பைபிள் படிப்பு—பயனுள்ளது, இனியது
‘அதைத் [தொடர்ந்து] தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்துகொள்வாய்.’—நீதிமொழிகள் 2:4, 5.
1. எதையாவது சாவகாசமாக வாசிப்பது எவ்விதமாக மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கலாம்?
மனமகிழ்ச்சிக்காக படிப்பவர்களே இன்று அதிகம். நல்ல புத்தகங்களைப் படிக்கையில் அது மன ஆரோக்கியத்திற்கு அருமருந்தாய் அமையலாம். பைபிள் வாசிப்புக்கான அட்டவணையை தவறாமல் பின்பற்றும் சில கிறிஸ்தவர்கள், அவ்வப்போது சங்கீதங்கள், நீதிமொழிகள், சுவிசேஷ பதிவுகள் அல்லது பைபிளின் வேறு சில புத்தகங்களையும் வாசித்து மகிழ்கின்றனர். அதில் காணப்படும் அழகிய மொழிநடையும் உயர்ந்த கருத்துகளும் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இன்னும் சிலர், யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்), விழித்தெழு! பத்திரிகை, இந்தப் பத்திரிகையில் வெளிவரும் வாழ்க்கை சரிதைகள், வரலாறு, புவியியல், இயற்கை ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை சாவகாசமாக வாசித்து மகிழ்கின்றனர்.
2, 3. (அ) ஆழமான ஆன்மீக தகவலை எந்த விதத்தில் பலமான ஆகாரத்திற்கு ஒப்பிடலாம்? (ஆ) படிப்பில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது?
2 வாசிப்புக்கும் படிப்புக்கும் வித்தியாசம் உண்டு, சாவகாசமாக பொழுதைக் கழிக்கையில் மேலோட்டமாக வாசிக்கலாம்; ஆனால் படிப்பைப் பொருத்ததிலோ மூளையை கசக்கிப் பிழிய வேண்டும். ஆங்கில தத்துவஞானி ஃபிரான்ஸிஸ் பேக்கன் இவ்வாறு எழுதினார்: “சில புத்தகங்களை கொஞ்சம் ருசிக்க வேண்டும், மற்றவற்றை விழுங்க வேண்டும், இன்னும் சிலவற்றையோ மென்று சாப்பிட்டு ஜீரணிக்க வேண்டும்.” பைபிளைப் பொருத்ததில் மூன்றாவது சொல்லப்பட்டதே பொருந்தும். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “[கிறிஸ்துவை முன்குறித்துக் காட்டிய, அரசனும் ஆசாரியனுமாக இருந்த மெல்கிசேதேக்கைப் பற்றி] நாம் விஸ்தாரமாய் பேசலாம். நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும். பலமான ஆகாரமானது நன்மைதீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.” (எபிரெயர் 5:11, 14) பலமான ஆகாரத்தை நன்கு மென்று சாப்பிட்டால்தான் ஜீரணிக்க முடியும். அதைப்போலவே ஆழமான ஆன்மீக கருத்தை ஆழ்ந்து சிந்தித்து, கிரகித்துக்கொள்கையில் அது பசுமரத்தாணியாய் நம் மனதில் பதியும்.
3 “வாசித்து ஆராய்கையில் மனதை அதில் ஈடுபடுத்துகிறோம்; இதன் மூலம் எதையாவது அறிந்துகொள்கிறோம், அல்லது புரிந்துகொள்கிறோம். இந்த செயல் அல்லது நடவடிக்கையே படிப்பு” என ஓர் அகராதி விளக்குகிறது. அப்படியென்றால் மேலோட்டமாக வாசித்து, சில வார்த்தைகளைக் கோடிடுவது போதாது. படிப்பு என்பதில் உழைப்பதும், மூளையை கசக்குவதும், பகுத்துணரும் ஆற்றலை பயன்படுத்துவதும் உட்பட்டுள்ளது. படிப்பதற்கு பிரயாசப்பட வேண்டும் என்றாலும் அதிலும் சந்தோஷம் உண்டு.
