சமாதானமாவதால் வரும் பலன்கள்
மரணப் படுக்கையிலிருந்த எட் என்பவரை பில் வெறுத்தார். 20 வருடங்களுக்கு முன்னால் எட் எடுத்த தீர்மானம் ஒன்று பில்லின் வேலைக்கு மட்டுமல்ல, உயிருக்கு உயிரான இந்த நண்பர்களின் நட்புக்கும் உலை வைத்தது. நண்பனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மன சாந்தியுடன் சாக எட் விரும்பினார். என்றாலும், பில் அவர் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டார்.
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு பில் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, தனது நண்பனை மன்னிக்க மறுத்ததற்கான காரணத்தை விளக்கினார். “உயிர் நண்பனான எனக்கு எட் துரோகம் செய்திருக்கக் கூடாது. இருபது வருஷத்துக்குப் பிறகு அவனுடன் சமாதானமாகிப் போக எனக்கு இஷ்டமில்லை. . . . நான் செஞ்சது தப்பாகூட இருக்கலாம், ஆனா எனக்கு இப்படி செய்யனும்னுதான் தோன்றியது.”a
தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இதுபோன்ற துயரத்தில் எப்போதும் விளைவடைவதில்லை என்றாலும், அவை அடிக்கடி மக்களை புண்படுத்தவோ, கசப்படையவோ செய்கின்றன. எட்-டை போல் உணருகிறவர் தனது தீர்மானம் தீங்கு ஏற்படுத்தியதை நினைத்து குற்றவுணர்வால் புழுங்குகிறார்; அதோடு, நண்பன் போய்விட்ட பேரிழப்பாலும் வேதனைப்படுகிறார். போதாததற்கு, புண்படுத்தப்பட்ட அந்த நண்பன் தங்கள் நட்பை வெறும் தூசிபோல் உதறித் தள்ளியதை எண்ணி எண்ணி வருந்துகிறார்.
ஆனால் பில்லை போல் உணர்கிறவர் அப்பாவியான தான் பலிகடா ஆனதை நினைத்து மனக்கசப்பும் வன்மமும் நிறைந்தவராகலாம். தனது முன்னாள் நண்பன் வேண்டுமென்றே சதிசெய்து தீங்கிழைத்ததாக நினைக்கலாம். பொதுவாக, இரண்டு நபர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகையில், ஒவ்வொருவரும் தன் பக்கத்தில்தான் நியாயம் இருப்பதாகவும், மொத்த தவறுக்கும் மற்றவர்தான் காரணம் என்பதாகவும் உணரலாம். இதனால், இருவருக்குமிடையே “போர்” நடக்கிறது.
அமைதி எனும் ஆயுதத்தை ஏந்தி சத்தமின்றி அவர்கள் யுத்தம் செய்கின்றனர். எப்படியெனில், ஒருவர் வருகையில் மற்றவர் முகத்தை திருப்பிக் கொள்ளலாம், கூட்டத்தில் சந்திக்கையில் ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமல் இருந்து விடலாம். தூரத்தில் இருந்து ஒருவரையொருவர் திருட்டுத்தனமாக பார்க்கலாம் அல்லது விரோதத்துடன் பார்த்து முறைத்துக் கொள்ளலாம். பேசும்போது, வெடுக்கென்று பேசலாம் அல்லது பட்டயத்தைப் போல வெட்டும் வார்த்தைகளால் அவமதிக்கலாம்.
