யெகோவா “நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?”
“தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் . . . நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?”—லூக்கா 18:7.
1. உங்களுக்கு உற்சாகத்தின் ஊற்றாக இருப்பவர்கள் யார், ஏன்?
பல வருடங்களாக யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவரும் அநேக சகோதர சகோதரிகள் உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அருமையானவர்களில் சிலரை தனிப்பட்டவிதமாக உங்களுக்குத் தெரியுமா? ஒருவேளை, பல ஆண்டுகளாக சத்தியத்தில் இருக்கிற, கூட்டங்களைத் தவற விடாத ஒரு வயதான சகோதரி சட்டென உங்கள் நினைவுக்கு வரலாம். அல்லது சபையின் ஊழிய ஏற்பாடுகளில் வாரம் தவறாமல் கலந்துகொண்டு, பல்லாண்டுகளாக உண்மையோடு சேவை செய்யும் ஒரு வயதான சகோதரர் உங்கள் நினைவுக்கு வரலாம். இப்படிப்பட்ட உண்மையுள்ள சகோதர சகோதரிகளில் அநேகர் இந்நேரத்திற்குள் அர்மகெதோன் யுத்தம் நடந்து முடிந்திருக்கும் என்றே நினைத்திருந்தார்கள். ஆனால், இன்னும் இந்தப் பொல்லாத உலகம் அழியாமலேயே இருக்கிறது. இருந்தாலும், யெகோவாவின் வாக்குறுதிகளில் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவில்லை. ‘முடிவுபரியந்தம் நிலைநிற்க’ வேண்டுமென்ற அவர்களுடைய தீர்மானமும் தளர்ந்துவிடவில்லை. (மத்தேயு 24:13) யெகோவாவை உண்மையோடு சேவிக்கும் இப்படிப்பட்ட நபர்கள் காண்பிக்கும் ஆழமான விசுவாசத்தைக் கண்டு, சபையிலுள்ள அனைவருமே உற்சாகமடைகிறார்கள்.—சங்கீதம் 147:11.
2. என்ன சூழ்நிலை நம்மை வருத்தப்பட வைக்கிறது?
2 என்றாலும், இதற்கு முற்றிலும் மாறான மனப்பான்மையை வெளிக்காட்டுபவர்களையும் சில சமயங்களில் நம்மால் பார்க்க முடிகிறது. பல வருடங்களாக ஊழியத்தில் ஈடுபட்டு வந்த சாட்சிகளில் சிலர் யெகோவாமீது தங்களுக்கிருந்த விசுவாசத்தை காலப்போக்கில் இழந்திருக்கிறார்கள்; கிறிஸ்தவ சபையோடு கூடிவருவதையும் நிறுத்திவிட்டிருக்கிறார்கள். முன்பு நம்மோடு கூடிவந்தவர்கள் இப்படி யெகோவாவை விட்டு விலகியிருப்பதைக் கண்டு நாம் வருத்தப்படுகிறோம். ‘காணாமற்போன ஆடுகள்’ ஒவ்வொன்றும் மந்தைக்கு மறுபடியும் திரும்புவதற்கு தொடர்ந்து உதவவே நாம் மனப்பூர்வமாக விரும்புகிறோம். (சங்கீதம் 119:176; ரோமர் 15:1) இருந்தாலும், ஒரு சாரார் விசுவாசத்தில் நிலைத்திருக்கையில், மறு சாரார் ஏன் தங்கள் விசுவாசத்தை இழந்திருக்கிறார்கள் என்ற கேள்வியும் மனதில் எழும்புகிறது. இப்படிச் சிலர் விசுவாசத்தை விட்டு விலகியிருந்தாலும், எண்ணற்ற சாட்சிகள் தொடர்ந்து விசுவாசத்தைக் காத்துக்கொள்ள எது அவர்களுக்கு உதவியிருக்கிறது? ‘யெகோவாவின் மகா நாள்’ சீக்கிரத்தில் வரவிருக்கிறது என்ற நம்பிக்கையை உறுதியாக வைத்துக்கொள்ள தனிப்பட்ட விதமாக நாம் என்ன செய்யலாம்? (செப்பனியா 1:14, NW) லூக்கா சுவிசேஷத்தில் காணப்படும் ஓர் உவமையை கவனிக்கலாம்.
