‘மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தல்’
‘நற்காரியங்களைச் சுவிசேஷமாய் [“மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை,” Nw] அறிவிக்கிற . . . சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.’—ஏசாயா 52:7.
1, 2. (அ) அன்றாடம் நடக்கும் பயங்கர சம்பவங்கள் யாவை? (ஆ) கெட்ட செய்திகளையே சதா கேள்விப்படுகையில் மக்கள் எப்படி பிரதிபலிக்கிறார்கள்?
எட்டுத் திக்கிலுமிருந்து வரும் கெட்ட செய்திகள் தங்களை சோகக் கடலில் ஆழ்த்துவதாக இன்று மக்கள் உணருகிறார்கள். ரேடியோவைத் திருப்பினால், உலகையே உலுக்கும் கொடிய நோய்களைப் பற்றிய கதிகலங்கச் செய்யும் அறிக்கைகள். டிவியை ‘ஆன்’ செய்தால், பசியால் வாடும் பிள்ளைகள் உதவிக்காக கதறுகிற நெஞ்சைவிட்டு நீங்கா காட்சிகள். செய்தித்தாளைப் புரட்டினால், கட்டடங்களை தவிடுபொடியாக்கி, எண்ணற்ற அப்பாவி மக்களை சிதைத்து சின்னாபின்னமாக்கும் குண்டு வெடிப்புகளைப் பற்றிய செய்திகள்.
2 ஆம், நெஞ்சை உறைய வைக்கும் பயங்கர சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. இந்த உலகத்தின் காட்சி நிச்சயமாகவே மாறி வருகிறது, சொல்லப்போனால் படுமோசமாக ஆகி வருகிறது. (1 கொரிந்தியர் 7:31, NW) சில சமயங்களில், இந்த முழு உலகமும் “எரிந்து சாம்பலாக ஆகப்போவதைப்” போல் தோன்றுகிறதென மேற்கு ஐரோப்பாவில் வெளியாகும் செய்தி பத்திரிகை ஒன்று குறிப்பிட்டது. அநேகர் வேதனையில் தத்தளிப்பதில் ஆச்சரியமே இல்லை! ஐக்கிய மாகாணங்களில் டிவி செய்திகளைக் குறித்து நடத்தப்பட்ட சுற்றாய்வில் ஒருவர் பின்வருமாறு சொன்னது லட்சோபலட்சம் மக்களின் உணர்ச்சிகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது: ‘டிவி நியூஸ் பார்த்த பிறகு நான் அப்படியே சோர்ந்து விடுகிறேன். கெட்ட செய்திகளைத் தவிர வேறு எதுவுமே அதில் இல்லை. செய்வதறியாது தவிக்கிறேன்.’
ஒவ்வொருவரும் கேள்விப்பட வேண்டிய செய்தி
3. (அ) பைபிள் அறிவிக்கும் நல்ல செய்தி என்ன? (ஆ) ராஜ்ய நற்செய்தியை ஏன் நீங்கள் அருமையாக கருதுகிறீர்கள்?
3 சோர்வூட்டும் இத்தகைய உலகில் நல்ல செய்தியைக் கேள்விப்பட முடியுமா? ஆம், நிச்சயம் கேள்விப்பட முடியும்! பைபிள் நல்ல செய்தியை தெரிவிக்கிறது என்பதை அறிவது ஆறுதலாக இருக்கிறது. வியாதி, பசி, குற்றச்செயல், போர் ஆகியவற்றிற்கும், எல்லா வகையான ஒடுக்குதலுக்கும் கடவுளுடைய ராஜ்யம் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது என்பதே அந்த நல்ல செய்தி. (சங்கீதம் 46:9; 72:12) இதுவே ஒவ்வொருவரும் கேள்விப்பட வேண்டிய செய்தி, அல்லவா? யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறுதான் நினைக்கிறார்கள். எனவேதான், சகல தேசத்தாருக்கும் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை சொல்வதற்கு அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள் என்பதை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள்.—மத்தேயு 24:14.
4. ஊழியத்தின் எந்த அம்சங்கள் இந்தக் கட்டுரையிலும், அடுத்தக் கட்டுரையிலும் சிந்திக்கப்படும்?
