நம் ராஜ்ய மன்றத்தை பழுதின்றி பராமரிப்போமாக
1 யெகோவாவின் சாட்சிகளுக்கு உலகெங்கும் 94,000-க்கும் அதிகமான சபைகள் உள்ளன. இச்சபைகளில் பெரும்பாலானோர் பைபிளைப் படிப்பதற்கும் கிறிஸ்தவ கூட்டுறவு கொள்வதற்கும் ராஜ்ய மன்றத்திற்கு வருகின்றனர்; இம்மன்றமே உள்ளூரில் தூய வணக்கத்தின் மையமாக திகழ்கிறது.
2 அட்டவணைப்படி கிரமமாக சுத்தம் செய்தல்: ராஜ்ய மன்றத்தை பராமரிப்பதற்காக செய்யும் வேலை நம் பரிசுத்த சேவையின் முக்கிய பாகமாகும். நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 61-ல் குறிப்பிடுவதாவது: “பண சம்பந்தமாய் ராஜ்ய மன்றத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், அதைச் சுத்தமாயும், நல்ல தோற்றத்துடனும், பழுதுபார்க்கப்பட்ட நல்நிலையிலும் வைத்து வருவதற்குத் தங்கள் சேவைகளையுங்கூட தாங்களாக முன்வந்து அளிப்பதை ஒரு சிலாக்கியமாகச் சகோதரர்கள் கருத வேண்டும். உள்ளேயும் வெளியேயும், ராஜ்ய மன்றமானது யெகோவாவுடைய அமைப்பின் ஒரு தகுந்த பிரதிநிதித்துவமாக இருக்க வேண்டும்.” வாரத்தில் பல முறை ராஜ்ய மன்றத்தை பயன்படுத்துவதால் தவறாமல் அதை சுத்தம் செய்து பராமரிப்பது அவசியம். பொதுவாக இவ்விஷயங்களை ராஜ்ய மன்றத்தை உபயோகிக்கும் சபையை(களை) சேர்ந்தோர் மனமுவந்து கவனித்துக் கொள்கிறார்கள். பூர்வ காலங்களைப் போலவே இன்றும் வணக்கத்திற்காக கூடிவரும் இடத்தை “பழுதுபார்த்துச் சீர்ப்படுத்துகிறதற்கு” யெகோவாவின் ஊழியர்கள் ஊக்கமாய் உழைக்க வேண்டும்.—2 நா. 34:10.
3 ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வதற்கான வாராந்தர அட்டவணையை அறிவிப்பு பலகையில் போட வேண்டும். புத்தகப் படிப்பு தொகுதிகள் மாறி மாறி மன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும்; ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டியவற்றை பட்டியலைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். வேலை செய்ய முடிந்த எல்லாருமே ராஜ்ய மன்றத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்வதற்கு வாராவாரம் இதில் பங்கேற்க வேண்டும். பெற்றோர் மேற்பார்வையில் பிள்ளைகளும் இதில் உதவலாம்; இவ்வாறு செய்வதன் மூலம் இந்த ஏற்பாட்டிற்கு மதித்துணர்வை காண்பிக்க அவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம். விசேஷமாக, ஒரு ராஜ்ய மன்றத்தை பல சபைகள் பயன்படுத்துகையில் அவற்றிற்கு இடையே நல்ல ஒத்துழைப்பு அவசியம்; அப்போதுதான் நம் வணக்கத்தின் இந்த முக்கிய அம்சத்திற்கு கவனம் செலுத்தும் பொறுப்பு ஒரு சிலரது தோள்களில் மட்டுமே விழாது.
4 செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போட்டு, முடிந்தால் அதை சுத்தம் செய்யும் பொருட்கள் உள்ள இடத்திலேயே வைக்கலாம். கூட்டுவது, ஜன்னல்களைத் துடைப்பது, புத்தகம் மற்றும் பத்திரிகை கவுன்ட்டர்களை துடைப்பது, குப்பைக் கூடைகளில் உள்ளவற்றை களைந்து சுத்தம் செய்வது, தரையை ஈரத்துணியால் துடைத்தெடுப்பது, கண்ணாடிகளைத் துடைப்பது போன்றவை வாரா வாரம் செய்ய வேண்டியவை என இந்தப் பட்டியலிலிருந்து தெரிந்துகொள்ளலாம். மரத்தால் செய்யப்பட்ட பர்னிச்சர்களை பாலிஷ் செய்வது, சேர்கள், கர்ட்டன்கள், ஃபேன்கள், லைட்டுகள் ஆகிய அனைத்தையும் துப்புரவாக சுத்தம் செய்வது போன்ற வேலைகளை ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எல்லா கெமிக்கல்களையும் குழந்தைகளின் கைக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்; அவற்றின்மீது தெளிவான லேபில்களையும் ஒட்டி வைக்க வேண்டும். கெமிக்கல்களை பயன்படுத்தும் முறையையும் சுருக்கமாக குறிப்பிட வேண்டும்.
