மனசாட்சிக்குச் செவிகொடுத்துச் செயல்படுங்கள்
“சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது.”—தீத்து 1:15.
1. கிரேத்தா தீவிலிருந்த சபைகளுடன் பவுல் எந்த விதத்தில் சம்பந்தப்பட்டிருந்தார்?
அப்போஸ்தலன் பவுல் மூன்று மிஷனரி பயணங்களை முடித்திருந்த சமயம் அது. அவர் கைது செய்யப்பட்டு ரோமுக்கு அனுப்பப்பட்டார். அங்கு இரண்டு வருடங்கள் சிறைவைக்கப்பட்டார். அவர் விடுதலையான பிறகு ஒரு சமயம் தீத்துவுடன் சேர்ந்து கிரேத்தா தீவுக்குச் சென்றார். பின்னர் தீத்துவுக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்: ‘நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன்.’ (தீத்து 1:5) தீத்துவின் வேலை வெவ்வேறு மனசாட்சி உடைய நபர்களைக் கையாளுவதுடன் சம்பந்தப்பட்டிருந்தது.
2. கிரேத்தா தீவில் தீத்து என்ன பிரச்சினையைச் சமாளிக்க வேண்டியிருந்தது?
2 பவுல், சபை மூப்பர்களின் தகுதிகளைக் குறித்து தீத்துவுக்கு விளக்கின பின்பு அங்கு “அநேகர், . . . அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்” என்று கூறினார். அவர்கள் “தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிற”வர்களாக இருந்தார்கள். எனவே, தீத்து தொடர்ந்து ‘அவர்களைக் கடிந்துகொள்ள’ வேண்டியிருந்தது. (தீத்து 1:10-14; 1 தீமோத்தேயு 4:7) அவர்களுடைய மனமும் மனசாட்சியும் “மாசுபடிந்தவை”யாய் இருந்ததாக பவுல் கூறினார். அதாவது, விலையுயர்ந்த ஒரு துணியில் சாயம் விழுந்து கறை படிந்துவிட்டதுபோல் அவர்களுடைய மனமும் மனசாட்சியும் கறை படிந்தவையாய் இருந்ததாக அவர் கூறினார். (தீத்து 1:15, பொது மொழிபெயர்ப்பு) அவர்களில் சிலர் “விருத்தசேதனமுள்ளவர்கள்” என்றபடியால் அவர்கள் ஒருவேளை யூத பின்னணியிலிருந்து வந்திருக்கலாம். இன்றுள்ள சபைகள் அப்படிப்பட்டவர்களால் பாதிக்கப்படுவதில்லைதான்; ஆனாலும், மனசாட்சியைக் குறித்து பவுல் தீத்துவுக்குக் கொடுத்த ஆலோசனையிலிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
கறை படிந்த மனசாட்சியை உடையவர்கள்
3. மனசாட்சியைக் குறித்து தீத்துவுக்கு பவுல் என்ன எழுதினார்?
3 பவுல் எந்தச் சூழலில் மனசாட்சியைக் குறித்து பேசினார் என்பதைக் கவனியுங்கள். “சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும். அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்.” அன்றிருந்த சிலர் ‘விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாய் இருப்பதற்கு’ சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. (தீத்து 1:14-16) எது சுத்தமானது, எது அசுத்தமானது என்பதைத் தீர்மானிப்பது அவர்களுக்குச் சவாலாய் இருந்தது. இது அவர்களுடைய மனசாட்சியை உட்படுத்திய ஒரு விஷயமாய் இருந்தது.
4, 5. சபையிலிருந்த சிலருக்கு என்ன குறைபாடு இருந்தது, அது அவர்களை எவ்வாறு பாதித்தது?