4 ஆனால், நாம் எல்லாருமே சந்தோஷமாகவும் திறமையாகவும் இந்த நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கிப்பதற்கு—மக்கள் நன்கு செவிகொடுத்துக் கேட்காத பிராந்தியங்களிலும்கூட தொடர்ந்து பிரசங்கிப்பதற்கு—என்ன செய்யலாம்? (லூக்கா 8:15) நம்முடைய பிரசங்க வேலையைப் பற்றிய மூன்று முக்கியமான அம்சங்களை சுருக்கமாய் ஆராய்வது உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. (1) நம்முடைய உள்நோக்கங்கள், அதாவது நாம் ஏன் பிரசங்கிக்கிறோம்; (2) நம்முடைய செய்தி, அதாவது எதைப் பிரசங்கிக்கிறோம், (3) பிரசங்கிக்கும் முறைகள், அதாவது எப்படிப் பிரசங்கிக்கிறோம் ஆகியவற்றை நாம் ஆராயலாம். நம்முடைய உள்நோக்கத்தை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும், நம்முடைய செய்தியைத் தெளிவாக சொல்வதன் மூலமும், பிரசங்கிக்கும் முறைகளைத் திறம்பட பயன்படுத்துவதன் மூலமும் நற்செய்திகளிலேயே மிகச் சிறந்த நற்செய்தியை—கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை—கேட்கும் வாய்ப்பை உலகெங்குமுள்ள பலதரப்பட்ட மக்களுக்கு நாம் அளிக்கிறோம்.a
நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் ஏன் பங்குகொள்கிறோம்
5. (அ) எல்லாவற்றிற்கும் மேலாக, ஊழியத்தில் பங்குகொள்வதற்கு எது நம்மைத் தூண்டுகிறது? (ஆ) பிரசங்கிக்க வேண்டுமென்ற பைபிள் கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நாம் கடவுளை நேசிக்கிறோம் என எப்படி சொல்லலாம்?
5 முதல் அம்சத்தைப் பற்றி, அதாவது நம் உள்நோக்கங்களைப் பற்றி, இப்போது சிந்திக்கலாம். நாம் ஏன் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறோம்? இயேசு என்ன காரணத்திற்காக பிரசங்கித்தாரோ அந்த காரணத்திற்காகவே நாமும் பிரசங்கிக்கிறோம். “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்” என்று அவர் கூறினார். (யோவான் 14:31; சங்கீதம் 40:8) எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவா மீதுள்ள அன்பு நம்மைத் தூண்டுவதால் நாம் பிரசங்கிக்கிறோம். (மத்தேயு 22:37, 38) நம் ஊழியத்திற்கும் கடவுள் மீதுள்ள அன்பிற்கும் சம்பந்தமிருப்பதை பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்.” (1 யோவான் 5:3; யோவான் 14:21) ‘நீங்கள் போய் சீஷராக்குங்கள்’ என்பதும் கடவுளுடைய கற்பனைகளில் அடங்கியிருக்கிறதா? (மத்தேயு 28:19) ஆம், அடங்கியிருக்கிறது. இவை இயேசு சொன்ன வார்த்தைகளாக இருந்தாலும், பிரசங்கித்து சீஷராக்கும்படியான கட்டளை யெகோவாவிடமிருந்தே வந்தது. எப்படி? இயேசு இவ்வாறு விளக்கினார்: “நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்.” (யோவான் 8:28; மத்தேயு 17:5) ஆகவே, பிரசங்கிக்க வேண்டுமென்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நாம் யெகோவாவை நேசிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.
6. கடவுளை நேசிப்பது எந்தெந்த வழிகளில் நம்மைப் பிரசங்கிக்க தூண்டுகிறது?
