பூமியில் இயேசுவின் கடைசி நாட்களை மனத்திரையில் காணல்
அது பொ.ச. 33-ம் வருடம். யூத நாட்காட்டியில் நிசான் மாதத்தின் ஏழாம் தேதி. ரோம மாகாணமாகிய யூதேயாவில் நடக்கும் சம்பவங்களை நீங்கள் காண்பதைப் போல் கற்பனை செய்துகொள்ளுங்கள். எரிகோவையும் அதன் பச்சைப்பசேலென்ற செடிகொடிகளையும் தாண்டி, புழுதி நிறைந்த, வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் களைப்போடு நடந்து செல்கிறார்கள். வருடந்தோறும் வரும் பஸ்கா பண்டிகையை இந்த வருடமும் கொண்டாட இன்னும் அநேகரும்கூட எருசலேமை நோக்கி போகிறார்கள். இருப்பினும், சோர்வூட்டும் இப்பயணத்தைக் காட்டிலும் வேறு ஏதோவொரு விஷயம் கிறிஸ்துவுடைய சீஷர்களின் மனதில் இருக்கிறது.
ரோம கொடுங்கோலாட்சியிலிருந்து விடுதலையை கொண்டுவரும் ஒரு மேசியாவுக்காக யூதர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர். நசரேயனாகிய இயேசுவே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்த மேசியா என்று அநேகர் நம்புகின்றனர். மூன்றரை வருடங்களாக, அவர் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். வியாதிப்பட்டவர்களை சுகப்படுத்தி, பசியால் வாடியவர்களுக்கு உணவளித்திருக்கிறார். ஆம், அவர் மக்களுக்கு ஆறுதலைக் கொடுத்திருக்கிறார். ஆனால், மதத் தலைவர்களோ இயேசு தங்களை கடுமையாக கண்டிப்பதால் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவரை எப்படியாவது கொல்லவேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கிறார்கள். ஆனாலும், அதோ பாருங்கள், அவர், தம்முடைய சீஷர்களுக்கு முன்பாக, உறுதியாக, வறண்ட சாலையில் வீரநடை போட்டுச் செல்கிறார்.—மாற்கு 10:32.
அவர்களுக்கு முன்னால், உயர்ந்து நிற்கும் ஒலிவ மலைக்கு பின்னே சூரியன் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கையில், இயேசுவும் அவருடைய தோழர்களும் பெத்தானியா கிராமத்தை அடைகிறார்கள்; இங்கேதான் அவர்கள் தங்களுடைய அடுத்த ஆறு இரவுகளை கழிப்பார்கள். அதோ, அவர்களுடைய உயிர்த்தோழர்களான லாசரு, மரியாள், மார்த்தாள் ஆகியோர் அங்கே அவர்களை வரவேற்கிறார்கள். அந்த மாலைப்பொழுதின் இதமான குளிர், வெயிலில் வந்த நீண்ட பயணத்தின் களைப்பை போக்குகிறது; அதோடு ஓய்வு நாளான நிசான் 8-ம் துவங்குகிறது.—யோவான் 12:1, 2.
நிசான் 9
ஓய்வு நாளுக்குப்பின், எருசலேம் ஒரே கோலாகலமாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பஸ்காவுக்காக ஏற்கெனவே நகரத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். ஆனால், நாம் கேட்கிற இச்சந்தடி, வருடத்தின் இந்தக் காலக்கட்டத்தில் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வங்கொண்ட கூட்டத்தினர் நகர வாசலை நோக்கி குறுகலான வீதிகளில் முண்டியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். அவர்கள் குறுகலான வாசலின் வழியாக நெருக்கியடித்துக்கொண்டு வெளி வருகையில், எத்தகையதோர் காட்சியைப் பார்க்கிறார்கள்! பெத்பகேயுவிலிருந்து வரும் சாலையில், திரளான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஒலிவ மலையிலிருந்து கீழிறங்கி வருகிறார்கள். (லூக்கா 19:37) இவை எல்லாவற்றின் அர்த்தம்தான் என்ன?
பாருங்கள்! நசரேயனாகிய இயேசு கழுதைக்குட்டியின் மீது சவாரி செய்து வருகிறார். அவருக்கு முன்பாக சாலையில் மக்கள் தங்கள் வஸ்திரங்களை விரிக்கிறார்கள். மற்றவர்கள் புதிதாக வெட்டப்பட்ட குருத்தோலைகளை அசைத்து, “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” என்று மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறார்கள்.—யோவான் 12:12-15.
