1993 “தெய்வீக போதனை” மாவட்டமாநாட்டிலிருந்து முழுமையாகப் பயனடையுங்கள்
1 “யெகோவாவே, எனக்கு போதியும்.” (சங். 86:11, NW) இதுதான் கடவுளுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர் ஒவ்வொருவரின் ஊக்கமான மன்றாட்டாக இருக்கவேண்டும். கற்பதை ஒருபோதும் நிறுத்தாமலிருக்கவும் நாம் என்ன கற்றுக்கொள்கிறோமோ அதைப் பொருத்துவதை ஒருபோதும் நிறுத்தாமலிருக்கவும் நாம் தீர்மானமுள்ளவர்களாய் இருக்கிறோம். சிலசமயங்களில் நாம் சரிப்படுத்தப்படவேண்டும்; மேலும் சங்கீதக்காரன் செய்ததுபோல, நம்முடைய இருதயம் பிரிக்கப்படாதபடிக்கு அதை ஒருமுகப்படுத்த கடவுளிடம் நாம் மன்றாடுவது அவசியம். “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டிலுள்ள நிகழ்ச்சிநிரல், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் அழுத்தங்கள் மத்தியில் யெகோவாவை உண்மையுடன் சேவிக்கும் பொருட்டு, நமக்குத் தேவைப்படுகிற நடைமுறையான அறிவுரையையும் சரிப்படுத்தலையும் அளிக்கும்.
2 நான்கு-நாள் மாநாடு: நிகழ்ச்சிநிரல் இந்தியா முழுவதிலும் வசதியான 16 இடங்களில் நடைபெறும். ஜூலை 15, 1993, ஆங்கில பதிப்பு காவற்கோபுரம் மற்றும் மே 15, 1993, இந்திய மொழி காவற்கோபுர பதிப்புகள் இந்த இடங்களின் முழுப் பட்டியலை அளிக்கிறது. ஆங்கிலத்தில் இருப்பதோடுகூட, நிகழ்ச்சிநிரலானது அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அந்தந்த இடங்களில் அளிக்கப்படும். பெரும்பாலான இடங்களில், நிகழ்ச்சிநிரல் வியாழக்கிழமை பிற்பகல் 1:20 மணிக்கு ஆரம்பித்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 4:15 மணிக்கு முடிவடையும்.
3 நமக்காக என்ன வைக்கப்பட்டிருக்கிறது? பல்வகை முறையில் அளிக்கப்படுகிற அபரிமிதமான பலமுள்ள ஆவிக்குரிய உணவு: பேச்சுகள், நடிப்புகள், பேட்டிகள், மற்றும் இரண்டு நாடகங்கள். இந்த இன்றியமையாத அறிவுரையில் எதையும் தவறவிடாதீர்கள்! மேலும், அறிமுகமானவர்களோடு கூட்டுறவைப் புதுப்பிக்கவும் அநேக புதியவர்களோடு கூட்டுறவுகொள்ளவும் நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். அயல்நாட்டு நியமிப்புகளில் சேவைசெய்துவரும் மிஷனரிகள் ஒருவேளை உங்களுடைய மாநாட்டில் ஆஜராவார்கள். இந்த உண்மையுள்ள சகோதர சகோதரிகளை அறிந்துகொள்வதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்களுடைய பிள்ளைகளை சம்பாஷணையில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த மிஷனரிகளின் சந்தோஷமான, சுய-தியாக ஆவியானது, உங்கள் இளம் பிள்ளைகள் முழு-நேர சேவையை ஒரு வாழ்க்கைத் தொழிலாக செய்வதைக்குறித்து சிந்திப்பதற்கான அஸ்திபாரத்தைப் போடக்கூடும்.
4 உங்களுடைய முழு தசமபாகத்தையும் பண்டசாலைக்குள் நீங்கள் கொண்டுவருவீர்களா? மல்கியா 3:10-ல், இஸ்ரவேலர் யெகோவாவை சோதிக்க மனமுள்ளவர்களாயிருந்து முழு தசமபாகத்தைப் பண்டசாலைக்குள் கொண்டுவருவார்களாகில், இடங்கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வாதத்தை ஊற்றுவதாக அவர் வாக்குக்கொடுத்தார்.
5 சிலருக்கு, யெகோவாவை சோதிப்பது என்பது மாநாட்டில் ஆஜராவதற்காக கூடுமானவரை சீக்கிரத்தில் தங்களுடைய முதலாளியை அணுகி விடுமுறை அல்லது விடுப்புக் காலத்திற்காக கேட்பதை அர்த்தப்படுத்தக்கூடும். சிலசமயங்களில் இதைச் செய்வதற்கு சகோதரர்கள் தயங்கியிருக்கின்றனர்; மாநாட்டில் கலந்துகொள்வதற்குத் தங்களுடைய முதலாளி ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என்று நினைத்துக்கொள்கிறார்கள். என்றபோதிலும், ஆவிக்குரிய காரியங்கள் உட்படாத விஷயங்களில், தாங்கள் செய்ய விரும்புவதைத் தங்களுடைய முதலாளிக்குத் தெரியப்படுத்துவதில் சிறிதளவு அல்லது எந்தப் பிரச்னையையும் கொண்டிராமல் இருக்கலாம்.
