மனிதவாழ்வில் இயேசுவின் இறுதிநாள்
அது பொ.ச. 33, நிசான் 14, வெள்ளிக்கிழமை அந்திசாயும் நேரம். அன்பான நண்பர் ஒருவரை அடக்கம் செய்ய ஆடவரும் பெண்டிரும் ஆயத்தமாகின்றனர். அவர்களில் ஒருவராகிய நிக்கொதேமு, உடலை அடக்கம் செய்ய வாசனை திரவியங்களை கொண்டுவந்திருக்கிறார். காயம்பட்ட உடலை சுற்றிக்கட்டுவதற்காக யோசேப்பு என்பவர் சுத்தமான துணியை கொடுத்திருக்கிறார்.
யார் இவர்கள்? யாரை அடக்கம் செய்கின்றனர்? இவையனைத்தும் உங்களை பாதிக்கின்றனவா? இந்தக் கேள்விகளுக்கு விடைகாண முக்கியமான அந்நாளின் ஆரம்பத்திற்கு அடியெடுத்து வைப்போமாக.
நிசான் 14, வியாழன் மாலை
எருசலேமின்மீது முழு மதி மெல்ல தவழ்ந்து வருகிறது. ஆரவாரமான அந்நாளிற்குப் பிறகு அந்தப் பட்டணம் அமைதிப் பூங்காவாகி விடுகிறது. பகலும் இரவும் கைகோர்க்கும் மாலைவேளை! நெருப்பில் வாட்டப்படும் ஆட்டுக்குட்டியின் மணம் இளந்தென்றலில் இரண்டறக் கலக்கிறது. ஆம், ஆயிரமாயிரமானோர் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக—வருடாந்தர பஸ்கா பண்டிகையை ஆசரிப்பதற்காக—ஆயத்தமாகின்றனர்.
ஏற்கெனவே ஆயத்தம் செய்யப்பட்ட அகலமான ஒரு வரவேற்பு அறை. மேஜையை சுற்றி இயேசு கிறிஸ்துவும் அவருடைய 12 அப்போஸ்தலரும் அமர்ந்திருக்கின்றனர். இப்பொழுது செவிமடுத்துக் கேளுங்கள்! இயேசு பேசிக்கொண்டிருக்கிறார்: “நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்” என்று சொல்கிறார். (லூக்கா 22:15) மத விரோதிகள் தன்னை தீர்த்துக்கட்ட திட்டந்தீட்டி கொண்டிருப்பதை இயேசு அறிந்திருக்கிறார். ஆனால் அதற்குமுன், இந்த மாலைப்பொழுதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று நடக்கப்போகிறது.
பஸ்கா பண்டிகையை ஆசரித்தப் பிறகு, இயேசு அறிவிக்கிறார்: “உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்.” (மத்தேயு 26:21) இவ்வார்த்தைகள் அப்போஸ்தலர்களுக்கு மனவாட்டத்தை உண்டாக்குகிறது. அது யாராக இருக்கலாம்? சிறிது நேரம் பேசியபிறகு, யூதாஸ்காரியோத்திடம் இயேசு சொல்கிறார்: “நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்.” (யோவான் 13:27) யார் என்பதை மற்றவர்கள் உணரவில்லை. ஆனால் யூதாஸே அந்தத் துரோகி. இயேசுவுக்கு எதிரான சதித்திட்டத்தில் கீழ்த்தரமான தன்னுடைய வேலையை முடிக்க புறப்பட்டு போகிறான்.