5 ராஜ்ய மன்றத்தில் பாதுகாப்பிற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். (உபா. 22:8) இது சம்பந்தமாக, பக்கம் 4-ல் உள்ள பெட்டியில் சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்; அப்படி செய்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
6 ராஜ்ய மன்றத்தை பராமரித்தல்: ராஜ்ய மன்ற பராமரிப்பை கவனிக்கும் பொறுப்பு மூப்பர் குழுவிற்கு உள்ளது. பொதுவாக, இதன் வேலைகளை ஒருங்கிணைக்க ஒரு மூப்பரோ உதவி ஊழியரோ நியமிக்கப்படுகிறார். ராஜ்ய மன்றத்தின் அன்றாட வேலைகளை அவர் ஒழுங்கமைக்கிறார்; அது சுத்தமாகவும் செப்பனிடப்பட்டதாகவும் இருக்கிறதா, சுத்தம் செய்யத் தேவையான எல்லா பொருட்களும் கைவசம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார். மன்றத்தின் உள்ளும் புறம்பும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எதுவும் இல்லாதிருப்பது முக்கியம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சபைகள் ஒரே மன்றத்தை பயன்படுத்துகையில், கட்டடத்தையும், அந்த இடத்தையும் பராமரிப்பதை ஒழுங்கமைப்பதற்கென ஓர் ஆலோசனைக் குழுவை மூப்பர் குழுக்கள் ஏற்படுத்துகின்றன. மூப்பர் குழுக்களின் வழிநடத்துதலின் கீழ் இந்த ஆலோசனைக் குழுவினர் செயல்படுகிறார்கள்.
7 வருடா வருடம், ராஜ்ய மன்றம் கவனமாக ஆராயப்படுகிறது. அதன் பிறகு, கட்டாயம் பழுது பார்க்க வேண்டியவற்றை முழுமையாக செய்வதற்கு மூப்பர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். பழுது பார்க்கும் வேலையில் உதவி செய்ய சபையார் அழைக்கப்படலாம். சிறு சிறு விஷயங்களாக இருந்தாலும் அதிக கவனம் செலுத்தி, சரிசெய்ய வேண்டியவற்றை உடனுக்குடன் செய்வதற்கு எல்லாருமே விழிப்புடன் இருக்க வேண்டும்.
8 சபை நிதியை ஞானமாக பயன்படுத்துதல்: ராஜ்ய மன்றத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் பெரும்பாலான வேலைகளை வாலண்டியர்களே செய்கிறார்கள். சுயதியாகத்துடன் அவர்கள் செய்யும் வேலைகள், அவர்களுடைய அன்பை படம்பிடித்துக் காட்டுகின்றன; செலவுகளை குறைக்க பெரிதும் உதவுகின்றன. ராஜ்ய மன்றத்திற்கு உள்ளேயோ வெளியேயோ பெரிதளவில் பழுதுபார்க்க நேரிட்டால் அதைக் கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்க வேண்டியிருக்கலாம்; அப்போது, முதலில் அவ்வேலை மற்றும்/அல்லது தேவையான பொருட்கள் பற்றிய முழு விவர பட்டியலை மூப்பர் குழுவினர் தயாரிக்க வேண்டும். இந்தப் பட்டியலை நிறைய நகல்கள் எடுத்து அவற்றை வெவ்வேறு சப்ளையர்களுக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான் எல்லா சப்ளையர்களும் என்ன தேவை என்பதை ஒரேவிதமாக புரிந்துகொண்டு பதிலளிக்க முடியும். அவ்வாறு பலரிடமிருந்து செலவு பற்றிய விவரத்தை எழுத்தில் பெற்ற பிறகு, தங்களுக்கு திருப்தி தரும் மிகச் சிறந்த சப்ளையரை மூப்பர்கள் தெரிந்தெடுக்கலாம். ஒரு சகோதரர் வேலையை முடித்து தருவதாகவோ குறிப்பிட்ட விலையில் பொருட்களை சப்ளை செய்வதாகவோ சொன்னால்கூட இதே முறையைத்தான் பின்பற்ற வேண்டும்.
