பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
சூதாட்டத்துக்கும் திருட்டுக்கும் பேர்போன ஒருவர் அடியோடு மாறியது எப்படி? அவரிடமே கேட்கலாம்.
“குதிரைப்பந்தயம் என்றால் எனக்கு அப்படியொரு வெறி”—ரிச்சர்ட் ஸ்டிவார்ட்
பிறந்த வருடம்: 1965
சொந்த நாடு: ஜமைகா
முன்பு: சூதாட்டக்காரன், கொள்ளைக்காரன்
என் கடந்த காலம்: ஜமைகாவின் தலைநகரம் கிங்ஸ்டன். அங்கே ஏழ்மையான, மக்கள் நெருக்கடி அதிகமுள்ள ஒரு இடத்தில்தான் நான் பிறந்தேன். அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகம் இருந்தது. அதனால் கொலை, கொள்ளைக்குப் பஞ்சமே இல்லை. ரவுடிக் கும்பல் மக்களை சதா பயமுறுத்திக்கொண்டே இருந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்காத நாளே இருக்காது.
என் அம்மா வேர்வை சிந்தி கஷ்டப்பட்டு வேலை செய்து என்னையும் என் தம்பி தங்கையையும் காப்பாற்றினார்கள். எங்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என நினைத்தார்கள். எனக்கோ ஸ்கூலுக்குப் போகச் சுத்தமாகப் பிடிக்காது, ஆனால் குதிரைப்பந்தயம் என்றால் அப்படியொரு வெறி. அதனால், ஸ்கூலுக்கு மட்டம் போட்டுவிட்டு குதிரைப்பந்தயத்தைப் பார்க்கப் போய்விடுவேன், குதிரையை ஓட்டியும் இருக்கிறேன்.
போகப்போக குதிரைமேல் பந்தயம் கட்டி விளையாட ஆரம்பித்தேன். எப்போதும் பெண்கள் பின்னாலேயே அலைந்தேன், அவர்களோடு உல்லாசமாக இருந்தேன். மாரிஹூவானா புகைக்க ஆரம்பித்தேன், வாழ்க்கையை ஓட்டுவதற்கு திருடினேன். நிறைய துப்பாக்கிகளை வாங்கிக் குவித்தேன். எத்தனையோ தடவை கொள்ளையடித்திருந்தாலும், நல்லவேளையாக ஒருவரைகூட கொலை செய்யவில்லை.
ஒருநாள் போலீஸிடம் மாட்டிக்கொண்டேன்; ஜெயிலிலிருந்து வந்தபிறகு, ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்பதுபோல் திரும்பவும் பழைய வாழ்க்கையை ஆரம்பித்தேன். சொல்லப்போனால் இன்னும் மோசமாகிவிட்டேன். பார்ப்பதற்குப் பாவம்போல இருந்தேன், ஆனால் நான் சரியான முரடன், கோபக்காரன், நினைத்ததைச் சாதிப்பவன். மற்றவர்களைப் பற்றி எனக்குக் கொஞ்சம்கூட கவலை இல்லை, நான் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று நினைத்தேன்.
பைபிள் என்னை மாற்றிய விதம்: நான் இப்படி தறுதலையாகச் சுற்றிக்கொண்டிருந்த சமயத்தில், என் அம்மா பைபிளைப் படித்து யெகோவாவின் சாட்சியாக மாறினார். அவர் செய்த மாற்றங்களைப் பார்த்து மலைத்துப்போனேன். அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். எனவே, நானும் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன்.
யெகோவாவின் சாட்சிகள் போதித்த விஷயங்கள் வித்தியாசமாக இருந்ததைப் பார்த்தேன். அவர்கள் எல்லா விஷயங்களையும் பைபிளிலிருந்தே சொன்னார்கள். எனக்குத் தெரிந்தவரை, அவர்கள் மட்டும்தான் ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் போல வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தார்கள். (மத்தேயு 28:19; அப்போஸ்தலர் 20:20) அவர்கள் ஒருவர்மீது ஒருவர் உண்மையான அன்பைக் காட்டினார்கள். அதைப் பார்த்தபோது இதுதான் உண்மையான மதம் எனப் புரிந்துகொண்டேன்.—யோவான் 13:35.
