‘உலகின் மையப் பகுதியில்’ கூடிவருதல்
“டே பிடோ ஓ டே ஹெனுவா” என்ற வார்த்தைகளை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? ஈஸ்டர் தீவில் பேசப்படும் ராபா நியூயி என்ற பூர்வீக மொழியில் இதன் அர்த்தம் “உலகின் மையப் பகுதி” என்பதாகும். இங்கு நடத்தப்பட்ட மாநாட்டின் தனிச் சிறப்புக்கு என்ன காரணம்?
ஒதுக்குப்புறமானது, விந்தையானது, ஒப்பற்றது. ஈஸ்டர் தீவை வர்ணிக்கும் சில வார்த்தைகளே இவை. இத்தீவை ராபா நியூயி என அதன் குடிகள் அழைக்கிறார்கள். இது உண்மையில் ஒதுக்குப்புறமான இடம்தான்; சிலியிலுள்ள சாண்டியாகோ நகரத்திலிருந்து 3,790 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் தென் பசிபிக் பெருங்கடலில் இது அமைந்துள்ளது. செப்டம்பர் 9, 1888-ல் இது சிலியின் ஆட்சி எல்லைக்குள் சேர்க்கப்பட்டது.
ஒரு காலத்தில் குமுறிய மூன்று எரிமலைக் குழம்பினால் உருவானதே இத்தீவு; இது 166 சதுர கிலோமீட்டர் பரப்பில் முக்கோண வடிவில் அமைந்துள்ளது. சொல்லப்போனால், பசிபிக் பெருங்கடலில் உள்ள வேறுபல தீவுகளைப் போலவே இதுவும் தண்ணீருக்கடியில் உள்ள பிரமாண்டமான மலைகளின் முகடுகளால் ஆனது. இந்த முழு தீவுமே ஓர் இயற்கை நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மோஐ என அழைக்கப்படும் விசித்திரமான கற்சிலைகளுக்கு இத்தீவு பேர்போனது என்பதில் சந்தேகமில்லை.a
மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கை காட்சிகளும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் இங்கே உள்ளன. இவற்றை தவிர, ருசிமிக்க உணவுப் பொருட்களும் இத்தீவில் கிடைக்கின்றன. அன்னாசி, அவொகாடோ, பப்பாளி ஆகிய பழங்களும் ஒன்பது வகை வாழையும் இங்கு பயிராகின்றன. அதுமட்டுமல்ல, கடலிலிருந்து பல வித்தியாசமான மீன்களும் மற்ற கடல் உணவுகளும் கிடைக்கின்றன.
பருவமழை தவறாமல் பொழிவதால் இந்த ஈஸ்டர் தீவில் மிதமான சீதோஷ்ணம் நிலவுகிறது. அதனால் இங்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் சுத்தமான காற்றை அனுபவிக்கிறார்கள்; அதோடு அடிக்கடி தோன்றும் வானவில்லும் அவர்களுடைய கண்களுக்கு விருந்தளிக்கிறது. தற்போது இங்கு கிட்டத்தட்ட 3,800 பேர் வசிக்கிறார்கள். முதன்முதலில் அங்கு குடியேறிய பாலினேஷியர்களும் ஐரோப்பியர், சிலி நாட்டவர், பிற நாட்டவர் ஆகியோரும் சேர்ந்த கலப்பின குடிகளின் சந்ததியினரே இப்போது அங்கு குடியிருப்பவர்கள். ஐரோப்பாவையும் ஆசியாவையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இத்தீவிற்கு விஜயம் செய்கிறார்கள். இதனால் சுற்றுலாத் துறை இந்நாட்டின் வருவாய்க்கு பெரும் பங்காற்றுகிறது.
