்புதங்களும் சொல்லப்பட்டிருந்த விதத்திலுள்ள அந்தச் சத்தியத்தின் தொனியே என்னை மிகவும் கவர்ந்தது.
நான் பைபிளில் வாசித்தவற்றிலிருந்து கத்தோலிக்க மதம் எவ்வளவு வித்தியாசப்பட்டது என்பதை உணர்ந்தவனாய், நான் ப்ரெஸ்பிட்டேரியன் சர்ச்சுக்குச் செல்ல ஆரம்பித்தேன், ஆனாவும் என்னைச் சேர்ந்துகொண்டாள். இருந்தாலும், என் உள்ளத்தில் ஓர் வெறுமை உணர்வு இன்னும் இருந்தது. நான் பல வருடங்களாகக் கடவுளைப் பேராவலுடன் தேடிக்கொண்டிருந்தேன். (அப்போஸ்தலர் 17:27) விண்மீன்கள் ஒளிர்ந்த ஓர் இரவில், சிந்தனையில் மூழ்கிய மனநிலையில் நான் இருந்தபோது, இவ்வாறு யோசித்தேன், ‘நான் ஏன் இங்கே இருக்கிறேன்? வாழ்க்கையின் நோக்கம் என்ன?’ கொல்லைப்புறத்தில் ஒரு தனித்த இடத்தை நாடி, முழங்காற்படியிட்டு, இவ்வாறு ஜெபித்தேன், ‘கடவுளே! நீர் யார்? நான் உம்மை எப்படி அறிந்துகொள்ள முடியும்?’ அதற்குப்பின் விரைவில் ஒரு பதில் கிடைத்தது.
பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளுதல்
1949-ல் ஒரு நாள், அப்பா ஒரு ஸ்ட்ரீட்காரிலிருந்து இறங்கியதும், ஓர் இளம் பெண் அவரை அணுகினார். அவரிடம் அந்தப் பெண், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அளித்தார். அவர் காவற்கோபுரம் பத்திரிகைக்கு சந்தா எடுத்துவிட்டு, ப்ரெஸ்பிட்டேரியன் சர்ச்சுக்குச் செல்லும் இரு பிள்ளைகள் தனக்கிருப்பதைத் தெரிவித்து, வீட்டுக்கு வரும்படி அந்தப் பெண்ணிடம் சொன்னார். அந்தப் பெண் வந்தபோது, பிள்ளைகள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை ஆனாவிடம் விட்டுச்சென்று அவளுடன் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தார். பின்னர் நானும் அந்தப் படிப்பில் சேர்ந்துகொண்டேன்.
நவம்பர் 1950-ல், எங்களுடைய முதல் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டுக்குச் சென்றோம். அங்கு “கடவுளே சத்தியபரராக விளங்கட்டும்” (ஆங்கிலம்) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது; அந்தப் புத்தகத்தை எங்களுக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்தி எங்கள் பைபிள் படிப்பைத் தொடர்ந்தோம். சத்தியத்தைக் கண்டுகொண்டோம் என்று பின்னர் விரைவில் உணர்ந்துகொண்டோம்; யெகோவாவுக்கு எங்களை ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக நாங்கள் ஏப்ரல் 1951-ல் முழுக்காட்டப்பட்டோம். அப்பா சில வருடங்கள் கழித்து தன் ஒப்புக்கொடுத்தலைச் செய்தார்; 1982-ல் கடவுளுக்கு உண்மையுள்ளவராக இறந்தார்.
