நோவாவின் கப்பற்பதிவு—நமக்கு முக்கியத்துவமுடையதா?
“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.” (மத்தேயு 24:3, 37) தமது பிரசன்னத்தையும் இந்த ஒழுங்குமுறையின் முடிவையும் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தபோது இயேசு சொன்ன வார்த்தைகளே இவை. நம்முடைய காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கும் நோவாவின் நாளில் நடந்த சம்பவங்களுக்கும் ஒற்றுமை இருக்கும் என இயேசு தெளிவாக முன்னுரைத்தார். நோவாவின் நாளில் நடந்த சம்பவங்களைப் பற்றிய நம்பகமான, திருத்தமான பதிவு மதிப்புமிக்க ஒரு பொக்கிஷமாக இருக்கும்.
நோவாவின் கப்பற்பதிவு அத்தகைய ஒரு பொக்கிஷமா? ஓர் உண்மையான வரலாற்று பதிவுக்குரிய சான்றுகள் அதற்கு இருக்கிறதா? ஜலப்பிரளயம் எப்பொழுது சம்பவித்தது என்பதை நாம் உண்மையிலேயே தீர்மானிக்க முடியுமா?
ஜலப்பிரளயம் எப்பொழுது நடந்தது?
காலக்கிரம பதிவை பைபிள் தருகிறது; அதைக் கொண்டு மனித சரித்திரத்தின் ஆரம்பம் வரை காலத்தை கவனமாக கணக்கிட முடியும். ஆதியாகமம் 5:1-29-ல், முதல் மனிதனாகிய ஆதாம் படைக்கப்பட்டது முதல் நோவாவின் பிறப்பு வரையான வம்சாவளி பட்டியலை நாம் காணலாம். ‘நோவாவுக்கு அறுநூறு வயதாகும் வருஷத்தில்’ ஜலப்பிரளயம் வந்தது.—ஆதியாகமம் 7:11.
ஜலப்பிரளயம் ஏற்பட்ட காலத்தை கணிப்பதற்கு, நமக்கு ஒரு மையத் தேதி (pivotal date) வேண்டும். அதாவது, உலக சரித்திரம் ஒத்துக்கொண்ட ஒரு தேதியை அடிப்படையாக வைத்து நாம் கணக்கிட வேண்டும். அதோடு, பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட ஒரு சம்பவத்தோடு அந்தத் தேதி ஒத்திருக்க வேண்டும். இத்தகைய ஒரு குறிப்பிட்ட மையத் தேதியிலிருந்து, இப்பொழுது பொதுவாக பயன்படுத்தப்படும் கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையில் ஜலப்பிரளயம் சம்பவித்த தேதியை நாம் கணக்கிட்டு சொல்ல முடியும்.
அத்தகைய ஒரு மையத் தேதிதான் பொ.ச.மு. 539, இது பெர்சிய அரசனாகிய கோரேசு பாபிலோனை வீழ்த்திய வருடம். பாபிலோனிய சாசனங்களும், டையடோரஸ், ஆஃப்ரிக்கேனஸ், யூஸீபியஸ், டாலமி ஆகியோருடைய ஆவணங்களும் அவருடைய ஆட்சி காலத்திற்குரிய சரித்திரப்பூர்வ ஆதாரங்களாகும். கோரேசுவின் கட்டளைக்கு இணங்கி பொ.ச.மு. 537-ல், யூதர்களில் மீதியானோர் பாபிலோனைவிட்டுப் புறப்பட்டு தங்களுடைய தாயகம் திரும்பினர். அது யூதாவின் 70-வருட பாழ்க்கடிப்பின் முடிவு; பைபிள் பதிவின்படி, இந்தப் பாழ்க்கடிப்பு பொ.ச.மு. 607-ல் ஆரம்பமானது. நியாயாதிபதிகள் மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களுடைய ஆட்சி காலத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தது பொ.ச.மு. 1513-ம் ஆண்டு என்பதை நாம் தீர்மானிக்க முடியும். பைபிள் காலக்கிரமம் நம்மை மற்றொரு 430 வருடங்களுக்கு பின்னோக்கி கொண்டு செல்கிறது, அதாவது பொ.ச.மு. 1943-ல் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்த ஆண்டிற்கு நம்மை கொண்டு செல்கிறது. தேராகு, நாகோர், செரூகு, ரெகூ, பேலேகு, ஏபேர், சாலா, “ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு” பிறந்த அர்பக்சாத் ஆகியோருடைய பிறப்பையும் வயதையும் பற்றிய பதிவையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். (ஆதியாகமம் 11:10-32) இவ்வாறு, ஜலப்பிரளயம் நிகழ்ந்த ஆண்டு பொ.ச.மு. 2370 என நாம் தீர்மானிக்கலாம்.a
ஜலப்பிரளயத்தின் ஆரம்பம்
நோவாவின் நாளைய சம்பவங்களை அலசிப் பார்ப்பதற்கு முன்னர், ஆதியாகமம் 7-ம் அதிகாரம் 11-ம் வசனம் முதல் 8-ம் அதிகாரம் 4-ம் வசனம் வரை தயவுசெய்து வாசியுங்கள். பலத்த மழை பெய்ததைப் பற்றி நமக்கு இவ்வாறு சொல்லப்படுகிறது: “நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் [பொ.ச.மு. 2370] இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.”—ஆதியாகமம் 7:11.