கூட்டம் எருசலேமை நெருங்குகையில், இயேசு நகரத்தைப் பார்த்து அதற்காக மிகவும் வருந்துகிறார். அவர் கண்ணீர்விட்டு அழுகிறார்; அந்த நகரம் அழிக்கப்படும் என்று அவர் முன்னறிவிப்பதை நாம் கேட்கிறோம். சிறிது நேரம் கழித்து, இயேசு ஆலயத்துக்கு வந்து சேர்ந்தபின், அங்குள்ள கூட்டத்தினருக்கு போதிக்கிறார்; தம்மிடம் வருகிற குருடரையும் முடவரையும் சுகப்படுத்துகிறார்.—மத்தேயு 21:14; லூக்கா 19:41-44, 47.
இவற்றை முக்கிய ஆசாரியர்களும் வேதபாரகர்களும் கவனியாமல் இல்லை. இயேசு செய்கிற பிரமிப்பூட்டும் காரியங்களையும் கூட்டத்தினரின் மகிழ்ச்சி ஆரவாரத்தையும் பார்த்து அவர்கள் எந்தளவுக்கு எரிச்சலடைகிறார்கள்! தங்களுடைய கோபத்தை மறைக்க முடியாமல், “போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும்” என்று பரிசேயர் சொல்கிறார்கள். “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு அவர்களுக்கு பதிலளிக்கிறார். அங்கிருந்து செல்வதற்கு முன்பாக, ஆலயத்தில் நடைபெறும் வியாபார நடவடிக்கைகளை இயேசு கவனிக்கிறார்.—லூக்கா 19:39, 40; மத்தேயு 21:15, 16; மாற்கு 11:11.
நிசான் 10
இயேசு ஆலயத்துக்கு சீக்கிரமாகவே வந்துவிடுகிறார். நேற்று, தம்முடைய தகப்பனாகிய யெகோவா தேவனின் வணக்கம், பகிரங்கமாக வியாபாரமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர் கடும்கோபமடைந்தார். எனவே, ஆலயத்தில் வாங்குகிறவர்களையும் விற்கிறவர்களையும் அவர் அதிக பக்தி வைராக்கியத்துடன் துரத்திவிடுகிறார். பிறகு, பேராசைமிக்க காசுக்காரரின் மேஜைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போடுகிறார். “என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” என்று இயேசு உணர்ச்சி மேலிடக் கூறுகிறார்.—மத்தேயு 21:12, 13.
முக்கிய ஆசாரியர்கள், வேதபாரகர்கள், மூப்பர்கள் ஆகியோர் இயேசுவின் நடவடிக்கைகளையும் பொதுப்படையான போதனையையும் கண்டு உள்ளுக்குள் கொதிக்கின்றனர். எப்படியும் அவரை கொலை செய்ய வேண்டும் என்று எந்தளவுக்கு துடிதுடிக்கிறார்கள்! ஆனால், ஜனங்கள் இயேசுவின் போதனையைக் கேட்டு மலைத்துப்போய், “அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டிருந்தபடியால்,” அக்கூட்டத்தினரின் காரணமாக தங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதைப் போல உணருகிறார்கள். (லூக்கா 19:47, 48) மாலை நெருங்குகையில், இயேசுவும் அவருடைய தோழர்களும் இரவில் நன்றாய் தூங்கி ஓய்வெடுக்க திரும்பிச் செல்கின்றனர்; இது அவர்களுக்கு ஓர் இன்பப் பயணமாய் இருக்கிறது.
நிசான் 11
அது அதிகாலைப் பொழுது; இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒலிவ மலையைக் கடந்து எருசலேமுக்குச் செல்லும் பாதையில் இப்போது செல்கிறார்கள். அவர்கள் ஆலயத்தை நெருங்குகையில், முக்கிய ஆசாரியர்களும் மூப்பர்களும் இயேசுவுடன் மோத தயாராய் இருக்கின்றனர். ஆலயத்திலிருந்த காசுக்காரர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிராக அவர் எடுத்த நடவடிக்கை அவர்களுடைய மனதில் பசுமையாக இருக்கிறது. அவருடைய எதிரிகள் குரோதத்துடன் இவ்வாறு கேட்கிறார்கள்: “நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” இயேசு அவர்களிடம் எதிர்க்கேள்வி கேட்கிறார்: “நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று?” அவருடைய எதிரிகள் ஒன்றுகூடி, “தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே” என்று தங்களுக்குள்ளே பேசிக் கொள்கிறார்கள். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறிப்போய், “எங்களுக்குத் தெரியாது” என்று இயேசுவிடம் மொட்டையாய் பதிலளிக்கிறார்கள். “நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன்” என்று இயேசுவும் அவர்களிடம் அமைதியாக பதிலளிக்கிறார்.—மத்தேயு 21:23-27.
