தவறாமல் கூட்டங்களுக்கு செல்வது—முதலிடத்தில்
1 தவறாமல் சபைக் கூட்டங்களுக்கு செல்வதற்கு கிறிஸ்தவ குடும்பங்கள் முன்னுரிமை தருகின்றன. ஆனால் இன்றைய வாழ்க்கையின் அவசியமான காரியங்கள் பிரச்சினைகளை எழுப்பலாம். யெகோவாவை வணங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை வீட்டுப் பொறுப்புகள், உலகப்பிரகாரமான வேலை அல்லது பள்ளிப் பாடங்கள் ஆகியவை மெது மெதுவாய் ஆக்கிரமிக்கின்றனவா? காரியங்களை யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து பார்ப்பது முக்கியமானவற்றுக்கு சரியான முன்னுரிமை அளிக்க நமக்கு உதவும்.—1 சா. 24:6; 26:11.
2 ஓய்வுநாளன்று விறகு பொறுக்குவதன்மூலம் இஸ்ரவேலன் ஒருவன் வேண்டுமென்றே யெகோவாவின் நோக்குநிலையைக் காணத் தவறினான். அவன் தன்னுடைய குடும்பத்தை பராமரிப்பதற்காக இதை செய்ததாக நியாயப்படுத்தி இருக்கலாம்; அல்லது இதென்ன பெரிய விஷயமா என்று அசட்டையாக இருந்திருக்கலாம். ஆனால் வணக்கத்துக்கென்று ஒதுக்கப்பட்ட நேரத்தில் சாதாரணமான வேலைகளில் ஈடுபடுவதும் பெரிய விஷயமே என்று அவனுக்கு அளித்த தீர்ப்பின் மூலம் யெகோவா காண்பித்தார்.—எண். 15:32-36.
3 சவாலை சமாளித்தல்: கூட்டங்களுக்குச் செல்வதில் உலகப்பிரகாரமான வேலை குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வது அநேகருக்கு ஒரு போராட்டமாகவே உள்ளது. தங்களை வேலைக்கு அமர்த்தியிருப்பவரிடம் பேசுவது, சக ஊழியர்களுடன் ஷிப்டுகளை மாற்றிக்கொள்வது, பொருத்தமான வேறொரு வேலையை தேடுவது அல்லது எளிய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வது ஆகிய வழிகளில் சிலர் இந்த சவாலை சமாளித்திருக்கின்றனர். உண்மை வணக்கத்துக்காக அப்படிப்பட்ட தியாகங்களை செய்வது நிச்சயமாகவே கடவுளைப் பிரியப்படுத்தும்.—எபி. 13:16.
4 பள்ளிப் பாடமும் ஒரு சவாலாகலாம். “வீட்டுப்பாடத்தில் கொஞ்சத்தை கூட்டங்களுக்குப் போவதற்கு முந்தியும் மீதத்தை வீடு திரும்பியதும் செய்வேன்” என்றாள் ஓர் இளம் பெண். கூட்ட தினங்களில் வீட்டுப்பாடத்தை முழுவதுமாக செய்து முடிக்க இயலாதபோது, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்வது தங்கள் குடும்பத்தில் முதலிடம் வகிப்பதாக சில பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் விளக்கியிருக்கிறார்கள்.
5 குடும்பமாக சரியான நேரத்திற்கு கூட்டங்களுக்குச் செல்வதற்காக வீட்டு வேலைகளை செய்து முடிக்க நன்கு திட்டமிடுவதும் அதற்காக ஒத்துழைப்பதும் அவசியம். (நீதி. 20:18) வீட்டை விட்டு கூட்டத்திற்கு கிளம்ப வசதியாக, குறிப்பிட்ட நேரத்தில் துணிமாற்றி தயாராய் இருக்கும்படி சிறு பிள்ளைகளைக்கூட பயிற்றுவிக்கலாம். பெற்றோர் தங்கள் முன்மாதிரியின் மூலம் கூட்டங்களின் முக்கியத்துவத்தை பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கலாம்.—நீதி. 20:7.
6 இந்த ஒழுங்குமுறையின் அழுத்தங்கள் அதிகரித்து வருகையில், நாம் தவறாமல் கூட்டங்களுக்குச் செல்வது மிக மிக அவசியம். நாம் தொடர்ந்து யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து காரியங்களைப் பார்த்து, தவறாமல் கூட்டங்களுக்கு செல்வதை முதலிடத்தில் வைப்போமாக.—எபி. 10:24, 25.