நம்முடைய அருமையான விசுவாசத்தை உறுதியாய்ப் பற்றியிருப்போமாக!
“ஒரு விசுவாசத்தைப் பெற்று, எங்களோடுகூட சமமான சிலாக்கியத்தில் வைக்கப்பட்டிருப்போருக்கு.”—2 பேதுரு 1:1, NW.
1. தம்முடைய அப்போஸ்தலருக்கு எச்சரிக்கையாக இயேசு என்ன சொன்னார், எனினும் பேதுரு பெருமிதமாய் என்ன சொன்னார்?
தம்முடைய அப்போஸ்தலர்கள் எல்லாரும் தம்மைக் கைவிட்டுவிடுவார்கள் என்று இயேசு தம்முடைய மரணத்திற்கு முந்தின சாயங்காலத்தில் சொன்னார். அவர்களில் ஒருவரான பேதுரு, பின்வருமாறு பெருமிதத்தோடு சொன்னார்: ‘உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன்!’ (மத்தேயு 26:33) ஆனால் அதற்கு மாறாக இருப்பார் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனிமித்தமே அவர், அதே சந்தர்ப்பத்தில் பேதுருவிடம் இவ்வாறு சொன்னார்: “உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து.”—லூக்கா 22:32.
2. பேதுரு அளவுக்குமீறிய தன்னம்பிக்கை கொண்டிருந்தபோதிலும், அவருடைய விசுவாசம் பலவீனமாக இருந்ததென்று அவருடைய என்ன செயல்கள் வெளிப்படுத்திக் காட்டின?
2 தன் விசுவாசத்தைக் குறித்து அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை கொண்டிருந்த பேதுரு, அதே இரவில் இயேசுவை மறுதலித்தார். கிறிஸ்துவைத் தான் அறிந்திருந்ததையும்கூட அவர் மூன்று தடவைகள் மறுத்துரைத்தார்! (மத்தேயு 26:69-75) அவர் “குணப்பட்ட பின்பு,” அவருடைய எஜமானரின் வார்த்தைகளாகிய, “உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்பது, அவருடைய செவிகளில் சத்தமாயும் தெளிவாயும் தொனித்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். பைபிளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிற, அவர் எழுதின இரண்டு நிருபங்கள் காட்டுகிறபடி, அந்த அறிவுரை பேதுருவின் மீதியான வாழ்க்கையை ஆழ்ந்த முறையில் பாதித்தது.
பேதுரு தன் நிருபங்களை எழுதினதன் காரணம்
3. பேதுரு ஏன் தன் முதல் நிருபத்தை எழுதினார்?
3 இயேசுவின் மரணத்திற்கு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப்பின், பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகியவற்றில் இருந்த சகோதரருக்கு முகவரியிட்டு, தன் முதல் நிருபத்தை எழுதினார்; இந்தப் பிரதேசங்கள் இப்போது வடக்கு மற்றும் மேற்கு துருக்கியாக இருக்கின்றன. (1 பேதுரு 1:1) பேதுரு முகவரியிட்டு எழுதினவர்களுக்குள் யூதர்களும் அடங்கியிருந்தனர் என்பதில் சந்தேகமில்லை; இவர்களில் சிலர், பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் கிறிஸ்தவர்களாகியிருக்கலாம். (அப்போஸ்தலர் 2:1, 7-9) பலர், எதிரிகளின் கைகளில் கடுமையான துன்பம் அனுபவித்துக்கொண்டிருந்த புறஜாதியாராக இருந்தனர். (1 பேதுரு 1:6, 7; 2:12, 19, 20; 3:13-17; 4:12-14) ஆகையால், இந்தச் சகோதரர்களை ஊக்குவிப்பதற்காக பேதுரு இவர்களுக்கு எழுதினார். தங்கள் ‘விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை [அவர்கள்] அடையும்படி’ அவர்களுக்கு உதவி செய்வதே அவருடைய நோக்கமாக இருந்தது. இதனால், தாம் பிரிந்துசெல்வதற்குமுன் கூறின அறிவுரையில், அவர் இவ்வாறு ஊக்குவித்தார்: “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு [பிசாசானவனுக்கு] எதிர்த்து நில்லுங்கள்.”—1 பேதுரு 1:9; 5:8-10.
4. பேதுரு ஏன் தன் இரண்டாவது நிருபத்தை எழுதினார்?
