ஏமாறாதபடி கவனமாயிருங்கள்
‘வீணான ஏமாற்றுப் பேச்சால் உங்களை யாரும் கவர்ந்துகொள்ளாதபடி கவனமாயிருங்கள்.’—கொலோசெயர் 2:8, பொது மொழிபெயர்ப்பு.
1-3. (அ) ஏமாற்று வேலைகள் அன்றாட வாழ்க்கையின் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களிலும் ஊடுருவியுள்ளன என்பதை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன? (ஆ) இந்த உலகில் காணப்படும் ஏமாற்று வேலைகளைப் பார்த்து நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை?
“உங்களில் எத்தனை பேருக்கு பொய்யே சொல்லாத கட்சிக்காரர்கள் இருந்திருக்கிறார்கள்?” சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டவியல் பேராசிரியர் ஒருவர் நடத்திய ஆய்வில் கேட்கப்பட்ட கேள்வியே இது. அவருக்கு கிடைத்த பதில்? “ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களில் ஒருவருக்கு மட்டுமே பொய் சொல்லாத கட்சிக்காரர் இருந்திருக்கிறார்” என அவர் சொல்கிறார். காரணம்? “அவர் அப்போதுதான் முதன் முதலாக ஒரு பெரிய நிறுவனத்தில் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருந்தார்; அதனால் அவர் எந்தவொரு கட்சிக்காரரிடமும் வழக்கு தொடர்பாக பேசவே ஆரம்பிக்கவில்லையாம்.” இந்த விஷயம் வருத்தகரமான ஒரு உண்மைக்கு—இன்றைய உலகில் பொய்யும் புரட்டும் ஏமாற்று வேலையும் சர்வசாதாரணம் என்ற உண்மைக்கு—ஓர் எடுத்துக்காட்டு.
2 ஏமாற்று வேலைகள் பல விதங்களில் உருவெடுக்கின்றன; இன்றைய வாழ்க்கையின் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களிலும் ஊடுருவியிருக்கின்றன. மீடியாவில் வரும் செய்திகளில் இதற்கு எக்கச்சக்கமான உதாரணங்களைக் காணலாம்—அரசியல்வாதிகள் பொய் சொல்கிறார்கள், கணக்கர்களும் வழக்கறிஞர்களும் கூட்டு நிறுவனங்களின் லாபத்தை மிகைப்படுத்திக் காட்டுகிறார்கள், விளம்பரதாரர்கள் நுகர்வோரை மோசம்போக்குகிறார்கள், பாலிசிதாரர்கள் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளை ஏமாற்ற வழக்கு தொடுக்கிறார்கள், இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகளே. இவற்றை தவிர, மதத்தின் ஏமாற்று வேலையும் இருக்கிறது. ஆத்துமா அழியாமை, நரக அக்கினி, திரித்துவம் போன்ற பொய்க் கோட்பாடுகளை மக்களுக்கு குருமார் போதித்து அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.—2 தீமோத்தேயு 4:3, 4.
3 இந்த ஏமாற்று வேலைகளையெல்லாம் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டுமா? வேண்டியதில்லை. ‘கடைசி நாட்களைக்’ குறித்து பைபிள் இவ்வாறு எச்சரித்துள்ளது: “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.” (2 தீமோத்தேயு 3:1, 13) சத்திய பாதையை விட்டு வழிவிலகச் செய்கிற மோசம்போக்கும் கருத்துக்களைக் குறித்து கிறிஸ்தவர்களாகிய நாம் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். அப்படியானால் மனதில் இயல்பாகவே இரண்டு கேள்விகள் எழும்புகின்றன: ஏமாற்று வேலை ஏன் இன்று தலைவிரித்தாடுகிறது, நாம் ஏமாறாதபடி நம்மை எப்படி காத்துக்கொள்ளலாம்?
இன்று ஏன் இத்தனை ஏமாற்று வேலைகள்?
4. இந்த உலகில் ஏமாற்று வேலைகள் தலைவிரித்தாடுவதற்கான காரணத்தை பைபிள் எப்படி விளக்குகிறது?
