‘நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது’
உங்களுக்குப் பரமண்டல ஜெபம் தெரியுமா? இது இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த மாதிரி ஜெபம். “நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது” என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் இந்த மாதிரி ஜெபத்தை உலகப் புகழ்பெற்ற மலைப்பிரசங்கத்தில் இயேசு கூறினார். (மத்தேயு 6:9) இதை இயேசு அறிமுகப்படுத்தியதால் கர்த்தருடைய ஜெபம் என்றும் அழைக்கப்படுகிறது.—லத்தீன், பட்டர்நோஸ்டர்.
உலகெங்கும் வசிக்கும் லட்சோபலட்சம் மக்களுக்கு பரமண்டல ஜெபம் அத்துப்படி. இதை அடிக்கடி, ஒருவேளை தினமும் சொல்வார்கள். இப்பொழுதெல்லாம் பள்ளிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் இந்த ஜெபம் சத்தமாக சொல்லப்படுகிறது. பரமண்டல ஜெபத்திற்கு இந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு காரணமென்ன?
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையியல் வல்லுனர் சைப்ரியன் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தைவிட ஆன்மீக சிறப்புமிக்க ஜெபம் வேறு எதுவாக இருக்க முடியும் . . . ? சத்தியத்தின் சொரூபமாக திகழும் குமாரன் மூலம் நமக்கு அருளப்பட்ட இந்த ஜெபத்தைவிட சத்தியம் நிறைந்த ஜெபம் வேறு எதுவாக இருக்க முடியும்?”—யோவான் 14:6.
பரமண்டல ஜெபத்தை “கிறிஸ்தவர்களின் அடிப்படை ஜெபம்” என ரோமன் கத்தோலிக்க சர்ச் கருதுவதால், இது வேதபாடத்திலும் இடம்பெறுகிறது. கிறிஸ்தவமண்டலத்தின் எல்லா பிரிவுகளிலும் இந்த ஜெபம் முக்கிய இடம் வகிப்பதை த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா ஒப்புக்கொள்கிறது; ‘கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை வாசகங்களில்’ ஒன்று என இதை வர்ணிக்கிறது.
பரமண்டல ஜெபம் பலருக்கு மனப்பாடமாக தெரிந்திருந்தாலும் இதன் அர்த்தத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். “நீங்கள் எந்தவொரு கிறிஸ்தவ மதப்பிரிவினராக இருந்தாலும்சரி, ஒரே மூச்சில் கடகடவென பரமண்டல ஜெபத்தை ஒப்பித்துவிடலாம். ஆனால் நிறுத்தி நிதானமாக, அர்த்தத்தோடு சொல்வதற்கு உங்களுக்குத் தெரியாதிருக்கலாம்” என ஒட்டாவா சிட்டிஸன் என்ற கனடா நாட்டு செய்தித்தாள் சொல்கிறது.
கடவுளுக்கு ஏறெடுக்கும் ஜெபங்களின் அர்த்தத்தை விளங்கிக்கொள்வது அவ்வளவு முக்கியமா? பரமண்டல ஜெபத்தை அல்லது மாதிரி ஜெபத்தை இயேசு எதற்காக நமக்கு சொல்லித் தந்தார்? அதன் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களுக்கு இப்போது நாம் கவனம் செலுத்துவோம்.