உங்கள் எதிர்காலத்தை நீங்கள் கட்டுப்படுத்த முடியுமா?
நமது எதிர்காலம் முன்தீர்மானிக்கப்பட்டு விட்டதா? வாழ்க்கையில் நாம் செய்யும் தீர்மானங்கள் நமது எதிர்காலத்தை எவ்விதத்திலும் பாதிக்கவே பாதிக்காதா?
மனிதன் தன்னுடைய எதிர்காலத்தை தானே தீர்மானித்துக் கொள்கிறான் என்று வைத்துக்கொண்டால், ஒருவன் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வான் அல்லது ஒரு குறிப்பிட்ட பதவியை அடைவான் என்று முன்னதாகவே தீர்மானிக்க முடியுமா? மனிதர்கள் தங்களுடைய எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொண்டால் பூமிக்கான தமது நோக்கத்தைக் கடவுள் எப்படி நிறைவேற்றுவார்? இந்தக் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதிலை பைபிள் அளிக்கிறது.
முன்விதித்தல், தெரிவு செய்யும் சுயாதீனம்—இரண்டுமே சரியா?
யெகோவா நம்மை படைத்திருக்கிற விதத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். “அவனைத் [அதாவது, மனிதனை] தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 1:27) நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டதால் அன்பு, நீதி, ஞானம், வல்லமை போன்ற அவருடைய குணங்களை பிரதிபலிக்கும் ஆற்றல் நமக்கு உள்ளது. சுயமாக தெரிவு செய்யும் சுயாதீனம் எனும் பரிசையும் கடவுள் நமக்கு அளித்துள்ளார். இது, அவருடைய பூமிக்குரிய பிற படைப்புகளிலிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. கடவுளுடைய ஒழுக்க தராதரங்களைப் பின்பற்றுவதா வேண்டாமா என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம். அதனால்தான் தீர்க்கதரிசியாகிய மோசேயால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, . . . உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக.”—உபாகமம் 30:19, 20.
ஆனாலும், தெரிவு செய்யும் சுயாதீனத்தைப் பரிசாக பெற்றிருப்பது எல்லையற்ற சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. அதாவது, இந்தப் பிரபஞ்சம் நிலையாகவும், குழப்பமின்றி அமைதியாகவும் இருப்பதற்காக கடவுள் ஏற்படுத்தியுள்ள இயற்கை நியதிகளிலிருந்தும் தார்மீக சட்டங்களிலிருந்தும் இது நம்மை விடுவிப்பதில்லை. நமது நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட இச்சட்டங்களை மீறுவது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். புவியீர்ப்பு விசையை பொருட்படுத்தாமல், உயரமான கட்டடத்தின் உச்சியிலிருந்து நாம் குதித்தால் என்னவாகும் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்!—கலாத்தியர் 6:7.
நாம் தெரிவு செய்யும் சுயாதீனத்தைப் பெற்றிருப்பதால் அப்படிப்பட்ட சுயாதீனமில்லாத மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத சில பொறுப்புகள் நமக்கு உள்ளன. எழுத்தாளர் கார்லஸ் லாமாண்ட் இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்: “மனிதர்களுடைய தெரிவுகளும் செயல்களும் முன்தீர்மானிக்கப்பட்டதாக நாம் நம்பினால், அவர்களுடைய தவறுகளுக்கு அவர்களை எப்படி பொறுப்பாளியாக்கி, தண்டிக்க முடியும்?” நிச்சயமாகவே முடியாது. இயல்புணர்ச்சியால் இயங்கும் விலங்குகளிடம் அவற்றின் செயல்களுக்குத் தார்மீக பொறுப்பேற்கும்படி எதிர்பார்க்கப்படுவதில்லை. அதைப் போல, புரோகிராமுக்கு ஏற்றபடி செயல்படும் கம்ப்யூட்டர்களிடமும் அதனுடைய எந்த வேலைக்கும் பொறுப்பேற்கும்படி எதிர்பார்க்கப்படுவதில்லை. ஆனால், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள தெரிவு செய்யும் சுயாதீனம் நம்மை அதிக பொறுப்புடையவர்களாகவும், நம்முடைய செயல்களுக்குக் கணக்கு கொடுக்க வேண்டியவர்களாகவும் ஆக்குகிறது.
