“தேவனுடைய ஆழங்களை” ஆராயுங்கள்
“அந்த ஆவி எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறது.” —1 கொரிந்தியர் 2:10, NW.
1. புதிதாக பைபிள் படிப்பவர்கள் சந்தோஷப்படுவதற்கு என்னென்ன பைபிள் சத்தியங்கள் காரணமாயிருக்கின்றன?
ச த்தியத்தை முதன்முதலாகக் கற்றுக்கொண்டபோது நாம் எந்தளவு சந்தோஷப்பட்டோம் என்பது நம் சபையில் உள்ள பெரும்பாலோருக்கு இன்றும் நினைவிருக்கும். யெகோவாவின் பெயர் ஏன் முக்கியமானது, அவர் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார், சிலர் மட்டும் ஏன் பரலோகத்திற்குச் செல்கிறார்கள், கடவுள் பக்தியுள்ள மற்றவர்களுக்கு எத்தகைய எதிர்காலம் இருக்கிறது என்பதையெல்லாம் நாம் தெரிந்துகொண்டோம். இதற்கு முன்பும் நாம் பைபிளை ஆராய்ந்து பார்த்திருப்போம்; ஆனாலும் பலரைப் போலவே நமக்கும் அந்தச் சத்தியங்கள் புரியாதிருந்திருக்கும். பவழப்பாறை இருக்கும் இடத்திற்குச் சென்று தண்ணீருக்கு அடியில் கூர்ந்து கவனிக்கும் ஒருவரைப்போல நாமும் இருந்தோம். சாதாரணமாய் பார்க்கும்போது, கீழ்ப்பரப்பில் இருக்கும் அழகான காட்சிகள் ஓரளவே அவர் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆனால், அதற்குரிய கண்ணாடியை அணிந்துகொண்டோ கண்ணாடி தளம் பொருத்தப்பட்ட படகிலிருந்தோ பார்க்கும்போது, கண்கவர் வண்ண பவழப்பாறைகள், மீன்கள் ஆகியவற்றையும் இன்னும் பிற வசீகரிக்கும் உயிரினங்களையும் முதன்முறையாகப் பார்த்து ரசிக்கிறார். அதேபோல, வேதவசனங்களைப் புரிந்துகொள்ள பிறர் நமக்கு உதவியபோது, முதன்முறையாக “தேவனுடைய ஆழங்களை” நாம் மேலோட்டமாகப் பார்த்தோம்.—1 கொரிந்தியர் 2:8-10.
2. கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வதால் வரும் சந்தோஷத்திற்கு முடிவே இல்லையென ஏன் சொல்லலாம்?
2 பைபிள் சத்தியங்களை மேலோட்டமாகத் தெரிந்துகொள்வதோடு நாம் திருப்தியடைந்துவிட வேண்டுமா? ‘தேவனுடைய ஆழங்கள்’ என்ற சொற்றொடர், பரிசுத்த ஆவியினால் கிறிஸ்தவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட, ஆனால் மற்றவர்களுக்கு மறைக்கப்பட்ட தேவ ஞானத்தைப் புரிந்துகொள்வதை உட்படுத்துகிறது. (1 கொரிந்தியர் 2:7) யெகோவாவுடைய ஞானம் எல்லையற்றது; அவருடைய வழிகளை ஆராய்கையில் நாம் மிகுந்த சந்தோஷத்தைப் பெறலாம். அவருடைய செயல்களில் வெளிப்படும் ஞானத்தை நாம் ஒருபோதும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. “தேவனுடைய ஆழங்களை” நாம் தொடர்ந்து ஆராய்ந்தால், பைபிளின் அடிப்படை சத்தியங்களை முதன்முதலாகக் கற்றுக்கொண்டபோது கிடைத்த சந்தோஷம் நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.
3. நம்முடைய மத நம்பிக்கைகளுக்கான காரணத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வது ஏன் அவசியம்?
