யெகோவாவின் நோக்கம் நிறைவேறும்!
“நான் சொன்னேன், அதைச் செய்வேன். நான் தீர்மானித்தேன், அதை நிறைவேற்றுவேன்.”—ஏசா. 46:11.
1, 2. (அ) யெகோவா நமக்கு எதை வெளிப்படுத்தியிருக்கிறார்? (ஆ) ஏசாயா 46:10, 11; 55:11-ல் என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது?
“ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்.” (ஆதி. 1:1) இவைதான் பைபிளில் இருக்கிற ஆரம்ப வார்த்தைகள்; எளிமையான, ஆழ்ந்த அர்த்தமுள்ள வார்த்தைகள்! இந்தப் பிரபஞ்சத்தில் கடவுள் படைத்திருக்கிற நிறைய படைப்புகளில், சிலவற்றைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். விண்வெளி, ஒளி, புவி ஈர்ப்பு சக்தி ஆகியவற்றைப் பற்றி நமக்குக் கொஞ்சம்தான் தெரியும்! (பிர. 3:11) ஆனால், மனிதர்களுக்கான தன்னுடைய நோக்கத்தைப் பற்றியும், பூமிக்கான தன்னுடைய நோக்கத்தைப் பற்றியும் யெகோவா நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். மனிதர்களைத் தன்னுடைய சாயலில் யெகோவா படைத்தார், இந்தப் பூமியில் அவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். (ஆதி. 1:26) மனிதர்கள் யெகோவாவுக்குப் பிள்ளைகளாக இருப்பார்கள்; யெகோவா அவர்களுக்கு அப்பாவாக இருப்பார்!
2 யெகோவாவின் நோக்கத்துக்கு எதிராகச் சவால் விடப்பட்ட விஷயத்தை ஆதியாகமம் 3-வது அதிகாரத்திலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். (ஆதி. 3:1-7) ஆனால், யெகோவாவால் சரிசெய்ய முடியாத பிரச்சினை எதுவுமே இல்லை. அவருடைய நோக்கத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. (ஏசா. 46:10, 11; 55:11) அதனால், ஆரம்பத்தில் யெகோவாவுக்கு இருந்த நோக்கம், சரியான நேரத்தில் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்!
3. (அ) பைபிள் செய்தியைப் புரிந்துகொள்ள என்ன முக்கியமான உண்மைகள் உதவுகின்றன? (ஆ) அந்த உண்மைகளைப் பற்றி நாம் ஏன் சிந்திக்கப் போகிறோம்? (இ) என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கப் போகிறோம்?
3 மனிதர்கள் மற்றும் பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றியும், அதில் இயேசுவுக்கு இருக்கிற பங்கைப் பற்றியும் நமக்கு நன்றாகத் தெரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! இவையெல்லாம் முக்கியமான பைபிள் உண்மைகள்; நாம் பைபிள் படிக்க ஆரம்பித்தபோது, இவற்றைத்தான் முதல் முதலில் கற்றுக்கொண்டோம். மற்றவர்களும் இந்த மிக முக்கியமான உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால், இந்த உண்மைகளைப் பற்றி இப்போது சிந்திக்கப்போகிறோம். இந்த வருஷத்தில் நடக்கப்போகிற இயேசுவின் நினைவுநாள் அனுசரிப்புக்காக மக்களை அழைக்கும்போது, இந்த உண்மைகளைப் பற்றி அவர்களுக்குச் சொல்லும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. (லூக். 22:19, 20) இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு அவர்கள் வரும்போது, கடவுளுடைய அருமையான நோக்கங்களைப் பற்றி அவர்கள் அதிகம் தெரிந்துகொள்வார்கள். அதனால், ஆர்வத்தைத் தூண்டும் என்ன கேள்விகளை அவர்களிடம் கேட்கலாம் என்று இந்தச் சமயத்தில் யோசித்துப் பார்ப்பது நல்லது. இந்தக் கட்டுரையில் 3 கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கப்போகிறோம்: மனிதர்கள் மற்றும் பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன? என்ன தவறு நடந்துவிட்டது? கடவுளுடைய நோக்கம் நிறைவேற இயேசு கிறிஸ்துவின் மீட்புப் பலி வழி திறந்திருக்கிறது என்று ஏன் சொல்கிறோம்?