6 நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளவேண்டும்: அன்பான நண்பர் ஒருவர் மற்றொரு இடத்தில் திருமணம் செய்ய இருந்தாராகில், நாம் நம்முடைய முதலாளியை அணுகி திருமணத்தில் கலந்துகொள்வதற்காக விடுப்புக் கேட்கமாட்டோமா? மேலும் அவர் தயங்குவதாகத் தோன்றினால், நாம் போவது எவ்வளவு காரியத்தை அர்த்தப்படுத்தும் என்பதை நாம் மரியாதையாக விளக்கமாட்டோமா? ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதைவிட யெகோவாவினால் போதிக்கப்படுவது நிச்சயமாகவே அதிக முக்கியமானது! மாநாட்டு நிகழ்ச்சிநிரல் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று நாம் உண்மையில் நம்பினவர்களாக இருப்போமானால், மாநாட்டில் கலந்துகொள்வதற்கு விடுப்பு எடுக்க அனுமதிக்கும்படி நம்முடைய முதலாளியை நம்பவைப்பது எளிதாயிருக்கும்.—யாக். 1:7, 8.
7 இஸ்ரவேலில், யெகோவாவின் வணக்க ஸ்தலத்திற்கான பொருளாதார ஆதரவும் தசமபாகத்தில் உட்பட்டிருந்தது. நம்முடைய நாளில் தசமபாகமானது நேரம், உழைப்பு, பணசம்பந்தமானத் தேவைகள் முதலானவற்றை யெகோவாவின் சேவையிலும் ராஜ்ய வேலையை ஆதரிப்பதிலும் நேரடியாகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. தசமபாகமானது கூட்டங்கள், அசெம்பிளிகள், மற்றும் மாநாடுகள், அதோடுகூட நாம் கூடுவதற்கான இடங்களைப் பராமரிப்பதற்கும் சுத்தம்செய்வதற்கும் நாம் செலவிடும் நேரத்தையும் உட்படுத்துகிறது. யெகோவாவின் ஆவிக்குரிய பண்டசாலைக்குள் முழு தசமபாகத்தைக் கொண்டுவருவதற்கு “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடு நமக்கு அநேக வாய்ப்புகளை அளிக்கும். அவற்றில் சில யாவை?
8 மாநாட்டு நிகழ்ச்சிநிரலை நாம் கவனமாய் செவிகொடுத்துக்கேட்பதன் மூலமும், ஒவ்வொரு ராஜ்யப் பாடலையும் ஆர்வத்தோடு பாடுவதில் பங்குகொள்வதன் மூலமும், நம்முடைய இருதயப்பூர்வமான ஆமென் சொல்வதற்காக ஒவ்வொரு ஜெபத்தையும் கவனமாகக் கேட்பதன்மூலமும் தசமபாகத்தைக் கொண்டுவரலாம்.
9 சத்தியத்தில் நம்முடைய முன்னேற்றமானது நாம் எவ்வாறு செவிகொடுத்துக் கேட்கிறோம் என்பதன்பேரில் பெருமளவு சார்ந்திருக்கிறது. ஒரு பெரிய மண்டபத்தில் அல்லது அரங்கத்தில், நம்மைச் சுற்றியிருப்பவர்கள் செய்துகொண்டிருக்கிற காரியங்களால் கவனம் சிதறடிக்கப்படுவது எளிதாயிருக்கிறது. அதன் காரணமாக நம்முடைய சிந்தனைகளை ஒருமுகப்படுத்த வேண்டும். மாநாட்டிற்கு முழு ஆயத்தத்தோடு, உங்களுடைய பைபிள், பாட்டுப்புத்தகம், பேனா மற்றும் குறிப்புத்தாள், மேலும் அந்த வாரத்தில் படிப்பதற்குரிய காவற்கோபுர இதழ் ஆகியவற்றோடு வருவதைக் குறித்து நிச்சயமாயிருங்கள். குறிப்புகளையும் ஒவ்வொரு பேச்சாளர் பேசும் விஷயங்களையும் பயன்படுத்துகிற வேதவசனங்களையும் குறிப்பெடுத்துக்கொள்வது உதவியாயிருக்கும். குறிப்புகளை சுருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்; அநேக குறிப்புகளை எடுப்பது கவனத்தை ஒருமுகப்படுத்துவதைத் தடைசெய்யக்கூடும். சிறுவர்களுங்கூட தீவிரமாகச் செவிகொடுப்பவர்களாக இருப்பதற்குப் பயிற்றுவிக்கப்படவேண்டும். முடிந்தளவிற்கு நிகழ்ச்சிநிரலை நெருங்கியவிதமாகக் கவனித்துவருவதன்மூலம் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரோடு தசமபாகத்தைக் கொண்டுவரலாம்.