படிப்பு மகிழ்ச்சிதர . . .
4. சங்கீதக்காரன் சொல்கிறபடி கடவுளுடைய வார்த்தையை படிப்பது எவ்வாறு புத்துணர்ச்சியையும் புது தெம்பையும் அளிக்கலாம்?
4 கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதும் படிப்பதும் புத்துணர்ச்சியையும் புது தெம்பையும் அளிக்கிறது. “யெகோவாவின் பிரமாணம் குறைவற்றது, அது ஜீவனைப் புதுப்பிக்கிறது; யெகோவாவின் சாட்சியம் [“நினைப்பூட்டுதல்கள்,” NW] நம்பிக்கைக்குரியது, அது பேதையை ஞானியாக்குகிறது. யெகோவாவின் கட்டளைகள் நேர்மையானவை, அவை இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கும், யெகோவாவின் கற்பனை தூயது, அது கண்களைத் தெளிவிக்கிறது” என சங்கீதக்காரன் கூறினார். (சங்கீதம் 19:7, 8, திருத்திய மொழிபெயர்ப்பு) யெகோவாவுடைய சட்டங்களும் நினைப்பூட்டுதல்களும் புத்துணர்ச்சி அளிக்கின்றன, ஆன்மீக ரீதியில் நம்மை மேம்படுத்துகின்றன, உள்ளப்பூர்வமான மகிழ்ச்சியை தருகின்றன, யெகோவாவின் மகத்தான நோக்கங்களை நம் கண்கள் தெளிவாக கண்டு பிரகாசிக்க செய்கின்றன. எத்தனை சந்தோஷம்!
5. படிப்பு நமக்கு என்னென்ன விதங்களில் இன்பம் தரும்?
5 நம்முடைய வேலைக்கு கைமேல் பலன் கிடைக்கையில் அதை செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். அதைப்போலவே, படிப்பிலிருந்து மகிழ்ச்சிப் பெற புதிதாக கற்றுக்கொள்ளும் விஷயங்களை உடனடியாக பயன்படுத்த வேண்டும். யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.” (யாக்கோபு 1:25) கற்றுக்கொண்ட குறிப்புகளை உடனடியாக பின்பற்றினால் மிகுதியான மனநிறைவு நமக்கு கிடைக்கும். பிரசங்கிக்கையில் அல்லது கற்பிக்கையில் நம்மிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிப்பதற்காக ஆராய்ச்சி செய்வதும் நமக்கு இன்பம் தரும்.
கடவுளின் வார்த்தையிடம் பிரியத்தை வளர்த்தல்
6. சங்கீதம் 119-ஐ எழுதியவர் எவ்விதமாக யெகோவாவின் வார்த்தையில் தனக்கிருந்த பிரியத்தை வெளிப்படுத்தினார்?
6 எசேக்கியா ஒருவேளை சங்கீதம் 119-ஐ இயற்றியிருக்கலாம்; இளவரசராக இளம் வயதிலேயே இவர் யெகோவாவின் வார்த்தையில் தனக்கிருந்த பிரியத்தை அச்சங்கீதத்தில் வெளிப்படுத்தினார். கவிதை நடையில் அவர் கூறியதாவது: “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன், உமது வசனத்தை மறவேன். உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமாயிருக்கிறது . . . நான் பிரியமாயிருக்கிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்கும் கிடைப்பதாக, உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின் மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.”—சங்கீதம் 119:16, 24, 47, 77, 174.
7, 8. (அ) ஓர் அகராதியின்படி, கடவுளுடைய வார்த்தையில் ‘பிரியமாயிருப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) யெகோவாவின் வார்த்தையை நாம் நேசிப்பதை எவ்வாறு காட்டலாம்? (இ) யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை வாசிப்பதற்கு முன் எஸ்றா எவ்விதமாக தன்னை பக்குவப்படுத்திக் கொண்டார்?
