எலிசா அக்கினி ரதங்களைக் கண்டார்—நீங்களும் காண்கிறீர்களா?
கடவுளுடைய தீர்க்கதரிசியான எலிசாவை எப்படியாவது கண்டுபிடிக்க சீரியா ராஜா முயன்றுகொண்டிருந்தான். மலைசூழ்ந்த நகரமான தோத்தானில் எலிசா இருப்பதை அறிந்தான். அந்திசாய்ந்த வேளையில் குதிரைகளும் போர் ரதங்களும் ராணுவமும் தோத்தானுக்கு வந்து சேர்ந்தன. பொழுது விடிவதற்குள் அவனுடைய ராணுவம் நகரத்தைச் சூழ்ந்துகொண்டது.—2 இரா. 6:13, 14.
எலிசாவின் வேலைக்காரன் எழுந்து வெளியே புறப்பட்டபோது, எதிரிகள் சூழ்ந்து நிற்பதைப் பார்த்தான். அதைக் கண்டு, “ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்” என்று பயந்தான். அதற்கு எலிசா, “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்றார். பிறகு எலிசா, “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்” என்று வேண்டினார். “உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” என்று பதிவு சொல்கிறது. (2 இரா. 6:15-17) இந்தச் சம்பவத்திலிருந்தும் எலிசாவின் வாழ்வில் நடந்த பிற சம்பவங்களிலிருந்தும் நமக்கு என்ன பாடம்?
சீரியர் படையெடுத்து வந்தபோது எலிசா கலக்கமடையவில்லை. காரணம், யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்தார், அவருடைய வல்லமையான செயல்களைப் பார்த்திருந்தார். இன்று, அற்புதங்கள் நடக்கும் என நாம் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் யெகோவா தம்முடைய ஜனங்களை ஒரு தொகுதியாகக் காப்பாற்றுவார் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஒரு கருத்தில், இன்று நம்மைச் சுற்றியும்கூட அக்கினி குதிரைகளும் ரதங்களும் இருக்கின்றன. அவற்றை நம் விசுவாசக் கண்களால் பார்த்தால்... எப்போதும் யெகோவாவைச் சார்ந்திருந்தால்... ‘பாதுகாப்புடன் வாழ்வோம்,’ யெகோவாவின் ஆசி பெறுவோம். (சங். 4:8 பொது மொழிபெயர்ப்பு) எலிசாவின் வாழ்வில் நடந்த பிற சம்பவங்களிலிருந்தும் எப்படிப் பயனடையலாம் எனப் பார்க்கலாம்.
எலியாவுக்கு எலிசா சேவை செய்கிறார்
ஒரு சமயம் எலிசா வயலை உழுது கொண்டிருந்தபோது, எலியா தன் தீர்க்கதரிசிக்குரிய சால்வையை அவர்மேல் தூக்கி எறிந்தார். இதன் மூலம், வேலைக்காரனாக இருக்கும்படி எலியா தன்னை அழைக்கிறார் என்பதை எலிசா புரிந்துகொண்டார். எலிசா ஒரு விருந்துபண்ணி, தன் அப்பா அம்மாவிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு எலியாவிற்குப் பணிவிடை செய்வதற்காக தன் ஊரைவிட்டு புறப்பட்டார். (1 இரா. 19:16, 19-21) யெகோவா எதிர்பார்க்கிற எதையும் செய்ய எலிசா மனமுள்ளவராக இருந்ததால், யெகோவா அவரைப் பல வழிகளில் பயன்படுத்தினார். பிற்பாடு எலியாவுக்குப் பதில் எலிசா தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டார்.
எலியாவிடம் எலிசா கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் பணிவிடை செய்தார். ‘எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்தவன்’ என்று எலிசாவைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (2 இரா. 3:11) அன்று பொதுவாக, மக்கள் தங்கள் கைகளினால் சாப்பிட்டார்கள். உணவு சாப்பிட்டபின், எஜமான் தன்னுடைய கைகளைக் கழுவுவதற்கு வேலைக்காரன் தண்ணீர் ஊற்றுவான். ஆகவே, எலிசாவின் வேலைகளில் சில சிறியதாகவோ அற்பமாகவோ இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும், எலியாவுக்கு பணிவிடை செய்வதைப் பெரிய பாக்கியமாக நினைத்தார்.
இன்றும், அநேக கிறிஸ்தவர்கள் வித்தியாசப்பட்ட முழு நேர சேவையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். யெகோவாமீதுள்ள விசுவாசமும் அவருக்குத் தங்களாலான மிகச் சிறந்ததைத் தர வேண்டும் என்ற எண்ணமுமே இப்படிச் செய்ய அவர்களைத் தூண்டுகிறது. அநேகரால் அற்பமாகக் கருதப்படுகிற சில வேலைகளைச் செய்ய சிலர் தங்களுடைய வீடுகளைவிட்டு பெத்தேலுக்கும் கட்டுமானப் பணி செய்யப்படும் இடங்களுக்கும் சென்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வேலைகளை நாம் அற்பமாக நினைக்கக்கூடாது. ஏனென்றால், யெகோவா அவற்றை உயர்வாக மதிக்கிறார்.—எபி. 6:10.