10 சில பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகள் வாசிப்பதற்கோ சங்கத்தின் பிரசுரங்களிலுள்ள படங்களைப் பார்ப்பதற்கோ எதிர்பாக்கும்போது ஒவ்வொரு நாளும் வீட்டில் ஓர் அமைதலான நேரத்திற்காக ஏற்பாடுசெய்கிறார்கள். இந்த நல்ல பயிற்றுவிப்பானது கூட்டங்கள் மற்றும் மாநாடுகளின்போது பிள்ளைகள் அமைதலாக உட்கார்ந்திருப்பதை மிகவும் எளிதாக்குகிறது. முன்மாதிரியான பிள்ளைகளை வளர்த்திருக்கிற பெற்றோர்கள், தங்களுடைய சிறுபிள்ளைகள் கூட்டங்களுக்கு விளையாட்டுப் பொருட்களையோ வர்ணந்தீட்டும் புத்தகங்களையோ கொண்டுவருவதை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்று சொல்லுகிறார்கள். கூட்டங்களில் ஆஜராவதற்கான காரணம் யெகோவாவைத் தொழுதுகொள்வதற்காக என்பதை மிகச் சிறிய பிள்ளைகளுங்கூட கற்றுக்கொள்ளலாம். சிறுபிள்ளைகள் முழு தசமபாகத்தையும் பண்டசாலைக்குக் கொண்டுவருவது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிற பெற்றோர்கள் உண்மையில் போற்றப்படவேண்டும்!
11 மாநாட்டு ஒழுங்கமைப்புக்கு உதவுவதற்காக நம்முடைய நேரத்தையும் உழைப்பையும் மனமுவந்து கொடுப்பதன் மூலமும் தசமபாகத்தை நாம் கொண்டுவரலாம். அநேக இடங்களில் மாநாடு தொடங்குவதற்கு இரண்டொரு நாளுக்கு முன்பாகவே மாநாட்டிற்கு முன் சுத்தப்படுத்துதல் (preconvention cleanup) திட்டமிடப்பட்டிருக்கிறது. நீங்கள் அருகாமையில் வசிப்பீர்களென்றால், முழுக் குடும்பமும் பங்குகொள்வதற்கு ஏன் ஏற்பாடுசெய்யக்கூடாது? சில சகோதரர்கள் தங்களுடைய முன்னேறிவருகிற பைபிள் மாணாக்கர்களைத் தங்களோடு அழைத்துவந்திருக்கிறார்கள்; இதனால் தங்களுடைய முழுக்காட்டுதலுக்கு முன்பேயுங்கூட, யெகோவாவின் வணக்கத்தை ஆதரிப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதை இந்தப் புதியவர்கள் கற்றுக்கொள்ளலாம். மாநாடு தடங்கலின்றி செயல்படும் என்பதை உறுதிப்படுத்த, செய்வதற்கு அநேகம் இருக்கின்றன. ஏன் ஒரு குடும்பமாக மனமுவந்து சேவைசெய்யக்கூடாது?
12 மாநாட்டிற்கு நம்முடைய பணசம்பந்தமான ஆதரவு, தசமபாகத்தைக் கொண்டுவருவதற்கு மற்றொரு வழியாகும். சுத்தமான வணக்கத்தை ஆதரிப்பதற்குப் பொருள் சம்பந்தமான நன்கொடைகள் எவ்வாறு கொடுக்கப்படவேண்டும் என்பதை விவரிக்கையில், இஸ்ரவேலருக்கு யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: “கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.” (உபா. 16:16, 17) மக்கள் அதிகமாகவோ குறைவாகவோ கொடுக்கமுடிந்தவர்களாக இருந்தாலும், முன்கூட்டியே ஆயத்தஞ்செய்யப்பட்ட அவர்களுடைய காணிக்கையானது யெகோவாவுக்குப் பிரியமானதாயிருந்தது. அதைப்போலவே, அநேக சகோதரர்கள், பணமாக இருந்தாலுஞ்சரி பொருளாக இருந்தாலுஞ்சரி, தாங்கள் செய்யக்கூடிய காணிக்கைக்கு ஜெபத்தோடுகூடிய சிந்தனையைக் கொடுக்கிறார்கள். உங்களுடைய சிறுபிள்ளைகள் பெட்டியில் காணிக்கை போடுவதற்கு எப்பொழுதாவது நீங்கள் அனுமதிக்கிறீர்களா?
13 நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய போதனையை அலங்கரியுங்கள்: நம்முடைய நல்ல நடைப்பாங்கு மற்றும் நம்முடைய சிறந்த நடைத்தையின்மூலம் “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்க”லாம். (தீத். 2:10) வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், தெய்வீக போதனையை நம்முடைய வாழ்க்கையில் பொருத்துவதை மாநாட்டிலேயே காண்பிக்கலாம்.
