படிப்புக் கட்டுரை 23
பெற்றோர்களே! யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
“உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.”—மத். 22:37.
பாட்டு 134 பிள்ளைகள் கடவுள் தந்த சொத்து
இந்தக் கட்டுரையில்...a
1-2. வாழ்க்கையில் சூழ்நிலை மாறும்போது சில வசனங்கள் நமக்கே சொன்னதுபோல் ஏன் தெரியலாம்?
திருமணம் அன்று மாப்பிள்ளையும் பெண்ணும் ரொம்பவே அழகாக அலங்காரம் செய்து வந்து உட்கார்ந்திருப்பார்கள். ஒரு மூப்பர் பைபிள் அடிப்படையில் திருமணப் பேச்சைக் கொடுப்பார். அதை அவர்கள் கவனமாகக் கேட்பார்கள். பைபிளிலிருந்து அவர் காட்டும் வசனங்கள் அவர்களுக்கு ஒன்றும் புதுசு கிடையாது. பல தடவை அதைக் கேட்டிருப்பார்கள். ஆனால் அன்றைக்கு அவையெல்லாம் அவர்களுக்கு ரொம்ப முக்கியமானதாகத் தெரியும். ஏனென்றால், தம்பதியாக இனிமேல் அவர்கள் அந்த வசனங்களில் சொல்லியிருக்கும் விஷயங்களின்படிதான் வாழ போகிறார்கள்.
2 அந்தத் தம்பதிக்குக் குழந்தை பிறக்கும் சமயத்திலும் இதுதான் உண்மை. பிள்ளைகளை வளர்ப்பதைப் பற்றி அவர்கள் நிறைய பேச்சுகளைக் கேட்டிருப்பார்கள். ஆனால், அந்தப் பேச்சுகளில் சொன்ன ஆலோசனைகள் எல்லாம் இப்போது அவர்களுக்கு ரொம்ப முக்கியமானதாகத் தெரியும். ஏனென்றால், அவர்களுக்கென்று ஒரு குழந்தை பிறக்கப்போகிறது. அதை அவர்கள் நல்லபடியாக வளர்க்க வேண்டும். இது எவ்வளவு பெரிய பொறுப்பு! உண்மையிலேயே வாழ்க்கையில் நம்முடைய சூழ்நிலை மாறும்போதுதான் சில வசனங்கள் நமக்கே சொன்னதுபோல் இருக்கும். அதனால்தான் யெகோவாவை வணங்குகிறவர்கள் பைபிளைத் தவறாமல் படிக்கிறார்கள். இஸ்ரவேல் ராஜாக்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது போல் “வாழ்நாளெல்லாம்” அதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கிறார்கள்.—உபா. 17:19.
3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
3 பெற்றோர்களே, உங்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கிறது. யெகோவாவைப் பற்றி உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதை மட்டும் நீங்கள் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தால் போதாது. அவரை உயிருக்கு உயிராக நேசிக்கவும் நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? உங்களுக்கு உதவுகிற நான்கு பைபிள் நியமங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். (2 தீ. 3:16) இந்த நியமங்கள் சில பெற்றோருக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது என்றும் பார்க்கலாம்.
பெற்றோருக்கு உதவும் நான்கு நியமங்கள்
4. யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க பெற்றோருக்கு உதவுகிற ஒரு நியமம் என்ன? (யாக்கோபு 1:5)
4 நியமம் 1: யெகோவாவிடம் உதவி கேளுங்கள். பிள்ளைகள் யெகோவாவை நேசிக்க உதவுவதற்கு ஞானத்தைக் கேட்டு அவரிடம் ஜெபம் செய்யுங்கள். (யாக்கோபு 1:5-ஐ வாசியுங்கள்.) அவரால் மட்டும்தான் நல்ல நல்ல ஆலோசனைகளைக் கொடுக்க முடியும். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் இரண்டைப் பார்க்கலாம். முதலில், ஒரு அப்பாவாக யெகோவாவுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. (சங். 36:9) இரண்டாவதாக, அவர் கொடுக்கிற ஞானமான ஆலோசனைகள்படி நடக்கும்போது எப்போதும் நன்மைகள்தான் கிடைக்கும்.—ஏசா. 48:17.
