அப்போஸ்தலரின் செயல்கள்
10 செசரியாவில் கொர்நேலியு என்ற ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியப் பிரிவு* என்ற படைப்பிரிவில் ஓர் அதிகாரியாக* இருந்தார். 2 அவர் கடவுள்பக்தி உள்ளவர்; தன் வீட்டிலிருந்த எல்லாரோடும் சேர்ந்து கடவுளுக்குப் பயந்து நடந்தார். மக்களுக்குப் பல தானதர்மங்கள் செய்தார். எப்போதும் கடவுளிடம் மன்றாடிவந்தார். 3 ஒருநாள் சுமார் ஒன்பதாம் மணிநேரத்தில்*+ அவர் ஒரு தரிசனத்தைப் பார்த்தார்; அது மிகவும் தெளிவாக இருந்தது. அதில் ஒரு தேவதூதர் அவரிடம் வந்து, “கொர்நேலியுவே!” என்று கூப்பிட்டார். 4 அப்போது அவர் அந்தத் தேவதூதரை உற்றுப் பார்த்து, “என்ன எஜமானே?” என்று பயத்தோடு கேட்டார். அதற்குத் தேவதூதர், “உன்னுடைய ஜெபங்களும் தானதர்மங்களும் கடவுளுடைய சன்னிதியை எட்டியிருக்கின்றன, அவற்றை அவர் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்.+ 5 இப்போது நீ யோப்பாவுக்கு ஆட்களை அனுப்பி, பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனைக் கூட்டிக்கொண்டு வா. 6 தோல் பதனிடுபவரான சீமோனின் வீட்டில் அவர் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறார்; அந்த வீடு கடலோரத்தில் இருக்கிறது” என்று சொன்னார். 7 அந்தத் தேவதூதர் மறைந்தவுடனே, அவர் தன்னுடைய வேலைக்காரர்களில் இரண்டு பேரையும், தன்னுடைய படைவீரர்களில் கடவுள்பக்தி உள்ள ஒருவரையும் கூப்பிட்டு, 8 நடந்த எல்லாவற்றையும் சொல்லி, அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினார்.
9 அவர்களும் புறப்பட்டுப் போனார்கள்; அடுத்த நாள் அவர்கள் அந்த நகரத்தை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், பேதுரு ஜெபம் செய்வதற்காகச் சுமார் ஆறாம் மணிநேரத்தின்போது* வீட்டு மாடிக்குப் போனார். 10 அவர் மிகவும் பசியாக இருந்ததால் சாப்பிட விரும்பினார். சாப்பாடு தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் ஒரு தரிசனத்தைப் பார்த்தார்.*+ 11 வானம் திறந்திருப்பதையும், பெரிய நாரிழை* விரிப்பைப் போன்ற ஒன்று நான்கு முனைகளில் கட்டப்பட்டு பூமியில் இறக்கிவிடப்படுவதையும் பார்த்தார். 12 பூமியில் இருக்கிற எல்லா வகையான நான்கு கால் விலங்குகளும் ஊரும் பிராணிகளும் வானத்துப் பறவைகளும் அதில் இருந்தன. 13 அப்போது, “பேதுருவே, நீ எழுந்து இவற்றை அடித்துச் சாப்பிடு!” என்ற குரல் கேட்டது. 14 ஆனால் பேதுரு, “வேண்டவே வேண்டாம் எஜமானே, தீட்டானதையும் அசுத்தமானதையும் நான் ஒருபோதும் சாப்பிட்டதில்லை”+ என்று சொன்னார். 15 அந்தக் குரல் இரண்டாவது தடவை அவரிடம், “கடவுள் சுத்தமாக்கியவற்றைத் தீட்டென்று சொல்லாதே” என்றது. 16 மூன்றாவது தடவையும் அந்தக் குரல் கேட்டது. உடனடியாக அந்த விரிப்பு வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
17 பேதுரு தான் பார்த்த தரிசனத்தின் அர்த்தம் புரியாமல் குழம்பிக்கொண்டிருந்த சமயத்தில், கொர்நேலியு அனுப்பிய ஆட்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டே அந்த வீட்டு வாசலில் வந்து நின்றார்கள்.+ 18 பின்பு, பேதுரு என்று அழைக்கப்படும் சீமோன் அங்கே விருந்தாளியாகத் தங்கியிருக்கிறாரா என்று அந்த வீட்டில் இருந்தவரைக் கூப்பிட்டுக் கேட்டார்கள். 19 அந்தத் தரிசனத்தைப் பற்றி பேதுரு யோசித்துக்கொண்டிருந்தபோது கடவுளுடைய சக்தி+ அவரிடம், “இதோ! மூன்று பேர் உன்னைத் தேடி வந்திருக்கிறார்கள். 