உள்ளத்தில் உறுதியோடு தொடர்ந்து யெகோவாவை சேவியுங்கள்
“என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது.” —திருப்பாடல்கள் [சங்கீதம்] 57:7, பொ.மொ.
1. தாவீதுக்கு இருந்ததைப் போன்ற நம்பிக்கை ஏன் நமக்கும் இருக்கலாம்?
யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக உண்மை கிறிஸ்தவத்தில் நாம் நிலைத்திருக்கும்படி கிறிஸ்தவ விசுவாசத்தில் நம்மை உறுதியுள்ளவர்களாக ஆக்குவதற்கு அவரால் முடியும். (ரோமர் 14:4) எனவே, பின்வருமாறு பாடும்படி தூண்டப்பட்ட சங்கீதக்காரனாகிய தாவீதுக்கு இருந்த நம்பிக்கை நமக்கும் இருக்கலாம்: “என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; கடவுளே!” (திருப்பாடல்கள் [சங்கீதம்] 108:1, பொ.மொ.) நம் உள்ளம் உறுதியாக இருந்தால் கடவுளுக்கான நம் ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்றும்படி தூண்டப்படுவோம். வழிநடத்துதலுக்கும் பலத்துக்கும் அவரைச் சார்ந்திருப்பதன் மூலம் அசையாதவர்களாகவும், உத்தமத்தைக் காப்பவர்களாக தீர்மானத்திலும் நம்பிக்கையிலும் உறுதிப்பட்டவர்களாகவும், “ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்”கிறவர்களாகவும் நம்மை நிரூபிப்போம்.—1 கொரிந்தியர் 15:58, பொ.மொ.
2, 3. ஒன்று கொரிந்தியர் 16:13-ல் பதிவு செய்யப்பட்டுள்ள பவுலின் புத்திமதிகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
2 பூர்வ கொரிந்துவிலிருந்த, இயேசுவைப் பின்பற்றுவோருக்குக் கொடுக்கப்பட்ட புத்திமதிகள் உண்மையில் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகின்றன. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.” (1 கொரிந்தியர் 16:13) கிரேக்க மொழியில் இந்தக் கட்டளைகள் ஒவ்வொன்றும் நிகழ்காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன, எனவே இவை தொடர்ந்து செயல்படும்படி தூண்டுவிக்கின்றன. இந்த அறிவுரையின் அர்த்தம் என்ன?
3 பிசாசை எதிர்த்து நின்று, கடவுளிடம் நெருங்கி வருவதன் மூலம் ஆவிக்குரிய விதத்தில் நாம் ‘விழித்திருக்கலாம்.’ (யாக்கோபு 4:7, 8) யெகோவாவின்மீது நம்பிக்கை வைத்திருப்பது தொடர்ந்து ஐக்கியப்பட்டவர்களாக இருக்கவும் ‘கிறிஸ்தவ விசுவாசத்திலே நிலைத்திருக்கவும்’ உதவி செய்கிறது. நம்மில் பெரும்பாலான பெண்கள் உட்பட, ராஜ்ய அறிவிப்பாளர்களாக தைரியமாய் கடவுளுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் ‘புருஷராய்’ நடந்துகொள்கிறோம். (சங்கீதம் 68:11, NW) நம்முடைய பரலோக பிதாவின் சித்தத்தை செய்வதற்கு தொடர்ந்து அவரிடம் பலத்தைக் கேட்பதன் மூலம் நாம் ‘திடன்கொள்கிறோம்.’—பிலிப்பியர் 4:13, NW.
4. கிறிஸ்தவர்களாக முழுக்காட்டுதல் பெறும்படி எது நம்மை வழிநடத்தியது?
