“கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை” உடையோராக நீங்கள் இருக்கிறீர்களா?
சாலொமோன் பூர்வ இஸ்ரவேலின் அரசரானபோது, அதற்கு தான் தகுதியற்றவராக உணர்ந்தார். ஆகையால் ஞானத்தையும் அறிவையும் தனக்குத் தந்தருளும்படி கடவுளிடம் விண்ணப்பித்தார். (2 நாளாகமம் 1:10) சாலொமோன் மேலுமாக இவ்வாறு ஜெபித்தார்: “உம்முடைய ஜனங்களை நியாயம் விசாரிப்பதற்குக் கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை உம்முடைய ஊழியனுக்கு நீர் தந்தருள வேண்டும்.” (1 இராஜாக்கள் 3:9, NW) சாலொமோனுக்கு ‘கீழ்ப்படிதலுள்ள இருதயம்’ இருந்தால், கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் அவர் பின்பற்றி நடந்து யெகோவாவின் ஆசீர்வாதத்தை அனுபவிப்பார்.
கீழ்ப்படிதலுள்ள இருதயம் பாரமான ஒன்றல்ல, மகிழ்ச்சிக்குரிய ஊற்றுமூலமாகவே அது இருக்கிறது. அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” (1 யோவான் 5:3) நிச்சயமாகவே, நாம் கடவுளுக்கு கீழ்ப்படிய வேண்டும். யெகோவா நம்முடைய மகத்துவமான சிருஷ்டிகராக இருக்கிறாரே! பூமியும் அதிலுள்ள எல்லாமும், சகல வெள்ளியும் பொன்னும்கூட அவருடையவை. ஆகவே, அவர்மீதான நம் அன்பை வெளிப்படுத்துவதற்கு நம்முடைய பண உடைமைகளைப் பயன்படுத்தும்படி அவர் அனுமதிக்கிறபோதிலும், பொருள் சம்பந்தமான எதையும் நாம் உண்மையில் கடவுளுக்கு கொடுக்க முடியாது. (1 நாளாகமம் 29:14) நாம் அவரை நேசிக்கவும், அவருடைய சித்தத்தைச் செய்துகொண்டு மனத்தாழ்மையுடன் அவரோடு நடக்கவும் வேண்டும் என யெகோவா எதிர்பார்க்கிறார்.—மீகா 6:8.
நியாயப்பிரமாணத்தில் மிகப் பிரதான கட்டளை எதுவென இயேசு கிறிஸ்துவிடம் கேட்கப்பட்டபோது, அவர் சொன்னார்: “உன் கடவுளாகிய யெகோவாவை உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் நேசிக்க வேண்டும். இதுவே மிகப் பிரதானமானதும் முதல் கட்டளையுமாக இருக்கிறது.” (மத்தேயு 22:36-38, NW) கடவுளுக்கு கீழ்ப்படிவது, இந்த அன்பை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு ஒரு வழியாக இருக்கிறது. ஆகையால் கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை யெகோவா நமக்குத் தரும்படி கேட்பது நம் ஒவ்வொருவருடைய ஜெபமாகவும் இருக்க வேண்டும்.
அவர்களுக்கு கீழ்ப்படிதலுள்ள இருதயம் இருந்தது
கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை உடையோராக இருந்தவர்களின் உதாரணங்கள் பைபிளில் பல உள்ளன. உதாரணமாக, உயிர் பாதுகாக்கப்படுவதற்காக மிகப் பெரிய பேழை ஒன்றைக் கட்டும்படி யெகோவா நோவாவிடம் சொன்னார். இது சுமார் 40 அல்லது 50 ஆண்டுகள் எடுத்த மிகப் பிரமாண்டமான ஒரு வேலையாக இருந்தது. இப்போதுள்ள சக்திவாய்ந்த எல்லா கருவிகளையும் மற்ற நவீன சாதனங்களையும் பயன்படுத்தினாலும், அத்தகைய பிரமாண்டமான ஒரு கட்டமைப்பை மிதப்பதற்கு ஏற்றவாறு கட்டுவது மாபெரும் பொறியியல் சாதனையாகவே இருக்கும். மேலும் நோவா ஜனங்களை எச்சரிக்க வேண்டியும் இருந்தது, அவர்கள் சந்தேகமில்லாமல் அவரைக் கேலி செய்து இகழ்ந்தார்கள். ஆனால் அவர் கடவுள் சொன்னதை இம்மி பிசகாமல் செய்து, முழு கீழ்ப்படிதலைக் காட்டினார். “நோவா அப்படியே செய்தான்” என்று பைபிள் சொல்லுகிறது. (ஆதியாகமம் 6:9, 22; 2 பேதுரு 2:5) பல ஆண்டுகளாக உண்மையுள்ள கீழ்ப்படிதலின் மூலம் யெகோவாவின்மீது தனக்கு இருந்த அன்பை நோவா காட்டினார். நம்மெல்லாருக்கும் எத்தகைய சிறந்த முன்மாதிரி!