3 அப்படிப்பட்ட ‘ஆழமான’ விஷயங்களைப் புரிந்துகொள்வது ஏன் அவசியம்? நாம் என்ன நம்புகிறோம் என்பதை மட்டுமல்ல, அவற்றை ஏன் நம்புகிறோம் என்பதற்கான காரணங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். அது நம்முடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பலப்படுத்துகிறது. “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று [நமக்கு நாமே] நிரூபித்துக்கொள்வதற்கு பகுத்தறியும் திறனை” பயன்படுத்துமாறு வேதவசனங்கள் நமக்குச் சொல்கின்றன. (ரோமர் 12:1, 2, NW) இப்படித்தான் வாழ வேண்டுமென யெகோவா ஏன் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும்போது, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்ற தீர்மானம் பலப்படுகிறது. எனவே, ‘ஆழமான’ விஷயங்களைப்பற்றி அறிந்துகொள்ளும்போது, மோசமான செயல்களைச் செய்வதற்கான தூண்டுதலை எதிர்த்து நிற்பதற்குப் பலத்தைப் பெறுவோம்; அதோடு, “நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாக” இருப்பதற்கும் தூண்டப்படுவோம்.—தீத்து 2:14.
4. பைபிள் படிப்பதில் எவையெல்லாம் உட்பட்டிருக்கின்றன?
4 ஆழமான காரியங்களைப் புரிந்துகொள்வதற்குப் படிப்பது அவசியம். ஆனால், படிப்பது என்பது நுனிப்புல் மேய்வதைப் போன்றதல்ல. படிக்கிற தகவல் நமக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிற விஷயத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனமாக ஆராய்ச்சி செய்வதை இது அர்த்தப்படுத்துகிறது. (2 தீமோத்தேயு 1:13) இதற்கு, கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது. புத்திசாலித்தனமான தீர்மானங்களை எடுப்பதற்கும், மற்றவர்களுக்கு உதவுவதற்கும், நாம் படித்த விஷயங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று தியானிப்பதும்கூட பைபிளைப் படிப்பதில் உட்பட்டிருக்கிறது. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது”; ஆதலால், ‘தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையையும்’ நாம் படிக்க வேண்டும், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமல்ல. (2 தீமோத்தேயு 3:16, 17; மத்தேயு 4:4) பைபிளைப் படிக்க ஊக்கமாக முயற்சி செய்ய வேண்டியிருந்தாலும், அது சந்தோஷத்தைத் தருகிறது; அதோடு, “தேவனுடைய ஆழங்களை” புரிந்துகொள்வது மிகக் கடினமான விஷயமல்ல.
புரிந்துகொள்ள தாழ்மையுள்ளவர்களுக்கு யெகோவா உதவுகிறார்
5. “தேவனுடைய ஆழங்களை” யார் புரிந்துகொள்ள முடியும்?
5 நீங்கள் பள்ளிப் படிப்பில் சுமாரான ரகமாய் இருந்தாலும்சரி படிப்பது உங்களுக்குப் பழக்கமில்லாத செயலாக இருந்தாலும்சரி, “தேவனுடைய ஆழங்களை” புரிந்துகொள்வது எட்டாக்கனி என்று நினைத்துவிடாதீர்கள். பூமியில் இயேசு ஊழியம் செய்தபோது, யெகோவா தம்முடைய நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கான சக்தியை ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் தராமல், படிப்பறிவில்லா பாமரர்களுக்கே தந்தார். ஏனெனில், இவர்கள் இயேசுவிடமிருந்து மனத்தாழ்மையோடு கற்றுக்கொண்டார்கள். ரபீக்களின் பள்ளியில் படித்தவர்களோடு ஒப்பிட அவர்கள் பாலகர்களைப்போல இருந்தார்கள். (மத்தேயு 11:25; அப்போஸ்தலர் 4:13) “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை” குறித்து தன்னைப் பின்பற்றியவர்களுக்கு பவுல் சொன்னபோது, “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவி எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறது” என்று கூறினார்.—1 கொரிந்தியர் 2:9, 10, NW.
6. எதை 1 கொரிந்தியர் 2:10 அர்த்தப்படுத்துகிறது?
6 தேவனுடைய ஆவி எவ்வாறு “எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும்” ஆராய்கிறது? ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் தனித்தனியாக சத்தியத்தை வெளிப்படுத்தாமல், பரிசுத்த ஆவியின்மூலம் தம்முடைய அமைப்பை யெகோவா வழிநடத்துகிறார். அந்த ஆவி, கடவுளுடைய ஐக்கியப்பட்ட மக்கள் பைபிளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. (அப்போஸ்தலர் 20:28; எபேசியர் 4:3-6) உலகம் முழுவதிலுமுள்ள எல்லா சபையாரும் ஒரேவிதமான பைபிள் படிப்பு திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். காலம் கடந்துபோகையில், அவர்கள் பைபிளின் எல்லா போதனைகளையும் கற்றுக்கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் சபைக்கு இருப்பதால், “தேவனுடைய ஆழங்களை” புரிந்துகொள்வதற்கேற்ற மனப்பக்குவத்தைப் பெறுவதற்கு அது சபையாருக்கு உதவுகிறது.—அப்போஸ்தலர் 5:32.
