குடும்பத்தை கவனிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்
தகப்பன்மாரே, நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாமல், யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மன சீரமைப்பிலும் அவர்களை தொடர்ந்து வளர்த்து வாருங்கள்.” (எபேசியர் 6:4, NW) அப்போஸ்தலனாகிய பவுல், பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட அந்த வார்த்தைகளின் மூலம் குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கான பொறுப்பை அதற்கே தகுதியாயுள்ள நபரிடம், அதாவது தகப்பனிடம் ஒப்படைத்தார்.
பெரும்பாலான குடும்பங்களில் தகப்பன் மட்டுமே பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதில்லை. அவருடைய மனைவி, அதாவது பிள்ளைகளின் தாயும் கணவரோடு சேர்ந்து சந்தோஷத்தோடே அச்சுமையை பகிர்ந்து கொள்கிறாள். இதன் காரணமாகவே சாலொமோன் ராஜா இவ்வாறு அறிவித்தார்: “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.”—நீதிமொழிகள் 1:8.
பொருளாதார கவனிப்பும் ஆவிக்குரிய கவனிப்பும்
தங்கள் பிள்ளைகளை நேசிக்கும் பெற்றோர் வேண்டுமென்றே அவர்களை அசட்டை செய்வதில்லை. உண்மையில், கிறிஸ்தவர்கள் அவ்வாறு செய்வது, தங்கள் விசுவாசத்தை மறுதலிப்பதற்கு சமமாய் இருக்கும். பவுல் தீமோத்தேயுவுக்கு கூறிய வார்த்தைகளிலிருந்து நாம் இந்த முடிவுக்கு வருகிறோம்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1 தீமோத்தேயு 5:8) “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மன சீரமைப்பிலும்” பிள்ளைகளை வளர்ப்பதில் பொருளாதார தேவைகளை கவனித்துக்கொள்வதைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது என்பதை கிறிஸ்தவர்கள் உணருகின்றனர்.
இஸ்ரவேல் தேசத்தார் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு சற்று முன்பு, மோவாபிய சமவெளியில் பாளையமிறங்கி இருந்தபோது மோசே அவர்களுக்கு கொடுத்த புத்திமதியை சிந்தித்துப் பாருங்கள். அவர் அங்கே அவர்களிடம் கடவுளுடைய சட்டங்களை மறுபடியும் கூறி இவ்வாறு கட்டளையிட்டார்: ‘நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து வைக்க வேண்டும்.’ (உபாகமம் 11:19) அவர்கள் யெகோவாவிடம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அன்புகூர வேண்டும் என்று அவர் இதற்கு முன்பு அவர்களுக்கு நினைப்பூட்டியிருந்தார்; அதோடு சேர்த்து கூடுதலாக இவ்வாறு கூறினார்: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.” (உபாகமம் 6:5, 6) கடவுளுடைய நியாயப்பிரமாண வார்த்தைகள் தங்கள் இருதயங்களுக்குள் ஊடுருவிச் செல்வதற்கு இஸ்ரவேல பெற்றோர் அனுமதிக்க வேண்டியது முக்கியமாயிருந்தது. இஸ்ரவேல பெற்றோர் ஆவிக்குரிய போற்றுதல் நிரம்பிவழியும் இருதயங்களோடு பயனுள்ள விதத்தில் மோசே தொடர்ந்து சொன்ன வார்த்தைகளுக்கு கீழ்ப்படியக்கூடும்: “நீ அவைகளை [கடவுளுடைய நியாயப்பிரமாண வார்த்தைகளை] உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து [“மனதில் ஆழப் பதியவைத்து,” NW], நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேச வேண்டும்.”—உபாகமம் 6:7; 11:20; ஒப்பிடுக: மத்தேயு 12:34, 35.