படைப்பாளரின் நோக்கம் என்ன?
4. படைப்பு எப்படி “கடவுளுடைய மகிமையைச் சொல்கிறது”?
4 யெகோவா ஒரு பிரமிப்பூட்டும் படைப்பாளர்! மிக உயர்ந்த தராதரங்களோடுதான் அவர் எல்லாவற்றையும் படைத்திருக்கிறார். (ஆதி. 1:31; எரே. 10:12) அவருடைய படைப்பில் இருக்கும் அழகு மற்றும் ஒழுங்கிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? மிகச் சிறியது முதல் மிகப் பெரியது வரை, எல்லாவற்றையுமே, யெகோவா ஏதோவொரு நன்மைக்காகத்தான் படைத்திருக்கிறார். மனித அணுக்களையோ, புதிதாகப் பிறந்த குழந்தையையோ, கண்ணைக் கவரும் சூரிய அஸ்தமனத்தையோ பார்க்கும்போது நாம் ஆச்சரியப்படுகிறோம். ஏனென்றால், உண்மையான அழகை உணரும் விதத்தில்தான் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார்.—சங்கீதம் 19:1; 104:24-ஐ வாசியுங்கள்.
5. எல்லா படைப்புகளும் ஒன்றுசேர்ந்து இயங்குவதற்கு யெகோவா என்ன செய்திருக்கிறார்?
5 தன்னுடைய எல்லா படைப்புகளுக்கும் யெகோவா வரம்புகளை வைத்திருக்கிறார். இயற்கை சட்டங்களையும் ஒழுக்க சட்டங்களையும் ஏற்படுத்தியிருக்கிறார். பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாமே ஒன்றுசேர்ந்து நன்றாக இயங்குவதற்காக இந்தச் சட்டங்களை உண்டாக்கியிருக்கிறார். (சங். 19:7-9) இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாவற்றுக்கும், அவற்றுக்கென்று ஒரு இடமும் வேலையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, புவி ஈர்ப்பு சக்தியைப் பற்றி கவனியுங்கள். இது, வளிமண்டலத்தை பூமிக்குப் பக்கத்தில் ஈர்த்துப் பிடிக்கிறது. அதோடு, கடலையும் அலைகளையும் கட்டுப்படுத்துகிறது. புவி ஈர்ப்பு சக்தி இல்லாமல், பூமியில் நம்மால் வாழவே முடியாது. மனிதர்கள் உட்பட, எல்லா படைப்புகளும் யெகோவா ஏற்படுத்தியிருக்கிற வரம்புகளுக்குள் நகருகிறது, செயல்படுகிறது. மனிதர்களுக்கும், பூமிக்கும், யெகோவா ஒரு நோக்கம் வைத்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஊழியம் செய்யும்போது, இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத்தைப் படைத்தவரைப் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்ள நாம் உதவலாம்.—வெளி. 4:11.
6, 7. ஆதாம் ஏவாளுக்கு யெகோவா கொடுத்த சில பரிசுகள் என்ன?
6 மனிதர்கள் பூமியில் என்றென்றும் வாழ வேண்டும் என்பது யெகோவாவின் நோக்கம். (ஆதி. 1:28; சங். 37:29) அவர் தாராள குணமுள்ளவர்; அதனால், ஆதாம் ஏவாளுக்கு விலைமதிக்க முடியாத பரிசுகளை அள்ளிக் கொடுத்தார். (யாக்கோபு 1:17-ஐ வாசியுங்கள்.) சொந்தமாகத் தீர்மானிக்கும் உரிமையை யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார். யோசித்து முடிவெடுக்கும் திறனையும், அன்பு காட்டும் திறனையும், நட்பை அனுபவிக்கும் திறனையும் அவர்களுக்குக் கொடுத்தார். படைப்பாளரான யெகோவா ஆதாமிடம் பேசினார், கீழ்ப்படிதலைக் காட்டுவது சம்பந்தமான அறிவுரைகளை அவனுக்குக் கொடுத்தார். தன்னுடைய தேவைகளை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று ஆதாம் கற்றுக்கொண்டான். அதோடு, மிருகங்களையும் நிலத்தையும் எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொண்டான். (ஆதி. 2:15-17, 19, 20) சுவை உணர்வோடும், தொடு உணர்வோடும், பார்க்கும் உணர்வோடும், கேட்கும் உணர்வோடும், வாசனை உணர்வோடும் யெகோவா ஆதாம் ஏவாளைப் படைத்தார். இப்படி, தங்களுடைய அழகான வீட்டில் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். அவர்கள் அனுபவித்துச் செய்வதற்கு நிறைய வேலைகளும் இருந்தன. அதோடு, தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், என்றென்றும் புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு இருந்தது.
