‘சத்திய ஆவியை’ நீங்கள் பெற்றிருக்கிறீர்களா?
“பிதா . . . என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை . . . உங்களுக்குத் தந்தருளுவார்.”—யோவான் 14:16.
1. மேலறையில் இயேசு தமது சீஷர்களுடன் கடைசி மணிநேரங்களை செலவழிக்கையில் என்ன முக்கிய தகவலை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்?
“ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?” எருசலேமில் ஒரு மேலறையில் இயேசு தமது அப்போஸ்தலருடன் செலவிட்ட கடைசி சில மணிநேரங்களில் அவர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று. (யோவான் 13:36) அவர்களை விட்டு தமது பிதாவிடம் திரும்பிப் போவதற்கான வேளை வந்திருப்பதை இயேசு அப்போது தெரிவித்தார். (யோவான் 14:28; 16:28) அவர்களுக்குக் கற்பிப்பதற்கும் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும் இனிமேலும் சரீரப்பிரகாரமாக அவர்களுடன் இருக்க மாட்டார். எனினும், “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்கு . . . வேறொரு தேற்றரவாளனை [“உதவியாளனை,” NW] அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” என அவர்களுக்கு உறுதியளித்தார்.—யோவான் 14:16.
2. தாம் போன பின்பு எதை சீஷர்களுக்கு அனுப்புவதாக இயேசு வாக்குறுதி அளித்தார்?
2 அந்த உதவியாளனை இயேசு அடையாளம் காட்டி தமது சீஷர்களுக்கு அது எப்படி உதவும் என்பதை விளக்கினார். “நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை. இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; . . . நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். . . . சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” என அவர்களிடம் சொன்னார்.—யோவான் 16:4, 5, 7, 13.
3. (அ) ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு “சத்திய ஆவி” எப்போது அனுப்பப்பட்டது? (ஆ) எந்த ஒரு முக்கியமான வழியில் இந்த ஆவி அவர்களுக்கு ‘உதவியாளனாக’ இருந்தது?
3 பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் இந்த வாக்குறுதி நிறைவேறியது; அதை அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு உறுதிப்படுத்தினார்: “இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே [“வலப்பக்கத்துக்கு,” பொ.மொ.] உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.” (அப்போஸ்தலர் 2:32, 33) பின்னர் நாம் காணப்போகிறபடி, பெந்தெகொஸ்தே நாளில் ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவி ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்காக பல காரியங்களை நிறைவேற்றியது. ஆனால், அந்த ‘சத்திய ஆவி,’ இயேசு ‘அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்கு நினைப்பூட்டும்’ என்று அவர் உறுதியளித்தார். (யோவான் 14:26) அது, இயேசுவின் ஊழியத்தையும் போதகங்களையும், அவர் சொன்ன வார்த்தைகளையும் இம்மி பிசகாமல் அப்படியே அவர்களுக்கு நினைவுபடுத்தி, அவற்றை எழுதி வைப்பதற்கு உதவும். பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவில் வயதான அப்போஸ்தலன் யோவான், தன் சுவிசேஷத்தை எழுத ஆரம்பித்தபோது, முக்கியமாய் இது அவருக்கு உதவியிருந்திருக்கும். இயேசு தமது மரண நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தபோது கொடுத்த அருமையான அறிவுரையும் அந்தப் பதிவில் உள்ளது.—யோவான், அதிகாரங்கள் 13-17.
4. அபிஷேகம் செய்யப்பட்ட ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு “சத்திய ஆவி” எவ்வாறு உதவியது?
4 இந்த ஆவி ‘எல்லாவற்றையும் அவர்களுக்குப் போதித்து,’ ‘சகல சத்தியத்திற்குள்ளும் அவர்களை நடத்தும்’ என்றும் இயேசு அந்த ஆரம்ப கால சீஷர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். வேதவசனத்திலுள்ள ஆழமான விஷயங்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களுடைய சிந்தனையிலும், புரிந்துகொள்ளுதலிலும், நோக்கத்திலும் ஒற்றுமையைக் காத்துக்கொள்ளவும் இந்த ஆவி அவர்களுக்கு உதவும். (1 கொரிந்தியர் 2:10; எபேசியர் 4:3) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ‘ஏற்றவேளையில்’ ஆவிக்குரிய ‘உணவை’ அளிப்பதற்கு, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” ஒரு குழுவாக செயல்படுவதற்காக பரிசுத்த ஆவி அந்த ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு அதிகாரமளித்தது.—மத்தேயு 24:45, NW.