தகப்பன்மார் அந்த வார்த்தைகளை தங்கள் பிள்ளைகளின் “மனதில் ஆழப் பதியவைத்து,” “அவைகளைக் குறித்துப் பேச” வேண்டியிருந்தது என்று சொல்வதை கவனியுங்கள். “மனதில் ஆழப் பதியவைப்பது” என்பதை, “அடிக்கடி திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் அல்லது கண்டிப்பதன் மூலம் கற்பித்து பதிய வைப்பது” என்று மெரியாம்-வெப்ஸ்டர்ஸ் காலேஜியேட் டிக்ஷ்னரி விளக்கம் தருகிறது. பெற்றோர் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் பற்றி தினந்தோறும்—காலை, மதியம், இரவு என—பேசும்போது அது அவர்களுடைய பிள்ளைகளுக்கு அதிகத்தை கற்றுத் தந்தது. கடவுளுடைய நியாயப்பிரமாணத்தின் மீது தங்கள் பெற்றோருக்கிருந்த அன்பை இளைஞர் உணர்ந்தபோது, அவர்களும் அதுபோலவே யெகோவாவோடு ஒரு நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள அது அவர்களையும் தூண்டியது. (உபாகமம் 6:24, 25) ஆர்வத்தைத் தூண்டும்விதத்தில், தங்கள் பிள்ளைகளுக்கு ‘வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோது’ கற்பிக்க வேண்டும் என்று மோசே திட்டவட்டமாய் தகப்பன்மாருக்கு கட்டளையிட்டார். அப்படிப்பட்ட போதனை குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் ஒரு பாகமாய் இருந்தது. ஆனால் நம் நாளைப் பற்றியென்ன?
“நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும்”
“அது எளிதான காரியமல்ல” என்று நான்கு பிள்ளைகளையுடைய கிறிஸ்தவ தாய் ஜேனட் விளக்குகிறார். a “உங்களுக்கு விடாமுயற்சி தேவை” என்று அவளுடைய கணவர் பால் ஒப்புக்கொள்கிறார். மற்ற அநேக சாட்சி பெற்றோரைப் போல், பாலும் ஜேனட்டும் வாரத்துக்கு ஒரு முறையாவது தங்கள் பிள்ளைகளோடு பைபிளை படிப்பதற்கு அதிக முயற்சி எடுக்கின்றனர். “ஒவ்வொரு திங்கட்கிழமை மாலையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடும்பமாக பைபிளை கலந்தாலோசிக்க முயற்சி செய்கிறோம்” என்று பால் விளக்குகிறார், “ஆனால் நாங்கள் எப்போதுமே அவ்வாறு செய்ய முடிவதில்லை” என்று ஒப்புக்கொள்கிறார். அவர் சபையில் மூப்பராக நியமிக்கப்பட்டிருப்பதால், அவசரமான விஷயங்களை கவனிப்பதற்காக அவர் சில சமயங்களில் செல்ல வேண்டியிருக்கிறது. அவருடைய மூத்த பிள்ளைகள் இருவர் முழுநேர ஊழியர்களாக சேவிக்கின்றனர். மாலை நேரங்களில் மக்களை சந்தித்து ஊழியம் செய்வது அதிக பலன் தருவதாக அவர்கள் காண்கிறார்கள். இவ்வாறு, அவர்கள் ஒரு குடும்பமாக, தங்கள் குடும்ப படிப்புக்கான நேரத்தை மாற்றி வைத்துக் கொள்கிறார்கள். “நாங்கள் சில சமயங்களில் மாலை உணவுக்குப் பின் உடனடியாக படிப்பை வைத்துக்கொள்வோம்” என்று பால் விளக்குகிறார்.
பெற்றோர் நடைமுறைக்கு ஏற்ப தங்களுடைய குடும்ப படிப்புக்கான நேரத்தை மாற்றிக்கொள்வதில் ஞானமாய் செயல்பட்டாலும், அவர்கள் அதை தவறாமல் நடத்திவர முயற்சி செய்கிறார்கள். “எங்கள் படிப்பு நேரத்தை மாற்ற வேண்டியிருந்தால், அப்பா எப்போதும் மாற்றிய நேரத்தை ஃபிரிட்ஜ் கதவில் ஒட்டி விடுவார், அதிலிருந்து படிப்பு எப்போது இருக்கும் என்பதை நாங்கள் எல்லாரும் தெரிந்துகொள்வோம்” என மகள் கிளாரா சொல்கிறாள்.
