திருத்தமான அறிவில் வளருங்கள் —‘மனோவாஞ்சையுடன்’
யெகோவாவின் ஊழியர்கள் எல்லாருமே அவருடைய பாராட்டைப் பெற மிகுந்த ஆவல் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். அதைப் பெறுவதற்காக, நம்முடைய விசுவாசத்தை இன்னும் பலப்படுத்திக் கொள்ளவும் பக்திவைராக்கியத்தோடு பரிசுத்த சேவை செய்யவும் நாம் விரும்புகிறோம். என்றாலும் அப்போஸ்தலன் பவுல் ஓர் ஆபத்தை குறித்து எச்சரிக்கிறார்; அவருடைய காலத்தில் வாழ்ந்த யூதர்கள் சிலர் இந்த ஆபத்தில் சிக்கியிருந்தார்கள். அதாவது, ‘தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமிருந்தது . . . ஆகிலும் அது [திருத்தமான] அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.’ (ரோ. 10:2) நம்முடைய விசுவாசமும் நம் வழிபாடும் வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு செய்வதாக இருக்கக்கூடாது என்பதை இது காட்டுகிறது. நம் படைப்பாளரையும் அவருடைய சித்தத்தையும் பற்றிய திருத்தமான அறிவு நமக்கு அவசியம்.
கடவுளுடைய பாராட்டைப் பெறும் விதத்தில் நாம் நடந்துகொள்வதற்கும் திருத்தமான அறிவை அடைய விரும்புவதற்கும் சம்பந்தமிருப்பதை பிற புத்தகங்களிலும் பவுல் எழுதியிருக்கிறார். கிறிஸ்துவின் சீஷர்கள், ‘சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற [திருத்தமான] அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்வதற்கு’ ‘அவருடைய சித்தத்தை அறிகிற [திருத்தமான] அறிவினாலே நிரப்பப்படும்படி’ அவர் ஜெபித்தார். (கொலோ. 1:9, 10) நாம் ‘திருத்தமான அறிவை’ பெறுவது ஏன் அவ்வளவு முக்கியம்? அந்த அறிவில் நாம் ஏன் வளர வேண்டும்?
விசுவாசத்திற்கு அடிப்படை
கடவுளையும் பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய சித்தத்தையும் பற்றிய திருத்தமான அறிவைப் பெறுவதே நம் விசுவாசத்திற்கு அடிப்படை. இந்த உண்மையான அறிவைப் பெறவில்லை என்றால், யெகோவா மீதுள்ள நம் விசுவாசம் தொட்டால் இடிந்து விழுகிற மணல் வீடுகள் போலவே இருக்கும். ஆகவே, ‘பகுத்தறியும்’ திறனோடு கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்யும்படியும் நம் ‘மனதைப் புதிதாக்கும்படியும்’ பவுல் நம்மை ஊக்குவிக்கிறார். (ரோ. 12:1, 2) பைபிளைத் தவறாமல் வாசிப்பது இதற்கு உதவும்.
போலந்து நாட்டில் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்கிற ஈவா இவ்வாறு சொல்கிறார்: “கடவுளுடைய வார்த்தையை நான் தவறாமல் படிக்கவில்லை என்றால், யெகோவாவைப் பற்றிய திருத்தமான அறிவில் வளர முடியாமல் போய்விடும். என்னுடைய கிறிஸ்தவ அடையாளமே சீக்கிரத்தில் மாற ஆரம்பித்துவிடும், கடவுள் மீதுள்ள என் விசுவாசமும் குறைந்துவிடும். இதனால், அவருக்கும் எனக்கும் இடையேயுள்ள பொக்கிஷம் போன்ற பந்தமே முறிந்துவிடும்.” அப்படிப்பட்ட ஒரு நிலை நமக்கு நேரிடவே கூடாது! யெகோவாவைப் பற்றிய திருத்தமான அறிவில் அதிகரித்து அதன்மூலம் அவருடைய பாராட்டைப் பெற்ற ஒருவரது உதாரணத்தை நாம் இப்போது பார்க்கலாம்.
‘உமது சட்டத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்!’