ஒரு விசேஷ ஆசரிப்பு
இயேசு இப்பொழுது முற்றிலும் ஒரு புதிய ஆசரிப்பை—தம்முடைய மரணத்தை நினைவுகூரும் ஒன்றை—ஆரம்பித்து வைக்கிறார். ஒரு அப்பத்தை எடுத்து, அதற்காக ஸ்தோத்திர ஜெபம் செய்து அதைப் பிட்டு அவர்களிடம் தருகிறார். “எடுத்து புசியுங்கள்; உங்கள் நிமித்தம் அளிக்கப்படவிருக்கும் என்னுடைய சரீரத்தை இது குறிக்கிறது” என்று அவர்களிடம் சொல்கிறார். ஒவ்வொருவரும் அப்பத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு பாத்திரத்திலிருந்த சிகப்பு திராட்சரசத்தை எடுத்து அதை ஆசீர்வதிக்கிறார். “நீங்கள் அனைவரும் இதைப் பருகுங்கள்” என்று கூறுகிறார். பின்பு இவ்வாறு விளக்குகிறார்: “உங்களுக்காக சிந்தப்படும் என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையை இந்தப் பாத்திரம் குறிக்கிறது.” உண்மையுள்ள மீந்த 11 அப்போஸ்தலரிடம் அவர் கட்டளையிடுகிறார்: “என்னை நினைவுகூரும்படி தொடர்ந்து இதைச் செய்யுங்கள்.”—மத்தேயு 26:26-28; லூக்கா 22:19, 20; 1 கொரிந்தியர் 11:24, 25; NW.
இன்னும் சீக்கிரத்தில் நடக்கவிருந்த காரியத்திற்காக இயேசு தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலரை அன்புடன் ஆயத்தப்படுத்துகிறார். அவர்கள்மீது தமக்கிருந்த ஆழமான அன்பையும் உறுதிப்படுத்துகிறார். “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” என்று விளக்குகிறார். (யோவான் 15:13-15) ஆம், அந்த பதினோரு அப்போஸ்தலர்களும் இயேசுவுடைய சோதனைகளில் அவரைப் பற்றிக்கொண்டிருந்து, தாங்கள் உண்மையான சிநேகிதர் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
அந்த நாளின் இரவிலோ அல்லது நள்ளிரவிலோ மறக்கமுடியாத ஒரு ஜெபம் செய்கிறார் இயேசு; அதன் பிறகு யெகோவாவுக்குத் துதியுண்டாக அவர்கள் பாடல்கள் பாடுகின்றனர். பின்பு அந்த நிலவொளியில், அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு கெதரோன் பள்ளத்தாக்கை கடந்து செல்கின்றனர்.—யோவான் 17:1–18:1.
கெத்செமனே தோட்டத்தில்
சிறிது நேரத்திற்குப் பிறகு, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் கெத்செமனே தோட்டத்திற்கு வந்துசேருகின்றனர். தோட்டத்தின் வாசலில் எட்டு அப்போஸ்தலரை விட்டுவிட்டு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை கொஞ்ச தூரம் தள்ளியிருந்த ஒலிவ மரங்களுக்கு மத்தியில் இயேசு கூட்டிச் செல்கிறார். அங்கே அந்த மூவரிடம், “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள்” என்று சொல்கிறார்.—மாற்கு 14:33, 34.
இயேசு ஜெபிப்பதற்காக தோட்டத்திற்குள் சற்று தொலைவு செல்ல, அந்த மூன்று அப்போஸ்தலரும் காத்திருக்கின்றனர். அவர் பலத்த கூக்குரலோடும் கண்ணீரோடும் வேண்டுதல் செய்கிறார்: “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்.” பலத்த உத்தரவாதத்தை இயேசு தன் தோள்களில் சுமக்க வேண்டியிருக்கிறது. ஒரு குற்றவாளியைப் போல யெகோவாவின் ஒரேபேறான குமாரன் கழுமரத்தில் அறையப்படுகையில், அவரது விரோதிகள் சொல்லப்போவதை நினைத்துப்பார்ப்பது அவருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கிறது! கடும் வேதனைமிக்க இந்த சோதனையில் தோல்வியுற்றால் தன்னுடைய அன்பான பரலோக தகப்பன்மீது குவிக்கப்படும் அவமானத்தைப் பற்றிய எண்ணமே அதைவிட அவருக்கு வேதனையளிக்கிறது. இயேசு ஊக்கமாய் ஜெபிக்கிறார், அவருடைய வியர்வை இரத்தத் துளிகளாய் கீழே விழுமளவுக்கு மிகுந்த வேதனைப்படுகிறார்.—லூக்கா 22:42, 44.