4 உண்மைக் கிறிஸ்தவராவதற்கு விருத்தசேதனம் தேவையில்லை என்று கிறிஸ்தவ ஆளும் குழுவினர் தீர்மானித்து பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தன. அவர்கள் அந்தத் தீர்மானத்தைச் சபைகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தார்கள். (அப்போஸ்தலர் 15:1, 2, 19-29) ஆனால், கிரேத்தாவில் இருந்த சிலர் ‘விருத்தசேதனம்’ செய்ய வேண்டும் என்ற கருத்தில் விடாப்பிடியாக இருந்தார்கள். அவர்கள் ஆளும் குழுவினரின் தீர்மானத்தை வெளிப்படையாக எதிர்த்து, ‘தகாதவைகளை உபதேசித்தார்கள்.’ (தீத்து 1:10, 11) மாறுபட்ட எண்ணமுடையவர்களாய் உணவு, பாரம்பரிய சுத்திகரிப்பு முறைகள் ஆகியவற்றின் பேரில் ஏற்கெனவே இருந்த நியாயப்பிரமாணச் சட்டங்களை ஆதரித்து வந்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல், இயேசுவின் நாட்களில் தங்களுடைய முன்னோர்கள் செய்ததுபோல் அவர்களும் கூடுதல் சட்டங்களை உருவாக்கி நியாயப்பிரமாணத்தை விரிவுபடுத்தியிருக்கலாம்; யூதருடைய கட்டுக்கதைகளையும், மனுஷருடைய கற்பனைகளையும் ஆதரித்திருக்கலாம்.—மாற்கு 7:2, 3, 5, 15; 1 தீமோத்தேயு 4:2, 3.
5 இப்படிப்பட்ட தவறான சிந்தனை, அவர்களுடைய நியாய உணர்வையும், நன்மை தீமை அறியும் தார்மீக உள்ளுணர்வையும் பாதித்துவிட்டது, அதாவது, மனசாட்சியைப் பாதித்துவிட்டது. “அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது” என்று பவுல் எழுதினார். அவர்களுடைய மனசாட்சி அந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுவிட்டதால் அது அவர்களுடைய செயல்களையும் சிந்தனைகளையும் சரியாக வழிநடத்தவில்லை. மேலுமாக, மற்றவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களைக் குறித்து அதாவது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தீர்மானிக்கக்கூடிய சில விஷயங்களைக் குறித்து அவர்கள் குறைகூறினார்கள். இப்படிச் செய்வதன்மூலம் கிரேத்தா தீவினர் உண்மையிலேயே அசுத்தமல்லாதவற்றை அசுத்தமானவையாகக் கருதினார்கள். (ரோமர் 14:17; கொலோசெயர் 2:16) தேவனை அறிந்திருக்கிறோமென்று அவர்கள் சொன்னாலும் அவர்களுடைய கிரியைகள் அதற்கு நேர்மாறாகவே இருந்தன.—தீத்து 1:16.
“சுத்தமுள்ளவர்களுக்குச் . . . சுத்தமாயிருக்கும்”
6. எந்த இரண்டு விதமான மக்களைப்பற்றி பவுல் குறிப்பிட்டார்?
6 தீத்துவுக்கு பவுல் எழுதிய கடிதத்திலிருந்து நாம் எவ்வாறு நன்மை அடையலாம்? முதலாவதாக, இந்த வாக்கியத்திலுள்ள இரண்டு வேறுபாடுகளைக் கவனியுங்கள்: “சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.” (தீத்து 1:15) அப்படியானால், தார்மீக ரீதியில் சுத்தமாய் இருக்கிற கிறிஸ்தவருக்குச் சகலமும் சுத்தமாயிருக்கிறது, சகலத்தையும் செய்ய அனுமதியிருக்கிறது என்று அர்த்தமா? பவுல் நிச்சயம் அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கமாட்டாரென நாம் உறுதியாகச் சொல்லலாம். ஏனெனில், பவுல் தன்னுடைய இன்னொரு கடிதத்தில் எழுதியிருப்பதிலிருந்து அது தெளிவாகிறது. விபச்சாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம் இதுபோன்ற காரியங்களைச் செய்கிறவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார். (கலாத்தியர் 5:19-21) எனவே, பவுல் இரண்டு விதமான மக்களைக் குறித்து—தார்மீக ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் சுத்தமாய் இருக்கிற, சுத்தமாய் இல்லாத மக்களைக் குறித்து—பொதுவான உண்மையை இங்கு குறிப்பிட்டார் என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
7. எபிரெயர் 13:4 எதைக் கண்டனம் செய்கிறது, ஆனால், என்ன கேள்வி எழலாம்?