4 யெகோவாவுக்கு நம்மை நிபந்தனையற்ற விதத்தில் ஒப்புக்கொடுத்து, தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அதை அடையாளப்படுத்திய போது சத்தியத்தை நாம் ஏற்றிருப்பதைக் காட்டினோம். ஆனால் முழுக்காட்டுதல் பெறும்படி எது நம்மை வழிநடத்தியது? முதலாவதாக, நாம் கடவுளுடைய வார்த்தையிலிருந்து திருத்தமான அறிவைப் பெற்றுக்கொண்டோம். (யோவான் 17:3) இது நம்மில் விசுவாசத்தைப் பிறப்பித்தது; முன்பு செய்து வந்த தவறுகளுக்காக உண்மையிலேயே மனம் வருந்தி, அவற்றிலிருந்து மனந்திரும்பும்படி நம்மை தூண்டுவித்தது. (அப்போஸ்தலர் 3:20; எபிரெயர் 11:6) அடுத்ததாக, கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக வாழும்படி தவறான பழக்கவழக்கங்களை விட்டுத் திரும்புவதன் மூலம் நாம் குணப்பட்டோம். (ரோமர் 12:2; எபேசியர் 4:23, 24) இது யெகோவாவிடம் ஜெபத்தில் மனப்பூர்வமாய் நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு வழிநடத்தியது. (மத்தேயு 16:24; 1 பேதுரு 2:21) நல்மனசாட்சியைத் தரும்படி கடவுளிடம் வேண்டினோம், அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருப்பதற்கு அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றோம். (1 பேதுரு 3:21) இந்தப் படிகளைக் குறித்து எண்ணிப் பார்ப்பது, நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய தொடர்ந்து வாழ்வதற்கான தேவைக்குக் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் உள்ளத்தில் உறுதியோடு தொடர்ந்து யெகோவாவை சேவிக்கவும் நமக்கு உதவும்.
திருத்தமான அறிவுக்கான தேடலைத் தொடருங்கள்
5. ஏன் தொடர்ந்து வேதப்பூர்வ அறிவைப் பெற வேண்டும்?
5 கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருப்பதற்கு இசைய வாழ்வதற்கு விசுவாசத்தைப் பலப்படுத்தும் வேதப்பூர்வ அறிவை நாம் தொடர்ந்து பெற வேண்டும். கடவுளைப் பற்றிய சத்தியத்தை ஆரம்பத்தில் அறிந்துகொண்டபோது அந்த ஆவிக்குரிய ஆகாரத்தைப் பெற்றுக்கொள்வதில்தான் எத்தனை ஆனந்தப்பட்டோம்! (மத்தேயு 24:45-47) அந்த “உணவுகள்” ருசியாக இருந்தன, ஆவிக்குரிய விதத்தில் நமக்கு நல்ல போஷாக்கு அளித்தன. இப்போது, யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக நாம் உள்ளத்தில் உறுதியைக் காத்துக்கொள்ள தொடர்ந்து ஊட்டமிக்க ஆவிக்குரிய ஆகாரத்தை உட்கொள்வது அவசியம்.
6. பைபிள் சத்தியத்திடம் மனமார்ந்த போற்றுதலை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு எப்படி உதவி அளிக்கப்பட்டிருக்கலாம்?
6 வேதவசனங்களிலிருந்து இன்னும் அதிக அறிவைப் பெறுவதற்கு முயற்சி தேவைப்படுகிறது. இது புதையலைத் தேடுவதற்கு சமமாக உள்ளது, இதற்குக் கடின முயற்சி தேவை. ஆனால் “தேவனை அறியும் அறிவைக் கண்டடை”வது எவ்வளவாய் பலனளிக்கிறது! (நீதிமொழிகள் 2:1-6) ராஜ்ய அறிவிப்பாளர்களில் ஒருவர் முதன்முறையாக பைபிளை உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வந்தபோது அவர் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். ஒவ்வொரு அதிகாரத்தையும் கலந்தாலோசிக்க அதிக நேரம் எடுத்திருக்கும்; ஒருவேளை ஒரு அதிகாரத்தைப் படிப்பதற்கே பல நாட்கள் செலவழித்திருக்கலாம். குறிப்பிடப்பட்டிருந்த வசனங்களை பைபிளில் திறந்து வாசித்து, கலந்தாலோசித்தது உங்களுக்கு பயனளித்தது. ஏதாவது ஒரு குறிப்பு புரிந்துகொள்வதற்கு கடினமாக இருந்தபோது அது விளக்கப்பட்டது. உங்களுக்கு பைபிளைக் கற்பித்தவர் நன்கு தயாரித்திருந்தார், கடவுளுடைய ஆவிக்காக ஜெபித்திருந்தார், சத்தியத்திடம் மனமார்ந்த நன்றியுணர்வை வளர்க்க உங்களுக்கு உதவினார்.