9 ராஜ்ய மன்றத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் பயன்படுத்தினால், ஆலோசனைக் குழு அதற்கென்று தனியாக நிதியை வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சபையின் மூப்பர் குழுவிடமும் எழுத்து வடிவில் சமர்ப்பிக்கப்பட்ட மாதாந்தர ராஜ்ய மன்ற செலவுக்கான தொகையை ஆலோசனைக் குழு கொடுக்க வேண்டும்; இப்படியாக ராஜ்ய மன்ற நிதி செலவிடப்படும் விதம் மூப்பர்களுக்கு தெரிந்திருக்கும். சபை நிதி சரிவர செலவிடப்படுவதை கண்காணிக்கும் பொறுப்பு மூப்பர்களுக்கே உள்ளது.
10 பெரியளவில் பழுதுபார்த்தலும் புதுப்பித்தலும்: ராஜ்ய மன்றத்தை பெரியளவில் பழுது பார்க்கவோ, புதுப்பிக்கவோ தேவை இருப்பதை ஆலோசனைக் குழு அறிகையில் அதை மூப்பர் குழுக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட தேவை இருப்பதை முடிவு செய்தாலோ, அந்த ராஜ்ய மன்றத்தில் கூடும் சபைகள் தவிர மற்ற சபைகளிடமிருந்தும் உதவி தேவைப்பட்டாலோ, இது தொடர்பான ஆலோசனைகளுக்கு மூப்பர் குழுக்கள் கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும். முடிந்தால், பல சபைகள் தங்களிடமுள்ள பணத்தையும் மற்ற பொருட்களையும் ஒன்று திரட்டி வேலையைத் தொடங்குவது நலம். அவை ஏற்கெனவே இருக்கும் மன்றத்தை விரிவுபடுத்தலாம், அல்லது ஒரு பெரிய மன்றத்தை கட்டலாம்; இவ்வாறு கட்டுவது இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் பல சபைகள் கூடிவர உதவலாம்.
11 ராஜ்ய மன்றத்தில் கூடிவரும் இந்த அரிய வாய்ப்பை நாம் எவ்வளவாய் மதித்துணருகிறோம்! நம் கூட்டங்களை ஒருபோதும் புறக்கணிக்கவோ, அசட்டை செய்யவோ மாட்டோம். நம்மை உற்சாகப்படுத்துவதற்காக செய்யப்படும் இந்த ஏற்பாடு வெற்றிகரமாக நடக்க நாம் அனைவருமே உதவலாம். ராஜ்ய மன்ற பராமரிப்பில் முழுமையாக பங்கு பெறுவதே இதற்கான வழியாகும். இது தூய வணக்கத்தை மேம்படுத்தி, யெகோவாவின் பெயரை கனப்படுத்துகிறது. ஆகவே, நம் ராஜ்ய மன்றத்தை பழுதற்ற நிலையில் வைக்க தீர்மானமாய் இருப்போமாக.
[கேள்விகள்]
1. ராஜ்ய மன்றத்தின் நோக்கம் என்ன?
2. ராஜ்ய மன்றத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைப்பது ஏன் முக்கியம்?
3. ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வது எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது, இந்தச் சேவையில் யார் பங்கெடுக்கலாம்?
4. ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வது பற்றி சபையார் தெரிந்துகொள்ள வசதியாக என்னவெல்லாம் செய்யப்பட வேண்டும்?
5. பாதுகாப்பு எந்தளவுக்கு முக்கியம், அவ்வப்போது எவ்விஷயங்களை சரிபார்க்க வேண்டும்? (பக்கம் 4-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
6. ராஜ்ய மன்ற பராமரிப்பு வேலை எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது?
7. (அ) ராஜ்ய மன்றம் பழுதின்றி இருப்பதை உறுதி செய்துகொள்ள வருடா வருடம் என்ன செய்யப்படுகிறது? (ஆ) அவ்வப்போது என்னென்ன விஷயங்களுக்கு கவனம் செலுத்த வேண்டும்? (பக்கம் 5-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
8. கான்ட்ராக்டர் ஒருவரிடம் வேலையை ஒப்படைக்க வேண்டியிருந்தால் என்ன முறையைப் பின்பற்ற வேண்டும்?