நம் பைபிளில் 119-ஆம் சங்கீதமாக இருப்பது கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு பாடலாகும். இது, யெகோவாவின் வேதம், அதாவது சட்டம், அவருடைய சாட்சிகள், அதாவது நினைப்பூட்டுதல்கள், கட்டளைகள், கற்பனைகள், நீதிநியாயங்கள் ஆகியவற்றைப் பற்றிய சங்கீதக்காரனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. ‘உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; . . . உம்முடைய சாட்சிகள் [நினைப்பூட்டுதல்கள்] எனக்கு இன்பமாயிருக்கிறது’ என அவர் எழுதினார். “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்” என்றும் அவர் எழுதினார்.—சங். 119:16, 24, 47, 48, 77, 97.
‘பிரியம்’ என்ற வார்த்தை கடவுளுடைய வார்த்தையின்பேரில் தியானிப்பதைக் குறிக்கிறது, சொல்லப்போனால் தியானிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதைக் குறிக்கிறது. கடவுளுடைய சட்டத்தைப் படிப்பதில் சங்கீதக்காரனுக்கு எந்தளவு வாஞ்சை இருந்தது என்பதை இந்த வார்த்தை வலியுறுத்துகிறது. அந்த வாஞ்சை இருதயத்திலிருந்து பொங்கியெழுந்த உணர்ச்சியால் மட்டுமே ஏற்பட்டதல்ல. மாறாக, அந்தச் சட்டத்தைத் ‘தியானிப்பதில்’ அதாவது யெகோவாவின் வார்த்தைகளை நுட்பமாகப் புரிந்துகொள்வதில் அவருக்கு அளவிலா ஆசை இருந்ததே அதற்குக் காரணம். கடவுளையும் அவருடைய சித்தத்தையும் பற்றி முடிந்தவரை திருத்தமாக அறிந்துகொள்ள அவர் விரும்பினார் என்பதை அவருடைய மனப்பான்மையிலிருந்து புரிந்துகொள்கிறோம்.
சங்கீதக்காரன் கடவுளுடைய வார்த்தையை உள்ளப்பூர்வமாக நேசித்தார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ‘அதேபோல நானும் நேசிக்கிறேனா? ஒவ்வொரு நாளும் பைபிளிலிருந்து ஒரு பகுதியை வாசித்து, ஆராய்ச்சி செய்வதில் இன்பம் காண்கிறேனா? கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாக வாசிக்கிறேனா, அதற்கு முன் ஜெபம் செய்கிறேனா?’ போன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளலாம். இந்தக் கேள்விகளுக்கு உள்ளப்பூர்வமாக ஆம் என்று பதில் சொல்கிறோமென்றால், கடவுளைப் பற்றிய ‘திருத்தமான அறிவில் வளருகிறோம்’ என்று அர்த்தம்.
சகோதரி ஈவா சொல்வதாவது: “தனிப்பட்ட படிப்பில் முன்னேற நான் சதா முயற்சி செய்கிறேன். ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேடைப் பெற்றது முதற்கொண்டு அதைப் பயன்படுத்தியே எப்போதும் படிக்கிறேன். வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) மற்றும் பிற ஆராய்ச்சி புத்தகங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்கிறேன்.
ஏராளமான குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கும் வோய்சிக், மோகாஸாட்டா தம்பதியரின் உதாரணத்தையும் கவனியுங்கள். தங்களுடைய அட்டவணையில் தனிப்பட்ட படிப்புக்கும் அவர்களால் எப்படி நேரம் ஒதுக்க முடிகிறது? “முடிந்தவரை தனித்தனியாக பைபிளைப் படிப்பதற்கு நேரம் ஒதுக்குகிறோம். படித்தவற்றில் ஆர்வமூட்டுகிற சுவாரஸ்யமான குறிப்புகள் இருந்தால், அவற்றை குடும்பப் படிப்பின்போதும் மற்ற சமயங்களிலும் குடும்பத்தாரிடம் சொல்கிறோம்” என்கிறார்கள். தனிப்பட்ட விதமாக கருத்தூன்றி படிப்பது அவர்களுக்கு அளவிலா சந்தோஷத்தைத் தருவதோடு ‘திருத்தமான அறிவில் வளருவதற்கும்’ உதவுகிறது.