“மனுஷகுமாரன் வரும்போது” வாழ்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
3. விதவையையும் நியாயாதிபதியையும் பற்றிய உவமை யாருக்கு முக்கியமாகப் பயனுள்ளதாயிருக்கும், ஏன்?
3 விதவையையும் நியாயாதிபதியையும் பற்றி இயேசு கூறிய உவமையை லூக்கா 18-ஆம் அதிகாரத்தில் காணமுடிகிறது. முந்தைய கட்டுரையில் நாம் படித்த விடாப்பிடியான மனிதனைப் பற்றிய உவமைக்கு இது ஒத்திருக்கிறது. (லூக்கா 11:5-13) என்றாலும், விதவையையும் நியாயாதிபதியையும் பற்றிய இந்த உவமை, “மனுஷகுமாரன்” அரசதிகாரத்தோடு “வரும்” காலப்பகுதியில் வாழ்பவர்களுக்கே முக்கியமாகப் பொருந்துகிறது என்பதை அந்தப் பதிவின் சூழமைவு நமக்கு காட்டுகிறது. அந்தக் காலப்பகுதி 1914-ல் தொடங்கியது.—லூக்கா 18:8.a
4. லூக்கா 18-ம் அதிகாரத்தில் காணப்படும் உவமையை சொல்வதற்கு முன் இயேசு எதைக் குறித்து பேசினார்?
4 இந்த உவமையை சொல்வதற்கு முன்னால், அரசதிகாரத்தோடு தாம் வந்திருப்பதற்கான அத்தாட்சி, “மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல” மிகப் பரந்தளவில் காணப்படும் என இயேசு கூறினார். (லூக்கா 17:24; 21:10, 29-33) என்றபோதிலும், ‘முடிவுகாலத்தில்’ வாழும் அநேகர் இந்தத் தெளிவான அத்தாட்சிக்கு கவனம் செலுத்த மாட்டார்கள். (தானியேல் 12:4) காரணம்? நோவா மற்றும் லோத்துவின் காலத்தில் வாழ்ந்த ஜனங்கள் எந்தக் காரணத்திற்காக யெகோவாவின் எச்சரிப்பை அசட்டை செய்தார்களோ, அதே காரணத்திற்காகத்தான் இன்றுள்ளவர்களும் அசட்டை செய்கிறார்கள். அந்தக் காலத்தில் வாழ்ந்த ஜனங்கள் ‘தாங்கள் அழிக்கப்படும் நாள்மட்டும் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.’ (லூக்கா 17:26-29) இதுபோன்ற அன்றாட காரியங்களில் அந்தளவு மூழ்கியிருந்ததால், அவர்கள் கடவுளுடைய சித்தத்திற்கு கவனம் செலுத்தவேயில்லை; அதன் விளைவாக, அவர்கள் உயிரிழந்தார்கள். (மத்தேயு 24:39) இன்றும்கூட, பெரும்பாலான மக்கள் அன்றாட அலுவல்களில் அந்தளவு மூழ்கியிருப்பதால், இந்தத் தேவபக்தியற்ற உலகின் முடிவு அருகில் இருப்பதற்கான அத்தாட்சிகளை கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.—லூக்கா 17:30.
5. (அ) இயேசு யாரை எச்சரித்தார், ஏன்? (ஆ) சிலர் விசுவாசத்தை இழந்துவிடுவதற்கு எது காரணமாய் இருந்திருக்கிறது?