5. (அ) யெகோவாவுடைய அமைப்பு மூலமாக பெற்றோருக்கு என்ன உதவி கிடைக்கிறது? (ஆ) அமோரிம் தம்பதி பற்றிய வீடியோவிலிருந்து பிள்ளைகளை வளர்ப்பது சம்பந்தமாக நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
5 பிள்ளைகள் யெகோவாமேல் அன்பை வளர்த்துக்கொள்ள கற்றுக்கொடுப்பதற்கு பெற்றோருக்கு உதவுகிற நிறைய விஷயங்கள் பைபிளில் இருக்கின்றன. யெகோவாவுடைய அமைப்பு மூலமாகவும் அவர்களுக்கு நிறைய ஆலோசனைகள் கிடைக்கின்றன. (மத். 24:45) உதாரணத்துக்கு, பிள்ளைகளை வளர்க்க உதவுகிற நல்ல ஆலோசனைகள் விழித்தெழு! பத்திரிகையில் “குடும்ப ஸ்பெஷல்” என்ற தலைப்பில் வந்திருக்கிற தொடர் கட்டுரைகளில் இருக்கின்றன. இந்தத் தொடர் கட்டுரைகள் இப்போது நம்முடைய வெப்சைட்டில் வெளிவருகின்றன. அதுமட்டுமல்ல, jw.org-ல் வருகிற நிறைய வீடியோக்களும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.b—நீதி. 2:4-6.
6. யெகோவாவுடைய அமைப்பிடமிருந்து கிடைக்கும் உதவியைப் பற்றி ஒரு அப்பா என்ன சொல்கிறார்?
6 யெகோவா அவருடைய அமைப்பு மூலமாகச் செய்திருக்கும் உதவிகளுக்கு நிறைய பெற்றோர் நன்றியோடு இருக்கிறார்கள். அப்பாவாக இருக்கிற சகோதரர் ஜோ இப்படிச் சொல்கிறார்: “மூணு பிள்ளைங்கள பைபிள் சொல்ற மாதிரி வளர்க்குறது சாதாரண ஒரு விஷயம் இல்ல. நானும் என்னோட மனைவியும் உதவிக்காக எப்பவும் யெகோவாகிட்ட ஜெபம் செய்வோம். எங்களுக்கு ஏதாவது சவாலான ஒரு சூழ்நிலை வரும்போது அத சமாளிக்கிறதுக்கு ஏத்த மாதிரி ஒரு கட்டுரை இல்லன்னா வீடியோ வர்றத நாங்க அடிக்கடி பார்த்திருக்கோம். யெகோவாவோட ஆலோசனைதான் எங்களுக்கு உயிர்மூச்சா இருக்கு.” பிள்ளைகள் யெகோவாவோடு நெருக்கமான நட்பை வைத்துக்கொள்வதற்கு இந்த மாதிரி கட்டுரைகளும் வீடியோக்களும் ரொம்ப பிரயோஜனமாக இருப்பதாக ஜோவும் அவருடைய மனைவியும் சொல்கிறார்கள்.
7. பிள்ளைகளுக்குப் பெற்றோர் நல்ல முன்மாதிரியாக இருப்பது ஏன் முக்கியம்? (ரோமர் 2:21)
7 நியமம் 2: நல்ல முன்மாதிரியாக இருங்கள். அப்பா-அம்மா என்ன செய்கிறார்கள் என்பதைப் பிள்ளைகள் கவனிப்பார்கள். அதைத்தான் அவர்களும் செய்வார்கள். தப்பே செய்யாத அப்பா-அம்மா என்று யாருமே இல்லை என்பது உண்மைதான். (ரோ. 3:23) இருந்தாலும் ஞானமாக நடந்துகொள்ளும் பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க கடினமாக முயற்சி செய்வார்கள். (ரோமர் 2:21-ஐ வாசியுங்கள்.) பிள்ளைகளைப் பற்றி ஒரு அப்பா என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “அவங்க எல்லாத்தையும் உறிஞ்சு வெச்சிக்கிற ஸ்பான்ஞ் மாதிரி. நாம சொல்றது ஒண்ணும் செய்றது ஒண்ணுமா இருந்தோம்னா அவங்க நம்மளையே கேள்வி கேட்பாங்க.” அதனால், நம் பிள்ளைகள் யெகோவாவை நேசிக்க வேண்டும் என்றால், முதலில் நாம் அவரை உயிருக்கு உயிராக நேசிக்க வேண்டும். அது நாம் வாழும் விதத்திலும் தெரிய வேண்டும்.