இயேசுவின் எதிரிகள், அவருடைய வாயைக் கிளறிவிட்டு, அதன்மூலம் அவரை எப்படியும் கைது செய்துவிடலாம் என்று இப்போது முயற்சி செய்கிறார்கள். அவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள், “இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ?” இயேசு பதிலடி கொடுப்பவராக: “வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள்” என்கிறார். “இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது” என்று கேட்கிறார். அவர்கள் “இராயனுடையது” என்கிறார்கள். இயேசு அவர்களுடைய முயற்சியை முறியடிப்பவராக எல்லாரும் கேட்கும்படி தெளிவாக பதிலளிக்கிறார்: “அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.”—மத்தேயு 22:15-22.
மறுக்கமுடியாத வாதங்களால், எதிரிகளின் வாயை அடைத்துவிட்டு, இயேசு தம் சீஷர்களுக்கும் கூட்டத்துக்கும் முன்பாக இப்போது தம்முடைய கண்டனத்தை வெளிப்படையாக தெரிவிக்கத் தொடங்குகிறார். வேதபாரகர்களையும் பரிசேயர்களையும் அவர் தைரியமாக கண்டனம் செய்வதை கேளுங்கள். “அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்” என்று அவர் சொல்கிறார். தைரியமாக, அவர்களை குருடரான வழிகாட்டிகள், மாயக்காரர்கள் என அடையாளங்காட்டி, அவர்கள்மீது சாபங்களை வரிசையாக உரைக்கிறார். “சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு [“கெஹென்னாவிற்கு,” NW] எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?” என்று இயேசு கேட்கிறார்.—மத்தேயு 23:1-33.
இயேசு இவ்வாறு கடுமையாக கண்டனம் செய்வது, அவர் மற்றவர்களுடைய நல்ல குணங்களையே கவனியாதவர் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. பிறகு, மக்கள் ஆலயத்தின் காணிக்கை பெட்டிகளில் பணத்தைப் போடுவதை அவர் பார்க்கிறார். வறுமையில் வாடிய ஒரு விதவை தன்னுடைய ஜீவனத்துக்கு உண்டானதை எல்லாம், அதாவது, மிகவும் குறைவான மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளைப் போடுவதைக் காண்பது எந்தளவு மனதைத் தொடுவதாய் இருக்கிறது! உண்மையில், “தங்களுடைய பரிபூரணத்திலிருந்து” தாராளமாய் போட்டவர்களைக் காட்டிலும் இந்த விதவை மிக அதிகமாய்ப் போட்டாள் என்பதை மனமார்ந்த போற்றுதலுடன் இயேசு சுட்டிக்காட்டுகிறார். தம்முடைய கனிவான இரக்கத்துடன், ஒரு நபரால் எந்தளவுக்கு செய்யமுடியுமோ அதையே இயேசு மனதார பாராட்டுகிறார்.—லூக்கா 21:1-4.
இப்போது இயேசு கடைசி முறையாக ஆலயத்தை விட்டு புறப்படுகிறார். அவருடைய சீஷர்களில் சிலர் அதனுடைய பிரமாண்டமான தோற்றத்தையும், ‘சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதையும்’ குறித்து சொல்லுகின்றனர். அவர்களுடைய ஆச்சரியத்துக்கேதுவாக, இயேசு இவ்வாறு பதிலளிக்கிறார்: “ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும்.” (லூக்கா 21:5, 6) அப்போஸ்தலர்கள் நெரிசல்மிக்க இந்நகரத்தை விட்டு, இயேசுவைப் பின்பற்றி வெளியேறுகையில், அவர் எதை அர்த்தப்படுத்தி அவ்வாறு சொல்லியிருக்கக்கூடும் என்று வியக்கின்றனர்.
சிறிது நேரம் கழித்து, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் ஒலிவ மலையில் அமர்ந்து அதன் சாந்தத்தையும் அமைதியையும் அனுபவிக்கிறார்கள். அங்கிருந்து, எருசலேம் மற்றும் அதன் ஆலயத்தினுடைய அழகிய காட்சியைக் கண்டுகளிக்கையில், பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் இயேசு சொன்ன அதிர்ச்சியூட்டும் முன்னறிவிப்பை தெளிவுபடுத்துமாறு கேட்கிறார்கள். “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று அவர்கள் கேட்கிறார்கள்.—மத்தேயு 24:3; மாற்கு 13:3, 4.
இதற்கு பதிலளிப்பவராக, மிகச்சிறந்த போதகர் உண்மையில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் ஒரு தீர்க்கதரிசனத்தை சொல்கிறார். கடும் யுத்தங்கள், பூமியதிர்ச்சிகள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள் ஆகியவற்றை அவர் முன்னறிவிக்கிறார். ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பூமி முழுவதும் பிரசங்கிக்கப்படும் என்றும் அவர் முன்னுரைக்கிறார். “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” என்று அவர் எச்சரிக்கிறார்.—மத்தேயு 24:7, 14, 21; லூக்கா 21:10, 11.