4 இந்த உலகில் ஏமாற்று வேலைகள் தலைவிரித்தாடுவதற்கான காரணத்தை பைபிள் தெளிவுபடுத்துகிறது. “உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். (1 யோவான் 5:19) பிசாசாகிய சாத்தானே அந்தப் ‘பொல்லாங்கன்.’ அவனைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னார்: “சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.” அப்படியானால், இந்த உலகம் அதன் அதிபதியின் மனப்பான்மையையும் தராதரங்களையும் வஞ்சனையான பண்புகளையுமே பிரதிபலிக்கிறது என்பதில் ஆச்சரியமுண்டா?—யோவான் 8:44; 14:30; எபேசியர் 2:1-3.
5. இந்த முடிவின் காலத்தில் சாத்தான் தன்னுடைய முயற்சிகளில் எவ்வாறு தீவிரமாக இறங்கியுள்ளான், முக்கியமாக அவன் யாரை குறிவைத்துள்ளான்?
5 இந்த முடிவின் காலத்தில், சாத்தான் தன்னுடைய முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளான். ஏனெனில், அவன் பூமிக்கு தள்ளப்பட்டிருக்கிறான். தனக்கு இனி கொஞ்ச காலம் மட்டுமே இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறான், அதனால் ‘மிகுந்த கோபங்கொண்டிருக்கிறான்.’ தன்னால் முடிந்த மட்டும் அநேகரை அழிக்க வேண்டும் என உறுதிபூண்டிருப்பதால், ‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:9, 12) சாத்தான் ஏதோவொரு சமயத்தில் மட்டும் ஏமாற்றுபவன் அல்ல. மாறாக, மனிதகுலத்தை மோசம்போக்குவதற்கு அவன் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறான்.a அவிசுவாசிகளின் மனங்களை குருடாக்கி, கடவுளிடமிருந்து அவர்களை விலக்குவதற்கு தந்திரம், துரோகம் உட்பட சகல ஏமாற்று வழிகளையும் பயன்படுத்துகிறான். (2 கொரிந்தியர் 4:4) ஏமாற்றுவதில் வல்லவனான அவன், முக்கியமாக கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குபவர்களை விழுங்க வேண்டுமென்று குறிவைத்துள்ளான். (யோவான் 4:24; 1 பேதுரு 5:8) சொல்லப்போனால், ‘எவரையும் கடவுளிடமிருந்து பிரிக்க என்னால் முடியும்’ என சாத்தான் சபதம் செய்திருக்கிறான் என்பதை ஒருகாலும் மறந்துவிடாதீர்கள். (யோபு 1:9-12) ஆகவே, சாத்தானுடைய “ஏமாற்று வழிகள்” சிலவற்றையும் அவற்றிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்ளலாம் என்பதையும் இப்போது பார்க்கலாம்.—எபேசியர் 6:11, பொ.மொ.
விசுவாச துரோகிகளால் ஏமாற்றப்படாமல் காத்துக்கொள்ளுங்கள்
6, 7. (அ) விசுவாச துரோகிகள் தங்களைப் பற்றி என்ன சொல்லிக் கொள்ளலாம்? (ஆ) விசுவாச துரோகிகளின் நோக்கத்தை பைபிள் எப்படி தெளிவுபடுத்துகிறது?
6 கடவுளுடைய ஊழியர்களை கெடுத்துப்போட வெகு காலமாகவே விசுவாச துரோகிகளை சாத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறான். (மத்தேயு 13:36-39) விசுவாச துரோகிகள் யெகோவாவை வணங்குவதாகவும் பைபிளை நம்புவதாகவும் சொல்லிக்கொள்ளலாம்; ஆனால், அவரது காணக்கூடிய அமைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சிலரோ, கடவுளுக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிற பொய்மத உலக பேரரசாகிய ‘மகா பாபிலோனின்’ கோட்பாடுகளைக்கூட பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 17:5; 2 பேதுரு 2:19-22) விசுவாச துரோகிகளின் உள்நோக்கங்களையும் சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்துவதற்கு பைபிள் எழுத்தாளர்கள் கடவுளுடைய ஏவுதலினால் வலிமைமிக்க வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்கள்.