7 சங்கீதம் 119-ல் ‘பிரியமாயிருக்கிறேன்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கு, எபிரெய வேதாகமத்தின் ஓர் அகராதி இவ்வாறு விளக்கமளிக்கிறது: “16-ம் வசனத்தில் ‘பிரியமாயிருக்கிறேன்’ என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை, மனமகிழ்ச்சியாய் இருப்பதற்கும் . . . தியானிப்பதற்கும் இணையான [வினைச் சொற்களை] குறிக்கிறது . . . இந்த விதத்தில் அது வரிசைப்படுத்தப்படுகிறது: களிகூரு, தியானம் செய், மகிழ்ச்சியாயிரு . . . யாவேயின் வார்த்தையில் களிகூருவதற்கு அதை நோக்கத்தோடு ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. . . . இந்த வார்த்தையின் அர்த்தத்தில் உணர்ச்சிகளும் உட்பட்டுள்ளன.”a
8 இதயமே நம் உணர்ச்சிகளின் பிறப்பிடம். எனவே யெகோவாவின் வார்த்தையை இதயப்பூர்வமாய் நேசிக்க வேண்டும். பைபிளில் சில பகுதிகளை நிறுத்தி நிதானமாக வாசித்துப் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆழமான ஆன்மீக விஷயங்களை கருத்தூன்றி கவனத்துடன் படிக்க வேண்டும், நம் மனம் அதில் லயிக்க வேண்டும். இதற்கு தியானிப்பதும் ஜெபிப்பதும் அவசியம். கடவுளுடைய வார்த்தையை வாசிக்கும்போதும் படிக்கும்போதும் எஸ்றாவைப் போல நம் இதயத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அவரைக் குறித்து பதிவுசெய்யப்பட்டுள்ளது இதுவே: “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.” (எஸ்றா 7:10) எஸ்றா தன் இருதயத்தை மூன்று காரணங்களுக்காக பக்குவப்படுத்தி இருந்தார்: படிப்பது, அதன்படி நடப்பது, மற்றவர்களுக்கு கற்பிப்பது. அவரைப் போலவே நாமும் செய்ய வேண்டும்.
படிப்பு வணக்கத்தின் பாகம்
9, 10. (அ) சங்கீதக்காரன் எவ்வாறெல்லாம் யெகோவாவின் வார்த்தையை தியானித்தார்? (ஆ) ‘தியானிப்பது’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வினைச்சொல்லின் அர்த்தம் என்ன? (இ) பைபிள் வாசிப்பை “வணக்கத்தின் பாகமாக” கருதுவது ஏன் முக்கியம்?
9 யெகோவாவின் கட்டளைகள், கற்பனைகள், நினைப்பூட்டுதல்கள் ஆகியவற்றை தியானிப்பதாக சங்கீதக்காரன் கூறுகிறார். அவர் இவ்வாறு பாடுகிறார்: “உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். . . . நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம். உம்முடைய சாட்சிகள் [“நினைப்பூட்டுதல்கள்,” NW] என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.” (சங்கீதம் 119:15, 48, 97, 99) யெகோவாவின் வார்த்தையை ‘தியானிப்பது’ என்றால் என்ன?
10 ‘தியானிப்பது’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வினைச்சொல், “ஆழ்ந்து சிந்தி, லயித்துவிடு,” “மனதில் திரும்பவும் அசைபோடு” என்றும் அர்த்தப்படுத்துகிறது. “கடவுளுடைய செயல்களையும் . . . கடவுளுடைய வார்த்தையையும் அமைதியாய் யோசிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.” (தியாலஜிக்கல் உவர்ட்புக் ஆஃப் தி ஓல்டு டெஸ்டமென்ட்) “தியானம்” என்பதற்குரிய பெயர்ச்சொல், “சங்கீதக்காரனின் தியானத்தையும்” கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை “அவர் பிரியமாய் படித்ததையும்” “வணக்க முறை”யாக கருதியதையும் குறிப்பிடுகிறது. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதை நம் வணக்க முறை என கருதுகையில் அதன் முக்கியத்துவம் நமக்குப் புரிகிறது. ஆகவே அதை ஊக்கமாக, ஜெப சிந்தையோடு படிக்க வேண்டும். படிப்பு நம்முடைய வணக்கத்தின் பாகம்; மேம்பட்ட விதத்தில் கடவுளை வணங்குவதற்கான வழி.