முழு நேர ஊழியத்தில் மகிழ்ச்சியாக
ஜனவரி 1954-ல், எனக்கு 22 வயதாக மட்டுமே இருக்கையில், பெத்தேல் என்றழைக்கப்படுகிற யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவைக்காக நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன். அங்கு போய் சேர்ந்ததும், என்னைவிட இரண்டு வயது மட்டுமே மூத்தவராக இருந்த ரிச்சர்ட் மூக்கா என்ற ஒருவர் கிளையின் கண்காணியாக இருந்ததைப் பார்த்தது ஆச்சரியமளித்தது. 1955-ல், வட்டார ஊழியர்கள் என்று அப்போது அழைக்கப்பட்ட பயணக் கண்காணிகளுக்கான தேவை எழும்பியபோது, இந்த வேலையில் பங்குகொள்ளும்படி அழைக்கப்பட்ட ஐந்து ஆண்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
என்னுடைய நியமிப்பு, ரியோ கிராண்டி டோ சுல் என்ற மாகாணமாக இருந்தது. நான் தொடங்கியபோது அங்கு யெகோவாவின் சாட்சிகளுடைய 8 சபைகள் மட்டுமே இருந்தன; ஆனால் 18 மாதங்களுக்குள் 2 புதிய சபைகளும் 20 தனித்தொகுதிகளும் நிறுவப்பட்டன. இன்று இந்தப் பகுதியில், ஒவ்வொரு வட்டாரமும் சுமார் 20 சபைகளைக் கொண்டிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய 15 வட்டாரங்கள் இருக்கின்றன! 1956-ன் முடிவில், என்னுடைய வட்டாரமானது நான்கு சிறிய வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு நான்கு வட்டார ஊழியர்களால் சேவிக்கப்படும் என்று எனக்குச் சொல்லப்பட்டது. அந்தச் சமயத்தில் நான் ஒரு புதிய நியமிப்பிற்காக பெத்தேலுக்குத் திரும்பிச் செல்லும்படி கூறப்பட்டேன்.
எனக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கும் வகையில், நான் ஒரு மாவட்ட ஊழியனாக, பல வட்டாரங்களைச் சேவிக்கும் ஒரு பயண ஊழியனாக, பிரேஸிலின் வடக்குப் பகுதிக்கு நியமிக்கப்பட்டேன். பிரேஸிலில் அப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய 12,000 ஊழியர்கள் இருந்தனர்; அந்த நாட்டில் இரு மாவட்டங்கள் இருந்தன. ரிக்கார்ட் வுட்கி தெற்கில் சேவை செய்தார், நான் வடக்கு மாவட்டத்தில் சேவை செய்தேன். யெகோவாவின் சாட்சிகளால் உருவாக்கப்பட்ட புதிய உலக சமுதாயம் செயலில் மற்றும் புதிய உலக சமுதாயத்தின் மகிழ்ச்சி என்ற ஆங்கில படங்களைக் காண்பிப்பதற்கு ஒரு ப்ரொஜெக்டரை இயக்க நாங்கள் பெத்தேலில் கற்பிக்கப்பட்டோம்.
அந்த நாட்களில் பயணம் செய்வது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. சாட்சிகளில் எவரிடமும் ஒரு மோட்டார் வண்டி இல்லை; ஆகவே நான் ஒரு தோணியில், துடுப்புப் படகில், மாட்டு வண்டியில், குதிரையில், வேகனில், ட்ரக்கில், ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தேன். அமேசானின் ஆற்றுமுகத்திலிருக்கும் பெலேமுக்கும் அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகராகிய மனாஸுக்கும் இடையில் பாதி தூரத்தில் இருக்கும் சான்டரெம் என்ற இடத்தில் சென்றிறங்கும்வகையில் அமேசான் காட்டுக்கு மேலாகப் பறந்துசெல்வது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. மாவட்ட ஊழியர்கள் சென்று சேவை செய்வதற்கு ஒருசில வட்டார மாநாடுகளே இருந்தன; ஆகவே நான் சொஸைட்டியின் படங்களைக் காட்டுவதில் அதிக நேரத்தைச் செலவிட்டேன். பெரிய நகரங்களில் நூற்றுக்கணக்கானோர் வந்தனர்.
