அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
சுயதியாகத்துக்கும் உண்மைப்பற்றுறுதிக்கும் ஒரு முன்மாதிரி
எலிசா என்ற பெயருள்ள ஒரு இளம் விவசாயிக்கு, வழக்கம் போல நிலத்தை உழுவதோடு துவங்கின அந்த நாள் அவருடைய வாழ்நாளில் அதிமுக்கியமான ஒரு நாளாக இருந்தது. வயலில் அவர் வேலைசெய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இஸ்ரவேலின் முதன்மையான தீர்க்கதரிசியான எலியா இவரைப் பார்க்க வந்திருந்தார். ‘எலியா ஏன் என்னைப் பார்க்க வரவேண்டும்?’ என்பதாக எலிசா ஒருவேளை யோசித்திருக்கலாம். ஒரு பதிலுக்காக அவர் வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. எலியா தன்னுடைய அதிகாரப்பூர்வமான சால்வையை எலிசாவின்மீது போட்டு ஒரு நாள் எலிசா அவருடைய வாரிசாக இருப்பார் என்பதைக் குறிப்பாக தெரிவித்தார். எலிசா இந்த அழைப்பை முக்கியமற்றதாக கருதவில்லை. உடனடியாக அவர் தன்னுடைய வயலைவிட்டுப் புறப்பட்டு எலியாவின் ஊழியக்காரனானார்.—1 இராஜாக்கள் 19:19-21.
சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், எலியா புறப்படுவதற்கான சமயம் வந்தது. அவருடைய புறப்பாட்டைப் பற்றிய பதிவு எபிரெய வேதாகமத்தில், “மனதை அதிகமாக கவர்ந்த விவரங்களில் ஒன்று” என்பதாக அழைக்கப் பட்டிருக்கிறது.
எலியா புறப்பட தயாராகிறார்
எலியா கடைசி முறையாக பெத்தேல், எரிகோ, யோர்தான் ஆகியவற்றுக்கு சென்றுவர விரும்பினார். இது அநேக கிலோமீட்டர் நடந்து செல்வதை, சில சமயங்களில் கரடுமுரடான மலைப்பாங்கான பகுதிகளின் வழியாக நடந்து செல்வதையும் உட்படுத்தும். பிரயாணத்தின்போது ஒவ்வொரு இடத்தை அடைந்தப்போதும், எலிசாவை அவ்விடத்திலேயே தங்கிவிடும்படியாக எலியா உற்சாகப்படுத்தினார். ஆனால் எலிசா கடைசி வரையில் தன்னுடைய எஜமானரோடு இருப்பதில் உறுதியாயிருந்தார்.—2 இராஜாக்கள் 2:1, 2, 4, 6.
பெத்தேலிலும் எரிகோவிலும் இருக்கையில், “தீர்க்கதரிசிகளின் புத்திரர்” எலிசாவினிடத்திற்கு வந்தார்கள்.a “இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.”—2 இராஜாக்கள் 2:3, 5.
அடுத்து எலியாவும் எலிசாவும் யோர்தான் நதிக்குப் புறப்படுகிறார்கள். யோர்தானை அவர்கள் வந்தடைந்தபோது, சுமார் 50 தீர்க்கதரிசிகளின் புத்திரர் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்க எலியா ஒரு அற்புதத்தைச் செய்துக் காட்டுகிறார். “அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருப்பக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்.”—2 இராஜாக்கள் 2:8.
அவர்கள் அக்கரைக்குப் போனப்பின்பு, எலிசாவிடம் எலியா இவ்வாறு சொன்னார்: “நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள்.” அதற்கு எலிசா, எலியாவிலுள்ள ஆவியை தனக்கு “இரட்டிப்பாய்”—அதாவது முதற்பேறானவன் சாதாரணமாய் உரிமையுடன் பெற்றுக் கொள்ளும் இரண்டு பங்கைக்—கொடுக்கும்படியாக கேட்டார். ஆம், ஒரு முதற்பேறான மகன் தன் தந்தையை எப்படி கனம்பண்ணுவானோ அதேவிதமாகவே எலியாவை எலிசா கனம்பண்ணியிருந்தார். மேலுமாக, இஸ்ரவேலில் யெகோவாவின் தீர்க்கதரிசியாக எலியாவுக்கு வாரிசாக ஆகும்படியாக அவர் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தார். ஆகவே அவர் கேட்டுக்கொண்ட காரியம் தன்னலமானதாக அல்லது பொருத்தமற்றதாக இருக்கவில்லை. இருந்தபோதிலும் யெகோவா மாத்திரமே இதை அருள முடியும் என்பதை அறிந்தவராய் எலியா அடக்கமாக இவ்வாறு பதிலளித்தார்: “அரிதான காரியத்தைக் கேட்டாய்.” மேலும் அவர், “உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது” என்றார்.—2 இராஜாக்கள் 2:9, 10; உபாகமம் 21:17.
