கடவுளுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்துதல்
“மரணமே உயிரின் பிறப்பிடம். இது அஸ்தெக்கு இனத்தவரின் நம்பிக்கை. இவர்கள் மெசோ அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு நரபலி செலுத்தியிருந்தார்கள்” என்று வலிமைவாய்ந்த அஸ்தெக்குகள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் கூறுகிறது. “அந்தப் பேரரசு விரிவாக விரிவாக நரபலிகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது. பேரரசின் மீது நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காக அவ்வாறு செய்யப்பட்டது” என்று அதே புத்தகம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு வருடமும் 20,000 நரபலிகள் வரை அவர்கள் செலுத்தியதாக மற்றொரு கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.
காலங்காலமாக மக்கள் தங்களது தெய்வங்களுக்கு ஏதோவொரு விதத்தில் பலிகளைச் செலுத்தி வந்திருக்கிறார்கள். பயம், சந்தேகம், குற்றவுணர்வு போன்றவையே அதற்குக் காரணம். மக்கள் தாங்களாகவே ஏற்படுத்திய வழக்கங்கள் ஒருபுறமிருக்க, பலி செலுத்துவதற்கான சில வழக்கங்களை கடவுளே ஏற்படுத்தியிருக்கிறார். ஆம், சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா அவற்றை ஏற்படுத்தியதாக பைபிள் கூறுகிறது. ஆகவே, பின்வரும் கேள்விகளைக் குறித்துச் சிந்திப்பது பொருத்தமாக இருக்கிறது: எப்படிப்பட்ட பலிகள் கடவுளைப் பிரியப்படுத்துகின்றன? கடவுளை வழிபடுகையில் இன்று நாம் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த வேண்டுமா?
உண்மை வழிபாட்டில் காணிக்கைகளும் பலிகளும்
இஸ்ரவேல் தேசம் உருவானபோது, அவர்கள் தம்மை எப்படி வழிபட வேண்டும் என்பது சம்பந்தமாக தெளிவான கட்டளைகளை யெகோவா கொடுத்தார். பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்துவது இதில் உட்பட்டிருந்தது. (எண்ணாகமம் 28, 29 அதிகாரங்கள்) பூமியில் விளைந்த பொருள்கள் காணிக்கைகளாகச் செலுத்தப்பட்டன. காளைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், புறாக்கள், காட்டுப்புறாக்கள் ஆகியவையும்கூட பலி செலுத்தப்பட்டன. (லேவியராகமம் 1:3, 5, 10, 14; 23:10-18; எண்ணாகமம் 15:1-7; 28:7) சில காணிக்கைகள் முழுமையாகத் தகனிக்கப்பட்டன. (யாத்திராகமம் 29:38-42) இதுதவிர, சமாதான பலிகளும் செலுத்தப்பட்டன. கடவுளுக்குச் செலுத்திய பலியில் ஒரு பாகத்தைச் சாப்பிடுவதன்மூலம் அதைச் செலுத்தியவரும் அதில் பங்குகொண்டார்.—லேவியராகமம் 19:5-8.
மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் செலுத்தப்பட்ட அனைத்து காணிக்கைகளும் பலிகளும் கடவுள் வழிபாட்டின் ஓர் அங்கமாக இருந்தன; அதோடு, அவரை சர்வலோகப் பேரரசராக ஏற்றுக்கொள்வதைக் காட்டுவதற்கு வழியாகவும் இவை அமைந்தன. கடவுள் தங்களுக்கு அளித்த ஆசீர்வாதத்திற்கும் பாதுகாப்புக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இஸ்ரவேலர் பலி செலுத்தினார்கள். இதனால் பாவ மன்னிப்பையும் பெற்றுக்கொண்டார்கள். வணக்கம் சம்பந்தமாக கடவுள் கொடுத்திருந்த வழிமுறைகளை உண்மையாகப் பின்பற்றிய வரையில் அவர்கள் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.—நீதிமொழிகள் 3:9, 10.
பலி செலுத்தியோரின் மனப்பான்மையையே யெகோவா முக்கியமாகக் கருதினார். தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஓசியா மூலம் அவர் பின்வருமாறு கூறினார்: “பலியை அல்ல இரக்கத்தையும், தகன பலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.” (ஓசியா 6:6) ஆகவே, ஜனங்கள் உண்மை வணக்கத்தை விட்டு வழிவிலகி, ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு, அப்பாவிகளுடைய இரத்தத்தைச் சிந்தியபோது அவர்கள் யெகோவாவின் பலிபீடத்தில் செலுத்திய பலிகளுக்கு எந்த மதிப்புமே இல்லாமல் போயிற்று. அதனால்தான், ஏசாயாமூலம் இஸ்ரவேல் தேசத்திடம் யெகோவா பின்வருமாறு கூறினார்: “உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு . . . ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.”—ஏசாயா 1:11.