8-9. ஆன்ட்ரூவும் எம்மாவும் சொன்னதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
8 யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குப் பெற்றோர் பல வழிகளில் கற்றுக்கொடுக்கலாம். 17 வயது ஆன்ட்ரூ என்ன சொல்கிறான் என்று கவனியுங்கள்: “ஜெபம் செய்றது எவ்ளோ முக்கியம்னு என் அப்பா-அம்மா அடிக்கடி சொல்வாங்க. ஒவ்வொரு நாள் ராத்திரியும் அப்பா என்னோட சேர்ந்து ஜெபம் பண்ணுவாரு. நான் தனியா ஜெபம் செஞ்சிருந்தாலும் திரும்பவும் பண்ணுவாரு. ‘யெகோவாகிட்ட எத்தன தடவ ஜெபம் பண்ணாலும் தப்பில்ல’னு அப்பா-அம்மா எப்பவும் சொல்லுவாங்க. அதனால ஜெபம் செய்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அத நான் ரொம்ப முக்கியமா நினைக்கிறேன். இப்ப என்னால யெகோவாவ என்னோட அன்பான அப்பாவா பார்க்க முடியுது.” பெற்றோரே, யெகோவா மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பைப் பார்த்தே உங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
9 அடுத்ததாக எம்மாவுடைய அனுபவத்தைப் பார்க்கலாம். அவளுடைய அப்பா நிறைய கடன் வாங்கியிருந்தார். அந்தக் கடனையெல்லாம் அவளுடைய அம்மாவின் தலையில் கட்டிவிட்டு, குடும்பத்தை அம்போவென்று விட்டுவிட்டு போய்விட்டார். எம்மா என்ன சொல்கிறாள் என்றால், “நிறைய நாள் கையில காசே இல்லாம அம்மா கஷ்டப்பட்டிருக்காங்க. ஆனாலும் யெகோவா அவருடைய மக்கள எப்படியெல்லாம் கவனிச்சிக்கிறாரு அப்படீங்கிறத பத்தித்தான் அவங்க அடிக்கடி பேசுவாங்க. எனக்கு என்ன சொல்லிக்கொடுத்தாங்களோ அதே மாதிரிதான் அவங்க நடந்துகிட்டாங்க. அத என்னால தெளிவா பார்க்க முடிஞ்சுது.” நமக்கு என்ன பாடம்? கஷ்டமான சூழ்நிலையிலும் நல்ல முன்மாதிரியாக இருப்பதன் மூலமாகப் பெற்றோரால் அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க முடியும்.—கலா. 6:9.
10. பிள்ளைகளிடம் பேச இஸ்ரவேலர்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? (உபாகமம் 6:6, 7)
10 நியமம் 3: பிள்ளைகளிடம் அடிக்கடி பேசுங்கள். பிள்ளைகளுக்குத் தன்னைப் பற்றி எப்போதும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று யெகோவா இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தார். (உபாகமம் 6:6, 7-ஐ வாசியுங்கள்.) பிள்ளைகளிடம் பேசுவதற்கும், அவர்கள் யெகோவாவை நேசிக்க கற்றுக்கொடுப்பதற்கும் இஸ்ரவேலர்களுக்கு ஒரு நாளில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஏனென்றால், பையனாக இருந்தால் அப்பாவோடு சேர்ந்து ஒரு நாளில் நிறைய நேரம் வயலில் வேலை செய்வான். பொண்ணாக இருந்தால் அம்மாவோடு சேர்ந்து துணி நெய்வது, தைப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது என்று நிறைய நேரம் செலவு செய்வாள். இப்படி, பிள்ளைகளும் அப்பா-அம்மாவும் சேர்ந்து வேலை செய்யும்போது நிறைய முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேச அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. உதாரணத்துக்கு, யெகோவா எவ்வளவு நல்லவர் என்றும் அவர்களுடைய குடும்பத்துக்கு எப்படி உதவி செய்கிறார் என்றும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
11. பிள்ளைகளிடம் பேசுவதற்குப் பெற்றோருக்கு எது ஒரு நல்ல வாய்ப்பு?