எலிசா அவருடைய வேலையில் நிலைத்திருந்தார்
‘எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு’ முன், கடவுள் அவரை கில்காலிலிருந்து பெத்தேலுக்கு அனுப்பினார். எலிசாவைத் தன்னோடு வர வேண்டாமென்று எலியா சொன்னார், ஆனால், எலிசா “நான் உம்மை விடுகிறதில்லை” என்றார். பயணத்தின்போது, எலிசாவை அங்கேயே தங்கிவிடும்படி இன்னும் இரண்டு முறை எலியா சொன்னபோதிலும், எலிசா மறுத்துவிட்டார். (2 இரா. 2:1-6) நகோமியை ரூத் விட்டுவிலகாமல் இருந்ததுபோல், எலிசாவும் எலியாவை விட்டுவிலகாமல் இருந்தார். (ரூத் 1:8, 16, 17) ஏன்? எலியாவுக்கு பணிவிடை செய்யும்படி கடவுள் கொடுத்த பொறுப்பை எலிசா பெரிதும் மதித்தார்.
எலிசா நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி. நாம் யெகோவாவுக்கே சேவை செய்கிறோம் என்பதை மனதில் வைத்தால், கடவுளுடைய அமைப்பில் நமக்குக் கிடைக்கும் எந்தவொரு பொறுப்பையும் உயர்வாகக் கருதுவோம். இதைவிடச் சிறந்தது வேறு எதுவுமில்லை.—சங். 65:4; 84:10.
“நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள்”
இருவரும் போய்க்கொண்டிருக்கையில், எலிசாவிடம், எலியா: “உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள்” என்றார். பல வருடங்களுக்கு முன் சாலொமோன் கேட்டதைப் போன்ற ஒரு விஷயத்தையே எலிசா கேட்டார். ஆம், கடவுளின் வேலையை இன்னும் நன்கு செய்வதற்காக ‘எலியாவிடமிருந்த கடவுளுடைய சக்தியின் வரம் தனக்கு இரு மடங்காகக் கிடைக்க வேண்டும்’ என்று கேட்டார். (1 இரா. 3:5, 9; 2 இரா. 2:9) இஸ்ரவேலில், ஒருவருடைய முதல் மகனுக்கு இரண்டு பங்கு ஆஸ்தி கொடுக்கப்பட வேண்டும். (உபா. 21:15-17) ஆகவே, எலியாவின் வாரிசாக, அதாவது எலியாவுக்குப் பின் அடுத்த தீர்க்கதரிசியாக தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார். மேலும், யெகோவாவுக்கு ‘வெகு பக்திவைராக்கியமாயிருந்த’ எலியாவைப்போல் தானும் தைரியமாயிருக்க விரும்பினார்.—1 இரா. 19:13, 14.
எலிசாவின் வேண்டுகோளுக்கு எலியா எப்படிப் பதிலளித்தார்? “அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது” என்றார். (2 இரா. 2:10) எலியாவின் பதிலில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருந்தன. ஒன்று, எலிசா கேட்டது கிடைக்குமா என்பதை கடவுள் மட்டுமே தீர்மானிக்க முடியும். இரண்டு, எந்தச் சூழ்நிலையிலும் எலியாவைவிட்டுப் பிரியாமல் இருந்தால்தான் அதைப் பெற முடியும்.
எலிசா எதைப் பார்த்தார்?
எலியாவிடமிருந்த கடவுளுடைய சக்தியின் வரம் தனக்கு இரு மடங்காகக் கிடைக்க வேண்டும் என்று எலிசா கேட்டதை கடவுள் எப்படிக் கருதினார்? ‘அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனார்.’a அதை எலிசா பார்த்துக்கொண்டே நின்றார். அது எலிசாவின் வேண்டுகோளுக்கு யெகோவா அளித்த பதிலாக இருந்தது. எலியா தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்பட்டதை எலிசா பார்த்தார், எலியாவிடமிருந்த கடவுளுடைய சக்தியின் வரத்தை இரு மடங்காகப் பெற்றார், எலியாவுக்குப் பின் அடுத்த தீர்க்கதரிசியாகவும் ஆனார்.—2 இரா. 2:11-14.
எலியாவிடமிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்து எலிசா போட்டுக்கொண்டார். அதை அவர் அணிந்திருந்ததைப் பார்த்த மக்கள் இனி எலிசாதான் தீர்க்கதரிசி என்பதை அறிந்துகொண்டார்கள். பிற்பாடு, யோர்தான் நதியின் தண்ணீரை இரண்டாகப் பிரியும்படி செய்த அற்புதமும்கூட அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு அத்தாட்சி அளித்தது.
எலியா சுழற்காற்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டது எலிசாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம். ஆம், அக்கினிமயமான போர் ரதத்தையும் குதிரைகளையும் பார்த்து வியக்காதோர் யாருமில்லை. எலிசாவைப் பொறுத்தவரை, தான் கேட்டதை யெகோவா கொடுத்தார் என்பதற்கு இவை அத்தாட்சியாக இருந்தன. நம்முடைய ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிக்கையில் அக்கினி ரதத்தையும் குதிரைகளையும் அவர் தரிசனமாகக் காட்டுவதில்லை. ஆனால், அவர் தம்முடைய வல்லமையைப் பயன்படுத்தி தம் சித்தத்தை நிறைவேற்றுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அதோடு, யெகோவா தம்முடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தை ஆசீர்வதித்து வருவதைப் பார்க்கும்போது, ஒரு கருத்தில் அவருடைய பரம ரதம் முன்னேறிச் செல்வதைப் “பார்க்கிறோம்.”—எசே. 10:9-13.
யெகோவாவின் அபார வல்லமைக்கு அநேக அத்தாட்சிகளை எலிசா பார்த்திருக்கிறார். சொல்லப்போனால், கடவுளுடைய சக்தியினால் அவர் 16 அற்புதங்களைச் செய்திருக்கிறார். ஆம், எலியாவைவிட இரு மடங்காகச் செய்திருக்கிறார்.b தோத்தானில் இக்கட்டான சூழ்நிலையில் எலிசா இருந்தபோது இரண்டாவது முறையாக அக்கினிமயமான குதிரைகளையும் போர் ரதங்களையும் கண்டார். இதைத்தான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம்.
எலிசா யெகோவாமீது நம்பிக்கை வைத்தார்
தோத்தானில் எதிரிகள் தன்னைச் சூழ்ந்துகொண்டபோதிலும் எலிசா கலக்கமடையவில்லை. ஏன்? ஏனென்றால் யெகோவாமீது அவர் உறுதியான விசுவாசம் வைத்திருந்தார். நமக்கும் அப்படிப்பட்ட விசுவாசம் தேவை. ஆகவே, விசுவாசத்தையும் கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படுகிற பிற பண்புகளையும் வெளிக்காட்ட உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்வோமாக.—லூக். 11:13; கலா. 5:22, 23.
யெகோவாமீதும் காண முடியாத அவரது சேனைகள்மீதும் நம்பிக்கை வைப்பதற்கு தோத்தானில் நடந்த சம்பவமும் எலிசாவுக்குக் கைகொடுத்தது. நகரத்தையும் எதிரிகளையும் சூழ்ந்து நின்ற தேவதூதர்களை அனுப்பியது கடவுள்தான் என்பதை எலிசா தீர்க்கதரிசி புரிந்துகொண்டார். எதிரிகளின் கண்களைக் குருடாக்கி எலிசாவையும் அவருடைய வேலைக்காரனையும் கடவுள் அற்புதமாகக் காப்பாற்றினார். (2 இரா. 6:17-23) அந்த இக்கட்டான சமயத்திலும் அதுபோன்ற பிற சூழ்நிலைகளிலும், யெகோவாமீது எலிசா விசுவாசம் வைத்தார், அவரை முழுமையாக நம்பினார்.
எலிசாவைப் போல நாமும் யெகோவா தேவன்மீது நம்பிக்கை வைப்போமாக. (நீதி. 3:5, 6) அப்போது, அவர் ‘நமக்கு இரங்கி, நம்மை ஆசீர்வதிப்பார்.’ (சங். 67:2) நம்மைச் சுற்றி அக்கினிமயமான ரதங்களும் குதிரைகளும் இல்லை என்பது உண்மைதான். ஆனால், வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ யெகோவா உலகெங்கும் இருக்கிற தமது மக்களைக் காப்பாற்றுவார். (மத். 24:21; வெளி. 7:9, 14) அதுவரையில், “தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்” என்பதை எப்போதும் நினைவில் வைப்போமாக.—சங். 62:8.
a யெகோவாவும் தேவபுத்திரர்களும் வாசம் செய்கிற இடமான பரலோகத்திற்கு எலியா ஏறிப்போகவில்லை. காவற்கோபுரம் செப்டம்பர் 15, 1997, பக்கம் 15-ஐப் பாருங்கள்.
b காவற்கோபுரம் ஆகஸ்ட் 1, 2005 பக்கம் 10-ஐப் பாருங்கள்.