6 அதோடு, யெகோவாவை நேசிப்பது நம்மைப் பிரசங்கிக்கத் தூண்டுகிறது, ஏனென்றால் அவருக்கு எதிராக சாத்தான் பரப்பும் பொய்களைக் களைந்தெறிய நாம் விரும்புகிறோம். (2 கொரிந்தியர் 4:4) கடவுளுடைய ஆட்சி சரியானதா என்பதைக் குறித்து சாத்தான் சந்தேகத்தை எழுப்பினான். (ஆதியாகமம் 3:1-5) அவனுடைய குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தவும் மனிதருக்கு முன் கடவுளுடைய பெயரை பரிசுத்தப்படுத்தவும் யெகோவாவின் சாட்சிகளான நாம் மனதார விரும்புகிறோம். (ஏசாயா 43:10-12) மேலும், யெகோவாவின் பண்புகளையும் வழிகளையும் நாம் அறிந்திருப்பதாலும் ஊழியத்தில் பங்குகொள்கிறோம். நாம் அவரிடம் நெருங்கியிருப்பதாக உணருகிறோம், நம்முடைய கடவுளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்ற பலமான ஆசை நமக்கு இருக்கிறது. சொல்லப்போனால், யெகோவாவின் நற்குணமும் நீதியான வழிகளும் நமக்கு அந்தளவு மகிழ்ச்சியைத் தருவதால், அவரைப் பற்றி நாம் பேசாமல் இருக்கவே முடியாது. (சங்கீதம் 145:7-12) செவிகொடுத்துக் கேட்போருக்கு அவருடைய துதியை அறிவிப்பதற்கும் அவருடைய ‘மகத்துவங்களைப்’ பற்றி பேசுவதற்கும் நாம் உந்துவிக்கப்படுகிறோம்.—1 பேதுரு 2:9; ஏசாயா 43:21.
7. கடவுள் மீதுள்ள அன்புடன்கூட, வேறென்ன முக்கியமான காரணத்திற்காகவும் நாம் பிரசங்க வேலையில் பங்குகொள்கிறோம்?
7 ஊழியத்தில் தொடர்ந்து பங்குகொள்வதற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது: சரமாரியாக காதில் விழும் கெட்ட செய்திகளால் திக்குமுக்காடுகிறவர்களுக்கும் ஒடுக்குதலால் அவதிப்படுகிறவர்களுக்கும் உதவியளிக்க வேண்டுமென நாம் உள்ளப்பூர்வமாக விரும்புகிறோம். இதில், நமக்கு முன்மாதிரியாக திகழும் இயேசுவை பின்பற்ற முயலுகிறோம். உதாரணமாக, மாற்கு 6-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்.
8. ஜனங்கள் மீது இயேசுவுக்கு இருந்த உணர்ச்சிகளைப் பற்றி மாற்கு 6-ம் அதிகாரத்திலுள்ள பதிவு என்ன சொல்கிறது?
8 ஊழியத்தை முடித்து வரும் அப்போஸ்தலர்கள் தாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றி இயேசுவிடம் விவரிக்கிறார்கள். அப்போது, அப்போஸ்தலர்கள் களைப்பாக இருப்பதை இயேசு கவனித்து, ‘சற்றே இளைப்பாறுவதற்கு’ தம்முடன் வரும்படி சொல்கிறார். எனவே அமைதியான ஓர் இடத்திற்குப் படகில் ஏறிச் செல்கிறார்கள். ஆனால் ஜனங்களும் அவர்களைப் பின்தொடர்ந்து, கரையோரமாக ஓட்டமாய் ஓடிச் சென்று அவர்களுக்கு முன்பு அந்த இடத்தை அடைகிறார்கள். இயேசு என்ன செய்கிறார்? ‘அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்’ என பதிவு சொல்கிறது. (மாற்கு 6:31-34) இயேசு களைப்பாக இருந்தபோதிலும் ஜனங்களுக்கு நற்செய்தியைத் தொடர்ந்து அறிவித்து வந்ததற்குக் காரணம் அவர்கள்மேல் ‘மனதுருகியதே.’ ஆம், இயேசு உண்மையிலேயே ஜனங்கள் மீது அனுதாபப்படுகிறார், இரக்கப்படுகிறார்.