கோத்திர பிதாவாகிய ஆபிரகாமையும் கவனியுங்கள். கல்தேயர் தேசத்தில் ஊர் என்ற செல்வச் செழிப்பான பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு முன்பின் அறியாத ஓர் தேசத்திற்கு இடம் மாறிச் செல்லும்படி கடவுள் அவரிடம் சொன்னார். ஆபிரகாம் மறுபேச்சின்றி உடனடியாகக் கீழ்ப்படிந்தார். (எபிரெயர் 11:8) மீதமுள்ள வாழ்நாட்காலமெல்லாம், அவரும் அவருடைய குடும்பத்தாரும் கூடாரங்களில் வாழ்ந்தார்கள். அந்த நாட்டில் அந்நியனாக பல ஆண்டுகள் வாழ்ந்த பின்பு, அவருக்கும் அவருடைய கீழ்ப்படிதலுள்ள மனைவியாகிய சாராளுக்கும் ஈசாக்கு என்ற பெயருடைய குமாரனை யெகோவா அருளினார். 100 வயதில் தான் பெற்ற இந்த மகனை ஆபிரகாம் எவ்வளவாய் நேசித்திருக்க வேண்டும்! சில ஆண்டுகளுக்குப் பின், ஈசாக்கை தகனபலியாகச் செலுத்தும்படி யெகோவா ஆபிரகாமைக் கேட்டார். (ஆதியாகமம் 22:1, 2) அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தானே ஆபிரகாமை வேதனைப்படுத்தியிருக்கும். இருந்தபோதிலும், அவர் யெகோவாவை நேசித்தார்; ஈசாக்கை கடவுள் உயிர்த்தெழுப்ப வேண்டியதாக இருந்தாலும், வாக்குப்பண்ணப்பட்ட வித்து ஈசாக்கின் மூலமாகவே வரும் என்ற விசுவாசம் அவருக்கு இருந்தது. எனவே அவர் கீழ்ப்படிய முற்பட்டார். (எபிரெயர் 11:17-19) எனினும் ஆபிரகாம் தன் குமாரனைக் கொல்லவிருந்த சமயத்தில், யெகோவா அவரைத் தடுத்து நிறுத்தி இவ்வாறு சொன்னார்: “நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்.” (ஆதியாகமம் 22:12) கடவுள்பயமுள்ள ஆபிரகாம், அவருடைய கீழ்ப்படிதலின் காரணமாக, “யெகோவாவின் சிநேகிதன்” என்று அறியப்படலானார்.—யாக்கோபு 2:23, NW.
இயேசு கிறிஸ்து, கீழ்ப்படிதல் என்ற காரியத்தில் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். மனிதனாக வருவதற்கு முன்னான அவருடைய வாழ்க்கையின்போது, பரலோகத்தில் இருக்கும் தம் பிதாவுக்கு கீழ்ப்படிதலுடன் சேவை செய்வதில் இன்பத்தைக் கண்டடைந்தார். (நீதிமொழிகள் 8:22-31) மனிதனாக, எல்லாவற்றிலும் இயேசு யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தார், அவருடைய சித்தத்தைச் செய்வதே எப்போதும் அவருக்கு இன்பமாக இருந்தது. (சங்கீதம் 40:8; எபிரெயர் 10:9) ஆகவே, இயேசு உண்மையுடன் இவ்வாறு சொல்ல முடிந்தது: “நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் . . . என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை.” (யோவான் 8:28, 29) கடைசியாக, யெகோவாவின் அரசதிகாரத்தை சரியென நிரூபிக்கவும், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தை மீட்கவும், இயேசு மனமுவந்து தம் உயிரை அளித்து, மிக தாழ்வுபடுத்தும் வேதனைமிக்க மரணத்திற்கு உட்பட்டார். மெய்யாகவே, “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் [“வாதனைக்குரிய கழுமரத்தின்,” NW] மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” (பிலிப்பியர் 2:8) கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை உடையவராக இருப்பதில் எப்பேர்ப்பட்ட ஒரு முன்மாதிரி!