அவர்கள் இரு துருவங்கள் போல தோன்றினாலும், சில விஷயங்களில் ஒத்துப்போகலாம். உதாரணமாக, தங்களுக்கு சில சீரியஸான பிரச்சினைகள் இருப்பதையும் நெருங்கிய நண்பருடன் கொண்டிருந்த நட்பு முறிந்து போனது வருத்தகரமானது என்பதையும் அவர்கள் ஒத்துக்கொள்ளலாம். புரையோடிப் போயிருக்கும் காயத்தின் வலியை இருவருமே அனுபவிக்கலாம், அந்தக் காயத்தைக் குணப்படுத்த எதையாவது செய்ய வேண்டும் என்பதையும் இருவருமே உணரலாம். ஆனால், முறிந்துபோன உறவை சரிசெய்து சமாதானமாவதற்கான முதல் படியை யார் எடுப்பது? அதற்கு இருவருமே தயாராக இல்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுக்குள் சில நேரங்களில் சூடான விவாதங்கள் ஏற்பட்டன. (மாற்கு 10:35-41; லூக்கா 9:46; 22:24) ஒருமுறை அவர்கள் விவாதித்தப் பின்பு, இயேசு இவ்வாறு கேட்டார்: “நீங்கள் வழியிலே எதைக் குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம் பண்ணினீர்கள்?” அவமானம் மௌனமாக வெளிப்பட்டது, அவர்களில் ஒருவரும் பதிலளிக்கவில்லை. (மாற்கு 9:33, 34) வேற்றுமைகளைப் போக்கி சமரசம் செய்துகொள்ள இயேசுவின் போதனைகள் அவர்களுக்கு உதவின. இயேசு மற்றும் அவருடைய சீஷர்கள் சிலரின் அறிவுரைகள் சச்சரவுகளைத் தீர்க்கவும், முறிந்த நட்பை சரிசெய்யவும் தொடர்ந்து மக்களுக்கு உதவி வருகின்றன. எப்படி என்று நாம் பார்க்கலாம்.
சமாதானமாவதற்கு முயலுங்கள்
“அவங்க கிட்ட பேசவே எனக்கு பிடிக்கல. இனிமே அவங்க முகத்துலகூட முழிக்க மாட்டேன்.” யாரைப் பற்றியாவது நீங்கள் இப்படி சொல்லியிருந்தால், பின்வரும் பைபிள் பதிவுகள் காட்டுகிறபடி, நீங்கள் சில காரியங்களைச் செய்ய வேண்டும்.
‘ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகு’ என்று இயேசு கற்பித்தார். (மத்தேயு 5:23, 24) கூடுதலாக அவர் இவ்வாறு கூறினார்: “உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து.” (மத்தேயு 18:15) நீங்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தாலோ அல்லது மற்றவர்கள் உங்களை புண்படுத்தியிருந்தாலோ, நீங்கள் அந்த நபரிடம் உடனடியாக அவ்விஷயத்தைக் குறித்து பேச வேண்டிய அவசியத்தை இயேசுவின் வார்த்தைகள் வலியுறுத்துகின்றன. நீங்கள் “சாந்தமுள்ள ஆவியோடே” அதைச் செய்ய வேண்டும். (கலாத்தியர் 6:1) ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி உங்கள் பேரில் எந்தத் தப்பும் இல்லை என்று நிரூபிப்பதோ அல்லது அடுத்தவரை மன்னிப்புக் கேட்க வற்புறுத்துவதோ அந்த சம்பாஷணையின் நோக்கம் அல்ல. சமாதானமாவதே அதன் நோக்கம். இந்த பைபிள் ஆலோசனை பலனளிக்குமா?
எர்னெஸ்ட் ஒரு பெரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக இருக்கிறார்.b பல ஆண்டுகளாக, அவருடைய வேலையில் எல்லா வகையான ஆட்களுடனும் உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களைக் கையாள வேண்டியிருந்தது. அதோடு, அவர்களுடன் நல்ல உறவையும் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. தனிப்பட்ட பிரச்சினைகள் எவ்வளவு எளிதாக தலைதூக்கலாம் என்பதை அவர் கண்டிருக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “மற்றவர்களுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படத்தான் செய்கின்றன. இவ்வாறு நடக்கையில், அந்த நபருடன் உட்கார்ந்து அந்தப் பிரச்சினையைக் குறித்து நான் பேசுவேன். நேரடியாக போய் பேசுவதும் சமாதானமாகும் நோக்கத்துடன் சந்திப்பதும் என்றுமே பலனளிக்காமல் இருந்ததில்லை.”