9. பிரசங்கிப்பதற்குரிய சரியான உள்நோக்கத்தைக் குறித்து மாற்கு 6-ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
9 இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நற்செய்தியைப் பிரசங்கித்து, சீஷராக்கும் பொறுப்பு கிறிஸ்தவர்களாகிய நமக்கு இருக்கிறது. “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட” வேண்டுமென்பது கடவுளுடைய சித்தம்; ஆகவே ஜனங்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறோம். (1 தீமோத்தேயு 2:4) என்றாலும், ஊழியத்தை ஒரு கடமைக்காக அல்ல ஆனால் ஜனங்கள் மீதுள்ள இரக்கத்தால் செய்கிறோம். இயேசுவைப் போலவே உண்மையில் மக்கள் மீது நமக்கு அனுதாபம் இருந்தால், அவர்களுக்கு நற்செய்தியை தொடர்ந்து அறிவிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு நம் இருதயம் நம்மை உந்துவிக்கும். (மத்தேயு 22:39) இப்படிப்பட்ட நல்ல உள்நோக்கங்களுடன் ஊழியத்தில் கலந்துகொள்வது, தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு நம்மைத் தூண்டும்.
நம்முடைய செய்தி—கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி
10, 11. (அ) நாம் பிரசங்கிக்கும் செய்தியை ஏசாயா எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) இயேசு எவ்வாறு மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார், நவீன காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் எப்படி இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கிறார்கள்?
10 நம் ஊழியத்தின் இரண்டாவது அம்சம், அதாவது செய்தி என்ன? நாம் எதைப் பிரசங்கிக்கிறோம் என்பதே அது. நாம் அறிவிக்கும் செய்தியைப் பற்றிய இந்த அழகிய விவரிப்பை ஏசாயா தீர்க்கதரிசி கொடுத்தார்: “சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் [“மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை,” NW] அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.”—ஏசாயா 52:7.
11 இந்த வசனத்தின் முக்கிய சொற்றொடரான ‘உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறார்’ என்பது நாம் அறிவிக்க வேண்டிய செய்தியை, அதாவது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை, நமக்கு நினைப்பூட்டுகிறது. (மாற்கு 13:10) நம் செய்தியின் முக்கிய கருத்தை இந்த வசனம் வெளிப்படுத்தும் விதத்தையும் கவனியுங்கள். ‘இரட்சிப்பு,’ ‘நற்செய்தி,’ ‘சமாதானம்,’ ‘மேலான ஒன்று’ போன்ற வார்த்தைகளை ஏசாயா பயன்படுத்துகிறார். ஏசாயாவின் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின், பொ.ச. முதல் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்து இந்தத் தீர்க்கதரிசனத்தை சிறப்பான விதத்தில் நிறைவேற்றினார்; மேலான ஒன்றைப் பற்றிய செய்தியை, அதாவது வரப்போகும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை, வைராக்கியமாக அறிவிப்பதில் முன்மாதிரி வைப்பதன் மூலம் இதை நிறைவேற்றினார். (லூக்கா 4:43) நவீன காலங்களில், குறிப்பாக 1919 முதற்கொண்டு, பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியையும் சகல தேசத்தாருக்கு அது தரப் போகும் ஆசீர்வாதங்களையும் வைராக்கியத்துடன் அறிவிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் இயேசுவைப் பின்பற்றியிருக்கிறார்கள்.
12. ராஜ்ய நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அது எத்தகைய பலனளிக்கிறது?
12 ராஜ்ய நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அந்தச் செய்தி எப்படி பயனளிக்கிறது? இயேசுவின் நாட்களைப் போலவே இன்றும் இந்த நற்செய்தி நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கிறது. (ரோமர் 12:12; 15:4) நல்மனமுள்ளோருக்கு இது நம்பிக்கை அளிக்கிறது; எப்படியெனில் எதிர்காலத்தில் நல்ல நிலைமைகள் வரும் என்பதற்கான சிறந்த காரணங்களை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (மத்தேயு 6:9, 10; 2 பேதுரு 3:13) ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள தேவ பயமுள்ளோருக்கு இத்தகைய நம்பிக்கை உதவுகிறது. அப்படிப்பட்டவர்கள் ‘துர்ச்செய்தியைக் கேட்பதால் பயப்பட மாட்டார்கள்’ என சங்கீதக்காரன் சொல்கிறார்.—சங்கீதம் 112:1, 7.
‘இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டும்’ செய்தி
13. நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்களுக்குக் கிடைக்கும் உடனடி ஆசீர்வாதங்களைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி எப்படி விவரிக்கிறார்?