அரைகுறையான கீழ்ப்படிதல் போதுமானதல்ல
கடவுளுக்கு கீழ்ப்படிந்ததாக சொல்லிக்கொண்ட எல்லாருமே உண்மையில் அவருக்கு கீழ்ப்படிந்தவர்களாக இருக்கவில்லை. பூர்வ இஸ்ரவேலின் அரசனான சவுலை கவனியுங்கள். பொல்லாத அமலேக்கியர்களை முற்றிலுமாக அழித்துப்போடும்படி கடவுள் அவருக்கு கட்டளையிட்டார். (1 சாமுவேல் 15:1-3) ஜனத்தார் அனைவரையும் சவுல் அழித்தபோதிலும், அவர்களுடைய அரசனைக் கொல்லாமல் விட்டு, அவர்களுடைய ஆடுமாடுகள் சிலவற்றை அவர் பாதுகாத்து வைத்தார். சாமுவேல் கேட்டார்: ‘நீர் யெகோவாவின் சொல்லைக் கேளாமல் இருந்ததென்ன’? பதிலளிப்பவராய் சவுல் சொன்னார்: “நான் யெகோவாவின் சொல்லையே கேட்டேன்; . . . [இஸ்ரவேல்] ஜனங்களோ . . . யெகோவாவுக்கு . . . பலிசெலுத்துவதற்கென்று . . . கொள்ளையிலே சிரேஷ்டமான ஆடுமாடுகளைப் பிடித்து வந்தார்கள்.” முழுமையாய்க் கீழ்ப்படிவதற்கான அவசியத்தை அறிவுறுத்துபவராய் சாமுவேல் இவ்வாறு பதிலளித்தார்: “யெகோவாவின் சொல்லுக்குக் கீழ்ப்படிவதைப்போல யெகோவாவுக்குப் பிரியம் ஆகுமோ தகனபலியும் இரத்தபலியுமே? பலியினும் உத்தமம் கீழ்ப்படிதலே, கடா நிணத்திலும் செவிகொடுத்தலே. கலகக்குணமே பில்லிசூனியமாம், முரட்டாட்டம் வீண் விக்கிரகாராதனைக்கு நேர்; யெகோவா திருமொழி நீர் தள்ளிடவே அரசராயிராமல் உமை அவர் தள்ளினார்.” (1 சாமுவேல் 15:17-23, தி.மொ.) கீழ்ப்படிதலுள்ள இருதயம் சவுலுக்கு இராததனால் எவ்வளவு அதிகத்தை அவர் இழந்தார்!
கீழ்ப்படிதலுள்ள இருதயத்திற்காக ஜெபித்திருந்த ஞானமுள்ள அரசன் சாலொமோனும்கூட தொடர்ந்து யெகோவாவுக்கு கீழ்ப்படிபவராக இருக்கவில்லை. கடவுளுடைய சித்தத்திற்கு மாறாக அவர், அன்னிய தேச பெண்களை மணம் செய்தார்; அவர்கள் அவரை கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்ய தூண்டினார்கள். (நெகேமியா 13:23, 26) சாலொமோன் தொடர்ந்து கீழ்ப்படிதலுள்ள இருதயமுள்ளவராக இராததனால் கடவுளுடைய தயவை இழந்தார். இது எத்தகைய எச்சரிக்கையாக நமக்கு இருக்கிறது!