இயேசு இப்பொழுது மூன்றாம் முறையாக ஜெபித்து முடித்திருக்கிறார். தீவட்டிகளையும் விளக்குகளையும் ஏந்திவரும் மனிதர்கள் இப்பொழுது அவர்களை நெருங்குகின்றனர். அவர்களுக்கு முன்னால் நடந்து வருபவன் வேறு யாருமல்ல, பச்சை துரோகி யூதாஸ்காரியோத்துதான். அவன் நேரடியாக இயேசுவின் அருகில் வந்து, “ரபீ, வாழ்க” என்று சொல்லி அவரை முத்தமிடுகிறான். அப்பொழுது இயேசு, “முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய்” என்று கேட்கிறார்.—மத்தேயு 26:49; லூக்கா 22:47, 48; யோவான் 18:3.
இப்போதுதான் அப்போஸ்தலர்களுக்கு உரைக்கிறது. இதோ, அவர்களுடைய ஆண்டவரும் அருமையான நண்பருமானவர் கைதாக போகிறார்! ஆகவே, பேதுரு ஒரு பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய அடிமையின் காதை சீவுகிறார். உடனே இயேசு, “இம்மட்டில் நிறுத்துங்கள்” என்று அதட்டுகிறார். இதற்கும் மேலாக, அந்த அடிமையை சுகப்படுத்தி பேதுருவுக்கு இவ்வாறு கட்டளையிடுகிறார்: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.” (லூக்கா 22:50, 51; மத்தேயு 26:52) அதிகாரிகளும் சேவகர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டுகின்றனர். பயமும் குழப்பமும் கவ்வ, இயேசுவை அப்போஸ்தலர்கள் கைவிட்டுவிட்டு இருளில் மறைந்தோடிவிடுகின்றனர்.—மத்தேயு 26:56; யோவான் 18:12.
வெள்ளி காலை, நிசான் 14
இப்பொழுது நடுராத்திரி, அதாவது வெள்ளிக்கிழமை பிறந்த வேளை. முதலில் இயேசுவை முன்னாள் பிரதான ஆசாரியனாகிய அன்னாவிடம் அழைத்துச் செல்கின்றனர். இன்னும் இந்தப் பிரதான ஆசாரியன் அதிக செல்வாக்குள்ளவனாகவும் அதிகாரமுள்ளவனாகவும் இருக்கிறான். அன்னா அவரை கேள்வி கேட்கிறான், அதன்பின் பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் வீட்டிற்கு அழைத்துச்செல்ல உத்தரவிடுகிறான். அங்கு ஆலோசனை சங்கம் கூட்டப்படுகிறது.
இயேசுவுக்கு எதிராக வழக்கை ஜோடிப்பதற்கு இப்பொழுது மதத் தலைவர்கள் சாட்சிக்காரர்களைத் தேடி அலைகின்றனர். ஆனால், அந்தப் பொய் சாட்சிக்காரர்களுடைய சாட்சியும் ஏறுக்குமாறு! இச்சம்பவங்கள் நடக்கும்போது இயேசு மௌனமாக இருக்கிறார். காய்பா தன்னுடைய சூழ்ச்சியை மாற்றிக்கொண்டு இவ்வாறு கேட்கிறான்: “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன்”! இது மறுக்கமுடியாத உண்மை, எனவே இயேசு தைரியமாக பதிலளிக்கிறார்: “நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்.”—மத்தேயு 26:63; மாற்கு 14:60-62.