வடக்கு பிரேஸிலில் என்னை மிகவும் கவர்ந்தது அமேசான் பகுதி. ஏப்ரல் 1957-ல் நான் அங்கு சேவை செய்தபோது, அமேசான் ஆறும் அதன் கிளை நதிகளும் கரைபுரண்டு ஓடின. இரண்டு மரங்களுக்கு இடையே கட்டப்பட்ட திடீரென்று ஏற்பாடு செய்த திரையை அமைத்து, அந்தப் படங்களில் ஒன்றைக் காட்டில் காண்பிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருந்தேன். ப்ரொஜெக்டருக்குத் தேவையான மின்சக்தி, அருகிலிருந்த ஆற்றில் நங்கூரமிடப்பட்டிருந்த இயந்திரப்படகிலிருந்து வந்தது. அங்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் அதுவரையிலுமாகக் கண்ட முதல் திரைப்படம் அதுவே.
பின்னர் சீக்கிரத்தில் நான் பெத்தேல் சேவைக்குத் திரும்பினேன்; அதற்கு அடுத்த வருடம், 1958-ல், நியூ யார்க் நகரில் யெகோவாவின் சாட்சிகளுடைய “தெய்வீக சித்தம்” என்ற சர்வதேச மாநாட்டிற்குச் செல்லும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. அந்த எட்டு நாள் மாநாட்டின் கடைசி தினத்தன்று, யாங்கீ ஸ்டேடியத்தையும் அதற்கு அருகிலுள்ள போலோ க்ரவுண்ட்ஸையும் நிரப்பிய 2,53,922 பேரில், 123 நாடுகளிலிருந்து வந்த பிரதிநிதிகள் இருந்தனர்.
என் வாழ்க்கையில் மாற்றங்களை அனுபவித்து மகிழ்தல்
பெத்தேலுக்குத் திரும்பிச் சென்ற கொஞ்ச காலத்திற்குப்பின், க்ளாரா பெர்ன்ட்டுடன் நான் பழக ஆரம்பித்தேன், மார்ச் 1959-ல் எங்களுக்குத் திருமணமானது. பாஹியா என்ற மாகாணத்தில் வட்டார வேலைக்காக அனுப்பப்பட்டோம்; அங்கு சுமார் ஒரு வருடத்திற்கு சேவை செய்தோம். அங்கிருந்த சகோதரர்களின் மனத்தாழ்மை, உபசரிப்பு, வைராக்கியம், அன்பு ஆகியவற்றை க்ளாராவும் நானும் இன்னும் நினைத்துப்பார்த்து மகிழ்வதுண்டு; அவர்கள் பொருள் சம்பந்தமாய் ஏழைகளாக, ஆனால் ராஜ்ய கனிகொடுத்தலில் செழுமை உள்ளவர்களாக இருந்தனர். பின்னர் நாங்கள் சாவோ பாலோ மாகாணத்திற்கு மாற்றப்பட்டோம். அங்குத்தான் 1960-ல் என் மனைவி கர்ப்பமானாள்; நாங்கள் முழு நேர ஊழியத்தை விடவேண்டியதாயிற்று.
சான்டா காடரீனா என்ற மாகாணத்தில், என் மனைவி பிறந்த இடத்துக்குக் குடிபெயரும்படி நாங்கள் தீர்மானித்தோம். எங்கள் ஐந்து பிள்ளைகளில், எங்கள் மகன் கெர்ஸோன் மூத்தவன். அவனுக்குப் பிறகு 1962-ல் கில்ஸன், 1965-ல் டேலீடா, 1969-ல் டார்ஸியோ, மற்றும் 1974-ல் ஜானீஸி. யெகோவா மற்றும் அவர் கொடுக்கும் சிறந்த அறிவுரையின் உதவியால், அவர்களை “யெகோவாவுக்கு ஏற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும்” வளர்த்துவரும் சவாலை எங்களால் எதிர்ப்பட முடிந்தது.—எபேசியர் 6:4, NW.