7. மற்றவர்களுக்கு கடவுளைப் பற்றிய சத்தியத்தைக் கற்பிக்க எது ஒருவரைத் தகுதியுள்ளவராக்குகிறது?
7 இப்படிப்பட்ட முயற்சி பொருத்தமானதே. ஏனெனில், “திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்” என பவுல் எழுதினார். (கலாத்தியர் 6:6) இங்கு அந்த கிரேக்க வாசகம், “உபதேசிக்கப்படுகிறவன்” தன் மனதிலும் இருதயத்திலும் பதியும்படி கடவுளுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. இவ்வாறு நீங்கள் போதிக்கப்பட்டிருப்பது அநேகருக்குப் போதிக்க உங்களைத் தகுதியுள்ளவராக்குகிறது. (அப்போஸ்தலர் 18:25) உங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்க கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து படிப்பதன் மூலம் உங்கள் ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் உறுதியையும் காத்துக்கொள்வது அவசியம்.—1 தீமோத்தேயு 4:13; தீத்து 1:14; தீத்து 2:2.
உங்கள் மனந்திரும்புதலையும் குணப்படுதலையும் நினைவில் வையுங்கள்
8. கடவுள் பயமுள்ள நடத்தையை எப்படி காத்துக்கொள்ள முடியும்?
8 சத்தியத்தைக் கற்று, மனந்திரும்பி, இயேசுவின் கிரய பலியின் மீதுள்ள விசுவாசத்தின் அடிப்படையில் கடவுளுடைய மன்னிப்பை உணர்ந்தபோது அனுபவித்த நிம்மதியை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? (சங்கீதம் 32:1-5; ரோமர் 5:8; 1 பேதுரு 3:18) மீண்டும் பாவ வாழ்க்கைக்கு திரும்ப நீங்கள் உண்மையிலேயே விரும்புவதில்லை. (2 பேதுரு 2:20-22) மற்ற காரியங்களை செய்வதோடு, யெகோவாவிடம் தவறாமல் ஜெபிக்கையில் அது கடவுள் பயமுள்ள நடத்தையைக் காத்துக்கொள்ளவும் உங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழவும் உண்மையுடன் தொடர்ந்து யெகோவாவை சேவிக்கவும் உங்களுக்கு உதவும்.—2 பேதுரு 3:11, 12.
9. பாவ செயல்களிலிருந்து விலகிய பின்பு நாம் என்ன போக்கைப் பின்பற்ற வேண்டும்?
9 பாவ செயல்களை விட்டு விலகி குணப்பட்ட பின்பு, தொடர்ந்து உங்கள் உள்ளத்தை உறுதியாக வைத்துக்கொள்ள எப்போதும் கடவுளுடைய உதவியை நாடுங்கள். சொல்லப்போனால், தவறான நெடுஞ்சாலையில் நீங்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது நம்பகமான வரைபடத்தை கவனித்ததால் சரியான பாதையில் செல்ல ஆரம்பித்தீர்கள். இப்போது வழி தவறிப்போகாமல் இருக்க கவனமாயிருங்கள். தொடர்ந்து கடவுளுடைய வழிநடத்துதலை சார்ந்திருங்கள், ஜீவனுக்குரிய பாதையிலேயே நிலைத்திருக்க தீர்மானமாயிருங்கள்.—ஏசாயா 30:20, 21; மத்தேயு 7:13, 14.
