ஒரு சிறந்த வழி
யெகோவாவின் சாட்சிகள் இந்த உலகில் ஆன்மீகம் அழிந்து வருவதைப் பற்றியும், சமுதாயத்தில் பரவிக்கிடக்கும் ஒழுக்கச்சீர்கேட்டைப் பற்றியும், மத ஸ்திரமின்மையைப் பற்றியும் கவலைப்படுகிறார்கள். அதன்விளைவாக, சிலநேரங்களில் அடிப்படைவாதிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் அடிப்படைவாதிகளா? இல்லை. அவர்கள் உறுதியான மத நம்பிக்கைகளை உடையவர்களாக இருந்தபோதிலும், இன்று அடிப்படைவாதம் என்ற சொல் பயன்படுத்தப்படும் கருத்தில் நோக்கினால் அவர்கள் அடிப்படைவாதிகள் அல்ல. தங்களுடைய கருத்தை முன்னேற்றுவிப்பதற்காக அவர்கள் அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் தருவதில்லை; அவர்களோடு ஒத்துப்போகாதவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களிலும் வன்முறையிலும் இறங்குவதில்லை. அவர்கள் ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் தங்கள் தலைவராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறார்கள்.
மத சத்தியம் உள்ளது என்பதிலும் அது பைபிளிலில் காணப்படுகிறது என்பதிலும் யெகோவாவின் சாட்சிகளுக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது. (யோவான் 8:32; 17:17) ஆனால் பைபிள் கிறிஸ்தவர்களைத் தயவானவராகவும், நற்குணமுள்ளவராகவும், சாந்தமுள்ளவராகவும், நியாயத்தன்மையுள்ளவராகவும் இருக்கும்படி கற்பிக்கிறது. இந்தக் குணங்கள் வெறிச்செயலுக்கு இடமளிப்பவையல்ல. (கலாத்தியர் 5:22, 23; பிலிப்பியர் 4:5) பைபிள் புத்தகமாகிய யாக்கோபில் ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ வளர்த்துக்கொள்ளும்படி கிறிஸ்தவர்கள் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்; அது ‘முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும்’ வர்ணிக்கப்படுகிறது. யாக்கோபு மேலும் கூறினார்: “நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.”—யாக்கோபு 3:17, 18.
சத்தியத்தைப் பற்றி இயேசு பெரிதும் அக்கறையுள்ளவராக இருந்தார் என்பதை யெகோவாவின் சாட்சிகள் நினைவில் வைத்துள்ளனர். அவர் பொந்தியு பிலாத்துவிடம் இவ்வாறு கூறினார்: “சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.” (யோவான் 18:37) அவர் சத்தியத்தை தைரியமாய் அறிவித்தவராக இருந்தபோதிலும், தம்முடைய நம்பிக்கைகளை மற்றவர்கள்மீது திணிக்க அவர் முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக அவர்களுடைய மனங்களுக்கும் இருதயங்களுக்கும் சிந்தனையைத் தூண்டினார். அவரது பரலோக தந்தை, ‘நல்லவரும் உத்தமருமான’ கடவுள் என்றும், பொய்யையும், அநியாயத்தையும் இந்தப் பூமியிலிருந்து எப்போது துடைத்தழிக்கவேண்டும் என்பதை அவரே முடிவுசெய்வார் என்றும் இயேசு அறிந்திருந்தார். (சங்கீதம் 25:8) இவ்வாறாக, தம்மோடு இணங்கிப்போகாதவர்களை அடக்கி ஒடுக்க அவர் முயலவில்லை. அதற்கு மாறாக, இயேசுவின் நாளிலிருந்த பழம்பெரும் மதத்தலைவர்களே அவரை அடக்கி ஒடுக்க முயன்றார்கள்.—யோவான் 19:5, 6.
மத கோட்பாடுகளில் யெகோவாவின் சாட்சிகளுக்கு உறுதியான நம்பிக்கைகள் இருக்கின்றன; ஒழுக்கம் சம்பந்தமான விஷயத்தில் அவர்கள் அதிக மதிப்பை காட்டுகிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுலைப்போலவே அவர்களும் ‘ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம்’ இருக்கிறது என்று திடமாக நம்புகிறார்கள். (எபேசியர் 4:5) “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்ற இயேசுவின் வார்த்தைகளையும் அவர்கள் நன்கு அறிந்துள்ளனர். (மத்தேயு 7:13, 14) இருந்தாலும், தங்களுடைய நம்பிக்கைகளை பின்பற்றும்படி மற்றவர்களை கட்டாயப்படுத்த அவர்கள் முயற்சிப்பதில்லை. அதற்குமாறாக, அவர்கள் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றி, ‘தேவனோடே ஒப்புரவாக’ விரும்புகிறவர்களை அவ்வாறு செய்ய ‘தயவாக’ கேட்டுக்கொள்கிறார்கள். (2 கொரிந்தியர் 5:20, NW) இதுவே சிறந்த வழியாக இருக்கிறது. இது கடவுளின் வழியாக இருக்கிறது.