11 குடும்பமாக எல்லாரும் உட்கார்ந்து பேசும் காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. நிறைய நாடுகளில் அப்பா-அம்மாவால் பிள்ளைகளோடு நேரம் செலவு செய்ய முடிவதில்லை. ஏனென்றால், அவர்கள் வேலைக்குப் போய்விடுகிறார்கள்; பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போய்விடுகிறார்கள். சூழ்நிலை இந்த மாதிரி இருப்பதால், பிள்ளைகளோடு பேசுவதற்கு அப்பா-அம்மா வாய்ப்புகளைத் தேட வேண்டும். (எபே. 5:15, 16; பிலி. 1:10) குடும்ப வழிபாடு அதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். அலெக்ஸாண்டர் என்ற இளைஞர் இப்படிச் சொல்கிறார்: “எங்க அப்பா தவறாம குடும்ப வழிபாடு நடத்துவாரு. அந்த சமயத்துல வேற எந்த வேலையும் குறுக்க வராத மாதிரி பார்த்துக்குவாரு. படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் நாங்க குடும்பமா எத பத்தியாவது பேசுவோம்.”
12. குடும்ப வழிபாடு நடத்துகிறபோது நீங்கள் என்னென்ன விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்?
12 நீங்கள் ஒரு குடும்பத் தலைவராக இருந்தால் குடும்ப வழிபாட்டைச் சுவாரஸ்யமாக நடத்துவதற்கு என்ன செய்யலாம்? குடும்ப வழிபாட்டை நடத்துவதற்கு இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற அருமையான புத்தகம் நமக்கு இருக்கிறது. அந்தப் புத்தகத்திலிருந்து படிக்கும்போது குடும்பமாக எல்லாரும் சேர்ந்து நன்றாகப் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் மனசுவிட்டுப் பேச வேண்டும் என்றுதான் நீங்கள் ஆசைப்படுவீர்கள். அதனால் குடும்ப வழிபாடு சமயத்தில் அவர்களிடம் லெக்சர் அடிக்காதீர்கள், அவர்களைத் திட்டாதீர்கள். பைபிளுக்கு எதிராக அவர்கள் ஏதாவது சொன்னால் சட்டென்று கோபப்படாதீர்கள். அவர்களுடைய மனதில் இருப்பதை நேர்மையாகச் சொன்னதை நினைத்து சந்தோஷப்படுங்கள். தொடர்ந்து உங்களிடம் மனசுவிட்டுப் பேச அவர்களுக்கு உதவுங்கள். ஏனென்றால், அவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பதை அப்போதுதான் உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.
13. பிள்ளைகள் யெகோவாவிடம் நெருங்கிப்போக உதவுவதற்கு வேற என்ன வாய்ப்புகளையும் பெற்றோர் பயன்படுத்திக்கொள்ளலாம்?
13 பிள்ளைகளோடு சேர்ந்து பைபிளைப் படிக்கும்போது மட்டும்தான் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று இல்லை. ஒவ்வொரு நாளும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உங்கள் பிள்ளைகள் யெகோவாவிடம் நெருங்கிப்போக உதவுங்கள். லீசா என்ற அம்மா என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்: “எங்கள சுத்தியிருக்குற படைப்புகள பயன்படுத்தி பிள்ளைங்களுக்கு யெகோவாவ பத்தி கத்துக்கொடுக்க நாங்க முயற்சி செய்வோம். உதாரணத்துக்கு எங்களோட நாய் ஏதாவது சேட்ட பண்றத பார்த்து பிள்ளைங்க சிரிக்கிறப்போ, யெகோவா எவ்ளோ சந்தோஷமுள்ள கடவுள்னும் இந்த மாதிரி விஷயங்கள எல்லாம் பார்த்து நாம சந்தோஷமா ஜாலியா இருக்கணும்னு அவர் ஆசப்படுறாருனும் அவங்ககிட்ட சொல்வோம்.”
14. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க பிள்ளைகளுக்கு நீங்கள் உதவி செய்வது ஏன் முக்கியம்? (நீதிமொழிகள் 13:20)
14 நியமம் 4: நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள். நண்பர்களால் நாம் நல்லவர்களாக ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது, கெட்டுக் குட்டிச்சுவராகப் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. (நீதிமொழிகள் 13:20-ஐ வாசியுங்கள்.) பெற்றோரே, உங்களுடைய பிள்ளைகளுடைய நண்பர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்களோடு நேரம் செலவு செய்திருக்கிறீர்களா? யெகோவாவை நேசிக்கிறவர்களை உங்கள் பிள்ளைகள் நண்பர்களாக ஆக்கிக்கொள்ள நீங்கள் எப்படி உதவி செய்யலாம்? (1 கொ. 15:33) யெகோவாவோடு நெருக்கமான நட்பு வைத்திருப்பவர்களை உங்களுடைய வீட்டுக்குக் கூப்பிடுங்கள். அவர்களோடு குடும்பமாக நேரம் செலவு செய்யுங்கள். அப்போது உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.—சங். 119:63.
15. பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்க பெற்றோர் எப்படி உதவலாம்?
15 டோனி என்ற ஒரு அப்பாவின் அனுபவத்தைப் பார்க்கலாம். பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பதற்காக அவரும் அவருடைய மனைவியும் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றிச் சொல்கிறார். “பல வருஷங்களா நானும் என்னுடைய மனைவியும் வித்தியாசமான பின்னணியையும் வயசையும் சேர்ந்த சகோதர சகோதரிகள எங்களோட வீட்டுக்கு கூப்பிட்டிருக்கோம். அவங்களோட சேர்ந்து நாங்க சாப்பிடுவோம், குடும்ப வழிபாடு நடத்துவோம். அவங்க யெகோவாமேல எவ்ளோ அன்பு வெச்சிருக்காங்க... அவருக்கு எவ்ளோ சந்தோஷமா சேவ செய்றாங்க... அப்படீங்கிறத எல்லாம் தெரிஞ்சிக்கிறதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பா இருந்துச்சு. நாங்க வட்டாரக் கண்காணிகளையும் மிஷனரிகளையும் மத்த சகோதர சகோதரிகளையும் எங்க வீட்டுல தங்க வெச்சிருக்கோம். அவங்க யெகோவாவுக்கு எவ்ளோ சுறுசுறுப்பா சேவ செஞ்சிருக்காங்க... எவ்ளோ கடினமா உழைச்சிருக்காங்க... இதெல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டது யெகோவாகிட்ட நெருங்கிப்போக எங்க பிள்ளைங்களுக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். உங்கள் பிள்ளைகள் நல்ல நண்பர்களோடு பழகுவதற்கு ஏற்ற மாதிரியான ஒரு சூழலை அமைத்துக் கொடுக்க உங்களால் முடிந்ததையெல்லாம் செய்யுங்கள்.
நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்!
16. உங்கள் பிள்ளைக்கு யெகோவாவை வணங்க விருப்பம் இல்லையென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
16 நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் உங்கள் பிள்ளைக்கு யெகோவாவை வணங்க விருப்பம் இல்லையென்றால் என்ன செய்வீர்கள்? நீங்கள்தான் உங்கள் பிள்ளையைச் சரியாக வளர்க்காமல் போய்விட்டதாக முடிவு செய்யாதீர்கள். யெகோவா நம் எல்லாருக்குமே அவரை வணங்குவதா வேண்டாமா என்று முடிவு எடுக்கிற சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். உங்கள் பிள்ளைக்கும்தான்! ஒருவேளை உங்கள் பிள்ளை யெகோவாவைவிட்டு போய்விட்டாலும் கண்டிப்பாக ஒருநாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு இருங்கள். ஊதாரி மகனின் உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். (லூக். 15:11-19, 22-24) அந்த இளைஞன் நிறைய கெட்ட விஷயங்களைச் செய்தான். ஆனாலும் கடைசியில் திரும்பி வந்துவிட்டான். “அது வெறும் ஒரு கதைதானே, நிஜ வாழ்க்கையில இப்படியெல்லாம் நடக்குமா” என்று சிலர் கேட்கலாம். கண்டிப்பாக நடக்கும்! அதை ஈலி என்ற இளைஞருடைய அனுபவத்திலிருந்து பார்க்கலாம்.
17. ஈலியின் அனுபவம் உங்களுக்கு எப்படி நம்பிக்கையைக் கொடுக்கிறது?