ஆலிஸ்யாவுக்கு பல்வேறு கலாச்சார பின்னணிகளைச் சேர்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள். அவள் இவ்வாறு கூறுகிறாள்: “சில சமயத்தில் நான் ஏதாவது ஒன்றைச் சொல்லிவிடுவேன், பிறகு யார் மனதையாவது புண்படுத்தி விட்டேனோ என நினைப்பேன். அந்த நபரிடம் சென்று மன்னிப்பு கேட்பேன். சில சமயத்தில் தேவையில்லாமல்கூட நான் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். ஏனெனில் அந்த நபர் புண்பட்டிருக்காவிட்டாலும் அவரிடம் மன்னிப்பு கேட்ட பிறகு நான் நிம்மதியாக உணர்கிறேன். எங்களுக்குள் எந்த மனஸ்தாபமும் இல்லை என்பதும் எனக்குத் தெளிவாகிவிடுகிறது.”
தடைகளைத் தாண்டுதல்
தனிப்பட்ட சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான சமாதான வழியில் பெரும்பாலும் தடைகள் உண்டு. “நான் ஏன் முதல்ல சமாதானமாகனும்? பிரச்சினை பண்ணினது அவன்தானே” என நீங்கள் எப்போதாவது சொல்லியிருக்கிறீர்களா? அல்லது பிரச்சினையைச் சரிசெய்யும் நோக்கத்துடன் நீங்கள் ஒருவரைச் சந்தித்தபோது, “உங்ககிட்ட பேசறதுக்கு ஒண்ணுமே இல்லை” என அவர் சொன்னதை கேட்ட அனுபவம் உண்டா? சிலர் உணர்ச்சி ரீதியாக புண்பட்டதால் அவ்வாறெல்லாம் நடந்துகொள்ளலாம். நீதிமொழிகள் 18:19 இவ்வாறு சொல்கிறது: “அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப் பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.” அதனால், மற்றவர்களுடைய உணர்ச்சியையும் கருத்தில் கொள்ளுங்கள். அவர் உங்களை ஏற்காவிட்டால், கொஞ்ச நாள் காத்திருந்து பின்னர் திரும்பவும் முயற்சி செய்யுங்கள். அப்போது அந்த ‘அரணான பட்டணம்’ திறந்து, ஒப்புரவாகுதல் என்ற கதவின் “தாழ்ப்பாள்” நீக்கப்படலாம்.
ஒருவருடைய சுயமரியாதை சமாதானமாவதற்கு மற்றொரு தடையாக இருக்கலாம். சிலர் மன்னிப்பு கேட்பதையோ எதிராளியுடன் பேசுவதையோகூட பெரிய அவமானமாக கருதலாம். சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரிதான். ஆனால், சமாதானம் ஆவதற்கு மறுப்பது ஒருவருடைய சுயமரியாதையை உயர்த்துமா அல்லது குறைக்குமா? சுயமரியாதை என்ற போர்வையில் பெருமை ஒளிந்திருக்கிறதா?
சச்சரவு செய்யும் இயல்புக்கும் பெருமைக்கும் இடையே தொடர்பு இருப்பதை பைபிள் எழுத்தாளரான யாக்கோபு காண்பிக்கிறார். கிறிஸ்தவர்கள் சிலர் செய்த ‘யுத்தங்களையும்’ ‘சண்டைகளையும்’ குறித்து அம்பலமாக்கிய பிறகு, அவர் இவ்வாறு தொடர்ந்தார்: ‘தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.’ (யாக்கோபு 4:1-3, 6) சமாதானமாவதை பெருமை எப்படி தடுக்கிறது?