‘அதை நான் கட்டளையிடவில்லை’
இஸ்ரவேலருக்கு எதிர்மாறாக, கானானியர் தங்கள் பிள்ளைகளை தங்கள் தெய்வங்களுக்குப் பலி செலுத்தினார்கள். அது மட்டுமின்றி மில்கோம், மோளோக் என்றெல்லாம் அழைக்கப்படுகிற அம்மோனிய தெய்வமாகிய மோளேகிற்கும் பிள்ளைகளைப் பலியிட்டார்கள். (1 இராஜாக்கள் 11:5, 7, 33; அப்போஸ்தலர் 7:43) ஹேலீஸ் பைபிள் கையேடு (ஆங்கிலம்) பின்வருமாறு கூறுகிறது: “தங்கள் தெய்வங்களின் முன்னிலையில் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவது கானானியர்களுக்கு ஒரு மத சடங்காக இருந்தது. பிறகு, அதே தெய்வங்களுக்கு தங்களுடைய முதல் பிள்ளைகளைக் கொன்று பலி செலுத்துவார்கள். இப்படித்தான் தங்கள் தெய்வங்களை அவர்கள் வணங்கினார்கள்.”
இப்படிப்பட்ட பழக்கங்கள் யெகோவா தேவனைப் பிரியப்படுத்தினவா? நிச்சயமாக இல்லை! இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் நுழையத் தயாராக இருந்தபோது, லேவியராகமம் 20:2, 3-ல் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் கட்டளையை யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார்: “பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலைசெய்யப்படவேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும். அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படிக்கு, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகப்பண்ணுவேன்.”
உண்மை வணக்கத்திலிருந்து வழிவிலகிய இஸ்ரவேலர் சிலர், பொய் தெய்வங்களுக்குப் பிள்ளைகளைப் பலிசெலுத்தும் பேய்த்தனமான பழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். இதை நம்மால் நம்பவே முடியவில்லை, அல்லவா? இதைக்குறித்து சங்கீதம் 106:35-38 பின்வருமாறு சொல்கிறது: “ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று; அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று. அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள். அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.”
இந்த வழக்கத்தை யெகோவா அருவருத்தார். யூதா புத்திரரைப் பற்றி தம்முடைய தீர்க்கதரிசியாகிய எரேமியாமூலம் பின்வருமாறு தெரிவித்தார்: “என் நாமம் தரித்திருக்கிற ஆலயத்தைத் தீட்டுப்படுத்தத் தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள். தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.”—எரேமியா 7:30, 31.
இப்படிப்பட்ட அருவருப்பான பழக்கங்களில் ஈடுபட்டதால், இஸ்ரவேல் தேசம் கடைசியில் யெகோவாவின் தயவை இழந்தது. காலப்போக்கில், அதன் தலைநகரான எருசலேம் அழிக்கப்பட்டது. அதன் குடிமக்கள் பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்டார்கள். (எரேமியா 7:32-34) நரபலி செலுத்தும் பழக்கத்தை உண்மைக் கடவுள் ஏற்படுத்தவில்லை, அது உண்மை வழிபாட்டின் பாகமாக இல்லை என்பது தெளிவாக இருக்கிறது. எவ்விதத்தில் நரபலி கொடுத்தாலும் அது பேய்த்தனமானதே; உண்மைக் கடவுளை வணங்குவோர் அந்தப் பழக்கத்தோடு தொடர்புடைய எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.
கிறிஸ்து இயேசுவின் கிரயபலி
ஆனால், “இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த நியாயப்பிரமாணச் சட்டத்தில் மிருக பலிகளைச் செலுத்தும்படி ஏன் சொல்லப்பட்டிருந்தது?” என்று சிலர் கேட்கலாம். இதே கேள்விக்கு அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு பதிலளித்தார்: ‘அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டது. . . . இவ்விதமாக, . . . நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.’ (கலாத்தியர் 3:19-24) மனிதவர்க்கத்தின் சார்பாக யெகோவா தேவன் அளிக்கவிருந்த மாபெரும் பலியை இந்த மிருக பலிகள் அடையாளப்படுத்தின. அந்த மாபெரும் பலி கடவுளுடைய மகனான இயேசு கிறிஸ்துவின் மரணமே. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று சொன்னபோது இயேசு இந்த அன்பான செயலையே மனதில் வைத்திருந்தார்.—யோவான் 3:16.