‘தேவனுடைய ஆழங்களில்’ என்ன உட்பட்டுள்ளது
7. “தேவனுடைய ஆழங்களை” அநேகர் ஏன் புரிந்துகொள்வதில்லை?
7 ‘ஆழமான’ விஷயங்களைப் புரிந்துகொள்வது நிச்சயம் கடினமாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக்கூடாது. ‘தேவனுடைய ஆழங்கள்’ பெரும்பாலோருக்குப் புரியாத புதிராக இருக்கிறது; அதற்குக் காரணம், யெகோவா தரும் ஞானம் புரிந்துகொள்ள கடினமாய் இருப்பது அல்ல; மாறாக, தம்முடைய அமைப்பின் மூலம் அவர் தரும் உதவியை ஒதுக்கித் தள்ளும்படி மக்களை சாத்தான் ஏமாற்றியிருப்பதே.—2 கொரிந்தியர் 4:3, 4.
8. எபேசியருக்கு பவுல் எழுதிய கடிதத்தின் மூன்றாம் அதிகாரத்தில் என்ன ஆழமான விஷயங்களைப்பற்றிக் குறிப்பிட்டார்?
8 எபேசியருக்கு பவுல் எழுதிய கடிதத்தின் மூன்றாம் அதிகாரம், ‘தேவனுடைய ஆழங்கள்’ பல சத்தியங்களை உள்ளடக்கியிருப்பதைக் காட்டுகிறது. அவை, யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலோர் நன்கு அறிந்திருப்பவைதான். வாக்குப்பண்ணப்பட்ட வித்துவை அடையாளம் கண்டுகொள்ளுதல், பரலோகம் செல்லவிருப்பவர்களை மனிதவர்க்கத்திலிருந்து தேர்ந்தெடுத்தல், கிறிஸ்து அரசாளுகிற அரசாங்கம் போன்றவை அவற்றில் சில. “புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற . . . இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே [“ஆவியினாலே,” NW] வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது போல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை” என்று பவுல் எழுதினார். “தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு” தான் நியமிக்கப்பட்டதாய் அவர் சொன்னார்.—எபேசியர் 3:3-8, 11.
9. “தேவனுடைய ஆழங்களை” புரிந்துகொள்வது ஏன் பாக்கியமாய் இருக்கிறது?
9 ‘உன்னதங்களில் . . . அவருடைய அந்த [“பல வகையில் விளங்கும்,” பொது மொழிபெயர்ப்பு] ஞானமானது சபையின் மூலமாய் . . . தெரிய’ வேண்டும் என்பதும் கடவுளுடைய நோக்கமென்று பவுல் தொடர்ந்து விளக்கினார். (எபேசியர் 3:10) கிறிஸ்தவ சபையுடன் யெகோவா செயல்படும் விதத்தில் உட்பட்டுள்ள ஞானத்தைக் கூர்ந்து கவனித்து, புரிந்துகொள்வதன்மூலம் தேவதூதர்களும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களும் கற்றுக்கொள்ள ஆவலாயிருக்கும் விஷயங்களைப் புரிந்துகொள்வது நமக்கு எப்பேர்ப்பட்ட பாக்கியம்! (1 பேதுரு 1:10-12) நாம், “சகல பரிசுத்தவான்களோடுங்கூட” கிறிஸ்தவ விசுவாசத்தின், “அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து”கொள்ள முயற்சி செய்ய வேண்டுமென பவுல் கூறுகிறார். (எபேசியர் 3:9, 18) அநேகமாக நாம் இதுவரை சிந்தித்திராத ஒரு கோணத்தில் சில ஆழமான விஷயங்களை இப்போது கவனிக்கலாம்.
ஆழமான விஷயங்களில் சில
10, 11. வேதவாக்கியங்களின்படி, கடவுளுடைய பரலோக ‘ஸ்திரீயினுடைய’ ‘வித்துவின்’ முக்கிய பாகமாக இயேசு எப்பொழுது ஆனார்?
10 ஆதியாகமம் 3:15-ல் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளுடைய பரலோக ‘ஸ்திரீயினுடைய’ முக்கிய “வித்து” இயேசு என்பது நமக்குத் தெரியும். இதுபற்றி அதிகமாய் புரிந்துகொள்ள பின்வருமாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘இயேசு எப்பொழுது வாக்குப்பண்ணப்பட்ட வித்துவானார்? மனிதராக வருவதற்கு முன்பா? மனிதராகப் பிறந்தபோதா? முழுக்காட்டப்பட்டபோதா? அல்லது உயிர்த்தெழுப்பப்பட்டபோதா?’