7 பைபிள் நேரடியாகக் கண்டிக்கும் விஷயங்களை மட்டுமே ஓர் உண்மைக் கிறிஸ்தவர் தவிர்க்க வேண்டும் என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு, இந்த நேரடியான கூற்றைச் சற்று சிந்தியுங்கள்: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) கிறிஸ்தவர்கள் அல்லாமல் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் பைபிளைப்பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும்கூட இந்த வசனம் விபசாரத்தைக் கண்டிக்கிறது என்று மிகச் சரியாகச் சொல்வார்கள். திருமணமான ஓர் ஆணோ பெண்ணோ தங்கள் சட்டப்பூர்வ கணவனுடனோ மனைவியுடனோ அல்லாமல் வேறு யாருடனாவது பாலுறவு கொள்வதைக் கடவுள் கண்டிக்கிறார் என்பதை பைபிளின் இந்த வசனத்திலிருந்தும் வேறு வசனங்களிலிருந்தும் தெரிந்துகொள்ள முடிகிறது. சரி, அப்படியென்றால், மணமாகாத இருவர் வாய்வழி செக்ஸில் ஈடுபடுவதைக் குறித்து என்ன சொல்லலாம்? இது உடலுறவு அல்லாததால் இதில் எந்த ஆபத்தும் இல்லை என அநேக பருவ வயதினர் சொல்கிறார்கள். ஒரு கிறிஸ்தவர், வாய்வழி செக்ஸை சுத்தமானதாகக் கருதலாமா?
8. வாய்வழி செக்ஸ் விஷயத்தில் கிறிஸ்தவர்களுக்கும் உலகிலுள்ள அநேக மக்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
8 விபச்சாரம், வேசித்தனம் (கிரேக்கில், போர்னியா) ஆகிய இரண்டையுமே கடவுள் கண்டனம் செய்கிறார் என்பதை எபிரெயர் 13:4-ம் 1 கொரிந்தியர் 6:9-ம் நிரூபிக்கின்றன. வேசித்தனத்தின் கிரேக்க வார்த்தையில் எவையெல்லாம் உட்படுகின்றன? கீழ்த்தரமான எண்ணத்துடன் இயல்பான விதத்திலோ இயல்புக்கு முரணான விதத்திலோ பிறப்புறுப்புகளைப் பயன்படுத்துவது அதில் உட்படுகிறது. வேதப்பூர்வமான திருமண பந்தத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளும் முறைதகாத எல்லாவித பாலுறவுகளும் அதில் உட்படுகின்றன. எனவே, வாய்வழி செக்ஸும் அதில் உட்படுகிறது. அது தவறில்லை என உலகெங்குமுள்ள அநேக பருவ வயதினரிடம் சொல்லப்பட்டிருக்கிற போதிலும், அல்லது அவர்களாகவே அந்த முடிவுக்கு வந்திருக்கிற போதிலும் இதுதான் உண்மை. மெய் கிறிஸ்தவர்களைப் பொறுத்த வரையில் ‘வீண்பேச்சுக்காரர், மனதை மயக்குகிறவர்கள்’ ஆகியோரின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து அவர்கள் சிந்திப்பதோ செயல்படுவதோ இல்லை. (தீத்து 1:10) பைபிளின் உயர்ந்த தராதரங்களை இம்மி பிசகாமல் அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். வாய்வழி செக்ஸில் ஈடுபடுவது தவறில்லை என்று நியாயப்படுத்துவதற்குப் பதிலாக பைபிளின்படி அது வேசித்தனம், போர்னியா என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். தங்கள் மனசாட்சியையும் அதற்கேற்ப பயிற்றுவிக்கிறார்கள்.a—அப்போஸ்தலர் 21:25; 1 கொரிந்தியர் 6:18; எபேசியர் 5:3.