நாம் பிறப்பதற்கு முன்பே இப்படித்தான் வாழ வேண்டுமென யெகோவா தீர்மானித்துவிட்டு, பிறகு நம்முடைய செயல்களுக்கெல்லாம் நம்மையே பொறுப்பாளி ஆக்கினால், எவ்வளவு அன்பற்ற, அநீதியான கடவுளாக அவர் இருப்பார்! ஆனால், அவர் அப்படிச் செய்வதில்லை, ஏனெனில் “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” மேலும், “அவர் வழிகளெல்லாம் நியாயம்.” (1 யோவான் 4:8; உபாகமம் 32:4) தெரிவு செய்யும் சுயாதீனத்தைக் கடவுள் கொடுத்திருப்பதால், முன்விதிக்கப்படுதலை நம்பும் ஆட்கள் சொல்கிறபடி, ‘யாரைக் காப்பாற்றுவார், யாரை அழிப்பார் என்பதை ஆதியிலேயே அவர் தீர்மானிப்பதில்லை.’ ஆகவே, தெரிவு செய்யும் சுயாதீனம் முன்விதிக்கப்படுதல் கோட்பாட்டை ஒதுக்கித் தள்ளிவிடுகிறது.
நம்முடைய தெரிவுகள் நம் எதிர்காலத்தைப் பாதிக்கும் என பைபிள் தெளிவாகவே குறிப்பிடுகிறது. உதாரணமாக, தவறு செய்பவர்களுக்குக் கடவுள் இவ்வாறு அழைப்பு விடுக்கிறார்: ‘நான் உங்களுக்குத் தீமை செய்யாதபடிக்கு . . . உங்களில் அவனவன் தன்தன் பொல்லாத வழியையும், உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திரும்புங்கள்.’ (எரேமியா 25:5, 6) கடவுள் ஏற்கெனவே ஒவ்வொருவருடைய எதிர்காலத்தையும் தீர்மானித்திருந்தால் இவ்வாறு அழைப்பு விடுப்பதில் அர்த்தமே இருந்திருக்காது. மேலும், கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு குறிப்பிடுகிறது: ‘கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும் . . . உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.’ (அப்போஸ்தலர் 3:19, 20) தங்களுடைய எதிர்காலத்தை மாற்றியமைக்க மனிதர்களால் எவ்விதத்திலும் முடியாது என்பதை யெகோவா தேவன் முன்பே அறிந்திருந்தால் மனந்திரும்பி குணப்படும்படி ஜனங்களை அவர் ஏன் அழைக்க வேண்டும்?
பரலோகத்தில் இயேசுவுடன் அரசாள கடவுளால் அழைக்கப்பட்ட சிலரைப் பற்றி பைபிள் பேசுகிறது. (மத்தேயு 22:14; லூக்கா 12:32) என்றாலும், முடிவுபரியந்தம் நிலைத்திராவிட்டால் அந்த சிலாக்கியத்தை அவர்கள் இழந்து விடுவார்கள் என்று பைபிள் கூறுகிறது. (வெளிப்படுத்துதல் 2:10) அவர்களை தாம் தேர்ந்தெடுக்கப் போவதில்லை என கடவுள் முன்கூட்டியே தீர்மானித்திருந்தால், அவர்களை ஏன் அவர் அழைக்க வேண்டும்? சக விசுவாசிகளுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய வார்த்தைகளையும் கவனியுங்கள்: ‘சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராது.’ (எபிரெயர் 10:26) அவர்களுடைய எதிர்காலத்தைக் கடவுள் முன்தீர்மானித்திருந்தால் அத்தகைய எச்சரிப்பு பயனற்றதாக இருக்கும். ஆனால், கிறிஸ்துவுடன் ஆட்சி செய்வதற்கு கடவுள் சிலரைக்கூட முன்குறிக்கவில்லையா?
முன்தீர்மானிக்கப்பட்டவர்கள்—தனிப்பட்டவர்களாகவா தொகுதியாகவா?
“அவர் [தேவன்] கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். . . . அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே . . . நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்,” என்பதாக அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 1:3-6) கடவுள் எதை முன்குறித்திருக்கிறார்? “உலகத் தோற்றத்துக்கு முன்னே” தெரிந்துகொள்ளப்படுதல் என்றால் என்ன?