கடவுள் மீதும் மனிதர் மீதும் இருந்த அன்பின் காரணமாக, இயேசு தம் பரிபூரண மனித உயிரை மனப்பூர்வமாக ஆதாமின் சந்ததியாருக்கு மீட்கும்பொருளாகச் செலுத்தினார். (ரோமர் 5:12, 15) இயேசு பின்வருமாறு கூறினார்: “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மத்தேயு 20:28) ஆதாம் பாவம் செய்து, மனிதவர்க்கம் முழுவதையும் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைகளாக விற்றுப்போட்டான். எந்த மனிதனாலும் அவர்களை அவற்றின் பிடியிலிருந்து விடுவிக்க முடியவில்லை. (சங்கீதம் 49:7, 8) ஆகவே, இயேசு, “வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.” (எபிரெயர் 9:12) உயிர்த்தியாகம் செய்து இயேசு சிந்திய இரத்தத்தை ஏற்றுக்கொண்டதன்மூலம், கடவுள் ‘நமக்கு எதிரிடையாக . . . இருந்த கையெழுத்தைக் குலைத்தார்.’ அதாவது, காணிக்கைகள், பலிகள் ஆகியவை உட்பட நியாயப்பிரமாண சட்டம் முழுவதற்கும் யெகோவா முற்றுப்புள்ளி வைத்தார். இதன்மூலம், ‘கிருபைவரமாகிய [அதாவது, பரிசாகிய] நித்தியஜீவனை’ பெற வழிவகுத்தார்.—கொலோசெயர் 2:14; ரோமர் 6:23.
ஆன்மீக பலிகளும் காணிக்கைகளும்
உண்மை வழிபாட்டில் மிருகபலிகளும் காணிக்கைகளும் இப்போது அவசியமில்லையெனில், நம்மிடம் வேறெந்த பலியாவது இப்போது எதிர்பார்க்கப்படுகிறதா? ஆம். கடவுளுக்குச் சேவை செய்வதற்காக இயேசு கிறிஸ்து சுயநலமற்ற விதத்தில் வாழ்ந்தார். கடைசியில் மனிதவர்க்கத்திற்காக தம்மையே பலியாக அளித்தார். ஆகவே பின்வருமாறு அவர் கூறினார்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.” (மத்தேயு 16:24) இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் சில பலிகளைச் செலுத்த வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. அவை யாவை?
இவற்றில் ஒன்று, இனி தனக்காக வாழாமல், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காக வாழ்வது. கிறிஸ்துவை உண்மையோடு பின்பற்றுகிறவர் தன்னுடைய ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் முதலிடம் கொடுப்பதற்குப் பதிலாக கடவுளுடைய சித்தத்திற்கே முதலிடம் கொடுக்கிறார். அதை அப்போஸ்தலன் பவுல் எப்படி விளக்கினார் என்பதைக் கவனியுங்கள்: “சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”—ரோமர் 12:1, 2.
கூடுதலாக, நம்முடைய துதிகளை யெகோவாவுக்குச் செலுத்தும் பலிகளாகக் கருதலாமென பைபிள் கூறுகிறது. தீர்க்கதரிசியாகிய ஓசியா, ‘உதடுகளின் காளைகள்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார்; இதன்மூலம், நம்முடைய உதடுகளின் துதியை மிகச்சிறந்த பலிகளில் ஒன்றாக யெகோவா கருதுவதைத் தெரிவித்தார். (ஓசியா 14:2) எபிரெய கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு ஊக்கப்படுத்தினார்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” (எபிரெயர் 13:15) இன்று, யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியைப் பிரசங்கித்து, எல்லா தேசத்து மக்களையும் சீஷராக்கும் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறார்கள். (மத்தேயு 24:14; 28:19, 20) உலகெங்கும் இரவு பகலாக துதியெனும் பலியை அவர்கள் கடவுளுக்குச் செலுத்தி வருகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:15.
பிரசங்கிப்பது மட்டுமல்ல, மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்கூட கடவுளைப் பிரியப்படுத்தும் பலிகளில் ஒன்றாகும். “நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்று பவுல் ஊக்கப்படுத்தினார். (எபிரெயர் 13:16) உண்மையில், நம்முடைய துதியெனும் பலி கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமெனில், நாம் நன்னடத்தை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். “கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக . . . நடந்துகொள்ளுங்கள்” என்று பவுல் அறிவுறுத்தினார்.—பிலிப்பியர் 1:27; ஏசாயா 52:11.
கடந்த காலங்களைப் போலவே இப்போதும் உண்மை வணக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் நாம் பலி செலுத்துகையில் பெருமகிழ்ச்சி அடையலாம், யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதங்களையும் பெறலாம். ஆகவே, நாம் உண்மையிலேயே கடவுளுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்த நம்மாலான மிகச் சிறந்ததைச் செய்வோமாக!
[பக்கம் 18-ன் படம்]
‘தங்கள் குமாரரையும் குமாரத்திகளையும் . . . கானான் தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள்’
[பக்கம் 20-ன் படங்கள்]
நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலமும் பிற விதங்களில் உதவுவதன் மூலமும் கிறிஸ்தவர்கள் கடவுளுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்துகிறார்கள்