4 பின்னால், இந்தக் கிறிஸ்தவர்களுக்கு இரண்டாவது நிருபம் ஒன்றை பேதுரு எழுதினார். (2 பேதுரு 3:1) ஏன்? ஏனெனில், அதைவிட மிகப் பெரிய பயமுறுத்தல் இருந்தது. ஒழுக்கக்கேடான நடத்தையுள்ளவர்கள் தங்களுடைய தூய்மைக்கேடான நடத்தையை விசுவாசிகளுக்குள் பரவச் செய்ய முயன்று, சிலரை தவறான வழியில் நடக்கச் செய்வார்கள்! (2 பேதுரு 2:1-3) மேலும், பரியாசக்காரரைக் குறித்தும் பேதுரு எச்சரித்தார். “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று” என்று தன்னுடைய முதல் நிருபத்தில் அவர் எழுதியிருந்தார்; இப்போது, அந்த எண்ணத்தைச் சிலர் பரியாசம் செய்ததாகத் தோன்றினது. (1 பேதுரு 4:7; 2 பேதுரு 3:3, 4) பேதுருவின் இரண்டாம் நிருபத்தை நாம் ஆராய்ந்து பார்த்து, விசுவாசத்தில் உறுதியாக நிலைத்துநிற்க சகோதரர்களுக்கு அது எவ்வாறு பலப்படுத்தியது என்பதைக் காணலாம். 2 பேதுரு முதலாம் அதிகாரத்தை இந்த முதல் கட்டுரையில் நாம் சிந்திப்போம்.
முதல் அதிகாரத்தின் நோக்கம்
5. பிரச்சினைகளை விவாதித்துப் பேசுவதற்கு, தன் வாசகர்களை பேதுரு எவ்வாறு ஆயத்தம் செய்கிறார்?
5 ஆபத்தான பிரச்சினைகளைக் குறித்து பேதுரு உடனடியாகப் பேசவில்லை. மாறாக, தன் வாசகர்கள் கிறிஸ்தவர்களானபோது தாங்கள் பெற்றவற்றின்பேரில் அவர்களுக்கு இருந்த மதித்துணர்வைப் படிப்படியாய் அதிகரிப்பதன் மூலம், இந்தப் பிரச்சினைகளை விவாதித்துப் பேசுவதற்கு வழியை ஆயத்தம் செய்கிறார். கடவுளுடைய அதிசயமான வாக்குறுதிகளையும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் நம்பத்தக்கத் தன்மையையும் குறித்து அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். ராஜ்ய அதிகாரத்தில் கிறிஸ்து இருப்பதைப் பற்றி தானே நேரில் கண்ட மறுரூபக் காட்சியைக் குறித்துச் சொல்வதன் மூலம் அவர் இதைச் செய்கிறார்.—மத்தேயு 17:1-8; 2 பேதுரு 1:3, 4, 11, 16-21.
6, 7. (அ) பேதுருவின் நிருபத்தினுடைய அறிமுகத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (ஆ) நாம் அறிவுரை கொடுத்தால், நம்மைப்பற்றி எதை ஒப்புக்கொள்ளுதல் சில சமயங்களில் உதவியாயிருக்கலாம்?
6 பேதுருவின் அறிமுகத்திலிருந்து ஒரு பாடத்தை நாம் கற்க முடியுமா? பொதுவில் நாம் மிக அருமையாக மதிக்கிற மகத்தான ராஜ்ய நம்பிக்கையின் அம்சங்களை, செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்போருடன் முதலாவதாக நாம் பேசினால் அறிவுரையை ஏற்பது அதிக எளிதாகிறது அல்லவா? மேலும், சொந்த அனுபவம் ஒன்றை பயன்படுத்துவதைப் பற்றியதென்ன? ராஜ்ய மகிமையில் கிறிஸ்து இருப்பதன் அந்தத் தரிசனக் காட்சியை தான் கண்டதைக் குறித்து பேதுரு, இயேசுவின் மரணத்திற்குப்பின் அடிக்கடி சொல்லியிருக்கலாம்.—மத்தேயு 17:9.
7 மேலும், பேதுரு தன் இரண்டாவது நிருபத்தை எழுதின காலத்திற்குள், மத்தேயுவின் சுவிசேஷமும் கலாத்தியருக்கு எழுதின அப்போஸ்தலன் பவுலின் நிருபமும் பெரும்பாலும் விரிவாய்ப் பரவச் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் நினைவில் வையுங்கள். ஆகையால் பேதுருவின் அபூரண மனிதத் தவறுதல்களும் அவருடைய விசுவாச உறுதியின் பதிவும், அவருடைய சமகாலத்தியவர்களுக்குள் நன்றாய் அறியப்பட்டிருக்கலாம். (மத்தேயு 16:21-23; கலாத்தியர் 2:11-14) எனினும், இது, அவருடைய பேச்சு சுயாதீனத்தை நீக்கிவிடவில்லை. உண்மையில், தங்கள் சொந்த பலவீனங்களைக் குறித்து உணர்வுள்ளோராக இருந்தவர்களுக்கு, அவருடைய நிருபம் மேலுமதிகக் கவர்ச்சியூட்டுவதாக இருக்கும்படி இது செய்திருக்கலாம். ஆகையால், பிரச்சினைகள் உள்ளோருக்கு உதவி செய்கையில், நாமுங்கூட தவறு செய்யக்கூடியவர்கள் என்பதை ஒப்புக்கொள்வது பயனுடையதாக இருக்குமல்லவா?—ரோமர் 3:23; கலாத்தியர் 6:1.