7 விசுவாச துரோகிகளின் நோக்கம்தான் என்ன? விசுவாச துரோகிகளில் அநேகர், உண்மையான மதம் என தாங்கள் ஒரு காலத்தில் கருதியிருந்த மதத்தைவிட்டு தாங்கள் மட்டும் விலகுவதோடு திருப்தியடைவதில்லை. தங்களுடன் மற்றவர்களையும் இழுத்துச் செல்லவே பெரும்பாலும் விரும்புகிறார்கள். அவர்களில் பலர், தாங்களாகவே புதிய சீஷர்களை தேடி உருவாக்குவதற்கு பதிலாக, கிறிஸ்துவின் “சீஷர்களை தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி” வழிதேடுகிறார்கள். (அப்போஸ்தலர் 20:29, 30) பொய்ப் போதகர்களைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் இந்த அவசர எச்சரிப்பை விடுத்தார்: ‘வீணான ஏமாற்றுப் பேச்சால் உங்களை யாரும் கவர்ந்துகொள்ளாதபடி கவனமாயிருங்கள்.’ (கொலோசெயர் 2:8, பொ.மொ.) விசுவாச துரோகிகள் பலர் எதை செய்ய முயலுகிறார்கள் என்பதை இது காட்டுகிறதல்லவா? ஒரு கடத்தல்காரன் அஜாக்கிரதையான ஒருவரை அவரது வீட்டாரிடமிருந்து கடத்திச் செல்வதைப் போலவே, விசுவாச துரோகிகளும் தங்களை நம்புகிற சபையினர் சிலரை மந்தையிலிருந்து கவர்ந்து சென்றுவிடுகிறார்கள்.
8. விசுவாச துரோகிகள் தங்களுடைய நோக்கத்தை அடைய கையாளும் உத்திகள் யாவை?
8 விசுவாச துரோகிகள் தங்களுடைய நோக்கத்தை அடைய கையாளும் உத்திகள் என்ன? திரிக்கப்பட்ட உண்மைகள், அரைகுறையான உண்மைகள், அப்பட்டமான பொய்கள் ஆகியவையே பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தும் உத்திகள். ‘எல்லாவிதத் தீமையான பொய்களையும் சொல்வோர்’ தம்முடைய சீஷர்களை வஞ்சிப்பார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். (மத்தேயு 5:11, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) அப்படிப்பட்ட தீய எண்ணமுடைய விரோதிகள் மற்றவர்களை வஞ்சிப்பதற்காக உண்மை அல்லாதவற்றையே சொல்வார்கள். ‘தந்திரமான வார்த்தைகளைப்’ பயன்படுத்தி, ‘வஞ்சக போதனைகளைப்’ பரப்பி, ‘வேதவாக்கியங்களைப் புரட்டுகிற’ விசுவாச துரோகிகளைப் பற்றி அப்போஸ்தலனாகிய பேதுரு எச்சரித்திருக்கிறார். (2 பேதுரு 2:3, 13, NW; 3:16) வருத்தகரமாக, ‘சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப் போடுவதில்’ விசுவாச துரோகிகள் வெற்றி காண்கிறார்கள்.—2 தீமோத்தேயு 2:18.
9, 10. (அ) விசுவாச துரோகிகளால் வஞ்சிக்கப்படாமல் நம்மை எப்படி காத்துக்கொள்ளலாம்? (ஆ) கடவுளுடைய நோக்கத்தைக் குறித்த நம்முடைய புரிந்துகொள்ளுதலை சரிப்படுத்த வேண்டியிருந்தால் நாம் ஏன் குழப்பமடைவதில்லை?
9 விசுவாச துரோகிகளால் வஞ்சிக்கப்படாமல் நம்மை எப்படி காத்துக்கொள்ளலாம்? கடவுளுடைய வார்த்தை தரும் ஆலோசனைக்கு கவனம் செலுத்துவதன் மூலம் காத்துக்கொள்ளலாம். அது இவ்வாறு சொல்கிறது: ‘நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகுங்கள்.’ (ரோமர் 16:17) வாய்மொழியாகவோ, எழுத்து வடிவிலோ அல்லது இன்டர்நெட் மூலமாகவோ அவர்களிடமிருந்து வரும் நியாயவிவாதங்களை அறவே நிராகரிப்பதன் மூலம் நாம் அவற்றை ‘விட்டு விலகுகிறோம்.’ நாம் ஏன் அப்படிப்பட்ட நிலைநிற்கையை எடுக்கிறோம்? முதல் காரணம், கடவுளுடைய வார்த்தையே அவ்வாறு செய்யும்படி நம்மை வழிநடத்துகிறது; அதோடு நம்முடைய மிகச் சிறந்த நலனில் யெகோவாவுக்கு எப்போதுமே அக்கறை இருக்கிறது என்றும் நாம் நம்புகிறோம்.—ஏசாயா 48:17, 18.