தாங்கள் மற்றவர்களைவிட சிறந்தவர்கள் என்று மக்களை நம்பவைப்பதன் மூலம் பெருமை அவர்களை ஏமாற்றுகிறது. மற்றவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக பெருமையுள்ளவர்கள் உணர்கிறார்கள். எவ்விதத்தில்? கருத்து வேறுபாடுகள் எழும்புகையில், தங்களுடைய எதிராளியை திருத்தவே முடியாது என கருதுகிறார்கள். தங்களுடன் ஒத்துவராத ஆட்கள் ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதற்கே தகுதியற்றவர்கள், அவர்களிடம் மன்னிப்பு கேட்க தேவையில்லை என்பதாக பெருமை சிலரை கருத வைக்கிறது. ஆகவே, தற்பெருமை பிடித்தவர்கள் சச்சரவுகளை சரிசெய்வதற்குப் பதிலாக அவற்றை தொடர்ந்து வளர்க்கிறார்கள்.
நெடுஞ்சாலையில் போக்குவரத்தைத் தடை செய்யும் சாலை மறியல்கள் போல், பெருமை பெரும்பாலும் சமாதானத்திற்கு வழிநடத்தும் படிகளை அடைக்கிறது. ஆகவே ஒருவருடன் சமாதானமாகும் முயற்சியை தவிர்த்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், பெருமை உங்களைப் பீடித்திருக்கலாம். அதை எவ்வாறு விட்டொழிப்பது? பெருமைக்கு நேர்மாறான மனத்தாழ்மையை வளர்த்துக் கொள்வதன் மூலமே.
பெருமைக்கு நேர்மாறான குணத்தை காட்டுங்கள்
மனத்தாழ்மையை பைபிள் வெகுவாக சிபாரிசு செய்கிறது. “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.” (நீதிமொழிகள் 22:4) சங்கீதம் 138:6-ல் மனத்தாழ்மையுள்ளவர்களையும் பெருமையுள்ளவர்களையும் குறித்த யெகோவாவின் நோக்குநிலையை வாசிக்கிறோம்: “கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.”
அநேகர் மனத்தாழ்மை என்றால் தாழ்வுபடுத்துவது என பொருள் கொள்கிறார்கள். உலக ஆட்சியாளர்கள் இவ்வாறே கருதுகிறார்கள். முழு தேசங்கள் அவர்களுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டாலும், தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியம் அவர்களுக்கு இல்லை. ஆட்சியாளர் ஒருவர் “மன்னித்துவிடுங்கள்” என்று சொல்வது செய்திகளில் வெளிவரத்தக்க விஷயம். முன்னாள் அரசாங்க அதிகாரி ஒருவர் கோரமான விபத்திற்குக் காரணமாயிருந்த தனது தவறுக்காக வருத்தம் தெரிவித்தபோது, அவருடைய வார்த்தைகள் தலைப்பு செய்தியாயின.
மனத்தாழ்மையை ஓர் அகராதி எவ்வாறு விளக்குகிறது என்பதை கவனியுங்கள்: தாழ்மையுடன் இருப்பது அல்லது தன்னைக் குறித்து தாழ்வாக எண்ணுவது, பெருமைக்கு எதிரான ஒன்று. ஆகவே, மனத்தாழ்மை என்பது ஒருவர் தன்னைக் குறித்து எவ்வாறு உணருகிறார் என்பதையே காட்டுகிறது, மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அல்ல. தவறுகளைத் தாழ்மையுடன் ஒத்துக்கொள்வதும், மனமார மன்னிப்பு கேட்பதும் ஒருவரை அவமானப்படுத்துவது இல்லை; மாறாக, அவருடைய மதிப்பை உயர்த்துகிறது. பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.”—நீதிமொழிகள் 18:12.