‘அவன் தேவதூஷணத்தைக் கேட்டீர்களே! இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?’—காய்பா கர்ஜிக்கிறான். இப்பொழுது சிலர் இயேசுவை முகத்தில் அறைந்து அவர்மீது துப்புகின்றனர். மற்றவர்கள் தங்களுடைய முஷ்டியால் குத்துகின்றனர், அவரை தூஷிக்கின்றனர். (மத்தேயு 26:65-68; மாற்கு 14:63-65) வெள்ளிக்கிழமை விடியலில் மீண்டும் ஆலோசனை சங்கம் பரபரப்படைகிறது, ஒருவேளை சட்டவிரோதமான இரவுநேர விசாரணைக்கு முலாம்பூசுவதற்காக இருக்கலாம். கடவுளுடைய குமாரனாகிய கிறிஸ்து என மீண்டும் இயேசு தைரியமாய் சுட்டிக்காட்டுகிறார்.—லூக்கா 22:66-71, NW.
அடுத்ததாக, யூதேயாவின் ரோம ஆளுநராகிய பொந்தியு பிலாத்து விசாரிப்பதற்காக பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் இயேசுவை இழுத்துச் செல்கின்றனர். நாட்டை கவிழ்ப்பதாகவும் இராயனுக்கு வரிகட்டுவதை தடுப்பதாகவும் “தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்று” சொல்வதாகவும் இயேசுமீது அவர்கள் பழிசுமத்துகின்றனர். (லூக்கா 23:2; ஒப்பிடுக: மாற்கு 12:17.) இயேசுவை கேள்விகேட்ட பிறகு, பிலாத்து அறிவிக்கிறான்: “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை.” (லூக்கா 23:4) இயேசு ஒரு கலிலேயன் என்பதை பிலாத்து அறிந்து, பஸ்கா பண்டிகைக்காக எருசலேமில் இருக்கும் கலிலேய ஆளுநராகிய ஏரோது அந்திப்பாவிடம் அவரை அனுப்புகிறான். நீதி வழங்க ஏரோதுக்கு எண்ணமில்லை. இயேசு அற்புதம் செய்வதை காணவே அவன் விரும்புகிறான். அவனுடைய ஆவலை திருப்திசெய்யாமல் இயேசு அமைதியாக இருக்கிறார், அதனால் ஏரோதும் அவனுடைய சேவகர்களும் அவரை கேலிசெய்து மறுபடியும் பிலாத்துவிடமே அனுப்புகின்றனர்.
“இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றும் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன்” என மீண்டும் சொல்கிறான் பிலாத்து. (லூக்கா 23:22) எனவே, இயேசுவை முட்கள் நிறைந்த சாட்டையால் அடிப்பதற்கு ஏவுகிறான்; அதனால் அவரது முதுகு கிழிந்து பயங்கர வலி ஏற்படுகிறது. பின்பு அந்தப் போர்ச் சேவகர்கள் அவருடைய தலையில் முள் கிரீடம் வைத்து அழுத்துகின்றனர். அவரை பரிகாசம் செய்து முரட்டு தடியால் அடித்து, முள் கிரீடத்தை இன்னும் ஆழமாக அவருடைய தலையில் அழுத்துகின்றனர். சொல்லொண்ணா இந்த வேதனையிலும் தூஷணத்திலும், இயேசு தொடர்ந்து கண்ணியத்தையும் பலத்தையும் காத்துக்கொள்கிறார்.
பிலாத்து மீண்டும் அவரை கூட்டத்தாருக்கு முன்பு கொண்டுவந்து நிறுத்துகிறான்—இயேசுவின் அடிபட்ட நிலைமையைப் பார்த்து இரங்குவார்கள் என்ற நம்பிக்கையில். “நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன்” என்று பிலாத்து சொல்கிறான். ஆனால் பிரதான ஆசாரியர்கள்: “கழுமரத்தில் அறையும் கழுமரத்தில் அறையும்!” என்று கத்துகின்றனர். (யோவான் 19:4-6, NW) அந்தக் கூட்டத்தார் மீண்டும் மீண்டும் பிலாத்துவை வற்புறுத்தியதால், அவர்களுக்கு இசைந்து, இயேசுவை கழுமரத்தில் அறைய அவர்களிடம் ஒப்புக்கொடுக்கிறான்.