5 தம் சீஷர்கள்கூட சாத்தானுடைய உலகத்தால் திசைதிருப்பப்பட்டுவிடலாம் என்று இயேசு கவலைப்பட்டார். அதுவும், தாங்கள் விட்டுவந்த காரியங்களிடம் ‘பின்னிட்டுத் திரும்பும்’ அளவிற்கு அவர்கள் திசைதிரும்பிவிடலாம் என்று கவலைப்பட்டார். (லூக்கா 17:22, 31) சொல்லப்போனால், சில கிறிஸ்தவர்களின் விஷயத்தில் இதுதான் சம்பவித்திருக்கிறது. யெகோவா இந்தப் பொல்லாத உலகத்திற்கு முடிவைக் கொண்டுவரும் நாளைக் காண அவர்கள் வருடக்கணக்காக ஏங்கி காத்திருந்தார்கள். என்றபோதிலும், அவர்கள் எதிர்பார்த்த நேரத்தில் அர்மகெதோன் வராததால் அவர்கள் ஏமாற்றமடைந்துவிட்டனர். யெகோவா நியாயத்தீர்ப்பு அளிக்கும் நாள் சமீபத்தில் இருக்கிறது என்பதில் அவர்களுடைய நம்பிக்கை வலுவிழந்துவிட்டது. ஊழியத்தில் அவர்கள் பின்தங்கினார்கள்; காலப்போக்கில், வாழ்க்கையின் அன்றாட காரியங்களில் அவர்கள் அந்தளவு மூழ்கிப்போனதால், ஆன்மீகக் காரியங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விட்டது. (லூக்கா 8:11, 13, 14) காலப்போக்கில் தாங்கள் விட்டுவந்த காரியங்களிடம் ‘பின்னிட்டுத் திரும்பி’ விட்டனர். இது நிச்சயமாகவே வருந்தத்தக்கது!
‘எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டியதன்’ அவசியம்
6-8. (அ) விதவையையும் நியாயாதிபதியையும் பற்றிய உவமையை விவரியுங்கள். (ஆ) இந்த உவமையின் நடைமுறை பொருத்தத்தை இயேசு எவ்வாறு விளக்கினார்?
6 யெகோவாவின் வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் நமக்கிருக்கும் உறுதியான விசுவாசம் பலவீனமடையாதிருக்க நாம் என்ன செய்யலாம்? (எபிரெயர் 3:14) சாத்தானின் பொல்லாத உலகத்திற்கு திரும்பிப் போய்விடாதிருக்கும்படி தம் சீஷர்களை எச்சரித்த உடனேயே இயேசு இக்கேள்விக்குப் பதிலளித்தார்.
7 “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் [இயேசு] ஒரு உவமையைச் சொன்னார்” என்பதாக லூக்கா கூறுகிறார். “ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ் செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள். வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ் செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்” என்று இயேசு கூறினார்.
8 இதைக் கூறிய பிறகு, இயேசு அதன் நடைமுறைப் பயனையும் குறிப்பிட்டார்: “அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ் செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ”?—லூக்கா 18:1-8.
“எனக்கு நியாயஞ் செய்யவேண்டும்”
9. விதவையையும் நியாயாதிபதியையும் குறித்த உவமையில் மேலோங்கியிருக்கும் கருப்பொருள் என்ன?
9 இந்த வலிமையான உவமையின் கருப்பொருள் தெளிவாக இருக்கிறது. இதிலுள்ள கதாபாத்திரங்கள் இருவரும் அதைக் குறிப்பிட்டனர். இயேசுவும்கூட அதைக் குறிப்பிட்டார். “எனக்கு நியாயஞ் செய்யவேண்டும்” என்று அந்த விதவை கெஞ்சினாள். “இவளுக்கு நியாயஞ் செய்யவேண்டும்” என்று அந்த நியாயாதிபதி கூறினார். “தேவன் . . . நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?” என்று இயேசு கேட்டார். யெகோவாவைக் குறித்து இயேசு பின்வருமாறு கூறினார்: “சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ் செய்வார்.” (லூக்கா 18:3, 5, 7, 8) குறிப்பாக, எப்போது கடவுள் “நியாயஞ் செய்வார்”?
10. (அ) முதல் நூற்றாண்டில் எப்போது நீதி செய்யப்பட்டது? (ஆ) இன்று கடவுளுடைய ஜனங்களுக்கு எப்போது, எப்படி நீதி செய்யப்படும்?