கடவுளுடைய வார்த்தையை ஆழமாக ஆராய்தல்
11. யெகோவா ஆழமான ஆன்மீக கருத்துக்களை தம்முடைய ஜனங்களுக்கு எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?
11 பணிவும் பிரமிப்பும் ஒருசேர சங்கீதக்காரன் இவ்வாறு உணர்ச்சி பொங்க கூறினார்: “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.” (சங்கீதம் 92:5) யெகோவா, உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாருக்கு “தமது ஆவி”யைத் தந்து தம்முடைய ஜனங்களுக்கு ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்; இதையே, ‘தேவனுடைய ஆழங்கள்’ என அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 2:10; மத்தேயு 24:45, NW) அனைவருக்கும் ஆன்மீக போஷாக்கை அளிக்க அடிமை வகுப்பார் ஊக்கத்தோடு முயற்சி செய்கின்றனர்; புதியவர்களுக்கு “பாலை”யும் ‘பூரண வயதுள்ளவர்களுக்கு’ “பலமான ஆகார”த்தையும் அளித்து வருகின்றனர்.—எபிரெயர் 5:11-14.
12. அடிமை வகுப்பார் விளக்கம் தந்திருக்கும் ‘தேவனுடைய ஆழமான காரியங்களில்’ ஒன்றை உதாரணமாக சொல்லுங்கள்.
12 “தேவனுடைய ஆழங்களைப்” புரிந்துகொள்வதற்கு, அவருடைய வார்த்தையை ஜெபசிந்தையோடு படித்து, ஆழ்ந்து சிந்திக்கவும் வேண்டும். உதாரணமாக, யெகோவா நீதியையும் இரக்கத்தையும் ஒரே சமயத்தில் எவ்விதமாக வெளிக்காட்ட முடியும் என்பதை விவரிக்கும் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவர் இரக்கம் காண்பிக்கையில் நீதியைக் கொஞ்சம் விட்டுக்கொடுக்கிறார் என்பது அர்த்தமல்ல; அதற்கு பதிலாக, கடவுளின் இரக்கம் அவருடைய நீதியையும் அன்பையும் வெளிப்படுத்துகிறது. பாவம் செய்த ஒருவரை நியாயந்தீர்க்கையில், தம்முடைய மகனின் கிரய பலியின் அடிப்படையில் அவருக்கு இரக்கம் காட்ட முடியுமா என்பதை யெகோவா முதலில் பார்க்கிறார். பாவம் செய்தவர் மனந்திரும்பாமல், கலகம் செய்தால், இரக்கத்திற்கு இடமின்றி கடவுள் நீதியாக நடவடிக்கை எடுக்கிறார். எப்படியிருந்தாலும், தம்முடைய உன்னத நியமங்களை அவர் விட்டுக்கொடுக்க மாட்டார்.b (ரோமர் 3:21-26) ‘ஆ! தேவனுடைய ஞானத்தின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!’—ரோமர் 11:33.
13. இதுவரையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் ஆன்மீக சத்தியங்களின் “தொகைக்கு” நம் மதித்துணர்வை எவ்வாறு காட்டலாம்?
