படிப்புக் கட்டுரை 47
சகோதரர்கள்மேல் இருக்கும் அன்பை எப்படிப் பலப்படுத்தலாம்?
“நாம் தொடர்ந்து ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவோமாக. ஏனென்றால், அன்பு கடவுளிடமிருந்துதான் வருகிறது.”—1 யோவான் 4:7.
பாட்டு 109 ஊக்கமாக அன்பு காட்டுங்கள்
இந்த கட்டுரையில்...a
1-2. (அ) அன்புதான் “தலைசிறந்தது” என்று அப்போஸ்தலன் பவுல் ஏன் சொன்னார்? (ஆ) எந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்?
அப்போஸ்தலன் பவுல் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பை பற்றியெல்லாம் பேசியபோது, “இவற்றில் அன்புதான் தலைசிறந்தது” என்று சொன்னார். (1 கொ. 13:13) அவர் ஏன் அப்படி சொன்னார்? எதிர்காலத்தில் பூஞ்சோலை பூமியில் நாம் வாழும்போது, புதிய உலகத்தைப் பற்றி யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகள்மேல் விசுவாசம் வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அவை கண்டிப்பாக நடக்கும் என்று நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியமும் அப்போது இருக்காது. ஏனென்றால் அவை ஏற்கெனவே நிறைவேறியிருக்கும்! ஆனால், அன்பு அப்படி இல்லை. அதை எப்போதுமே நாம் காட்ட வேண்டும். அதுவும், யெகோவாமேலும் மக்கள்மேலும் இருக்கும் அன்பை என்றென்றைக்கும் வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
2 நாம் என்றென்றும் அன்பு காட்ட வேண்டிய அவசியம் இருப்பதால், 3 கேள்விகளைப் பற்றிக் கொஞ்சம் ஆழமாக யோசித்துப்பார்க்கலாம்: (1) நாம் ஏன் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும்? (2) அன்பை எப்படிக் காட்டலாம்? (3) மற்றவர்கள்மேல் இருக்கிற அன்பு குறையாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?
ஒருவருக்கொருவர் ஏன் அன்பு காட்ட வேண்டும்?
3. நாம் ஏன் மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும்?
3 ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுவது ஏன் முக்கியம்? ஒரு காரணம்: அன்பு உண்மை கிறிஸ்தவர்களின் அடையாளம். இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களிடம், “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்றார். (யோவா. 13:35) இரண்டாவது காரணம்: நாம் ஒற்றுமையாக இருப்பதற்கு அன்பு உதவுகிறது. அப்போஸ்தலன் பவுல் அன்பைப் பற்றி சொன்னபோது, “எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான்” என்றார். (கொலோ. 3:14) இவை எல்லாவற்றையும்விட அன்பு காட்டுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. இதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “கடவுள்மேல் அன்பு காட்டுகிறவன் தன் சகோதரன்மேலும் அன்பு காட்ட வேண்டும்.” (1 யோ. 4:21) இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்டினால்தான் கடவுள்மேல் நமக்கு அன்பு இருக்கிறது என்று அர்த்தம்.
4-5. கடவுள்மேல் நாம் காட்டும் அன்பும் சகோதர சகோதரிகள்மேல் நாம் காட்டும் அன்பும் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது? உதாரணத்தோடு விளக்குங்கள்.
4 சகோதர சகோதரிகள்மேல் காட்டும் அன்புக்கும் கடவுள்மேல் நாம் வைத்திருக்கும் அன்புக்கும் சம்பந்தம் இருக்கிறது. இதை யோசித்துப்பாருங்கள்: இதயம், உடலில் இருக்கும் நிறைய பாகங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், நாடித் துடிப்பை வைத்து இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்று ஒரு டாக்டரால் சொல்ல முடியும்.
5 நாடித் துடிப்பை வைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை ஒரு டாக்டர் கண்டுபிடிக்கிற மாதிரி, மற்றவர்கள்மேல் நமக்கு இருக்கிற அன்பை வைத்து கடவுள்மேல் நமக்கு அன்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். சகோதர சகோதரிகள்மேல் நாம் காட்டும் அன்பு குறைவாக இருந்தால், கடவுள்மேல் நமக்கு இருக்கும் அன்பும் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். சகோதர சகோதரிகள்மேல் நிறைய அன்பு காட்டினால், கடவுள்மேலும் நமக்கு நிறைய அன்பு இருக்கிறது என்று அர்த்தம்.