17 ஈலி அவருடைய அப்பா-அம்மாவைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “யெகோவாமேலயும் பைபிள்மேலயும் நான் அன்ப வளர்த்துக்குறதுக்கு எங்க அப்பா-அம்மா நிறைய உதவி செஞ்சாங்க. ஆனாலும் டீனேஜ் வயசுல அப்பா-அம்மாவுக்கு நான் அடங்காம நடந்துகிட்டேன்.” ஈலி அவருடைய அப்பா-அம்மாவுக்குத் தெரியாமல் ரகசியமாகக் கெட்ட விஷயங்களைச் செய்ய ஆரம்பித்தார். யெகோவாவிடம் அவர் நெருங்கிப்போவதற்கு அவர்கள் எவ்வளவு உதவி செய்தும் அதையெல்லாம் அவர் கொஞ்சம்கூட மதிக்கவே இல்லை. ஒருகட்டத்தில் அவர் வீட்டைவிட்டுப் போய்விட்டார். எல்லா கெட்ட பழக்கத்திலும் ஈடுபட ஆரம்பித்தார். இருந்தாலும் சில சமயங்களில் அவருடைய நண்பர் ஒருவரிடம் பைபிள் விஷயங்களைப் பேசினார். “யெகோவாவ பத்தி என் ஃபிரெண்டுகிட்ட சொல்ல சொல்ல அவர பத்தி நான் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சேன். சின்ன வயசுல அப்பா-அம்மா என் மனசுல சத்தியத்த விதைக்கிறதுக்கு பட்ட பாடுக்கெல்லாம் பலன் கிடைக்க ஆரம்பிச்சுது. அது கொஞ்சம் கொஞ்சமா துளிர்விட்டுச்சு” என்று ஈலி சொல்கிறார். கொஞ்சம் வருஷம் கழித்து ஈலி யெகோவாவிடம் திரும்பி வந்துவிட்டார்.c அவருடைய பெற்றோர் அவருக்கு சின்ன வயதிலேயே யெகோவாவைப் பற்றிச் சொல்லிக்கொடுத்ததை நினைத்து எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்!—2 தீ. 3:14, 15.
18. யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்காகக் கடினமாக உழைக்கிற பெற்றோரைப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?
18 பெற்றோர்களே, உங்களுக்கு யெகோவா கொடுத்திருக்கும் அருமையான பரிசைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! யெகோவாவை வணங்குகிற ஒரு புதிய தலைமுறையை நீங்கள் உருவாக்க வேண்டும். (சங். 78:4-6) இது ஒரு சாதாரண வேலை இல்லை. உங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்வதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம். உங்கள் பிள்ளைகள் யெகோவாவை நேசிப்பதற்கும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கும் தொடர்ந்து கற்றுக்கொடுங்கள். அதற்காக நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் பார்த்து நம் அன்பான அப்பா யெகோவா ரொம்ப சந்தோஷப்படுவார்.—எபே. 6:4.
பாட்டு 135 யெகோவாவின் அன்பு வேண்டுகோள்: ‘என் மகனே, ஞானமாக நடந்திடு’
a யெகோவாவை வணங்கும் பெற்றோர்கள் அவர்களுடைய பிள்ளைகள்மேல் உயிரையே வைத்திருக்கிறார்கள். பிள்ளைகளுக்குத் தேவையானதைக் கொடுப்பதற்கும் அவர்களைச் சந்தோஷமாக வைத்துக்கொள்வதற்கும் கடினமாக உழைக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்கு சின்ன வயதிலிருந்தே கற்றுக்கொடுக்கிறார்கள். அதற்காக, தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள். இதைச் செய்வதற்கு பெற்றோருக்கு உதவுகிற நான்கு பைபிள் நியமங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
b யெகோவா சொல்லிக்கொடுத்தபடி பிள்ளைகளை வளர்த்தோம் என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.
c ஜூலை 1, 2012 காவற்கோபுரத்தில் வெளிவந்த “பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
d படவிளக்கம்: ஒரு அப்பா, தன்னுடைய பையனின் நண்பர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக அவனோடும் அவன் நண்பனோடும் சேர்ந்து பாஸ்கெட் பால் விளையாடுகிறார்.