நீங்கள் ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்டதை ஒருபோதும் மறக்காதீர்கள்
10. கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருப்பதன் சம்பந்தமாக என்ன குறிப்புகளை நாம் மனதில் வைக்க வேண்டும்?
10 நித்தியத்திற்கும் யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்ய விரும்புவதை ஜெபத்தில் தெரிவித்து, அவருக்கு உங்களை ஒப்புக்கொடுத்ததை நினைவில் வையுங்கள். (யூதா 20, 21) ஒப்புக்கொடுத்தல், பரிசுத்த நோக்கத்திற்காக பிரித்து வைக்கப்படுவதை அல்லது விலகியிருப்பதைக் குறிக்கிறது. (லேவியராகமம் 15:31; 22:2) உங்கள் ஒப்புக்கொடுத்தல் தற்காலிகமான ஒப்பந்தமோ, மனிதருக்குக் கடமைப்பட்டிருக்கும் ஒரு நிலையோ அல்ல. அது சர்வலோக பேரரசருக்கு நிரந்தரமாக ஒப்புக்கொடுத்திருப்பதைக் குறிக்கிறது; அதற்கு ஏற்ப வாழ்வதற்கு, உயிருள்ளவரை கடவுளுக்கு உண்மைத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆம், “பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.” (ரோமர் 14:7, 8) அவருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிவதிலும், உள்ளத்தில் உறுதியோடு தொடர்ந்து அவரை சேவிப்பதிலுமே நம்முடைய சந்தோஷம் சார்ந்திருக்கிறது.
11. உங்கள் முழுக்காட்டுதலையும் அதன் முக்கியத்துவத்தையும் ஏன் நினைவில் வைக்க வேண்டும்?
11 கடவுளுக்கு மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்திருப்பதன் அடையாளமே உங்கள் முழுக்காட்டுதல் என்பதை எப்போதும் மனதில் வையுங்கள். இது கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட்ட முழுக்காட்டுதல் அல்ல, நீங்களாகவே அதைத் தீர்மானம் செய்தீர்கள். இனி மீதமுள்ள நாளெல்லாம் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக உங்கள் விருப்பத்தை செயல்படுத்துவதில் உறுதியாய் இருக்கிறீர்களா? நல்மனசாட்சியைத் தரும்படி கடவுளிடம் கேட்டீர்கள், உங்களை அவருக்கு ஒப்புக்கொடுத்திருப்பதற்கு அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றீர்கள். உங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்வதன் மூலம் உங்கள் நல்மனசாட்சியைக் காத்துக்கொள்ளுங்கள், அப்போது யெகோவாவின் அபரிமிதமான ஆசீர்வாதம் உங்களுக்கு நிச்சயம்.—நீதிமொழிகள் 10:22.
உங்கள் விருப்பத்திற்கும் பங்குண்டு
12, 13. ஒப்புக்கொடுத்தலுடனும் முழுக்காட்டுதலுடனும் நம்முடைய விருப்பம் எப்படி சம்பந்தப்பட்டுள்ளது?
12 ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும் உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானோருக்கு பெரும் ஆசீர்வாதங்களை உண்மையிலேயே அள்ளித் தந்திருக்கின்றன. கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருப்பதை தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் வெளிக்காட்டுகையில் நம் முந்தைய வாழ்க்கை முறையைப் பொறுத்தமட்டில் நாம் இறந்துவிடுகிறோம்; ஆனால் அப்போது நம்முடைய சொந்த விருப்பங்களை விட்டுவிடுவதில்லை. சரிவர கற்பிக்கப்பட்ட விசுவாசிகளாக, உண்மையில் நம்முடைய விருப்பப்படியே ஜெபத்தில் கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தோம், முழுக்காட்டுதல் பெற்றோம். கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதலைப் பெறுவதற்கு கடவுளுடைய சித்தம் என்ன என்பதை நாம் புரிந்துகொண்டு அதை செய்ய நாமாகவே தெரிவு செய்வது அவசியம். (எபேசியர் 5:17) இப்படியாக நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம். அவர் தாமாகவே மனமுவந்து தச்சு வேலையை விட்டுவிட்டு முழுக்காட்டுதல் பெற்றார், தம்முடைய பரலோக தகப்பனின் சித்தத்தைச் செய்ய தம்மை முழுமையாக அர்ப்பணித்தார்.—சங்கீதம் 40:7, 8; யோவான் 6:38-40.