6. சகோதர சகோதரிகள்மேல் நாம் காட்டும் அன்பு குறைந்திருக்கிறது என்றால் அதை ஏன் லேசாக எடுத்துக்கொள்ள முடியாது? (1 யோவான் 4:7-9, 11)
6 சகோதர சகோதரிகள்மேல் நாம் காட்டும் அன்பு குறைந்திருந்தால், அதை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தம் பலவீனமாக இருக்கிறது என்பதற்கு அது ஒரு அறிகுறி. இதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “தான் பார்க்கிற சகோதரன்மேல் அன்பு காட்டாதவன், தான் பார்க்காத கடவுள்மேல் அன்பு காட்ட முடியாது.” (1 யோ. 4:20) இதிலிருந்து என்ன பாடம்? ‘ஒருவருக்கொருவர் அன்பு காட்டினால்தான்’ யெகோவாவுக்கு நம்மைப் பிடிக்கும்.—1 யோவான் 4:7-9, 11-ஐ வாசியுங்கள்.
ஒருவருக்கொருவர் எப்படி அன்பு காட்ட வேண்டும்?
7-8. எந்தெந்த வழிகளில் நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்டலாம்?
7 “ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும்” என்ற கட்டளை பைபிளில் திரும்பத் திரும்ப வருகிறது. (யோவா. 15:12, 17; ரோ. 13:8; 1 தெ. 4:9; 1 பே. 1:22; 1 யோ. 4:11) அன்பு என்பது இதயத்துக்கு உள்ளே இருக்கிற ஒரு குணம். இதயத்துக்கு உள்ளே இருப்பதை எந்தவொரு மனிதனாலும் பார்க்க முடியாது. அப்படியென்றால் நமக்குள்ளே இருக்கும் அன்பை எப்படி வெளியே காட்டலாம்? வார்த்தைகளாலும் செயல்களாலும்தான்!
8 அன்பைக் காட்டுவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. சில வழிகளைக் கவனிக்கலாம்: “ஒருவரோடு ஒருவர் உண்மை பேச வேண்டும்.” (சக. 8:16) “ஒருவருக்கொருவர் சமாதானமாக இருக்க” வேண்டும். (மாற். 9:50) ‘ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ள வேண்டும்.’ (ரோ. 12:10) “ஒருவரை ஒருவர் வரவேற்க வேண்டும்.” (ரோ. 15:7) “ஒருவரை ஒருவர் . . . தாராளமாக மன்னித்துக்கொண்டே” இருக்க வேண்டும். (கொலோ. 3:13) ‘ஒருவருடைய சுமைகளை ஒருவர் சுமந்துகொள்ள வேண்டும்.’ (கலா. 6:2) ‘ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்த வேண்டும்.’ (1 தெ. 4:18) ‘ஒருவரை ஒருவர் பலப்படுத்த வேண்டும்.’ (1 தெ. 5:11) ‘ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்ய வேண்டும்.’—யாக். 5:16.
9. மற்றவர்களை ஆறுதல்படுத்தும்போது அவர்கள்மேல் அன்பு காட்டுகிறோம் என்று எப்படி சொல்லலாம்? (படத்தையும் பாருங்கள்.)
9 அன்பு காட்டுவதற்கு நிறைய வழிகளை முந்தின பாராவில் பார்த்தோம். அவற்றில் ஒரு வழியைப் பற்றி இப்போது கொஞ்சம் ஆழமாக யோசிக்கலாம். “ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்துங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். ஆறுதல்படுத்துவதற்கும் அன்பு காட்டுவதற்கும் என்ன சம்பந்தம்? “ஆறுதல்” என்று பவுல் பயன்படுத்திய வார்த்தையின் அர்த்தத்தைப் பற்றி, ஒரு பைபிள் ஆராய்ச்சி புத்தகம் இப்படி சொல்கிறது: “ஒருவர் ரொம்ப கஷ்டமான சோதனையை அனுபவிக்கும்போது, அவருக்குப் பக்கத்திலேயே நின்று அவரை உற்சாகப்படுத்துவதை” அது குறிக்கிறது. வாழ்வுக்கான பாதையில் ஓட முடியாமல் சோர்ந்துபோய் இருக்கிற ஒருவரை ஆறுதல்படுத்தும்போது, அவரை எழுப்பிவிட்டு தொடர்ந்து ஓடுவதற்கு உதவுவதுபோல் இருக்கும். மற்றவர்கள் சாய்ந்து அழுவதற்கு நாம் தோள் கொடுக்கும் ஒவ்வொரு தடவையும் அவர்மேல் அன்பு காட்டுகிறோம் என்று அர்த்தம்.—2 கொ. 7:6, 7, 13.