‘தம் வந்திருத்தலினுடைய அடையாளத்தின்’ (NW) மற்ற அம்சங்களை இயேசு விவரிக்கையில் நான்கு அப்போஸ்தலர்களும் கவனமாக செவிசாய்க்கின்றனர். ‘தொடர்ந்து விழித்திருப்பதன்’ அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார். ஏன்? “ஏனென்றால், உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்” என்று அவர் சொல்கிறார்.—மத்தேயு 24:42, NW; மாற்கு 13:33, 35, 37.
இயேசுவுக்கும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் இது மறக்கமுடியாத நாளாய் இருக்கிறது. உண்மையில், இந்நாள்தானே, கைது செய்யப்படுவதற்கும், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கும், கொலை செய்யப்படுவதற்கும் முன் இயேசுவினுடைய பொது ஊழியத்தின் கடைசி நாளாக இருக்கிறது. வெகு நேரமாகிவிட்டதால், சிறு தூரத்தில் இருக்கும் பெத்தானியாவிற்கு குன்றின் மேலேறி நடக்கத் தொடங்குகின்றனர்.
நிசான் 12-ம் 13-ம்
நிசான் 12-ஐ இயேசு தம்முடைய சீஷர்களுடன் அமைதியாக கழிக்கிறார். மதத் தலைவர்கள் எப்படியும் அவரை கொலை செய்யவேண்டுமென்று உறுதிபூண்டிருப்பதை இயேசு அறிந்திருக்கிறார். அதோடு, அடுத்த நாள் மாலையில், அவர் பஸ்காவை கொண்டாடும்போது அவர்களால் எந்தத் தடங்கலும் ஏற்படக்கூடாது என்றும் அவர் விரும்புகிறார். (மாற்கு 14:1, 2) அடுத்த நாள், அதாவது நிசான் 13 அன்று பஸ்காவுக்கான கடைசி தயாரிப்புகளைச் செய்வதில் மக்கள் மிக மும்முரமாயிருக்கிறார்கள். மதியம் ஆரம்பிக்கையில், எருசலேமிலுள்ள ஒரு மாடி அறையில், பஸ்காவை ஏற்பாடு செய்வதற்காக இயேசு பேதுருவையும் யோவானையும் அனுப்புகிறார். (மாற்கு 14:12-16; லூக்கா 22:8) சூரிய மறைவுக்கு சற்று முன்பு, இயேசுவும் அவருடைய மற்ற பத்து அப்போஸ்தலர்களும், தங்களுடைய கடைசி பஸ்காவை கொண்டாடுவதற்காக அவர்களை அங்கே சந்திக்கின்றனர்.
நிசான் 14, சூரிய மறைவிற்கு பிறகு
ஒலிவ மலைக்கு மேலே பௌர்ணமி நிலவு எழும்புகையில், அந்தி நேரத்தின் மங்கிய வெளிச்சம் எருசலேமில் படர்ந்திருக்கிறது. கம்பளம் முதலானவை விரித்திருக்கிற ஒரு பெரிய அறையில், இயேசுவும், பன்னிருவரும் எல்லாம் தயாராயிருந்த ஒரு மேஜையில் பந்தியிருக்கிறார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: “நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்” என்கிறார். (லூக்கா 22:14, 15) சிறிது நேரம் கழித்து, இயேசு எழுந்து நின்று, தம்முடைய மேல் அங்கியை கழற்றி ஒருபுறம் வைப்பதை சீஷர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். ஒரு துண்டையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு, அவர் அவர்களுடைய பாதங்களை கழுவத் தொடங்குகிறார். தாழ்மையான சேவையைக் குறித்ததில் என்னேவொரு மறக்க முடியாத பாடம்!—யோவான் 13:2-15.
இருந்தபோதிலும், இவர்களில் ஒருவனாகிய யூதாஸ் காரியோத்து, மதத் தலைவர்களிடம் தம்மை காட்டிக் கொடுப்பதற்கு ஏற்கெனவே ஏற்பாடு செய்து விட்டான் என்று இயேசு அறிந்திருக்கிறார். புரிந்துகொள்ளத்தக்க விதமாக, அவர் மிகவும் மன வேதனையடைகிறார். “உங்களிலொருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்று அவர் வெளிப்படையாகச் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் அப்போஸ்தலர்கள் கடும் துயரம் அடைகிறார்கள். (மத்தேயு 26:21, 22) பஸ்கா பண்டிகையை கொண்டாடி முடித்தபின்பு, இயேசு யூதாஸிடம், “நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்” என்று சொல்கிறார்.—யோவான் 13:27.