13 தம்முடைய குமாரன் ‘உபத்திரவங்களினாலே பூரணப்படுவதற்கு’ யெகோவா தேவன் அனுமதித்தார். எனவே விசுவாசத்துடன் அத்தகைய உபத்திரவங்களைச் சகிப்பதற்கு இயேசு தம்முடைய விருப்பத்தை செயல்படுத்த வேண்டியிருந்தது. அதற்காக, அவர் “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல் செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்[டார்].” (எபிரெயர் 2:10, 18; 5:7, 8) அதே போன்ற பயபக்தியை கடவுளிடம் நாம் காட்டினால் நம் ஜெபமும் நிச்சயமாகவே ‘கேட்கப்படும்’; அவருடைய ஒப்புக்கொடுத்த சாட்சிகளாக நம்மை யெகோவா உறுதியுள்ளவர்களாய் நிலைத்திருக்க செய்வார் என நம்பிக்கையுடன் இருக்கலாம்.—ஏசாயா 43:10.
உள்ளத்தில் உறுதியை நீங்கள் காத்துக்கொள்ளலாம்
14. ஏன் பைபிளை தினமும் வாசிக்க வேண்டும்?
14 உள்ளத்தில் உறுதியைக் காத்துக்கொண்டு கடவுளுக்கு செய்த ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்வதற்கு உங்களுக்கு எது உதவும்? கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஊற்றாக பெருக்கெடுக்கும் அறிவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் தினமும் பைபிளை வாசியுங்கள். ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ (NW) வகுப்பார் இதை செய்யும்படியே எப்போதும் நம்மை ஊக்குவிக்கிறார்கள். நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழ்வது கடவுளுடைய சத்தியத்தில் தொடர்ந்து நடப்பதை அவசியப்படுத்துவதால் இப்படிப்பட்ட புத்திமதி கொடுக்கப்படுகிறது. யெகோவாவின் அமைப்பு தெரிந்தே பொய் போதகங்களை ஆதரிக்கிறதென்றால் யெகோவாவின் சாட்சிகளிடமும் அவர்கள் பிரசங்கிக்கிறவர்களிடமும் பைபிளை வாசிக்கும்படியான புத்திமதியை அது ஒருபோதும் கொடுக்காது.
15. (அ) தீர்மானங்களை எடுக்கையில் எதை சிந்திக்க வேண்டும்? (ஆ) வேலையைப் பொருத்ததில் அது கிறிஸ்தவருக்கு இரண்டாம் பட்சமானதே என்று ஏன் சொல்லலாம்?
15 தீர்மானங்களை எடுக்கையில் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதற்கு ஏற்ப நடப்பதை அவை எப்படி பாதிக்கலாம் என்பதை எப்போதும் சிந்தித்துப் பாருங்கள். இது உங்கள் வேலையுடன் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அது உண்மை வணக்கத்திற்கு தோள்கொடுக்கும்படி பார்த்துக்கொள்கிறீர்களா? பொதுவாக, யெகோவாவின் சாட்சிகள் நம்பகமானவர்கள், திறமைசாலிகள் என அவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் அறிந்திருக்கிறார்கள். இருந்தாலும், உலகின் முன்னேற்ற ஏணியில் உயர வேண்டும் என்ற ஆசை வெறிபிடித்தவர்கள் அல்ல, பகட்டான பதவியைப் பிடிக்க மற்றவர்களுடன் போட்டா போட்டி போடுபவர்கள் அல்ல என்பதையும் அவர்கள் கவனித்திருக்கிறார்கள். பணம், பெருமை, புகழ் அல்லது பதவி ஆகியவற்றை அடைவதில் சாட்சிகள் குறியாக இல்லாததே இதற்குக் காரணம். கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்திருப்பதற்கு இசைய வாழ்கிறவர்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதையே மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர்கள் பார்க்கும் வேலை இரண்டாம் பட்சமானதுதான். அப்போஸ்தலன் பவுலைப் போல, கிறிஸ்தவ ஊழியமே அவர்களுடைய பிரதான வேலையாக அல்லது வாழ்க்கை தொழிலாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 18:3, 4; 2 தெசலோனிக்கேயர் 3:7, 8; 1 தீமோத்தேயு 5:8) உங்கள் வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுக்கிறீர்களா?—மத்தேயு 6:25-33.
16. கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருப்பதற்கு இசைய வாழ விடாமல் அளவுக்கு மீறிய கவலை வாட்டினால் என்ன செய்யலாம்?
16 சத்தியத்தைக் கற்றறிவதற்கு முன்பு சிலர் பல்வேறு கவலைகளில் கிட்டத்தட்ட மூழ்கிவிடும் நிலையில் இருந்திருக்கலாம். ஆனால் ராஜ்ய நம்பிக்கையை பெற்றபோதோ ஆனந்தத்தாலும் நன்றியுணர்வாலும் கடவுளுக்கான அன்பாலும் அவர்களுடைய உள்ளத்தில் உற்சாகம் எவ்வளவாய் கரைபுரண்டது! அப்போது முதற்கொண்டு அவர்கள் அனுபவித்திருக்கும் நன்மைகளை எண்ணிப் பார்ப்பது யெகோவாவுக்கு செய்த தங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ பெரிதும் உதவலாம். மறுபட்சத்தில், இளம் மரக்கன்றுகள் கனிதரும் அளவுக்கு வளர்ந்து முதிர்ச்சியடைய விடாமல் முட்கள் அவற்றை நெருக்குவதைப் போல், இன்றைய வாழ்க்கையில் சர்வசாதாரணமாக எழும் பிரச்சினைகளை எண்ணி அளவுக்கு மீறி கவலைப்படுவதால் “தேவனுடைய வசனம்” நெருக்கப்படுமானால் என்ன செய்வது? (லூக்கா 8:7, 11, 14; மத்தேயு 13:22; மாற்கு 4:18, 19) இப்படிப்பட்ட நிலையை நீங்களோ உங்கள் குடும்பத்தாரோ அனுபவிக்க தொடங்கியிருப்பதாக உணர்ந்தால் யெகோவாவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அன்பிலும் போற்றுதலிலும் அதிகமதிகமாக பெருகுவதற்கு உதவி கேட்டு அவரிடம் ஜெபியுங்கள். அவர்மீது உங்கள் பாரத்தைப் போட்டுவிட்டால் அவர் உங்களைக் காப்பார், உள்ளத்தில் உறுதியோடு தொடர்ந்து அவரை சேவிப்பதற்குத் தேவையான பலத்தைக் கொடுப்பார்.—சங்கீதம் 55:22; பிலிப்பியர் 4:6, 7; வெளிப்படுத்துதல் 2:4.
17. கடும் சோதனைகளை எவ்வாறு சமாளிக்க முடியும்?
17 உங்களை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுக்கையில் ஜெபித்தது போலவே அவரிடம் தவறாமல் ஜெபித்துக் கொண்டேயிருங்கள். (சங்கீதம் 65:2) தவறு செய்யும்படியாக தூண்டப்படுகையில் அல்லது கடுமையான சோதனையை சந்திக்கையில் அதை சமாளிக்க, கடவுளுடைய வழிநடத்துதலை நாடி அதன்படி நடப்பதற்கு அவரிடம் உதவி கேளுங்கள். விசுவாசம் தேவை என்பதை மனதில் வையுங்கள்; ஏனெனில், சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “உங்களில் ஒருவன் [சோதனையை சமாளிப்பதற்குத் தேவையான] ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.” (யாக்கோபு 1:5-8) வரும் சோதனை தாங்க முடியாததாக தோன்றினால், “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” என்பதில் உறுதியாய் இருக்கலாம்.—1 கொரிந்தியர் 10:13.