10 முதல் நூற்றாண்டில், “நீதியைச் சரிக்கட்டும் நாட்கள்” (அல்லது, “பழிவாங்கும் நாட்கள்,” கிங்டம் இன்டர்லீனியர்) பொ.ச. 70-ல் வந்தன; அச்சமயத்தில்தான் எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்பட்டன. (லூக்கா 21:22) இன்றுள்ள கடவுளுடைய மக்களுக்கு ‘யெகோவாவின் மகா நாளில்’ நீதி செய்யப்படும். (செப்பனியா 1:14, NW; மத்தேயு 24:21) அப்போது, ‘தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையை [இயேசு கிறிஸ்து] செலுத்துகையில்,’ யெகோவா, தம் மக்களை ‘உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தை . . . கொடுப்பார்.’—2 தெசலோனிக்கேயர் 1:6-8; ரோமர் 12:19.
11. எவ்விதத்தில் “சீக்கிரத்திலே” நியாயம் செய்யப்படும்?
11 என்றாலும், யெகோவா “சீக்கிரத்திலே” நியாயம் செய்வார் என்று இயேசு உறுதியளித்ததன் அர்த்தம் என்ன? ‘[யெகோவா] நீடிய பொறுமையுள்ளவராயிருந்தாலும்’ உரிய காலத்தில் வேகமாக நியாயம் செய்வார் என்று கடவுளுடைய வார்த்தை காண்பிக்கிறது. (லூக்கா 18:7, 8; 2 பேதுரு 3:9, 10) நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்தபோது, பொல்லாத ஜனங்கள் உடனடியாக அழிக்கப்பட்டனர். அதேபோல, லோத்துவின் காலத்திலும் வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்தபோது, பொல்லாதவர்கள் அழிந்துபோயினர். “மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்” என்று இயேசு கூறினார். (லூக்கா 17:27-30) மறுபடியும், பொல்லாத ஜனங்கள்மீது “அழிவு சடிதியாய்” வரும். (1 தெசலோனிக்கேயர் 5:2, 3) நியாயமாக சாத்தானுடைய உலகம் இருக்க வேண்டியதற்கு ஒரு நாள்கூட அதிகமாக நீடிக்க யெகோவா அனுமதிக்க மாட்டார் என்பதில் நாம் முழு நிச்சயமாய் இருக்கலாம்.
“நியாயஞ் செய்வார்”
12, 13. (அ) விதவையையும் நியாயாதிபதியையும் பற்றிய இயேசுவின் உவமையிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? (ஆ) யெகோவா நம் ஜெபங்களைக் கேட்டு, நீதி செய்வார் என்பதில் நாம் ஏன் உறுதியாயிருக்கலாம்?
12 விதவையையும் நியாயாதிபதியையும் பற்றி இயேசு கூறிய உவமை, முக்கியமான மற்ற உண்மைகளையும் சிறப்பித்துக் காட்டுகிறது. அந்த உவமையின் பொருத்தத்தை இயேசு பின்வருமாறு கூறினார்: “அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்படியே தேவன் . . . தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் . . . அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?” விதவையிடம் அந்த நியாயாதிபதி நடந்துகொண்டதைப்போல, கடவுளும் தம்மை நம்புவோரை நடத்துவார் என்று இயேசு அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, அந்த நியாயாதிபதிக்கும் கடவுளுக்கும் இடையிலான வித்தியாசத்தை வலியுறுத்துவதன் மூலம் இயேசு தம் சீஷர்களுக்கு யெகோவாவைப் பற்றி ஒரு பாடத்தைக் கற்பித்தார். அவர்கள் இருவரும் எவ்விதங்களில் வேறுபடுகின்றனர்?