13 அதோடு, நற்செய்திக்கு செவிசாய்ப்பவர்கள் உடனடியாக ஆறுதலையும் ஆசீர்வாதங்களையும் பெறுகிறார்கள். எப்படி? ராஜ்ய நற்செய்திக்கு செவிசாய்ப்பதால் கிடைக்கும் சில ஆசீர்வாதங்கள் ஏசாயா புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன: ‘கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், . . . அவர் என்னை அனுப்பினார்’ என அவர் முன்னறிவித்தார்.—ஏசாயா 61:1, 2; லூக்கா 4:16-21.
14. (அ) ‘இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதல்’ என்ற சொற்றொடர் ராஜ்ய செய்தியைப் பற்றி என்ன சுட்டிக்காட்டுகிறது? (ஆ) இருதயம் நொறுங்குண்டவர்கள் மீது யெகோவா காட்டும் கரிசனையை நாம் எப்படி பிரதிபலிக்கிறோம்?
14 இந்தத் தீர்க்கதரிசனத்தின்படி, நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் ‘இருதயம் நொறுங்குண்டவர்களின் காயத்தை [இயேசு] கட்டுவார்.’ ஏசாயா எவ்வளவு தத்ரூபமாக சித்தரித்துக் காட்டுகிறார்! ஒருவருடைய உடலில் காயம் ஏற்படுகையில் கரிசனையுள்ள நர்ஸ் அதன் மீது கட்டுப்போடலாம் அல்லது ஏதோவொன்றை வைத்து அதைச் சுற்றிக் கட்டலாம். அதே போல, கரிசனையுள்ள பிரஸ்தாபிகள் ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்கும்போது, ஏதாவதொரு விதத்தில் துன்பப்படுகிற அனைவரையும் பலப்படுத்துகிறார்கள். தேவையிலிருப்போரை ஆதரிப்பதன் மூலம் அவர்கள் யெகோவாவின் கரிசனையை காண்பிக்கிறார்கள். (எசேக்கியேல் 34:15, 16) கடவுளைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்: “இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.”—சங்கீதம் 147:3.
ராஜ்ய செய்தி ஏற்படுத்தும் மாற்றம்
15, 16. தேவையில் இருப்போருக்கு ராஜ்ய செய்தி ஆதரவையும் பலத்தையும் தருகிறது என்பதை உண்மையில் நடந்த சம்பவங்கள் எப்படி எடுத்துக் காட்டுகின்றன?
15 இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு ராஜ்ய செய்தி எப்படி ஆதரவையும் பலத்தையும் அளித்திருக்கிறது என்பதை உண்மையில் நடந்த எண்ணற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஓரியானா என்ற வயதான பெண்மணியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இவருக்கு வாழ வேண்டுமென்ற ஆசை அறவே இல்லாதிருந்தது. அந்தச் சமயத்தில், யெகோவாவின் சாட்சி ஒருவர் இவரை சந்தித்து, பைபிளையும் என்னுடைய பைபிள் கதை புத்தகத்தையும்b வாசித்துக் காண்பித்தார். முதலில், மனச்சோர்வுற்றிருந்த இந்தப் பெண்மணி கண்களை மூடியவாறு படுக்கையிலிருந்து கொண்டே அவர் வாசிப்பதை கேட்டுக்கொண்டிருந்தார். அவ்வப்போது பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார். பிறகு, படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கேட்பதற்கு முயற்சி செய்ய ஆரம்பித்தார். சில காலத்திற்குப்பின், வீட்டின் மெயின் ஹாலில் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தன்னுடைய பைபிள் ஆசிரியரின் வரவை எதிர்பார்த்திருந்தார். அடுத்து, ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்தார். கூட்டங்களில் கேட்ட விஷயங்கள் அவரை உற்சாகப்படுத்தின, அதனால் தன்னுடைய வீட்டைக் கடந்து செல்லும் ஆட்களுக்கு பைபிள் பிரசுரங்களைக் கொடுக்கத் தொடங்கினார். அதன்பின், 93-வது வயதில், ஓரியானா ஒரு யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டப்பட்டார். வாழ வேண்டுமென்ற ஆசையை ராஜ்ய செய்தி புதுப்பித்திருந்தது!—நீதிமொழிகள் 15:30; 16:24.