இந்த ஆவி சாட்சி பகருகிறது
5. (அ) பொ.ச. 33, நிசான் 14-ன் இரவில் என்ன புதிய எதிர்பார்ப்பை இயேசு தம் சீஷர்களுக்கு வெளிப்படுத்தினார்? (ஆ) இயேசுவின் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பரிசுத்த ஆவி என்ன பங்கு வகிக்கும்?
5 சீஷர்களைப் பின்னர் தம்மிடம் சேர்த்துக்கொள்வதையும் அவர்கள் அவருடனும் அவருடைய பிதாவுடனும் பரலோகத்தில் வாழ்வதையும் பொ.ச. 33, நிசான் 14-ன் இரவில் இயேசு அவர்களிடம் மறைமுகமாக தெரிவித்தார். “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” என அவர்களிடம் சொன்னார். (யோவான் 13:36; 14:2, 3) அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் அவரோடு அரசாளுவார்கள். (லூக்கா 22:28-30) இந்தப் பரலோக நம்பிக்கையை அவர்கள் பெற்றுக்கொள்வதற்கு கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாக ‘ஆவியினால் பிறக்க வேண்டும்,’ பரலோகத்தில் கிறிஸ்துவுடன் அரசர்களும் ஆசாரியர்களுமாக சேவிப்பதற்கு அபிஷேகம் செய்யப்பட வேண்டும்.—யோவான் 3:5-8; 2 கொரிந்தியர் 1:21, 22; தீத்து 3:5-7; 1 பேதுரு 1:3, 4; வெளிப்படுத்துதல் 20:6.
6. (அ) பரலோக அழைப்பு எப்போது ஆரம்பித்தது, இந்த அழைப்பை எத்தனை பேர் பெறுகிறார்கள்? (ஆ) அழைக்கப்பட்டவர்கள் எதற்குள் முழுக்காட்டப்பட்டார்கள்?
6 இந்தப் “பரலோக அழைப்பு,” பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் தொடங்கியது, அதன் பெரும் பகுதி 1930-களின் மத்திபத்தில் முடிந்ததாக தோன்றுகிறது. (எபிரெயர் 3:1, NW) ஆவிக்குரிய இஸ்ரவேலின் பாகமாயிருப்பதற்கு ‘பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டு’ பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,44,000. (வெளிப்படுத்துதல் 7:4; 14:1-4) இவர்கள் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்திற்குள்ளும், அவருடைய சபைக்குள்ளும் அவருடைய மரணத்திற்குள்ளும் முழுக்காட்டப்பட்டார்கள். (ரோமர் 6:3; 1 கொரிந்தியர் 12:12, 13, 27; எபேசியர் 1:22, 23) தண்ணீர் முழுக்காட்டுதலையும் பரிசுத்த ஆவியால் அபிஷேகத்தையும் அவர்கள் பெற்ற பின்பு, மரிக்கும் வரை உத்தமத்தைக் காக்கும் தியாக வாழ்க்கையை அவர்கள் ஏற்றார்கள்.—ரோமர் 6:4, 5.
7. நினைவு ஆசரிப்பின்போது, ஏன் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மட்டுமே முறைப்படி சின்னங்களில் பங்கெடுக்க தகுதியானவர்கள்?
7 யெகோவாவுக்கும் ‘‘தேவனுடைய இஸ்ரவேலருக்கும்” இடையே ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையின் பாகமாக ஆவிக்குரிய இஸ்ரவேலரான அபிஷேகம் செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். (கலாத்தியர் 6:16; எரேமியா 31:31-34) கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தால் அந்தப் புதிய உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்டது. தமது மரண நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தபோது இயேசு இதை குறிப்பிட்டார். “அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம் பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்” என லூக்கா பதிவு செய்கிறார். (லூக்கா 22:19, 20) கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பின்போது மீதிபேரே, அதாவது 1,44,000 பேரில் இன்னும் பூமியில் மீந்திருப்பவர்களே அடையாள அர்த்தமுள்ள அப்பத்திலும் திராட்ச ரசத்திலும் முறைப்படி பங்கெடுக்க தகுதியானவர்கள்.