10 இரண்டாவது காரணம், நமக்கு மதிப்புமிக்க சத்தியங்களை கற்றுத் தந்திருக்கிற யெகோவாவின் அமைப்பை நாம் நேசிக்கிறோம்; அந்த சத்தியங்களே மகா பாபிலோனிலிருந்து நம்மை தெளிவாக வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன. அதே சமயத்தில், கடவுளுடைய நோக்கங்களைக் குறித்து நாம் பெற்றிருக்கிற அறிவு பூரணமானதல்ல என்பதை ஒப்புக்கொள்கிறோம்; கடந்த பல வருடங்களில் நம்முடைய புரிந்துகொள்ளுதலில் சில சரிப்படுத்தல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட எல்லா சரிப்படுத்தல்களுக்காகவும் விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் யெகோவாவை நோக்கி பொறுமையாக காத்திருக்க மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (நீதிமொழிகள் 4:18) அதே சமயத்தில், கடவுள் பயன்படுத்துகிற அமைப்பை நாம் புறக்கணித்துவிட மாட்டோம்; ஏனெனில் அதன் மீது அவருடைய ஆசீர்வாதம் இருப்பதற்கு தெளிவான அத்தாட்சியை காண்கிறோம்.—அப்போஸ்தலர் 6:7; 1 கொரிந்தியர் 3:6.
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதிலிருந்து காத்துக்கொள்ளுதல்
11. தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் மனப்பான்மை அபூரண மனிதரிடம் இருப்பது ஏன்?
11 அபூரண மனிதரிடம் உள்ள ஒரு மனப்பான்மையை சாத்தான் அடிக்கடி தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறான்; அதுதான் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் மனப்பான்மை. “இருதயமே எல்லாவற்றிலும் வஞ்சனையுள்ளது, மிகவும் கெட்டுப்போனது” என எரேமியா 17:9 (திருத்திய மொழிபெயர்ப்பு) சொல்கிறது. “அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு மயங்கி சோதனைக்குட்படுகிறான்” என யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 1:14, தி.மொ.) நம் இருதயம் பாவ இச்சைக்கு மயங்கிவிடுமானால் அந்த பாவ இச்சையை அது நம் கண்களுக்கு முன்பாக கவர்ச்சியாகவும் தீங்கற்றதாகவும் தோன்றும்படி செய்யலாம். அப்படி தோன்றும் காட்சி வஞ்சகமானது; ஏனெனில் அத்தகைய பாவத்துக்கு இடமளிப்பது கடைசியில் அழிவிற்கே வழிநடத்தும்.—ரோமர் 8:6.
12. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதால் என்னென்ன வழிகளில் நாம் சிக்கிவிடலாம்?
12 நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது எளிதில் நம்மை கண்ணியில் சிக்க வைத்து விடும். வஞ்சனையுள்ள இருதயம் ஒரு மோசமான சுபாவத்தை நியாயப்படுத்தலாம் அல்லது வினைமையான பாவத்துக்கு ஏதாவது சாக்குபோக்கு சொல்லலாம். (1 சாமுவேல் 15:13-15, 20, 21) கெட்டுப்போன நம் இருதயம் சந்தேகத்திற்குரிய நடத்தையை நியாயப்படுத்த வழிகளையும் தேடலாம். உதாரணத்திற்கு பொழுதுபோக்கு விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சில பொழுதுபோக்குகள் ஆரோக்கியமானவை, ஆனந்தமானவை. என்றாலும், இந்த உலகின் பெரும்பாலான பொழுதுபோக்குகள்—திரைப் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், இன்டர்நெட் சைட்டுகள்—அசிங்கமானவை, ஆபாசமானவை. தரங்கெட்ட இந்தப் பொழுதுபோக்குகளால் நமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என நம்பிவிடுவது சுலபம். “என்னுடைய மனசாட்சிக்கு இது ஒன்றும் தவறாக படவில்லை, அப்படியிருக்கும்போது அதில் என்ன பிரச்சினை?” என்றும்கூட சிலர் நியாயங்காட்டலாம். ஆனால், அப்படிப்பட்ட ஆட்கள் ‘பொய்யான நியாயவிவாதங்களால் தங்களையே வஞ்சிக்கிறார்கள்.’—யாக்கோபு 1:22, NW.
13, 14. (அ) நம் மனசாட்சி எப்போதுமே பாதுகாப்பான வழிகாட்டியாக இருப்பதில்லை என்பதை என்ன பைபிள் உதாரணம் காட்டுகிறது? (ஆ) நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாதபடி எப்படி கவனமாயிருக்கலாம்?
