அதிகாரம் 124
கிறிஸ்து காட்டிக்கொடுக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்
மத்தேயு 26:47-56 மாற்கு 14:43-52 லூக்கா 22:47-53 யோவான் 18:2-12
தோட்டத்தில் இயேசுவை யூதாஸ் காட்டிக்கொடுக்கிறான்
ஒருவரின் காதை பேதுரு வெட்டுகிறார்
இயேசு கைது செய்யப்படுகிறார்
நேரம் இப்போது நடுராத்திரியைத் தாண்டிவிட்டது. இயேசுவைக் காட்டிக்கொடுத்தால் 30 வெள்ளிக் காசுகள் தருவதாக, யூதாசிடம் குருமார்கள் சொல்லியிருந்தார்கள். அதனால் முதன்மை குருமார்கள், பரிசேயர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு பெரிய கூட்டத்தோடு இயேசுவைத் தேடி யூதாஸ் வருகிறான். ஆயுதம் ஏந்திய ரோம வீரர்களும் அவர்களுடைய தளபதியும் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள்.
பஸ்கா உணவு சாப்பிடும்போது, யூதாசை இயேசு வெளியே அனுப்பிவிட்டார். அவன் நேராக முதன்மை குருமார்களிடம் போயிருக்கலாம். (யோவான் 13:27) அவர்கள் தங்களுடைய அதிகாரிகளையும் போர்வீரர்களையும் ஒன்றுகூட்டுகிறார்கள். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் பஸ்காவைக் கொண்டாடிய அந்த மாடி அறைக்கு யூதாஸ் அவர்களைக் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம். அதற்குப் பிறகு, அந்தக் கூட்டத்தார் கீதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து, அந்தத் தோட்டத்துக்குப் போகிறார்கள். ஆயுதங்கள் மட்டுமல்லாமல், தங்கள் கையில் விளக்குகளையும் தீப்பந்தங்களையும் பிடித்துக்கொண்டு இயேசுவை எப்படியாவது பிடித்தே தீர வேண்டும் என்று போகிறார்கள்.
யூதாஸ் அந்தக் கூட்டத்தாருடன் ஒலிவ மலைமேல் ஏறிப் போகிறான். இயேசு எங்கே இருப்பார் என்பதில் அவனுக்கு இப்போது எந்தச் சந்தேகமும் இல்லை. கடந்த ஒரு வாரமாக, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் பெத்தானியாவுக்கும் எருசலேமுக்கும் இடையே பல தடவை பயணம் செய்திருக்கிறார்கள். அந்தச் சமயங்களிலெல்லாம், அடிக்கடி கெத்செமனே தோட்டத்தில் கொஞ்ச நேரம் செலவழிப்பது அவர்களுடைய வழக்கம். ஆனால், இப்போது ராத்திரி நேரம். அந்தத் தோட்டத்தில் இருக்கிற ஒலிவ மரங்களின் நிழலில் இயேசு இருக்கலாம். அப்படியிருக்கும்போது, போர்வீரர்கள் எப்படி இயேசுவை அடையாளம் கண்டுகொள்வார்கள்? ஒருவேளை, அவர்கள் இதற்குமுன் இயேசுவைப் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். அதனால்தான் யூதாஸ் அவர்களிடம், “நான் யாருக்கு முத்தம் கொடுக்கிறேனோ அவர்தான் அந்த ஆள்; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள், காவலோடு கொண்டுபோங்கள்” என்று சொல்லியிருந்தான்.—மாற்கு 14:44.
அந்தக் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு கெத்செமனே தோட்டத்துக்குள் யூதாஸ் நுழைகிறான். இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் அங்கே பார்த்ததும், நேராக அவரிடம் போகிறான். “ரபீ, வாழ்க!” என்று சொல்லி, மென்மையாக முத்தம் கொடுக்கிறான். அப்போது இயேசு, “நீ எதற்காக இங்கே வந்தாய்?” என்று கேட்கிறார். (மத்தேயு 26:49, 50) இயேசுவுக்குப் பதில் தெரியும். அதனால், “யூதாஸ், மனிதகுமாரனை முத்தம் கொடுத்தா காட்டிக்கொடுக்கிறாய்?” என்று கேட்கிறார். (லூக்கா 22:48) அந்தத் துரோகியிடம் அதற்குமேல் அவர் எதுவும் பேசவில்லை.