14 நம்முடைய நடைப்பாங்கைப் பற்றியதென்ன? இந்த உலகில் மற்றவர்களுக்கான கரிசனை அரிதாகவே இருக்கிறது. ஆனால் வேதாகம நியமங்களினால் வழிநடத்தப்படுகிற யெகோவாவின் மக்கள், தங்களுடைய நன்மையை அல்ல, தங்களுடைய உடன் மானிடனின் நன்மையையே நினைக்கிறார்கள். (பிலி. 2:4) நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களைக்குறித்து நாம் உணர்வுடையவர்களாய் இருக்கிறோம். உணவுக்காக அல்லது பிரசுரங்களுக்காக நாம் வரிசையில் நிற்கையில் தள்ளவோ நெருக்கவோ மாட்டோம். வயதானவர்களையும் தங்களுடைய பெற்றோர்களுடன் வரிசையில் காத்துக்கொண்டிருக்கிற சிறுபிள்ளைகளையுங்குறித்து கரிசனையுள்ளவர்களாய் இருக்கிறோம்; இவர்களைக் கவனிக்காத வயதுவந்தவர்களினால் சுலபமாக நெருக்கப்படலாம். சிற்றுண்டிச்சாலைகளிலுள்ள வேலையாட்களிடம் நாம் பண்பாகவும் அடக்கமாகவும் நடந்துகொள்கிறோம்; நம்முடைய எதிர்பார்ப்புக்கேற்ப சேவையளிக்கப்படாவிடில், முரட்டுத்தனமாகவோ வற்புறுத்துகிறவர்களாகவோ நடந்துகொள்ளக்கூடாது. அளிக்கப்பட்ட சேவைக்காக நியாயமான டிப்ஸ் விட்டுவருகிற பழக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கு நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம்.
15 நம்முடைய தேவபக்திக்குரிய நடத்தை நம்மைச் சுற்றியிருப்பவர்கள்மீது உண்மையான பாதிப்பைக் கொண்டிருக்கிறது. கடந்த வருடத்தில் மாநாடு நடந்த நகரம் ஒன்றில், 21 வருடங்களாகக் காவலர் தொகுதியோடிருந்த ஒரு போலீஸ் இதைச் சொன்னார்: “நான் உங்களுடைய மக்களின் நடத்தையினால் கவரப்பட்டிருக்கிறேன். [அவர்கள்] குறிப்பிடத்தக்கவர்கள்; ஒருவரால் கேட்கப்படாமலேயே குப்பையை அவர்கள் எடுக்கிறார்கள், அவர்கள் ஒழுங்காக இருக்கிறார்கள், மேலும் உங்களுடைய மாநாடு நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.” அவர் மேலும் சொன்னார்: “உங்களுடைய மக்கள் எங்களைப் பார்க்கும்போது, அவர்கள் புன்முறுவல் செய்கிறார்கள். அது ஒரு நல்ல அடையாளமாயிருக்கிறது. நாங்கள் அதை எதிர்பார்க்கிறோம். அது சிநேகபான்மையான தன்மைக்கும் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதற்கும் அடையாளக்குறியாக இருக்கிறது. பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரோடு எவ்வாறு இருக்கிறார்கள் என்பதையும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையுங்கூட நாங்கள் கவனிக்கிறோம். நான் கவரப்பட்டிருக்கிறேன் என்று சொல்வதை நம்புங்கள். இங்கு நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ந்து அனுபவிக்கத்தக்கதாய் இருக்கிறது.”
16 சில அதிகாரிகள் தங்களுடைய நகரத்தில் ஒரு மாநாடு நடத்தும்படி அழைப்புக்கொடுப்பதற்காக பெத்தேலுக்கு ஒரு விசேஷப் பயணம் செய்தார்கள். சங்கம் அவர்களுடைய அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்டது, அந்தக் கூட்டுரிமைக்குழு உறுப்பினர்கள் ஏமாற்றப்படவில்லை. அந்த நகர துணை மேலாளர் சொன்னார்: “உங்களைப் போன்ற மதிப்புவாய்ந்த தொகுதி எங்களுடைய நகரத்தில் மாநாடு நடத்துவதைக் குறித்து நாங்கள் கிளர்ச்சியூட்டப்படுகிறோம். உங்களை இங்கு கூட்டிச்சேர்க்க நாங்கள் பெருமுயற்சிசெய்தோம் . . . அதைவிட மகிழ்ச்சி வேறொன்றுமில்லை.” தங்களுடைய நல்நடத்தையின்மூலம், ஒவ்வொரு சகோதர சகோதரியும் அங்கு கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த சாட்சிக்குக் காரணமாயிருந்தார்கள்.