யூதாஸ் புறப்பட்டு சென்ற உடனேயே, நெருங்கி வருகிற தம் மரணத்தை நினைவுகூருவதற்காக இயேசு ஒரு போஜனத்தை அறிமுகப்படுத்துகிறார். புளிப்பில்லாத அப்பத்தின் ஒரு துண்டை எடுத்து, நன்றி தெரிவிக்கும் ஜெபம் செய்து, அதை பிட்டு, 11 பேரையும் சாப்பிடும்படி சொல்கிறார். “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று அவர் சொல்கிறார். பின்பு ஒரு கோப்பை சிவப்பு திராட்சரசத்தை எடுக்கிறார். அதற்கான ஆசீர்வாதத்தைக் கேட்ட பிறகு, அந்தக் கோப்பையை அவர்களிடம் கொடுத்து, அதிலிருந்து அனைவரையும் குடிக்கும்படி சொல்கிறார். “இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என்று இயேசு தொடர்ந்து சொல்கிறார்.—லூக்கா 22:19, 20; மத்தேயு 26:26-28.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாலைப்பொழுதில், தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களுக்கு சகோதர அன்பின் முக்கியத்துவம் உட்பட, அநேக மதிப்புமிக்க பாடங்களை இயேசு கற்பிக்கிறார். (யோவான் 13:34, 35) பரிசுத்த ஆவியாகிய ‘தேற்றரவாளனை’ அவர்கள் பெறுவார்கள் என்று அவர் உறுதியளிக்கிறார். அவர்களிடத்தில் அவர் சொல்லியிருக்கிற எல்லா விஷயங்களையும் அது அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டும். (யோவான் 14:26) அந்த மாலைப்பொழுதின் முடிவில், இயேசு தங்கள் சார்பாக ஒரு ஊக்கமான ஜெபத்தை செய்வதைக் கேட்பது அவர்களுக்கு அதிக உற்சாகமளிக்கிறது. (யோவான், அதிகாரம் 17) துதிப்பாடல்களைப் பாடிய பிறகு, அவர்கள் இயேசுவை பின்தொடர்ந்து மாடி அறையை விட்டு புறப்படுகிறார்கள்; அப்போது வெளியே நள்ளிரவின் குளுமையான காற்று வீசுகிறது.
கெதரோன் பள்ளத்தாக்கை கடந்து, தங்களுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றான கெத்செமனே தோட்டத்திற்கு இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் செல்கிறார்கள். (யோவான் 18:1, 2) அவருடைய அப்போஸ்தலர்கள் காத்திருக்கையில், இயேசு ஜெபிப்பதற்காக சிறிது தூரம் அப்பால் செல்கிறார். உதவிக்காக கடவுளிடம் மனமார மன்றாடுகையில், அவருடைய உணர்ச்சிப்பூர்வ அழுத்தம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அளவுக்கு இருக்கிறது. (லூக்கா 22:44) தாம் தவறிவிட்டாரென்றால், தம்முடைய அருமையான பரலோகத் தகப்பன் மீது சுமரும் அவப்பெயரைப் பற்றிய நினைவே அவரை கடுமையாக வாட்டுகிறது.
யூதாஸ் காரியோத்து, பட்டயங்கள், தடிகள், தீவட்டிகள் ஆகியவற்றை உடைய ஒரு கூட்டத்துடன் வந்து சேருகையில் இயேசு அப்போதுதான் ஜெபம் செய்து முடித்திருக்கிறார். “ரபீ, வாழ்க” என்று சொல்லி யூதாஸ் இயேசுவை மென்மையாக முத்தமிடுகிறான். இதுவே இயேசுவைக் கைது செய்வதற்கு அம்மனிதர்களுக்கு அவன் கொடுக்கிற அடையாளம். திடுதிப்பென்று, பேதுரு தன்னுடைய பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டுகிறார். அப்பொழுது, இயேசு அந்த மனிதனுடைய காதை குணப்படுத்தியபடியே பேதுருவை நோக்கி: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 26:47-52.