7 கடவுளுடைய நோக்கத்தில் வேறு எதுவும் இருந்தது? பரிபூரணமான பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் சக்தியை ஆதாம் ஏவாளுக்கு யெகோவா கொடுத்தார். இந்த முழு பூமியையும் நிரப்பும்வரை, அவர்களுடைய பிள்ளைகளும் தங்களுக்கென்று பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். முதல் பரிபூரணப் பிள்ளைகளான ஆதாம் ஏவாளை தான் நேசித்ததுபோல, பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை நேசிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். பூமியையும், அதிலிருக்கும் எல்லா வளங்களையும் யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார். பூமிதான் அவர்களுடைய நிரந்தர வீடாக ஆகவிருந்தது!—சங். 115:16.
என்ன தவறு நடந்தது?
8. ஆதியாகமம் 2:16, 17-ல் இருக்கிற சட்டத்தைக் கடவுள் ஏன் ஆதாம் ஏவாளுக்குக் கொடுத்தார்?
8 யெகோவா விரும்பியபடி எல்லாமே உடனடியாக நடக்கவில்லை. ஏன்? ஆதாம் ஏவாள், தங்களுடைய சுதந்திரத்துக்கு வரம்புகள் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, எளிமையான ஒரு சட்டத்தை யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார். “இந்தத் தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் நீ திருப்தியாகச் சாப்பிடலாம். ஆனால், நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் கண்டிப்பாகச் செத்துப்போவாய்” என்று அவர்களிடம் சொன்னார். (ஆதி. 2:16, 17) அந்தச் சட்டத்தைப் புரிந்துகொள்வதும் அதற்குக் கீழ்ப்படிவதும் அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. ஏனென்றால், சாப்பிட முடியாதளவுக்கு ஏராளமான பழங்கள் அவர்களுக்கு இருந்தது.
9, 10. (அ) யெகோவாவுக்கு எதிராக சாத்தான் என்ன குற்றம் சாட்டினான்? (ஆ) ஆதாம் ஏவாள் என்ன செய்ய தீர்மானித்தார்கள்? (ஆரம்பப் படம்)
9 ஏவாள் தன்னுடைய அப்பாவான யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி, பிசாசாகிய சாத்தான் அவளை ஏமாற்றினான். அதற்கு அவன் ஒரு பாம்பைப் பயன்படுத்தினான். (ஆதியாகமம் 3:1-5-ஐ வாசியுங்கள்; வெளி. 12:9) “தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும்” சாப்பிடுவதற்கு கடவுளுடைய பிள்ளைகள் அனுமதிக்கப்படவில்லை என்று சொல்லி, சாத்தான் அதை ஒரு பிரச்சினையாக்கினான். ‘நீங்க ஆசைப்பட்டத கூடவா உங்களால செய்ய முடியாது?’ என்று கேட்பது போல அது இருந்தது. அடுத்ததாக, “நீங்கள் சாகவே சாக மாட்டீர்கள்” என்று சொன்னான். அது சுத்தப் பொய்! பிறகு, கடவுள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஏவாளை நம்ப வைக்க சாத்தான் முயற்சி செய்தான். ‘நீங்கள் அதைச் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் என்பது கடவுளுக்குத் தெரியும்’ என்றும் சொன்னான். அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் ஏதோ விசேஷமான அறிவு கிடைக்கும் என்றும், அதில் யெகோவாவுக்குக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை என்றும் அவன் சொன்னான். கடைசியாக, தவறான ஒரு வாக்குறுதியையும் கொடுத்தான்; அதாவது, “நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள்” என்று சொன்னான்.
