அடிப்படைவாதம் அது என்ன?
அடிப்படைவாதம் எங்குத் தொடங்கியது? கடந்த நூற்றாண்டின் இறுதியில், பரந்த மனப்பான்மையுள்ள இறையியலாளர்கள் பைபிளைப் பற்றிய திறனாய்வையும் பரிணாமம் போன்ற அறிவியல் கோட்பாடுகளையும் புகுத்துவதற்காக தங்களுடைய நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டிருந்தார்கள். அதன் விளைவாக மக்களுக்கு பைபிளில் இருந்த நம்பிக்கை ஆட்டம்கண்டது. இதற்கு ஐக்கிய மாகாணங்களில் இருந்த பாரம்பரிய பற்றுமிக்க மத தலைவர்கள் எதிர்ப்பை காட்டினார்கள்; விசுவாசத்திற்கு அடிப்படையானவை என அவர்கள் எவற்றை கருதினார்களோ அவற்றை நிலைநாட்டுவதன் மூலம் தங்களது எதிர்ப்பை காட்டினார்கள்.a 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இத்தகைய அடிப்படைவாதங்கள் பேரிலான விவாதத்தை அவர்கள், Fundamentals: A Testimony to the Truth (அடிப்படைவாதங்கள்: சத்தியத்திற்கான அத்தாட்சி) என்று தலைப்பிடப்பட்ட பல தொகுப்புகளாக பிரசுரித்தார்கள். இந்தத் தலைப்பிலிருந்துதான் “fundamentalism” (“அடிப்படைவாதம்”) என்ற சொல் வருகிறது.
20-ம் நூற்றாண்டின் பாதியில், அடிப்படைவாதம் அவ்வப்போது செய்திகளில் அடிப்படும். உதாரணத்திற்கு, 1925-ல் அ.ஐ.மா.-விலுள்ள டென்னெஸீயைச் சேர்ந்த ஜான் கூபஸ் என்னும் ஒரு பள்ளி ஆசிரியரை மத அடிப்படைவாதிகள் நீதி மன்றம் வரை கொண்டுபோனார்கள்; அதுவே கூபஸ் வழக்கு என அறியப்பட்டது. அவர் செய்த குற்றம்தான் என்ன? அவர் பரிணாமத்தை போதித்தார்; அது அந்த மாகாண சட்டத்திற்கு விரோதமானது. அடிப்படைவாதம் கொஞ்ச நாட்களுக்குத்தான் தாக்குப்பிடிக்கும் என்று அப்போது ஒருசிலர் நம்பினார்கள். 1926-ல் கிறிஸ்டியன் சென்சுரி என்ற ஒரு புராட்டஸ்டண்ட் பத்திரிகை அதனை “வெறும் வெத்து, போலியானது; ஆக்கப்பூர்வமான சாதனைக்கு வேண்டிய அல்லது நீடித்திருப்பதற்கு வேண்டிய பண்புகள் இதில் கொஞ்சம்கூட இல்லை” என்று வரையறுத்தது. அந்தக் கணிப்பு எவ்வளவு தவறானது!
1970-கள் முதற்கொண்டு அடிப்படைவாதம் தொடர்ந்து செய்திகளில் வந்தவண்ணம் இருக்கிறது. அ.ஐ.மா., கலிபோர்னியாவிலுள்ள புல்லர் தியாலாஜீக்கல் செமினரியைச் சேர்ந்த பேராசிரியர் மையர்ஸ்லாவ் வால்ஃப் கூறுகிறார்: “அடிப்படைவாதம் வெறுமனே பிழைத்துக்கொண்டது மாத்திரமல்ல, ஆனால் அது செழித்தொங்கி வளர்ந்துள்ளது.” இன்று “அடிப்படைவாதம்” என்ற வார்த்தை புராட்டஸ்டண்ட் இயக்கங்களுக்கு பொருந்துவது மட்டுமல்லாமல், கத்தோலிக்க மதம், இஸ்லாமிய மதம், யூத மதம், இந்து மதம் போன்ற வேறு மதங்களுக்கும் பொருந்துகிறது.
நம் காலத்தின் எதிர்த்தாக்குதல்
அடிப்படைவாதம் ஏன் பரவுகிறது? நம்முடைய காலத்தில் ஒழுக்கமும் மதமும் நிச்சயமற்று இருப்பதுதான் காரணம். குறைந்தபட்சம் ஓரளவுக்காவது அதுவே காரணம் என்று அடிப்படைவாதத்தைக் கருத்தூன்றி ஆராய்வோர் விளக்கம் தருகின்றனர். முன்பெல்லாம் பெரும்பாலான சமூகத்தினர், பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒழுக்க நிச்சயத்துடன் இருந்த சூழ்நிலையில் வாழ்ந்துவந்தனர். இப்போதெல்லாம் அத்தகைய நம்பிக்கைகள் சவால்விடப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன. கடவுள் இல்லை என்றும், இப்பிரபஞ்சத்தில் மனிதனைத் தவிர எதுவுமே அறிவில் சிறந்தது கிடையாது என்றும் பல அறிவுஜீவிகள் அடித்து சொல்கிறார்கள். பரிணாமம் நிகழ்ந்ததன் விளைவாகத்தான் மனிதவர்க்கம் வந்ததே தவிர அன்பான படைப்பாளரின் செயல்களால் வரவில்லை என்று அநேக விஞ்ஞானிகள் கற்பிக்கிறார்கள். எதையும் அனுமதிக்கும் ஒரு மனோபாவம் பரவிக்கிடக்கிறது. சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் ஒழுக்க மதிப்பீடுகள் சீரழிந்து இந்த உலகம் பாதிக்கப்பட்டுள்ளது.—2 தீமோத்தேயு 3:4, 5, 13.