வேதனைமிக்க மரணம்
இதற்குள் வெயில் அதிகமாகி ஒருவேளை நடுப்பகல் நெருங்கியிருக்கலாம். எருசலேமுக்கு வெளியே கொல்கொதா என்ற இடத்திற்கு இயேசுவை கொண்டுசெல்கின்றனர். இயேசுவை கழுமரத்தில் வைத்து கைகளிலும் கால்களிலும் பெரிய ஆணிகளை அடிக்கின்றனர். கழுமரத்தை தூக்கி நிறுத்தும்போது அவருடைய உடலின் பாரம் ஆணிகளாலான காயங்களை கிழிப்பதால் உண்டாகும் வேதனையை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இயேசுவும் இரண்டு குற்றவாளிகளும் கழுமரத்தில் அறையப்படுவதைப் பார்க்க மக்கள் வெள்ளம் திரண்டு வருகிறது. அநேகர் இயேசுவை தூஷணமாக பேசுகின்றனர். “மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத் தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை” என்று பிரதான ஆசாரியர்களும் மற்றவர்களும் பரிகசிக்கின்றனர். ராணுவ வீரர்களும் அவரோடு அறையப்பட்ட குற்றவாளிகளும்கூட இயேசுவை பரிகாசம் செய்கின்றனர்.—மத்தேயு 27:41-44.
திடீரென மதியவேளையில், இயேசு கழுமரத்தில் அறையப்பட்ட சிறிது நேரத்திற்குப்பின், தெய்வீக ஊற்றுமூலத்திலிருந்து வந்த இருள் மூன்று மணிநேரத்திற்கும் மேல் அந்நகரத்தை சூழ்ந்துகொள்கிறது. a ஒரு குற்றவாளி மற்றவனைப் பார்த்து கடிந்துகொள்வதற்கு ஒருவேளை இதுவே தூண்டியிருக்கலாம். பின்பு இயேசுவைப் பார்த்து, அவன் மன்றாடுகிறான்: “நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்.” மரண தறுவாயில் எப்பேர்ப்பட்ட விசுவாசம்! இயேசு அவனை நோக்கி: “நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்” என்றார். (NW)—லூக்கா 23:39-43.
பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு, தனக்கு முடிவு நெருங்கிவிட்டது என இயேசு உணருகிறார். “தாகமாயிருக்கிறேன்” என்று சொல்கிறார். பின்பு சத்தமாக கூக்குரலிடுகிறார்: “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்”? இயேசுவுடைய உத்தமத்தன்மையை கடைசி எல்லைவரை பரிசோதிப்பதற்கு, தம்முடைய தகப்பன் பாதுகாப்பை விலக்கிக்கொண்டார் என்பதை இயேசு உணர்ந்து, தாவீதின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார். புளித்த திராட்சரசத்தில் கடற்பஞ்சை நனைத்து அதை இயேசுவுடைய உதட்டில் வைக்கின்றனர். திராட்சரத்தை சிறிது சுவைத்த பிறகு, இயேசு மூச்சுத்திணருகிறார்: “அது நிறைவேறியது! பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று மகா சத்தமாய் சொல்லி; தலையை சாய்த்து ஜீவனை விடுகிறார்.—யோவான் 19:28-30; மத்தேயு 27:46; லூக்கா 23:46, NW; சங்கீதம் 22:1.