16 வியாதியால் மரிக்கும் தறுவாயில் இருப்பவர்களுக்கும்கூட ராஜ்ய செய்தி இன்றியமையாத ஆதரவளிக்கிறது. மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த மரீயாவை சிந்தித்துப் பாருங்கள். உயிரைக் குடிக்கும் வியாதியால் இந்தப் பெண் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள், எந்தவித நம்பிக்கையும் இல்லாதிருந்தாள். யெகோவாவின் சாட்சிகள் அவளை சந்தித்தபோது அவள் மிகவும் மனச்சோர்வுற்றிருந்தாள். என்றாலும், கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய நற்செய்தியை கற்றுக்கொண்டபோது அவளுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆனது. அவள் முழுக்காட்டப்பட்டாள், பிரசங்க வேலையில் வெகு மும்முரமாக ஈடுபட்டு வந்தாள். இறப்பதற்கு முந்தின கடைசி இரண்டு வருடங்களில், அவளுக்கிருந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அவளுடைய கண்களில் பளிச்சிட்டன. உயிர்த்தெழுதல் பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கையுடன் மரீயா இறந்தாள்.—ரோமர் 8:38, 39.
17. (அ) ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்கள் மீது அது என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது? (ஆ) ‘தாழ்த்தப்பட்ட யாவரையும் [யெகோவா] தூக்கிவிடுகிறார்’ என்பதை உங்கள் அனுபவித்திலிருந்து எப்படி சொல்ல முடியும்?
17 பைபிள் சத்தியங்களை அறிந்துகொள்வதற்கு ஏங்குவோருடைய வாழ்க்கையில் ராஜ்ய செய்தி ஏற்படுத்தும் மாற்றத்தை இத்தகைய அறிக்கைகள் நிரூபிக்கின்றன. நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியவரை மரணத்தில் இழந்து தவிப்பவர்கள் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றிக் கற்றுக்கொள்ளும்போது புதுப்பெலன் அடைகிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 4:13) வறுமையின் காரணமாக குடும்பத்தைக் காப்பாற்ற கஷ்டப்படுவோர் யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருந்தால் தங்களை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை கற்றுக்கொள்ளும்போது புதுத் தெம்பையும் கண்ணியத்தையும் பெறுகிறார்கள். (சங்கீதம் 37:28) மனச்சோர்வில் தொய்ந்து போனவர்கள் யெகோவாவின் உதவியால் தேவையான மனோ பலத்தைப் பெற்று, சில சமயங்களில் அந்த வியாதியிலிருந்து மீண்டு வருவதைக் காண்பது நம்மை நெகிழ செய்கிறது. (சங்கீதம் 40:1, 2) ஆம், யெகோவா தமது வார்த்தையால் வல்லமை அளிப்பதன் மூலம் ‘தாழ்த்தப்பட்ட யாவரையும் [இப்போதே] தூக்கிவிடுகிறார்.’ (சங்கீதம் 145:14, பொது மொழிபெயர்ப்பு) நம் பிராந்தியத்திலும் சபையிலுமுள்ள இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு ராஜ்ய நற்செய்தி எப்படி ஆறுதல் அளிக்கிறது என்பதைக் காண்கையில் இன்று நம்மிடம் மட்டுமே மிகச் சிறந்த செய்தி உள்ளது என்பது நமக்கு மீண்டும் மீண்டும் நினைப்பூட்டப்படுகிறது!—சங்கீதம் 51:17.
‘அவர்களுக்காக என் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பம்’
18. நற்செய்தியை யூதர்கள் புறக்கணித்தது பவுலை எப்படி பாதித்தது, ஏன்?
18 நம்முடைய செய்தியே மிகச் சிறந்த செய்தியென்றாலும், அநேகர் அதை புறக்கணித்துவிடுகிறார்கள். இது நம்மை எப்படி பாதிக்கலாம்? அப்போஸ்தலன் பவுலை பாதித்த விதமாகவே நம்மையும் பாதிக்கலாம். யூதர்களுக்கு அவர் அடிக்கடி பிரசங்கித்தார், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இரட்சிப்பின் செய்தியைப் புறக்கணித்தனர். அது அவரை ஆழமாக பாதித்தது. “எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது” என அவர் ஒப்புக்கொண்டார். (ரோமர் 9:1) அந்த யூதர்களுக்காக பவுல் இரக்கப்பட்டார். நற்செய்தியை அவர்கள் புறக்கணித்தது அவரை விசனப்படுத்தியது.