குடும்ப பைபிள் படிப்புக்கு தவறாமல் ஒன்றுகூடி வரும்போது, குடும்பத்திலுள்ள இளைஞர் தங்கள் கவலைகளையும் பிரச்சினைகளையும் பெற்றோரோடு பகிர்ந்து கொள்வதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை அளிக்கிறது. இளைஞர் தாங்கள் உபயோகிக்கும் பைபிள் பாடபுத்தகத்திலிருந்து கேள்விகளுக்கான பதில்களை வெறுமனே வாசித்து விடும் இயந்திரத்தனமான படிப்பாக இல்லாதிருந்தால் அது நல்ல பலன்களை தரும். “எங்கள் குடும்ப படிப்பு கலந்து பேசுவதற்கான பொது மன்றம்” என்று இரண்டு மகன்களை உடைய மார்ட்டின் விளக்குகிறார். “வாரத்துக்கு ஒரு முறை பைபிள் தலைப்பு ஒன்றின் பேரில் கலந்து பேசுவதற்கு நீங்கள் ஒன்றுகூடினால், உங்கள் குடும்பம் ஆவிக்குரிய விதத்தில் எவ்வாறு உள்ளது என்பதை நீங்களே கண்டுபிடித்து விடலாம்” என்று அவர் குறிப்பிடுகிறார். “கலந்து பேசும்போது பல வித்தியாசமான காரியங்களை கண்டுபிடித்து விடுகிறோம். பள்ளியில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், அதற்கு மேல் அக்கறையூட்டும்விதத்தில், உங்கள் பிள்ளைகள் என்ன மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதையும் நீங்கள் கண்டுபிடித்து விடுகிறீர்கள்.” குடும்ப படிப்பிலிருந்து அவருடைய மனைவி சான்ட்ராவும்கூட அதிக பயனடைவதாக உணருவதை ஒப்புக்கொள்கிறாள். “என் கணவர் படிப்பு நடத்துகையில், அவர் கேட்கும் கேள்விகளுக்கு என் மகன்கள் எந்த விதத்தில் பதிலளிக்கின்றனர் என்பதை செவிகொடுத்துக் கேட்பதன் மூலம் அதிகமான விஷயங்களை கற்றுக்கொள்கிறேன்” என்று அவள் சொல்கிறாள். பிறகு சான்ட்ரா தன் பையன்களுக்கு உதவும்விதத்தில் தன் குறிப்புகளை மாற்றியமைத்து சொல்கிறாள். அவள் படிப்பில் ஊக்கமாய் ஈடுபடுவதால் அதை அதிக சந்தோஷத்துடன் அனுபவிக்கிறாள். ஆம், தங்கள் பிள்ளைகளின் சிந்தனைக்குள் உட்பார்வை பெறுவதற்கு குடும்ப படிப்பு சமயங்கள் பெற்றோருக்கு உதவிபுரிகின்றன.—நீதிமொழிகள் 16:23; 20:5.
மாற்றியமைத்துக் கொள்ளுங்கள், விடாமுயற்சியுடன் இருங்கள்
உங்கள் குடும்ப படிப்புக்கான நேரம் வருகையில், ஒரு பிள்ளை கவனமாக இருந்து ஆர்வம் காண்பிப்பதையும், ஆனால் மற்றொரு பிள்ளையோ மனதை ஒருமுகப்படுத்தி பயனடைவதற்கு இனிமையாய்ப் பேசி இணங்க வைக்க வேண்டியிருப்பதையும் நீங்கள் காணலாம். “குடும்ப வாழ்க்கை அப்படித்தான் இருக்கும்! ஒரு பெற்றோராக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். ஆகையால் நீங்கள் படிப்பை விடாது தொடர்ந்து நடத்தி வந்தால், யெகோவா உதவி செய்து பலனளிப்பார்” என்று ஒரு கிறிஸ்தவ தாய் குறிப்பிடுகிறார்.