18. மற்றவர்கள் அறியாத மோசமான பாவம் யெகோவாவுக்கான ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழும் நம் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்கையில் என்ன செய்யலாம்?
18 நீங்கள் செய்யும் மோசமான இரகசிய பாவம் ஒன்று உங்கள் மனசாட்சியை உறுத்தி, கடவுளுக்கான ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழும் உங்கள் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்கிறதென்றால் என்ன செய்வது? நீங்கள் மனந்திரும்பியிருந்தால் யெகோவா ‘நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை புறக்கணிக்க மாட்டார்’ என்பதை அறிவதில் நிம்மதி அடைவீர்கள். (சங்கீதம் 51:17) அன்புள்ள கிறிஸ்தவ மூப்பர்களின் உதவியைப் பெறுங்கள். பரலோக தகப்பனுடன் நல்லுறவை மீண்டும் அனுபவிக்க நீங்கள் விரும்புவதை யெகோவாவைப் போலவே மூப்பர்களும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்திருங்கள். (சங்கீதம் 103:10-14; யாக்கோபு 5:13-15) ஆவிக்குரிய பலத்தையும் உள்ளத்தில் உறுதியையும் பெறும்படி புதுப்பிக்கப்படுகையில் உங்கள் பாதையை செவ்வைப்படுத்துவீர்கள், கடவுளுக்கான உங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்வது சாத்தியமாவதையும் காண்பீர்கள்.—எபிரெயர் 12:12, 13.
உள்ளத்தில் உறுதியோடு தொடர்ந்து சேவியுங்கள்
19, 20. நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய தொடர்ந்து வாழ்வது ஏன் அவசியம்?
19 இந்தக் கொடிய காலத்தில் நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்வதற்கும் உள்ளத்தில் உறுதியுடன் தொடர்ந்து கடவுளைச் சேவிப்பதற்கும் நாம் கடுமையாய் உழைக்க வேண்டும். “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” என இயேசு சொன்னார். (மத்தேயு 24:13) நாம் “கடைசிநாட்களில்” வாழ்வதால் முடிவு எந்த சமயத்திலும் வரலாம். (2 தீமோத்தேயு 3:1) மேலும் நம்மில் யார் நாளைக்கு உயிருடன் இருப்போம் என்பது யாருக்குத் தெரியும்? (யாக்கோபு 4:13, 14) எனவே, இன்றே நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக தொடர்ந்து வாழ்வது அவசியம்!
20 இதை தன்னுடைய இரண்டாவது கடிதத்தில் அப்போஸ்தலன் பேதுரு வலியுறுத்தினார். ஜலப்பிரளயத்தில் தேவ பக்தியற்றவர்கள் அழிந்தது போலவே, அடையாள அர்த்தமுள்ள பூமி அல்லது துன்மார்க்க மனித சமுதாயம் ‘யெகோவாவின் நாளில்’ (NW) அழிக்கப்படும் என அவர் காட்டினார். இப்படியிருக்கிறபடியால், “நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!” என உணர்ச்சி மேலிட பேதுரு கேட்டார். மேலும் அவர், “பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், . . . [பொய் போதகர்களாலும் தேவ பக்தியற்றவர்களாலும்] இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு[ங்கள்]” எனவும் அவர்களைத் தூண்டுவித்தார். (2 பேதுரு 3:5-17) முழுக்காட்டுதல் பெற்ற நபர், தவறாக திசை திருப்பப்பட்டு, இறுதியில் உள்ளத்தில் உறுதியைக் காத்துக்கொள்ள தவறியவராக அவருடைய வாழ்க்கை முடிவுறுகிறதென்றால் அது எவ்வளவு வேதனையானது!