எலிசா தன்னுடைய எஜமானரை எப்போதும் இருந்ததைவிட அதிக நெருக்கமாக பற்றிக்கொண்டிருக்க திடதீர்மானமாய் இருந்தார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அப்போது, “அக்கினி இரதமும் அக்கினிக் குதிரைகளும்” காணப்பட்டன. வியப்பில் ஆழ்ந்துவிட்ட எலிசாவின் கண்களுக்கு முன்பாகவே எலியா சுழற்காற்றிலே—மற்றொரு இடத்துக்கு—எடுத்துச் செல்லப்பட்டார்.b எலிசா, எலியாவின் அதிகாரப்பூர்வமான சால்வையை எடுத்துக்கொண்டு யோர்தான் நதியின் அக்கரைக்கு திரும்பி நடந்துசென்றார். அவர் தண்ணீரை அடித்து, “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே”? என்று சொன்னார். எலியாவின் வாரிசாக எலிசாவுக்கு கடவுளுடைய ஆதரவு இருந்தது என்பதற்கு தெளிவாக சாட்சிபகரும் விதமாக தண்ணீர் இரண்டாக பிரிந்தது.—2 இராஜாக்கள் 2:11-14.
நமக்குப் பாடங்கள்
எலியாவோடு விசேஷமான சேவைக்காக அழைக்கப்பட்டபோது, எலிசா இஸ்ரவேலின் முதன்மையான தீர்க்கதரிசிக்கு ஊழியஞ்செய்வதற்கு தன்னுடைய வயலைவிட்டு உடனடியாக புறப்பட்டார். அவர் செய்த சில வேலைகள் வீட்டு வேலையாட்கள் செய்யும் வேலைகளாக இருந்தன, ஏனென்றால், “எலியாவின் கைகளுக்கு தண்ணீர் வார்த்த” ஒருவர் என்பதாக அவர் அறியப்படலானார்.c (2 இராஜாக்கள் 3:11) இருந்தபோதிலும் எலிசா தன்னுடைய வேலையை ஒரு சிலாக்கியமாக கருதி எலியாவின் பக்கத்தில் பற்றுமாறாமல் ஒட்டிக்கொண்டிருந்தார்.
கடவுளுடைய ஊழியர்களில் அநேகர் இன்று அதேப்போன்ற சுயதியாக மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றனர். தொலைவிலுள்ள பிராந்தியங்களில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அல்லது பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்களாக சேவிப்பதற்கு சிலர் தங்களுடைய ‘வயல்களை,’ பிழைப்புக்காக அவர்கள் செய்துகொண்டிருந்த வேலைகளைவிட்டு வந்திருக்கிறார்கள். மற்றவர்கள் சங்கத்தின் கட்டுமான திட்டங்களில் வேலைசெய்வதற்காக அயல்நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். அநேகர் தாழ்வானவை என்றழைக்கப்படும் வேலைகளைச் செய்ய இசைந்துள்ளனர். இருந்தபோதிலும், யெகோவாவுக்காக ஊழியஞ்செய்கிற எவருமே அற்பமான சேவையை செய்துகொண்டில்லை. யெகோவா தம்மை மனப்பூர்வமாய் சேவிக்கிற யாவரையும் போற்றுகிறார், அவர்களுடைய சுயதியாக மனப்பான்மையை அவர் ஆசீர்வதிப்பார்.—மாற்கு 10:29, 30.
எலிசா கடைசிவரையாக எலியாவுடன் நிலைத்திருந்தார். வாய்ப்பு அளிக்கப்பட்டபோதிலும்கூட வயதான தீர்க்கதரிசியைவிட்டுப் போக அவர் மறுத்துவிட்டார். எலியாவோடு அவர் வளர்த்துக்கொண்டிருந்த நெருக்கமான உறவு இப்படிப்பட்ட பற்றுமாறாத அன்பை இன்பமான அனுபவமாக ஆக்கியது என்பதில் சந்தேகமில்லை. இன்று, கடவுளுடைய ஊழியர்கள் கடவுளோடு தங்களுடைய உறவைப் பலப்படுத்தவும் தங்கள் உடன் விசுவாசிகளிடம் நெருங்கிவரவும் பாடுபடுகிறார்கள். நெருக்கமான ஐக்கியத்தின் கட்டு ஆசீர்வதிக்கப்படும், ஏனென்றால் யெகோவாவைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்லுகிறது: ‘உத்தமருக்கு நீர் உத்தமராக தோன்றுவீர்.’—2 சாமுவேல் 22:26.
[அடிக்குறிப்புகள்]
a “தீர்க்கதரிசிகளின் புத்திரர்” என்ற பதம் இந்த வாழ்க்கைத் தொழிலுக்காக அழைக்கப்பட்டவர்களுக்கான போதனா பள்ளியை அல்லது தீர்க்கதரிசிகளின் ஒரு கூட்டமைப்பைக் குறிப்பிடலாம்.
b யூதாவின் ராஜாவாகிய யோராமுக்கு எலியாவின் செய்தி பல ஆண்டுகளுக்குப் பின்னால் எழுதப்பட்டது.—2 நாளாகமம் 21:12-15.
c ஒரு ஊழியக்காரன் தன் எஜமானர் கைகளைக் கழுவுவதற்காக தண்ணீரை ஊற்றுவது பழக்கமாக இருந்தது, குறிப்பாக சாப்பாட்டுக்குப்பின்பு அவன் அப்படிச் செய்வான். இந்தப் பழக்கமானது, விருந்தோம்பல், மரியாதை, சில உறவுகளில் மனத்தாழ்மைக்குரிய செயலாகவும்கூட இருந்த கால்களைக் கழுவுவதற்கு ஒப்பாக இருந்தது.—ஆதியாகமம் 24:31, 32; யோவான் 13:5.