10. கரிசனை காட்டுவதற்கும் ஆறுதல்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
10 கரிசனை காட்டுவதற்கும் மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் சம்பந்தம் இருக்கிறது. கரிசனை உள்ள ஒருவர் மற்றவர்களை எப்படியாவது ஆறுதல்படுத்த வேண்டும்... அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும்... என்று ஏங்குவார். நமக்குள்ளே கரிசனை இருந்தால்தான், நம்மால் மற்றவர்களை ஆறுதல்படுத்த முடியும். யெகோவா கரிசனையுள்ள கடவுளாக இருப்பதால்தான் மற்றவர்களை ஆறுதல்படுத்துகிறார் என்று பவுல் சொன்னார். யெகோவா “கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன். எல்லா விதமான ஆறுதலின் கடவுள்” என்று எழுதினார். (2 கொ. 1:3) “கனிவும் இரக்கமும்” என்ற வார்த்தைகள் மற்றவர்கள்மேல் கரிசனை காட்டுவதைக் குறிக்கிறது. மக்கள்மேல் யெகோவாவுக்கு அவ்வளவு கரிசனை இருப்பதால்தான் அவர் “கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்,” அதாவது, கனிவு மற்றும் இரக்கத்தின் ஊற்று என்று பைபிள் சொல்கிறது. அந்தக் கரிசனையால்தான், “நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் அவர் நமக்கு ஆறுதல் தருகிறார்.” (2 கொ. 1:4) தாகத்தில் தவிக்கிற ஒருவருக்கு, ஊற்றிலிருந்து வருகிற சுத்தமான தண்ணீர் புத்துணர்ச்சி தருவதுபோல், சோர்ந்துபோய் இருக்கிறவர்களுக்கு யெகோவா புத்துணர்ச்சியையும் ஆறுதலையும் தருகிறார். நாம் எப்படி யெகோவாவைப் போலவே கரிசனையோடு மற்றவர்களை ஆறுதல்படுத்தலாம்? அதற்கு, சில குணங்களை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
11. கொலோசெயர் 3:12 மற்றும் 1 பேதுரு 3:8 காட்டுவதுபோல் மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்கு நாம் என்ன குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
11 அன்பு காட்டி ‘எப்போதுமே ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்த வேண்டும்’ என்றால் அனுதாபத்தையும் சகோதரப் பாசத்தையும் கருணையையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். (கொலோசெயர் 3:12-ஐயும் 1 பேதுரு 3:8-ஐயும் வாசியுங்கள்.) இந்த குணங்களும் கரிசனையும் நம்முடைய சுபாவத்தில் ஒன்றாக இருந்தால், பிரச்சினையில் தவிக்கிற ஒருவரை பார்க்கும்போது நம்மால் அவரை ஆறுதல்படுத்தாமல் இருக்கவே முடியாது. “இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது. நல்ல மனுஷன் தன் இதயத்தில் நிறைந்திருக்கிற நல்ல விஷயங்களையே பேசுகிறான்” என்று இயேசுவும் சொன்னார். (மத். 12:34, 35) சகோதர சகோதரிகளை ஆறுதல்படுத்துவது நமக்குள்ளே இருக்கிற அன்பை வெளியே காட்டுவதற்கான முக்கியமான வழி.
மற்றவர்கள்மேல் இருக்கிற அன்பு குறையாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?
12. (அ) நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்? (ஆ) நாம் என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
12 நாம் ‘தொடர்ந்து ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும்’ என்றுதான் ஆசைப்படுகிறோம். (1 யோ. 4:7) ஆனால், “பெரும்பாலானவர்களின் அன்பு குறைந்துவிடும்” என்று இயேசு கொடுத்த எச்சரிக்கையையும் நாம் மறந்துவிடக்கூடாது. (மத். 24:12) தன்னுடைய சீஷர்களில் பெரும்பாலானவர்கள் அன்பு காட்டுவதை நிறுத்திவிடுவார்கள் என்று இயேசு இங்கே சொல்லவில்லை. இருந்தாலும், நம்மை சுற்றி இருக்கிற உலகத்தில் அன்பு குறைந்துகொண்டே வருகிறது. அது நம்மைப் பாதிக்காத மாதிரி நாம் கவனமாக இருக்க வேண்டும். அதனால், இந்த முக்கியமான கேள்வியை நாம் ஒவ்வொருவரும் யோசித்துப்பார்க்கலாம்: ‘சகோதரர்கள்மேல் எனக்கு இருக்கிற அன்பு குறைந்திருக்கிறதா என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?’