எங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அருமதிப்புள்ளவர்களாக நாங்கள் கருதுகிறோம். எங்கள் உணர்ச்சிகளை சங்கீதக்காரன் மிக அருமையாக வெளிப்படுத்தினார்: “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் [“யெகோவாவால்,” NW] வரும் சுதந்தரம்.” (சங்கீதம் 127:4) பிரச்சினைகளின் மத்தியிலும், ‘யெகோவாவால் வரும் எந்த சுதந்தரத்தையும்’ எப்படி கவனிப்போமோ அதேபோல் அவருடைய வார்த்தையில் காணப்படும் அறிவுரைகளை மனதில்கொண்டு எங்கள் பிள்ளைகளைக் கவனித்திருக்கிறோம். பலன்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன. அவர்கள் ஐந்து பேரும் முறையே, தனித்தனியாகவும் அவர்களுடைய சொந்த விருப்பத்தெரிவாலும் தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதன் அடையாளமாக முழுக்காட்டுதல் பெற வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தபோது, அது எங்களுக்குச் சொல்லமுடியாத சந்தோஷத்தை அளித்தது.—பிரசங்கி 12:1.
எங்கள் பிள்ளைகளின் தெரிவுகள்
கெர்ஸோன், விவரச் செயலாக்கத்தில் (டேட்டா ப்ராஸஸ்ஸிங்) ஒரு கோர்ஸைப் படித்து முடித்ததும், பெத்தேலில் சேவை செய்ய விரும்பியதாகச் சொன்னான்; இவ்வாறு ஒரு தொழில்முறையான வாழ்க்கைப் போக்கை அமைத்துக்கொள்வதற்குப் பதிலாக முழு நேர ஊழியத்தைத் தெரிந்துகொண்டான். இருந்தாலும், முதலில் பெத்தேல் வாழ்க்கை கெர்ஸோனுக்கு எளிதாக இருக்கவில்லை. அவன் பெத்தேலில் நான்கே மாதங்கள் இருந்தபின் நாங்கள் அவனைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது, அவன் முகத்தில் பிரதிபலித்த வருத்தம் என்னை மிகவும் நெகிழ்வித்தது. நாங்கள் அந்த சாலையின் முதல் வளைவைக் கடக்கும் வரையாக அவன் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்ததை எங்கள் காரின் பின்னோக்கும் கண்ணாடியில் நான் பார்த்தேன். வீட்டிற்குத் திரும்பும் 700 கிலோமீட்டர் பயணத்தைத் தொடருவதற்குமுன் சாலையோரம் சற்று நின்றுவிட்டுச் செல்லும் அளவுக்கு என் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன.
கெர்ஸோன் நிஜமாகவே பெத்தேலை அனுபவித்து மகிழ ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் அங்கு இருந்த பின்னர், அவன் ஹைடி பெஸரைத் திருமணம் செய்துகொண்டான்; அவர்கள் இருவரும் இன்னும் இரண்டு வருடங்கள் ஒன்றாக பெத்தேலில் சேவை செய்தனர். ஹைடி பின்னர் கர்ப்பமானாள், அவர்கள் அங்கிருந்து செல்ல வேண்டியிருந்தது. தற்போது ஆறு வயதாக இருக்கும் அவர்கள் மகள் ஸின்டியா, அவர்களுடைய ராஜ்ய நடவடிக்கைகளில் அவர்களுடன் செல்கிறாள்.
பெத்தேலில் கெர்ஸோனை நாங்கள் சந்தித்துவிட்டு வந்து அதிக நாட்கள் செல்வதற்கு முன்னரே, வியாபார நிர்வாகம் படிப்பில் சமீபத்தில் முதல் வருடத்தை முடித்திருந்த கில்ஸனும் அங்கு சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்தான். ஒரு வருடம் பெத்தேலில் சேவை செய்துவிட்டு பின்னர் தன் வியாபார படிப்பை மீண்டும் தொடரலாம் என்பதே அவனுடைய திட்டமாக இருந்தது. ஆனால் அவனுடைய திட்டம் மாறிவிட்டது, அவன் பெத்தேல் சேவையிலேயே இருந்தான். பயனியர் என்றழைக்கப்படுகிற முழு நேர ஊழியர்களில் ஒருத்தியாகிய வீவியான் கோன்ஸால்விஸை, 1988-ல் அவன் திருமணம் செய்தான். அநேக வருடங்களாக அவர்கள் பெத்தேலில் ஒன்றாக சேவை செய்துவந்திருக்கின்றனர்.