இயேசு அந்தக் கூட்டத்தாரிடம் நேராகப் போய், தீப்பந்தங்கள் மற்றும் விளக்குகளின் வெளிச்சத்தில் நின்று, “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்” என்று சொல்கிறார்கள். அப்போது அவர், “நான்தான்” என்று தைரியமாகச் சொல்கிறார். (யோவான் 18:4, 5) அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் அந்த ஆட்கள் தரையில் விழுகிறார்கள்.
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இயேசு அங்கிருந்து தப்பித்து ஓடிவிடவில்லை. அவர்கள் யாரைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று மறுபடியும் கேட்கிறார். அவர்கள் மறுபடியும், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்” என்று சொல்கிறார்கள். அப்போது இயேசு, “நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே. என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” என்று அமைதியாகச் சொல்கிறார். இந்த நெருக்கடியான நேரத்திலும்கூட, அப்போஸ்தலர்களில் ஒருவரைக்கூட இழக்கப்போவதில்லை என்று சற்று முன்பு சொன்னதை இயேசு நினைத்துப்பார்க்கிறார். (யோவான் 6:39; 17:12) தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களை இயேசு பாதுகாக்கிறார். ‘அழிவின் மகனான’ யூதாசைத் தவிர வேறு யாரையும் அவர் இழக்கவில்லை. (யோவான் 18:7-9) அதனால், அவர்களை விட்டுவிடும்படி அந்தக் கூட்டத்தாரிடம் இயேசு சொல்கிறார்.
போர்வீரர்கள் எழுந்து, இயேசுவை நெருங்கும்போதுதான், அங்கே என்ன நடக்கிறது என்பது அப்போஸ்தலர்களுக்குப் புரிகிறது. உடனே, “எஜமானே, நாங்கள் வாளால் வெட்டலாமா?” என்று அவர்கள் கேட்கிறார்கள். (லூக்கா 22:49) இயேசு பதில் சொல்வதற்கு முன்னால், அப்போஸ்தலர்களிடம் இருந்த வாள்களில் ஒன்றை பேதுரு எடுத்து, தலைமைக் குருவின் வேலைக்காரனான மல்குசைத் தாக்குகிறார். அதில், மல்குசின் வலது காது அறுந்துபோகிறது.
அப்போது இயேசு, மல்குசின் காதைத் தொட்டு அவனைக் குணமாக்குகிறார். பேதுருவைப் பார்த்து, “உன் வாளை உறையில் போடு” என்று கட்டளையிடுகிறார். “வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என்ற முக்கியமான பாடத்தை அப்போது கற்பிக்கிறார். கைது செய்யப்பட இயேசு தயாராக இருக்கிறார். அதனால்தான், “நான் அப்படிச் செய்தால், இதெல்லாம் நடக்க வேண்டுமென்று சொல்கிற வேதவசனங்கள் எப்படி நிறைவேறும்?” என்று கேட்கிறார். (மத்தேயு 26:52, 54) அதோடு, “என் தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கிற கிண்ணத்திலிருந்து நான் குடித்தாக வேண்டும், இல்லையா?” என்றும் கேட்கிறார். (யோவான் 18:11) உயிரே போனாலும், கடவுளுடைய விருப்பத்தின்படி நடக்க இயேசு தயாராக இருக்கிறார்.
பிறகு அந்தக் கூட்டத்தாரைப் பார்த்து, “ஒரு கொள்ளைக்காரனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைப் பிடிக்க வந்திருக்கிறீர்களா? நான் தினமும் ஆலயத்தில் உட்கார்ந்து கற்பித்துக்கொண்டிருந்தேன்; அப்போதெல்லாம் நீங்கள் என்னைக் கைது செய்யவில்லை. ஆனால், தீர்க்கதரிசிகள் எழுதிவைத்த வசனங்கள் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்திருக்கின்றன” என்று சொல்கிறார்.—மத்தேயு 26:55, 56.
போர்வீரர்களும், படைத் தளபதியும், அதிகாரிகளும் இயேசுவைப் பிடித்துக் கட்டுகிறார்கள். அதைப் பார்த்ததும் அப்போஸ்தலர்கள் அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள். ஆனால், “ஓர் இளம் மனிதர்” இயேசுவைப் பின்தொடர விரும்புவதால், அந்தக் கூட்டத்தாருடன் போகிறார். ஒருவேளை, அது சீஷராகிய மாற்குவாக இருக்கலாம். (மாற்கு 14:51) சிலர் அந்த இளம் மனிதரை அடையாளம் கண்டுபிடித்து, அவரைப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். அதனால், தான் போட்டிருந்த நாரிழை உடையை அப்படியே விட்டுவிட்டு அவர் ஓடிவிடுகிறார்.