21, 22. தாவீதிடத்திலும் உண்மை கிறிஸ்தவர்களிடத்திலும் சங்கீதம் 57:7-லுள்ள வார்த்தைகள் எவ்வாறு உண்மையாய் நிரூபித்திருக்கின்றன?
21 முழுக்காட்டுதல் பெற்ற அந்தச் சந்தோஷமான நாளை உங்கள் நினைவில் வைத்து, உங்களுடைய சொல்லும் செயலும் கடவுளுடைய இருதயத்தைப் பூரிப்படைய செய்ய அவருடைய உதவிக்காக நாடுங்கள்; அப்போது ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்வதற்கான உங்கள் தீர்மானம் பெரிதும் பலப்படுத்தப்படும். (நீதிமொழிகள் 27:11) யெகோவா ஒருபோதும் தம்முடைய ஜனத்தை ஏமாற்றமடையவிடார், நாமும் நிச்சயமாக அவருக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (சங்கீதம் 94:14) எதிரிகளுடைய திட்டங்களைத் தவிடுபொடியாக்கி, தாவீதைக் காப்பதில் கருணையையும் பரிவிரக்கத்தையும் கடவுள் காட்டினார். இதற்கு நன்றி தெரிவிப்பவராய் தாவீது தன்னை காப்பாற்றி விடுவித்தவரிடம் தனக்கிருக்கும் அன்பின் உறுதியையும் அசைவற்ற தன்மையையும் அறிவித்தார். இருதயத்தில் பெருக்கெடுத்த உணர்ச்சியால் அவர் பின்வருமாறு பாடினார்: “என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.”—திருப்பாடல்கள் [சங்கீதம்] 57:7, பொ.மொ.
22 தாவீதைப் போலவே, கடவுளிடம் காட்டும் பக்தியில் உண்மை கிறிஸ்தவர்கள் தடுமாறுவதில்லை. உள்ளத்தில் உறுதியோடு, தங்கள் விடுதலைக்கும் பாதுகாப்புக்கும் யெகோவாவே காரணர் என்று சொல்லி அவருக்கு சந்தோஷத்துடன் துதி பாடுகிறார்கள். உங்கள் உள்ளம் உறுதியாயிருந்தால் அது கடவுளைச் சார்ந்திருக்கும்; அப்போது அவருடைய உதவியுடன் உங்கள் ஒப்புக்கொடுத்தலை நீங்கள் நிறைவேற்ற முடியும். ஆம், நீங்கள் “நீதிமான்” போல் இருப்பீர்கள். அப்படிப்பட்டவர்களைக் குறித்து சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.” (சங்கீதம் 112:6, 7) விசுவாசத்துடன் கடவுள்மீது முழுமையாய் சார்ந்திருக்கையில் உங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழலாம், உறுதியான உள்ளத்தோடு தொடர்ந்து யெகோவாவை சேவிக்கலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• பைபிளிலிருந்து நாம் ஏன் தொடர்ந்து திருத்தமான அறிவைப் பெற வேண்டும்?
• நம்முடைய மனந்திரும்புதலையும் குணப்படுதலையும் ஏன் நினைவில் வைக்க வேண்டும்?
• நம்முடைய ஒப்புக்கொடுத்தலையும் முழுக்காட்டுதலையும் நினைத்துப் பார்ப்பதால் எப்படி நன்மையடையலாம்?
• உள்ளத்தில் உறுதியோடு தொடர்ந்து யெகோவாவைச் சேவிக்க எது நமக்கு உதவும்?
[பக்கம் 18-ன் படம்]
கிறிஸ்தவ ஊழியத்தைப் பிரதான வேலையாக்குவது உள்ளத்தில் உறுதியோடு தொடர்ந்து யெகோவாவை சேவிக்க நமக்கு உதவுகிறது
[பக்கம் 18-ன் படங்கள்]
கடவுளுடைய வார்த்தையைத் தினமும் படிப்பதன் மூலம் உங்கள் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை காத்துக்கொள்கிறீர்களா?