யெகோவாமீது உங்கள் நம்பிக்கையை பலப்படுத்துங்கள்
கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுகிறது. தேசத்திலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் கூடிப் பேசி, புதிய சட்டத்தை உருவாக்கும் தீர்மானத்தை முன்மொழிகிறார்கள். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத எந்த வணக்கத்திலாகிலும் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க அவர்கள் விரும்புகிறார்கள்.
இது உங்களுக்கு கேள்விப்பட்ட ஒன்றாக தொனிக்கிறதா? சட்டத்தைப் பயன்படுத்தி தீங்கிழைக்க திட்டமிடும் மக்களைப் பற்றிய உதாரணங்கள் சரித்திர ஏடுகளில் நிரம்பி வழிகின்றன. தீர்க்கதரிசியாகிய தானியேலின் காலத்தில் பெர்சிய சாம்ராஜ்யத்தில் மேற்குறிப்பிடப்பட்ட சம்பவம் நடந்தது. தரியு அரசன் அமல்படுத்தும் சட்டம் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறது: ‘எவனாகிலும் முப்பது நாள் வரையில் ராஜாவைத் தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம் பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படுவான்.’—தானியேல் 6:7-9.
இப்படிப்பட்ட மரண அச்சுறுத்தலில் தானியேல் என்ன செய்வார்? தன்னுடைய தேவனாகிய யெகோவா மீது தொடர்ந்து நம்பிக்கை வைப்பாரா, அல்லது ராஜாவின் கட்டளைக்கு இணங்கிவிடுவாரா? அந்தப் பதிவு நமக்கு சொல்கிறது: “தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.” (தானியேல் 6:10) மீதமுள்ள கதை நாம் நன்கு அறிந்ததே: தன்னுடைய விசுவாசத்திற்காக தானியேல் சிங்க கெபியில் போடப்பட்டார், ஆனால் யெகோவா ‘சிங்கங்களின் வாய்களை அடைத்து’ விசுவாசமுள்ள தம்முடைய ஊழியனை காப்பாற்றினார்.—எபிரெயர் 11:33; தானியேல் 6:16-22.
சுயபரிசோதனைக்குரிய காலம்
இன்று, பகைமை படர்ந்திருக்கும் ஓர் உலகில் யெகோவாவின் ஊழியர்கள் வாழ்கிறார்கள்; தங்களுடைய சரீர மற்றும் ஆவிக்குரிய நலனிற்கு அச்சுறுத்துதல்கள் பலவற்றை எதிர்ப்படுகிறார்கள். உதாரணமாக, சில நாடுகளில் இனப் பகைமை எனும் எரிமலை வெடித்ததால் சாட்சிகள் பலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பிற இடங்களில், யெகோவாவின் ஊழியர்கள் உணவு குறைபாடுகளையும் பொருளாதார கஷ்டங்களையும் இயற்கை பேரழிவுகளையும் பயங்கர வியாதியையும் உயிருக்கு உலை வைக்கும் சூழ்நிலைகள் பலவற்றையும் சந்தித்திருக்கிறார்கள். அதோடு, துன்புறுத்துதலையும் வேலையில் பிரச்சினைகளையும் தவறிழைக்க சுண்டியிழுக்கும் பல்வேறு கண்ணிகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது, இவையனைத்தும் அவர்களுடைய ஆவிக்குரிய தன்மையை அச்சுறுத்தலாம். சொல்லப்போனால், தனக்கு வெற்றியை தேடித்தரும் எந்த வழியிலும் யெகோவாவின் ஊழியர்களை அழிக்க பெரும் எதிராளியாகிய சாத்தான் உறுதி பூண்டிருக்கிறான்.—1 பேதுரு 5:8.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம்? ஒருவருடைய உயிர் அச்சுறுத்தப்படும்போது பயப்படுவது இயல்பாக இருந்தாலும், அப்போஸ்தலன் பவுலின் உறுதியளிக்கும் இந்த வார்த்தைகளை மனதில் வைக்கலாம்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் [யெகோவா] சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் [“யெகோவா,” NW] எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.” (எபிரெயர் 13:5, 6) இன்று தம்முடைய ஊழியர்களைக் குறித்து யெகோவாவும் அதேவிதமாக நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதில் உறுதியாக இருக்கலாம். ஆனால் யெகோவாவின் வாக்குறுதியை அறிந்திருப்பது ஒரு விஷயம், அவர் நம்முடைய சார்பாக செயல்படுவார் என நம்பிக்கையோடு இருப்பது முற்றிலும் வேறொரு விஷயம். ஆகவே, யெகோவாவின் மீது கட்டப்பட்டுள்ள நம்முடைய நம்பிக்கை எனும் அஸ்திவாரத்தை பரிசோதித்துப் பார்ப்பதும், அதை பலப்படுத்தி காத்துக்கொள்ள நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதும் மிகவும் இன்றியமையாதது. அப்படி செய்வோமென்றால், ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களையும் நம் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.’ (பிலிப்பியர் 4:7) பின்பு சோதனைகள் திரண்டு வரும்போது, நாம் தெளிவாக சிந்திக்கவும் அவற்றை ஞானமாக சமாளிக்கவும் முடியும்.