17 உங்களுடைய முன்மாதிரியான நடத்தையின்மூலம், நீங்கள் தனிப்பட்ட விதமாக நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய போதனையை அலங்கரிப்பீர்களா? அதைச் செய்வதற்கு இங்கு அநேக வழிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன:
உடையும் சிகையலங்காரமும்: ஒரு மாநாட்டில் நாம் கலந்துகொண்டிருக்கிற சமயத்தின்போது, நாம் விடுமுறையில் இருப்பதாக நம்மை நினைத்துக்கொள்ளக்கூடாது. பதிலாக, நாம் யெகோவாவால் போதிக்கப்படுவதற்காக நம்மையே அவருக்கு அளிக்கிறோம். அதன் காரணமாக, ராஜ்ய மன்றத்தில் நாம் கூட்டங்களுக்குக் கூடிவரும்போது உடுத்தி வருவதுபோல உடுத்தவேண்டாமா? (1 தீ. 2:9, 10) கூட்டங்கள் முடிந்தபிறகு நாம் எதை உடுப்போம் என்பதற்கும் நாம் கவனமானச் சிந்தனைசெலுத்தவேண்டும். நாம் தங்கியிருக்கிற இடங்களுக்குத் திரும்பிச்செல்கையில், நம்முடைய வயது என்னவாக இருந்தாலுஞ்சரி, நம்முடைய அடக்கமான, கண்ணியமான மாநாட்டு உடையை அணிவதற்கு பதிலாக, ஒழுங்கீனமாக உடுத்திக்கொண்டு, உலகப்பிரகாரமான ஆட்களைப்போல பறட்டைத் தலையோடுகூடிய தோற்றத்தை அளிப்பது நமக்கு பொருத்தமானதாய் இருக்குமா? நம்முடைய கூட்டத்திற்கான ஆடைகள் நம் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, ஓர் உடையின் பாணியே தவிர வேறொன்றுமில்லை என்ற எண்ணப்பதிவைக் கொடுக்குமல்லவா? நாம் யெகோவாவின் நாமத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்; நியாயமான குற்றச்சாட்டு சத்தியத்தின் முறைமைக்கு எதிராகக் கொண்டுவரப்படாதபடி நாம் ஒவ்வொருவரும் கவனமாயிருக்கவேண்டும்.
முழுக்காட்டுதல் பெறுபவர்கள் இத்தகைய பரிசுத்தமான சந்தர்ப்பத்தில் உலகப்பிரகாரமான சுலோகங்கள், வார்த்தைகள், அல்லது வியாபார சம்பந்தமான விளம்பரம் செய்தலுடன்கூடிய T-சர்ட்டுகளை அணிவது பொருத்தமற்றதாய் இருக்கும் என்பது நினைப்பூட்டப்பட வேண்டும். முழுக்காட்டுதலுக்கான கேள்விகள் நன்கு முன்கூட்டியே மறுபார்வை செய்யப்படுவதையும் ஒவ்வொரு மாணாக்கரும் முழுக்காட்டுதலுக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதை முன்பாகவே சொல்லப்படுவதைக் குறித்தும் மூப்பர்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். (கேள்விகளைக் கேட்கையில், முழுக்காட்டுதலுக்கான தகுந்த, அடக்கமான ஆடையைக் குறித்து ஆலோசனைகளைக் கொடுப்பது பொருத்தமான சமயமாயிருக்கலாம்.)
தங்கும் விடுதிகள்: உங்களுடைய தங்கும் விடுதியில் பெயர் பதிவுசெய்ய வரும்போது ஆவியின் கனிகளை வெளிப்படுத்திக் காட்டுங்கள். தங்கும் விடுதியின் அலுவலகப் பணியாள் குறுகிய நேரத்தில் ஒரு பெரிய தொகுதியைச் சமாளிப்பதற்கு தயார் நிலையில் இல்லாமலிருக்கலாம். பொறுமையாயிருங்கள், ஒற்றுணர்வைக் கொண்டிருங்கள், தகுந்த அளவில் டிப்ஸ் அளியுங்கள்.
தங்கும் விடுதிக்குச் சொந்தமான பொருட்களுக்கு மதிப்பைக் காட்டுவதன்மூலமும் வசதிகளைப் பயன்படுத்துவது சம்பந்தமான விதிகளுக்குக் கீழ்ப்படிவதன்மூலமும் பிள்ளைகள் தங்கள் பங்கைச் செய்யலாம். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடம் எதிர்பார்க்கிற நடத்தையைப் பற்றி மாநாட்டிற்கு முன்பாக அவர்களோடு மறுபார்வைசெய்வதற்கு கொஞ்சம் நேரத்தைச் செலவிடுவது உதவியாயிருக்கும். நடத்தையைப் பற்றிய கிறிஸ்தவ தராதரங்களைப் பின்பற்றுவதைக் குறித்து அவர்களுடைய தனிப்பட்ட உத்தரவாதத்தை நினைப்பூட்டுங்கள்.