முதன்முதலில் ராஜ்ய விதைகள் விதைக்கப்படுதல்
1982 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் இவ்வாறு அறிவித்தது: “ஈஸ்டர் தீவில் கொஞ்ச காலத்திற்கு ஒரேவொரு பிரஸ்தாபி மட்டுமே இருந்தார். [சிலி] கிளை அலுவலகத்தை சேர்ந்த ஒரு மிஷனரி சகோதரி கடிதத்தின் மூலம் அவருக்கு ஆவிக்குரிய ரீதியில் உற்சாகமளித்தார். அந்த பிரஸ்தாபி சிலிக்கு திரும்பிப் போய்விட்டார். ஆனாலும் இத்தீவில் காவற்கோபுரம் பத்திரிகைக்கு சந்தா எடுத்தவர்களின் பதிவு எங்களிடம் உள்ளது. எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமளித்த விஷயம் என்னவெனில், ஏப்ரல் 1980-ல் நினைவு ஆசரிப்பை எப்போது ஆசரிக்க வேண்டுமென்று கேட்டு ஒரு நபர் தொலைதூரத்திலிருந்து போன் செய்தார். பிற்பாடு அதே ஆண்டில் வால்பரைஸோ என்ற நகரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் அத்தீவிற்கு குடிமாறினர். ஆர்வம் காட்டியவர்களுக்கு அவர்கள் பைபிள் படிப்புகளை நடத்தி வந்தனர். 1981, ஏப்ரல் மாதத்தில் முதன் முறையாக இத்தீவில் நினைவு ஆசரிப்பு கூட்டம் நடத்தப்பட்டது; அதற்கு 13 பேர் வந்திருந்தனர். இந்த ஒதுக்குப்புறமான இடத்தில் ‘நற்செய்தி’ ஊடுருவிச் செல்வதைக் காண்பதில் எங்களுக்கு எத்தனை மகிழ்ச்சி!”
பிற்பாடு, ஜனவரி 30, 1991-ல் விசேஷ பயனியர்களாய் இருந்த டார்யோ மற்றும் வின்னி ஃபெர்னான்டஸ் தம்பதியினரை கிளை அலுவலகம் இத்தீவிற்கு அனுப்பியது. சகோதரர் ஃபெர்னான்டஸ் அதைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “ஐந்து மணிநேர விமான பயணத்திற்கு பிறகு, உலகிலேயே மிகவும் ஒதுக்குப்புறமான இந்தப் பகுதிக்கு வந்துசேர்ந்தோம், விந்தைகள் நிறைந்த ஒரு சமுதாயத்திற்குள் நுழைந்தோம்.” சமீபத்தில் ஒரு சகோதரரும் சகோதரியும் தங்களுடைய இரண்டு பிள்ளைகளோடு இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். சீக்கிரத்திலேயே இந்தத் தம்பதியினர் அவர்களுடன் சேர்ந்து கூட்டங்களையும் பிரசங்க வேலையையும் ஒழுங்குபடுத்தினர். பாலினேஷிய பண்பாட்டிற்கே உரிய சில வாழ்க்கைப் பாணிகள், மதவெறி, குடும்ப அழுத்தங்கள் ஆகியவை ஒருபுறமிருந்தாலும், ஊழியத்தில் தங்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்ததை அவர்கள் கண்டார்கள். ஃபெர்னான்டஸ் தம்பதியினருக்கு மகன் பிறந்துவிட்டதால் பயனியர் சேவையை நிறுத்தி விட்டார்கள். ஆனால் தங்களுடைய மகனை கவனித்துக்கொண்டு அந்தத் தீவில்தான் இருக்கிறார்கள். இன்று, ராஜ்யத்தைப் பற்றி சந்தோஷத்துடன் அறிவிக்கும் 32 பிரஸ்தாபிகள் அங்கு இருக்கிறார்கள். இவர்களில் சிலர் ராபா நியூயியை சேர்ந்தவர்கள், இன்னும் சிலர் பிற நாட்டிலிருந்து இங்கு குடிமாறியவர்கள், மற்றவர்களோ ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கான தேவை அதிகமாக இருந்ததால் இங்கு வந்தவர்கள்.
வட்டார மாநாட்டுக்கு ஆயத்தங்கள்
இத்தீவுக்கும் கண்டத்துக்கும் இடையே அதிக தொலைவு இருப்பதால் விசேஷித்த மாநாட்டு தினம், வட்டார மாநாடு, மாவட்ட மாநாடு ஆகியவற்றின் வீடியோ டேப்புகளை அந்தந்த சமயங்களில் சபை பெற்றுக்கொண்டது. ஆனால் 2000-ம் ஆண்டின் இறுதிக்குள் முதன் முதலாக இந்தத் தீவிலேயே மாநாடு நடத்துவதைப் பற்றி சிலி கிளை அலுவலக குழு பரிசீலனை செய்து வந்தது. கடைசியாக, நவம்பர் 2001-ல் வட்டார மாநாடு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது; இந்த விசேஷித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சிலியின் வெவ்வேறு பாகங்களில் உள்ள சில சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விமான போக்குவரத்து அட்டவணையை முன்னிட்டு ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் மாநாடு நடத்தப்பட்டது.
