ஜீவனுக்கு வழிநடத்துகிற கல்வி
1 கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தைப் புரிந்துகொள்கையில் ஜனங்களுடைய கண்கள் பிரகாசமாவதைப் பார்ப்பது எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அளிக்கிறது! கடவுளையும் மனிதருக்கான அவருடைய நோக்கத்தையும் பற்றிய அறிவை மற்றவர்களுக்குச் சொல்வது உண்மையிலேயே திருப்தி அளிக்கிறது. இந்தக் கல்வி, ஒருவரை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது.—யோவா. 17:3.
2 ஏன் இது சிறந்த கல்வி: இன்று கிட்டத்தட்ட எல்லா வழிகளிலுமே கல்வி புகட்டப்படுகிறது; யோசித்துப் பார்க்க முடிந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் போதனை அளிக்கப்படுகிறது. (பிர. 12:12) ஆனால் இப்படிப் பெற்றுக்கொள்ளும் அறிவெல்லாம் ‘தேவனுடைய மகத்துவங்களோடு’ ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை. (அப். 2:11) உலக கல்வி ஜனங்களைக் கடவுளிடமாக நெருங்கிச் செல்ல வைத்திருக்கிறதா? அவருடைய நோக்கங்களைப் பற்றி அறிந்துகொள்ளச் செய்திருக்கிறதா? இறந்தபின் என்ன நடக்கிறது, இத்தனை துன்பத்திற்கும் காரணம் என்ன என்றெல்லாம் புரிந்துகொள்ள உதவியிருக்கிறதா? ஜனங்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறதா? குடும்ப வாழ்க்கையை முன்னேற்றுவிக்க உதவி செய்திருக்கிறதா? இல்லையே. கடவுள் புகட்டும் கல்வியின் மூலமாக மட்டுமே வாழ்க்கையில் எழும் மிக முக்கியமான கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கண்டுபிடிக்க முடியும்.
3 கடவுள் புகட்டும் கல்வி, இன்றைய உலகில் மிகமிக அரிதாகக் காணப்படுகிற ஒழுக்க நெறிகளை வளர்க்கிறது. கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அதன் போதனைகளைக் கடைப்பிடிப்பவர்களின் இருதயங்களிலிருந்து இனப்பற்று, குலப்பற்று, தேசப்பற்று ஆகியவற்றை அது அடியோடு அகற்றுகிறது. (எபி. 4:12) எல்லாவித வன்முறைச் செயல்களையும் விட்டுவிட ஜனங்களை உந்துவித்திருக்கிறது; அத்துடன் ‘புதிய ஆள்தன்மையைத் தரித்துக்கொள்ள’ அவர்களைத் தூண்டியிருக்கிறது. (கொலோ. 3:9-11; NW; மீ. 4:1-3) அதோடு, அவர்களிடம் ஊறிப்போயுள்ள அவருக்குப் பிடிக்காத பழக்கவழக்கங்களையும் குணங்களையும் அறவே விட்டுவிடத் தேவையான பலத்தைக்கூட லட்சக்கணக்கானோருக்குத் தந்திருக்கிறது.—1 கொ. 6:9-11.
4 ஏன் இப்போது அவசரம்: நாம் வாழும் காலத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு விழிப்புடன் நடந்துகொள்ள நம் மகத்தான போதகர் நமக்கு உதவுகிறார். நம் நாளுக்குப் பொருந்துகிற அவருடைய நியாயத்தீர்ப்புச் செய்திகள் உலகெங்கும் அறிவிக்கப்பட வேண்டும். (வெளி. 14:6, 7) கிறிஸ்து பரலோகத்தில் ஆட்சிசெய்து வருகிறார், இவ்வுலகின் பொய் மதப் பேரரசு சீக்கிரத்தில் அழிக்கப்படப்போகிறது, கடவுளுடைய ராஜ்யம் உலக அரசாங்கங்கள் அனைத்தையும் நொறுக்கிப்போடத் தயார்நிலையில் இருக்கிறது. (தானி. 2:44; வெளி. 11:15; 17:16) ஆகவே, கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக தற்போது ஆட்சிசெய்யும் ராஜாவை ஜனங்கள் அடையாளம் கண்டுகொள்வதும், மகா பாபிலோனைவிட்டு வெளியேறுவதும், விசுவாசத்தோடு யெகோவாவின் பெயரில் கூப்பிடுவதும் அவசரமாக உள்ளது. (சங். 2:11, 12; ரோ. 10:13, NW; வெளி. 18:4) எனவே, ஜீவனுக்கு வழிநடத்துகிற கல்வியை மற்றவர்களுக்குப் புகட்டுவதில் நம்மால் முடிந்தளவு முழுமையாய்ப் பங்குகொள்வோமாக.