எப்போதும் அவசர உணர்வுடன் இருங்கள்!
1 இயேசு பூமியில் இருந்தபோது, பிதா கொடுத்திருந்த வேலையைச் செய்து முடிக்க குறைந்தளவு சமயமே இருந்ததை அறிந்திருந்தார். (யோவா. 9:4) எனவே அந்த ஊழியத்தை அவசர உணர்வுடன் செய்தார்; அவ்வாறே செய்யும்படி தம் சீஷர்களுக்கும் பயிற்சி அளித்தார். (லூக். 4:42-44; 8:1; 10:2-4) சொகுசான வாழ்க்கைக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. (மத். 8:20) அதனால்தான், யெகோவா கொடுத்திருந்த வேலையை அவரால் செய்து முடிக்க முடிந்தது.—யோவா. 17:4.
2 குறைந்தளவு சமயம்: ‘பூலோகமெங்கும்’ ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்க நமக்கிருக்கும் சமயமும் குறைவானதே. (மத். 24:14) நாம் முடிவு காலத்தின் விளிம்பில் வாழ்ந்து வருவதாக பைபிள் தீர்க்கதரிசனம் கூறுகிறது. சீக்கிரத்தில், “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினை” வரும். (2 தெ. 1:6-9) அந்த ஆக்கினை, அதாவது அழிவு திடீரென்று வரும். (லூக். 21:34, 35; 1 தெ. 5:2, 3) வரவிருக்கும் ஆபத்தைக் குறித்து ஜனங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆகவே இன்னும் மீந்திருக்கும் சமயத்தில் யெகோவாவின் தயவைப் பெற அவர்களுக்கு உதவுவது நம் பொறுப்பாகும்.—செப். 2:2, 3.
3 நம்மால் முடிந்த அனைத்தையும் செய்தல்: ‘இனிவரும் காலம் குறுகினது’ என்பதை கடவுளின் ஊழியர்கள் உணர்ந்திருப்பதால் பிரசங்க வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். (1 கொ. 7:29-31; மத். 6:33) அதிகளவில் ஊழியம் செய்வதற்காக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளையோ, சொந்த நாட்டங்களையோ சிலர் தியாகம் செய்திருக்கிறார்கள். (மாற்கு 10:29, 30) இன்னும் சிலர் சோதனைகள் ஒருபுறம் வந்தாலும் அவற்றை சகித்துக்கொண்டே, ‘கர்த்தருடைய கிரியையில் எப்பொழுதும் பெருகுகிறவர்களாய்’ இருக்கிறார்கள். (1 கொ. 15:58) அநேகர் நற்செய்தியை அறிவிப்பதில் பல்லாண்டு காலமாக உறுதியுடன் இருக்கிறார்கள். (எபி. 10:23) ராஜ்ய அக்கறைகளை ஆதரிப்பதற்காக செய்யப்படும் இந்த எல்லா தியாகங்களையும் யெகோவா பெரிதும் போற்றுகிறார்.—எபி. 6:10.
4 பிரசங்க வேலை நம் வணக்கத்தின் பாகமாகும்; யெகோவாவின் வணக்கத்தை நம் வாழ்க்கையில் மையமாக வைப்பது, யெகோவாவின் நாளை மறக்காமல் எப்பொழுதும் மனதில் பசுமையாக வைத்திருக்க நமக்கு உதவுகிறது. சாத்தானிய உலகம் நம்மை திசைதிருப்பிவிடாதபடி பாதுகாக்கிறது; பரிசுத்த நடக்கையைக் காத்துக்கொள்ள வேண்டுமென்ற நம் தீர்மானத்தையும் உறுதிப்படுத்துகிறது. (2 பே. 3:11-14) இவ்வாறு, நம் ஊழியத்தை அவசர உணர்வுடன் செய்தோமெனில் நம்மையும் நம் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்வோம்.—1 தீ. 4:16.