13 யெகோவா தம்முடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்வதால் சங்கீதக்காரனைப் போலவே நாமும் பேரானந்தம் அடைகிறோம். “தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்” என தாவீது எழுதினார். (சங்கீதம் 139:17, 18) நித்தியத்திற்கும் யெகோவா நமக்கு கணக்கிலடங்கா கருத்துக்களை வெளிப்படுத்தப் போகிறார்; இன்று நாம் அறிந்திருப்பதோ அதில் ஒரு துளி எனலாம். இருந்தபோதிலும் இதுவரையாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் அருமையான ஆன்மீக சத்தியங்களின் “தொகை”யை நாம் நெஞ்சார நேசிக்கிறோம். இன்னும் கடவுளுடைய வார்த்தையின் தொகையை அல்லது விஷயத்தை ஆழமாக ஆராய்ந்துகொண்டே இருப்போம்.—சங்கீதம் 119:160, NW அடிக்குறிப்பு.
முயற்சி தேவை, பயனுள்ள உபகரணங்களும் தேவை
14. கடவுளுடைய வார்த்தையை படிக்கையில் முயற்சி தேவை என்பதை நீதிமொழிகள் 2:1-6 எவ்வாறு வலியுறுத்துகிறது?
14 பைபிளை ஆழமாக ஆராய்ந்து படிக்க முயற்சி எடுக்க வேண்டும். நீதிமொழிகள் 2:1-6-ஐ கவனமாக வாசித்துப் பார்த்தால் இந்த உண்மை புலனாகும். கடவுளுடைய அறிவையும் ஞானத்தையும் பகுத்துணர்வையும் பெற்றுக்கொள்ள எந்தளவு முயற்சி தேவை என்பதை வலியுறுத்த, ஞானியாகிய சாலொமோன் ராஜா எத்தனை வினைச்சொற்களைப் பயன்படுத்துகிறார் என்பதை கவனியுங்கள். அவர் இவ்வாறு எழுதினார்: ‘என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.’ ஆம், பயனுள்ள படிப்புக்கு ஆராய்ச்சி அவசியம்; மறைந்திருக்கும் புதையலைத் தேடுவதுபோல் தோண்டித் துருவுவதும் அவசியமாகும்.
15. சிறந்த வழிமுறைகளைப் பின்பற்றி படிக்க வேண்டிய அவசியத்தை பைபிளிலுள்ள எந்த உதாரணம் வலியுறுத்திக் காட்டுகிறது?
15 படிப்பு ஆன்மீக ரீதியில் அதிக பயனளிக்க, படிப்பதற்கான சிறந்த வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ‘இரும்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைப் பிரயோகிக்க வேண்டியதாகும்’ என்று சாலொமோன் எழுதினார். (பிரசங்கி 10:10) செதுக்கு கருவி மழுங்கிப் போயிருந்தால் அல்லது அதை பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தவில்லை என்றால் தொழிலாளியின் சக்தியும் விரயமாகும், வேலையும் மட்ட ரகமாக இருக்கும். அதைப் போலவே, நாம் எந்த வழிமுறையைப் பயன்படுத்தி எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதைப் பொறுத்து, அவற்றால் கிடைக்கும் பயன்களும் வேறுபடும். நல்ல படிப்பு பழக்கத்திற்கான அருமையான ஆலோசனைகள் தேவராஜ்ய ஊழியப்பள்ளி துணைநூல் புத்தகத்தில் படிப்பு 7-ல் உள்ளன.c
16. ஆழ்ந்து படிப்பதற்கு உதவியாக என்ன நடைமுறையான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
16 ஒரு தொழிலாளி தன் வேலையை ஆரம்பிப்பதற்கு முன் தனக்கு தேவையான எல்லா கருவிகளையும் தன் பக்கத்தில் தயாராக வைத்துக்கொள்கிறார். அதைப் போலவே, படிப்பதற்காக உட்காருவதற்கு முன்பே நம்முடைய தனிப்பட்ட நூலகத்திலிருந்து படிப்புக்கு உதவும் மற்ற புத்தகங்களையும் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். படிப்பும் ஓர் உழைப்புதான், அதுவும் மூளையைக் கசக்கிப் பிழிய வேண்டிய வேலை; ஆகவே உட்கார்ந்து படிக்கும் விதத்திலும் ஒழுங்கு வேண்டும். நம் மனது விழிப்புடனிருக்க விரும்பினால் படுக்கையில் படுத்துக்கொண்டு படிப்பதற்கு அல்லது சொகுசாக சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து படிப்பதற்கு பதிலாக மேசை அல்லது டெஸ்க்கின் முன் உட்கார்ந்து படிப்பது நல்லது. கொஞ்ச நேரம் கருத்தூன்றி படித்துவிட்டு, மாறுதலுக்காக சற்று வெளியே எழுந்து போய் காற்று வாங்கிவிட்டு வருவது பிரயோஜனமாக இருக்கும்.