இன்று பயன்படுத்தப்படும் மத அடிப்படைவாதம் என்ற சொல் முற்றிலும் வேறு அர்த்தத்தைக் கொண்டுள்ளது. சமுதாயத்தில் தங்களுடைய கொள்கைகளைத் திணிக்கவேண்டும் என்பதற்காக பல சூழ்ச்சிமுறைகளை—இதில் வன்முறையும் அடங்கும்—அடிப்படைவாதிகள் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இப்படி செய்வதன்மூலம் அரசியல் அமைப்போடு ஒன்றிணைந்த பாகமாக ஆகிவிடுகிறார்கள். ஆனால் இயேசுவோ தம்மை பின்பற்றுகிறவர்கள் ‘உலகின் பாகமாக இருக்கக்கூடாது’ என்று கண்டிப்பாக கூறினார். (யோவான் 15:19; 17:16, NW; யாக்கோபு 4:4) அந்த வார்த்தைகளுக்கு இசைவாக யெகோவாவின் சாட்சிகள் அரசியல் சர்ச்சைகளில் முற்றிலும் நடுநிலைமை வகிக்கிறார்கள். ஃபுவாரிபாஜினா என்ற இத்தாலிய செய்தித்தாள் ஒன்று ஒத்துக்கொண்டவிதமாகவே, அவர்கள் “எதையும் எவர்மீதும் திணிப்பதில்லை; அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவோ புறக்கணிக்கவோ எல்லாருக்கும் சுதந்திரம் உள்ளது.” அதன் விளைவு? சாட்சிகள் அளிக்கும் சமாதான பைபிள் செய்தி எல்லா விதமான மக்களையும், ஏன் ஒருகாலத்தில் அடிப்படைவாதிகளாக இருந்தவர்களையும்கூட கவர்ந்திழுக்கிறது.—ஏசாயா 2:2, 3.
அதிக மதிப்பீடுகளோடுகூடிய ஓர் உலகம்
அடிப்படைவாதிகளை கவலைகொள்ள செய்யும் பிரச்சினைகள் மனிதர்களால் தீர்க்கப்பட முடியாதவை என்பதை சாட்சிகள் புரிந்துகொண்டுள்ளனர். கடவுளை நம்பும்படியோ அல்லது உங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும்படியோ ஒருவரை உங்களால் கட்டாயப்படுத்த முடியாது. இப்படி செய்யமுடியும் என்ற நினைப்புதான், சிலுவைப்போர்கள், மத்திப காலத்தில் நடந்த ஒடுக்கு விசாரணைகள், அமெரிக்க இந்தியர்களோடு நடந்த “மதமாற்றுதல்கள்” போன்ற ஒருசில படுமோசமான பயங்கரங்கள் வரலாற்றில் இடம்பெற வழிநடத்தியது. ஆனால், நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை வைப்பவராக இருந்தால், விஷயங்களை அவரது கரங்களில் விட்டுவிட நீங்கள் மனமுள்ளவராக இருப்பீர்.
பைபிளின்படி, கடவுள் காலத்திற்கு ஒரு வரம்பை வைத்திருக்கிறார். அந்த வரம்புக்குட்பட்டுள்ள காலத்தில்தான் கடவுளுடைய சட்டங்களை மீறவும், அதனால் துன்பமும் வேதனையும் உண்டாக்கவும் அவர் மனிதர்களை அனுமதிக்கிறார். அந்தக் காலம் கிட்டத்தட்ட முடியப்போகிறது. கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் ஏற்கெனவே இயேசு ராஜாவாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். அந்த ராஜ்யம் மனித அரசாங்கங்களை நீக்குவதற்காக வெகுவிரைவில் செயல்படும்; அன்றாடம் மனிதவர்க்கத்தை ஆளுகை செய்யும் பொறுப்பை எடுத்துக்கொள்ளும். (மத்தேயு 24:3-14; வெளிப்படுத்துதல் 11:15, 18) அதன் விளைவு பூமி முழுவதும் பரதீஸாக மாறிவிடும்; அதில் சமாதானமும் நீதியும் நிறைந்திருக்கும். அந்தச் சமயத்தில் மெய் கடவுளை எப்படி வழிபடவேண்டும் என்பதைப் பற்றி நிச்சயமற்ற நிலை இருக்காது. “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதவர்க்கத்தினரின் நன்மைக்காக நித்திய மதிப்பீடுகளான அன்புள்ள தயவு, சத்தியம், நீதி, நற்குணம் போன்றவை மேலோங்கி நிற்கும்.
அந்தக் காலத்தை எதிர்நோக்கியவராய் சங்கீதக்காரன் இவ்வாறு கவிதை நடையிலே கூறுகிறார்: “கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும். கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.”—சங்கீதம் 85:10-13.
நம்மால் உலகத்தை மாற்ற முடியாத பட்சத்தில், தனிப்பட்ட நபர்களாக தெய்வீக மதிப்பீடுகளை நாம் இன்றே வளர்த்துக்கொள்ளலாமே. இவ்வாறாக, புதிய உலகில் தம்மை வழிபடுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அப்படிப்பட்ட மக்களாக இருக்க நாம் முயற்சி செய்யலாம். அப்போது சங்கீதக்காரன் குறிப்பிட்ட சாந்தகுணமுள்ளவருள் நாமும் இருப்போம்: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:11) கடவுள் தம்முடைய சித்தத்தை செய்யும் ஆட்களை ஆதரிக்கிறார், ஆசீர்வதிக்கிறார்; அவர்களுடைய எதிர்காலத்திற்காக அருமையான காரியங்களை வாக்களிக்கிறார். அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு கூறினார்: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படிசெய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17.
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் எல்லாருக்கும் அழைப்புகொடுக்கிறார்கள்
[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]
பக்கங்கள் 3, 4, 5, 6-ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கு: Printer’s Ornaments/by Carol Belanger Grafton/Dover Publications, Inc.