13 நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதிலிருந்து எப்படி காத்துக்கொள்ளலாம்? மனிதனுடைய மனசாட்சி எப்போதுமே நம்பகமானதல்ல என்பதை முதலாவதாக நாம் மனதில் வைத்திருப்பது அவசியம். அப்போஸ்தலனாகிய பவுலின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு, கிறிஸ்துவின் சீஷர்களை அவர் துன்புறுத்தினார். (அப்போஸ்தலர் 9:1, 2) அந்த சமயத்தில் அவர் செய்த காரியம் அவருடைய மனசாட்சியை உறுத்தியிருக்காது. என்றாலும் அது அப்போது தவறாக வழிநடத்தப்பட்டிருந்தது என்பது தெளிவாக இருக்கிறது. ஏனெனில், ‘நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தேன்’ என்று அவரே சொன்னார். (1 தீமோத்தேயு 1:13) ஆகவே, குறிப்பிட்ட ஒரு பொழுதுபோக்கு நம் மனசாட்சியை உறுத்தவில்லை என்பதற்காக நாம் தேர்ந்தெடுத்த அந்த வழி சரியானதென சொல்லிவிட முடியாது. கடவுளுடைய வார்த்தையால் பயிற்றுவிக்கப்பட்ட நல்மனசாட்சியே பாதுகாப்பான வழிகாட்டியாக இருக்க முடியும்.
14 நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதைத் தவிர்க்க நாம் மனதில் வைக்க வேண்டிய பயனுள்ள சில ஆலோசனைகள் இதோ: ஜெபசிந்தையுடன் உங்களையே அலசி ஆராயுங்கள். (சங்கீதம் 26:2; 2 கொரிந்தியர் 13:5) நேர்மையோடு உங்களையே அலசி ஆராய்வது உங்களுடைய கருத்துக்களில் அல்லது வழிகளில் சில மாற்றங்களை செய்வதன் அவசியத்தை உங்களுக்கு உணர்த்தும். பிறர் சொல்வதைக் கேளுங்கள். (யாக்கோபு 1:19) பொதுவாக நாம் சுய பரிசோதனை செய்கையில் நம் பக்கமே நாம் சாய்வோம். எனவே, யார் பக்கமும் சாயாத முதிர்ச்சி வாய்ந்த சக கிறிஸ்தவர்கள் தரும் எதார்த்தமான ஆலோசனைகளை கேட்பது ஞானமான செயல். சமநிலையான, அனுபவமிக்க சக விசுவாசிகளுக்கு கேள்விக்குறியாக தோன்றும் விதங்களில் நீங்கள் தீர்மானங்களை எடுக்கும்போதோ, சில காரியங்களில் ஈடுபடும்போதோ உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னுடைய மனசாட்சி சரியாக பயிற்றுவிக்கப்படாததால் இதைச் செய்கிறேனா அல்லது என் இருதயம் என்னை வஞ்சிப்பதால் இதைச் செய்கிறேனா?’ பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் தவறாமல் படியுங்கள். (சங்கீதம் 1:2) அவ்வாறு செய்வது, கடவுளுடைய நியமங்களுக்கு ஏற்ப உங்களுடைய எண்ணங்களையும், மனப்பான்மைகளையும், உணர்ச்சிகளையும் மாற்றியமைக்க உதவும்.
சாத்தானின் பொய்களிலிருந்து காத்துக்கொள்ளுதல்
15, 16. (அ) நம்மை ஏமாற்ற என்னென்ன பொய்களை சாத்தான் பயன்படுத்துகிறான்? (ஆ) அந்தப் பொய்களால் ஏமாற்றப்படுவதை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
15 நம்மை வஞ்சிப்பதற்கு பல வித்தியாசமான பொய்களை சாத்தான் பயன்படுத்துகிறான். பொருளுடைமைகள் நமக்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் தருகின்றன என நம்மை அவன் நம்ப வைக்கிறான். ஆனால் உண்மையில் பொருளுடைமைகளால் எதிர்மாறான விளைவே ஏற்படுகிறது. (பிரசங்கி 5:10-12) நாம் “கடைசி நாட்களில்” வாழ்ந்து வருகிறோம் என்பதற்கு தெளிவான அத்தாட்சி இருந்தும்கூட இந்தப் பொல்லாத உலகம் இப்படித்தான் தொடர்ந்து இருக்கும் என அவன் நம்ப வைக்கப் பார்க்கிறான். (2 தீமோத்தேயு 3:1-5) சிற்றின்பப் பிரியர்கள் பெரும்பாலும் படுமோசமான விளைவுகளை அறுவடை செய்கிறபோதிலும், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கைப் பாணியை பின்பற்றுவதால் எந்தத் தீங்கும் வராது என்ற கருத்தையே சாத்தான் விளம்பரப்படுத்துகிறான். (கலாத்தியர் 6:7) இப்படிப்பட்ட பொய்களால் ஏமாற்றப்படுவதை நாம் எப்படி தவிர்க்கலாம்?
