நல்ல எதிர்காலம் விரைவில்!
“இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் . . . ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.
இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதைப் பார்க்க நீங்கள் ஆசையாக இருக்கிறீர்களா? அதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த எதிர்காலம் சீக்கிரத்தில் வரும் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் இருக்கின்றன.
நாம் ‘கடைசி நாட்களில்தான்’ வாழ்கிறோம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிற சில பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றி முந்தின கட்டுரைகளில் பார்த்தோம். (2 தீமோத்தேயு 3:1-5) நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சம்பவங்களைப் பற்றி முன்கூட்டியே சொல்வதற்கு பைபிள் எழுத்தாளர்களை கடவுள் தூண்டினார். (ரோமர் 15:4) நாம் படுகிற கஷ்டங்கள் எல்லாம் சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என்பதைத்தான் இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் காட்டுகிறது.
கடைசி நாட்களுக்குப் பிறகு என்ன நடக்கும்? கடவுளுடைய அரசாங்கம் மனிதர்களை ஆட்சி செய்யும். (மத்தேயு 6:9) அந்தச் சமயத்தில் பூமியில் இருக்கும் நிலைமைகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இப்போது பார்க்கலாம்:
● பஞ்சம் பஞ்சாய்ப் பறந்துவிடும். “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.”—சங்கீதம் 72:16.
● நோய்நொடி நிரந்தரமாக நீங்கிவிடும். “ ‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.”—ஏசாயா 33:24.
● பூமி புதுப்பொலிவு பெறும். “வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும். பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்.”—ஏசாயா 35:1.
சீக்கிரத்தில் நிறைவேறப்போகிற ஆச்சரியமூட்டும் பைபிள் தீர்க்கதரிசனங்களில் சிலவற்றைத்தான் இப்போது பார்த்தோம். நல்ல எதிர்காலம் சீக்கிரத்தில் வரப்போகிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் ஏன் அவ்வளவு உறுதியாக நம்புகிறார்கள் என்பதை அவர்களிடம் நீங்களே கேட்டுப் பார்க்கலாமே!