மத்தேயு எழுதியது
20 “ஏனென்றால், பரலோக அரசாங்கம் திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரர் ஒருவரைப் போல் இருக்கிறது; தன் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வதற்குக் கூலியாட்களை அமர்த்த அவர் விடியற்காலையில் எழுந்துபோனார்.+ 2 ஒரு நாளுக்கு ஒரு தினாரியு கூலி கொடுப்பதாகச் சொல்லி, தன் திராட்சைத் தோட்டத்துக்குக் கூலியாட்களை அனுப்பினார். 3 சுமார் மூன்றாம் மணிநேரத்தில் அவர் மறுபடியும் வெளியே போனபோது, சந்தையில் வேறு சிலர் வேலையில்லாமல் நிற்பதைப் பார்த்தார். 4 அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள், உங்களுக்கு நியாயமான கூலி கொடுக்கிறேன்’ என்று சொன்னார். 5 அதன்படியே அவர்கள் போனார்கள். பின்பு, மறுபடியும் சுமார் ஆறாம் மணிநேரத்திலும் ஒன்பதாம் மணிநேரத்திலும் அவர் வெளியே போய் இதேபோல் செய்தார். 6 கடைசியாக, சுமார் 11-ஆம் மணிநேரத்தில் அவர் வெளியே போய், இன்னும் சிலர் நிற்பதைப் பார்த்தார். அவர்களிடம், ‘வேலை செய்யாமல் ஏன் நாள் முழுவதும் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். 7 அதற்கு அவர்கள், ‘யாருமே எங்களுக்கு வேலை தரவில்லை’ என்று சொன்னார்கள். அப்போது அவர், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்று சொன்னார்.
8 சாயங்காலம் ஆனபோது திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரர் தன்னிடம் வேலை பார்க்கிற மேற்பார்வையாளனிடம், ‘கூலியாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முந்தி வந்தவர்கள்வரை எல்லாருக்கும் கூலி கொடு’+ என்று சொன்னார். 9 அப்போது, 11-ஆம் மணிநேரத்தில் வேலைக்கு வந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தினாரியு கிடைத்தது. 10 அதனால், முந்தி வந்தவர்கள் தங்களுக்கு அதிகமாகக் கிடைக்கும் என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்களுக்கும் ஒரு தினாரியுதான் கிடைத்தது. 11 அதை வாங்கியபோது தோட்டத்துச் சொந்தக்காரருக்கு எதிராக முறுமுறுக்க ஆரம்பித்து, 12 ‘பிந்தி வந்தவர்கள் ஒரு மணிநேரம்தான் வேலை செய்தார்கள்; ஆனால் நாங்கள் கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலை செய்தோம்; இருந்தாலும், அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரே கூலியைக் கொடுக்கிறீர்களே!’ என்றார்கள். 13 அவரோ அவர்களில் ஒருவனிடம், ‘நான் உனக்கு எந்த அநியாயமும் செய்யவில்லை. ஒரு தினாரியுவுக்குத்தானே வேலை செய்ய நீ ஒத்துக்கொண்டாய்?+ 14 உன்னுடைய கூலியை வாங்கிக்கொண்டு போ. உனக்குக் கொடுத்தது போலவே பிந்தி வந்தவர்களுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம். 15 என் பணத்தை என் விருப்பப்படி கொடுக்க எனக்கு உரிமை இல்லையா? நான் பெருந்தன்மையோடு கொடுப்பதைப் பார்த்து நீ பொறாமைப்படுகிறாயா?’+ என்று கேட்டார். 16 இப்படி, பிந்தினவர்கள் முந்தினவர்களாகவும், முந்தினவர்கள் பிந்தினவர்களாகவும் ஆவார்கள்”+ என்று சொன்னார்.
17 இயேசு எருசலேமுக்குப் போகும் வழியில் 12 சீஷர்களைத் தனியாகக் கூப்பிட்டு,+ 18 “நாம் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்; மனிதகுமாரன் முதன்மை குருமார்களிடமும் வேத அறிஞர்களிடமும் ஒப்படைக்கப்படுவார், அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து,+ 19 மற்ற தேசத்தாரிடம் அவரை ஒப்படைத்துவிடுவார்கள்; அவர்கள் அவரைக் கேலி செய்து, முள்சாட்டையால் அடித்து, மரக் கம்பத்தில் அறைந்து கொலை செய்வார்கள்.+ ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார்.
20 பின்பு, செபெதேயுவின் மனைவி தன் மகன்களோடு+ வந்து, ஒரு உதவி கேட்பதற்காக அவர் முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினாள்.+ 21 அவர் அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவள், “நீங்கள் ராஜாவாகும்போது, என்னுடைய மகன்களில் ஒருவனை உங்களுடைய வலது பக்கத்திலும் இன்னொருவனை இடது பக்கத்திலும் உட்கார வைப்பதாக வாக்குக் கொடுங்கள்”+ என்று கேட்டாள். 22 அப்போது இயேசு அவளுடைய மகன்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?”+ என்று கேட்டார். அதற்கு அவர்கள், “முடியும்” என்று சொன்னார்கள். 23 அப்போது அவர், “உண்மைதான், நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்;+ ஆனால், என்னுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உங்களை உட்கார வைக்க எனக்கு அதிகாரம் இல்லை. என் தகப்பன் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர்கள்தான் அங்கே உட்கார முடியும்”+ என்று சொன்னார்.
24 நடந்ததைக் கேள்விப்பட்ட மற்ற பத்துப் பேரும் அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபப்பட்டார்கள்.+ 25 இயேசுவோ சீஷர்களைத் தன்னிடம் கூப்பிட்டு, “மற்ற தேசத்து ஆட்சியாளர்கள் மக்களை அடக்கி ஆளுவதும், உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துவதும் உங்களுக்குத் தெரியும்.+ 26 ஆனால், நீங்கள் அப்படி இருக்கக் கூடாது.+ உங்களில் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும்.+ 27 உங்களில் முதலாவதாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்.+ 28 அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும்+ பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்குமே வந்தார்”+ என்று சொன்னார்.
29 அவர்கள் எரிகோவைவிட்டுப் போய்க்கொண்டிருந்தபோது, மக்கள் கூட்டமாக அவருக்குப் பின்னால் போனார்கள். 30 அப்போது, பார்வையில்லாத இரண்டு பேர் பாதையோரம் உட்கார்ந்திருந்தார்கள். இயேசு அந்த வழியாகப் போகிறார் என்பதைக் கேள்விப்பட்டு, “எஜமானே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்!” என்று சத்தமாகச் சொன்னார்கள்.+ 31 ஆனால், கூட்டத்தார் அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லி அதட்டினார்கள்; இருந்தாலும், “எஜமானே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்!” என்று இன்னும் சத்தமாகச் சொன்னார்கள். 32 அதனால் இயேசு நின்று, அவர்களைக் கூப்பிட்டு, “உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். 33 அதற்கு அவர்கள், “எஜமானே, தயவுசெய்து எங்களுக்குக் கண்பார்வை கொடுங்கள்” என்று சொன்னார்கள். 34 இயேசு மனம் உருகி,+ அவர்களுடைய கண்களைத் தொட்டார்;+ உடனே அவர்கள் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றிப் போனார்கள்.