13. மற்றவர்கள்மேல் நாம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பது எந்த சூழ்நிலையில் நன்றாகத் தெரிந்துவிடும்?
13 சில சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்து, சகோதரர்கள்மேல் நமக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். (2 கொ. 8:8) சகோதரர்கள் சில தவறுகளை செய்யும்போது அல்லது நம்மை காயப்படுத்தும்போது நாம் அவர்கள்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பது தெரிந்துவிடும். “எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்; ஏனென்றால், அன்பு ஏராளமான பாவங்களை மூடும்” என்று பேதுரு சொன்னார்.—1 பே. 4:8.
14. 1 பேதுரு 4:8 செல்வதுபோல் எப்படிப்பட்ட அன்பை நாம் காட்ட வேண்டும்? உதாரணத்தோடு விளக்குங்கள்
14 பேதுரு சொன்ன வார்த்தைகளை இப்போது அலசிப்பார்க்கலாம். 8-வது வசனத்தின் முதல் பகுதியில் ‘ஆழ்ந்த அன்பைக்’ காட்ட வேண்டும் என்று அவர் சொல்கிறார். அவர் பயன்படுத்தியிருக்கிற “ஆழ்ந்த” என்ற வார்த்தை, ஏதோவொரு பொருளை “நன்றாக விரிப்பதை” குறிக்கிறது. வசனத்தின் இரண்டாவது பாகத்தில், ஆழமான அன்பு இருந்தால் சகோதரர்களுடைய பாவத்தை மூட முடியும் என்று பேதுரு சொல்கிறார். இதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தை யோசியுங்கள்: உங்களிடம் ஒரு டேபிள் இருக்கிறது. ஆனால், அதன்மேல் ஏகப்பட்ட கீரல்களும் கறைகளும் இருக்கின்றன. அது பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இல்லை. அதனால், அதன்மேல் ஒரு துணியை விரிக்கிறீர்கள். அந்தத் துணியை நான்கு பக்கமும் நன்றாக இழுத்துவிடுகிறீர்கள். இப்படி, ஓரிரு கறைகளை மட்டுமல்ல, அந்த டேபிள்மேல் இருக்கிற மொத்த கறைகளையும் மூடி விடுகிறீர்கள். இந்தத் துணி மாதிரிதான் நாம் காட்டுகிற ஆழமான அன்பு! சகோதர சகோதரிகளிடம் இருக்கும் ஓரிரு குறைகளை மட்டுமல்ல, “ஏராளமான பாவங்களை” ஆழமான அன்பினால் மூட முடியும்.
15. சகோதர சகோதரிகள்மேல் ஆழமான அன்பு இருந்தால் நாம் என்ன செய்வோம்? (கொலோசெயர் 3:13)
15 மற்றவர்கள்மேல் ஆழமான அன்பு இருந்தால்தான் அவர்கள் செய்கிற தவறுகளை நம்மால் மன்னிக்க முடியும்; கஷ்டமாக இருந்தாலும் மன்னிக்க முடியும்! (கொலோசெயர் 3:13-ஐ வாசியுங்கள்.) நாம் மற்றவர்களை மன்னித்தால் யெகோவாவுக்கு நம்மை ரொம்பப் பிடிக்கும். மற்றவர்கள் செய்த தவறுகளையும் அவர்களிடம் இருக்கிற கடுப்பேத்தும் குணங்களையும் தாண்டி அவர்களை மன்னிப்பதற்கு வேறு எது உதவும்?
16-17. சகோதர சகோதரிகள் செய்கிற சின்ன சின்ன தவறுகளை மன்னிப்பதற்கு வேற எது உதவும்? உதாரணத்தோடு விளக்குங்கள். (படத்தையும் பாருங்கள்.)