17, 18. உங்களிடமிருக்கும் ஒப்பற்ற பிரசுரங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கு உதாரணங்களைக் கொடுங்கள்.
17 படிப்புக்கு உதவும் ஒப்பற்ற பிரசுரங்கள் நம்மிடமிருக்கின்றன. இதில் அதிமுக்கியமானது புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளாகும். இந்த பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ 37 மொழிகளில் கிடைக்கிறது. புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் ஸ்டான்டர்டு எடிஷனில் ஒத்துவாக்கிய வசனங்களும் “பைபிள் புத்தகங்களின் அட்டவணை”யும் உள்ளன. இதிலிருந்து எழுத்தாளரின் பெயர், எழுதப்பட்ட இடம், காலப்பகுதி ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம். அதில் பைபிள் வார்த்தைகளின் இன்டெக்ஸ், பிற்சேர்க்கை, வரைபடங்கள் ஆகியவையும் உள்ளன. இதே பைபிள் பெரிய பதிப்பாக ஒத்துவாக்கிய பைபிள் என சில மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது; இப்பைபிள்களில் முந்தைய பைபிளிலுள்ள அம்சங்களோடு இன்னும் சில சிறப்பு அம்சங்களும் உள்ளன. இன்டெக்ஸுடன் கூடிய விரிவான அடிக்குறிப்புகளும் இவற்றில் உண்டு. கடவுளுடைய வார்த்தையை இன்னும் ஆழமாக ஆராய, உங்களுடைய மொழியில் பிரசுரிக்கப்பட்டுள்ள எல்லா பிரசுரங்களையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறீர்களா?
18 படிப்புக்குப் பயன்படும் மற்றொரு ஈடிணையற்ற புத்தகம் இரண்டு தொகுப்புகள் உள்ள, வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற பைபிள் கலைக்களஞ்சியமாகும். உங்களுக்கு வாசிக்க தெரிந்த மொழியில் இந்தப் புத்தகம் பிரசுரிக்கப்பட்டிருந்தால், அதை எப்போதும் படிப்பில் உபயோகிப்பது பயனளிக்கும். பெரும்பாலான பைபிள் விஷயங்களுக்குத் தேவையான அனைத்து தகவலும் இதில் காணப்படும். அதேவிதமாக பயனளிக்கும் மற்றொரு பிரசுரம் ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியால் ஏவப்பட்டது, பயனுள்ளது’ என்ற ஆங்கில புத்தகமாகும். பைபிளிலுள்ள ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன், ‘வேதவாக்கியங்களெல்லாம்’ புத்தகத்தில் அந்தப் பைபிள் புத்தகத்தைப் பற்றிய புவியியல், வரலாற்று பின்னணிகளையும், அதன் பொருளடக்க சுருக்கத்தையும், பயனையும் வாசித்து அறிந்துகொள்வது பிரயோஜனமாய் இருக்கும். அச்சிடப்பட்ட அநேக புத்தகங்களைத் தவிர, நமக்கு கிடைக்கும் மற்றொரு உபகரணம் கம்ப்யூட்டரில் உவாட்ச்டவர் லைப்ரரி ஆகும். இப்போது இது ஒன்பது மொழிகளில் கிடைக்கிறது.