முதல் மனிதனாகிய ஆதாமின் சந்ததியாரில் சிலரை பரலோகத்தில் கிறிஸ்துவுடன் அரசாள கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதாக இந்தப் பதிவு குறிப்பிடுகிறது. (ரோமர் 8:14-17, 28-30; வெளிப்படுத்துதல் 5:9, 10) என்றாலும், இந்த சிலாக்கியத்தைப் பெறும் தனி நபர்களை அவர்கள் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே யெகோவா தேவன் முன்குறித்துவிட்டார் என்ற ஊகம், மனிதர்கள் தெரிவு செய்யும் சுயாதீனத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்ற கருத்துக்கு முரணாக இருக்கிறது. கடவுள் ஒரு தொகுதியை அல்லது ஒரு வகுப்பாரை முன்குறித்தாரே தவிர, தனி நபர்களை அல்ல.
உதாரணத்திற்கு, அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைத் துவங்க முடிவு செய்கிறது என வைத்துக்கொள்வோம். அந்நிறுவனம் செயல்படும் விதம், அதன் உரிமைகள், அது எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் போன்றவற்றை முன்னதாகத் தீர்மானிக்கிறது. காலப்போக்கில் அந்நிறுவனம் செயல்பட ஆரம்பித்த பின்னர் அதன் ஊழியர்கள் இவ்வாறு ஓர் அறிக்கையை வெளியிடுகின்றனர்: “சில வருடங்களுக்கு முன்பே அரசாங்கம் எங்களுடைய வேலையை நிர்ணயித்து விட்டது. எங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையை நாங்கள் இப்போது ஆரம்பிக்கிறோம்.” அங்கே இன்னார்தான் வேலை செய்வாரென அரசாங்கம் பல வருடங்களுக்கு முன்பே தீர்மானித்துவிட்டது என்ற முடிவுக்கு வருவீர்களா? நிச்சயமாகவே இல்லை. அதைப் போலவே, ஆதாம் செய்த பாவத்தால் விளைந்த பாதிப்புகளை சரிசெய்ய ஒரு விசேஷித்த அமைப்பை ஏற்படுத்துவதற்கு யெகோவா தேவன் முன்னதாகவே தீர்மானித்தார். அந்த அமைப்பில் சேவை செய்யப்போகும் ஒரு வகுப்பாரைக் குறித்து தீர்மானித்தாரே தவிர, தனி நபர்களை அல்ல. அவர்கள் பின்னர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; அதுவும் அவர்கள் இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படுவார்களா இல்லையா என்பது வாழ்க்கையில் அவர்கள் செய்யும் தெரிவுகளைப் பொறுத்தது.
‘தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார்’ என்று சொன்ன போது, எந்த உலகம் அப்போஸ்தலன் பவுலுடைய மனதில் இருந்தது? ஆதாம், ஏவாளைப் படைத்தபோது ஆரம்பமான உலகத்தை பவுல் இங்கே குறிப்பிடவில்லை. பாவமும் அழிவும் எட்டிக்கூட பார்க்காத அந்த உலகம் “மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:31) பாவத்தில் இருந்து “மீட்பு” அதற்குத் தேவைப்படவில்லை.—எபேசியர் 1:7.
ஆதாமும் ஏவாளும் ஏதேனில் கலகம் செய்த பிறகு ஆரம்பமான உலகத்தையே பவுல் குறிப்பிட்டார். இந்த உலகம் கடவுளுடைய ஆதி நோக்கத்திற்கு முற்றிலும் முரணாக இருந்தது. ஆதாம், ஏவாளுக்குப் பிள்ளைகள் பிறந்தபோது அது ஆரம்பமானது. கடவுளிடமிருந்து விலகி, பாவத்திற்கும் அழிவுக்கும் தங்களை அடிமையாக்கிக் கொண்டவர்களே அதன் குடிமக்கள். தெரிந்தே பாவம் செய்த ஆதாமையும் ஏவாளையும் போலின்றி, மீட்பைப் பெற தகுதியானவர்களே அதில் இருந்தார்கள்.—ரோமர் 5:12; 8:18-21.
ஏதேனில் நடந்த கலகத்தினால் ஏற்பட்ட இக்கட்டான நிலையை யெகோவாவால் உடனடியாகச் சமாளிக்க முடிந்தது. எப்படியெனில், ஆதாம் செய்த பாவத்திலிருந்து மனிதவர்க்கத்தை மீட்பதற்காக இயேசு கிறிஸ்துவின் தலைமையில் மேசியானிய ராஜ்யம் எனும் விசேஷ அமைப்பு ஒன்றை ஏற்படுத்தப் போவதாக அவர் முன்தீர்மானித்தார். (மத்தேயு 6:10) மீட்கப்பட தகுதியுள்ளவர்களைக் கொண்ட ‘உலகத்தின் தோற்றத்துக்கு முன்னே’ அதாவது, கலகம் செய்த ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளைப் பிறப்பிப்பதற்கு முன்னே கடவுள் இதைத் தீர்மானித்தார்.