10 என்ன செய்வதென்று ஆதாம் ஏவாள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. அதாவது, கடவுளுக்குக் கீழ்ப்படிவதா அல்லது பாம்பு சொல்வதைக் கேட்பதா என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. வருத்தகரமாக, கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போவதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். தங்களுடைய அப்பா யெகோவாவை உதறித் தள்ளிவிட்டு, சாத்தானோடு சேர்ந்துகொண்டார்கள். அதனால், யெகோவாவின் பாதுகாப்பை அவர்கள் இழந்துவிட்டார்கள்; அவர்களே அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.—ஆதி. 3:6-13.
11. ஆதாம் ஏவாள் செய்த பாவத்தை யெகோவா ஏன் கண்டும்காணாமல் விட்டுவிடவில்லை?
11 யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்ததால், ஆதாமும் ஏவாளும் பரிபூரணத்தை இழந்தார்கள். யெகோவா தீமையை வெறுப்பதால், அவர்கள் கடவுளுடைய எதிரிகளாகவும் ஆனார்கள். “மிகவும் பரிசுத்தமான அவருடைய கண்கள் தீமையைப் பார்த்து ரசிக்காதே!” (ஆப. 1:13) ஆதாம் ஏவாள் செய்த பாவத்தை யெகோவா கண்டும்காணாமல் விட்டிருந்தால், பரலோகத்திலும் சரி, பூமியிலும் சரி, அவருடைய எல்லா படைப்புகளின் நலனும் கேள்விக்குறியாகி இருக்கும்! அவருடைய வார்த்தையை நம்புவதா வேண்டாமா என்று மனிதர்களும் தேவதூதர்களும் ரொம்பவே யோசித்திருப்பார்கள். ஆனால், தன்னுடைய தராதரங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யெகோவா உண்மையோடு நடந்துகொண்டார்; அவற்றை அவர் ஒருபோதும் மீறவில்லை. (சங். 119:142) சொந்தமாகத் தீர்மானிக்கும் உரிமை ஆதாம் ஏவாளுக்கு இருந்தபோதும், யெகோவாவுக்கு எதிராகச் செய்த கலகத்தால் வந்த விளைவுகளை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. அதனால், கடைசியில் அவர்கள் செத்துப் போனார்கள்; தாங்கள் படைக்கப்பட்ட மண்ணுக்கே திரும்பிப் போனார்கள்.—ஆதி. 3:19.
12. ஆதாமின் பிள்ளைகளுக்கு என்ன ஆனது?
12 ஆதாம் ஏவாள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டதால், இனி ஒருபோதும் அவர்களைத் தன்னுடைய குடும்ப அங்கத்தினர்களாக யெகோவா ஏற்றுக்கொள்ள மாட்டார். ஏதேன் தோட்டத்திலிருந்து யெகோவா அவர்களைத் துரத்திவிட்டார்; அவர்களால் இனி ஒருபோதும் அதற்குள் போக முடியாது. (ஆதி. 3:23, 24) அவர்கள் எடுத்த தீர்மானத்தின் விளைவுகளை அனுபவிக்கும்படி யெகோவா அவர்களை விட்டுவிட்டார். (உபாகமம் 32:4, 5-ஐ வாசியுங்கள்.) அதனால், யெகோவாவின் குணங்களை அவர்களால் முழுமையாக வெளிக்காட்ட முடியவில்லை. ஓர் அருமையான எதிர்காலத்தை ஆதாம் இழந்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய பிள்ளைகளும் அதை அனுபவிக்க முடியாதபடி செய்துவிட்டான். அபூரணத்தையும், பாவத்தையும், மரணத்தையும்தான் அவனுடைய பிள்ளைகளுக்கு அவனால் கொடுக்க முடிந்தது. (ரோ. 5:12) அவனுடைய பிள்ளைகளுக்கு என்றென்றும் வாழும் வாய்ப்பு இருந்தது; ஆனால், அதை அவன் தட்டிப்பறித்துவிட்டான். ஆதாம் ஏவாளால் பரிபூரண பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியவில்லை; அவர்களுடைய பிள்ளைகளாலும் பரிபூரண பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியவில்லை. அந்தச் சமயத்திலிருந்து, ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்கு எதிராகத் திரும்பும்படி சாத்தான் செய்திருக்கிறான். அதோடு, ஆதாம் ஏவாளைப் போலவே நடந்துகொள்ளும்படி, பிசாசு எல்லா மனிதர்களையும் தூண்டியிருக்கிறான்.—யோவா. 8:44.