யெகோவா மீது நம்பிக்கைக்கு ஆதாரம்
நம்முடைய படைப்பாளராகிய யெகோவா மீது நம்பிக்கை வைப்பதற்கு நிச்சயமாகவே நமக்கு பல காரணங்கள் இருக்கின்றன. தம்முடைய ஊழியர்களை மனதார கவனித்துக்கொள்ளும் அன்பான கடவுளே யெகோவா என்பது அவற்றில் முதலாவதாகும். தம்முடைய ஊழியர்களை யெகோவா அன்போடு கவனித்ததற்கு எண்ணற்ற உதாரணங்கள் பைபிளில் உள்ளன. தெரிந்தெடுக்கப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேலருடன் யெகோவா வைத்திருந்த தொடர்புகளை விவரிக்கையில் மோசே இவ்வாறு எழுதினார்: “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்.” (உபாகமம் 32:10) நவீன காலங்களிலும், யெகோவா தம்முடைய ஊழியர்களை தொகுதியாகவும் தனிப்பட்ட விதமாகவும் நன்கு கவனித்துக் கொள்கிறார். உதாரணமாக, போஸ்னியாவில் உள்நாட்டு போர் மூண்ட சமயத்தில் சாட்சிகளில் சிலர் கொடிய பஞ்சத்தை எதிர்ப்பட்டார்கள். குரோவேஷியா மற்றும் ஆஸ்திரிய சகோதரர்களின் தைரியமான முயற்சியால் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். இந்த ஆஸ்திரிய சகோதரர்கள் தங்கள் உயிரையே பணையம் வைத்து தங்கள் சகோதரர்களுக்காக நிவாரணப் பொருட்களை அதிக ஆபத்தான பிராந்தியத்தின் வழியே கொண்டு சென்றார்கள்.a
யெகோவா தேவனே சர்வ வல்லவராதலால், எந்த சூழ்நிலையிலும் தம்முடைய ஊழியர்களை அவரால் நிச்சயமாக பாதுகாக்க முடியும். (ஏசாயா 33:22; வெளிப்படுத்துதல் 4:8) ஆனால் மரணம் வரை உண்மையுள்ளவர்களாக நிரூபிப்பதற்கு தம்முடைய ஊழியர்களில் சிலரை யெகோவா அனுமதிக்கிறபோதிலும், கடைசிவரை உறுதியாக நிலைத்திருக்கவும் சந்தோஷமாக இருக்கவும் மனசமாதானமாக இருக்கவும் உதவி செய்து, அவர்களை தொடர்ந்து தாங்குகிறார், தங்களுடைய உத்தமத்தன்மையை காத்துக்கொள்ள துணைபுரிகிறார். சங்கீதக்காரனைப் போல நாம் அதே நம்பிக்கையை கொண்டிருக்கலாம்: “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும் . . . நாம் பயப்படோம்.”—சங்கீதம் 46:1-3.
யெகோவா சத்தியத்தின் தேவன் என்றும் பைபிள் சொல்கிறது. அவர் எப்பொழுதும் வாக்குத்தவறாதவர் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. சொல்லப்போனால், “பொய்யுரையாத தேவன்” என பைபிள் அவரை விவரிக்கிறது. (தீத்து 1:3) தம்முடைய ஊழியர்களை காப்பாற்றி தப்புவிக்க மனமுள்ளவராக இருப்பதை அடிக்கடி வலியுறுத்தியிருப்பதால், தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற வல்லவராகவும் இருக்கிறார், அதற்குத் தயாராகவும் இருக்கிறார் என்பதில் நாம் முழு உறுதியோடு இருக்கலாம்.—யோபு 42:2.