ஒரு இளைஞர் கவனம் செலுத்தும் நேரத்தின் அளவு அவருடைய வயதைப் பொருத்து மாறலாம். கெட்டிக்கார பெற்றோர் இதை கவனத்தில் எடுத்துக்கொள்கின்றனர். ஒரு தம்பதியருக்கு 6 முதல் 20 வயது வரையுள்ள ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். தந்தை மைக்கேல் இவ்வாறு சொல்கிறார்: “கேள்விகளுக்கு பதிலளிக்க வயதில் சிறியவர்களுக்கு முதலில் சந்தர்ப்பம் கொடுங்கள். பிறகு வயதில் பெரியவர்களாயிருப்பவர்கள் விவரங்களைக் கூட்டி அவர்கள் தயாரித்திருக்கும் குறிப்புகளை சொல்லட்டும்.” இவ்வாறு தங்கள் பிள்ளைகளை சாமார்த்தியமாக நடத்துவது, மற்றவர்கள் மீது கரிசனை காண்பிக்க வேண்டியதன் மதிப்பை கற்பிக்க உதவுகிறது. “எங்கள் மகன்களில் ஒருவன் விளங்கிக்கொள்கிறான், ஆனால் மற்றொரு பையனுக்குப் புரிய வைக்க ரொம்ப முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது” என்று மார்ட்டின் சொல்கிறார். “கிறிஸ்தவ பொறுமையையும் ஆவியின் மற்ற கனிகளையும் வெளிப்படுத்திக் காட்டுவதற்கு படிப்பு சமயங்கள் பயிற்சியளிக்கும் இடமாக ஆகிறதை காண்கிறேன்.”—கலாத்தியர் 5:22, 23; பிலிப்பியர் 2:4.
பிள்ளைகளின் வித்தியாசமான திறமைகளுக்கும் வளர்ச்சியின் அளவுக்கும் ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ள தயாராயிருங்கள். பெற்றோர் தங்களுடன் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை மிகவும் சிறியவர்களாய் இருந்த சமயத்தில் படித்தபோது உண்மையிலேயே மகிழ்ந்து அனுபவித்ததை இப்போது பருவ வயதிலிருக்கும் சைமனும் மார்க்கும் சொல்கிறார்கள். “ஒரு நாடகம் போல் வித்தியாசமான கதாபாத்திரங்களை நடித்துக் காட்டும்படி எங்கள் அப்பா சொல்லுவார்” என்று அவர்கள் நினைவுபடுத்தி சொல்கின்றனர். இரக்கம் காட்டிய ஒரு சமாரியனைப் பற்றிய உவமையை தன் மகன்களோடு சேர்ந்து மண்டியிட்டு கைகளை தரையில் ஊன்ற வைத்து நடித்துக் காட்டியதை அவர்களுடைய தகப்பன் நினைவுகூருகிறார். (லூக்கா 10:30-35) “அது நிஜமாக நடந்தது போல் இருந்தது, மிகவும் வேடிக்கையாகவும்கூட இருந்தது.”
அநேக பிள்ளைகளுக்கு வழக்கமாக நடத்தும் குடும்ப படிப்பில் இஷ்டமிருப்பதில்லை. இது திட்டமிட்டிருக்கும் படிப்பு நேரத்தில் தொடராதபடி பெற்றோரை தடுத்து நிறுத்த வேண்டுமா? இல்லை, நிச்சயமாகவே வேண்டியதில்லை. “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என்று நீதிமொழிகள் 22:15 ஒப்புக்கொள்கிறது. ஒரு ஒற்றைத் தாய் குடும்ப படிப்பு நடத்துகையில் பல சந்தர்ப்பங்களில் கவனச்சிதறல்கள் காரணமாய் படிப்புக்கு தடை ஏற்பட்டபோது, தன்னால் இனி தொடர முடியாது என்று எண்ணினாள். ஆனால் அவள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடத்தினாள். இப்போது அவளுடைய பிள்ளைகள் அவள் மீது அதிக மரியாதை வைத்திருக்கின்றனர், குடும்ப படிப்பை தவறாமல் விடாமுயற்சியுடன் நடத்தியதன் மூலம் அவள் காட்டிய அன்பையும் அக்கறையையும் அவர்கள் மதிக்கின்றனர்.