வெவ்வேறு மனசாட்சிகள், வெவ்வேறு தீர்மானங்கள்
9. ‘சகலமும் சுத்தமாய் இருந்தால்’ மனசாட்சியின் பங்கு என்ன?
9 “சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்” என்று சொல்கையில் பவுல் எதை அர்த்தப்படுத்தினார்? தங்கள் சிந்தையையும் தார்மீக உணர்வையும் கடவுளின் ஏவப்பட்ட வார்த்தையிலுள்ள அவருடைய தராதரங்களுக்கு இசைவாக மாற்றியமைத்திருந்த கிறிஸ்தவர்களைக் குறித்து பவுல் இந்த வசனத்தில் குறிப்பிட்டார். கடவுள் நேரடியாகக் கண்டிக்காத அநேக விஷயங்களைக் குறித்து சபையில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருதலாம் என்பதை அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். சக விசுவாசிகள் எடுக்கும் தீர்மானங்களைக் குறைகூறுவதற்குப் பதிலாக கடவுள் கண்டனம் செய்யாத காரியங்களை ‘சுத்தமானவையாக’ அவர்கள் கருதுகிறார்கள். வாழ்க்கையின் சில அம்சங்களில் திட்டவட்டமான கட்டளைகளை பைபிள் கொடுக்காத பட்சத்தில் தாங்கள் நினைப்பது போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. இது குறித்து சில உதாரணங்களைச் சிந்திக்கலாம்.
10. ஒரு திருமண நிகழ்ச்சி (அல்லது சவ அடக்க நிகழ்ச்சி) எப்படி ஒரு சவாலாக மாறிவிடலாம்?
10 பல குடும்பங்களில் கணவன் அல்லது மனைவி மட்டுமே சத்தியத்தில் இருப்பார். (1 பேதுரு 3:1; 4:3) இந்த நிலையில் அந்தக் கணவனோ மனைவியோ பல்வேறு சவால்களை எதிர்ப்பட வேண்டியிருக்கலாம். உதாரணத்திற்கு, குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நடக்கையில் அல்லது யாராவது மரணமடைகையில் சவால்கள் தலைதூக்கலாம். சத்தியத்தில் இல்லாத கணவரை உடைய ஒரு கிறிஸ்தவ மனைவி பின்வரும் நிலையில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். கணவனின் உறவினர் ஒருவருக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. திருமண நிகழ்ச்சி சர்ச்சில் நடக்கவிருக்கிறது. (அல்லது ஓர் உறவினரின், ஒருவேளை தந்தை அல்லது தாயின் சவ அடக்க நிகழ்ச்சி சர்ச்சில் நடக்கவிருக்கிறது.) கணவன் மனைவி இருவருமே அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார்கள், மனைவி தன்னுடன் வரவேண்டுமென கணவன் விரும்புகிறார். மனைவியின் மனசாட்சி அதில் கலந்துகொள்வதைக் குறித்து என்ன சொல்லும்? அவள் என்ன செய்வாள்? என்ன செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதற்கு பின்வரும் இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள்.
11. சர்ச்சில் நடக்கவிருக்கும் திருமணத்தில் கலந்துகொள்வதா வேண்டாமா என்பதைக் குறித்து ஒரு கிறிஸ்தவ மனைவி எப்படி யோசிக்கலாம் என்பதை விவரியுங்கள். கடைசியில் அவள் என்ன முடிவுக்கு வருகிறாள்?