பைபிளைப் படிக்கப் படிக்க என்னை அடியோடு மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். பாலியல் முறைகேட்டை யெகோவா வெறுப்பதால், அவரைச் சந்தோஷப்படுத்துவதற்கு என் உடலைக் கறைபடுத்தும் எல்லா பழக்கங்களையும் விட்டுவிட வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். (2 கொரிந்தியர் 7:1; எபிரெயர் 13:4) யெகோவாவுக்கு உணர்ச்சிகள் உண்டு, என்னால் அவரைச் சந்தோஷப்படுத்தவும் முடியும் துக்கப்படுத்தவும் முடியும் என்பதைத் தெரிந்துகொண்டபோது நான் அதிர்ந்துபோனேன். (நீதிமொழிகள் 27:11) மாரிஹூவானா புகைப்பதை நிறுத்திவிட்டு, துப்பாக்கியை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, புது வாழ்க்கையைத் தொடங்கத் தீர்மானித்தேன். ஆனால், சூதாட்டத்தையும், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையையும் விடுவதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
நான் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிப்பது என் நண்பர்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என முதலில் நினைத்தேன். ஆனால், மத்தேயு 10:33-ல் “என்னை நிராகரிக்கிற ஒருவனை என் பரலோகத் தகப்பனுக்கு முன்பாக நானும் நிராகரித்துவிடுவேன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் என் மனதை மாற்றிவிட்டன. உடனே என் நண்பர்களிடம் சொன்னேன். அவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. என்னை மாதிரி ஒருவன் கிறிஸ்தவனாவதை அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால், அந்தப் பழைய சாக்கடையில் இனியும் புரள நான் விரும்பவில்லை என்று அவர்களிடம் தீர்மானமாகச் சொன்னேன்.
நான் பெற்ற பலன்கள்: நான் பைபிளின்படி வாழ ஆரம்பித்ததைப் பார்த்த என் அம்மாவிற்கு ஒரே சந்தோஷம். நான் ஏதாவது தப்புதண்டா செய்துவிடுவேனோ என அம்மா இப்போதெல்லாம் பயப்படுவதே இல்லை. யெகோவாவைப் பற்றியும் அவர்மேல் எங்களுக்கு இருக்கிற அன்பைப் பற்றியும்தான் நானும் அம்மாவும் அடிக்கடி பேசிக்கொள்வோம். சில நேரங்களில், கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்த பழைய ரிச்சர்டை நினைத்துப் பார்ப்பேன், கடவுளுடைய உதவியோடு இப்போது நான் எவ்வளவு மாற்றம் செய்திருக்கிறேன், என்னாலேயே நம்ப முடியவில்லை! இனி நிச்சயமாக அந்தப் பழைய வாழ்க்கைக்குத் திரும்பவே மாட்டேன்.
நான் மட்டும் அன்று பைபிள் சத்தியத்தைக் கேட்காமல் இருந்திருந்தால், இந்நேரம் மண்ணுக்குள் போயிருப்பேன், இல்லை ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பேன். ஆனால், இப்போது எனக்கு ஒரு அழகான குடும்பம் இருக்கிறது. ஆதரவான மனைவியோடும், அடக்கமான மகளோடும் சேர்ந்து யெகோவா தேவனை வழிபடுவதில் கிடைக்கும் சந்தோஷமே தனிதான். பாசமுள்ள கிறிஸ்தவ சகோதரர்களை, யெகோவா எனக்குக் கொடுத்த பரிசாக நினைக்கிறேன். சிரமம் எடுத்து ஒரு சகோதரர் எனக்கு பைபிள் கற்றுக்கொடுத்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன். பைபிளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நான் பொக்கிஷமாக நினைக்கிறேன். யெகோவா தம்முடைய பிள்ளையாக என்னையும் தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கு காலமெல்லாம் நன்றி சொன்னாலும் போதாது. (w11-E 11/01)
[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]
‘யெகோவாவுக்கு உணர்ச்சிகள் உண்டு, என்னால் அவரைச் சந்தோஷப்படுத்தவும் முடியும் துக்கப்படுத்தவும் முடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன்’
[பக்கம் 15-ன் படம்]
மனைவி மகளுடன்
[பக்கம் 15-ன் படம்]
என் அம்மாவிடம் நிறைய மாற்றங்களைப் பார்த்தேன்