“தகப்பனில்லாத” பையன்களுக்கும் பெண்களுக்கும் உதவுதல்
கிறிஸ்தவ மூப்பர்கள் ‘தேவனுடைய மந்தையை மேய்க்க’ வேண்டியவர்களாய் இருக்கின்றனர். (1 பேதுரு 5:2, 3) சபைகளில் உள்ள குடும்பங்களை அவ்வப்போது சந்திக்கையில் தங்கள் கிறிஸ்தவ பொறுப்புகளை சரிவர செய்யும் பெற்றோரை பாராட்டுவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. ஒற்றைப் பெற்றோரின் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது? பெற்றோருக்கே பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
இல்லாத தகப்பனுடைய அல்லது தாயினுடைய ஸ்தானத்தை மூப்பர்கள் தாங்களாகவே ஏற்றுக்கொள்வார்களேயானால் கிறிஸ்தவ நியமங்களை ஆபத்துக்குள்ளாக்கும் சூழ்நிலைகளை தவிர்ப்பதற்கு கிறிஸ்தவ விவேகம் மூப்பர்களுக்கு உதவி செய்யும். ஒற்றைப் பெற்றோராயிருக்கும் கிறிஸ்தவ சகோதரியை இரண்டு சகோதரர்கள் சந்தித்தாலும், குடும்ப படிப்பு ஏற்பாட்டுக்கு ஆதரவு தருவதற்காக அவர்கள் செய்யும் ஏற்பாடுகளைக் குறித்து அவர்கள் எல்லா சமயங்களிலும் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எப்போதாவது, மூப்பர் தன் சொந்த குடும்பத்தோடு நடத்தும் படிப்பில் கலந்து கொள்ளும்படி பிள்ளைகளையும் (ஒற்றைப் பெற்றோரையும் சேர்த்து) அழைப்பது உற்சாகமூட்டுவதாயும் நடைமுறையானதாயும் இருக்கலாம். இருப்பினும், யெகோவா நம் பெரிய பரலோக தகப்பன் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அந்தத் தாய் தனிமையில் தன் பிள்ளைகளோடு படிப்பு நடத்தினாலும், அவர்களை வழிநடத்தி உதவுவதற்கு யெகோவா நிச்சயமாகவே அங்கிருக்கிறார்.
ஒரு இளம் நபர் ஆவிக்குரிய மனநிலை உள்ளவராக இருக்கிறார், ஆனால் அவருடைய பெற்றோரோ தங்கள் ஆவிக்குரிய பொறுப்புகளுக்கு ஓரளவே அக்கறை காண்பித்தோ அல்லது அக்கறையே காண்பிக்காமலோ இருந்தால் அந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது? யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் ஒருபோதும் மனம் வாடிப்போக வேண்டிய அவசியமில்லை. “ஏழையானவன் தன்னை உமக்கு [யெகோவா தேவனுக்கு] ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் [“தகப்பனில்லாத பையன்களுக்குச்,” NW] சகாயர் நீரே” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 10:14) பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்கையில் சபையிலுள்ள அன்பான மூப்பர்கள் பெற்றோரை உற்சாகப்படுத்துவதற்கு தங்களால் ஆன உதவியை செய்வர். அவர்கள் ஒரு குடும்பமாக கலந்து பேசும்படி ஆலோசனை கூறலாம், பின்னர் எவ்வாறு ஒன்றுசேர்ந்து படிப்பது என்பதன் பேரில் சில நடைமுறையான ஆலோசனைகளை அளிப்பதற்காக அந்தக் கலந்தாலோசிப்பில் கலந்துகொள்ளலாம். பைபிள் பெற்றோருக்கு அளித்திருக்கும் அந்தப் பொறுப்பை மூப்பர்கள் எடுத்துக்கொள்வதில்லை.