13 இயேசுவின் உவமையில் சொல்லப்பட்ட நியாயாதிபதி ‘அநீதியுள்ளவராக’ இருந்தார். ஆனால், ‘தேவனோ நீதியுள்ள நியாயாதிபதியாக’ இருக்கிறார். (சங்கீதம் 7:11; 33:5) அந்த நியாயாதிபதிக்கு அந்த விதவையின்மீது தனிப்பட்ட விதமாக எந்த அக்கறையும் இருக்கவில்லை. ஆனால், யெகோவாவோ தனிப்பட்ட ஒவ்வொருவரின்மீதும் அக்கறையுள்ளவராக இருக்கிறார். (2 நாளாகமம் 6:29, 30) அந்த விதவைக்கு உதவ அந்த நியாயாதிபதி மனதில்லாதவராக இருந்தார். ஆனால், யெகோவாவோ நமக்கு உதவ மனமுள்ளவராக இருக்கிறார். ஆம், தமக்கு சேவை செய்வோருக்கு உதவ ஆவலாக இருக்கிறார். (ஏசாயா 30:18, 19) ஆக, அநீதியுள்ள நியாயாதிபதியே அந்த விதவையின் வேண்டுகோளுக்கு செவிகொடுத்து, அவளுக்கு நீதி வழங்கியிருக்கும்போது, யெகோவா தம் மக்களின் ஜெபங்களுக்கு செவிகொடுத்து நீதி வழங்காமல் இருப்பாரா, என்ன?—நீதிமொழிகள் 15:29.
14. கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள் வரவிருப்பதைக் குறித்து நாம் ஏன் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது?
14 ஆகவே, கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள் வரவிருக்கிறது என்பதில் நம்பிக்கையை இழந்துவிடுகிற நபர்கள் மாபெரும் தவறைச் செய்கிறார்கள். ஏன்? ‘யெகோவாவின் மகா நாள்’ விரைவில் வரவிருக்கிறது என்பதில் தங்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கையை இழந்திருக்கிற இவர்கள், தம் வாக்குறுதிகளை காப்பாற்றுவாரா என யெகோவாவையே சந்தேகிக்கிறார்கள். ஆனால், யெகோவாவின் உண்மைத்தன்மையைக் குறித்து கேள்வி கேட்க யாருக்குமே உரிமை இல்லை. (யோபு 9:12) தனிப்பட்ட விதமாக நாம் உண்மையோடு நிலைத்திருப்போமா என்பதே மிக முக்கியமான கேள்வி. இயேசுவும்கூட விதவையையும் நியாயாதிபதியையும் பற்றிய உவமையின் முடிவில் அதைக் குறித்துதான் பேசினார்.
“பூமியிலே இத்தகைய விசுவாசத்தை உண்மையில் காண்பாரோ?”
15. (அ) என்ன கேள்வியை இயேசு எழுப்பினார், ஏன்? (ஆ) என்ன கேள்வியை நம்மிடமே கேட்டுக்கொள்ள வேண்டும்?
15 ஆர்வத்திற்குரிய இந்தக் கேள்வியை இயேசு எழுப்பினார்: “மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே இத்தகைய விசுவாசத்தை உண்மையில் காண்பாரோ?” (லூக்கா 18:8, NW அடிக்குறிப்பு) “இத்தகைய விசுவாசம்” என்று சொன்னபோது, பொதுவான விசுவாசத்தைப் பற்றி இயேசு பேசவில்லை. மாறாக, குறிப்பிட்ட விதமான விசுவாசத்தைப் பற்றி பேசினார். அதாவது, அந்த விதவை கொண்டிருந்ததைப் போன்ற விசுவாசத்தைப் பற்றியே அவர் குறிப்பிட்டார். இக்கேள்விக்கு இயேசு பதிலளிக்கவில்லை. அவருடைய சீஷர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய விசுவாசம் அதுபோன்று இருந்ததா என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதற்காகத்தான் அவர் இக்கேள்வியை எழுப்பினார். தாங்கள் விட்டுவந்த காரியங்களிடமே திரும்பிவிடுமளவிற்கு அது படிப்படியாக பலவீனமாகிக் கொண்டிருந்ததா? அல்லது அந்த விதவைக்கு இருந்ததைப் போன்ற விசுவாசம் அவர்களுக்கும் இருந்ததா? என்று அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருந்தது. அவர்களைப் போலவே, நாமும் பின்வரும் கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என்னுடைய இருதயத்திலே எத்தகைய விசுவாசத்தை “மனுஷகுமாரன்” காண்கிறார்?’
16. அந்த விதவை எப்படிப்பட்ட விசுவாசத்தைக் கொண்டிருந்தாள்?