அழைக்கப்பட்ட 33 பிரதிநிதிகளும் இந்தத் தொலை தூர இடத்தில் முதன்முறையாக நடத்தப்படவிருந்த வட்டார மாநாட்டில் கலந்துகொள்ள போவதை நினைத்து உள்ளம் பூரித்தனர். பசிபிக் பெருங்கடலுக்கு மேலே ஆகாயத்தில் பல மணிநேரம் பயணம் செய்த பிறகு, விமான நிலையத்தில் சகோதரர்கள் தங்களை வரவேற்பதற்காக நிற்பதைக் கண்டு மிகுந்த நிம்மதியடைந்தனர். மாநாட்டு பிரதிநிதிகள் அழகான நெக்லஸுகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். பூவின் இதழ்களாலான இந்த நெக்லஸ் அத்தீவினர் வழக்கமாக கொடுக்கும் பரிசுப்பொருளாகும். அதற்குப் பிறகு அவர்கள் தங்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்; தீவை கொஞ்சம் சுற்றிப் பார்த்தப்பின், மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருந்த அனைவரும் ராஜ்ய மன்றத்தில் கூடிவந்தனர்.
எதிர்பாராத ஒருவரது அறிவிப்பு
மாநாட்டுக்கு செல்கையில், தாங்கள் இங்கு வந்திருப்பதைப் பற்றி வானொலியில் ஒரு பாதிரி அறிவிப்பு செய்ததைக் கேட்டு சில பிரதிநிதிகள் ஆச்சரியப்பட்டனர். தென் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் சுற்றுலா பயணிகள் வரப்போகும் உலக முடிவைப் பற்றி சொல்வதற்கு எல்லா வீடுகளுக்கும் வருவார்கள் என அவர் குறிப்பிட்டார். அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டாமென தன் சர்ச்சை சேர்ந்தவர்களிடம் அவர் சொன்னது உண்மைதான்; ஆனால் அந்த அறிவிப்பால் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு பெரும் தொகுதியினர் அத்தீவிற்கு வந்திருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது. அது அத்தீவு வாசிகளின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது. அதற்கடுத்து வந்த தினங்களில் நற்செய்தியைப் பற்றிய உற்சாகமூட்டும் செய்தியை அவர்களுக்கு அந்தப் பிரதிநிதிகள் சாதுரியமாக எடுத்துச் சொன்னார்கள்.
மாநாடு ஆரம்பம்
ஞாயிறு காலை, முதல் நாள் மாநாட்டிற்கு வந்த பிரதிநிதிகளை வரவேற்க உள்ளூர் சகோதரர்கள் ராஜ்ய மன்றத்தின் வாயிலில் காத்துக்கொண்டிருந்தார்கள். “இயாரானா காயெ! இயாரானா காயெ!,” அதாவது “நல்வரவு!” என்றார்கள். சகோதரிகள் சிலர் பாரம்பரிய உடை உடுத்தி, அசல் பாலினேஷிய பாணியில் அழகிய பூக்களால் தங்கள் தலையை அலங்கரித்திருந்தனர்.
இனிய இசைக்குப் பிறகு, “உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும் இருங்கள்!” என்ற பாடலை கிட்டத்தட்ட நூறு பேர் ஏகக் குரலில் பாடினர்; இப்படிப்பட்டதோர் முழக்கம் இதற்குமுன் அத்தீவில் கேட்டதேயில்லை. கூடிவந்திருந்தோரை ராபா நியூயி மொழியில் சேர்மன் அன்புடன் வரவேற்றபோது உள்ளூர் சகோதரர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். மதிய இடைவேளையில் மூன்று புதிய சாட்சிகள் தங்களை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றனர். முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவடைந்தபோது எல்லாருமே யெகோவாவிடமும் முழு சகோதரத்துவத்துடனும் நெருக்கமடைந்ததுபோல் உணர்ந்தனர்.—1 பேதுரு 5:9.
காலை பிரசங்க வேலை
அத்தீவின் வித்தியாசமான சூழ்நிலைகள் காரணமாக, வட்டார மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல் மதிய உணவுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே, பிரதிநிதிகள் அந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி காலையில் வெளி ஊழியத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பெற்ற அனுபவங்கள் என்ன?