நம் நம்பிக்கையை பலப்படுத்த வழிகள்
யெகோவா மீது நம்பிக்கை வைப்பதற்கு நமக்கு நல்ல காரணம் இருந்தாலும், நாம் இதை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் இவ்வுலகம் அவர் மீது நம்பிக்கை வைப்பதில்லை, இப்படிப்பட்ட மனப்பான்மை யெகோவா மீது நம்முடைய நம்பிக்கையை எளிதில் பலவீனப்படுத்திவிடும். ஆகவே, அந்த நம்பிக்கையை பலப்படுத்துவதற்கும் காத்துக்கொள்வதற்கும் பெருமுயற்சி எடுக்க வேண்டும். இதை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார், ஆகவேதான் அதை செய்வதற்குரிய வழிகளை நமக்கு காண்பித்திருக்கிறார்.
முதலாவதாக, அவருடைய வார்த்தையாகிய பைபிளை நமக்கு கொடுத்திருக்கிறார். அதில் தம்முடைய ஊழியர்களின் சார்பாக அவர் செய்த வல்லமையான செயல்கள் பலவற்றை பதிவு செய்திருக்கிறார். சற்று இதை சிந்தித்துப் பாருங்கள், ஒருவருடைய பெயரைத் தவிர வேறொன்றும் தெரிந்திராவிட்டால் நீங்கள் அவர்மீது எந்தளவுக்கு நம்பிக்கை வைக்க முடியும்? அப்படியே நம்பினாலும் முற்றிலும் நம்பிவிட மாட்டீர்கள். நீங்கள் அவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு அவருடைய வழிகளையும் செயல்களையும் அறிந்துகொள்வது அவசியம் அல்லவா? இப்படிப்பட்ட பைபிள் விவரங்களை வாசித்து தியானிக்கும்போது, யெகோவாவையும் அவருடைய ஆச்சரியமான வழிகளையும் பற்றிய நம்முடைய அறிவு ஆழமாகும், அவர் எந்தளவு நம்பத்தக்கவர் என்பதை அதிகமதிகமாக மதித்துணர ஆரம்பிப்போம். இவ்வாறு அவரிடமுள்ள நம்முடைய நம்பிக்கை பலப்படுத்தப்படுகிறது. கடவுளிடம் செய்த ஊக்கமான ஜெபத்தில் சங்கீதக்காரன் சிறந்த முன்மாதிரி வைக்கிறார்: “கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்.”—சங்கீதம் 77:11, 12.
பைபிளைத் தவிர, யெகோவாவின் அமைப்பால் தயாரித்து அளிக்கப்படும் பைபிள் பிரசுரங்களிலும் கொழுமையான ஆவிக்குரிய உணவு கிடைக்கிறது. மற்ற அநேக விஷயங்களோடு, யெகோவாவின் நவீன கால ஊழியர்களைப் பற்றிய உந்துவிக்கும் பதிவுகள் இந்தப் பிரசுரங்களில் இருக்கின்றன. நம்பிக்கை இழந்து தவிக்கும் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் அவர்களுக்கு எவ்வாறு உதவியையும் நிவாரணத்தையும் யெகோவா அளித்தார் என்பதை அந்த விவரப்பதிவுகள் காட்டுகின்றன. உதாரணமாக, பிற்பாடு யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினரான மார்ட்டின் பொயட்சிங்கர் தாய்நாட்டிற்கு வெளியே ஐரோப்பிய நாடுகளில் பயனியராக சேவை செய்துகொண்டிருந்தபோது பயங்கரமாக வியாதிப்பட்டார். அவர் கையில் காசோ பணமோ கிடையாது, அவரை பரிசோதிக்க எந்த டாக்டரும் முன்வரவில்லை. ஆனால் யெகோவா அவரை கைவிடவில்லை. கடைசியாக, உள்ளூர் மருத்துவமனையின் முதுநிலை ஆலோசகரை சந்தித்தார். பைபிளை உறுதியாக நம்புகிறவராக இருந்ததால், தன் மகன் போல சகோதரர் பொயட்சிங்கரை அன்போடு கவனித்துக்கொண்டார், அதோடு இலவசமாக சிகிச்சையும் அளித்தார். இப்படிப்பட்ட அனுபவங்களைப் படிப்பது பரலோக தகப்பன் மீது நம்முடைய நம்பிக்கையை நிச்சயமாகவே பலப்படுத்தும்.
அவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கையை பலப்படுத்துவதற்கு யெகோவா தரும் மற்றொரு மதிப்புமிக்க உதவி அருமையான சிலாக்கியமாகிய ஜெபமாகும். அப்போஸ்தலன் பவுல் அன்போடு இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” (பிலிப்பியர் 4:6) ‘எல்லாவற்றையும்’ என்பது நம்முடைய உணர்ச்சிகளையும் தேவைகளையும் பயங்களையும் கவலைகளையும் உட்படுத்துகிறது. நாம் எந்தளவுக்கு அடிக்கடி இருதயப்பூர்வமாக ஜெபிக்கிறோமோ அந்தளவுக்கு யெகோவா மீது நம்முடைய நம்பிக்கை பலமாக இருக்கும்.
இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, எந்த இடையூறும் இல்லாமல் ஜெபிப்பதற்கு சிலசமயங்களில் தனிமையான இடத்திற்குச் சென்றார். (மத்தேயு 14:23; மாற்கு 1:35) முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு, தம்முடைய தகப்பனிடம் ஜெபிப்பதற்கு அவர் முழு இரவையும் செலவழித்தார். (லூக்கா 6:12, 13) யெகோவா மீது இயேசு அந்தளவுக்கு பலமான நம்பிக்கை வைத்திருந்ததால், வேறு எவருக்கும் வந்திராத மிகக் கடுமையான சோதனையை அவரால் சகிக்க முடிந்ததில் ஆச்சரியமில்லை. கழுமரத்தில் அவர் சொன்ன கடைசி வார்த்தைகள் இவை: “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.” அவரை காப்பாற்றுவதற்கு யெகோவா தலையிடாதபோதிலும், கடைசிவரை தம்முடைய தகப்பன் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையவே இல்லை என்பதை அந்த நம்பிக்கையான வார்த்தைகள் காட்டுகின்றன.—லூக்கா 23:46.
யெகோவா மீது நம்முடைய நம்பிக்கையை பலப்படுத்துவதற்கு மற்றொரு வழி, அவரை முழு இருதயத்தோடு நம்புகிறவர்களுடன் தவறாமல் கூட்டுறவு கொள்வதாகும். அவரைப் பற்றி கற்றுக்கொள்வதற்கும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கும் தவறாமல் ஒன்றுகூடி வரும்படி தம்முடைய ஜனங்களுக்கு யெகோவா கட்டளையிட்டார். (உபாகமம் 31:12; எபிரெயர் 10:24, 25) இப்படிப்பட்ட கூட்டுறவு யெகோவா மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை பலப்படுத்தியது; அத்துடன், கடும் விசுவாச பரீட்சைகளை சகிப்பதற்கும் அவர்களுக்கு உதவியது. பிரசங்க வேலை தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாடு ஒன்றில், யெகோவாவின் சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பும், பயண ஆவணங்களும், திருமண சான்றிதழ்களும் மருத்துவ சிகிச்சையும் வேலைகளும் மறுக்கப்பட்டன. ஓரிடத்தில் உள்நாட்டு போர் வெடித்தது, அச்சமயத்தில் நகர்ப்புறத்தில் பாய்ந்துவந்த வெடிகுண்டுகளுக்குப் பலியாகாமல் தப்ப, பக்கத்திலுள்ள சபையைச் சேர்ந்த—பிள்ளைகள் உட்பட—39 பேர் நான்கு மாதங்களுக்கு பாலைவனத்திலுள்ள தாழ்வான ஒரு பாலத்திற்கு அடியில் தங்கியிருந்தனர். இப்படிப்பட்ட மிகக் கடுமையான துன்பத்திலும், அவர்கள் ஒவ்வொரு நாளும் பைபிள் வசனத்தை கலந்தாராய்ந்ததும் மற்ற கூட்டங்களை நடத்தியதும் அவர்களுக்கு பெரும் பலத்தைக் கொடுத்தன. ஆவிக்குரிய விதத்தில் எந்த காயமுமின்றி இந்தக் கடுமையான துன்பத்தை அவர்களால் சகித்திருக்க முடிந்தது. யெகோவாவின் ஜனங்களுடன் தவறாமல் கூட்டுறவு கொள்வதன் அவசியத்தை இந்த அனுபவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
இறுதியில், யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையை பலப்படுத்துவதற்கு, ராஜ்ய பிரசங்க வேலையில் தொடர்ந்து சுறுசுறுப்பாக ஈடுபட வேண்டும், மற்றவர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். லூக்கேமியா என்ற வெள்ளணுப் புற்றுநோயால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த, கனடாவைச் சேர்ந்த வைராக்கியமான இளம் பிரஸ்தாபியின் நெகிழ வைக்கும் அனுபவம் இதை எடுத்துக் காட்டியது. அவளுடைய பயங்கர வியாதியின் மத்தியிலும், அவள் ஓர் ஒழுங்கான பயனியராக, அதாவது முழுநேர ஊழியம் செய்ய விரும்பினாள். அவளுடைய வியாதி சற்று தணிந்தபோது, ஒரு மாதம் துணைப் பயனியராக ஊழியம் செய்ய முடிந்தது. பிறகு அவளுடைய நிலைமை மோசமாகி சில மாதங்களுக்குப் பிறகு இறந்துவிட்டாள். இருப்பினும், முடிவு வரை ஆவிக்குரிய விதத்தில் அவள் பலமாக இருந்தாள், யெகோவா மீது வைத்திருந்த அவளுடைய நம்பிக்கை சில கணத்திற்குக்கூட ஆட்டம் காணவில்லை. அவளுடைய தாயார் இவ்வாறு சொன்னார்: “கடைசி வரை, தன்னைவிட மற்றவர்கள்மீதுதான் அதிக அக்கறை காட்டினாள். ‘நாம் பரதீஸில் ஒன்று சேர்ந்திருப்போம்’ என்று சொல்லி பைபிளை படிக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்துவாள்.”