பதிவுசெய்யும் கருவிகள்: வீடியோ கேமராக்கள் அனுமதிக்கப்படுகிறபோதிலும், நீங்கள் மற்றவர்களைக்குறித்து கரிசனையுள்ளவர்களாய் இருப்பீர்கள் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நிகழ்ச்சிநிரலை படம்பிடித்துக்கொண்டிருக்கையில், மாநாட்டிற்கு வந்திருப்பவர்களை மறைப்பது அன்பற்றதாய் இருக்கும். உங்களுடைய இருக்கையிலிருந்து உங்களுக்கு விவேகமாகப் பதிவுசெய்ய முடியுமாகில், நீங்கள் அவ்விதமாகச் செய்வதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்றபோதிலும், மாநாட்டின் மின்சார அல்லது ஒலிப்பதிவு கருவிகளோடு எந்த கேமராக்களோ பதிவுசெய்யும் கருவிகளோ இணைக்கப்படக்கூடாது, நடைபாதையிலோ ஜனநெருக்கமான இடங்களிலோ சாதனத்தை வைக்கவுங்கூடாது.
இருக்கைகள்: உங்களுடைய நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களுக்கும் உங்களுடைய வாகனத்தில் பயணஞ்செய்தவர்களுக்கு மட்டுமே இருக்கைகளைப் பிடித்துவைக்கலாம் என்பதை தயவுசெய்து மனதிற்கொள்ளுங்கள். சில மாநாடுகளில் வயதானவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் தனிப் பிரிவுகள் இருக்கும். தயவுசெய்து வயதானவர்களைக் குறித்து கரிசனையுள்ளவர்களாய் இருங்கள். கடந்த காலங்களில், வயதானவர்களுக்கான பிரிவிலுள்ள இருக்கைகளை இளைஞர் எடுத்துக்கொண்டதினால், வயதான சகோதரர்கள் சிலர் இருக்கைகளுக்காக அசெளகரியமான இடங்களில் தேடிக்கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. ஒவ்வாமைகள் (allergies) போன்ற பிரச்னைகளுடன் இருப்பவர்களுக்காக தனி இடங்கள் அல்லது அறைகளுக்கான வேண்டுகோள்களுக்கு ஏற்பாடு செய்வது எங்களுக்கு இயலாத காரியமாயிருக்கும் என்பதைக்குறித்து நாங்கள் வருந்துகிறோம்.
தனிப்பட்ட பொருட்கள்: நீங்கள் மாநாட்டிற்கு கொண்டுவருகிற எந்தத் தனிப்பட்ட பொருட்களையும் குறைந்தபட்ச அளவிற்கு வைத்துக்கொள்ளும்படி ஆலோசனைக் கொடுக்கப்படுகிறது. உங்களுடைய இருக்கையின்கீழ் ஒரு பொருளை வைக்கமுடியவில்லையென்றால், அதை உங்களுடைய வீட்டிலோ வாகனத்தின் பெட்டியிலோ விட்டுவருவது நல்லது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, நடைபாதையில் பெரிய தண்ணீர் கூஜாக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் உங்களுடைய இருக்கைக்கு அடுத்தாற்போல் அவற்றை வைத்தால், ஒருவரது இருக்கை ஒன்று பறிக்கப்படலாம்.
பிரசுரங்களும் உணவு சேவையும்: ஒன்றும் வீணாய்ப்போகாமல் இருப்பதைப் பார்த்துக்கொள்வதன் மூலம், கடவுளுடைய ஈவுகளுக்கான மதித்துணர்வைக் காட்ட நாம் அனைவரும் விரும்பவேண்டும். (யோவா. 6:12) உங்களுக்குத் தேவையானவற்றிற்கு மேலாக எடுக்கப்படவில்லை என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடம் உணவை வீணாக்காமலிருப்பதைக்குறித்துப் பேசவேண்டும். பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்போது, தயவுசெய்து மற்றவர்களுக்கு அன்பான அக்கறையைக் காட்டுங்கள்.
18 மற்றவர்களுக்கான அன்பான அக்கறையின்மூலம், ஒவ்வொரு நாளும் முன்னதாக வந்துசேருவதற்குத் திட்டமிடுங்கள், விசேஷமாக வியாழக்கிழமை; அன்று வாகனத்தை நிறுத்துமிடத்தையும் இருக்கையையும் கண்டுபிடிப்பதற்கு ஒருவேளை வழக்கமாக எடுக்கும் நேரத்தைவிட அதிக நேரமெடுக்கலாம்.
19 யெகோவாவினால் போதிக்கப்படுவதற்கு நாம் எவ்வளவு சிலாக்கியம் பெற்றவர்கள்! “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டை ஆதரிப்பதற்கு இந்த ஆண்டில் நம்முடைய நேரத்தை, உழைப்பை, பொருட்சம்பந்தமான காரியங்களைப் பயன்படுத்துவது, நமக்கும் நம்முடைய குடும்பங்களுக்கும் நிலைத்திருக்கும் ஆவிக்குரிய நன்மைகளில் விளைவடையும்.
மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
சரியான நடத்தை: மாநாட்டில் கலந்துகொள்கிற அனைவரும் சரியான நடத்தையைக் கடைப்பிடித்து, கூடுகிற இடத்தை “கடவுளுடைய வீடு” என்பதாக பயபக்தியுடன் நோக்குவது முக்கியமாயிருக்கிறது. (சங். 55:14, NW) பேச்சுகள், நாடகங்கள், பாட்டுகள், விசேஷமாக ஜெபங்கள் ஆகியவற்றின்போது, நிகழ்ச்சிநிரலுக்கு செவிகொடுப்பதிலிருந்து மற்றவர்களின் கவனத்தைத் திருப்புகிற எதையாவது செய்வதைத் தயவுசெய்து தவிருங்கள். பேசப்படுவதன்பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்த முயற்சிசெய்கிறவர்களுடைய கவனத்தைச் சிதறடிக்கிற முறையில் தேவையில்லாமல் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருப்பது, பேசிக்கொண்டிருப்பது, அல்லது ஃபிளாஷ் கேமராக்கள் அல்லது வீடியோ பதிவுக் கருவிகளைப் பயன்படுத்துவது ஆகியவை மரியாதையைக் காட்டுவதாய் இருக்காது. நாம் உண்மையில் தெய்வீக போதனையைப் போற்றுகிறோம், மேலும் யெகோவாவால் போதிக்கப்படுவதற்காக மாநாட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதை நம்முடைய முன்யோசனையும் நல்நடத்தையும் மெய்ப்பித்துக்காட்டும்.
அறைவசதி: மாநாட்டின் அறைவசதி இலாக்காவோடு உங்களுடைய ஒத்துழைப்பானது மிக அதிகமாகப் போற்றப்படுகிறது. சபை காரியதரிசிகள், பொருத்தமான மாநாட்டு விலாசத்திற்கு அறைவசதி தேவைக்கான படிவங்கள் உடனடியாக அனுப்பப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் ஏற்கெனவே முன்பதிவை உறுதிப்படுத்தவில்லையாகில், தயவுசெய்து உடனடியாக அவ்விதமாகச் செய்யுங்கள். நீங்கள் உங்களுடைய முன்பதிவை ரத்துசெய்வதை அவசியமாகக் காண்பீர்களானால், நீங்கள் மாநாட்டு தலைமையலுவலக விலாசத்திற்கு எழுதவோ ஃபோன்செய்யவோ வேண்டும். கூடுமானால், அறை வேறு எவருக்காவது கிடைக்கும்பொருட்டு, முடிந்தவரை வெகு சீக்கிரத்தில் அந்த ஹோட்டலுக்கு அவ்விதமாகச் செய்யவேண்டும். உங்களுக்குத் தனியாக இடவசதி கொடுக்கப்பட்டிருக்குமானால், உங்களுக்கு இடவசதியளித்த நபருக்கும் அதோடு மாநாட்டு தலைமையலுவலகத்துக்கும் முடிந்தவரை விரைவிலேயே தெரியப்படுத்துங்கள்.
முழுக்காட்டுதல்: முழுக்காட்டுதல்பெறுபவர்கள் சனிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பாக தங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதியிலுள்ள இருக்கைகளில் இருக்கவேண்டும். முழுக்காட்டப்பட திட்டமிடுகிற ஒவ்வொருவரும் அடக்கமான குளியல் உடையும் துவாலையும் கொண்டுவரவேண்டும். பேச்சாளரின் முழுக்காட்டுதல் பேச்சுக்கும் ஜெபத்திற்கும் பிறகு, கூட்டத்தின் அக்கிராசனர் முழுக்காட்டுதல்பெறுபவர்களுக்கு சுருக்கமான அறிவுரைகள் கொடுத்து, பாடவிருக்கும் பாட்டைச் சொல்லுவார். கடைசி வரிக்குப் பிறகு, அட்டென்டண்டுகள் முழுக்காட்டுதல்பெறுபவர்களை முழுக்காட்டுவதற்கான இடத்திற்கு அல்லது அவர்களை அங்குக் கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு வழிநடத்திச்செல்வர். முழுக்காட்டுதலானது ஒருவருடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாகத் தனிப்பட்ட நபருக்கும் யெகோவாவுக்குமிடையே செய்யப்படுகிற நெருங்கிய மற்றும் தனிப்பட்ட விஷயமாக இருக்கிற காரணத்தினால், கூட்டாளி முழுக்காட்டுதல்கள் (partner baptisms) என்றழைக்கப்படுகிற இரண்டு அல்லது அதற்கு அதிகமான முழுக்காட்டுதல்பெறும் நபர்கள், முழுக்காட்டப்படுகையில் கட்டித்தழுவுவதற்கோ கைகளைப் பிடித்துக்கொள்வதற்கோ எந்த ஏற்பாடும் இல்லை.