11 பொய் மத உலகப் பேரரசாகிய ‘மகா பாபிலோனைவிட்டு வெளியே வாருங்கள்’ என்ற பைபிளின் முக்கியமான கட்டளையைக் குறித்து லோவிஸ் என்பவள் தீவிரமாய்ச் சிந்திக்கிறாள். (வெளிப்படுத்துதல் 18:2, 4) திருமணம் நடக்கவிருக்கும் அந்த சர்ச்சில் அவள் முன்பு அங்கத்தினராய் இருந்திருக்கிறாள். எனவே, நிகழ்ச்சியின்போது அனைவரும் ஜெபிப்பது, பாடுவது, சில சைகைகளைச் செய்வது போன்ற மத சம்பந்தப்பட்ட சடங்குகளில் ஈடுபடும்படி எதிர்பார்க்கப்படுவார்கள் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவற்றில் ஈடுபடாதிருக்க அவள் தீர்மானமாய் இருக்கிறாள். அங்குச் சென்றால் மற்றவர்களுடைய வற்புறுத்துதலுக்கு இணங்கி தன் உத்தமத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் அங்குச் செல்வதற்கே அவளுக்கு விருப்பமில்லை. லோவிஸ், தன் கணவர்மீது மரியாதை வைத்திருக்கிறாள். அதுமட்டுமல்ல, பைபிள் சொல்கிறபடி அவர் தனக்கு தலையாய் இருப்பதால் அவருடன் ஒத்துழைக்கவும் விரும்புகிறாள்; அதேசமயம், தன் கிறிஸ்தவ நியமங்களை விட்டுக்கொடுக்கவும் அவளுக்கு மனமில்லை. (அப்போஸ்தலர் 5:29) அதனால், தன் கணவர் அங்குச் செல்ல விரும்பினாலும் தன்னால் வர இயலாது என்பதை நயமாகச் சொல்லி விளக்குகிறாள். ஒருவேளை அவள் தன் கணவரிடம் ‘நான் அங்கு வந்து ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய மறுத்தால் உங்களுக்கு தர்மசங்கடமாக இருக்குமே. அதற்கு நான் வராமல் இருப்பதே உங்களுக்கு நல்லதல்லவா’ என்று சொல்லி புரிய வைக்கலாம். இப்படி அவள் எடுத்த தீர்மானத்தினால் சுத்தமான மனசாட்சியைப் பெறுகிறாள்.
12. சர்ச்சில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு அழைக்கப்படுகையில் ஒருவர் எவ்வாறு சிந்தித்துச் செயல்படலாம்?
12 ரூத் என்பவளும் அதேபோன்ற ஓர் இக்கட்டான சூழ்நிலையை எதிர்ப்படுகிறாள். அவள் தன் கணவரை மதிக்கிறாள், கடவுளுக்கு உண்மையுடன் இருக்க தீர்மானமாயிருக்கிறாள், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தன்னுடைய மனசாட்சிக்கு உடனடியாகப் பிரதிபலிக்கவும் செய்கிறாள். லோவிஸ் சிந்தித்த அதே குறிப்புகளை இவளும் சிந்திக்கிறாள். அதன்பிறகு ஜெப சிந்தையோடு மே 15, 2002 தேதியிட்ட காவற்கோபுர இதழில் வெளிவந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியை ரூத் வாசிக்கிறாள். அந்த மூன்று எபிரெயர்கள் விக்கிரகாராதனை செய்யப்படும் இடத்திற்கு வர வேண்டும் என்ற கட்டளைக்குக் கீழ்ப்பட்டாலும் விக்கிரகாராதனையில் ஈடுபடாமல் தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொண்டதை அவள் யோசித்துப் பார்க்கிறாள். (தானியேல் 3:15-18) எனவே, மதம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் ஈடுபடாமல் வெறுமனே தன் கணவருடன் சென்றுவிட்டு வர அவள் தீர்மானிக்கிறாள். அவள் தன் மனசாட்சிக்கு இசைவாகவே செயல்படுகிறாள். தன் மனசாட்சி தன்னை எதைச் செய்ய அனுமதிக்கும், எதைச் செய்ய அனுமதிக்காது என்பதையெல்லாம் அவள் தன் கணவரிடம் சாதுரியமாகவும், அதேசமயம் தெளிவாகவும் சொல்லிவிடுகிறாள். தன் கணவர் மெய் வணக்கத்துக்கும் பொய் வணக்கத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் செல்கிறாள்.—அப்போஸ்தலர் 24:16.