11 அந்தத் தீர்க்கதரிசனத்தில், கடவுளுடைய பரலோக அமைப்பைக் குறிக்கிற “ஸ்திரீ” பிறப்பிக்கும் வித்து, சர்ப்பத்தின் தலையை நசுக்குமென கடவுள் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆயிரக்கணக்கான வருடங்கள் உருண்டோடியும் சாத்தானையும் அவனுடைய செய்கைகளையும் அழிக்க வல்லமையுள்ள வித்துவை கடவுளுடைய ஸ்திரீ பிறப்பிக்காதிருந்தாள். அதனால், ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில், “மலடி,” ‘மனம்நொந்தவள்’ என்று அவள் அழைக்கப்படுகிறாள். (ஏசாயா 54:1, 5, 6) ஏற்ற சமயத்தில், இயேசு பெத்லகேமில் பிறந்தார். ஆனால், அவர் முழுக்காட்டுதல் பெற்ற பிறகு, பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு, தேவனுடன் ஒரு விசேஷ பந்தத்தை உடைய குமாரனாக ஆனார்; அப்பொழுதுதான் யெகோவா, “இவர் என்னுடைய நேசகுமாரன்” என்று அறிவித்தார். (மத்தேயு 3:17; யோவான் 3:3) ஸ்திரீயினுடைய ‘வித்துவின்’ முக்கிய பாகம் இப்பொழுது வந்தாகிவிட்டது. பிற்பாடு, இயேசுவின் சீஷர்களும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றபோது தேவனுடைய குமாரர்களாக ஆனார்கள். நீண்ட காலமாய், “பிள்ளைப்பெறாத மலடி” போலிருந்த யெகோவாவின் ஸ்திரீ கடைசியில் ‘மகிழ்ந்து பாடினாள்.’—ஏசாயா 54:1; கலாத்தியர் 3:29.
12, 13. பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய தொகுதி ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரராக’ இருப்பதை என்னென்ன வசனங்கள் காட்டுகின்றன?
12 நமக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் ஆழமான விஷயங்களில் மற்றொன்றை இப்போது கவனிக்கலாம். அது, மனிதவர்க்கத்திலிருந்து 1,44,000 பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற கடவுளுடைய நோக்கத்தோடு சம்பந்தப்பட்டது. (வெளிப்படுத்துதல் 14:1, 4) பூமியில் எந்தக் காலப்பகுதியிலும் வாழ்கிற அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார” தொகுதியைச் சேர்ந்தோர் என்ற போதனையை நாம் ஏற்றுக்கொள்கிறோம்; ஏற்றவேளையில் தம்முடைய வேலைக்காரர்களுக்கு அவர்கள் ‘போஜனம்’ கொடுப்பார்கள் என இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 24:45) இப்படிப் புரிந்துகொண்டிருப்பது சரியானதென என்னென்ன வேதவசனங்கள் காட்டுகின்றன? தன் சகோதரனுக்கு ஆன்மீக உணவு வழங்கும் எந்தவொரு கிறிஸ்தவரையும் குறிப்பிட இயேசு இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினாரா?