16 சகோதர சகோதரிகளிடம் இருக்கிற குறைகளை அல்ல, நல்ல விஷயங்களைப் பாருங்கள். இந்த உதாரணத்தைப் பாருங்கள். சகோதர சகோதரிகள் சிலர் உங்கள் வீட்டுக்கு சாப்பிட வந்திருக்கிறார்கள். நீங்கள் ஒன்றாக சேர்ந்து ரொம்ப சந்தோஷமாக நேரம் செலவு செய்கிறீர்கள். வீட்டுக்குக் கிளம்புவதற்கு முன்பு எல்லாரும் ஒன்றாக நின்று ஃபோட்டோ எடுக்கிறீர்கள். ஆனால், அது சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வது என்று, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஃபோட்டோக்களை எடுக்கிறீர்கள். நீங்கள் எடுத்த ஃபோட்டோக்களைப் பார்க்கும்போது, ஒரு ஃபோட்டோவில் ஒரு சகோதரர் சிரிக்காமல் முகத்தை ஒருமாதிரி வைத்திருக்கிறார். இப்போது என்ன செய்வீர்கள்? நன்றாக இல்லாத ஃபோட்டோவை டெலீட் செய்துவிடுவீர்கள், அதாவது அழித்துவிடுவீர்கள். நன்றாக இருக்கிற ஃபோட்டோவை, அதாவது அந்த சகோதரர் சிரித்த மாதிரி இருக்கிற ஃபோட்டோவை வைத்துக்கொள்வீர்கள்.
17 நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்கிற விஷயங்களும் இந்த ஃபோட்டோவைப் போலத்தான் இருக்கிறது. பொதுவாக, சகோதர சகோதரிகளுடன் சந்தோஷமாக நேரம் செலவு செய்த நல்ல நினைவுகள் நமக்கு இருக்கும். ஆனால், அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவர் நம்மைக் காயப்படுத்தி இருக்கலாம். அப்போது நீங்கள் என்ன செய்யலாம்? நன்றாக இல்லாத ஃபோட்டோவை அழித்து விடுவதுபோல், அந்த நினைவையும் நாம் அழித்துவிடலாம். (நீதி. 19:11; எபே. 4:32) அந்த சகோதரருடன் சந்தோஷமாக நேரம் செலவு செய்த நிறைய நல்ல நினைவுகள் இருப்பதால், மனதை காயப்படுத்திய நினைவுகளை நாம் தாராளமாக மறந்துவிடலாம். நல்ல நினைவுகளை பத்திரப்படுத்தி பாதுகாக்கலாம்.
அன்பு காட்டுவது ஏன் இப்போது ரொம்ப முக்கியம்?
18. அன்பு காட்டுவதைப் பற்றி இந்தக் கட்டுரையில் என்னவெல்லாம் கற்றுக்கொண்டோம்?
18 ஒருவர்மேல் ஒருவருக்கு இருக்கிற அன்பை நாம் ஏன் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்? மற்றவர்கள்மேல் நமக்கு அன்பு இருந்தால்தான், யெகோவாமேல் நமக்கு அன்பு இருக்கிறது என்று அர்த்தம். அந்த அன்பை நாம் எப்படி வெளிக்காட்டலாம்? ஒரு வழி: மற்றவர்களை ஆறுதல்படுத்துவதன் மூலம். நமக்குள் கரிசனை இருந்தால், ‘எப்போதுமே ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்துவோம்.’ மற்றவர்கள்மேல் இருக்கிற அன்பு குறையாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்? கஷ்டமாக இருந்தாலும் மற்றவர்கள் செய்கிற தவறுகளை மன்னிப்பதன் மூலம்!
19. ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுவது என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு ஏன் ரொம்ப முக்கியம்?
19 என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு அன்பு காட்டுவது ரொம்ப முக்கியம். ஏன்? இதற்கான பதிலை பேதுரு சொல்கிறார்: “எல்லாவற்றுக்கும் முடிவு நெருங்கிவிட்டது; அதனால் . . . ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்.” (1 பே. 4:7, 8) இந்த உலகத்துக்கு முடிவு நெருங்க நெருங்க என்ன நடக்கும்? “நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால் எல்லா தேசத்து மக்களும் உங்களை வெறுப்பார்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 24:9) உலகத்திலிருந்து வருகிற வெறுப்பைத் தாக்குப்பிடிப்பதற்கு நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சாத்தான் கண்டிப்பாக நம்மைப் பிரிப்பதற்கு முயற்சி செய்வான். ஆனால், நாம் அன்பினால் இணைக்கப்பட்டிருந்தோம் என்றால் அவன் கண்டிப்பாக தோற்றுப்போவான். ஏனென்றால், “எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான்.”—கொலோ. 3:14; பிலி. 2:1, 2.
பாட்டு 130 மன்னியுங்கள்
a சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்ட வேண்டிய அவசியம் முன்பு இருந்ததைவிட இப்போது ரொம்ப அதிகமாக இருக்கிறது. ஏன் அப்படி சொல்கிறோம்? நாம் எப்படி இன்னும் அதிகமாக அன்பு காட்டலாம்?