தங்களுடைய தவறுகளுக்காக மன்னிப்பு கேட்காத அரசியல்வாதிகளைக் குறித்து ஒருவர் இவ்வாறு கூறினார்: “தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்வது பலவீனத்தின் அடையாளம் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. மனவுறுதியும் தன்னம்பிக்கையும் இல்லாத ஆட்கள் “மன்னித்து விடுங்கள்” என்று கேட்பது வெகு அபூர்வம். பெரிய மனமுடைய, தைரியமான ஆட்கள் மட்டுமே “நான் தவறு செய்துவிட்டேன்” என்று கூறுகிறார்கள்.” அரசியல்வாதியாக இல்லாதவர்களின் விஷயத்திலும் இதுவே உண்மையாக இருக்கிறது. பெருமையை விட்டொழித்து அதற்குப் பதிலாக தாழ்மையை வளர்த்துக்கொள்ள நீங்கள் முயற்சித்தீர்கள் என்றால், தனிப்பட்ட பிரச்சினையை சமாதானத்துடன் சரிசெய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இந்த உண்மையை ஒரு குடும்பத்தார் எவ்வாறு கண்டுபிடித்தார்கள் என்பதை கவனியுங்கள்.
ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக ஜூலிக்கும் அவளுடைய தம்பி வில்லியமுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. வில்லியமுக்கு பயங்கர கோபம் வந்ததால் ஜூலியோடும் அவளுடைய கணவன் ஜோசப்போடும் தொடர்பை அறுத்துக்கொண்டார். ஜூலியும் ஜோசப்பும் இதுவரை அவருக்கு அளித்திருந்த எல்லா பரிசுப் பொருட்களையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். மாதங்கள் செல்லச் செல்ல, ஒருசமயத்தில் நெருக்கமாயிருந்த இவர்களிடையே கசப்புணர்வு குடிகொள்ள ஆரம்பித்தது.
என்றாலும், மத்தேயு 5:23, 24-ல் உள்ள அறிவுரையைக் கடைப்பிடிக்க ஜோசப் முடிவு செய்தார். சாந்தமுள்ள ஆவியோடு தனது மைத்துணனை அணுக முயற்சித்தார். அவரை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டு கடிதங்களை எழுதினார். தம்பியை மன்னிக்கும்படி ஜோசப் தன்னுடைய மனைவியை உற்சாகப்படுத்தினார். காலப்போக்கில், ஜூலியும் ஜோசப்பும் உண்மையிலேயே சமாதானமாக விரும்புகிறார்கள் என்பதை வில்லியம் உணர்ந்தபோது அவருடைய மனம் இளகியது. வில்லியம் தன் மனைவியுடன் ஜூலியையும் ஜோசப்பையும் சந்தித்தார். அவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்டு, ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, பழையபடி நெருக்கமானார்கள்.
ஒருவரோடிருக்கும் தனிப்பட்ட பிரச்சனை ஒன்றை தீர்க்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், பைபிள் நியமங்களைப் பொறுமையோடு பொருத்தி அவரோடு சமாதானமாக முயற்சி செய்யுங்கள். யெகோவா உங்களுக்கு உதவுவார். பூர்வ இஸ்ரவேலரிடம் யெகோவா சொன்னது உங்கள் விஷயத்திலும் உண்மையாகும்: ‘ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப் போல் இருக்கும்.’—ஏசாயா 48:18.
[அடிக்குறிப்புகள்]
a ஸ்டான்லி கிளவுட் மற்றும் லின் ஆல்சன் ஆகியோரின் தி முர்ரோ பாய்ஸ்—பயனியர்ஸ் ஆன் தி ப்ரண்ட் லைன்ஸ் ஆஃப் ப்ராட்காஸ்ட் ஜர்னலிசம் என்ற புத்தகத்தின் அடிப்படையில்.
b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 7-ன் படங்கள்]
மன்னிப்பு கேட்பது பெரும்பாலும் சமாதானத்திற்கு வழிவகுக்கும்