13 “நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்று இஸ்ரவேலரிடம் கடவுள் சொன்னார். (ஏசாயா 43:10) ஆனால், பொ.ச. 33-ஆம் வருடம் நிசான் 11-ல், இனிமேலும் தம்முடைய தாசனாய், அதாவது ஊழியனாய் இராதபடி அவர்களை கடவுள் நிராகரித்துவிட்டதாக இஸ்ரவேலின் மதத் தலைவர்களிடம் இயேசு சொன்னார். ‘தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்’ என்று அவர் கூறினார். மேலும், அவர் கூட்டத்தாரை நோக்கி, “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என்றும் சொன்னார். (மத்தேயு 21:43; 23:38) யெகோவாவின் ஊழியராயிருந்த இஸ்ரவேலர் உண்மையாகவும் விவேகமாகவும் நடந்துகொள்ளவில்லை. (ஏசாயா 29:13, 14) அதேநாளில் பிற்பாடு, “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?” என்று இயேசு கேட்டார். சொல்லப்போனால், ‘இஸ்ரவேலருக்குப் பதிலாக வேறெந்த ஜனத்தார் கடவுளுக்கு உண்மையுள்ள ஊழியக்காரராய் இருக்கப் போகிறார்கள்?’ என்றே அவர் கேட்டார். அப்போஸ்தலன் பேதுரு இந்தக் கேள்விக்குப் பதில் அளித்தார். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களடங்கிய சபைக்குச் சொல்லும்போது, ‘நீங்களோ . . . பரிசுத்த ஜாதியாயும் [“ஜனமாயும்,” NW], அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்’ என்று அவர் கூறினார். (1 பேதுரு 1:4, 5; 2:9) ‘தேவனுடைய இஸ்ரவேலரான’ அந்த ஆன்மீக ஜனத்தார் யெகோவாவின் புதிய ஊழியக்காரராய் ஆனார்கள். (கலாத்தியர் 6:16) பூர்வ இஸ்ரவேலர் அனைவரும் ஓர் ‘ஊழியக்காரனாக’ இருந்ததுபோலவே எந்தவொரு காலப்பகுதியில் வாழ்கிற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரும் ஓர் ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரராக’ இருக்கிறார்கள். கடவுளுடைய ஊழியக்காரர்மூலம் ‘போஜனத்தை’ பெறுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
மகிழ்வூட்டும் தனிப்பட்ட படிப்பு
14. பைபிளை மேலோட்டமாக வாசிக்காமல், ஆழ்ந்து படிப்பது ஏன் மகிழ்வூட்டுகிறது?
14 வேதவசனங்களைப் புதிய கோணத்தில் புரிந்துகொண்டு, அதன்மூலம் நம்முடைய விசுவாசம் பலப்படும்போது நாம் சந்தோஷப்பட மாட்டோமா? அதனால்தான், மேலோட்டமாக வாசிப்பதைக் காட்டிலும் பைபிளை ஆழமாகப் படிப்பது மகிழ்வூட்டுகிறது. எனவே, அமைப்பு வெளியிடுகிற பிரசுரங்களை வாசிக்கும்போது, ‘இந்த விளக்கம் முன்பே நான் அறிந்திருக்கிற தகவலோடு எவ்வாறு ஒத்திருக்கிறது? இந்தக் கட்டுரையில் எட்டப்பட்டிருக்கும் முடிவுகளை மேலும் ஆதரிக்கிற என்னென்ன வசனங்களை அல்லது விளக்கங்களை நான் கொடுக்க முடியும்?’ போன்ற கேள்விகளை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். கூடுதல் ஆராய்ச்சி செய்ய விரும்பினால், பதில் தெரிந்துகொள்ள ஆசைப்படும் கேள்வியை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; இனிவரும் நாட்களில் அதை ஆராய்ச்சி செய்யுங்கள்.
15. எவற்றைப் படிப்பது மகிழ்வூட்டுவதாய் இருக்கும், அவை எப்படி நீடித்த பலனைக் கொடுக்கும்?
15 விஷயங்களைப் புதிய கோணத்தில் புரிந்துகொள்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பெற என்ன படிப்புத் திட்டங்களைப் பின்பற்றலாம்? உதாரணமாக, மனிதகுலத்தின் நன்மைக்காக கடவுள் ஏற்படுத்திய பல்வேறு உடன்படிக்கைகளைப்பற்றி கருத்தூன்றிப் படிக்கலாம். இதன்மூலம் ஆழமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களைப் படிப்பதன் மூலமாகவோ தீர்க்கதரிசன புத்தகங்களில் ஒன்றை வசனம் வசனமாக சிந்திப்பதன் மூலமாகவோ உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள முடியும். யெகோவாவின் சாட்சிகளுடைய நவீனகால சரித்திரத்தைச் சித்தரிக்கிற யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகம் உங்கள் மொழியில் இருந்தால் அதைப் படிப்பது உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும்.a பழைய காவற்கோபுர பத்திரிகைகளில் வெளிவந்த, “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைப் படிக்கும்போது சில வசனங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பதில்களுக்கு அடிப்படையாய் அமைந்த வேதப்பூர்வ காரணங்களுக்கு அதிக கவனம் செலுத்துங்கள். அது, உங்களுடைய ‘பகுத்தறியும் திறனைப்’ பயிற்றுவிக்கவும் விவேகத்தை வளர்த்துக்கொள்ளவும் உதவும். (எபிரெயர் 5:14) நீங்கள் படிக்கும்போது, உங்களுடைய பைபிளிலோ துண்டுக் காகிதத்திலோ குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்; அப்படிச் செய்வது உங்களுக்கும் நீங்கள் உதவிசெய்கிற மற்றவர்களுக்கும் நீடித்த பலனைக் கொடுக்கும்.