16 யெகோவாவிடமிருந்து நியாயத்தை பெறுகிறவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமெனில், அந்த விதவையின் முன்மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும். அவள் எத்தகைய விசுவாசத்தைக் கொண்டிருந்தாள்? அவள் விடாப்பிடியாக அந்த “[நியாயாதிபதியிடம்] போய்: எனக்கு நியாயஞ் செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். அநீதியுள்ள மனிதனிடமிருந்து நியாயம் பெற அந்த விதவை விடாப்பிடியாக முயன்றாள். அதேபோல், கடவுளுடைய ஜனங்களும் யெகோவாவிடமிருந்து தாங்கள் நியாயத்தை பெறுவார்கள் என்பதில் நிச்சயமாயிருக்கலாம், அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக காலம் ஆனாலும்கூட. கடவுளுடைய ஊழியர்கள் இடைவிடாமல் ஜெபிப்பதன் மூலம் அவருடைய வாக்குறுதிகளில் தாங்கள் விசுவாசம் வைப்பதை வெளிக்காட்டுகிறார்கள். ஆம், ‘இரவும் பகலும் யெகோவாவை நோக்கி கூப்பிடுவதன்’ மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிக்காட்டுகிறார்கள். (லூக்கா 18:7) நியாயம் செய்யும்படி யெகோவாவிடம் ஜெபிப்பதை ஒரு கிறிஸ்தவர் நிறுத்திவிட்டால், யெகோவா தம் ஊழியர்களின் சார்பாக நடவடிக்கை எடுப்பார் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம்.
17. ஜெபத்தில் உறுதியாயிருக்கவும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் நிச்சயம் வரும் என்பதில் விசுவாசம் வைக்கவும் நமக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
17 அந்த விதவையின் சூழ்நிலையைக் கவனிக்கும்போது, ஜெபத்தில் உறுதியாக இருப்பதற்கு நமக்கு கூடுதல் காரணங்கள் இருப்பது தெரியவருகிறது. அவளுடைய சூழ்நிலைக்கும் நம்முடைய சூழ்நிலைக்கும் இருக்கும் வேறுபாடுகள் சிலவற்றைக் கவனியுங்கள். நியாயாதிபதியிடம் விடாப்பிடியாகக் கேட்டுக்கொண்டிருக்கும்படி யாருமே அவளை ஊக்கப்படுத்தவில்லை, என்றாலும் அவள் தொடர்ந்து அவரிடம் கேட்டுக்கொண்டேயிருந்தாள். ஆனால், ‘ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்கும்படி’ கடவுளுடைய வார்த்தை நம்மை அதிகதிகமாய் ஊக்கப்படுத்துகிறது. (ரோமர் 12:12) அந்த விதவைக்குத் தன்னுடைய வேண்டுகோள் நிறைவேற்றப்படும் என்பதற்கான நிச்சயம் எதுவுமே இருக்கவில்லை. நமக்கோ நியாயம் செய்யப்படும் என்று யெகோவா உறுதியளித்திருக்கிறார். தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக அவர் பின்வருமாறு சொல்லியிருக்கிறார்: “அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” (ஆபகூக் 2:3; சங்கீதம் 97:10) அந்த விதவைக்கு ஆதரவாகப் பேசி அவளுக்கு சிபாரிசு செய்ய ஒருவரும் இருக்கவில்லை. நமக்கோ வல்லமையுள்ள உதவியாளரான இயேசுவின் உதவி இருக்கிறது. “அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.” (ரோமர் 8:34; எபிரெயர் 7:25) கஷ்டமான சூழ்நிலையிலும் அந்த விதவை நியாயம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் அந்த நியாயாதிபதியிடம் தொடர்ந்து கெஞ்சிக்கொண்டே இருந்தாள். அப்படியிருக்கும்போது, யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் நிச்சயம் வரும் என்பதில் நாம் எந்தளவு உறுதியான விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும்!
18. ஜெபம் எவ்வாறு நம் விசுவாசத்தை பலப்படுத்தி, நியாயத்தைப் பெற உதவும்?
