கேள்விப் பெட்டி
◼ ஞானஸ்நானம் பெறாத ஒரு பிரஸ்தாபி ஞானஸ்நானம் எடுக்க தகுதிபெற சபை கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் எந்தளவு வர வேண்டும்?
ஞானஸ்நானம்தான் ஒரு நபர் எடுக்கக்கூடிய மிக முக்கியமான தீர்மானம். ஆகவே, ஞானஸ்நானம் எடுக்க ஒருவர் தகுதிபெற வேண்டுமானால் கடவுள் எதிர்பார்ப்பவற்றைப் பற்றி நன்கு புரிந்திருக்க வேண்டும். அதோடு, கடவுளுடைய நெறிமுறைகளுக்கு இசைவாக வாழ உறுதிபூண்டிருப்பதைச் செயலில் காட்டியிருக்க வேண்டும்.
சபைக்கு வருவதை விட்டுவிடக் கூடாதெனக் கிறிஸ்தவர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருப்பதால், ஞானஸ்நானம் எடுப்பதற்குமுன் ஒருவர் கூட்டங்களுக்கு வருவதற்கு ஊக்கமான முயற்சி செய்திருக்க வேண்டும். (எபி. 10:24, 25) குறிப்புகள் சொல்வதிலும் அவர் பங்குபெற்றிருக்க வேண்டும். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்திருக்கலாம், ஆனால் இது கட்டாயமல்ல.
அதோடு, நற்செய்தியை அறிவிக்கவும் சீடராக்கவும் கிறிஸ்தவர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருப்பதால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னால் அந்த நபர் தவறாமல் ஊழியத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். (மத். 24:14; 28:19, 20) ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு எவ்வளவு மாதமாக பிரசங்க வேலையில் ஈடுபட்டு வந்திருக்க வேண்டும்? ஒவ்வொரு மாதமும் தவறாமல் ஊழியத்தில் ஈடுபடுகிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள போதிய காலத்தை அனுமதிக்க வேண்டும். (சங். 78:37) இருந்தாலும், ஞானஸ்நானம் எடுக்க தகுதிபெறுவதற்கு முன்பு நீண்ட காலம் ஊழியம் செய்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, ஒருவேளை சில மாதங்களே போதும். எவ்வளவு நேரத்தை வெளி ஊழிய அறிக்கை செய்ய வேண்டும்? கெடுபிடியான சட்டங்கள் எதுவுமில்லை. ஒவ்வொரு பிரஸ்தாபியின் சூழ்நிலையையும் மூப்பர்கள் கவனமாகச் சிந்தித்துப் பார்த்து நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.—லூக். 21:1-4.
ஞானஸ்நானம் பெறப்போகிறவரைச் சந்தித்துப் பேசும் மூப்பர்கள் (அல்லது, வெகுசில மூப்பர்களே இருக்கிற சபைகளில் உதவி ஊழியர்கள்) ஒவ்வொரு நபரும் வித்தியாசப்படுகிறார் என்பதை மனதில்கொள்ள வேண்டும்; அதோடு, ஞானஸ்நானம் பெற அவர் தகுதியுள்ளவரா என்பதை நன்கு யோசித்து தீர்மானிக்க வேண்டும். யெகோவாவின் சாட்சியாவதற்கு உண்மையிலேயே விரும்புகிறாரா... யெகோவாவின் அமைப்புடன் கூட்டுறவுகொள்வதையும் ஊழியத்தில் ஈடுபடுவதையும் பாக்கியமாய்க் கருதுகிறாரா... என்பதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதேசமயத்தில், அந்த நபர் இன்னும் ஆன்மீக முதிர்ச்சியை எட்டவில்லை அல்லது அனுபவமுள்ள ஓர் ஊழியரைப்போல் திறமை பெறவில்லை என்பதை மூப்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் ஞானஸ்நானம் பெற தகுதியில்லாதவர் என மூப்பர்கள் உணர்ந்தால், அதற்குரிய வேதப்பூர்வ காரணங்களை அவருக்கு அன்புடன் சொல்லி தொடர்ந்து உதவியளிக்க வேண்டும்.