யெகோவா மீதான நம் நம்பிக்கையை நிரூபித்தல்
“ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.” (யாக்கோபு 2:26) கடவுள் மீது வைத்திருக்கும் விசுவாசத்தைக் குறித்து யாக்கோபு சொன்னதை நம்பிக்கைக்கும் பொருத்தலாம். கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக நாம் எவ்வளவு உறுதியாக சொன்னாலும், நம்முடைய செயல்கள் மூலம் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்திக் காட்டவில்லையென்றால் அது அர்த்தமற்றதே. யெகோவா மீது ஆபிரகாம் முழுமையாக நம்பிக்கை வைத்து, அவருடைய கட்டளைகளைக் குறித்து எள்ளளவும் சந்தேகப்படாமல் கீழ்ப்படிந்தார், தன்னுடைய குமாரனை பலிசெலுத்துவதற்கு தயாராயிருந்ததன் மூலம் அதை நிரூபித்துக் காண்பித்தார். நம்பிக்கைக்கும் கீழ்ப்படிதலுக்கும் இப்படிப்பட்ட சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்ததால், ஆபிரகாம் யெகோவாவின் நண்பரென அழைக்கப்பட்டார்.—எபிரெயர் 11:8-10, 17-19; யாக்கோபு 2:23.
யெகோவா மீது நம்முடைய நம்பிக்கையை காண்பிப்பதற்கு ஏதாவது பெரும் சோதனை வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.” (லூக்கா 16:10) நம்முடைய அன்றாட செயல்கள் எல்லாவற்றிலும், அற்பமாக தோன்றும் சிறுசிறு விஷயங்களுக்கும் கீழ்ப்படிவதன் மூலம் யெகோவா மீது நம்பிக்கை வைப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட கீழ்ப்படிதலால் வரும் நன்மைகளை காணும்போது, பரலோக தகப்பன் மீது நம்முடைய நம்பிக்கை பலப்படுகிறது, மிகப் பெரிய அல்லது வெல்லமுடியா பெரும் சோதனைகளை சமாளிப்பதற்கு நமக்கு உதவுகிறது.
இந்த உலகம் பேரழிவை நெருங்குகையில், யெகோவாவின் ஜனங்கள் அதிக சோதனைகளையும் ஆபத்துக்களையும் நிச்சயம் எதிர்ப்படுவர். (அப்போஸ்தலர் 14:22; 2 தீமோத்தேயு 3:12) இப்பொழுதே பலமான, முழுமையான நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம், அவர் வாக்குறுதி அளித்துள்ள புதிய உலகிற்குள்—மிகுந்த உபத்திரவத்தைக் கடந்து, அல்லது உயிர்த்தெழுதல் மூலமாக—தப்பிப்பிழைப்பதை எதிர்நோக்கியிருக்கலாம். (2 பேதுரு 3:13) யெகோவாவுடன் நம்முடைய அருமையான உறவை பாதிக்கும் அளவிற்கு நம்பிக்கையை இழந்துவிட நாம் ஒருபோதும் அனுமதியாதிருப்போமாக. அப்பொழுது, தானியேல் சிங்க கெபியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவரைக் குறித்து சொல்லப்பட்டதே நம்மைக் குறித்தும் சொல்லப்படலாம்: “அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.”—தானியேல் 6:23.
[அடிக்குறிப்பு]
a விவரங்களுக்கு, காவற்கோபுரம், நவம்பர் 1, 1994, பக்கங்கள் 23-7-ஐக் காண்க.
[பக்கம் 9-ன் படம்]
மார்ட்டின் பொயட்சிங்கரை போன்ற யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களின் பதிவுகளை வாசிப்பது விசுவாசத்தைப் பலப்படுத்தும்