பழமையான ஒழுங்கமைப்புகளுக்காக அடிப்படைவாதிகள் ஏங்குகிறார்கள். அவர்களில் சிலர் ஒழுக்க ரீதியிலும் கோட்பாடு அடிப்படைகளின் ரீதியிலும் எது சரியென்று அவர்கள் நினைக்கிறார்களோ அவற்றினிடமாக தங்களுடைய சமுதாயங்களையும் தேசங்களையும் மறுபடியும் கொண்டுச்செல்லவேண்டும் என்று கடும் முயற்சி செய்கிறார்கள். “சரியான” ஒழுக்கநெறியின்படியும், கோட்பாட்டு நம்பிக்கைகளின்படியும் வாழ மற்றவர்களை வற்புறுத்துவதற்காக தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். ஓர் அடிப்படைவாதி, தான் செய்வது மாத்திரம் சரி மற்றவர்கள் செய்வது தவறு என்று உறுதியாக நம்புகிறார். அடிப்படைவாதம் “என்ற சொல் பெரும்பாலும் எதிர்ப்புணர்ச்சியையும் அவமதிப்பையும் குறிக்கும் சொல்லாக கருதப்படுகிறது; குறுகிய மனப்பான்மையையும், வெறிச்செயலையும், அறிவொளி எதிர்ப்பையும் குறிக்கிறது” என்று அடிப்படைவாதம் என்னும் தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் பேராசிரியர் ஜேம்ஸ் பார் கூறுகிறார்.
எவரும் தன்னை குறுகிய மனப்பான்மையுள்ளவன், மதவெறியன் என்று அழைக்கப்படுவதை விரும்புவதில்லை; எனவே யார் அடிப்படைவாதி, யார் அடிப்படைவாதி அல்ல என்ற கருத்தில் எல்லாரும் ஒத்துப்போவதில்லை. இருப்பினும், மத அடிப்படைவாதத்தை வேறுபடுத்திக்காட்டும் சில அம்சங்கள் உள்ளன.
அடிப்படைவாதியை அடையாளம்காணல்
ஒரு கலாச்சாரத்தினுடைய அசல் பாரம்பரியங்களாக அல்லது மத நம்பிக்கைகளாக நம்பப்படுவதை பாதுகாக்க முயற்சி எடுப்பதும், உலகின் மதம்சாரா மனோபாவம் என்று அறியப்படுவதை எதிர்ப்பதும் பொதுவாகவே மத அடிப்படைவாதம் எனப்படுகிறது. நவீனமயமான எல்லாவற்றையும் அடிப்படைவாதிகள் எதிர்க்கிறார்கள் என்பது அல்ல இதன் அர்த்தம். ஒருசிலர் தங்களுடைய கருத்தை முன்னேற்றுவிப்பதற்காக நவீன தகவல் தொடர்பு சாதனத்தை மிகவும் சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். ஆனால், சமுதாயத்தின் மதம்சாராத்தன்மைக்கு எதிராகத்தான் அவர்கள் சண்டையிடுகிறார்கள்.b
சில அடிப்படைவாதிகள் பாரம்பரிய கோட்பாட்டின் கட்டமைப்பை அல்லது வாழ்க்கை பாணியைத் தங்களுக்காக மாத்திரம் பாதுகாத்து வைப்பதோடு நிறுத்திக்கொள்வதில்லை. ஆனால் அவற்றை மற்றவர்கள்மீது திணிக்கவும், சமுதாய கட்டமைப்புகளை மாற்றவும் திடத்தீர்மானத்தோடு இருக்கிறார்கள்; அவ்வாறு செய்வதால் அவர்களுடைய நம்பிக்கைகளுக்கு மற்றவர்கள் இணங்குவார்கள் என்று அடிப்படைவாதிகள் நினைக்கிறார்கள். ஆகவே கத்தோலிக்க அடிப்படைவாதி கருக்கலைப்பை எதிர்ப்பதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அநேகமாக அவர் கருக்கலைப்பை தடைச்செய்யும் சட்டங்களை முன்வைக்கும்படி தன் நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தத்தையும் கொடுப்பார். போலந்து நாட்டைச்சேர்ந்த லா ரேப்பூப்ளிக்கா என்ற ஒரு செய்தித்தாளின் பிரகாரம், கருக்கலைப்புக்கு எதிரான ஒரு சட்டத்தை ஏற்கும்படி செய்வதற்காக, கத்தோலிக்க சர்ச் “ஒரு ‘போராட்டத்தையே’” நடத்தியது; “அதில் தன்னுடைய முழு பலத்தையும் செல்வாக்கையும் ஒன்றுதிரட்டி உபயோகித்தது.” இவ்வாறு