எங்களுடைய மூன்றாவது பிள்ளையாகிய டேலீடா, உருவரைப்படம் வரைவதில் ஒரு கோர்ஸை முடித்துவிட்டு 1986-ல் பயனியர் சேவைக்குள் நுழைவதைத் தெரிவு செய்துகொண்டாள். மூன்று வருடங்களுக்குப் பின் அவளும் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டாள். 1991-ல், பெத்தேலில் பத்து வருடங்களாக சேவை செய்திருந்த ஷூஸீ கோஸியை திருமணம் செய்தாள். திருமணமான தம்பதியாக அவர்கள் தொடர்ந்து அங்கிருக்கிறார்கள்.
ஏற்கெனவே மூன்று முறை நாங்கள் கேட்டிருந்த அதே கூற்றாகிய ‘அப்பா, நான் பெத்தேலுக்கு போக விரும்புறேன்,’ என்பதை அடுத்துவந்த டார்ஸியோவும் சொல்வதைக் கேட்டபோது என் மனைவியும் நானும் மீண்டும் மகிழ்ச்சி அடைந்தோம். அவனுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது; 1991-ல் அவனும் பெத்தேல் சேவையைத் தொடங்கி, 1995 வரை அங்கே இருந்தான். இந்த வழியில், மூன்று வருடத்திற்கும் மேலாக தன் இளம்பிராயத்து சக்தியை யெகோவாவின் ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு அவன் பயன்படுத்தினான் என்பதைக் குறித்து நாங்கள் சந்தோஷப்படுகிறோம்.
எங்கள் இளைய பிள்ளையாகிய ஜானீஸியும் யெகோவாவைச் சேவிப்பதற்கான தன் தீர்மானத்தைச் செய்து, 13 வயதில் முழுக்காட்டப்பட்டாள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சமயத்தில், ஒரு வருடம் ஒரு துணை பயனியராகச் சேவை செய்தாள். பின்னர், செப்டம்பர் 1, 1993-ல், இங்கு காஸ்பார் என்ற நகரில் இருக்கும் எங்கள் சபையில் ஓர் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்ய தொடங்கினாள்.
வெற்றியின் பாதை
யெகோவாவின் வணக்கத்தில் ஒரு குடும்பத்தை ஒன்றுபட்டதாக வைத்திருப்பதற்கான இரகசியம் என்ன? ஏதோ ஒரு மாய சூத்திரம் இருப்பதாக நான் நம்பவில்லை. கிறிஸ்தவ பெற்றோர் பின்பற்றுவதற்கான ஆலோசனையை யெகோவா தம்முடைய வார்த்தையில் கொடுத்திருக்கிறார்; ஆகவே நாங்கள் அனுபவித்து மகிழ்ந்திருக்கிற சிறந்த பலன்கள் அனைத்திற்குமான பெருமையும் அவருக்கே உரித்தானது. நாங்கள் வெறுமனே அவருடைய வழிநடத்துதல்களைப் பின்பற்ற முயன்றிருக்கிறோம். (நீதிமொழிகள் 22:6) எங்கள் பிள்ளைகள் எல்லாரும் என்னிடமிருந்து லத்தீன் மக்களுக்குரிய உணர்ச்சிவசப்படும் தன்மையையும் தங்கள் தாயாரிடமிருந்து நடைமுறையான தீர்மானமெடுக்கும் ஜெர்மானிய மனநிலையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள். ஆனால் எங்களிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்ட மிக முக்கியமான காரியம் ஓர் ஆவிக்குரிய சுதந்தரிப்பாகும்.
எங்கள் வீட்டு வாழ்க்கை ராஜ்ய அக்கறைகளைச் சுற்றியே அமைந்தது. இந்த அக்கறைகளை முதன்மையானவையாக வைத்திருப்பது எளிதாக இருக்கவில்லை. உதாரணமாக, குடும்ப பைபிள் படிப்பை ஒழுங்காகக் கொண்டிருப்பதில் எங்களுக்கு எப்போதும் பிரச்சினை இருந்தது; இருந்தாலும் நாங்கள் விடாப்பிடியாகத் தொடர்ந்தோம். ஒவ்வொரு பிள்ளையும் அதன் வாழ்வின் தொடக்க நாட்களிலேயே கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. நோய் அல்லது வேறு ஏதாவது அவசர நிலையில் மட்டுமே நாங்கள் போகாதிருந்தோம். அதோடுகூட, இளம் வயதிலேயே, கிறிஸ்தவ ஊழியத்தில் பிள்ளைகள் எங்களுடன் சேர்ந்துவந்தார்கள்.