பலப்படுத்தும் ஒரு வாழ்த்துரை
8. “விசுவாசம்” என்ற சொல்லை என்ன கருத்தில் பேதுரு பயன்படுத்தியிருக்கலாம்?
8 பேதுருவின் வாழ்த்துரையை இப்போது கவனியுங்கள். விசுவாசத்தைப் பற்றிய விஷயத்தை உடனடியாகக் குறிப்பிடுகிறவராய், “ஒரு விசுவாசத்தைப் பெற்று, எங்களோடுகூட சமமான சிலாக்கியத்தில் வைக்கப்பட்டிருப்போருக்கு” என்று தன் வாசகர்களை முகவரியிடுகிறார். (2 பேதுரு 1:1, NW) இங்கே ‘ஒரு விசுவாசம்’ என்ற சொற்றொடர், “உறுதியாய் அறிவுறுத்தி இணக்குவித்தல்” என்று பெரும்பாலும் அர்த்தங்கொண்டு, கிறிஸ்தவ நம்பிக்கைகளின் அல்லது போதகங்களின் முழுத் தொகுதியைக் குறிக்கலாம்; இது, “சத்தியம்” என்று வேதவசனங்களில் சில சமயங்கள் அழைக்கப்பட்டிருக்கிறது. (கலாத்தியர் 5:7; 2 பேதுரு 2:2; 2 யோவான் 1) “விசுவாசம்” என்ற சொல், ஓர் ஆளில் அல்லது ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை அல்லது திடநம்பிக்கை என்ற பொது கருத்தில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிலும், இந்தக் கருத்திலேயே அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.—அப்போஸ்தலர் 6:7; 2 கொரிந்தியர் 13:5; கலாத்தியர் 6:10; எபேசியர் 4:5; யூதா 3
9. பேதுருவின் வாழ்த்துரை, புறஜாதியாருக்கு ஏன் தனிப்பட்ட முறையில் கனிவுள்ளதாகத் தொனித்திருக்க வேண்டும்?
9 புறஜாதியாரான வாசகர்களுக்கு, பேதுருவின் வாழ்த்துரை தனிப்பட்ட முறையில் கனிவுள்ளதாகத் தொனித்திருக்க வேண்டும். புறஜாதியாருடன் யூதருக்குத் தொடர்பு இருக்கவில்லை, புறஜாதியாரை அவர்கள் இழிவாகக் கருதினார்கள். கிறிஸ்தவர்களாக ஆகியிருந்த யூதருக்குள்ளும் புறஜாதியாருக்கு எதிரான தப்பெண்ணம் விடாது தொடர்ந்துகொண்டிருந்தது. (லூக்கா 10:29-37; யோவான் 4:9; அப்போஸ்தலர் 10:28) எனினும், யூதனாகப் பிறந்தவரும், இயேசு கிறிஸ்துவின் ஒரு அப்போஸ்தலனுமாக இருந்த பேதுரு, தன் வாசகர்கள்—யூதரும் புறஜாதியாரும்—ஒரே விசுவாசத்தில் பங்குகொண்டு, தன்னோடு சமமான சிலாக்கியத்தை அனுபவித்தார்கள் என்று சொன்னார்.
10. பேதுருவின் வாழ்த்துரையிலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?
10 பேதுருவின் வாழ்த்துரை, இன்று நமக்குக் கற்பிக்கிற சிறந்த பாடங்களைச் சிந்தியுங்கள். கடவுள் பட்சபாதம் உள்ளவர் அல்லர்; அவர், ஒரு குலத்தினரையோ நாட்டினரையோ மற்றவருக்கு மேலாகக் கருதி தயவுகூருவதில்லை. (அப்போஸ்தலர் 10:34, 35; 11:1, 17; 15:3-9) இயேசுதாமே போதித்தபடி, கிறிஸ்தவர்கள் எல்லாரும் சகோதரர்கள்; நம்மில் எவரும் மற்றவர்களிலும் மேம்பட்டவர்களாக உணரக்கூடாது. மேலும், பேதுருவும் அவருடைய உடன் அப்போஸ்தலரும் கொண்டிருந்த அந்த விசுவாசத்தை “சமமான சிலாக்கியத்தில்” உடையோராக இருக்கும், உலகளாவிய ஒரு சகோதரத்துவமாக நாம் நிச்சயமாகவே இருக்கிறோம் என்பதையும் பேதுருவின் வாழ்த்துரை அறிவுறுத்துகிறது.—மத்தேயு 23:8; 1 பேதுரு 5:9.
