வெளி ஊழியத்தில் இருக்கையில் மற்றவர்களுக்கு உதவுதல்
1 கிறிஸ்தவ சபை அதன் ஆரம்பத்திலிருந்து சுவிசேஷகர்களாலான ஓர் அமைப்பாக இருந்து வந்திருக்கிறது. இயேசு தம் சீஷர்களை பிரசங்கிக்கும் வேலையில் தனிப்பட்ட விதமாக பயிற்றுவித்தார், மேலும் “அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.” (மாற்கு 6:7; லூக். 8:1) அப்போஸ்தலனாகிய பவுல் “சுவிசேஷ ஊழியத்தில் தன்னோடே கூட மிகவும் பிரயாசப்பட்ட” பிலிப்பு சபையில் இருந்த தன் “உடன் வேலையாட்களைப்” பற்றி குறிப்பிட்டார். (பிலி. 4:3) ஊழியத்தில் எப்பொழுதுமே ஒரு துணை தேவையில்லாமல் இருந்தாலும், நம்மில் அநேகர் மற்றவர்களோடு சேர்ந்து செல்வதை போற்றுகிறோம். (பிர. 4:9) அப்படியென்றால், பிரசங்கிக்கையில் நாம் எவ்வாறு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி உதவி செய்து கொள்ள முடியும்?
2 நம் வெளி ஊழியத்திற்கான கூட்டங்களின் நோக்கங்களில் ஒன்று, புதிய மற்றும் குறைந்த அனுபவமுள்ள பிரஸ்தாபிகளுக்கு உதவி அளிப்பதாகும். (நம் ஊழியம் பக். 77, 97) புதிதாக நியமனம் செய்யப்பட்ட பயனியர்களும்கூட அதிக அனுபவமுள்ள பிரஸ்தாபிகளோடு அல்லது ஒரு மூப்பரோடு அல்லது ஓர் உதவி ஊழியரோடு வேலை செய்ய விரும்பலாம். “உற்சாகம் பரிமாற்றஞ் செய்யப்படுவதற்கு” என்னே ஒரு சிறந்த வாய்ப்பு!—ரோ. 1:12.
3 பாதுகாப்பு காரணங்களுக்காக, பிரஸ்தாபிகள் சில பிராந்தியங்களில் சேர்ந்து வேலை செய்வது நல்லதாகும். அல்லது வெளி ஊழியத்திற்கான கூட்டத்தில் இருக்கும் குறைந்த அனுபவமுள்ள பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்ய, சில சமயங்களில் யாராவது ஒருவரோடு சேர்ந்து செய்ய முன்னமே போட்ட திட்டங்களை மாற்றுவது ஒருவேளை தேவையாயிருக்கும். நாம் அவ்வாறு செய்யும்படி அழைக்கப்பட்டால், ஒரு குறிப்பிட்ட தோழரோடு நாம் வழக்கமாக வேலை செய்தாலும், “பலவீனருக்கு உதவி செய்வதற்கு” தேவையான மாற்றங்களைச் செய்வது உண்மையிலேயே அன்பின் வழியாகும்.—அப். 20:35.
ஒத்திசைவாக வேலை செய்யுங்கள்
4 நாம் மற்றவர்களோடு எப்பொழுதெல்லாம் வெளி ஊழியத்திற்குச் செல்கிறோமோ, ஒரு குழுவாக ஒத்திசைவாக வேலை செய்ய நாம் விரும்புவோம். (1 கொரி. 3:6, 9-ஐ ஒப்பிடுக.) சாட்சி கொடுப்பதில் இருவருமே பங்கு கொள்ளலாம், ஒருவர் விட்டு ஒருவர் மாறி ஒருவேளை வீடுகளில் சம்பாஷணைகளை ஆரம்பிக்கலாம். நம் கூட்டாளி பேசிக் கொண்டிருக்கையில், நாம் பண்போடும், கவனத்தோடும் செவி கொடுப்பது நல்ல பழக்கமாகும்.
5 நம் கூட்டாளி முதன்மைத் தாங்கி பேசும்போது சில சமயங்களில் கலந்தாலோசிப்பில் சேர்ந்து கொள்வது பொருத்தமானதாக இருந்தாலும், இது நல்ல பகுத்துணர்வை தேவைப்படுத்துகிறது. வீட்டுக்காரரோடு நல்ல பாதிப்பைக் கொண்டிருக்கும் காரண காரிய முறையில் விளக்கும் ஒரு தொடரை நாம் குறிக்கிட்டுத் தடுக்க விரும்ப மாட்டோம். ஆனால் குறைந்த அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபி, ஓர் எதிர்ப்பைக் கையாளுவதைக் கடினமாக உணர ஆரம்பித்தால், நன்றாக வழிநடத்தப்பட்ட உதவியை அவர் போற்றுவார் என்பதில் சந்தேகமேயில்லை.—பிர. 4:12.
6 நம் அளிப்பில் முன்னேற்றம் செய்வதற்கான வழிகளைப் பற்றி கலந்தாலோசிப்பதற்கு வீடுகளுக்கு இடையே இருக்கும் நேரத்தை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். நியாயங்கள் புத்தகத்திலுள்ள முன்னுரைகளில் ஒன்றை உபயோகிப்பதும் அல்லது நம் ராஜ்ய ஊழியம் பிரதியில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் ஆலோசனையை பின்பற்றுவதும் அதிக திறம்பட்டதாக நிரூபிக்கும். ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்வது, ஒருவரையொருவர் நன்றாக அறிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் நமக்கு அளிக்கிறது, நம் கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் பிணைப்பை இது பலப்படுத்துகிறது.
7 நம்முடைய ஊழியம் உண்மையிலேயே ஒரு மேன்மையான மதிப்பு வாய்ந்த பொக்கிஷமாக இருக்கிறது. (2 கொரி. 4:1, 7) வெளி ஊழியத்தில் மற்றவர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பம் நமக்கு இருப்பதால் நம் பரிசுத்த வேலைக்கான ஆழ்ந்த போற்றுதலை நாம் ஒருவரிலொருவர் வளர்க்கலாம். அதே சமயத்தில் நாம் உற்சாகத்தை பெற்றுக்கொள்வோம், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வோம். அதிகரிக்கப்பட்ட சந்தோஷம், சாட்சி கொடுப்பதில் அதிக திறம்பட்டவர்களாகுதல், நம்முடைய சகோதர சகோதரிகளோடு திருப்தியளிக்கும் ஓர் ஐக்கிய உணர்வு ஆகியவை இதன் விளைவுகளாகும்.—சங். 133:1.