16 பைபிள் உதாரணங்களிலிருந்து பயனடையுங்கள். சாத்தானுடைய பொய்களால் ஏமாற்றப்பட்டவர்களைப் பற்றிய எச்சரிப்பூட்டும் உதாரணங்கள் பைபிளில் உள்ளன. அவர்கள் பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களை நேசித்தார்கள், தாங்கள் வாழ்ந்து வந்த காலத்தின் அவசரத்தன்மையை உணரத் தவறினார்கள், அல்லது ஒழுக்கக்கேட்டுக்கு இடமளித்துவிட்டார்கள்—இதனால் தீய விளைவுகளை அறுவடை செய்தார்கள். (மத்தேயு 19:16-22; 24:36-42; லூக்கா 16:14; 1 கொரிந்தியர் 10:8-11) நவீன கால உதாரணங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். வருத்தகரமாக, அவ்வப்போது கிறிஸ்தவர்கள் சிலர் காலத்தின் அவசரத்தன்மையை உணர தவறுகிறார்கள், கடவுளை சேவிப்பதால் சில நல்ல காரியங்களை அனுபவிக்க முடியாமல் போவதாகவும் நினைக்கிறார்கள். ஆகவே போலியான சந்தோஷத்தை அளிக்கும் வாழ்க்கையை வாழ சத்தியத்தை விட்டு விலகுகிறார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்கள் நிற்பதோ “சறுக்கலான இடங்களில்”; ஏனென்றால் இன்றோ நாளையோ அவர்களுடைய தெய்வ பக்தியற்ற நடத்தையின் விளைவை அவர்கள் சந்தித்தாக வேண்டும். (சங்கீதம் 73:18, 19) ஆகவே, பிறருடைய தவறுகளிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்வதே நமக்கு ஞானமானது.—நீதிமொழிகள் 22:3.
17. நம்மை யெகோவா நேசிப்பதுமில்லை, மதிப்பாக கருதுவதுமில்லை என்ற பொய்யை சாத்தான் ஏன் பரப்புகிறான்?
17 சாத்தான் அதிக திறமையோடு பயன்படுத்தியிருக்கிற மற்றொரு பொய்யும் இருக்கிறது; நம்மை யெகோவா நேசிப்பதுமில்லை மதிப்பாக கருதுவதுமில்லை என்பதே அந்தப் பொய். அபூரண மனிதரைப் பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தான் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான். மனச்சோர்வடைந்தால் நாம் பலவீனமடைந்து விடுவோம் என்பதை அவன் நன்கு அறிவான். (நீதிமொழிகள் 24:10) ஆகவே, கடவுளுடைய பார்வையில் நாம் மதிப்பற்றவர்கள் என்ற பொய்யை அவன் பரப்புகிறான். நாம் ‘கீழே தள்ளப்படும்போது,’ யெகோவா நம்மீது அக்கறை காட்டுவதில்லையென்று நமக்குள்ளேயே முடிவுகட்டுவோமானால், நாம் தளர்ந்துவிடலாம். (2 கொரிந்தியர் 4:9) அதையே அந்தப் பெரிய ஏமாற்றுக்காரன் விரும்புகிறான். அப்படியானால், சாத்தானுடைய இந்தப் பொய்யால் ஏமாற்றப்படாமல் நம்மை எப்படி காத்துக்கொள்ளலாம்?
18. யெகோவாவின் அன்பை பைபிள் எப்படி நமக்கு உறுதிப்படுத்துகிறது?