இது பிந்திய பிற்பகல் வேளை என்பதால், அஸ்தமனத்திலிருந்து ஆரம்பமாகும் ஓய்வுநாளுக்கு (நிசான் 15) முன்பு இயேசுவை அடக்கம் செய்ய அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆலோசனை சங்கத்தின் புகழ்மிக்க அங்கத்தினரும் இரகசியமாய் இயேசுவுக்கு சீஷனாயிருந்த அரிமத்தியா ஊரானுமாகிய யோசேப்பு அவருடைய உடலை அடக்கம் செய்ய அனுமதி பெறுகிறார். நிக்கொதேமு, இவரும் ஆலோசனை சங்கத்தின் அங்கத்தினர், முப்பத்து மூன்று கிலோகிராம் வெள்ளைப்போளத்தையும் வாசனைப் பொருட்களையும் தந்து உதவுகிறார். அருகிலுள்ள ஒரு புதிய கல்லறையில் இயேசுவின் உடலை கவனமாக கிடத்துகின்றனர்.
மீண்டும் உயிரடைகிறார்!
மகதலேனா மரியாளும் வேறுசில பெண்களும் இயேசுவின் கல்லறை அருகே வரும்போது ஞாயிறு அதிகாலை வேளை. அதோ! கல்லறைக்கு முன்பிருந்த கல் உருட்டப்பட்டுள்ளது. ஏன், கல்லறையே காலியாக இருக்கிறதே! பேதுருவிடமும் யோவானிடமும் சொல்வதற்கு மகதலேனா மரியாள் விரைந்து ஓடுகிறாள். (யோவான் 20:1, 2) அவள் போனவுடனே மற்ற பெண்களுக்கு ஒரு தேவதூதர் தோன்றுகிறார். அவர் சொல்கிறார்: “நீங்கள் பயப்படாதிருங்கள்.” மேலும், இவ்வாறு சொல்லி உந்துவிக்கிறார்: “சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்.”—மத்தேயு 28:2-7.
அவர்கள் வேகமாக செல்லும்போது, ஒருவரை வழியில் சந்திக்கின்றனர். அவர் வேறு யாருமில்லை, இயேசுவே! “நீங்கள் போய், என் சகோதரர்[களுக்குச்] சொல்லுங்கள்” என்று அவர்களிடம் சொல்கிறார். (மத்தேயு 28:8-10) அதன்பின்பு, கல்லறையருகே அழுதுகொண்டிருக்கிற மகதலேனா மரியாளுக்கு இயேசு காட்சியளிக்கிறார். அவள் தன்னுடைய சந்தோஷத்தை அடக்க முடியாமல், இந்த அற்புத செய்தியை மற்ற சீஷர்களுக்கு சொல்ல விரைகிறாள். (யோவான் 20:11-18) சொல்லப்போனால், மறக்கமுடியாத அந்த ஞாயிற்றுக்கிழமையில், உயிர்த்தெழுந்த இயேசு பல்வேறு சீஷர்களுக்கு ஐந்து தடவை காட்சியளிக்கிறார். சந்தேகத்திற்கு இடமின்றி அவர் மறுபடியும் உயிரோடிருக்கிறார் என்பதற்கு இவை அத்தாட்சிகளாக இருந்தன!
நீங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறீர்கள்
1,966 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவங்கள் 21-ம் நூற்றாண்டின் வாசலில் அடியெடுத்து வைக்கப்போகும் உங்களை எவ்வாறு பாதிக்கும்? அந்த சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகள் இவ்வாறு விளக்குகின்றனர்: “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.”—1 யோவான் 4:9, 10.