20 நீ எழுந்து கீழே போய், எதைப் பற்றியும் சந்தேகப்படாமல் அவர்களோடு புறப்பட்டுப் போ, நான்தான் அவர்களை அனுப்பியிருக்கிறேன்” என்று சொன்னது. 21 பேதுரு கீழே இறங்கி வந்து அந்த ஆட்களிடம், “நீங்கள் தேடுகிற ஆள் நான்தான். எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். 22 அதற்கு அவர்கள், “கொர்நேலியு+ என்ற படை அதிகாரி எங்களை அனுப்பியிருக்கிறார்; அவர் ஒரு நீதிமான், கடவுளுக்குப் பயந்து நடப்பவர், யூதர்கள் எல்லாராலும் உயர்வாகப் பேசப்படுபவர். உங்களை வீட்டுக்கு வரவழைத்து நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமென்று பரிசுத்த தூதர் மூலம் கடவுள் அவருக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று சொன்னார்கள். 23 அதனால், பேதுரு அவர்களை உள்ளே அழைத்து விருந்தாளிகளாகத் தங்க வைத்தார்.
அடுத்த நாள் அவர்களோடு புறப்பட்டுப் போனார்; யோப்பாவில் இருந்த சில சகோதரர்களும் அவரோடு போனார்கள். 24 அதற்கு அடுத்த நாள் அவர் செசரியாவுக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே கொர்நேலியு தன்னுடைய சொந்தக்காரர்களையும் நெருங்கிய நண்பர்களையும் ஒன்றுகூட்டி, அவர்களுக்காகக் காத்திருந்தார். 25 பேதுரு வீட்டுக்குள் நுழைந்ததும், கொர்நேலியு அவரிடம் போய், அவருடைய காலில் விழுந்து வணங்கினார். 26 அப்போது பேதுரு, “எழுந்திருங்கள்; நானும் ஒரு மனுஷன்தான்”+ என்று சொல்லி அவரைத் தூக்கிவிட்டார். 27 அதன் பின்பு, அவரோடு பேசிக்கொண்டே உள்ளே போனபோது அங்கே நிறைய பேர் கூடியிருந்ததைப் பார்த்தார். 28 அப்போது அவர்களிடம், “ஒரு யூதன் வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்திப்பதோ அவரோடு பழகுவதோ யூத சட்டத்துக்கு எதிரானது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.+ ஆனாலும், யாரையும் தீட்டானவர் என்றும், அசுத்தமானவர் என்றும் சொல்லக் கூடாது என்பதைக் கடவுள் எனக்குக் காட்டியிருக்கிறார்.+ 29 அதனால், நீங்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியபோது எந்த மறுப்பும் தெரிவிக்காமல் வந்தேன். இப்போது சொல்லுங்கள், எதற்காக என்னைக் கூப்பிட்டு அனுப்பினீர்கள்” என்று கேட்டார்.
30 அதற்கு கொர்நேலியு, “நான்கு நாட்களுக்கு முன்பு இதே நேரத்தில், ஒன்பதாம் மணிநேரத்தில்,* நான் என்னுடைய வீட்டில் ஜெபம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, பிரகாசமான உடையில் ஒருவர் என் முன்னால் வந்து நின்றார். 31 அவர் என்னிடம், ‘கொர்நேலியுவே, உன்னுடைய ஜெபத்தைக் கடவுள் கேட்டிருக்கிறார், நீ செய்த தானதர்மங்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார். 32 அதனால் நீ யோப்பாவுக்கு ஆட்களை அனுப்பி, பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனைக் கூட்டிக்கொண்டு வா. தோல் பதனிடுபவரான சீமோனுடைய வீட்டில் அவர் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறார்.+ அந்த வீடு கடலோரத்தில் இருக்கிறது’ என்று சொன்னார். 33 உடனே உங்களிடம் ஆட்களை அனுப்பினேன். நீங்களும் பெரியமனதுபண்ணி இங்கே வந்தீர்கள். எங்களுக்குச் சொல்லச் சொல்லி யெகோவா* உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா விஷயங்களையும் கேட்பதற்கு நாங்கள் எல்லாரும் இப்போது அவர் முன்னால் கூடியிருக்கிறோம்” என்று சொன்னார்.