திறந்த மனதோடு படியுங்கள்
‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படுவதும், சத்தியத்தை அறிகிற [திருத்தமான] அறிவை அடைவதும்’ கடவுளுடைய சித்தம் என்பதை கிறிஸ்தவர்களான நாம் அறிந்திருக்கிறோம். (1 தீ. 2:3, 4) இது, பைபிளை வாசித்து அதை ‘உணர்ந்துகொள்ள’ முயலுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. (மத். 15:10) இதற்கு ஒரு வழி, திறந்த மனதுடன் படிப்பதாகும். பூர்வகால பெரோயா பட்டணத்தாருக்கு பவுல் நற்செய்தியை அறிவித்தபோது அவர்கள் இந்த மனப்பான்மையைத்தான் காட்டினார்கள். அவர்கள் ‘மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்தார்கள்.’—அப். 17:11.
நாமும் பெரோயா மக்களைப்போல மனோவாஞ்சையுடனும் எந்தக் கவனச் சிதறல்களுமின்றி திறந்த மனதுடன் பைபிளைப் படிக்கிறோமா? பைபிளை படிப்பதில் முன்பு அவ்வளவு ஆர்வம் காட்டாதிருந்த ஒரு கிறிஸ்தவர், பெரோயா மக்களைப் பின்பற்றுவதற்கு உழைக்கலாம். சிலர் முதிர்வயதடையும்போது வாசிப்பதையும் ஆழ்ந்து படிப்பதையும் குறைத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு உண்மை கிறிஸ்தவர் அப்படிச் செய்யக் கூடாது. ஒருவர் எந்த வயதினராக இருந்தாலும், கவனச் சிதறல் இல்லாமல் படிக்க முடியும். நீங்கள் வாசிக்கையில், மற்றவர்களுக்குச் சொல்ல முடிந்த குறிப்புகள் இருக்கிறதா என்பதை ஆர்வத்தோடு தேடுங்கள். உதாரணமாக, உங்களுடைய படிப்பின்போது வாசித்த அல்லது கற்றுக்கொண்ட விஷயங்களை உங்கள் துணையிடமோ சபையிலுள்ள நண்பரிடமோ சொல்லலாம், அல்லவா? இப்படிச் செய்யும்போது மற்றவர்கள் பயனடைவதோடு அந்த விஷயங்கள் உங்களுடைய மனதிலும் இருதயத்திலும் அச்சாய் பதிந்துவிடும்.
கடவுளின் பூர்வகால ஊழியரான எஸ்றாவைப் பின்பற்றி பைபிளைப் படிக்க முயலுங்கள்; அவர், ‘கர்த்தருடைய வேதத்தை ஆராய . . . தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தார்.’ (எஸ்றா 7:10) இதை நீங்கள் எப்படிச் செய்யலாம்? படிப்பதற்கேற்ற ஒரு சூழலை உருவாக்குங்கள். அதன்பிறகு, யெகோவாவுடைய வழிநடத்துதலுக்காகவும் ஞானத்திற்காகவும் ஜெபம் செய்யுங்கள். (யாக். 1:5) ‘படிக்கப்போகும் பகுதியிலிருந்து எதைப் பற்றி தெரிந்துகொள்ளப் போகிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். வாசிக்கையில், முக்கிய கருத்துகளைக் கண்டுபிடிக்க முயலுங்கள். அவற்றை நீங்கள் எழுதிவைக்க விரும்பலாம் அல்லது நினைவில் வைக்க விரும்பும் வார்த்தைகளை குறித்துக்கொள்ளலாம். ஊழியத்தில், தீர்மானங்கள் செய்கையில், அல்லது சகோதர சகோதரிகளை ஊக்குவிக்கையில் இந்தக் குறிப்புகளை எப்படிப் பயன்படுத்தலாமென சிந்தியுங்கள். படிப்பின் இறுதியில், கற்ற விஷயங்களை சுருக்கமாகச் சிந்தித்துப் பாருங்கள். அப்போது அவை உங்கள் மனதில் ஆழமாய்ப் பதிந்துவிடும்.
ஈவா தான் படிக்கும் விதத்தை இவ்வாறு விவரிக்கிறார்: “நான் பைபிள் வாசிக்கும்போது, குறுக்கு வசனங்களை எடுத்துப் பார்க்கிறேன். உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ், உவாட்ச்டவர் லைப்ரரி சிடி-ரோம் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறேன். ஊழியத்தில் பயன்படுத்த விரும்பும் குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்கிறேன்.”