எந்த விதத்தில் கிறிஸ்துவின் மரணம் ‘கிருபாதார பலி’? கடவுளுடன் நல்ல உறவுக்குள் வருவதை அது சாத்தியமாக்குவதால் கிருபாதார பலி. முதல் மனிதனாகிய ஆதாம், கடவுளுக்கு எதிராக கலகம் செய்ததால் பாவத்தையும் மரணத்தையும் பரம்பரை சொத்தாக தன்னுடைய சந்ததியாருக்கு விட்டுச் சென்றான். மறுபட்சத்தில், மனிதவர்க்கத்தின் பாவத்திற்கும் மரணத்திற்கும் இயேசு தம்முடைய ஜீவனையே கிரயபலியாக கொடுத்து விலையை செலுத்தினார். இதனால், இரக்கத்தையும் தயவையும் நம்மீது கடவுள் காண்பிப்பதற்கு ஒரு ஆதாரத்தை ஏற்படுத்தினார். (1 தீமோத்தேயு 2:5, 6) இயேசுவின் பாவநிவாரண பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம், பாவியாகிய ஆதாமிடமிருந்து சுதந்தரித்த கண்டனத் தீர்ப்பிலிருந்து நீங்கள் விடுதலை பெறமுடியும். (ரோமர் 5:12; 6:23) இது, உங்களுடைய அன்பான தகப்பனாகிய யெகோவா தேவனோடு தனிப்பட்ட உறவுக்குள் வருவதற்கு அற்புதமான வாய்ப்பை திறந்துவைக்கிறது. சுருங்கச் சொன்னால், இயேசுவின் உன்னத பலி உங்களுக்கு முடிவில்லா ஜீவனை அர்த்தப்படுத்தும்.—யோவான் 3:16; 17:3.
இதுவும் இதோடு சம்பந்தப்பட்ட விஷயங்களும், உலகமுழுவதிலும் லட்சக்கணக்கானோர் இயேசுவின் மரணத்தை நினைவுகூருவதற்கு ஒன்றுகூடி வரும் சமயத்தில், அதாவது ஏப்ரல் 1, வியாழக்கிழமை மாலை சிந்திக்கப்படும். நீங்களும் கலந்துகொள்ளும்படி உங்களை அழைக்கிறோம். எங்கே, எப்பொழுது ஆஜராகலாம் என்பதை உங்களுடைய பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைவார்கள். அங்கே ஆஜராயிருப்பது நம்முடைய அன்பான கடவுளின் பேரிலும் அவருடைய அருமை குமாரன் இயேசு தனது மனித வாழ்வின் இறுதிநாளில் செய்த காரியத்தின் பேரிலும் நம்முடைய போற்றுதலை ஆழமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
[அடிக்குறிப்பு]
a இந்த இருள் சூரிய கிரகணத்தால் வந்திருக்க முடியாது; ஏனெனில் முழுநிலா தோன்றிய சமயத்தில் இயேசு மரித்தார். சூரிய கிரகணம் சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும்; இது, அமாவாசை சமயத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சம்பவிக்கும்.
[பக்கம் 7-ன் அட்டவணை/படங்கள்]
இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும்
நிசான், பொ.ச. 33 சம்பவங்கள் மிகப் பெரிய மனிதர்b
14 வியாழன் பஸ்கா பண்டிகை ஆசரிப்பு; அப்போஸ்தலரின் 113, பாரா 2 முதல்
மாலை பாதங்களை இயேசு கழுவுகிறார்; இயேசுவை 117 பாரா 1 வரை
காட்டிக்கொடுக்க யூதாஸ் வெளியே போகிறான்;
கிறிஸ்து தம்முடைய மரண நினைவு ஆசரிப்பை
(இந்த வருடம் ஏப்ரல் 1, வியாழக்கிழமை சூரிய
அஸ்தமனத்திற்குப்பின் ஆசரிக்கப்படும்) ஆரம்பிக்கிறார்;
தம்முடைய பிரிவுக்காக அப்போஸ்தலரை
ஆயத்தப்படுத்துவதற்கு புத்திமதி தருகிறார்.