34 அப்போது பேதுரு பேச ஆரம்பித்து, “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்+ என்பதையும், 35 அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்+ என்பதையும் இப்போது நான் நன்றாகப் புரிந்துகொண்டேன். 36 இயேசு கிறிஸ்துவின் மூலம் அவர் சமாதானத்தின் நல்ல செய்தியை+ அறிவித்து, இஸ்ரவேல் மக்களுக்குத் தெரிவித்த விஷயம் இதுதான்: கிறிஸ்துவே எல்லாருக்கும் எஜமான்.+ 37 ஞானஸ்நானத்தைப் பற்றி யோவான் பிரசங்கித்த பின்பு கலிலேயா+ தொடங்கி யூதேயா முழுவதும் என்ன விஷயம் பேசப்பட்டதென்று உங்களுக்கே தெரியும். 38 நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைக் கடவுள் தன்னுடைய சக்தியாலும்+ வல்லமையாலும் அபிஷேகம் செய்ததையும், கடவுள் அவரோடு இருந்ததால்+ அவர் தேசம் முழுவதும் போய் நன்மைகள் செய்ததையும், பிசாசின் கொடுமைக்கு ஆளான+ எல்லாரையும் குணப்படுத்தியதையும் பற்றிப் பேசப்பட்டதெல்லாம் உங்களுக்கே தெரியும். 39 யூதர்களுடைய தேசத்திலும் எருசலேம் நகரத்திலும் அவர் செய்த எல்லா காரியங்களுக்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். ஆனால், அவர்கள் அவரை மரக் கம்பத்தில்* அறைந்து* கொன்றார்கள். 40 கடவுள் அவரை மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பி,+ மக்கள்முன் தோன்ற வைத்தார். 41 ஆனால் எல்லா மக்களுக்கும் அல்ல, தான் முன்கூட்டியே நியமித்த சாட்சிகள்முன், அதாவது இயேசு உயிரோடு எழுந்த பின்பு அவரோடு சாப்பிட்டுக் குடித்த எங்கள்முன்,+ தோன்ற வைத்தார். 42 அதோடு, உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் அவரையே நீதிபதியாக நியமித்தார்+ என்ற விஷயத்தை மக்களிடம் பிரசங்கிக்க வேண்டும் என்றும், முழுமையாகச் சாட்சி கொடுக்க வேண்டும் என்றும் இயேசு எங்களுக்குக் கட்டளையிட்டார்.+ 43 அவர்மேல் விசுவாசம் வைக்கிற எல்லாருக்கும் அவருடைய பெயரால் பாவ மன்னிப்பு கிடைக்கும்+ என்று எல்லா தீர்க்கதரிசிகளும் அவரைப் பற்றிச் சாட்சி சொல்லியிருக்கிறார்கள்”+ என்றார்.
44 பேதுரு இந்த விஷயங்களைப் பேசப் பேசவே, அதைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லார்மேலும் கடவுளுடைய சக்தி பொழியப்பட்டது.+ 45 கடவுளுடைய இலவச அன்பளிப்பாகிய அவருடைய சக்தி மற்ற தேசத்து மக்கள்மேலும்* பொழியப்பட்டதை பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனம் செய்யப்பட்ட சீஷர்கள்* பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். 46 ஏனென்றால், அந்த மக்கள் வெவ்வேறு மொழிகளில் பேசி கடவுளை மகிமைப்படுத்துவதை அவர்கள் கேட்டார்கள்.+ அப்போது பேதுரு, 47 “நம்மைப் போலவே கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொண்ட இவர்கள் தண்ணீரில் ஞானஸ்நானம் எடுப்பதை யாராவது தடுக்க முடியுமா?”+ என்று சொல்லி, 48 இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் எடுக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.+ பின்பு, சில நாட்கள் அங்கே தங்கச் சொல்லி அவர்கள் அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.