13. இரண்டு கிறிஸ்தவர்கள் வித்தியாசமான தீர்மானங்களை எடுக்கையில் நாம் ஏன் குழப்பமடையக்கூடாது?
13 இந்த இரண்டு கிறிஸ்தவ சகோதரிகளும் வித்தியாசமான தீர்மானங்களை எடுத்திருப்பது எதைத் தெரிவிக்கிறது? ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதைத் தெரிவிக்கிறதா? அல்லது இவர்களில் ஒருவருக்கு பலவீனமான மனசாட்சி இருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறதா? இரண்டுமே இல்லை. லோவிஸ் ஏற்கெனவே சர்ச்சின் பாகமாய் இருந்ததால் சர்ச் நிகழ்ச்சிகளின் இசையும் பகட்டும் எப்படி இருக்கும் என்பதை அறிந்திருக்கிறாள். எனவே, அங்குச் செல்வது முக்கியமாய் தனக்கு ஆபத்தாக இருக்குமென்பதை அவள் முன்கூட்டியே உணரலாம். அதோடு, மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்கெனவே தன் கணவருடன் ஏற்பட்டிருக்கும் அனுபவங்களும் அவளுடைய மனசாட்சி செயல்படும் விதத்தைப் பாதிக்கலாம். அதனால், தான் எடுத்த தீர்மானமே தனக்குச் சரிப்பட்டு வரும் என்பதில் அவள் உறுதியாயிருக்கிறாள்.
14. தனிப்பட்ட நபர்கள் தீர்மானிக்க வேண்டிய விவகாரங்களைக் குறித்து கிறிஸ்தவர்கள் எதை நினைவில் கொள்ள வேண்டும்?
14 அப்படியானால், ரூத் எடுத்த தீர்மானம் தவறா? அதைச் சொல்ல மற்றவர்களுக்கு உரிமையில்லை. மத சம்பந்தப்பட்ட எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் வெறுமனே அந்த நிகழ்ச்சிக்குச் சென்றுவர அவள் தீர்மானித்ததை யாரும் கண்டனம் செய்யவோ குறைகூறவோ கூடாது. குறிப்பிட்ட சில உணவு வகைகளை சாப்பிடுவதா கூடாதா என்பதன் பேரில் அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையை நினைவில் கொள்ளுங்கள்: “புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; . . . அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.” (ரோமர் 14:3, 4) எனவே, பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி சொல்வதைக் கேட்காதிருக்கும்படி எந்த ஓர் உண்மைக் கிறிஸ்தவரும் யாரையும் வற்புறுத்த மாட்டார். அப்படிச் செய்வது உயிரைக் காக்கும் செய்தியைத் தரவல்ல ஒரு குரலை அசட்டை செய்வதற்கு ஒப்பாக இருக்கும்.
15. மற்றவர்களுடைய மனசாட்சியையும் உணர்ச்சிகளையும் மனதில் வைத்து செயல்படுவது ஏன் மிக முக்கியமாக இருக்கிறது?