நடுராத்திரி முதல் ஜெபத்திற்கும் துதிப்பாடலுக்கும் பிறகு, இயேசுவும் 117 முதல் 120
விடியலுக்கு அப்போஸ்தலரும் கெத்செமனே தோட்டத்திற்கு
முன்பு வரை செல்கின்றனர்; பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும்
இயேசு ஜெபிக்கிறார்; யூதாஸ்காரியோத்து
பெருங்கூட்டத்தோடு வந்து இயேசுவை
காட்டிக்கொடுக்கிறான்; இயேசுவை கைதுசெய்து
அன்னாவிடம் அழைத்துச் செல்கையில் அப்போஸ்தலர்
தப்பியோடுகின்றனர்; ஆலோசனை சங்கத்திற்கு முன்பு
வருவதற்கு பிரதான ஆசாரியனாகிய காய்பாவிடம் கொண்டு
செல்லப்படுகிறார்; மரண தண்டனை விதிக்கப்படுகிறார்;
பரிகசிக்கப்படுகிறார், அடிக்கப்படுகிறார்;
இயேசுவை மூன்று முறை பேதுரு மறுதலிக்கிறார்
வெள்ளி காலை விடியலில் மறுபடியும் ஆலோசனை சங்கத்திற்கு முன்பு 121 முதல் 124 வரை
இயேசு நிறுத்தப்படுகிறார்; பிலாத்துவிடம் கொண்டு
செல்லப்படுகிறார்; ஏரோதுவிடம் அனுப்பப்படுகிறார்;
மீண்டும் பிலாத்துவிடம் கொண்டுவரப்படுகிறார்;
சவுக்கால் அடிக்கப்படுகிறார், பரிகசிக்கப்படுகிறார்,
தாக்கப்படுகிறார்; வற்புறுத்தலால் கழுமரத்தில்
அறைய அவரை பிலாத்து ஒப்புக்கொடுக்கிறான்;
சுமார் மதியவேளையில் மரண தண்டனை
விதிக்கப்படுவதற்கு கொல்கொதா மலைக்கு கொண்டு
செல்லப்படுகிறார்
நடுப்பகல் முதல் நடுப்பகலுக்கு சற்றுமுன் கழுமரத்தில் அறையப்படுகிறார்; 125, 126
மதியம் வரை நடுப்பகல் முதல் மதியம் சுமார் 3 மணிவரை இருளடைகிறது,
அப்போது இயேசு மரிக்கிறார்; பயங்கர பூகம்பம் ஏற்படுகிறது;
தேவாலய திரைச்சீலை இரண்டாக கிழிகிறது
பிந்திய பிற்பகல் ஓய்வுநாளுக்கு முன்பு ஒரு தோட்டத்திலுள்ள புதிய 127, பாரா. 1-7
கல்லறையில் இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது
15 வெள்ளி மாலை ஓய்வுநாள் ஆரம்பமாகிறது
சனி இயேசுவின் கல்லறையைக் காப்பதற்கு காவலர்களை 127, பாரா. 8-9
பிலாத்து அனுமதிக்கிறான்
16 ஞாயிறு அதிகாலை வேளை இயேசுவின் கல்லறை காலியாக 127, பாரா 10 முதல்
காட்சியளிக்கிறது; உயிர்த்தெழுந்த இயேசு 129, பாரா 10 வரை
(1) சிஷ்யைகளின் கூட்டத்திலிருந்த சலோமி,
யோவன்னா, யாக்கோபின் தாயாகிய மரியாள்;
(2) மகதலேனா மரியாள்; (3) கிலேயோப்பா மற்றும்
அவருடைய தோழர்; (4) சிமியோன் பேதுரு;
(5) அப்போஸ்தலர் மற்றும் வேறு சீஷர்களுக்கு
காட்சியளிக்கிறார்
[அடிக்குறிப்பு]
b * எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தின் அதிகாரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இயேசுவின் இறுதி ஊழியத்தைப் பற்றிய விளக்கமான வேதப்பூர்வ மேற்கோள்கள் அடங்கிய அட்டவணையை “வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கம் 290-ல் காண்க. இந்தப் புத்தகங்கள் உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டவை.