8. தாங்கள் பரலோக அழைப்பை பெற்றிருப்பது அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு எப்படி தெரியும்?
8 தாங்கள் பரலோக அழைப்பை பெற்றிருப்பது அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு எப்படி தெரியும்? தெளிவாகவே அவர்கள் பரிசுத்த ஆவியின் சாட்சியத்தைப் பெறுகிறார்கள். அத்தகையோருக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். . . . நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே [“ஆவிதானே,” NW] நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார் [“சாட்சிகொடுக்கிறது,” NW]. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.” (ரோமர் 8:14-17) ஆவியின் இந்த சாட்சியம் அந்தளவுக்கு வல்லமை வாய்ந்ததாக இருப்பதால், பரலோக அழைப்பை பெற்றதைப் பற்றி எவருக்காவது துளி சந்தேகம் எழும்பினாலும், தாங்கள் அந்த அழைப்பைப் பெறவில்லை என்ற நியாயமான முடிவுக்கு வரலாம்; எனவே அவர்கள் நினைவு ஆசரிப்பின்போது சின்னங்களில் பங்கெடுக்காமல் இருப்பார்கள்.
ஆவியும் வேறே ஆடுகளும்
9. எந்த வேறுபட்ட இரண்டு தொகுதிகள் சுவிசேஷங்களிலும் வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் குறிப்பிடப்படுகின்றன?
9 ஆவிக்குரிய இஸ்ரவேலராவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையான கிறிஸ்தவர்களே அழைக்கப்பட்டிருப்பதை மனதில் வைத்து, இயேசு அவர்களை “சிறுமந்தை” என அழைத்தார். இவர்கள் புதிய உடன்படிக்கையின் ‘தொழுவத்திற்குள்’ ஏற்கப்படுகிறார்கள். இவர்களோடு ஒப்பிட, ‘வேறே ஆடுகள்’ எண்ணற்றவர்கள், அவர்களையும் தாம் கூட்டிச் சேர்க்க வேண்டுமென்று இயேசு சொன்னார். (லூக்கா 12:32; யோவான் 10:16) முடிவு காலத்தில் கூட்டிச் சேர்க்கப்படுகிற இந்த வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள், பரதீஸிய பூமியில் என்றும் வாழும் எதிர்பார்ப்புடன், ‘மிகுந்த உபத்திரவத்தைத்’ தப்பிப்பிழைக்கும்படி தீர்க்கப்பட்ட ‘திரள் கூட்டத்தார்’ ஆவார்கள். பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவில் யோவான் பெற்ற தரிசனம், இந்தத் திரள் கூட்டத்தாரையும், ஆவிக்குரிய இஸ்ரவேலின் 1,44,000 பேரையும் வேறுபடுத்திக் காட்டுவது கவனத்திற்குரியது. (வெளிப்படுத்துதல் 7:4, 9, 14) வேறே ஆடுகளும் பரிசுத்த ஆவியைப் பெறுகிறார்களா? அப்படியானால், அவர்கள் வாழ்க்கையை அது எப்படி பாதிக்கிறது?
10. “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு முழுக்காட்டப்படுகிறார்கள்?
10 வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவி உண்மையிலேயே முக்கிய பங்கு வகிக்கிறது. “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டப்படுவதன் மூலம், யெகோவாவுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலை இவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். (மத்தேயு 28:19) யெகோவாவின் அரசதிகாரத்தை அவர்கள் ஒப்புக்கொண்டு, தங்கள் அரசரும் மீட்பருமான கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் வாழ்க்கையில் கடவுளுடைய ஆவியின் அல்லது செயல்படும் சக்தியின் நடவடிக்கைக்குக் கட்டுப்படுகிறார்கள். “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய ‘ஆவியின் கனியை’ தங்கள் வாழ்க்கையில் பிறப்பிக்க நாள்தோறும் முயற்சி செய்கிறார்கள்.—கலாத்தியர் 5:22, 23.
11, 12. (அ) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு மிகவும் விசேஷித்த விதத்தில் பரிசுத்தமாக்கப்படுகிறார்கள்? (ஆ) வேறே ஆடுகள் எவ்வகையில் சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுகிறார்கள்?