18 நம்மிடம் கடவுள் காட்டும் அன்பைப் பற்றி பைபிள் சொல்வதை தியானியுங்கள். தனி நபராக நம் ஒவ்வொருவரையும் யெகோவா கவனிக்கிறார், நம்மை நேசிக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மனதைத் தொடும் தத்ரூபமான விளக்கங்களை அவருடைய வார்த்தை பயன்படுத்துகிறது. உங்களுடைய கண்ணீரை அவரது “துருத்தியில்” வைக்கிறார் என்று அது சொல்கிறது; உண்மையாய் நிலைத்திருப்பதற்கு போராடுகையில் நீங்கள் சிந்தும் கண்ணீரை அவர் பார்க்கிறார், அதை நினைவுகூருகிறார் என்பதே அதன் அர்த்தம். (சங்கீதம் 56:8) உங்கள் ‘இருதயம் நொறுங்குண்ட’ நிலையில் இருப்பதை அவர் அறிகிறார்; அப்படிப்பட்ட சமயங்களில் அவர் உங்களுக்கு அருகே இருக்கிறார். (சங்கீதம் 34:18) ‘உங்கள் தலைமயிரின்’ எண்ணிக்கை உட்பட உங்களைப் பற்றிய எல்லா விபரங்களையும் அவர் அறிந்திருக்கிறார். (மத்தேயு 10:29-31) இவை எல்லாவற்றையும்விட உங்களுக்காக ‘தம்முடைய ஒரேபேறான குமாரனையும்’ கொடுத்திருக்கிறார். (யோவான் 3:16; கலாத்தியர் 2:20) சில சமயங்களில், இந்த வசனங்கள் எல்லாம் தனிப்பட்ட விதமாக உங்களுக்கு பொருந்துகிறது என்பதை நம்புவதே கடினமாக தோன்றலாம். என்றாலும், யெகோவாவின் வார்த்தையை நாம் நம்புவது அவசியம். ஒரு தொகுதியாக மட்டுமல்ல, தனிப்பட்ட விதமாகவும் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டுமென அவர் விரும்புகிறார்.
19, 20. (அ) யெகோவா உங்களை நேசிப்பதில்லை என்ற சாத்தானின் பொய்யை இனம் கண்டு ஒதுக்குவது ஏன் முக்கியம்? (ஆ) மனமொடிந்தவர்களுக்கு ஒரு பயணக் கண்காணி எப்படி உதவியிருக்கிறார்?
19 பொய்யை இனம் கண்டு ஒதுக்குங்கள். ஒருவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்தால், நீங்கள் வஞ்சிக்கப்படாமல் உங்களை காத்துக்கொள்ள முடியும். ஆகவே, யெகோவா நம்மை நேசிப்பதில்லை என்ற பொய்யை நாம் நம்ப வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான் என்பதை அறிந்து வைத்திருப்பதே நம்மை காத்துக்கொள்ள பேருதவியாக இருக்கலாம். சாத்தானுடைய தந்திரங்களைப் பற்றிய எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டிருந்த ஒரு காவற்கோபுர பத்திரிகையை வாசித்த ஒரு கிறிஸ்தவ பெண் இவ்வாறு சொன்னாள்: “என்னுடைய உணர்ச்சிகளை பயன்படுத்தியே சாத்தான் என்னை சோர்வில் மூழ்கடிக்க முயலுகிறான் என நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. இதை அறிந்துகொண்டது அப்படிப்பட்ட உணர்ச்சிகளை எதிர்த்துப் போராட என்னை உந்துவிக்கிறது.”
20 தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நாட்டில் பயணக் கண்காணியாக சேவை செய்யும் ஒரு சகோதரரின் அனுபவத்தை கவனியுங்கள். மனமொடிந்திருக்கும் சக விசுவாசிகளின் வீடுகளுக்கு மேய்ப்பு சந்திப்புக்காக செல்கையில் அவர்களிடம் பெரும்பாலும் இவ்வாறே கேட்பார்: ‘திரித்துவத்தை நீங்கள் நம்புகிறீர்களா?’ சோர்ந்துபோயிருக்கும் அந்த சக விசுவாசி பொதுவாக, ‘இல்லவே இல்லை’ என்று சொல்வார்; ஏனெனில் இது சாத்தானின் பொய்களில் ஒன்று என்பதை அவர் அறிந்திருக்கிறார். அடுத்து, ‘நீங்கள் நரக அக்கினியை நம்புகிறீர்களா?’ என்று கேட்பார். மறுபடியும் ‘இல்லவே இல்லை!’ என்ற பதிலே வரும். அடுத்ததாக, சாத்தான் பயன்படுத்தும் மற்றொரு பொய்யும் இருக்கிறது, அதை பொதுவாக இனம் கண்டுகொள்ள முடியாது என்று சொல்லி, அவர்களுடைய கவனத்தை யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்b என்ற புத்தகத்தில் 249-ம் பக்கத்தை திருப்பி அதிலுள்ள 21-ம் பாராவைக் காட்டுவார். தனிப்பட்ட விதமாக நம்மை யெகோவா நேசிப்பதில்லை என்ற பொய்யை அது அம்பலப்படுத்துகிறது. இவ்வாறு, சாத்தானுடைய இந்தப் பொய்யை இனம் கண்டு ஒதுக்க மனச்சோர்வடைந்தவர்களுக்கு உதவியதால் சிறந்த பலன்கள் கிடைத்ததென்று இந்தப் பயணக் கண்காணி சொல்கிறார்.