செய்வதன்மூலம், அடிப்படைவாதிகளைப் போலவே, சர்ச் தலைவர்கள் செயல்பட்டார்கள். ஐக்கிய மாகாணங்களில் இதுபோன்ற “போராட்டங்கள்” புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ கூட்டிணைவு அமைப்பால் நடத்தப்படுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, அடிப்படைவாதிகள் தங்களுடைய ஊறிப்போன மத நம்பிக்கைகளால் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறாக, ஒரு புராட்டஸ்டண்ட் அடிப்படைவாதிக்கு பைபிளின்பேரில் சொல்லுக்குச் சொல் அப்படியே அர்த்தம் புரிந்துகொள்வதில்தான் அசைக்கமுடியாத நம்பிக்கை. பூமி சொல்லர்த்தமான ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கையும் அநேகமாக அவரது நம்பிக்கைகளில் அடங்கும். ஒரு கத்தோலிக்க அடிப்படைவாதிக்கு போப் ஆண்டவர் தவறுசெய்வார் என்று கனவில்கூட அவருக்கு துளியும் சந்தேகம் வருவதில்லை.
அப்படியென்றால், “அடிப்படைவாதம்” என்றதுமே வரம்புமீறிய கொள்கைவெறி ஏன் நம் மனக்கண் முன்னே வருகிறது என்பதையும், அடிப்படைவாதம் பரவுவதை பார்க்கும் அடிப்படைவாதி அல்லாதவர்கள் ஏன் கலங்குகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. தனிப்பட்டவர்களாக நாம் அடிப்படைவாதிகளோடு ஒத்துப்போகமாட்டோம்; அவர்களது அரசியல் சதித்திட்டங்களாலும், சிலசமயங்களில் வன்முறை செயல்களாலும் நாம் கதிகலங்கிவிடுகிறோம். உண்மையில் ஒரு மதத்தைச்சேர்ந்த அடிப்படைவாதிகள் மற்றொரு மத அடிப்படைவாதிகளின் செயல்களைக் கண்டும் திகிலடையலாம்! இருப்பினும், நவீன சமுதாயத்தில் வளர்ந்துவரும் ஒழுக்கத்தரக்குறைவு, விசுவாசமின்மை, ஆன்மீக காரியங்களைப் புறக்கணித்தல் போன்றவைகளே அடிப்படைவாதம் பரவ தூண்டுதலாக இருக்கின்றன. இவற்றைப் பற்றி சிந்தனையுள்ள ஆட்கள் பலரும் கவலைப்படுகிறார்கள்.
இத்தகைய போக்குகளுக்கு ஒரே பிரதிபலிப்பு அடிப்படைவாதம் தானா? அப்படி இல்லையென்றால், அதற்கு பதிலாக என்னதான் இருக்கிறது?
[அடிக்குறிப்புகள்]
a 1895-ல் அடிப்படைவாதத்தின் ஐந்து குறிப்புகள் என்று சொல்லப்படுபவை வரையறுக்கப்பட்டன. அவை “(1) வேதவசனம் முழுமையாக ஏவப்பட்டிருத்தல் மற்றும் தவறிழைக்காதிருத்தல்; (2) இயேவின் தெய்வீகத்தன்மை; (3) கிறிஸ்து கன்னிகைக்குப் பிறந்தது; (4) பாவிகளுக்காக பாவநிவாரண பலியாக மரித்த கிறிஸ்துவின் சிலுவை மரணம்; (5) உடலோடு உயிர்த்தெழுந்ததும், தனிப்பட்டவிதமாகவும், காணக்கூடியவிதமாகவும் வரப்போகும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை.”—ஸ்டூடி டி டாவோஜியா (இறையியல் பாடங்கள்).
b “மதம்சாராத்தன்மை” என்பது உலகப்பிரகாரமான காரியத்தை வலியுறுத்துவதையும், ஆன்மீக அல்லது புனிதமான செயல்களை எதிர்ப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. மதத்தோடு அல்லது மத நம்பிக்கைகளோடு தொடர்பின்மையையும் குறிக்கிறது.
[பக்கம் 5-ன் படம்]
1926-ல் ஒரு புராட்டஸ்டண்ட் பத்திரிகை அடிப்படைவாதத்தை இவ்வாறு விவரித்தது, “வெறும் வெத்து, போலியானது; ஆக்கப்பூர்வமான சாதனைக்கு வேண்டிய பண்புகள் அல்லது நீடித்திருப்பதற்கு வேண்டிய பண்புகள் இதில் கொஞ்சம்கூட இல்லை”