11 மேலும், கடவுளுடைய வார்த்தையும் அவருடைய பரிசுத்த ஆவியும் தங்களை சுத்திகரிக்க அல்லது பரிசுத்தப்படுத்த இந்த வேறே ஆடுகள் அனுமதிக்க வேண்டும். அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டிகளாக, நீதியும் பரிசுத்தமும் உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டதன் மூலம் மிகவும் விசேஷித்த விதத்தில் ஏற்கெனவே பரிசுத்தராக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். (யோவான் 17:17; 1 கொரிந்தியர் 6:11; எபேசியர் 5:23-27) கிறிஸ்து இயேசுவாகிய ‘மனுஷகுமாரனின்’ தலைமையில் ராஜ்யத்தைப் பெறுகிறவர்களை ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள்’ என தீர்க்கதரிசியாகிய தானியேல் குறிப்பிடுகிறார். (தானியேல் 7:13, 14, 18, 27) இதற்கு முன்பு மோசே, ஆரோன் மூலம் இஸ்ரவேல் ஜனத்திடம், “நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; . . . உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக” என யெகோவா அறிவித்தார்.—லேவியராகமம் 11:44.
12 “பரிசுத்தமாக்கப்படுதல்” என்ற சொல் அடிப்படையில், “யெகோவாவின் சேவைக்காக அல்லது உபயோகத்திற்காக பரிசுத்தமாக்கும், பிரித்து வைக்கும், அல்லது ஒதுக்கி வைக்கும் செயல் அல்லது செயல்முறை; பரிசுத்தமாய் இருக்கும் நிலையை, பரிசுத்தமாக்கப்பட்டு அல்லது சுத்திகரிக்கப்பட்டு இருக்கும் நிலையை” அர்த்தப்படுத்துகிறது. “திரள் கூட்டத்தாரின் பாகமாகி, பூமியில் வாழப்போகிற ஒவ்வொருவரும், ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதும் பரிசுத்தமாக்கப்பட்டிருப்பதும் அவசியம் என்பதை” யோனதாபுகள் அல்லது வேறே ஆடுகள் “கற்றுக்கொள்ள வேண்டும்” என 1938-ம் ஆண்டிலேயே காவற்கோபுரம் குறிப்பிட்டது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிற திரள்கூட்டத்தாரைப் பற்றிய தரிசனத்தில், “இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்க”ளாகவும் “இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிற”வர்களாகவும் பேசப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 14, 15) பரிசுத்த ஆவியின் உதவியினால், இந்த வேறே ஆடுகள் யெகோவா எதிர்பார்க்கும் பரிசுத்த தராதரங்களை எட்டுவதற்கு தங்களாலான அனைத்தையும் செய்கிறார்கள்.—2 கொரிந்தியர் 7:1.
கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு நன்மை செய்தல்
13, 14. (அ) செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய இயேசுவின் உவமையின்படி, செம்மறியாடுகளின் இரட்சிப்பு எதை சார்ந்திருக்கிறது? (ஆ) இந்த முடிவு காலத்தில் வேறே ஆடுகளை சேர்ந்தவர்கள் எவ்வாறு கிறிஸ்துவின் சகோதரர்களை ஆதரித்திருக்கிறார்கள்?
13 ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைக்’ குறித்த தீர்க்கதரிசனத்தில் இயேசு செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையை குறிப்பிட்டார்; அதில் வேறே ஆடுகளுக்கும் சிறு மந்தைக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பை அவர் சிறப்பித்துக் காட்டினார். அந்த உவமையில், ‘என் சகோதரர்கள்’ என கிறிஸ்து அழைத்த அபிஷேகம் செய்யப்பட்டவர்களிடம் வேறே ஆடுகள் நடந்துகொள்ளும் விதத்துக்கும் அவர்களுடைய இரட்சிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அவர் தெளிவாக சுட்டிக்காட்டினார். “ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். . . . மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” என கூறினார்.—மத்தேயு 24:3, NW; 25:31-34, 40.
14 “எதைச் செய்தீர்களோ” என்பது ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு அன்பான ஆதரவளிப்பதை செயல்களில் காட்டுவதைக் குறிப்பிடுகிறது. இவர்களை, சாத்தானின் உலகம் அந்நியர்களைப் போல் நடத்தி, சிலரை சிறையிலும் தள்ளியிருக்கிறது. உணவும், போதுமான உடையும், உடல்நல கவனிப்பும் இவர்களுக்கு தேவைப்பட்டிருக்கின்றன. (மத்தேயு 25:35, 36, NW அடிக்குறிப்பு) 1914 முதற்கொண்டு இந்த முடிவு காலத்தில், அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் பலர் அத்தகைய நிலைமைகளில் இருந்திருக்கின்றனர். ஆவியால் தூண்டப்பட்ட வேறே ஆடுகளான இவர்களுடைய உண்மைப்பற்றுள்ள தோழர்கள் இவர்களை ஆதரித்திருப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளின் நவீன கால சரித்திரம் சான்றளிக்கிறது.