வாலண்டியர் சேவை: ஒரு மாவட்ட மாநாட்டின் தடங்கலற்ற இயக்கத்திற்கு வாலண்டியர் உதவி தேவைப்படுகிறது. மாநாட்டில் இரண்டு நாட்கள் மட்டுமே நீங்கள் வேலைசெய்யக்கூடியவர்களாய் இருந்தாலுங்கூட, உங்களுடைய சேவையானது போற்றப்படும். நீங்கள் உதவிசெய்யக்கூடுமானால், தயவுசெய்து மாநாட்டிலுள்ள வாலண்டியர் சேவை இலாக்காவிற்கு தெரிவியுங்கள். பதினாறு வயதிற்குக்கீழுள்ள பிள்ளைகளுங்கூட, மாநாட்டின் வெற்றிக்கு உதவலாம், ஆனால் அவர்கள் பெற்றோரோடு அல்லது மற்ற பொறுப்புள்ள வயதுவந்தவரோடு வேலைசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அடையாள அட்டைகள்: விசேஷமாக வடிவமைக்கப்பட்ட அடையாள அட்டைகளை மாநாட்டிலும், மாநாடு நடக்கும் இடத்திற்கு பயணஞ்செய்யும்போதும் திரும்பிச்செல்லும்போதும் தயவுசெய்து அணியுங்கள். பயணஞ்செய்யும்போது இது ஒரு நல்ல சாட்சிகொடுப்பதை அடிக்கடி நமக்கு கூடியகாரியமாக்குகிறது. தெளிவாக எழுதப்பட்ட ஓர் அடையாள அட்டையின்மூலம் மாநாட்டுப் பிரதிநிதியாக அடையாளப்படுத்தப்படுவது, எளிதாக்கப்பட்ட உணவு சேவை ஏற்பாட்டின் இயக்கத்தை எளிதாக்கும். அடையாள அட்டைகள் மாநாடுகளில் கிடைக்காததால், உங்களுடைய சபையின்மூலம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
தனிப்பட்ட விதமாக அடையாளங்காட்டுதல்: “தெய்வீக போதனை” மாநாட்டின் லேபில் அட்டையோடுகூட, மருத்துவ உதவிக்குறிப்பு அட்டையை (Medical Directive Card) ஒவ்வொருவரும் தன்னோடு வைத்திருக்கும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களும் பயனியர்களுங்கூட அவர்களுடைய அடையாள அட்டைகளைத் தங்களோடு வைத்திருக்கவேண்டும்.
எச்சரிக்கை: நீங்கள் உங்களுடைய வாகனத்தை எங்கு நிறுத்தினாலுஞ்சரி, எல்லா சமயங்களிலும் நீங்கள் அதைப் பூட்டி வைக்கவேண்டும், பார்க்கக்கூடிய விதமாக எந்தப் பொருளையும் ஒருபோதும் உள்ளே விட்டுவராதேயுங்கள். கூடுமானால் உங்களுடைய உடைமைகளை பின்புறப்பெட்டிக்குள் பூட்டி வையுங்கள். மேலும், பெரிய கூட்டமாகக் கூடிவருவதினால் கவரப்படும் திருடர்களுக்கும் பிக்பாக்கெட் செய்பவர்களுக்கும் எதிராக பாதுகாப்பாயிருங்கள். மாநாட்டில் இருக்கைகளின்மீது விலைமதிப்புள்ள எந்தப் பொருளையும் விட்டுவராமலிருப்பதை இது உட்படுத்துகிறது. மாநாட்டுப் பகுதியிலிருந்து பிள்ளைகளை ஏமாற்றி கொண்டுசெல்லும் பழிபாவங்களுக்கு அஞ்சாத தனிப்பட்ட நபர்கள் முயற்சிசெய்வதைப் பற்றிய சில அறிக்கைகள்கூட இருந்தன. தயவுசெய்து கவனமாயிருங்கள்.
சில தங்கும் விடுதிகள் ஒழுக்கயீனமான காரியங்களடங்கிய அல்லது ஆபாசமானது போன்றவற்றையுங்கூட டெலிவிஷன் திரைகளில் பார்க்க எளிதான வாய்ப்பளிப்பதாக அறிக்கைசெய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய இடங்களில் தங்கியிருக்கிற பிள்ளைகள், மேற்பார்வையில்லாமல் டிவி பார்ப்பதைத் தடைசெய்வது அவசியம் என்பதை இது முக்கியப்படுத்திக்காட்டுகிறது.
சில சகோதரர்களும் அக்கறையுள்ள ஆட்களும் நிகழ்ச்சிநிரல் ஆரம்பிக்கும் நேரங்களையும் மற்ற விஷயங்களையும் பற்றிய தகவலை மாநாட்டு மன்ற நிர்வாகத்தை கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து இதைச் செய்யாதிருங்கள். உங்களுக்குத் தேவையானத் தகவலை காவற்கோபுரம் அல்லது நம் ராஜ்ய ஊழியத்தில் காணமுடியவில்லையென்றால், ஜூலை 1993 நம் ராஜ்ய ஊழியத்தில் காணப்படுகிற பட்டிலிலுள்ள பொருத்தமான மாநாட்டு விலாசத்திற்கு நீங்கள் எழுதவேண்டும்.