ஆளும் குழு எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது?
கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த, அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலர் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவாகச் செயல்படுகிறார்கள். இந்த ஊழியர்கள், உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பாருக்குப் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆன்மீக உணவை வழங்குவதோடு, ராஜ்ய பிரசங்க வேலை சம்பந்தமான அறிவுரைகளை அளித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி அவர்களை ஊக்குவிப்பதும் இந்த அடிமை வகுப்பாரின் பொறுப்புகளாகும்.—மத். 24:14, 45-47, NW.
ஆளும் குழுவின் கூட்டங்கள் வாரந்தோறும் பொதுவாக புதன்கிழமைகளில் நடைபெறுகின்றன. இந்தக் குழுவிலுள்ள சகோதரர்கள் ஒன்றிணைந்து செயல்பட இந்தக் கூட்டங்கள் உதவுகின்றன. (சங். 133:1) ஆளும் குழுவினர் பிற குழுக்களிலும் சேவை செய்கிறார்கள். ராஜ்யத்துடன் சம்பந்தப்பட்ட வேலைகளில் இந்த ஒவ்வொரு குழுவும் தங்களுக்குரிய பொறுப்புகளைக் கவனிக்கின்றன. அவற்றை இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம்.
◼ ஒருங்கிணைப்பாளர்களின் குழு: ஆளும் குழுவினுடைய ஒவ்வொரு குழுக்களிலுமுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் இக்குழுவில் சேவை செய்கிறார்கள். அதன் செயலரும்கூட ஆளும் குழுவின் அங்கத்தினராக இருக்கிறார். எல்லாக் குழுக்களும் சுமூகமாக, சிறப்பாகச் செயல்படும்படி இக்குழு பார்த்துக்கொள்கிறது. அதோடு, உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் பெரும் நெருக்கடியையோ துன்புறுத்தலையோ பேரழிவுகளையோ எதிர்ப்படுகையிலும், அவர்களைப் பாதிக்கிற மற்ற அவசரக் கட்டங்களிலும் இக்குழு நடவடிக்கை எடுக்கிறது.
◼ ஊழியர்களின் குழு: உலகெங்குமுள்ள பெத்தேல் குடும்பத்தினர் ஒவ்வொருவருடைய சரீர தேவைகளையும் ஆன்மீக தேவைகளையும் கவனிப்பதோடுகூட அவர்களுக்குப் பிற உதவிகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு இக்குழுவினருக்கு உள்ளது. பெத்தேலில் சேவை செய்ய ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அழைப்பது தொடர்பான வேலையை இது மேற்பார்வை செய்கிறது; அதோடு, பெத்தேலில் சேவை செய்பவர்கள் சம்பந்தமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது.
◼ பிரசுரிக்கும் குழு: பைபிள் பிரசுரங்களை அச்சிடுவது, பிரசுரிப்பது, அவற்றை உலகின் பல பாகங்களுக்கு அனுப்புவது ஆகிய வேலைகளை இக்குழு மேற்பார்வை செய்கிறது. யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்துகிற பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான அச்சகங்களையும் கட்டடங்களையும் இது நிர்வகிக்கிறது. உலகளாவிய ராஜ்ய பிரசங்க வேலைக்காக அளிக்கப்படுகிற நன்கொடைகளைச் சிறந்த விதத்தில் பயன்படுத்துவதற்கு இக்குழு ஏற்பாடு செய்கிறது.
◼ ஊழியக் குழு: பிரசங்க வேலையையும், சபைகள், பயனியர்கள், மூப்பர்கள், பயணக் கண்காணிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் இக்குழு கவனித்துக்கொள்கிறது. இது, நம் ராஜ்ய ஊழியம் தயாரிக்கப்படுவதை மேற்பார்வை செய்கிறது; கிலியட் பள்ளியிலும் ஊழியப் பயிற்சிப் பள்ளியிலும் கலந்துகொள்ள விரும்புகிற மாணவர்களை அழைப்பது, பட்டம் பெற்ற பின் அவர்களை பல்வேறு இடங்களில் ஊழியம் செய்ய நியமிப்பது ஆகிய வேலைகளையும் கவனிக்கிறது.
◼ போதனாக் குழு: மாநாடுகள், சபை கூட்டங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான தகவல்கள் அளிப்பதை இக்குழு மேற்பார்வை செய்கிறது. பெத்தேல் குடும்பத்தாருக்குத் தேவையான பைபிள் சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது; கிலியட் பள்ளி, பயனியர் ஊழியப் பள்ளி போன்ற பல்வேறு பள்ளிகளுக்கு ஏற்பாடு செய்கிறது; அதோடு, ஆடியோ வீடியோ நிகழ்ச்சிகளைத் தயாரிக்கிறது.
◼ எழுத்துக் குழு: நம் சகோதர சகோதரிகளுக்கும் மற்றவர்களுக்கும் வினியோகிக்கப்படுகிற பைபிள் பிரசுரங்களுக்கான கட்டுரைகளைத் தயாரிக்கும் வேலையை இக்குழு மேற்பார்வை செய்கிறது. இது, பைபிள் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது; நாடக உரை, பொதுப் பேச்சுக்கான குறிப்புத்தாள்கள் போன்றவற்றிற்கு ஒப்புதல் அளிக்கிறது. உலகம் முழுவதிலும் நடைபெறுகிற மொழிபெயர்ப்பு வேலையையும் மேற்பார்வை செய்கிறது.
அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் சபையை மனித உடலுக்கு அப்போஸ்தலன் பவுல் ஒப்பிட்டார்; அதன் உறுப்பினர் ஒவ்வொருவரும் எந்தளவு முக்கியமானவர்கள் என்பதை அவர் வலியுறுத்தினார். அதோடு, கடவுளுடைய வேலையைச் செய்வதில் அவர்கள் ஒருவரையொருவர் சார்ந்து, அன்போடு ஒத்துழைப்பதன் அவசியத்தையும் சிறப்பித்துக்காட்டினார். (ரோ. 12:4, 5; 1 கொ. 12:12-31) சபையின் தலையாகிய இயேசு கிறிஸ்து, அதன் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து, நன்கு ஒத்துழைப்பதற்குத் தேவையானவற்றை அளிக்கிறார்; ஊட்டமிக்க பைபிள் போதனைகளையும் அளிக்கிறார். (எபே. 4:15, 16; கொலோ. 2:18) அவ்வாறே, யெகோவாவின் வழிநடத்துதலுக்கு இசைய ஆளும் குழுவினரும் முன்னின்று செயல்படுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள்.