18 ஜெபத்திற்கும் விசுவாசத்திற்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதை விதவையைப் பற்றிய உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். அதோடு, ஜெபத்தில் உறுதியாயிருப்பதன் மூலம் நம்முடைய விசுவாசத்தை பலவீனப்படுத்தக்கூடிய காரியங்களைத் தவிர்க்கலாம் என்பதையும் கற்றுக்கொள்கிறோம். வெளித்தோற்றத்திற்காக செய்யப்படும் ஜெபங்கள் விசுவாசக்குறைவை சரிசெய்துவிடாது என்பது உண்மையே. (மத்தேயு 6:7, 8) நாம் கடவுளையே முழுமையாக சார்ந்திருக்கிறோம் என்ற உணர்வு, ஜெபம் செய்ய நம்மை தூண்ட வேண்டும். அப்படிப்பட்ட ஜெபம்தான் நம்மைக் கடவுளிடம் நெருங்கி வரச்செய்யும், நம்முடைய விசுவாசத்தையும் பலப்படுத்தும். விசுவாசம் இல்லையேல் இரட்சிப்பு இல்லை. அதனால்தான் இயேசு தம் சீஷர்களிடம் “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்” என்று வலியுறுத்தினார். (லூக்கா 18:1; 2 தெசலோனிக்கேயர் 3:13) வரவிருக்கும் “யெகோவாவின் மகா நாள்” நம்முடைய ஜெபங்களை சார்ந்து இல்லை என்பது உண்மையே. நாம் அதற்காக ஜெபிக்கிறோமோ இல்லையோ அது நிச்சயமாக வரும். தனிப்பட்டவர்களாக நாம் நியாயத்தைப் பெற்று, கடவுளுடைய போரில் தப்பிப்போமா இல்லையா என்பது நம் விசுவாசத்தையும், ஜெபத்துடன் கூடிய நல்நடக்கையையும் சார்ந்தே இருக்கிறது.
19. கடவுள் “நியாயஞ் செய்வார்” என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம் என்பதை எப்படி நிரூபிக்கலாம்?
19 முன்பு நாம் சிந்தித்தபடியே, “மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே இத்தகைய விசுவாசத்தை உண்மையில் காண்பாரோ?” என்ற கேள்வியை இயேசு எழுப்பினார். சிந்தனையைத் தூண்டும் இக்கேள்விக்குப் பதில் என்ன? லட்சக்கணக்கான யெகோவாவின் ஊழியர்கள் தங்களுடைய ஜெபங்கள், பொறுமை, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலமாக தங்களுக்கு இத்தகைய விசுவாசம் இருப்பதை வெளிக்காட்டியிருக்கிறார்கள் என்பதில் நாம் அதிக மகிழ்ச்சியடைகிறோம். இவ்வாறு, இயேசுவின் கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளித்திருக்கிறார்கள். சாத்தானின் உலகத்தில் நாம் அநீதியை அனுபவித்தாலும்கூட, கடவுள் “தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு . . . நியாயஞ் செய்வார்” என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்.
[அடிக்குறிப்பு]
a இந்த உவமையின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, லூக்கா 17:22-33-ஐ வாசியுங்கள். லூக்கா 17:22, 24, 30 ஆகிய வசனங்களில் ‘மனுஷகுமாரனை’ பற்றி சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் லூக்கா 18:8-ல் எழுப்பப்பட்ட கேள்வியோடு எவ்வாறு தொடர்புடையதாக இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கிறிஸ்தவர்கள் சிலர் விசுவாசத்தை இழந்திருப்பதற்கு காரணம் என்ன?
• யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் வரவிருக்கிறது என்பதை நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?
• ஜெபத்தில் உறுதியாய் இருக்க என்ன காரணங்கள் இருக்கின்றன?
• விடாமல் ஜெபிப்பது விசுவாசத்தை இழப்பதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாக்கும்?
[பக்கம் 26-ன் படம்]
விதவையையும் நியாயாதிபதியையும் பற்றிய உவமையில் சொல்லப்படும் முக்கிய கருத்து என்ன?
[பக்கம் 29-ன் படங்கள்]
கடவுள் ‘நியாயஞ் செய்வார்’ என்பதை இன்றுள்ள லட்சக்கணக்கானோர் உறுதியாய் நம்புகிறார்கள்