பைபிளை அனுபவித்துப் படிக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்
16. பைபிளை அனுபவித்துப் படிக்க பிள்ளைகளுக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்?
16 பிள்ளைகளின் ஆன்மீகப் பசியைத் தூண்ட பெற்றோர் பெரிதும் உதவலாம். பிள்ளைகள் ஆழமான விஷயங்களைப் புரிந்துகொள்வது கடினம் என்று அவர்களுடைய திறமையைக் குறைத்து எடைபோட்டுவிடாதீர்கள். பைபிள் தலைப்பு ஒன்றின் பேரில் ஆராய்ச்சி செய்து தயாரிக்கும்படி அவர்களிடம் சொல்லுங்கள்; அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்று குடும்பப் படிப்பின்போது கேளுங்கள். தங்களுடைய மத நம்பிக்கைகளை ஆதரித்துப் பேசுவதற்கும், தாங்கள் கற்றுக்கொண்டவற்றை உண்மையென நிரூபிப்பதற்கும் குடும்பப் படிப்பின்போது பயிற்சி அளியுங்கள். கூடுதலாக, ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’b என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி, பைபிளிலுள்ள இடங்களைப்பற்றி கற்றுக்கொடுக்கலாம். உங்களுடைய வாராந்தர பைபிள் வாசிப்பில் காணப்படும் தகவல்களை விளக்கலாம்.
17. தனிப்பட்ட பைபிள் படிப்புகளில் சமநிலை ஏன் அவசியம்?
17 தனிப்பட்ட பைபிள் படிப்புகள் மகிழ்வூட்டுவதாகவும் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாகவும் இருக்கலாம். ஆனால், சபைக்கூட்டங்களுக்குத் தயாரிக்கும் உங்களுடைய நேரத்தை அவை விழுங்கிவிடாதபடி கவனமாய் இருங்கள். கூட்டங்கள், ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’மூலம் யெகோவா கற்பிக்கிற மற்றொரு வழியாகும். என்றாலும், கூடுதல் ஆராய்ச்சி செய்வது, கூட்டங்களில் உதாரணமாக, சபை புத்தகப் படிப்பில் அல்லது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நடைபெறுகிற வாராந்தர பைபிள் சிறப்புக் குறிப்புகள் பகுதியில் பயன் தரும் விதத்தில் பதில்களைச் சொல்வதற்கு உதவும்.
18. “தேவனுடைய ஆழங்களை” படிப்பதற்கு முயற்சி எடுப்பது ஏன் பயனுள்ளது?
18 கடவுளுடைய வார்த்தையைத் தனிப்பட்ட விதமாய் ஆழமாகப் படிப்பது யெகோவாவிடம் நெருங்கிவர உதவும். “ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை” என்று சொல்வதன்மூலம் ஆழமான படிப்பின் மதிப்பை பைபிள் விளக்குகிறது. (பிரசங்கி 7:12) எனவே, ஆன்மீகக் காரியங்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சி பயனுள்ளதே. தொடர்ந்து தேடுகையில் “தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்” என்று பைபிள் உறுதி அளிக்கிறது.—நீதிமொழிகள் 2:4, 5.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
உங்களால் விளக்க முடியுமா?
• ‘தேவனுடைய ஆழங்களில்’ சில யாவை?
• ஆழமான விஷயங்களைப் படிப்பதை ஒருபோதும் ஏன் விட்டுவிடக்கூடாது?
• “தேவனுடைய ஆழங்களை” புரிந்துகொள்வதால் வரும் சந்தோஷத்தை கிறிஸ்தவர்கள் அனைவருமே பெற்றுக்கொள்ள முடியுமென்று ஏன் சொல்லலாம்?
• ‘தேவனுடைய ஆழங்களிலிருந்து’ நீங்கள் எவ்வாறு முழுமையாய்ப் பயன் அடையலாம்?
[பக்கம் 28-ன் படம்]
இயேசு எப்பொழுது வாக்குப்பண்ணப்பட்ட வித்துவாக ஆனார்?
[பக்கம் 31-ன் படம்]
குடும்பப் படிப்பிற்காகத் தயாரிக்கையில் ஆராய்ச்சி செய்ய பிள்ளைகளுக்குப் பெற்றோர் தலைப்புகளைக் கொடுக்கலாம்