எட்டு பிள்ளைகளை உடைய ஒரு வயதான அம்மா, தான் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவராதலால் சாட்சிகளிடம் பேச முடியாத நிலையில் இருப்பதாக சொன்னார். ஆனால் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குடும்பப் பிரச்சினைகள் இதுபோன்று இன்று எல்லாருமே எதிர்ப்படும் பிரச்சினைகளைப் பற்றியே பேசுகிறோம் என்று சாட்சிகள் சொன்னபோது அந்த அம்மா கேட்பதற்கு ஒத்துக்கொண்டார்.
மற்றொரு வயதான அம்மா, சாட்சிகளாகிய ஒரு தம்பதியினரிடத்தில், ‘தென் அமெரிக்கர்களிடம் போய் பேசுங்கள், அவர்கள்தான் மற்றவர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கிறார்கள்’ என்று வெறுப்புடன் பேசினார். ஆனால் அந்தத் தம்பதியினரோ, ‘ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி’ எல்லாருக்குமே அறிவிக்கப்படுகிறது என்றும் தாங்கள் இத்தீவிற்கு வந்ததன் நோக்கமே இங்கு நடைபெறவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்குத்தான், இந்த மாநாடு கடவுளிடம் அதிகமதிகமாக அன்பு காட்டுவதற்கு எல்லாருக்கும் உதவும் என்றும் சொன்னார்கள். (மத்தேயு 24:14) நோய்நொடியும் சாவும் இல்லாமல் இந்தத் தீவைப் போன்ற ஒரு பூங்காவனத்தில் என்றென்றும் வாழ முடியுமா என அந்த அம்மாவிடம் அவர்கள் கேட்டார்கள். இங்கு எத்தனை வருடங்களாக இந்த எரிமலை வாய்க் குழிகள் இருக்கின்றன என்று நியாயங்காட்டி பேசியபோது, வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்பதை அவர் யோசித்துப் பார்த்து, “நாம் ஏன் கொஞ்ச காலம் மட்டுமே வாழ்கிறோம்?” என்று கேட்டார். சங்கீதம் 90:10-ஐ வாசித்து காட்டியபோது அவர் வியந்து போனார்.
அந்த சமயத்தில். திடீரென பக்கத்து வீட்டிலிருந்து கூச்சல் சத்தம் கேட்டது. அது என்ன கூச்சல் என்று இந்தத் தம்பதியினருக்கு புரியவில்லை. சாட்சிகள் அவர்களுடைய வீட்டிற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே கன்னா பின்னா என்று கூச்சல் போடுகிறார்கள் என அந்த அம்மா சொன்னார். ஆனால், அம்மாதான் குடும்பத்தின் நியூஆ, அதாவது மூத்த மகள். அப்பா இறந்துவிட்டதால் குடும்பத்திற்கு நன்மையான காரியங்களை தீர்மானிப்பது இவருடைய கடமையாக இருந்தது. தன்னுடைய பாஷையிலேயே உறவினர் எல்லாருக்கும் முன்பு சாட்சிகளுக்கு ஆதரவாக பேசி பிரசுரங்களையும் அவர்களிடமிருந்து நன்றியோடு பெற்றுக்கொண்டார். பிற்பாடு அந்த வாரத்தில் சாட்சிகளை கடந்து அவர் காரில் செல்கையில் தன் தம்பியிடம் காரை நிறுத்தும்படி சொன்னார். தன்னுடைய தம்பி வெறுப்பு காட்டியபோதிலும் சாட்சிகளின் ஊழியம் வெற்றி சிறக்கும்படி வாழ்த்தி அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றார்.
தென் அமெரிக்காவிலிருந்து வந்த சாட்சிகள் பிரசங்கித்த செய்தியை ராபா நியூயி மக்கள் ஏற்க மறுத்ததாக ஆரம்பத்தில் தோன்றியது; ஆனால் அவர்கள் சாதுவானவர்கள், அன்பாக பழகுபவர்கள் என்பதை சாட்சிகள் போகப் போக புரிந்துகொண்டார்கள். பெரும்பாலோர் நற்செய்தியை சந்தோஷமாக கேட்டார்கள். சொல்லப்போனால், முழுக்காட்டுதல் பெற்ற 20 சாட்சிகளில் 6 பேர் அத்தீவை சேர்ந்தவர்களே. அந்த ஆறு பேரில் ஒருவர், தன்னுடைய மனைவிக்கு பைபிள் படிப்பு நடத்தப்பட்டபோது பக்கத்து அறையிலிருந்து ஒட்டுக் கேட்டு பைபிள் சத்தியத்தை கற்றுக்கொண்டவர். அவரும் அவருடைய மனைவியும் இப்போது முழுக்காட்டப்பட்ட சாட்சிகள்; அவர் சபையில் உதவி ஊழியராக சேவை செய்கிறார்.