எல்லாம் வேகவேகமாக நடக்கிறது! இயேசு கைது செய்யப்பட்டு கட்டப்படுகிறார். பயத்தாலும் குழப்பத்தாலும், அப்போஸ்தலர்கள் தங்களுடைய போதகரை அம்போவென்று விட்டுவிட்டு ஓடுகின்றனர். இயேசு, முன்னாள் பிரதான ஆசாரியனாகிய அன்னாவினிடத்தில் கொண்டு செல்லப்படுகிறார். பின்பு, தற்போது பிரதான ஆசாரியனாக இருக்கும் காய்பாவிடத்திற்கு, விசாரணை செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்படுகிறார். அதிகாலைப் பொழுதில், நியாய சங்கம் இயேசுவை தேவதூஷணம் சொன்னதாக பொய் குற்றஞ்சாட்டுகிறது. பிறகு, காய்பா அவரை ரோம தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடத்திற்கு அனுப்பிவிடுகிறான். பிலாத்து அவரை கலிலேயாவின் அரசனான ஏரோது அந்திப்பாவிடம் அனுப்புகிறான். அங்கே ஏரோதும் அவனுடைய சேவகர்களும் இயேசுவை கேலி செய்கிறார்கள். பிறகு அவர் மீண்டும் பிலாத்துவிடம் திருப்பி அனுப்பப்படுகிறார். இயேசு குற்றமற்றவர் என்று பிலாத்து உறுதிப்படுத்துகிறான். ஆனால், யூத மதத் தலைவர்களோ இயேசுவுக்கு மரணதண்டனை தீர்ப்பளிக்கும்படி அவனை கட்டாயப்படுத்துகின்றனர். வாய்வார்த்தைகளிலும், உடல்ரீதியிலும் போதுமான அளவிற்கு துன்புறுத்தப்பட்ட பிறகு, இயேசு கொல்கொதா என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்; அங்கே அவர் ஈவிரக்கமற்ற விதமாக கழுமரத்தில் அறையப்பட்டு, கடும் வேதனைமிக்க மரணத்தை அனுபவிக்கிறார்.—மாற்கு 14:50–15:39; லூக்கா 23:4-25.
இயேசுவின் மரணம் அவருடைய வாழ்க்கைக்கு நிரந்தரமான முடிவை ஏற்படுத்தியிருந்தால், சரித்திரத்தில் இதுவே மிகப்பெரிய அவலமாக இருந்திருக்கும். மகிழ்ச்சிக்குரிய விதமாக, அவ்விதம் நடக்கவில்லை. பொ.ச. 33-ம் வருடம் நிசான் 16-ம் தேதி, அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார் என்பதை அறிந்து அவருடைய சீஷர்கள் ஆச்சரியமடைந்தனர். காலப்போக்கில், இயேசு மறுபடியும் உயிரோடிருக்கிறார் என்பதை 500-க்கும் அதிகமான ஆட்களால் உண்மையென காண முடிந்தது. அவருடைய உயிர்த்தெழுதலுக்கு பின் 40 நாட்கள் கழித்து, அவர் பரலோகத்துக்கு ஏறிச் சென்றதை அவருடைய உண்மையுள்ள சீஷர்களின் ஒரு தொகுதியினர் கண்டார்கள்.—அப்போஸ்தலர் 1:9-11; 1 கொரிந்தியர் 15:3-8.
இயேசுவின் வாழ்க்கையும் நீங்களும்
இது உங்களை, சொல்லப்போனால், நம் அனைவரையும் எப்படி பாதிக்கிறது? இயேசுவின் ஊழியம், மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவை யெகோவா தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய மகத்தான நோக்கம் நிறைவேறுவதில் முக்கியமானவையாக இருக்கின்றன. (கொலோசெயர் 1:18-20) இயேசுவினுடைய பலியின் அடிப்படையில் நம்முடைய பாவங்களுக்கு நாம் மன்னிப்பை பெற்றுக்கொள்ள முடியும்; அதன்மூலம் யெகோவா தேவனோடு தனிப்பட்ட உறவை வைத்துக்கொள்ள முடியும் என்பதால் அவை நமக்கும்கூட முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.—யோவான் 14:6; 1 யோவான் 2:1, 2.