மீட்புவிலை—கடவுளுடைய நட்பை அனுபவிக்க உதவுகிறது
13. மனிதர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்?
13 யெகோவா இன்னும் மனிதர்களை நேசிக்கிறார். ஆதாம் ஏவாள் தனக்கு எதிராகக் கலகம் செய்திருந்தாலும், மனிதர்கள் தன்னோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று யெகோவா விரும்பினார். அதோடு, யாரும் இறந்துபோவதையும் அவர் விரும்பவில்லை. (2 பே. 3:9) அதனால், மறுபடியும் மனிதர்கள் தன்னுடைய நண்பர்களாக ஆவதற்கு, உடனடியாக அவர் ஓர் ஏற்பாட்டைச் செய்தார். ஆனால், தன்னுடைய தராதரங்களை விட்டுக்கொடுக்காமலேயே அவர் அதை எப்படிச் செய்தார்? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
14. (அ) யோவான் 3:16-ன்படி, மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்ற கடவுள் என்ன செய்திருக்கிறார்? (ஆ) எந்தக் கேள்விக்கான பதிலைப் புரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு உதவலாம்?
14 யோவான் 3:16-ஐ வாசியுங்கள். நினைவுநாள் அனுசரிப்புக்கு வருகிற சிலருக்கு இந்த வசனம் மனப்பாடமாகத் தெரியும். ஆனால், இயேசுவின் மீட்புப் பலி எப்படி முடிவில்லாத வாழ்வுக்கு வழி செய்திருக்கிறது? நினைவுநாளுக்கு மற்றவர்களை அழைக்கும்போதும், நினைவுநாள் அன்று அவர்களோடு இருக்கும்போதும், அதற்குப் பிறகு அவர்களைச் சந்திக்கும்போதும் இந்த முக்கியமான கேள்விக்கான பதிலைப் புரிந்துகொள்ள நம்மால் அவர்களுக்கு உதவ முடியும். மீட்புவிலையைப் பற்றி அவர்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளும்போது, யெகோவா மனிதர்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதையும், அவர் எவ்வளவு ஞானமுள்ளவர் என்பதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியும். மீட்புவிலை சம்பந்தப்பட்ட என்னென்ன விஷயங்களை நாம் அவர்களிடம் சொல்லலாம்?
15. இயேசுவுக்கும் ஆதாமுக்கும் என்ன வித்தியாசம் இருந்தது?
15 தன் உயிரை மீட்புவிலையாகக் கொடுக்கமுடிந்த ஒரு பரிபூரண மனிதரை யெகோவா தந்தார். அந்தப் பரிபூரண மனிதர், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டியிருந்தது. மக்களுக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுக்க மனமுள்ளவராகவும் இருக்க வேண்டியிருந்தது. (ரோ. 5:17-19) தன்னுடைய முதல் படைப்பான இயேசுவின் உயிரை பரலோகத்திலிருந்து பூமிக்கு யெகோவா மாற்றினார். (யோவா. 1:14) அதனால், இயேசுவும் ஆதாமைப் போல ஒரு பரிபூரண மனிதராக இருந்தார். ஒரு பரிபூரண மனிதர் தன்னுடைய தராதரங்களைப் பின்பற்ற வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார். ஆனால், ஆதாம் யெகோவாவுடைய தராதரங்களைப் பின்பற்றவில்லை. இயேசுவோ, யெகோவாவின் தராதரங்களின்படி வாழ்ந்தார். மிகவும் கடுமையான சோதனையை அனுபவித்தபோதும், யெகோவாவின் எந்தவொரு சட்டத்தையும் அவர் மீறவில்லை.
16. மீட்புவிலையை ஏன் விலைமதிக்க முடியாத ஒரு பரிசு என்று சொல்லலாம்?