ஆவிக்குரிய நிகழ்ச்சி தொடர்கிறது
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் மதிய உணவுக்கு பிறகு ஆரம்பமாயின. உள்ளூர் சகோதர சகோதரிகள் 32 பேரும், பிரதிநிதிகள் 33 பேரும் ஆர்வம் காட்டிய பலருடன் மீண்டும் ஒன்றுகூடி வந்தார்கள். “அன்பாலும் விசுவாசத்தாலும் உலகை ஜெயித்தல்” என்ற தலைப்பிலான பொதுப் பேச்சு உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஏறக்குறைய நூறு பேர் வந்திருந்தார்கள். சொல்லப்போனால், யெகோவாவின் ஜனங்கள் வித்தியாசப்பட்ட கலாச்சாரங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டியதை கூடிவந்திருந்தோர் கண்ணார கண்டார்கள்.—யோவான் 13:35.
வட்டார மாநாட்டின் சமயத்தில் பயனியர் ஊழியர்களோடு வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிகள் விசேஷ கூட்டம் நடத்தினார்கள். அக்கூட்டத்தில் அத்தீவைச் சேர்ந்த மூன்று ஒழுங்கான பயனியர்களும், மாநாட்டுக்கு பிரதிநிதிகளாக வந்திருந்த ஒழுங்கான அல்லது விசேஷித்த பயனியர்களும் கலந்துகொண்டார்கள். எல்லாருமே சிறந்த ஊக்குவிப்பைப் பெற்றார்கள்.
அடுத்த நாள், டூர் கைடுகளாக இருந்த உள்ளூர் சகோதரர்கள் சிலர் பிரதிநிதிகளுக்கு தீவை சுற்றிக் காட்டினார்கள். அவர்கள் ஒரு கல் குவாரியை சென்று பார்த்தார்கள்; அது மோஐ சிற்பங்கள் செதுக்கப்பட்ட இடம். அடுத்து எரிமலைகள் இருந்த இடத்தை போய் பார்த்தார்கள்; அங்குதான் முன்பு போட்டிகள் நடத்தப்பட்டன.b பொன்னிற மணல் பரந்த ஆனாக்கினா கடற்கரையையும் அவர்கள் சென்று பார்த்தார்கள்; அத்தீவில் முதன்முதல் குடியேறினவர்கள் அந்தக் கடற்கரையில்தான் கால் பதித்தார்கள்.
அங்குள்ள சகோதரர்களோடு மீண்டும் ஒன்றுகூடி வருவதற்கு கிடைத்த கடைசி சந்தர்ப்பம் சபை புத்தகப் படிப்பு ஆகும். கூட்டம் முடிந்த பிறகு விருந்தாளிகளுக்கு தங்களுடைய ஊர் உணவை அளித்து அவர்களை அந்தச் சகோதரர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். பிற்பாடு, தங்களுடைய பாரம்பரிய உடையை அணிந்து நடனமாடி அவர்களை மகிழ்வித்தனர். இந்த மாநாட்டை நடத்துவதற்கென தாங்கள் எடுத்த முயற்சிகளுக்கெல்லாம் பலன் கிடைத்ததை ராபா நியூயியைச் சேர்ந்த சகோதர சகோதரிகளும் அவர்களோடுகூட மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளும் கண்ணார கண்டார்கள்.
பிரதிநிதிகளாக வந்தவர்கள் இந்த ஒதுக்குப்புறமான தீவிலுள்ள சகோதர சகோதரிகளுடன் ஒரு வாரம் பழகியதற்குள் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். அதனால் அங்கிருந்து விடைபெற்று வருவது மிகவும் கஷ்டமாக இருந்தது. இப்படியாக கிடைத்த புதுப் புது நண்பர்களையும் அதோடு ஆவிக்குரிய விதத்தில் கிடைத்த ஊக்குவிப்பையும் அவர்கள் அரும்பெரும் பொக்கிஷமாகவே எப்போதும் கருதுவார்கள். வழியனுப்புவதற்காக விமான நிலையத்திற்கு வந்த சகோதர சகோதரிகள், சிப்பிகளைக் கொண்டு தங்கள் கைகளாலேயே செய்த நெக்லஸை பிரதிநிதிகளின் கழுத்தில் அணிவித்தார்கள்.