விசுவாசத்தில் இல்லாத பெற்றோரை உடைய பிள்ளைகளுக்கு ஆதரவு அதிகம் தேவை. அவர்களுடைய பெற்றோர் சம்மதித்தால் அவர்களை உங்கள் குடும்ப படிப்பில் சேர்த்துக்கொள்வது பயனுள்ளதாய் நிரூபிக்கும். இப்போது பெரியவராகி தனக்கே ஒரு குடும்பத்தை உடைய ராபர்ட், மூன்று வயதாய் இருக்கையிலேயே தன் பெற்றோரோடு கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜரானார். அவருடைய பெற்றோர் கிறிஸ்தவ சபையோடு கூட்டுறவுகொள்வதை நிறுத்திக்கொண்டாலும் அந்தக் கூட்டங்களுக்கு சென்றதைப் பற்றிய அதிகப் பிடித்தமான நினைவுகள் அவருக்கு இருந்தன. அவர் பத்து வயதாயிருந்தபோது, யெகோவாவின் சாட்சியாயிருந்த ஒரு பையனை சந்தித்தார், அவர் இவரை கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார். யெகோவாவின் சாட்சியாயிருந்த பையனின் பெற்றோர், ஆவிக்குரிய அநாதையான ராபர்ட்டை சந்தோஷமாய் ஏற்று கவனித்துக்கொண்டனர், பின்னர் அவரோடு படித்தனர். இந்த அன்பான கவனிப்பின் காரணமாக அவர் வெகு விரைவில் முன்னேற்றம் செய்தார், இப்போது சபையில் மூப்பராக சந்தோஷமாய் சேவை செய்கிறார்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தை எதிர்த்தாலும், பிள்ளைகள் தனிமையில் இருப்பதில்லை. யெகோவா உண்மையுள்ள பரலோக தகப்பனாக எப்போதும் இருக்கிறார். “தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனாயிருக்கிறார்” என்று சங்கீதம் 68:5 அறிவிக்கிறது. ஆவிக்குரியப் பிரகாரமாய் தகப்பனில்லாத பையன்களும் பெண்களும் யெகோவாவை ஜெபத்தில் அணுகலாம், அவர் அவர்களை ஆதரிப்பார். (சங்கீதம் 55:22; 146:9) தாய் போன்ற யெகோவாவின் அமைப்பு, மகிழ்ச்சி தரும் ஆவிக்குரிய உணவை தயாரித்து அளிக்க வேண்டிய அதன் பொறுப்பை மிகவும் ஊக்கத்தோடு நிறைவேற்றி வருகிறது; அந்த உணவு அதன் பிரசுரங்களின் மூலமாகவும் உலகமுழுவதுமுள்ள 85,000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகளில் நடக்கும் கூட்டங்களின் மூலமாகவும் பரிமாறப்படுகிறது. இவ்வாறு, நம் தகப்பனாகிய யெகோவாவிடமிருந்தும் தாய் போன்ற அவருடைய அமைப்பிடமிருந்தும் ஆவிக்குரிய உதவியை பெற்றுக்கொண்டு, ‘தகப்பனில்லாத’ பிள்ளைகளும்கூட ஓரளவு பைபிள் படிப்பை மகிழ்ந்து அனுபவிக்கலாம்.
தங்கள் பிள்ளைகளுடன் தவறாமல் குடும்ப பைபிள் படிப்புகளை நடத்தும் கிறிஸ்தவ பெற்றோர் பாராட்டுதலைப் பெற தகுதியுள்ளவர்கள். தங்கள் இளம் பிள்ளைகளை யெகோவாவின் வழிகளில் பயிற்றுவிப்பதற்காக விடாமுயற்சியுடன் இருக்கும் ஒற்றைப் பெற்றோர் விசேஷ கவனத்திற்கு தங்கள் முயற்சிகளுக்கு பாராட்டும் பெறத் தகுதியுள்ளவர்கள். (நீதிமொழிகள் 22:6) ஆவிக்குரியப் பிரகாரமாய் தகப்பனில்லாத பிள்ளைகள் மீது அக்கறை காண்பிக்கும் அனைவரும், இது நம் பரலோக தகப்பனாகிய யெகோவாவுக்கு பிரியம் என்பதை அறிந்திருக்கின்றனர். குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளை கவனித்துக்கொள்வது ஒரு பாரமான பொறுப்பு. ஆனால் ‘நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.’—கலாத்தியர் 6:9.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 23-ன் படம்]
குடும்பத்திலுள்ள இளைஞர் தங்கள் கவலைகளை பெற்றோருடன்
பகிர்ந்துகொள்வதற்கு குடும்ப படிப்பு ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை அளிக்கிறது
[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றி]
Harper’s