ஒவ்வொரு மாதத்திற்கு 30 நாட்கள் என்ற வீதத்தில் அந்த வருடத்தை நோவா 12 மாதங்களாகப் பிரித்தார். பூர்வ காலங்களில், வருடத்தின் முதல் மாதம் நம்முடைய நாட்காட்டியின்படி ஏறத்தாழ செப்டம்பர் மாத மத்திபத்தில் துவங்கியது. “இரண்டாம் மாதம் பதினேழாம் தேதி”யில் பெருமழை பெய்யத் தொடங்கியது. பொ.ச.மு. 2370 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 40 நாட்கள் இரவும் பகலும் விடாது மழை பெய்தது.
ஜலப்பிரளயத்தைப் பற்றி மேலும் நமக்கு இவ்வாறு சொல்லப்படுகிறது: “ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக் கொண்டிருந்தது. . . . ஜலம் பூமியிலிருந்து நாளுக்கு நாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது. ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின் மேல் தங்கிற்று.” (ஆதியாகமம் 7:24–8:4) ஆகவே, தண்ணீர் முழு பூமியையும் நிரப்ப ஆரம்பித்தது முதல் அது வற்றியது வரை 150 நாட்கள், அல்லது ஐந்து மாதங்கள் சென்றன. கடைசியில், அந்தப் பேழை பொ.ச.மு. 2369 ஏப்ரல் மாதத்தில் அரராத் மலைகளில் வந்து நின்றது.
இப்பொழுது நீங்கள் ஆதியாகமம் 8:5-17-ஐ வாசிக்க விரும்பலாம். சுமார் இரண்டரை மாதங்கள் (73 நாட்கள்) கழித்து, அதாவது “பத்தாம் மாதம் [ஜூன்] முதல் தேதியிலே” மலைச் சிகரங்கள் தெரிய ஆரம்பித்தன. (ஆதியாகமம் 8:5)b மூன்று மாதங்களுக்கு (90 நாட்களுக்குப்) பிறகு, அதாவது நோவாவுக்கு “அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே,” அல்லது பொ.ச.மு. 2369 செப்டம்பர் மாத மத்திபத்தில், நோவா பேழையின் மேல்தட்டை திறந்து பார்த்தார். அப்பொழுது “பூமியின் மேல் ஜலம் இல்லாதிருந்தது.” (ஆதியாகமம் 8:13) ஒரு மாதம் 27 நாட்கள் (57 நாட்கள்) கழித்து, “இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே [பொ.ச.மு. 2369 நவம்பர் மத்திபத்தில்] பூமி காய்ந்திருந்தது.” நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழையைவிட்டு இறங்கி காய்ந்த தரையில் கால் வைத்தனர். ஆகவே, நோவாவும் மற்றவர்களும் சந்திர நாட்காட்டியின்படி ஒரு வருடமும் பத்து நாட்களும் (370) பேழைக்குள் இருந்தனர்.—ஆதியாகமம் 8:14.
சம்பவங்கள், விவரங்கள், காலங்கள் பற்றிய இந்தத் துல்லியமான பதிவுகள் எதை நிரூபிக்கின்றன? தனக்குக் கிடைத்த பதிவுகளின் அடிப்படையில் ஆதியாகம பதிவை எழுதிய எபிரெய தீர்க்கதரிசியாகிய மோசே, புராணக் கதையை அல்ல ஆனால் உண்மை சம்பவங்களைத்தான் எழுதினார் என்பதையே இவை நிரூபிக்கின்றன. ஆகவே ஜலப்பிரளயம் இன்று நமக்கு அதிக முக்கியத்துவமுடையது.
ஜலப்பிரளயத்தைப் பற்றி பிற பைபிள் எழுத்தாளர்களின் கருத்து என்ன?
ஆதியாகம பதிவைத் தவிர, நோவாவை அல்லது ஜலப்பிரளயத்தைப் பற்றி பைபிளில் பல மேற்கோள்கள் இருக்கின்றன. உதாரணமாக:
(1) நோவாவையும் அவருடைய குமாரர்களையும் (சேம், காம், யாப்பேத்) இஸ்ரவேலரின் வம்சாவளி பட்டியலில் ஆராய்ச்சியாளராகிய எஸ்றா சேர்த்தார்.—1 நாளாகமம் 1:4-17.