சிலர், பல வருடங்களாகவே இவ்வாறு ஆர்வத்துடன் ஆழ்ந்து படிக்கிறார்கள்; அவர்கள் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதில் மூழ்கிவிடுகிறார்கள். (நீதி. 2:1–5) அவர்களுக்குப் பல பொறுப்புகள் இருப்பதால் தனிப்பட்ட படிப்புக்காக நேரம் ஒதுக்குவது கடினம்; இருந்தாலும் அவர்கள் ஆர்வத்தோடு படிக்கிறார்கள். படிப்பதற்காக நேரம் ஒதுக்குவது உங்களுக்கும் கடினமாக இருந்தால், உங்களுடைய அட்டவணையில் என்ன மாற்றங்களைச் செய்யலாம்.
நேரம் ஒதுக்குவது எப்படி?
உங்களுக்குப் பிடித்தமான காரியங்களைச் செய்வதற்கு நேரம் ஒதுக்குவது சுலபம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். தனிப்பட்ட விதமாக ஆர்வத்துடன் படிப்பதற்கு ஒரு வழி நம்மால் முடிந்த இலக்குகளை வைப்பதாகும் என்று பலரும் உணர்ந்திருக்கிறார்கள். உதாரணமாக, முழு பைபிளையும் வாசிப்பதற்கு இலக்கு வைக்கலாம். நமக்குப் பிரயோஜனமில்லாததாய்த் தோன்றும் நீண்ட வம்சாவளிப் பட்டியல்கள், பண்டைய ஆலயத்தின் விலாவாரியான விவரிப்புகள், அல்லது புரிந்துகொள்வதற்குக் கடினமான தீர்க்கதரிசனங்கள் ஆகியவற்றை வாசிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். என்றாலும், உங்களுடைய இலக்கை எட்டுவதற்கு நடைமுறையான படிகளை எடுக்க முயலுங்கள். உதாரணத்திற்கு, கடினமானதாகத் தோன்றும் ஒரு பைபிள் பகுதியை ஆராய்வதற்கு முன் அதன் சரித்திர பின்னணியையோ அது நடைமுறைக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதையோ பற்றி படிக்கலாம். இப்படிப்பட்ட தகவல்களை ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ என்ற புத்தகத்தில் பார்க்கலாம். இது சுமார் 50 மொழிகளில் கிடைக்கிறது.
பைபிளை வாசிக்கும்போது உங்களுடைய கற்பனைத் திறனை பயன்படுத்தினால் சுவாரஸ்யமாய் இருக்கும். கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் உங்கள் மனக்கண்ணில் நிறுத்த இது உதவும். இந்தச் சில ஆலோசனைகளைப் பின்பற்றினாலே போதும், உங்களுடைய படிப்பு பெருமகிழ்ச்சி தருவதாயும் பலனளிப்பதாயும் இருக்கும். இதனால், படிப்புக்கு நேரம் ஒதுக்க அதிக ஆவலுள்ளவர்களாய் இருப்பீர்கள். தினந்தோறும் பைபிள் வாசிக்கும் பழக்கத்தை விட்டுவிடாதிருப்பதற்கும் உதவும்.
தனிப்பட்ட விதமாகப் படிப்பதற்கு இந்த ஆலோசனைகள் பெரிதும் உதவுகின்றன. ஆனால், குடும்பத்திலுள்ள எல்லாருமே பல வேலைகளில் மூழ்கியிருக்கையில் குடும்பமாகப் படிப்பதற்கு என்ன செய்யலாம்? குடும்பமாகப் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி எல்லாருமாக உட்கார்ந்து பேசலாம், அல்லவா? அப்படிப் பேசும்போது, எல்லாருக்குமே ஒத்துப்போகும் சமயத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். உதாரணமாக, பைபிளிலிருந்து ஒரு பகுதியைச் சிந்திப்பதற்கு ஒவ்வொரு நாளும் அல்லது சில நாட்களில் சற்று சீக்கிரமாக எழும்புவதற்கு எல்லாரும் ஒத்துக்கொள்ளலாம். அல்லது, குடும்பத்தின் அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்யத் தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு, குடும்பமாக உணவருந்திய பிறகு தினவசனத்தைக் கலந்தாலோசிப்பதை அல்லது பைபிளிலிருந்து ஒரு பகுதியை வாசிப்பதை பயனுள்ளதாக சில குடும்பங்கள் கண்டிருக்கின்றன. சாப்பிட்டுவிட்டு எழுந்திருப்பதற்கு முன்பாக, 10 அல்லது 15 நிமிடங்கள் பைபிள் விஷயங்களைக் கலந்தாலோசிப்பதற்கோ அட்டவணைப்படி பைபிளை வாசிப்பதற்கோ குடும்பத்தார் நேரம் செலவிடுகிறார்கள். இப்படிச் செய்வது ஆரம்பத்தில் சற்று சவாலாக இருக்கலாம். ஆனால், போகப் போக சகஜமாகிவிடும், பேரானந்தமாயும் இருக்கும்.