15 இந்த இரண்டு கிறிஸ்தவர்களுமே மற்ற அம்சங்களையும் மனதிற்கொள்ள வேண்டும். ஒரு விஷயம் என்னவென்றால், தங்களுடைய செயல் மற்றவர்களைப் பாதிக்கும் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. “ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” என்று பவுல் நமக்கு அறிவுரை கூறினார். (ரோமர் 14:13) லோவிஸ், இதற்கு முன்பு இதுபோன்ற சூழ்நிலைகள் காரணமாக, சபையிலோ தன் குடும்பத்திலோ பல குழப்பங்கள் ஏற்பட்டதைக் கவனித்திருக்கலாம். மேலும், தன்னுடைய செயல் தன் பிள்ளைகளை மிகவும் பாதிக்கும் என்பதையும் அவள் உணர்ந்திருக்கலாம். மறுபட்சத்தில் ரூத், இதுபோன்ற தீர்மானங்கள் காரணமாக, சபையிலோ சமுதாயத்திலோ எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை என்பதைக் கவனித்திருக்கலாம். எனவே, சரியாகப் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி, மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மனதிற்கொண்டு செயல்படும். இதை இவர்கள் இரண்டு பேர் மட்டுமல்ல நாம் அனைவருமே உணருவது அவசியம். இயேசு இவ்வாறு கூறினார்: “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.” (மத்தேயு 18:6) தன்னுடைய செயல் மற்றவர்களை இடறலடையச் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதைக் குறித்து யோசிக்காமல் செயல்படுகிறவர், கிரேத்தா தீவிலிருந்த சில கிறிஸ்தவர்களைப்போல் மாசுபடிந்த மனசாட்சியை உடையவராயிருக்கிறார்.
16. காலப்போக்கில் ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்?
16 ஒரு கிறிஸ்தவர், கடவுளோடு தனக்கு இருக்கும் உறவை தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியே, தன் மனசாட்சிக்குச் செவிகொடுத்துச் செயல்படுவதிலும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். சமீபத்தில் முழுக்காட்டுதல் எடுத்த மார்க் என்பவரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். பைபிளுக்கு முரணான பழக்கங்களில் அவர் முன்பு ஈடுபட்டிருந்தார். ஒருவேளை, அவை விக்கிரகாராதனை அல்லது இரத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருக்கலாம். ஆனால், இப்போது அவற்றிலிருந்து விலகியிருக்கும்படி அவருடைய மனசாட்சி சொல்கிறது. (அப்போஸ்தலர் 21:25) சொல்லப்போனால், தான் செய்யவிருக்கும் காரியம் கடவுள் வெறுக்கும் காரியங்களுடன் சிறிதளவு சம்பந்தப்பட்டிருப்பதாகத் தோன்றினாலும்கூட அதை அவர் மிக கவனமாகத் தவிர்த்துவிடுகிறார். அதேசமயம், தனக்கு சரி எனத் தோன்றுகிற காரியங்கள், உதாரணத்திற்கு, சில டிவி நிகழ்ச்சிகள் மற்றவர்களுக்கு ஏன் தவறாகத் தோன்றுகிறது என்ற கேள்வி அவர் மனதை குழப்புகிறது.
17. காலமும் ஆன்மீக வளர்ச்சியும் எப்படி ஒரு கிறிஸ்தவரின் மனசாட்சியையும் தீர்மானங்களையும் மாற்றலாம் என்பதை விளக்குங்கள்.
17 நாட்கள் செல்லச்செல்ல மார்க், பைபிள் அறிவில் வளர்ந்து கடவுளிடம் நெருங்கிச் செல்கிறார். (கொலோசெயர் 1:9, 10) அதன் விளைவு? அவருடைய உள்மனதின் குரல் நன்றாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்போது, மார்க் தன்னுடைய மனசாட்சிக்கு இன்னும் நன்றாகச் செவிகொடுப்பதற்கும் பைபிள் நியமங்களைக் கவனமாகச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் அதிக விருப்பமுள்ளவராய் இருக்கிறார். பார்க்கப்போனால், “கடவுள் வெறுக்கும் காரியங்களுடன் சிறிதளவு சம்பந்தப்பட்டிருப்பதாக” தான் முன்பு நினைத்தவற்றில் சில விஷயங்கள் உண்மையில் கடவுளுக்கு விரோதமானவை அல்ல என்பதை உணருகிறார். அதுமட்டுமல்ல, இப்போது பைபிள் நியமங்களை மார்க் இன்னும் கவனமாகக் கடைப்பிடிப்பதோடு நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட அவருடைய மனசாட்சிக்குச் செவிகொடுக்கத் தயாராகவும் இருக்கிறார். அதனால், முன்பு தனக்குத் தவறாகத் தோன்றாத டிவி நிகழ்ச்சிகளைத் தவிர்க்கும்படி இப்போது அவருடைய மனசாட்சி சொல்கிறது. ஆம், அவருடைய மனசாட்சி தெளிவாகியிருக்கிறது.—சங்கீதம் 37:31.