19. (அ) சில சமயங்களில் நாம் உற்சாகம் இழந்துவிடக்கூடும் என்பது ஏன் புரிந்துகொள்ளத்தக்கது? (ஆ) பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்ய பவுலுக்கு எது உதவியது?
19 நாமும் இரக்கத்தின் காரணமாகவே நற்செய்தியைப் பிரசங்கிக்கிறோம். ஆகவே, அநேகர் ராஜ்ய செய்தியைப் புறக்கணிக்கும்போது நாமும் உற்சாகம் இழந்துவிடுகிறோம். அவர்களுடைய ஆவிக்குரிய நலனில் நமக்கு உள்ளப்பூர்வமான அக்கறை இருக்கிறது என்பதை இத்தகைய உணர்ச்சி காட்டுகிறது. என்றாலும், அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்ய எது அவருக்கு உதவியது? யூதர்கள் நற்செய்தியைப் புறக்கணித்தது அவருக்கு துக்கத்தையும் மனவேதனையையும் உண்டாக்கியபோதிலும், அவர்களுக்கு எந்த உதவியும் செய்து பிரயோஜனமில்லை என்று நினைத்துக்கொண்டு, யூதர்கள் அனைவரையும் அவர் அடியோடு கைவிட்டுவிடவில்லை. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிற சிலர் இன்னும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆகவேதான், தனிப்பட்ட யூதர்கள் மீது தனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளைக் குறித்து பவுல் இவ்வாறு எழுதினார்: “இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.”—ரோமர் 10:1.
20, 21. (அ) ஊழியத்தின் சம்பந்தமாக, நாம் எவ்வாறு பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்? (ஆ) ஊழியத்தின் எந்த அம்சம் அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கப்படும்?
20 பவுல் சிறப்பித்துக் காட்டிய இரண்டு காரியங்களை கவனியுங்கள். சிலர் இரட்சிப்பை பெறுவார்கள் என்ற உள்ளப்பூர்வமான ஆசை அவருக்கு இருந்தது, அதற்காக கடவுளிடம் அவர் விண்ணப்பம் செய்தார். இன்று, நாம் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். நற்செய்திக்கு இன்னும் செவிசாய்க்கிற ஆட்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற உள்ளப்பூர்வமான ஆசை தணிந்துவிடாதபடி எப்போதும் அதை காத்துக்கொள்கிறோம். எனவே அப்படிப்பட்ட ஆட்களைக் கண்டுபிடித்து, இரட்சிப்புக்கான வழியில் நடக்க அவர்களுக்கு உதவ நாம் யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபிக்கலாம்.—நீதிமொழிகள் 11:30; எசேக்கியேல் 33:11; யோவான் 6:44.
21 என்றாலும், முடிந்தளவு அநேகருக்கு நற்செய்தி சென்றெட்டுவதற்கு, ஏன், எதைப் பிரசங்கிக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல, எப்படிப் பிரசங்கிக்க வேண்டும் என்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயம் அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கட்டுரையில் முதல் இரண்டு அம்சங்கள் சிந்திக்கப்படும். மூன்றாவது அம்சம் இரண்டாவது கட்டுரையில் சிந்திக்கப்படும்.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• என்ன காரணங்களுக்காக நாம் ஊழியத்தில் பங்குகொள்கிறோம்?
• நாம் பிரசங்கிக்கும் முக்கிய செய்தி என்ன?
• ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்கள் அனுபவிக்கும் ஆசீர்வாதங்கள் யாவை?
• நம்முடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய எது நமக்கு உதவும்?
[பக்கம் 18-ன் படங்கள்]
இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு ராஜ்ய செய்தி தெம்பூட்டுகிறது
[பக்கம் 20-ன் படங்கள்]
ஊழியத்தில் சகித்திருக்க ஜெபம் நமக்கு உதவுகிறது