அறிவும் கடவுளுடைய வாக்குறுதிகளும்
11. வாழ்த்துரையைப் பின்தொடர்ந்து என்ன முக்கியமான காரியங்களை பேதுரு அறிவுறுத்துகிறார்?
11 தன்னுடைய வாழ்த்துரைக்குப்பின், பேதுரு இவ்வாறு எழுதுகிறார்: “தகுதியற்ற தயவும் சமாதானமும் உங்களுக்குப் பெருகுவதாக.” தகுதியற்ற தயவும் சமாதானமும் நமக்கு எவ்வாறு பெருகச் செய்யப்படும்? “கடவுளைப் பற்றியதும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவைப் பற்றியதுமான திருத்தமான அறிவின் மூலம்” என்று பேதுரு பதிலளிக்கிறார். பின்பு அவர் இவ்வாறு சொல்கிறார்: ‘ஜீவனையும் தேவபக்தியையும் குறித்த எல்லாவற்றையும் தேவ வல்லமை நமக்குத் தாராளமாய் அளித்திருக்கிறது.’ ஆனால் இந்த இன்றியமையாத காரியங்களை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்கிறோம்? “மகிமையின்மூலமும் நற்பண்பின்மூலமும் நம்மை அழைத்தவரைப் பற்றிய திருத்தமான அறிவின் மூலமாக.” இவ்வாறு, கடவுளையும் அவருடைய குமாரனையும் பற்றிய திருத்தமான அறிவு முக்கியமானது என்பதை பேதுரு இருமுறை அறிவுறுத்துகிறார்.—2 பேதுரு 1:2, 3, NW; யோவான் 17:3.
12. (அ) திருத்தமான அறிவின் முக்கியத்துவத்தை பேதுரு ஏன் அறிவுறுத்துகிறார்? (ஆ) கடவுளுடைய வாக்குறுதிகளை அனுபவித்து மகிழ்வதற்கு, நாம் முதலாவதாக என்ன செய்திருக்க வேண்டும்?
12 இரண்டாம் அதிகாரத்தில் பேதுரு எச்சரிக்கிற “கள்ளப் போதகர்கள்,” கிறிஸ்தவர்களை வஞ்சிப்பதற்கு ‘வஞ்சக வார்த்தைகளை’ பயன்படுத்துகிறார்கள். இவ்வகையில், கிறிஸ்தவர்கள் விடுவிக்கப்பட்டிருந்த அந்த ஒழுக்கக்கேடான நடத்தைக்குள் அவர்களை திரும்ப உட்படும்படி வஞ்சிக்க முயலுகிறார்கள். “கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவினாலே” இரட்சிக்கப்பட்டு, அதன் பின்பு இத்தகைய வஞ்சனைக்கு இணங்கிப்போகிறவர்களுக்கு வரும் விளைவுகள் பேரழிவுக்குரியவையாய் இருக்கின்றன. (2 பேதுரு 2:1-3, 20) இந்தப் பிரச்சினையைப் பின்னால் விவாதித்துப் பேசும் எதிர்பார்ப்பில் பேதுரு, கடவுளுடன் சுத்தமான நிலைநிற்கையைக் காத்துவருவதற்குத் திருத்தமான அறிவின் பாகத்தை தன் நிருபத்தின் தொடக்கத்திலேயே அறிவுறுத்துகிறார் எனத் தோன்றுகிறது. “தெய்வ சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, அருமையும் மகா மேன்மையுமான வாக்குத்தத்தங்களும் [கடவுளால்] நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன” என்று பேதுரு குறிப்பிடுகிறார். எனினும், நம்முடைய விசுவாசத்தின் முக்கிய அடிப்படை பாகமாயிருக்கிற இந்த வாக்குறுதிகளை அனுபவித்து மகிழ்வதற்கு நாம் முதலாவதாக, ‘இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பியிருக்க’ வேண்டும்.—2 பேதுரு 1:4.
13. எதை உறுதியாய்ப் பற்றியிருக்க, அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேரும் “மற்ற செம்மறியாடுகளும்” தீர்மானித்திருக்கின்றனர்?
