தனிமையைத் துரத்தியடிக்க—பைபிள் எப்படி உதவும்?
இந்த உலகத்தில் நம் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சினைதான் தனிமை... அதை உடனடியாகத் துரத்தியடிக்க வேண்டும்... என்று 2023-ல் உடல்நல நிபுணர்கள் புரிந்துகொண்டார்கள். தனிமையை உண்மையில் துரத்தியடிக்க முடியுமா?
“தனிமையில் தவிப்பதும் மற்றவர்களோடு ஒட்டாமல் ஒதுங்கியிருப்பதும் நம் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் ஒரு பெரிய ஆபத்து” என்று சொல்கிறார் அமெரிக்க தலைமை அறுவை சிகிச்சையாளரான டாக்டர் விவேக் மூர்த்தி. அதேசமயத்தில், “அதை நம்மால் துரத்தியடிக்க முடியும்” என்றும் சொல்கிறார். எப்படி? “ஒவ்வொரு நாளும் நம் உறவுகளைப் பலப்படுத்த சின்னச் சின்ன விஷயங்களைச் செய்ய வேண்டும்” என்று சொல்கிறார்.a
மற்றவர்களோடு ஒட்டாமல் ஒதுங்கியிருக்கும்போது மட்டும்தான் தனிமையில் தவிப்போம் என்றில்லை. நிறைய பேரோடு இருக்கும்போதும் சிலர் தனிமையில் வாடலாம். தனிமையின் கொடுமைக்கு எது காரணமாக இருந்தாலும் சரி, பைபிள் நமக்கு உதவும். நண்பர்களோடு இன்னும் நெருக்கமாவதற்கு நல்ல நல்ல ஆலோசனைகளை அது தருகிறது. அந்த ஆலோசனைகளின்படி செய்தால் தனிமையைத் துரத்தியடிக்க முடியும்.
பைபிள் தரும் உதவி
மனம்விட்டுப் பேசுங்கள், காதுகொடுத்துக் கேளுங்கள். நல்ல நண்பர்களாக இருப்பதற்கு மனம்விட்டுப் பேசுவது மட்டும் போதாது, நன்றாகக் காதுகொடுத்துக் கேட்பதும் முக்கியம். மற்றவர்கள்மேல் நீங்கள் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறீர்களோ அந்தளவுக்கு அவர்களோடு உங்களுக்கு இருக்கும் நட்பு பலமாகும்.
பைபிள் ஆலோசனை: “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”—பிலிப்பியர் 2:4.
நட்பு வட்டத்தைப் பெரிதாக்குங்கள். உங்களைவிடப் பெரியவர்கள்... உங்களைவிடச் சிறியவர்கள்... வேறொரு கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள்... இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர்கள்... என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல் மற்றவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கத் தயாராக இருங்கள்.
பைபிள் ஆலோசனை: “உங்கள் இதயக் கதவை அகலமாகத் திறங்கள்.”—2 கொரிந்தியர் 6:13.
மற்றவர்களோடு இருக்கும் நட்பை எப்படிப் பலப்படுத்தலாம் என்று இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, “நட்புக்கான தீரா பசியைத் தீர்த்தல்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
a Our Epidemic of Loneliness and Isolation: The U.S. Surgeon General’s Advisory on the Healing Effects of Social Connection and Community, 2023.