9. சபை நிதி சரிவர செலவிடப்படுவதை உறுதி செய்துகொள்ள என்ன செய்யப்படுகிறது?
10. பெரியளவில் பராமரிக்கவோ புதுப்பிக்கவோ தேவை ஏற்படுகையில் என்ன செய்ய வேண்டும்?
11. ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு ஆஜராகும் அரிய வாய்ப்புக்கு நம் மதித்துணர்வை நாம் எவ்வாறு காட்டலாம்?
[பக்கம் 4-ன் பெட்டி]
பாதுகாப்பு பட்டியல்
◻ தீயணைப்புக் கருவிகள் எளிதில் எடுக்க முடிந்த இடத்தில் இருக்க வேண்டும், வருடா வருடம் சரிபார்க்கப்பட வேண்டும்.
◻ வெளியேறும் வழிகளும் படிக்கட்டுகளும் தெளிவாக அடையாளம் காட்டப்பட வேண்டும், அங்கு போதிய வெளிச்சம் இருக்க வேண்டும், எளிதில் செல்லுமளவுக்கு இருக்க வேண்டும். படிக்கட்டிலுள்ள கைப்பிடிகள் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டும்.
◻ சாமான்களை வைக்கும் அறைகளும் கழிப்பறைகளும் சுத்தமாகவும், ஒழுங்காகவும், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களோ, சொந்த சாமான்களோ, குப்பைக்கூளங்களோ இல்லாமலும் இருக்க வேண்டும்.
◻ கூரையும் மழைநீர் வடிகால் அமைப்புகளும் பழுதுபார்க்கப்பட்டு, தவறாமல் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
◻ நடைபாதைகளிலும் வாகனங்களை நிறுத்தும் இடங்களிலும் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும்; சறுக்கும் விதத்திலோ, தடுக்கி விழவைக்கும் விதத்திலோ எந்த இடர்ப்பாடுகளும் இருக்கக் கூடாது.
◻ மின் அமைப்புகளையும் காற்றோட்ட வசதிகளையும் சரிபார்த்து செப்பனிட வேண்டும்.
◻ எங்காவது ஒழுகுவது கண்டுபிடிக்கப்பட்டால் ஈரப்பதத்தால் பாதிப்பு ஏற்படாதிருக்க உடனே அதை சரிசெய்ய வேண்டும்.
◻ ஆட்கள் இல்லாதபோது ராஜ்ய மன்றத்தை பூட்டியே வைக்க வேண்டும்.
[பக்கம் 5-ன் பெட்டி]
கட்டடத்தையும் சுற்றுப்புறத்தையும் பராமரித்தல்
◻ வெளிப்புறம்: மேற்கூரை, வெளிச்சுவர், பெயின்ட், ஜன்னல்கள், மன்றத்தின் பெயர்ப் பலகை ஆகியவை நல்ல நிலையில் இருக்கின்றனவா?
◻ சுற்றுப்புறம்: சுற்றுப்புறம் நன்கு பராமரிக்கப்படுகிறதா? நடைபாதைகள், வேலிகள், சுற்றுச்சுவர் ஆகியவை பழுதற்ற நிலையில் இருக்கின்றனவா?
◻ உட்புறம்: கம்பள விரிப்புகள், கர்ட்டன்கள், சேர்கள், லைட்டுகள், பெயின்ட் வேலைகள் ஆகியவை பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கின்றனவா?
◻ சாதனங்கள்: ஒளி, ஒலி அமைப்புகள், ஃபேன், காற்றோட்ட வசதிகள் ஆகியவை சரியாக செயல்படுகின்றனவா?
◻ கழிப்பறைகள்: கழிப்பறைகள் சுத்தமாகவும் துர்நாற்றமின்றியும் பழுதின்றியும் இருக்கின்றனவா?
◻ சபை ஆவணங்கள்: கார்ப்பரேஷன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் புதுப்பிக்கப்பட்டும் திருத்தமாகவும் இருக்க வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்கள், வரி கட்டிய ரசீதுகள், பிற முக்கிய ஆவணங்கள் ஆகியவை ஒழுங்கான விதத்தில் ஃபைல் செய்யப்பட்டுள்ளனவா?