16 பரிபூரண மனிதராக இறந்ததன் மூலம், மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இயேசுவால் காப்பாற்ற முடியும். ஆதாம் எப்படி இருந்திருக்க வேண்டுமோ, அப்படி இயேசு இருந்தார். அதாவது, அவர் பரிபூரண மனிதராக இருந்தார், கடவுளுக்கு முழுமையான உண்மைத்தன்மையையும் கீழ்ப்படிதலையும் காட்டினார். (1 தீ. 2:6) நமக்காக அவர் இறந்தார்; அவருடைய மீட்புப் பலியால் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என எல்லாருக்கும் என்றென்றும் வாழும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. (மத். 20:28) கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மீட்புவிலை வழி திறந்திருக்கிறது.—2 கொ. 1:19, 20.
யெகோவா வழி திறந்திருக்கிறார்
17. மீட்புவிலை எதற்கு வழி திறந்திருக்கிறது?
17 மீட்புவிலையைக் கொடுப்பது யெகோவாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது; இருந்தாலும் யெகோவா அதைக் கொடுத்தார். (1 பே. 1:19) நம்மை அவர் ரொம்ப உயர்வாக நினைக்கிறார்; அதனால்தான், தன்னுடைய ஒரே மகனைப் பலியாகக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார். (1 யோ. 4:9, 10) இப்படி, ஒரு விதத்தில், ஆதாமுக்குப் பதிலாக இயேசு நம்முடைய அப்பாவாக ஆனார். (1 கொ. 15:45) என்றென்றும் வாழும் வாய்ப்பை மட்டும் அல்ல, ஒருநாள் கடவுளுடைய குடும்பத்திடம் திரும்பி வரும் வாய்ப்பையும் இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார். மீட்புவிலையின் மூலம், மனிதர்கள் பரிபூரணமானவர்களாக ஆவார்கள்; யெகோவாவும் தன்னுடைய சட்டங்களை மீறாமலேயே அவர்களைத் தன்னுடைய குடும்பத்தில் திரும்பவும் ஏற்றுக்கொள்ள முடியும். யெகோவாவுக்கு உண்மையோடு இருக்கிற எல்லாரும் பரிபூரணமாக ஆகும்போது எவ்வளவு அருமையாக இருக்கும்! கடைசியில், பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாரும் ஒரே குடும்பமாக ஒன்று சேர்வார்கள். நாம் எல்லாரும் கடவுளின் பிள்ளைகளாக இருப்போம்.—ரோ. 8:21.
18. யெகோவா எப்போது “எல்லாருக்கும் எல்லாமுமாக” ஆவார்?
18 நம்முடைய முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் யெகோவாவை வேண்டாமென்று ஒதுக்கினாலும், மக்கள்மீது அன்பு காட்டுவதை யெகோவா நிறுத்தவே இல்லை; அவர்களுக்காக மீட்புவிலையைக் கொடுத்தார். நாம் அபூரணர்களாக இருந்தாலும், நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதை சாத்தானால் தடுக்க முடியாது. மீட்புவிலையின் மூலம், முழுமையான விதத்தில் நாம் நீதிமான்களாக ஆவதற்கு யெகோவா உதவுவார். “மகனை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசம் வைக்கிற” எல்லாருக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! (யோவா. 6:40) நம்முடைய அன்பான, ஞானமான அப்பா யெகோவா தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவார்; மனிதர்கள் பரிபூரணமாக ஆவதற்கு உதவுவார். பிறகு, யெகோவாவே “எல்லாருக்கும் எல்லாமுமாக” ஆவார்.—1 கொ. 15:28.
19. (அ) மீட்புவிலைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்பதால், என்ன செய்ய தூண்டப்படுகிறோம்? (“தகுதியுள்ளவர் யார் என்று நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்!” என்ற பெட்டியைப் பாருங்கள்.) (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?
19 மீட்புவிலைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்பதால், இந்த விலைமதிக்க முடியாத பரிசைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல நாம் தூண்டப்படுகிறோம். மீட்புவிலையின் மூலம், என்றென்றும் வாழும் வாய்ப்பை யெகோவா எல்லா மனிதர்களுக்கும் கொடுத்திருப்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், மீட்புவிலை இதைவிட அதிகத்தைச் சாதித்திருக்கிறது. ஏதேன் தோட்டத்தில் சாத்தான் எழுப்பிய விவாதங்களுக்கு முடிவு கட்டுகிறது. இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.