15, 16. (அ) பூமியிலுள்ள கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுக்கு எந்த நடவடிக்கையில் இந்த வேறே ஆடுகள் முக்கியமாய் உதவியிருக்கிறார்கள்? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தங்கள் நன்றியை வேறே ஆடுகளுக்கு எவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்?
15 இந்த முடிவு காலத்தில், முக்கியமாய், ‘ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாக பிரசங்கிக்கும்படி’ கடவுள் கொடுத்த பொறுப்பை பூமியில் இருக்கும் கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள் நிறைவேற்றுகையில் இந்த வேறே ஆடுகள் அவர்களை முழுமூச்சுடன் ஆதரிக்கிறார்கள். (மத்தேயு 24:14, NW; யோவான் 14:12) பூமியிலிருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக குறைந்துகொண்டே போகையில், வேறே ஆடுகளின் எண்ணிக்கை சொல்லர்த்தமாய் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இவர்களில் ஆயிரக்கணக்கானோர் பயனியர்கள், மிஷனரிகள் என முழுநேர சுவிசேஷகர்களாக சேவை செய்வதன் மூலம் ராஜ்ய நற்செய்தியை “பூமியின் கடைசி பரியந்தமும்” பரவ செய்கிறார்கள். (அப்போஸ்தலர் 1:8) மற்றவர்கள் தங்களால் இயன்ற வரை சாட்சி கொடுக்கும் இந்த ஊழியத்தில் பங்குகொண்டு, இந்த முக்கிய ஊழியத்திற்கு பண ஆதரவை சந்தோஷமாக அளிக்கிறார்கள்.
16 கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள், வேறே ஆடுகளாகிய தங்கள் தோழர்களின் பற்றுமாறாத ஆதரவுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்! 1986-ல் அடிமை வகுப்பார் அளித்த ‘சமாதானப் பிரபுவின்கீழ்’ உலகமெங்கும் பாதுகாப்பு என்ற ஆங்கில புத்தகத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் நன்கு விவரிக்கப்பட்டன. அது சொல்வதாவது: “இரண்டாவது உலகப் போர் முதற்கொண்டு, இந்த ‘வேறே ஆடுகளான’ ‘திரள்கூட்டத்தார்’ வகிக்கும் பங்கே, ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கான’ இயேசுவின் தீர்க்கதரிசனம் பெருமளவு நிறைவேறுவதற்கு காரணமாக உள்ளது. . . . மத்தேயு 24:14-ல் உள்ள [இயேசுவின்] தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகித்திருப்பதற்காக சகல தேசத்தாரும் பல பாஷைக்காரருமான ‘வேறே ஆடுகளின்’ ‘திரள் கூட்டத்தாருக்கு’ கோடானுகோடி நன்றி!”
‘நம்மையல்லாமல் பூரணராக்கப்படவில்லை’
17. பூமியில் உயிர்த்தெழுப்பப்படவிருக்கும் பூர்வத்தில் வாழ்ந்த உண்மையுள்ளோர் எந்த விதத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ‘இல்லாமல் பூரணராக்கப்படுவதில்லை’?
17 அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் ஒருவராக பேசுகையில், கிறிஸ்துவுக்கு முன்பு வாழ்ந்த உண்மையுள்ள ஆண்களையும் பெண்களையும் குறிப்பிட்டு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று [அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கென்று] முன்னதாக நியமித்திருந்தார்.” (எபிரெயர் 11:35, 39, 40) ஆயிர வருடங்களின்போது, பரலோகத்திலிருக்கும் கிறிஸ்துவும் 1,44,000 பேரான அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களும் அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் செயல்பட்டு, மீட்பின் கிரயமாகிய கிறிஸ்துவின் பலியினுடைய நன்மைகளை பூமியிலிருப்போருக்கு வழங்குவார்கள். இவ்வாறு இந்த வேறே ஆடுகள், உடலிலும் மனதிலும் ‘பரிபூரணராக்கப்படுவார்கள்.’—வெளிப்படுத்துதல் 22:1, 2.
