எண்ணாகமம்
28 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘எனக்கு உணவு படைக்க, அதாவது பலி செலுத்த, நீங்கள் மறக்கக் கூடாது. நான் சொல்லியிருக்கும் நேரங்களில், அதைத் தகன பலியாக எனக்குச் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை எனக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.’
3 அதோடு நீ அவர்களிடம், ‘குறையில்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் இரண்டை ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்குத் தகன பலியாக நீங்கள் செலுத்த வேண்டும். அதுதான் தினமும் செலுத்தப்படுகிற* தகன பலி.+ 4 ஒரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் காலையிலும் இன்னொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைச் சாயங்காலத்திலும் செலுத்த வேண்டும்.+ 5 அவற்றோடு, இடித்துப் பிழிந்த ஒரு லிட்டர்* எண்ணெயை, ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவில் கலந்து உணவுக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும்.+ 6 அதுதான், சீனாய் மலையில் யெகோவா கட்டளை கொடுத்தபடியே அவருக்குத் தினமும் செலுத்தப்படுகிற* தகன பலி.+ அந்த வாசனை அவருக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 7 அதனோடு சேர்த்து திராட்சமதுவைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டிக்காகவும் ஒரு லிட்டர் திராட்சமதுவைச் செலுத்த வேண்டும்.+ யெகோவாவுக்குக் காணிக்கையாக அதைப் பலிபீடத்தில்* ஊற்ற வேண்டும். 8 இன்னொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைச் சாயங்கால நேரத்தில் செலுத்த வேண்டும். காலையில் செலுத்தியதைப் போலவே, இந்தப் பலியோடு சேர்த்து உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+
9 ஓய்வுநாளில்,+ குறையில்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் இரண்டைச் செலுத்த வேண்டும். அதனோடு சேர்த்து, உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* கொண்டுவர வேண்டும். அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையையும் கொண்டுவர வேண்டும். 10 ஓய்வுநாளில் செலுத்த வேண்டிய தகன பலி இதுதான். தினமும் செலுத்தப்படுகிற* தகன பலியோடும் அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையோடும் இதைச் செலுத்த வேண்டும்.+
11 ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும், யெகோவாவுக்குத் தகன பலியாக இரண்டு இளம் காளைகளையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், குறையில்லாத ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் செலுத்த வேண்டும்.+ 12 ஒவ்வொரு காளையுடனும், உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* கொண்டுவர வேண்டும்.+ செம்மறியாட்டுக் கடாவுடன், உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* கொண்டுவர வேண்டும்.+ 13 ஒவ்வொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடனும், உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* கொண்டுவர வேண்டும். இவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 14 ஒவ்வொரு காளையுடனும் ஒன்றே முக்கால் லிட்டர்* திராட்சமதுவையும்,+ செம்மறியாட்டுக் கடாவுடன் ஒன்றேகால் லிட்டர்* திராட்சமதுவையும்,+ ஒவ்வொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடனும் ஒரு லிட்டர்*+ திராட்சமதுவையும் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். வருஷத்தின் எல்லா மாதங்களிலும் செலுத்த வேண்டிய தகன பலி இதுதான். 15 தினமும் செலுத்தப்படுகிற* தகன பலியோடும் அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையோடும், பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்.
16 முதல் மாதம், 14-ஆம் நாளில் யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்க வேண்டும்.+ 17 அந்த மாதத்தின் 15-ஆம் நாளில் ஒரு பண்டிகை கொண்டாட வேண்டும். ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டியைச் சாப்பிட வேண்டும்.+ 18 முதலாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்கு நீங்கள் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது. 19 இரண்டு இளம் காளைகள், ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றை நீங்கள் யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அவை குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 20 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும்;+ ஒவ்வொரு காளைக்கும் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவும், செம்மறியாட்டுக் கடாவுக்கு ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவும் கொண்டுவர வேண்டும். 21 அந்த ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும். 22 அவற்றுடன், உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக ஒரு வெள்ளாட்டைக் கொண்டுவர வேண்டும். 23 தினமும் காலையில் செலுத்தும் தகன பலி தவிர, இவற்றையும் நீங்கள் செலுத்த வேண்டும். 24 இவற்றை ஏழு நாட்களும் இதேபோல் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். தினமும் செலுத்துகிற* தகன பலியோடும் அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையோடும் அதைச் செலுத்த வேண்டும். 25 ஏழாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அன்றைக்கு நீங்கள் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+
26 புது தானியத்தில் செய்யப்பட்ட உணவுக் காணிக்கையை நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்துகிற நாளில்,+ அதாவது முதல் விளைச்சலைச் செலுத்துகிற அறுவடைப் பண்டிகை*+ நாளில்,+ பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்கு நீங்கள் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+ 27 இரண்டு இளம் காளைகள், ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாக நீங்கள் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 28 அதோடு, உணவுக் காணிக்கையாக எண்ணெய் கலந்த நைசான மாவைக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு காளைக்கும் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவும், செம்மறியாட்டுக் கடாவுக்கு ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவும் கொண்டுவர வேண்டும். 29 அந்த ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும். 30 அவற்றுடன், உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக ஒரு வெள்ளாட்டைக் கொண்டுவர வேண்டும்.+ 31 தினமும் செலுத்துகிற* தகன பலியையும் அதனோடு சேர்த்துக் கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் தவிர, அவற்றையும் நீங்கள் செலுத்த வேண்டும். அவை குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ அவற்றோடு சேர்த்துத் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்’ என்று சொல்” என்றார்.