(2) இயேசு கிறிஸ்துவின் மூதாதையரைப் பற்றி பட்டியலிடும்போது மருத்துவரும் சுவிசேஷ எழுத்தாளருமாகிய லூக்கா நோவாவையும் அதில் சேர்த்திருக்கிறார்.—லூக்கா 3:36.
(3) அப்போஸ்தலனாகிய பேதுரு சக கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது ஜலப்பிரளயத்தைப் பற்றி பல தடவை குறிப்பிடுகிறார்.—2 பேதுரு 2:5; 3:5, 6.
(4) நோவா தனது குடும்பத்தார் தப்பிப்பிழைப்பதற்காக பேழையை கட்டுவதன் மூலம் ஆழமான விசுவாசத்தைக் காட்டினார் என அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார்.—எபிரெயர் 11:7.
கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலில் எழுதிய இந்த எழுத்தாளர்கள் ஜலப்பிரளயத்தைப் பற்றிய ஆதியாகம பதிவை ஏற்றுக்கொண்டார்களா என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்க முடியுமா? அது உண்மை சம்பவம் என அவர்கள் கருதினார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இயேசுவும் ஜலப்பிரளயமும்
இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக பிறப்பதற்கு முன்னரே வாழ்ந்து வந்தார். (நீதிமொழிகள் 8:30, 31) ஜலப்பிரளயத்தின் போது பரலோகத்தில் ஆவி சிருஷ்டியாக இருந்தார். ஆகவே, நோவாவையும் ஜலப்பிரளயத்தையும் பற்றிய சம்பவத்திற்கு இயேசு கண்கண்ட சாட்சியாக பைபிளில் மாபெரும் அத்தாட்சி அளிக்கிறார். “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” என அவர் கூறினார்.—மத்தேயு 24:37-39.
இந்த ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றி நம்மை எச்சரிப்பதற்கு ஒரு கட்டுக்கதையை இயேசு பயன்படுத்துவாரா? நிச்சயமாகவே மாட்டார்! பொல்லாத ஜனங்கள் மீது கடவுள் தமது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றியதைப் பற்றிய உண்மை சம்பவத்தையே அவர் பயன்படுத்தினார் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம். ஆம், அநேகர் தங்களுடைய ஜீவனை இழந்தனர், ஆனால் நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் ஜலப்பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்டதை அறிந்து நாம் ஆறுதல் அடையலாம்.
இன்று வாழ்கிற மக்களுக்கு, அதாவது ‘மனுஷகுமாரனாகிய [இயேசு கிறிஸ்துவின்] பிரசன்னத்தின்’ (NW) போது வாழ்கிற மக்களுக்கு, ‘நோவாவின் நாளில்’ நடந்த சம்பவம் அதிக முக்கியத்துவமுடைய ஒன்று. நோவாவின் கப்பற்பதிவில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பூகோள ஜலப்பிரளயத்தைப் பற்றிய விரிவான பதிவை நாம் வாசிக்கும்போது, இது உண்மையான வரலாற்றுப்பூர்வ ஆவணம் என்பதில் உறுதியுடன் இருக்கலாம். அதோடு, ஜலப்பிரளயத்தைப் பற்றி கடவுளின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட அந்த ஆதியாகமப் பதிவு நமக்கு அதிக முக்கியத்துவமுடைய ஒன்று. தப்பிப்பிழைப்பதற்காக கடவுள் செய்த ஏற்பாட்டில் நோவாவும் அவருடைய குமாரர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் விசுவாசம் வைத்தது போலவே, நாமும் இன்று இயேசுவின் மீட்கும் கிரய பலியில் விசுவாசம் வைத்து யெகோவாவின் காக்கும் கரங்களில் அடைக்கலம் புகலாம். (மத்தேயு 20:28) மேலும், அன்று தேவபக்தியற்ற உலகத்தாருக்கு அழிவைக் கொண்டுவந்த ஜலப்பிரளயத்திலிருந்து நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் தப்பிப்பிழைத்ததாக நோவாவின் கப்பற்பதிவு காட்டுகிறது; அது போலவே, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை அழிக்கப்படுகையில் தப்பிப்பிழைக்கும் மக்கள் மத்தியில் நாமும் இருப்போம் என்ற நம்பிக்கையோடிருக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a ஜலப்பிரளயத்தின் தேதி பற்றிய கூடுதல் தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கங்கள் 458-60-ஐக் காண்க.
b பழைய ஏற்பாட்டின் பேரில் கைல்-டெலிட்ஷ் விளக்கவுரை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கம் 148 இவ்வாறு கூறுகிறது: “பேழை தரைதட்டி நின்ற பிறகு ஒருவேளை 73 நாட்கள் கழித்து, மலைச் சிகரங்கள் தெரிந்திருக்கலாம், அதாவது பேழையை சூழ்ந்திருந்த அர்மீனிய மேட்டு நிலங்களின் முகடுகள் தெரிய ஆரம்பித்திருக்கலாம்.”