ஏமாறாதபடி உங்களை காத்துக்கொள்ளுங்கள்
21, 22. சாத்தானுடைய ஏமாற்று வேலைகளைப் பொறுத்ததில் நாம் ஏன் இருளில் இல்லை, நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
21 இந்தக் கடைசி நாட்களின் முடிவுக் கட்டத்தில், ஏராளமான பொய்களையும், வஞ்சனைகளையும் சாத்தான் தொடர்ந்து அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பான் என்பது நாம் எதிர்பார்க்க வேண்டிய விஷயமே. என்றாலும், சாத்தானுடைய ஏமாற்று வேலைகளைப் பற்றி நாம் எதையும் தெரிந்துகொள்ள முடியாதபடி யெகோவா நம்மை இருளில் வைக்கவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். பைபிளும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையால்’ பிரசுரிக்கப்படும் பைபிள் சார்ந்த பிரசுரங்களும் சாத்தானின் தீய வழிமுறைகளை வெட்ட வெளிச்சமாக்குகின்றன. (மத்தேயு 24:45, NW) இப்படிப்பட்ட முன்னெச்சரிப்புகள் நம்மை தயார்படுத்துகின்றன. எதற்காக? ஏமாறாதபடி முன்ஜாக்கிரதையோடு இருப்பதற்காக.—2 கொரிந்தியர் 2:11.
22 ஆகவே, விசுவாச துரோகிகளின் நியாயவிவாதங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வோமாக. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் மறைமுக கண்ணியை தவிர்க்க தீர்மானமாய் இருப்போமாக. சாத்தானின் சகல பொய்களையும் இனம் கண்டு ஒதுக்குவோமாக. இவ்வாறு செய்வதன் மூலம் ஏமாற்று வேலையை வெறுப்பவராகிய ‘சத்தியபரரான கடவுளோடு’ உள்ள நம் உறவைக் காத்துக்கொள்வோம்.—சங்கீதம் 31:5; நீதிமொழிகள் 3:32.
[அடிக்குறிப்புகள்]
a வெளிப்படுத்துதல் 12:9-ல், “மோசம்போக்குகிற” என குறிப்பிடப்பட்டுள்ள வினைச்சொல் “தொடர்ந்து நடைபெறும் ஒரு செயலை, ஒருவருடைய இரத்தத்தில் ஊறிப்போன பழக்கத்தை சுட்டிக் காட்டுகிறது” என ஒரு புத்தகம் கூறுகிறது.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இன்று உலகில் ஏன் இந்தளவுக்கு ஏமாற்று வேலைகள் நடக்கின்றன?
• விசுவாச துரோகிகளால் ஏமாற்றப்படாமல் நம்மை எப்படி காத்துக்கொள்ளலாம்?
• நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வழிவகுக்கும் எந்தவொரு மனப்பான்மையிலிருந்தும் எப்படி காத்துக்கொள்ளலாம்?
• சாத்தானின் பொய்களால் வஞ்சிக்கப்படுவதை எப்படி தவிர்க்கலாம்?
[பக்கம் 17-ன் படம்]
பொழுதுபோக்கு விஷயத்தில் உங்களை நீங்களே வஞ்சிக்காதீர்கள்
[பக்கம் 18-ன் படங்கள்]
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருக்க, ஜெபசிந்தையுடன் உங்களையே அலசி ஆராயுங்கள், பிறர் சொல்வதைக் கேளுங்கள், கடவுளுடைய வார்த்தையை தவறாமல் படியுங்கள்