பிரதிநிதிகள் பிரியாவிடை பெறுகையில் இவ்வாறு உறுதி சொன்னார்கள்: “இயாரானா! ஆவ் ஹி ஹாக்கி மாயி இ ராபா நியூயி இஇ,” அதன் அர்த்தம், “குட்பை! ராபா நியூயிக்கு மீண்டும் வருவோம்” என்பதாகும். ஆம், ஒதுக்குப்புறமான, விந்தையான, ஒப்பற்ற, இனிமையான இந்த ஈஸ்டர் தீவில் தங்களுக்குக் கிடைத்த புதிய நண்பர்களை மீண்டும் வந்து சந்திக்க அவர்கள் மிகுந்த ஆவலாக இருக்கிறார்கள்!
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட விழித்தெழு!, ஜூன் 22, 2000 இதழைக் காண்க.
b ரானா ராராகூ எரிமலை வாய்க்குழியில் அநேக சிற்ப வேலைகள் உள்ளன. அத்தீவை ஆட்சிபுரிய விரும்பியவர்கள் ரானா கௌவ் என்ற இடத்தில் ஒரு போட்டியை ஆரம்பித்தார்கள். மலையுச்சியிலிருந்து கீழே இறங்கி, சுற்றியுள்ள ஏதாவது சிறிய தீவுக்கு நீந்திச் சென்று, அங்குள்ள ஒரு பறவையின் முட்டையை கையில் எடுத்து, மீண்டும் இத்தீவிற்கு நீந்தி வந்து, முட்டை உடையாதபடி மீண்டும் மலையுச்சிக்கு ஏறுவதே இப்போட்டியாகும்.
[பக்கம் 24-ன் பெட்டி]
ஈஸ்டர் தீவில் சாட்சி கொடுத்தல்
நெஞ்சை விட்டு நீங்காத இந்த மாநாடு நடப்பதற்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வட்டாரக் கண்காணியும் அவரது மனைவியும் இத்தீவிற்கு விஜயம் செய்து அநேக அனுபவங்களை பெற்று மகிழ்ந்தார்கள். உதாரணமாக, அவர்களை தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்ற சகோதரி, சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு தான் டீனேஜராக இருக்கும்போது தெற்கு சிலியில் அவர்கள் தனக்கு பைபிள் படிப்பு நடத்தியதைப் பற்றி நினைவுபடுத்தியதும் அவர்களுக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் விதைத்த விதை பிற்பாடு ராபா நியூயியில் முளைத்திருக்கிறது.
வேடிக்கையான இன்னொரு அனுபவமும் அவர்களுக்கு கிடைத்தது: நினைவு பரிசுப் பொருட்களை விற்கும் ஒரு கடை முதலாளி, யெகோவாவின் சாட்சிகள் பிரசுரிக்கும் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளையும் பைபிள் படிப்புக்கு உதவும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தையும் பெற்றுக்கொண்டார். அவரை மீண்டும் சென்று சந்தித்தபோது, அந்த பைபிளை தன்னால் வாசிக்கவே முடியவில்லை என்று அவர் சொன்னார். ஏன்? அவர்கள் கொடுத்திருந்தது பிரெஞ்சு பைபிள்; அவருக்கு தேவைப்பட்டதோ ஸ்பானிஷ் பைபிள்! பிறகு, அந்தப் பிரச்சினை உடனே சரிசெய்யப்பட்டது. அதுமட்டுமல்ல, உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளுடைய உதவியாலும் அவரது சொந்த பாஷையில் கிடைத்த பைபிளின் உதவியாலும், பைபிளை புரிந்துகொள்வது அவ்வளவு ஒன்றும் சிரமமல்ல என்பதையும் அறிந்துகொண்டார்.
[பக்கம் 22-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஈஸ்டர் தீவு
சிலி
[பக்கம் 23-ன் படங்கள்]
வட்டார மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றவர்களில் இருவர்
[பக்கம் 25-ன் படங்கள்]
ரானோ ராராகூ எரிமலைச் சரிவு; உள்படம்: இத்தீவில் விளையும் குவாயாபா என்ற காட்டுப் பழம்