மரித்துப்போன மனிதர்களும்கூட பாதிக்கப்படுகிறார்கள். கடவுள் வாக்குறுதியளிக்கும் பரதீஸான பூமியில் இயேசுவின் உயிர்த்தெழுதல் அவர்கள் மீண்டும் உயிரடைவதற்கான வாய்ப்பை திறக்கிறது. (லூக்கா 23:39-43; 1 கொரிந்தியர் 15:20-22) இத்தகைய காரியங்களைக் குறித்து, நீங்கள் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள விரும்பினால், ஏப்ரல் 11, 1998 அன்று இயேசுவுடைய மரண நினைவு ஆசரிப்பில் கலந்து கொள்ள, உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு வரும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
[பக்கம் 6-ன் பெட்டி]
“கள்ளர் குகை”
பேராசைமிக்க வியாபாரிகள் கடவுளுடைய ஆலயத்தை “கள்ளர் குகையாக்கி[னார்கள்]” என்று சொல்வதற்கு இயேசுவுக்கு போதிய காரணங்கள் இருந்தன. (மத்தேயு 21:12, 13) ஆலய வரி செலுத்துவதற்காக, மற்ற நாடுகளிலிருந்து வந்த யூதர்களும் யூத மதத்தை தழுவியவர்களும், அயல்நாட்டு பணத்தை உள்ளூர் பணமாக மாற்ற வேண்டியிருந்தது. பணம் மாற்றும் வியாபாரிகள் அம்மாகாணங்களில் தங்களுடைய வியாபாரங்களை பஸ்காவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, அதாவது ஆதார் 15-ல் தொடங்கினர் என்று மேசியாவாகிய இயேசுவின் வாழ்க்கையும் காலங்களும் என்ற ஆங்கில புத்தகத்தில் ஆல்ஃபிரட் எடர்ஷைம் விளக்குகிறார். ஆதார் 25-ல் துவங்கி, நகருக்குள் பேரளவாய் திரண்டு வரும் யூதர்கள் மற்றும் யூத மதத்தை தழுவினவர்களை ஆதாயப்படுத்தி லாபம் சம்பாதிப்பதற்காக, எருசலேமிலுள்ள ஆலயத்திற்குள் வந்தனர். மாற்றப்பட்ட ஒவ்வொரு பணத்துக்கும் ஒரு கட்டணம் என்று வசூலித்து, வியாபாரிகள் செழிப்பான வியாபாரத்தை நடத்தினர். அவர்கள் வாங்கிய கட்டணங்கள் வெகு அதிகமாய் இருந்ததால், உண்மையில், அவர்கள் ஏழைகளிடமிருந்து பணத்தை கொள்ளையடித்தார்கள் என்பதே அவர்களை கள்ளர்கள் என்று இயேசு குறிப்பிட்டதிலிருந்து தெரிய வருகிறது.
சிலரால் தங்களுடைய சொந்த மிருகங்களை பலி செலுத்த கொண்டுவர முடியவில்லை. அவ்வாறு கொண்டுவரும் எவரும் ஆலயத்தில் உள்ள ஓர் அதிகாரியிடம் அந்த மிருகத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும், அதற்கும்கூட ஒரு கட்டணம் வசூலிக்கப்பட்டது. வெகுதூரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு மிருகம் நிராகரிக்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில், அநேகர் லேவியர்களால் “அங்கீகரிக்கப்பட்ட” ஒன்றை ஆலயத்திலிருந்த ஊழல்மிக்க வியாபாரிகளிடமிருந்து வாங்கினர். “அநேக ஏழை விவசாயிகள் அங்கே வெகுவாக கொள்ளையடிக்கப்பட்டனர்” என்று ஒரு நிபுணர் கூறுகிறார்.
ஒரு சமயத்தில் பிரதான ஆசாரியனாயிருந்த அன்னாவும் அவனுடைய குடும்பத்தாரும் ஆலய வியாபாரிகளை சுயநலத்திற்காக ஆதரித்தனர் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. “அன்னாவின் மகன்களுடைய [ஆலயச்] சந்தைகளை” குறித்து ரபினீய எழுத்துக்கள் குறிப்பிடுகின்றன. ஆலய வளாகத்திலிருந்த பணம் மாற்றும் வியாபாரிகளிடமிருந்தும் மிருகங்களை விற்பதிலிருந்தும் வருகிற பணமே அவர்களுடைய வருமானத்தின் பிரதான மூலமாக இருந்தது. வியாபாரிகளை அடித்து விரட்ட இயேசு எடுத்த நடவடிக்கை, “ஆசாரியர்களின் கௌரவத்தை மட்டுமின்றி அவர்களுடைய பணப்பைகளையும் குறிவைத்துதான்” என்று ஒரு நிபுணர் கூறுகிறார். காரணம் எதுவாக இருப்பினும், அவருடைய எதிரிகள் நிச்சயமாகவே அவரை கொல்ல விரும்பினர்!—லூக்கா 19:45-48.