13 கடவுளுடைய வாக்குறுதிகளை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்? அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் மீதிபேர் கருதும் முறையிலா? 75 ஆண்டுகளுக்கு மேல் முழுநேர ஊழியத்தில் தொடர்ந்திருந்தவரான, உவாட்ச் டவர் சொஸையிட்டியின் முன்னாள் தலைவர், ஃபிரெட்ரிக் ஃபிரான்ஸ், கிறிஸ்துவுடன் ஆளுகை செய்யும் நம்பிக்கையுடையோரின் உணர்ச்சிகளை இவ்வாறு சுருக்கமாக 1991-ல் குறிப்பிட்டார்: “இந்த மணிநேரம் வரையிலும் நாங்கள் உறுதியாகப் பற்றியிருக்கிறோம், கடவுள் தம்முடைய ‘அருமையும் மகா மேன்மையுமான’ வாக்குறுதிகளுக்கு உண்மையுள்ளவர் என்று மெய்ம்மையில் நிரூபித்து முடிக்கும் வரையிலும் நாங்கள் உறுதியாய்ப் பற்றியிருக்கப் போகிறோம்.” பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதியில் சகோதரர் ஃபிரான்ஸ் திடநம்பிக்கையுடன் நிலைத்திருந்தார்; 99 வயதில் தன்னுடைய மரணம் வரையாக அந்த விசுவாசத்தை அவர் உறுதியாய்ப் பற்றியிருந்தார். (1 கொரிந்தியர் 15:42-44; பிலிப்பியர் 3:13, 14; 2 தீமோத்தேயு 2:10-12) இவ்வாறே, சந்தோஷமாய் என்றென்றும் வாழப்போகிற பூமிக்குரிய ஒரு பரதீஸைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதியை, லட்சக்கணக்கானோர் உறுதியாய்ப் பற்றி, தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தியிருக்கின்றனர். இவர்களில் நீங்களும் ஒருவரா?—லூக்கா 23:43; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4.
கடவுளுடைய வாக்குறுதிகளுக்குப் பிரதிபலிப்பது
14. விசுவாசத்தோடு கூட்ட வேண்டிய முதல் பண்பாக, நற்குணத்தை வரிசையில் முதலாவதாக பேதுரு ஏன் குறிப்பிடுகிறார்?
14 கடவுள் வாக்குக்கொடுத்திருக்கிறவற்றிற்கு நாம் நன்றியுள்ளோராக இருக்கிறோமா? அப்படியானால், அதை நாம் வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்று பேதுரு விவாதிக்கிறார். “ஆம், இந்தக் காரணத்தினிமித்தமாகவே” (மிக அருமையான வாக்குறுதிகளைக் கடவுள் நமக்குக் கொடுத்திருப்பதனிமித்தமாக), விசுவாசத்தில் செயல்படுவதற்கு நாம் உண்மையான முயற்சி எடுக்க வேண்டும். வெறுமனே விசுவாசத்தில் இருப்பதோடு அல்லது பைபிள் சத்தியத்தோடு வெறுமனே பழக்கப்பட்டிருப்பதோடு திருப்தியடைந்தவர்களாய் நாம் இருக்க முடியாது. அது போதுமானதல்ல! பேதுருவின் நாளில் சபையிலிருந்த சிலர், ஒருவேளை, விசுவாசத்தைப் பற்றி மிகுதியாய்ப் பேசியிருந்து, ஆனால் ஒழுக்கக்கேடான நடத்தையில் உட்பட்டிருக்கலாம். அவர்களுடைய நடத்தை நல்லொழுக்கமுள்ளதாய் இருக்க வேண்டியதாக இருந்தது. ஆகையால் பேதுரு இவ்வாறு ஊக்குவிக்கிறார்: “உங்கள் விசுவாசத்தில் நற்குணத்தையும்” கூட்டுங்கள்.—2 பேதுரு 1:5, திருத்திய மொழிபெயர்ப்பு; யாக்கோபு 2:14-17.
15. (அ) விசுவாசத்தோடு கூட்ட வேண்டிய மற்றொரு பண்பாக, நற்குணத்திற்குப்பின் அறிவு ஏன் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது? (ஆ) விசுவாசத்தை உறுதியாய்ப் பற்றியிருப்பதற்கு வேறு என்ன பண்புகள் நமக்கு உதவியாக இருக்கும்?