18. (அ) பைபிளின் சத்தியங்கள் எதை புரிந்துகொள்ள வேறே ஆடுகளுக்கு உதவ வேண்டும்? (ஆ) என்ன நம்பிக்கையுடன் “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு” இந்த வேறே ஆடுகள் காத்திருக்கிறார்கள்?
18 இவையெல்லாம், கிறிஸ்துவின்மீதும் அபிஷேகம் செய்யப்பட்ட அவருடைய சகோதரர்கள்மீதும், யெகோவாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கின்மீதும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் அந்தளவுக்கு கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கான காரணத்தை வேறே ஆடுகளின் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும். எனவே, அர்மகெதோனிலும் ஆயிர வருடங்களின்போதும் “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு” காத்திருக்கையில், அபிஷேகம் செய்யப்பட்ட வகுப்பாரை தங்களால் இயன்றளவு எல்லா விதத்திலும் ஆதரிப்பதை ஒப்பற்ற சிலாக்கியமாக இந்த வேறே ஆடுகள் கருதுகிறார்கள். ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்படி’ அவர்கள் எதிர்பார்க்கலாம்.—ரோமர் 8:19-21.
நினைவு ஆசரிப்பின்போது ஆவியில் ஐக்கியப்பட்டிருத்தல்
19. அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் “சத்திய ஆவி” என்ன செய்திருக்கிறது, மார்ச் 28-ம் தேதி, சாயங்காலம், முக்கியமாய் அவர்கள் எவ்வாறு ஐக்கியப்பட்டிருப்பார்கள்?
19 பொ.ச. 33, நிசான் 14-ன் இரவில் தம்முடைய முடிவு ஜெபத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: “அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.” (யோவான் 17:21) கடவுள் அன்பினிமித்தம், அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலமும் இரட்சிப்படைவதற்கு தம்முடைய குமாரன் தம் உயிரைக் கொடுக்கும்படி அவரை அனுப்பினார். (1 யோவான் 2:2) “சத்திய ஆவி” கிறிஸ்துவின் சகோதரர்களையும் அவர்களுடைய தோழர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது. மார்ச் 28-ம் தேதி, சாயங்காலம், சூரிய அஸ்தமனத்திற்குப் பின், கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரவும் தம்முடைய அருமை குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் பலியின் மூலமாக யெகோவா தங்களுக்கு செய்திருக்கிற அனைத்தையும் நினைவுகூரவும் இந்த இரு வகுப்பாரும் ஒன்றுகூடி வருவார்கள். அந்த முக்கிய நிகழ்ச்சியின்போது அவர்கள் கூடிவருவது அவர்களுடைய ஐக்கியத்தைப் பலப்படுத்தி, கடவுளுடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்வதற்கான அவர்களுடைய தீர்மானத்தைப் புதுப்பிப்பதாக; இவ்வாறு, யெகோவாவால் நேசிக்கப்படுபவர்களின் மத்தியில் இருப்பதால் சந்தோஷப்படுகிறார்கள் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறார்கள்.
மறுபார்வைக்காக
• ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு “சத்திய ஆவி” எப்போது அனுப்பப்பட்டது, அது எவ்வாறு ‘உதவியாளனாக’ நிரூபித்தது?
• தாங்கள் பரலோக அழைப்பைப் பெற்றிருப்பது அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு எப்படி தெரியும்?
• எந்தெந்த வழிகளில் கடவுளுடைய ஆவி வேறே ஆடுகளிடம் செயல்படுகிறது?
• எவ்வாறு வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு நன்மை செய்திருக்கிறார்கள், அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ‘இல்லாமல்’ அவர்கள் ‘ஏன் பரிபூரணராக்கப்படுவதில்லை’?
[பக்கம் 21-ன் படம்]
பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் “சத்திய ஆவி” சீஷர்கள்மீது ஊற்றப்பட்டது
[பக்கம் 23-ன் படங்கள்]
பிரசங்கிக்கும்படி கடவுள் கொடுத்த பொறுப்பை நிறைவேற்றுவதில் கிறிஸ்துவின் சகோதரர்களை ஆதரிப்பதன் மூலம் வேறே ஆடுகள் அவர்களுக்கு நன்மை செய்திருக்கிறார்கள்