யெகோவா, தம்முடைய மனித ஊழியர்களிடமிருந்து பரிபூரணத்தைக் கேட்பதாக இது அர்த்தப்படுகிறதில்லை. அவர், “நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:14) நாம் எல்லாருமே நிச்சயமாய் சில சமயங்களில் தவறு செய்வோம்; ஆனால் கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு இருதயப்பூர்வமான ஆவல் உண்மையில் நமக்கு இருக்கிறதா என்பதை அவர் அறிவார். (2 நாளாகமம் 16:9) மனித அபூரணத்தின் காரணமாக நாம் தவறு செய்துவிட்டால், மனஸ்தாபப்பட்டு திரும்புவோமெனில், கிறிஸ்து செலுத்தின மீட்பின் கிரய பலியினுடைய ஆதாரத்தின்பேரில் நாம் மன்னிப்பு கேட்டு, யெகோவா “பெருமளவில் மன்னிப்பார்” என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம். (ஏசாயா 55:7, NW; 1 யோவான் 2:1, 2) மேலும், ஆவிக்குரிய பிரகாரமாய் நாம் திரும்பவும் சுகமடைந்து, ஆரோக்கியமுள்ள விசுவாசத்தையும் கீழ்ப்படிதலுள்ள இருதயத்தையும் உடையோராக இருக்க, அன்புள்ள கிறிஸ்தவ மூப்பர்களின் உதவியும் தேவைப்படலாம்.—தீத்து 2:2; யாக்கோபு 5:13-15.
உங்களுடைய கீழ்ப்படிதல் எந்தளவு முழுமையானதாக இருக்கிறது?
யெகோவாவின் ஊழியர்களாக, நமக்கு கீழ்ப்படிதலுள்ள இருதயம் இருக்கிறதென, சந்தேகமில்லாமல் நம்மில் பெரும்பான்மையர் உணருகிறோம். நாம் ஒருவேளை இவ்வாறு காரணம் காட்டி சிந்திக்கலாம்: நான் ராஜ்ய பிரசங்க வேலையில் பங்குகொள்கிறேன் அல்லவா? நடுநிலை வகிப்பு போன்ற பெரும் பிரச்சினைகள் எழும்புகையில் நான் உறுதியாய் நிலைநிற்கிறேன் அல்லவா? அப்போஸ்தலன் பவுல் அறிவுரைக்கு இணங்க கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்கிறேன் அல்லவா? (மத்தேயு 24:14; 28:19, 20; யோவான் 17:16; எபிரெயர் 10:24, 25) உண்மைதான், பொதுவாக யெகோவாவின் ஜனங்கள் எல்லாருமே இத்தகைய முக்கியமான அம்சங்களில் முழுமனதுடன் கீழ்ப்படிகிறார்கள்.
ஆனால், அன்றாட விவகாரங்களில், ஒருவேளை அற்பமாகத் தோன்றும் சிறிய காரியங்களில் நம்முடைய நடத்தையைப் பற்றியதென்ன? இயேசு இவ்வாறு சொன்னார்: “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.” (லூக்கா 16:10) ஆகையால் நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: சிறு சிறு விஷயங்களில் அல்லது மற்றவர்களுக்கு கொஞ்சமும் தெரியவராத காரியங்களில் எனக்கு கீழ்ப்படிதலுள்ள இருதயம் இருக்கிறதா?
மற்றவர்கள் பார்வையில் படாதபடி வீட்டிற்குள் இருக்கும்போதுகூட தான் ‘உத்தம இருதயத்தோடு நடந்துகொண்டதாக’ சங்கீதக்காரன் காட்டினார். (சங்கீதம் 101:2) உங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கையில், நீங்கள் ஒருவேளை டெலிவிஷனில் திரைப்படத்தை பார்க்கத் தொடங்குவீர்கள். அங்கேதானே உங்கள் கீழ்ப்படிதல் பரீட்சிக்கப்படலாம். அந்தத் திரைப்படம் ஒழுக்கக்கேடு உட்பட்டதாய் இருக்கலாம். இந்நாட்களில் இந்த வகையான படங்கள்தான் காட்டப்படுகின்றன என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பார்ப்பீர்களா? அல்லது “வேசித்தனமும் மற்றெந்த அசுத்தமும், . . . இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது” என்ற பைபிள் கட்டளையின்படி செயல்பட உங்கள் கீழ்ப்படிதலுள்ள இருதயம் உங்களைத் தூண்டுவிக்குமா? (எபேசியர் 5:3-5) அந்தக் கதை எவ்வளவாய் ஆவலைத் தூண்டினாலும் டிவியை ஆஃப் செய்துவிடுவீர்களா? அல்லது ஒரு நிகழ்ச்சிநிரலில் வன்முறை காட்சி வந்தால் சானலை மாற்றிவிடுவீர்களா? “யெகோவாதாமே நீதிமானையும் பொல்லாதவனையும் சோதித்தறிகிறார், வன்முறையை விரும்புகிற எவனையும் அவருடைய ஆத்துமா நிச்சயமாகவே வெறுக்கிறது” என்று சங்கீதக்காரன் பாடினார்.—சங்கீதம் 11:5, NW.