தங்களுடைய கும்பத்திற்கு எது உதவியாய் இருந்ததென்று வோய்சிக், மோகாஸாட்டா தம்பதியர் இவ்வாறு சொல்கிறார்கள்: “முன்பெல்லாம், முக்கியமில்லாத காரியங்களுக்காக அதிக நேரத்தை வீணாக்கினோம். ஈ-மெயில் அனுப்புவதற்காக செலவிட்ட நேரத்தையெல்லாம் குறைப்பதற்கு தீர்மானித்தோம். பொழுதுபோக்குகள் சிலவற்றையும் விட்டுவிட்டோம். ஆராய்ந்து படிப்பதற்காக குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினோம்.” இந்த மாற்றங்களைச் செய்ததற்காக இந்தக் குடும்பத்தார் வருத்தப்படுவதே இல்லை, இப்படிச் செய்தால் நீங்களும் இவ்வாறே உணர்வீர்கள்.
திருத்தமான அறிவில் வளருவது பயனுள்ளது!
கடவுளுடைய வார்த்தையை ஆழ்ந்து படிக்கும்போது, “சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத்” தர முடியும். (கொலோ. 1:10) இப்படி நீங்கள் முன்னேறுவதை எல்லாராலும் காண முடியும். நீங்கள், பைபிள் சத்தியங்களை அத்துப்படியாகத் தெரிந்த ஓர் ஆன்மீக நபராக ஆவீர்கள். முன்பின் யோசித்து தீர்மானம் எடுப்பீர்கள், மற்றவர்களுக்குச் சிறந்த விதத்தில் உதவுவீர்கள், பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவு இல்லாதவர்களைப் போல எந்த எல்லைக்கும் செல்ல மாட்டீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவிடம் மிகவும் நெருக்கமாவீர்கள். அவருடைய பண்புகளை உயர்வாக மதிப்பீர்கள். மற்றவர்களிடம் அவரைக் குறித்துப் பேசுகையில் அது வெளிப்படையாகத் தெரியும்.—1 தீ. 4:15; யாக். 4:8.
உங்களுடைய வயது அல்லது அனுபவம் எதுவாக இருந்தாலும், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதில் எப்போதும் இன்பம் காண முயற்சி செய்யுங்கள். அதைத் திறந்த மனதுடன் ஆராய்ந்து படிக்கவும் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய முயற்சியை யெகோவா மறக்க மாட்டாரென நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம். (எபி. 6:10) அவர் அளவிலா ஆசீர்வாதங்களை அருளுவார்.
[பக்கம் 13-ன் பெட்டி]
நாம் ‘திருத்தமான அறிவில் வளருகையில்’ . . .
கடவுள் மீதுள்ள நம் விசுவாசம் பலப்படுகிறது, அதனால் யெகோவாவுக்குப் பிரியமாக நடக்கிறோம்.—கொலோ. 1:9, 10
நுட்பமாகப் புரிந்துகொள்வதால், பகுத்துணர்வைப் பயன்படுத்தி ஞானமாய்த் தீர்மானங்கள் எடுக்கிறோம்.—சங். 119:99.
மற்றவர்கள் யெகோவாவிடம் நெருங்கி வர உதவுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.—மத். 28:19, 20.
[பக்கம் 14-ன் படங்கள்]
படிப்பதற்கேற்ற இடத்தைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தாலும், நல்ல சூழலில் படிப்பதே சிறந்தது
[பக்கம் 15-ன் படம்]
சில குடும்பத்தார் சாப்பாட்டிற்குப் பிறகு பைபிளிலிருந்து ஒரு பகுதியை வாசிக்கிறார்கள்