[பக்கம் 4-ன் அட்டவணை]
மானிட வாழ்க்கையில் இயேசுவின் கடைசி நாட்கள்
நிசான் பொ.ச. 33 சம்பவங்கள் மிகப் பெரிய மனிதர்*
7 வெள்ளி இயேசுவும் அவருடைய சீஷர்களும் 101, பாரா 1
எரிகோவிலிருந்து எருசலேமுக்கு செல்கின்றனர்
(எபிரெய நாட்கள் ஒரு சாயங்காலத்திலிருந்து
மறுசாயங்காலம் வரை நீடித்தபோதிலும் நிசான் 7,
1998-ம் ஆண்டில், ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 5-ம் தேதிக்கு
ஒத்திருக்கிறது)
8 வெள்ளி மாலை இயேசுவும் அவருடைய சீஷர்களும் 101, பாரா. 2-4
பெத்தானியாவுக்கு வந்து சேருகின்றனர்; ஓய்வுநாள்
துவங்குகிறது
சனி ஓய்வுநாள் (திங்கள், ஏப்ரல் 6, 1998) 101, பாரா 4
9சனி மாலை குஷ்டரோகியாயிருந்த சீமோனின் வீட்டில் விருந்து; 101, பாரா. 5-9
மரியாள் இயேசுவை நளதத்தால் அபிஷேகம் செய்கிறாள்;
அநேகர் இயேசுவைக் காணவும் அவர் சொல்வதைக் கேட்கவும்
எருசலேமிலிருந்து வருகின்றனர்
ஞாயிறு எருசலேமுக்குள் வெற்றிபவனி; ஆலயத்தில் போதிக்கிறார் 102
10திங்கள் எருசலேமுக்குள் அதிகாலைப் பயணம்; 103, 104
ஆலயத்தை சுத்திகரிக்கிறார்; பரலோகத்திலிருந்து யெகோவா பேசுகிறார்
11செவ்வாய் எருசலேம் ஆலயத்தில், உவமைகளை 190,105-லிருந்து 112,
உபயோகித்து போதிக்கிறார்; பரிசேயர்களை பாரா 1 வரை
கண்டிக்கிறார்; விதவையின் காணிக்கையை கவனிக்கிறார்;
தம்முடைய எதிர்கால வந்திருத்தலுக்கான அடையாளத்தைக்
கொடுக்கிறார்
12புதன் பெத்தானியாவில் சீஷர்களுடன் அமைதியாக கழிக்கிறார்; 100,112,
யூதாஸ் காட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்கிறான் பாரா. 2-4
13 வியாழன் பேதுருவும் யோவானும் எருசலேமில் பஸ்காவுக்காக 112, பாரா 5-லிருந்து
ஆயத்தம் செய்கின்றனர்; இயேசுவும் மற்ற பத்து 113, பாரா 1 வரை
அப்போஸ்தலர்களும் பிந்திய பிற்பகல் வந்து சேருகின்றனர்
(சனி, ஏப்ரல் 11, 1998)
14வியாழன் மாலை பஸ்கா ஆசரிப்பு; இயேசு அப்போஸ்தலர்களின் 113, பாரா 2-லிருந்து
பாதங்களை கழுவுகிறார்; இயேசுவை காட்டிக் 117 வரை
கொடுப்பதற்காக யூதாஸ் வெளியேறுகிறான்;
கிறிஸ்து தம்முடைய மரண நினைவு ஆசரிப்பை
ஏற்படுத்துகிறார் (சூரிய மறைவுக்கு பின், சனி,
ஏப்ரல்11,1998)
நள்ளிரவுக்கு பின்பு கெத்செமனே தோட்டத்தில் காட்டிக்கொடுக்கப்பட்டு 118-லிருந்து 120
கைது செய்யப்படுதல்; அப்போஸ்தலர்கள் வரை
ஓடிப்போகுதல்; முக்கிய ஆசாரியர்களுக்கும்
நியாய சங்கத்துக்கும் முன்பாக விசாரணை செய்யப்படுதல்;
பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார்
வெள்ளி சூரிய மீண்டும் நியாயசங்கத்துக்கு முன்; பிலாத்துவிடம், 121-லிருந்து 127,
உதயத்திலிருந்து பின்பு ஏரோதிடம், பிறகு மீண்டும் பிலாத்துவிடம்; பாரா 7 வரை
சூரிய மறைவு வரை மரண தண்டனை தீர்ப்பளிக்கப்படுகிறார்; கழுமரத்தில்
அறையப்படுகிறார்; அடக்கம் பண்ணப்படுகிறார்
15சனி ஓய்வு நாள்; பிலாத்து இயேசுவின் கல்லறையைப் 127,
பாதுகாப்பதற்கு சேவகர்களை அனுமதிக்கிறார் பாரா. 8-10
16ஞாயிறு இயேசு உயிர்த்தெழுப்பப்படுகிறார் 128
*இங்கே பட்டியலிடப்பட்டிருக்கும் எண்கள், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தின் அதிகாரங்களைக் குறிக்கின்றன. இயேசுவின் கடைசி ஊழியத்தைப் பற்றிய விளக்கமான வேதப்பூர்வ மேற்கோள்களைக் கொண்ட அட்டவணைக்கு, ‘வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கம் 290-ஐக் காண்க. இந்தப் புத்தகங்கள் உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டவை.