செயல்திட்டம் இல்லாமல் எந்த காரியத்தையும் மனிதர்களால் செய்ய முடியாது. அதே போல் கடவுளும் இந்தச் சர்வலோகம் சம்பந்தமாக விரிவான திட்டம் ஒன்றை கொண்டிருந்திருக்க வேண்டும், அதில் எல்லாவற்றையும் முன்தீர்மானித்திருந்திருக்க வேண்டும் என்ற கருத்துடன் சம்பந்தப்பட்டதே முன்விதிக்கப்படுதல் கோட்பாடு. ராய் வெதர்போர்ட் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கடவுள் எல்லாம் வல்லவராக இருந்தால், அவரால் ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாகக் குறிப்பிட முடியும் என்பதாகப் பல தத்துவஞானிகள் கருதுகிறார்கள்.” கடவுள் அப்படி ஒவ்வொரு நிகழ்வையும் முன்தீர்மானிக்க வேண்டுமா?
மனிதர்கள் தங்களுடைய தெரிவு செய்யும் சுயாதீனத்தைப் பயன்படுத்துகையில் ஏற்படும் எந்த அவசர நிலைமையையோ எதிர்பாராத சூழ்நிலையையோ யெகோவா தேவனால் சமாளிக்க முடியும்; ஏனென்றால் அவர் அளவற்ற வல்லமையும் நிகரற்ற ஞானமும் படைத்தவர். (ஏசாயா 40:25, 26; ரோமர் 11:33) விரிவான திட்டம் எதையும் போடாமலேயே உடனடியாக அவரால் அதைச் செய்ய முடியும். ஓரளவு திறமை படைத்த அபூரண மனிதர்களைப் போல, பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுடைய விதியையும் முன்கூட்டியே தீர்மானிக்கும் நிலையான திட்டம் எதுவும் கடவுளுக்குத் தேவைப்படாது. (நீதிமொழிகள் 19:21) எபேசியர் 3:9-ல் அநேக பைபிள் மொழிபெயர்ப்புகள், கடவுளுக்கு ஒரு ‘அநாதி தீர்மானம்’ அதாவது, நித்திய நோக்கம் இருப்பதாகவே குறிப்பிடுகின்றன, நிலையான திட்டம் இருப்பதாகக் குறிப்பிடுவதில்லை.
உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்
பூமிக்கான தமது நோக்கத்தை கடவுள் முன்தீர்மானித்திருக்கிறார். அதை வெளிப்படுத்துதல் 21:3, 4 இவ்வாறு விவரிக்கிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.” ஆம், யெகோவாவின் ஆரம்ப நோக்கத்திற்கு இசைய இந்தப் பூமி பரதீஸாக மாறும். (ஆதியாகமம் 1:27, 28) கேள்வி என்னவென்றால், நீங்கள் அங்கிருப்பீர்களா? பதில் நீங்கள் இப்போது செய்யும் தெரிவுகளைப் பொறுத்ததே. யெகோவா உங்கள் எதிர்காலத்தை முன்னதாகவே தீர்மானித்துவிடவில்லை.
கடவுளுடைய குமாரனான இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலி அவரிடத்தில் விசுவாசம் வைக்கும் எவரும் நித்திய ஜீவனைப் பெற வழிசெய்கிறது. (யோவான் 3:16, 17; அப்போஸ்தலர் 10:34, 35) “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை” என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. (யோவான் 3:36) நீங்கள் ஜீவனைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், கடவுளையும் அவருடைய குமாரனையும் அவருடைய சித்தத்தையும் பற்றி பைபிளிலிருந்து கற்றுக்கொண்டு, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் மெய் ஞானத்திற்கு இசைவாக நடப்பவன் “எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்” என்பதாக பைபிள் உறுதியளிக்கிறது.—நீதிமொழிகள் 1:20, 33.
[பக்கம் 5-ன் படங்கள்]
மிருகங்களைப் போலில்லாமல், மனிதர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பாளிகள்
[படத்திற்கான நன்றி]
கழுகுப் படம்: Cortesía de GREFA