15 நற்குணத்தைக் குறிப்பிட்ட பின்பு, நம்முடைய விசுவாசத்துடன் மேலும் வழங்க வேண்டிய, அல்லது கூட்ட வேண்டிய இன்னும் ஆறு பண்புகளைப் பேதுரு வரிசையாகக் குறிப்பிடுகிறார். நாம் ‘விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்க’ வேண்டுமானால், இவை ஒவ்வொன்றும் நமக்குத் தேவை. (1 கொரிந்தியர் 16:13, NW) விசுவாசதுரோகிகள் ‘வேதவாக்கியங்களைப் புரட்டிக்கொண்டும்’ ‘கள்ளப் போதகங்களைப்’ பரப்பிக்கொண்டும் இருந்ததனால், அடுத்தப்படியாக, அறிவை முக்கியமானதாகக் குறிப்பிட்டு, இவ்வாறு சொல்கிறார்: “நற்குணத்தில் அறிவையும் [கூட்டுங்கள்].” பின்பு அவர் மேலும் தொடர்ந்து: “அறிவில் தன்னடக்கத்தையும் அடக்கத்தில் பொறுமையையும் பொறுமையில் தெய்வபக்தியையும் தெய்வபக்தியில் சகோதரசிநேகத்தையும் சகோதர சிநேகத்தில் அன்பையுங்கூட்டி வழங்குங்கள்” என்கிறார்.—2 பேதுரு 1:5-7, தி.மொ.; 2:12, 13; 3:16.
16. பேதுரு வரிசைப்படுத்தும் பண்புகள் விசுவாசத்துடன் கூட்டப்பட்டால் என்ன நேரிடும், ஆனால் அவை கூட்டப்படாவிட்டால் என்ன நேரிடும்?
16 நம்முடைய விசுவாசத்தோடு இந்த ஏழு காரியங்களையும் கூட்டினால், என்ன நேரிடும்? “இந்தக் காரியங்கள் உங்களில் அமைந்திருந்து பொங்கிவழிந்தால்,” பேதுரு சொல்கிறார், “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் திருத்தமான அறிவைக் குறித்ததில் செயலற்றவர்களாகவோ அல்லது கனியற்றவர்களாகவோ இருப்பதிலிருந்து அவை உங்களைத் தடுத்து வைக்கும்” (2 பேதுரு 1:8, NW) மறுபட்சத்தில், பேதுரு சொல்கிறார்: “இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண் சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.” (2 பேதுரு 1:9) “நீங்கள்,” “நாம்,” என்பவற்றை பயன்படுத்தினதிலிருந்து, “எவனோ,” “அவன்,” “தான்” என்பவற்றிற்கு பேதுரு மாற்றுகிறதைக் கவனியுங்கள். வருந்தத்தக்கதாய், சிலர் குருடராகவும், மறதியுள்ளோராகவும், அசுத்தராகவும் இருந்தபோதிலும், தயவாக பேதுரு, வாசகரை இவர்களில் ஒருவராக மறைமுகமாய்க் குறிப்பிடுகிறதில்லை.—2 பேதுரு 2:2.
தன் சகோதரரைப் பலப்படுத்துதல்
17. “இவற்றை” செய்துகொண்டிருக்கும்படி பேதுரு கனிவோடு கூறுவதை எது தூண்டியிருக்கலாம்?
17 முக்கியமாய், புதியவர்கள் எளிதில் வஞ்சிக்கப்படலாம் என்பதை ஒருவேளை உணருபவராய், பேதுரு அவர்களைக் கனிவோடு இவ்வாறு ஊக்குவிக்கிறார்: “சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உங்களுக்கு நிச்சயமாக்கிக்கொள்வதற்கு உங்களால் இயலும் உச்ச அளவை மேலும் அதிகமாகச் செய்யுங்கள்; ஏனெனில் இவற்றை நீங்கள் விடாது தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழமாட்டீர்கள்.” (2 பேதுரு 1:10, NW; 2:18) இந்த ஏழு காரியங்களையும் தங்கள் விசுவாசத்துடன் கூட்டுகிற அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், பேதுரு பின்வருமாறு சொல்கிற பிரகாரம், மேன்மையான பலனை அனுபவித்து மகிழ்வார்கள்: “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.” (2 பேதுரு 1:11) “மற்ற செம்மறியாடுகளும்” கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய ஆட்சி எல்லையில் ஒரு நித்திய சுதந்தரத்தைப் பெறுவார்கள்.—யோவான் 10:16, NW; மத்தேயு 25:33, 34.
18. தன் சகோதரரை “எப்பொழுதும் நினைப்பூட்ட” மனமுள்ளவராக பேதுரு இருப்பது ஏன்?
18 அத்தகைய மேன்மையான பலன் தன் சகோதரருக்குக் கிடைக்கும்படி பேதுரு உள்ளப்பூர்வமாய் விரும்புகிறார். “இதனிமித்தம்,” அவர் எழுதுகிறார், “இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.” (2 பேதுரு 1:12) ஸ்டெரிஸோ என்ற கிரேக்கச் சொல்லை பேதுரு பயன்படுத்துகிறார்; ‘உறுதிப்பட்டு’ என்று அது இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், முன்பு இயேசு பேதுருவுக்குக் கொடுத்த அறிவுரையில் “ஸ்திரப்படுத்து” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது: “உன் சகோதரரை ஸ்திரப்படுத்து.” (லூக்கா 22:32) தன் கர்த்தரிடமிருந்து பெற்ற வல்லமைவாய்ந்த அந்த அறிவுரையை பேதுரு நினைவுகூருகிறார் என்று இந்தச் சொல்லைப் பயன்படுத்தினது ஒருவேளை குறிப்பிடலாம். பேதுரு இப்போது சொல்கிறார்: “நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து, இந்தக் கூடாரத்தில் [மனித உடலில்] நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்.”—2 பேதுரு 1:13, 14.