கீழ்ப்படிதலுள்ள இருதயம் ஆசீர்வாதங்களை தருகிறது
நாம் இருதயப்பூர்வமாக உண்மையில் கடவுளுக்கு கீழ்ப்படிகிறோமா என்பதைக் காண, நம்மை நன்மைக்கேதுவாக ஆராய முடிகிற பல பகுதிகள் வாழ்க்கையில் நிச்சயமாகவே இருக்கின்றன. யெகோவாவின்மீதான நம் அன்பு, அவரைப் பிரியப்படுத்தவும், அவருடைய வார்த்தையாகிய பைபிளில் அவர் நமக்கு சொல்பவற்றைச் செய்யவும் நம்மைத் தூண்டுவிக்க வேண்டும். கீழ்ப்படிதலுள்ள இருதயம் யெகோவாவுடன் நல்ல உறவைக் காத்துவரும்படி நமக்கு உதவிசெய்யும். நிச்சயமாகவே, நாம் முழுமையாய்க் கீழ்ப்படிகிறவர்களாக இருந்தால், ‘நம்முடைய வாயின் வார்த்தைகளும் நம்முடைய இருதயத்தின் தியானமும் யெகோவாவின் சமுகத்தில் பிரீதியாயிருக்கும்.’—சங்கீதம் 19:14, NW.
யெகோவா நம்மை நேசிப்பதனால், நம்முடைய சொந்த நன்மைக்காகவே அவர் நமக்கு கீழ்ப்படிதலைக் கற்பிக்கிறார். கடவுளுடைய போதகத்திற்கு இருதயப்பூர்வமாய் முழு கவனத்தையும் செலுத்துவதன்மூலம் நாம் மிகுதியாய் நன்மையடைகிறோம். (ஏசாயா 48:17, 18) ஆகையால், நம் பரலோகத் தகப்பன் தம்முடைய வார்த்தை, தம்முடைய ஆவி, மற்றும் தம்முடைய அமைப்பின் மூலம் அருளுகிற உதவியை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்போமாக. நாம் இவ்வளவு நன்றாகப் போதிக்கப்படுவதனால், நமக்குப் பின் ஒரு குரல்: “வழி இதுவே, ஜனங்களே நீங்கள் இதில் நடங்கள்” என்று சொல்வதை நாம் கேட்பதுபோல் உள்ளது. (ஏசாயா 30:21, NW) பைபிள், கிறிஸ்தவ பிரசுரங்கள், மற்றும் சபை கூட்டங்களின் மூலம் யெகோவா நமக்கு போதித்து வருகையில், நாம் கவனம் செலுத்தி, நாம் கற்பதைப் பொருத்திப் பயன்படுத்தி, ‘எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருப்போமாக.’—2 கொரிந்தியர் 2:9.
கீழ்ப்படிதலுள்ள இருதயம் மிகுந்த சந்தோஷத்தையும் பல ஆசீர்வாதங்களையும் தரும். அது மனசமாதானத்தைக் தரும், ஏனெனில், நாம் யெகோவாவுக்குப் பிரியமுள்ளவர்களாக இருக்கிறோம் என்றும் அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறோம் என்றும் அறிவோம். (நீதிமொழிகள் 27:11) தவறு செய்யும்படி நாம் வசீகரிக்கப்படுகையில், கீழ்ப்படிதலுள்ள ஓர் இருதயம் நமக்குப் பாதுகாப்பாக இருக்கும். அப்படியானால், நிச்சயமாகவே நாம் நம்முடைய பரலோகத் தகப்பனுக்கு கீழ்ப்படிந்து இவ்வாறு ஜெபிக்க வேண்டும்: ‘கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை உம்முடைய ஊழியனுக்குத் தந்தருளும்.’
[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]
கிங் ஜேம்ஸ் மற்றும் ரிவைஸ்டு வர்ஷன்கள் அடங்கிய செல்ஃப்-ப்ரௌனன்ஸிங் எடிஷன் ஆஃப் த ஹோலி பைபிள்-லிலிருந்து எடுக்கப்பட்டது