[பக்கம் 5-ன் பெட்டி]
அவர்கள் அவ்வளவு காலம் வாழ்ந்தார்களா?
“நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்” என பைபிள் கூறுகிறது. (ஆதியாகமம் 9:29) நோவாவின் தாத்தாவாகிய மெத்தூசலா 969 வயது வரை வாழ்ந்தார்; பதிவு செய்யப்பட்டதிலேயே நீண்ட ஆயுசு இதுதான். ஆதாம் முதல் நோவா வரை பத்து தலைமுறையினரின் சராசரி ஆயுட்காலம் 850 ஆண்டுகளுக்கும் மேல் இருந்தது. (ஆதியாகமம் 5:5-31) அப்போது வாழ்ந்தவர்கள் அவ்வளவு காலம் வாழ்ந்தார்களா?
மனிதன் என்றென்றும் வாழ வேண்டும் என்பதே கடவுளுடைய ஆதி நோக்கம். முதல் மனிதனாகிய ஆதாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் அவன் இறந்திருக்கவே மாட்டான், அப்படிப்பட்ட எதிர்பார்ப்புடன்தான் அவன் படைக்கப்பட்டான். (ஆதியாகமம் 2:15-17) ஆனால் அவன் கீழ்ப்படியாமல் போனதால் அந்த வாய்ப்பை இழந்தான். 930 வருடம் உயிர் வாழ்ந்து, படிப்படியாக மரண தறுவாய்க்கு வந்து அவன் எடுக்கப்பட்ட மண்ணிற்கே திரும்பினான். (ஆதியாகமம் 3:19; 5:5) முதல் மனிதன் பாவத்தையும் மரணத்தையும் தனது வருங்கால சந்ததியாருக்கு ஆஸ்தியாக விட்டு சென்றான்.—ரோமர் 5:12.
என்றாலும், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆதாமின் பரிபூரண நிலையை ஒட்டிய காலத்தில் வாழ்ந்ததால், பின் சந்ததியாரைவிட அதிக காலம் வாழ்ந்தார்கள் என தெரிகிறது. ஆகவே ஜலப்பிரளயத்திற்கு முந்தைய காலப்பகுதியில் மனிதன் சுமார் ஆயிரம் வயது வரை வாழ்ந்தான், ஆனால் ஜலப்பிரளயத்திற்குப்பின் விரைவாக இதில் சரிவு ஏற்பட்டது. உதாரணமாக, ஆபிரகாம் 175 வயது வரைதான் வாழ்ந்தார். (ஆதியாகமம் 25:7) உண்மையுள்ள அந்த முற்பிதாவிற்குப் பின் சுமார் 400 வருடங்கள் கழித்து, தீர்க்கதரிசியாகிய மோசே இவ்வாறு எழுதினார்: “எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே.” (சங்கீதம் 90:10) இன்றைக்கும் இதே நிலைமைதான்.
[பக்கம் 6, 7-ன் அட்டவணை/படங்கள்]
சிறையிருப்பிலிருந்த யூதர்கள் தாயகம் திரும்ப கோரேசு கட்டளை பிறப்பித்ததிலிருந்து நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்திற்கு பின்னோக்கி கணக்கிடுதல்
537 கோரேசுவின் கட்டளைc
539 பெர்சியனாகிய கோரேசு பாபிலோனை வீழ்த்துதல்
68 வருடங்கள்
607 யூதாவின் 70 வருட பாழ்க்கடிப்பு ஆரம்பமாகிறது
தலைவர்கள், நியாயாதிபதிகள்,
இஸ்ரவேலின் ராஜாக்கள்
ஆகியோர் மேற்பார்வை
செய்த 906 வருடங்கள்
1513 இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்படுதல்
430 வருடங்கள் எகிப்திலும் கானானிலும் இஸ்ரவேலர் வாழ்ந்த 430
வருடங்கள் (யாத்திராகமம் 12:40, 41)
1943 ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துதல்
205 வருடங்கள்
2148 தேராகுவின் பிறப்பு
222 வருடங்கள்
2370 ஜலப்பிரளயத்தின் ஆரம்பம்
[அடிக்குறிப்பு]
c சிறையிருப்பிலிருந்த யூதர்களின் விடுதலை பற்றி, ‘பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுவின் முதலாம் வருஷத்தில்,’ ஒருவேளை பொ.ச.மு. 538-ல் அல்லது பொ.ச.மு. 537 ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.