19. இன்று நமக்கு என்ன உதவிகள் தேவை?
19 தன் வாசகர்கள் ‘சத்தியத்தில் உறுதிப்பட்டிருக்கிறார்கள்’ என்று பேதுரு தயவாய்ச் சொல்லுகிறபோதிலும், அவர்களுடைய விசுவாசம் கப்பற்சேதத்தை அனுபவிக்கக்கூடும் என்று அவர் உணருகிறார். (1 தீமோத்தேயு 1:19) சீக்கிரத்தில் தான் மரிக்கப்போகிறார் என்று அவர் அறிந்திருப்பதால், பிற்பட்ட காலத்தில், ஆவிக்குரிய பிரகாரமாய்த் தங்களைப் பலமாக வைத்துக்கொள்வதற்கு, அவர்கள் நினைவுபடுத்திக்கொள்ளக்கூடிய காரியங்களைக் குறிப்பிடுவதன்மூலம் தன் சகோதரரைப் பலப்படுத்துகிறார். (2 பேதுரு 1:15; 3:12, 13) அவ்வாறே, இன்று நாம், விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருப்பதற்கு இடைவிடாத நினைப்பூட்டுதல்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. நாம் யாராக இருந்தாலும் அல்லது எவ்வளவு நீடித்த காலம் சத்தியத்தில் இருந்துவந்திருந்தாலும், தவறாமல் பைபிள் வாசிப்பதிலும், தனிப்பட்ட படிப்பிலும், சபை கூட்டங்களுக்கு ஆஜராவதிலும் நாம் கவனக்குறைவாய் இருக்க முடியாது. தாங்கள் மட்டுக்கு மீறி களைப்புற்றிருப்பதாக, அல்லது கூட்டங்களில் அதே காரியங்கள் திரும்பத்திரும்ப சொல்லப்படுகின்றன அல்லது அக்கறையைக் கவரும் முறையில் அவை இல்லை என்பதாகச் சொல்லி, கூட்டங்களுக்கு வராததற்குச் சிலர் சாக்குப்போக்கு கூறுகின்றனர். ஆனால், நாம் மட்டுக்குமீறிய தன்னம்பிக்கை உடையோராவோமானால், நாம் எவராயிருந்தாலும் எவ்வளவு விரைவில் விசுவாசத்தை இழக்கக்கூடும் என்று பேதுரு அறிந்திருந்தார்.—மாற்கு 14:66-72; 1 கொரிந்தியர் 10:12; எபிரெயர் 10:25.
நம்முடைய விசுவாசத்திற்கு உறுதியான ஆதாரம்
20, 21. மறுரூப காட்சி, எவ்வாறு பேதுருவின் விசுவாசத்தையும், இன்று நாம் உட்பட, அவருடைய நிருபங்களை வாசிப்போரின் விசுவாசத்தையும் பலப்படுத்தினது?
20 வெறுமனே சூழ்ச்சித் திறமையோடு உருவாக்கப்பட்ட கற்பனை கட்டுக்கதைகளில் நம் விசுவாசம் ஆதாரம்கொள்ளும்படி செய்யப்பட்டிருக்கிறதா? “அல்ல” என்று பேதுரு அழுத்தந்திருத்தமாய் பதிலளிக்கிறார், “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.” ராஜ்ய வல்லமையில் இயேசு காட்சியளித்ததை அவர்கள் கண்டபோது, பேதுருவும், யாக்கோபும், யோவானும் அவருடன் இருந்தார்கள். பேதுரு இவ்வாறு விளக்குகிறார்: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.”—2 பேதுரு 1:16-18,
21 பேதுருவும், யாக்கோபும், யோவானும் அந்தக் காட்சியைக் கண்டபோது, ராஜ்யம் நிச்சயமாகவே அவர்களுக்கு மெய்ம்மையாயிற்று! பேதுரு இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தீர்க்கதரிசன வசனம் இதினால் நமக்கு அதிக உறுதியானது. . . . அவ்வசனத்தை நீங்கள் கவனித்திருப்பது நலமாகும்.” ஆம், இன்று நாம் உட்பட, பேதுருவின் நிருபத்தை வாசிப்பவர்கள், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்களுக்குக் கவனம் செலுத்த வல்லமைவாய்ந்த காரணம் உள்ளது. என்ன வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்? “பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருண்ட இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்”போல், என்று பேதுரு பதிலளிக்கிறார்.—2 பேதுரு 1:19, தி.மொ.; தானியேல் 7:13, 14; ஏசாயா 9:6, 7.