பிள்ளைகளுக்குச் சுமார் பத்து வயதாக இருந்தபோது, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் அவர்கள் பேச்சுக்களைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய ஆரம்ப பேச்சுக்களைத் தயாரிக்க நாங்கள் உதவி செய்தோம்; முழு பேச்சையும் எழுதி வைப்பதற்கு மாறாகக் குறிப்புகளை வைத்துப் பேசும்படி அவர்களை உற்சாகப்படுத்தினோம். பின்னர், ஒவ்வொருவரும் தன் பேச்சைச் சொந்தமாகத் தயாரித்துக்கொண்டனர். மேலுமாக, அவர்கள் 10-க்கும் 12-க்கும் இடைப்பட்ட வயதுகளில் இருந்தபோது, அவர்கள் ஒழுங்காக ஊழியத்தில் பங்கெடுக்க ஆரம்பித்தனர். அவர்கள் அறிந்திருந்த வாழ்க்கை முறை இது ஒன்றுதான்.
எங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் என் மனைவி க்ளாரா ஒரு முக்கியமான பாகத்தை வகித்தாள். அவர்கள் மிகவும் சிறியவர்களாக—ஒரு பிள்ளைக்கு என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறதோ அவை அனைத்தையும் அவன் ஒரு பஞ்சைப் போல் உறிஞ்சிக்கொள்ளக்கூடிய காலப்பகுதியில்—இருந்தபோது, ஒவ்வொரு இரவும், க்ளாரா அவர்களுக்கு ஒரு பைபிள் கதையை வாசித்து அவர்கள் ஒவ்வொருவருடனும் ஜெபம் செய்தாள். இழக்கப்பட்ட பரதீஸிலிருந்து திரும்பப்பெறப்பட்ட பரதீஸ் வரையில் (ஆங்கிலம்), பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல், மற்றும் என்னுடைய பைபிள் கதை புத்தகம் ஆகியவற்றை அவள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டாள்.a யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட ஆடியோ மற்றும் ஒளிப்பட விளக்க உதவிகள் கிடைக்கத் தொடங்கியதும் நாங்கள் அவற்றையும் பயன்படுத்தினோம்.
பிள்ளைகளுக்கு அன்றாட கவனம் தேவை என்பதை கிறிஸ்தவ பெற்றோர்களாக எங்கள் அனுபவம் உறுதி செய்கிறது. ஆழ்ந்த அன்பு, தனிப்பட்ட அக்கறை, ஏராளமான நேரம் ஆகியவை இளைஞருடைய அடிப்படைத் தேவைகளில் அடங்குகின்றன. எங்களால் முடிந்தளவுக்குச் சிறந்த முறையில் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் பெற்றோருக்குரிய கடமையாக நாங்கள் கருதியது மட்டுமல்லாமல், அவ்வாறு செய்ததிலிருந்து அதிக மகிழ்ச்சியையும் அறுவடை செய்தோம்.
உண்மையில், சங்கீதம் 127:4-6-ன் வார்த்தைகளுடைய நிறைவேற்றத்தைக் காண்பது பெற்றோருக்குத் திருப்தியளிப்பதாக இருக்கும்: “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத் தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.” ஒன்றுபட்ட குடும்பமாக யெகோவாவைச் சேவிப்பது உண்மையிலேயே எங்களைக் களிகூர வைத்திருக்கிறது!
[அடிக்குறிப்பு]
a அனைத்தும் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டவை.
[பக்கம் 26-ன் படம்]
ஆன்டோனியூ ஸான்டோலேரி தன் மிக நெருங்கிய குடும்பத்தாருடன்