19. (அ) பைபிள் படிப்புக்காக நமக்கு ஏன் சிறந்த உபகரணங்களை யெகோவா தந்திருக்கிறார்? (ஆ) பைபிள் வாசிப்புக்கும் படிப்புக்கும் எது தேவை?
19 யெகோவா, பூமியில் இருக்கும் தம்முடைய ஊழியர்கள் ‘தம்மை அறியும் அறிவை தேடி கண்டுபிடிப்பதற்கு’ உதவும் விதத்தில் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலமாக இந்த எல்லாவற்றையும் அளித்திருக்கிறார். (நீதிமொழிகள் 2:4, 5) நல்ல படிப்பு பழக்கங்கள் இருந்தால் யெகோவாவை நாம் இன்னும் நன்கு அறிந்துகொள்ள முடியும்; அவரோடு அன்னியோன்யமான உறவை அனுபவித்து மகிழ முடியும். (சங்கீதம் 63:1-8) ஆம், படிப்பும் ஒருவிதத்தில் உழைப்புதான், ஆனால் அந்த உழைப்பு வீண்போகாது; அது பயனுள்ளது, இனியது. அதை அனுபவிக்க நேரம் தேவை. ‘பைபிள் வாசிப்பதற்கும் தனிப்பட்ட படிப்புக்கும் நேரத்துக்கு எங்கே போவேன்?’ என்பதாக ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். இந்தத் தொடரின் கடைசி கட்டுரை அதற்கான பதிலை உங்களுக்கு அளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a நியூ இன்டர்நேஷனல் டிக்ஷ்னரி ஆஃப் ஓல்டு டெஸ்டமென்ட் தியாலஜி அண்ட் எக்ஸிஜீஸஸ், புத்தகம் 4, பக்கங்கள் 205-7.
b 1998, ஆகஸ்ட் 1, காவற்கோபுரம் பக்கம் 13, பாரா 7-ஐ காண்க. பைபிள் படிப்பு திட்டத்திற்காக, அந்த இதழிலுள்ள இரண்டு படிப்பு கட்டுரைகளையும் உவாட்ச்டவர் பைபிள் சொஸைட்டி வெளியிட்டுள்ள வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற பைபிள் கலைக்களஞ்சியத்தில் “நியாயம்,” “இரக்கம்,” “நீதி” ஆகிய தலைப்புகளின் கீழுள்ள விஷயங்களையும் நீங்கள் அலசிப் பார்க்க விரும்பலாம்.
c உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி வெளியிட்டது. இந்தப் புத்தகம் உங்கள் மொழியில் இல்லையென்றால், பின்வரும் காவற்கோபுரம் இதழ்களில், படிப்பதற்கான வழிமுறைகளுக்கு அருமையான ஆலோசனைகளை காணலாம்: ஆகஸ்ட் 15, 1993, பக்கங்கள் 13-17; ஆங்கிலத்தில் மே 15, 1986, பக்கங்கள் 19-20.
மறுபார்வை கேள்விகள்
• தனிப்பட்ட படிப்பிலிருந்து புத்துணர்ச்சியையும் புது தெம்பையும் பெற்றுக்கொள்ள என்ன செய்யலாம்?
• சங்கீதக்காரனைப் போல நாம் எவ்வாறு யெகோவாவின் வார்த்தையில் “பிரியமாயிருக்கலாம்,” அதை “தியானிக்கலாம்?”
• கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கு முயற்சி தேவை என்பதை நீதிமொழிகள் 2:1-6 எவ்வாறு காட்டுகிறது?
• யெகோவா என்ன ஒப்பற்ற உபகரணங்களைத் தந்திருக்கிறார்?
[பக்கம் 14-ன் படம்]
அமைதியாக தியானிப்பதும் ஜெபிப்பதும் கடவுளுடைய வார்த்தையில் பிரியத்தை வளர்க்க உதவும்
[பக்கம் 17-ன் படங்கள்]
கடவுளுடைய வார்த்தையை ஆழமாக ஆராய்வதற்கு உதவும் உபகரணங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறீர்களா?