22. (அ) எதற்கு விழிப்புள்ளவையாக நம் இருதயங்கள் வைக்கப்பட்டு வருவது அவசியம்? (ஆ) தீர்க்கதரிசன வார்த்தைக்கு நாம் எவ்வாறு கவனம் செலுத்துகிறோம்?
22 தீர்க்கதரிசன வசனத்தின் ஒளி இல்லாமல் நம்முடைய இருதயங்கள் இருண்டிருக்கும்; ஆனால் அதற்குக் கவனம் செலுத்துவதன் மூலம், கிறிஸ்தவர்களின் இருதயங்கள், “விடிவெள்ளி”யாகிய இயேசு கிறிஸ்து, ராஜ்ய மகிமையில் எழும்பும் அந்நாளின் பொழுது விடிவதற்கு விழிப்புடன் வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 22:16) இன்று, நாம் எவ்வாறு தீர்க்கதரிசன வசனத்திற்குக் கவனம் செலுத்துகிறோம்? பைபிள் படிப்பின் மூலமும், கூட்டங்களுக்காக தயாரித்து அவற்றில் பங்குகொள்வதன் மூலமும், ‘இவைகளைச் சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திருப்பதன்’ மூலமுமே. (1 தீமோத்தேயு 4:15) தீர்க்கதரிசன வசனம், “இருண்ட இடத்தில்” (நம்முடைய இருதயங்களில்) பிரகாசிக்கிற விளக்கைப்போன்று இருக்க வேண்டுமானால், அது நம்மை—நம் விருப்பங்களையும், உணர்ச்சிவேகங்களையும், உள்நோக்கங்களையும், இலக்குகளையும்—ஆழமாய்ப் பாதிப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். நாம் பைபிள் மாணாக்கராக இருக்க வேண்டும், ஏனெனில், முதலாம் அதிகாரத்தை பேதுரு இவ்வாறு முடிக்கிறார்: “வேதவாக்கியங்களிற் கண்ட எந்தத் தீர்க்கதரிசனமும் அவனவன் வியாக்கியானத்தினால் வருவதல்ல . . . தீர்க்கதரிசனம் ஒருபோதும் மனுஷசித்தத்தினால் வரவில்லை; கடவுளினிடமிருந்து வந்ததையே பரிசுத்த ஆவியினால் ஏவப்படுகிறவர்களாய் மனுஷர் பேசினார்கள்.”—2 பேதுரு 1:20, 21, தி.மொ.
23. வாசகர்களை, 2 பேதுருவின் முதலாம் அதிகாரம், எதற்கு ஆயத்தம் செய்திருக்கிறது?
23 பேதுரு தன்னுடைய இரண்டாவது கடிதத்தின் துவக்க அதிகாரத்தில், நம்முடைய அருமையான விசுவாசத்தை உறுதியாய்ப் பற்றியிருப்பதற்கு வல்லமைவாய்ந்த தூண்டுகோலை அளித்தார். பின்வரும் வினைமையான காரியங்களைச் சிந்திப்பதற்கு இப்போது நாம் ஆயத்தமாயிருக்கிறோம். அடுத்தக் கட்டுரையில், 2 பேதுருவின் இரண்டாம் அதிகாரம் விவாதித்து ஆராயப்படும். சபைக்குள் ஊடுருவியிருந்த ஒழுக்கக்கேடான செல்வாக்குகளை எதிர்ப்பதைப் பற்றி அதில் இந்த அப்போஸ்தலன் விவரித்துரைக்கிறார்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ திருத்தமான அறிவின் முக்கியத்துவத்தை பேதுரு ஏன் அறிவுறுத்துகிறார்?
◻ விசுவாசத்தோடு கூட்டப்பட வேண்டிய முதல் பண்பாக, நற்குணம், வரிசையில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருப்பதன் காரணம் என்னவாக இருக்கலாம்?
◻ எப்போதும் தன் சகோதரரை நினைப்பூட்டுவதற்கு மனமுள்ளவராக பேதுரு இருப்பது ஏன்?
◻ நம்முடைய விசுவாசத்திற்கு என்ன உறுதியான ஆதாரத்தை பேதுரு அளிக்கிறார்?
[பக்கம் 9-ன் படம்]
பேதுருவின் குறைபாடுகள், தன் விசுவாசத்தைக் கைவிடும்படி அவரைச் செய்விக்கவில்லை