18. நாம் எதைக் குறித்து சந்தோஷப்பட வேண்டும்?
18 பெரும்பாலான சபைகளில், அனைத்து கிறிஸ்தவர்களும் ஒரேயளவு முதிர்ச்சியோடு இருப்பதில்லை. சிலர் சமீபத்தில் சத்தியத்தைக் கற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சி, சில விஷயங்களைக் குறித்து அமைதியாக இருக்கலாம், அதேசமயம், மற்ற விஷயங்களைக் குறித்து சத்தமாகப் பேசலாம். அப்படிப்பட்டவர்கள் யெகோவாவின் வழிநடத்துதலுக்கும், தங்களுடைய பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சிக்கும் கீழ்ப்படிய வேண்டுமென்றால் சமயமும் சகாயமும் தேவைப்படலாம். (எபேசியர் 4:14, 15) சந்தோஷகரமாக, இவர்கள் இருக்கிற அதே சபைகளில், ஆழ்ந்த அறிவையும், பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதில் அனுபவத்தையும், கடவுளுடைய சிந்தனைகளுடன் மிகவும் ஒத்திசைந்து செயல்படும் மனசாட்சியையும் பெற்ற நபர்களும் இருக்கிறார்கள். “சுத்தமுள்ள” அப்படிப்பட்டவர்கள் மத்தியில் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கிறது! கடவுளுக்குப் பிரியமான காரியங்களைத் தார்மீக ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் இவர்கள் ‘சுத்தமாக’ கருதுகிறார்கள். (எபேசியர் 5:10) எனவே, நாம் எல்லாரும் அந்த அளவுக்கு முன்னேறி, தேவபக்திக்கும் சத்தியத்தின் திருத்தமான அறிவுக்கும் இசைவாக நம் மனசாட்சியைத் தொடர்ந்து செயல்பட வைப்போமாக. இதுவே நம் எல்லாருடைய லட்சியமாக இருக்கட்டும்.—தீத்து 1:3.
[அடிக்குறிப்பு]
a மார்ச் 15, 1983 தேதியிட்ட காவற்கோபுர இதழில் பக்கங்கள் 30-31-ல் மணமான தம்பதிகளுக்குப் பொருந்தும் சில விஷயங்கள் உள்ளன.
உங்கள் பதில்?
• கிரேத்தாவிலிருந்த சில கிறிஸ்தவர்களின் மனசாட்சி ஏன் மாசுபடிந்ததாக இருந்தது?
• நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியை உடைய இரண்டு கிறிஸ்தவர்கள் வித்தியாசமான தீர்மானங்களை எடுப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்?
• காலப்போக்கில் நம்முடைய மனசாட்சி எப்படி ஆக வேண்டும்?
[பக்கம் 26-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
சிசிலி
கிரீஸ்
கிரேத்தா
ஆ சி யா மை ன ர்
சீப்புரு
ம த் தி ய த ரை க் க ட ல்
[பக்கம் 28-ன் படம்]
கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சூழ்நிலையை எதிர்ப்படும் இரண்டு கிறிஸ்தவர்கள் வித்தியாசமான தீர்மானங்களை எடுக்கலாம்