அதிகாரம் 133
இயேசு அடக்கம் செய்யப்படுகிறார்
மத்தேயு 27:57–28:2 மாற்கு 15:42–16:4 லூக்கா 23:50–24:3 யோவான் 19:31–20:1
இயேசுவின் உடல் மரக் கம்பத்திலிருந்து இறக்கப்படுகிறது
அடக்கம் செய்வதற்காக இயேசுவின் உடல் தயார் செய்யப்படுகிறது
கல்லறை காலியாக இருப்பதைப் பெண்கள் பார்க்கிறார்கள்
இப்போது நிசான் 14, வெள்ளிக்கிழமை மத்தியானம். சூரியன் மறைந்த பிறகு, ஓய்வுநாளான நிசான் 15 ஆரம்பமாகும். இயேசு இறந்துவிட்டார், ஆனால் அவர் பக்கத்தில் இருக்கிற மரக் கம்பங்களில் ஏற்றப்பட்ட கொள்ளைக்காரர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். இறந்தவரின் உடலை ‘ராத்திரி முழுவதும் மரக் கம்பத்திலேயே விட்டுவிடக் கூடாது, அந்த நாளிலேயே’ அதைப் புதைக்க வேண்டும் என்று திருச்சட்டம் சொல்கிறது.—உபாகமம் 21:22, 23.
அதோடு, வெள்ளிக்கிழமை ஆயத்த நாள் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், ஓய்வுநாள் ஆரம்பிப்பதற்கு முன்பு முடிக்க வேண்டிய சமையல் வேலைகளையும் மற்ற வேலைகளையும் மக்கள் அப்போது செய்வார்கள். சூரியன் மறைந்த பிறகு, இரட்டை ஓய்வுநாள், அதாவது பெரிய ஓய்வுநாள் ஆரம்பமாகும். (யோவான் 19:31) ஏழு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிற புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை நிசான் 15-ல் ஆரம்பிக்கிறது. அந்தப் பண்டிகையின் முதல் நாள் எப்போதுமே ஓய்வுநாளாக இருக்கும். (லேவியராகமம் 23:5, 6) இந்தச் சமயம் புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை, வழக்கமான ஓய்வுநாளில், அதாவது வாரத்தின் ஏழாம் நாளில், ஆரம்பிக்கிறது. இந்த இரண்டு ஓய்வுநாட்களும் ஒரே நாளில் வந்திருப்பதால், இது பெரிய ஓய்வுநாள் என்று சொல்லப்படுகிறது.
யூதர்கள் பிலாத்துவிடம் போய் இயேசுவையும் அவர் பக்கத்தில் இருக்கிற இரண்டு கொள்ளைக்காரர்களையும் சீக்கிரம் சாகடிக்கும்படி சொல்கிறார்கள். பொதுவாக, குற்றவாளிகளைச் சீக்கிரம் சாகடிப்பதற்கு அவர்களுடைய கால்களை உடைப்பார்கள். அதற்குப் பிறகு, மூச்சு விடுவதற்காக அந்தக் குற்றவாளிகளால் தங்களுடைய கால்களைப் பயன்படுத்தி உடலை நிமிர்த்த முடியாது. அதனால், படைவீரர்கள் வந்து இரண்டு கொள்ளைக்காரர்களின் கால்களையும் உடைக்கிறார்கள். ஆனால், இயேசு இறந்துவிட்டது போலத் தெரிகிறது. அதனால், அவருடைய கால்களை அவர்கள் உடைக்காமல் போய்விடுகிறார்கள். “அவருடைய எல்லா எலும்புகளையும் அவர் பாதுகாக்கிறார். அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படுவதில்லை” என்று சங்கீதம் 34:20-ல் சொல்லப்பட்ட வார்த்தைகள் நிறைவேறுகின்றன.
இயேசு உண்மையிலேயே இறந்துவிட்டாரா என்று உறுதி செய்துகொள்வதற்காக, படைவீரர்களில் ஒருவன் அவருடைய விலாவில், அவருடைய இதயம் இருக்கிற பக்கத்தில் குத்துகிறான். ‘உடனே இரத்தமும் தண்ணீரும் வெளியே வருகின்றன.’ (யோவான் 19:34) “அவர்கள், யாரைக் குத்தினார்களோ அவரைப் பார்ப்பார்கள்” என்ற வேதவசனம் அப்போது நிறைவேறுகிறது.—சகரியா 12:10.
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த “பணக்காரரும்” நியாயசங்கத்தின் மதிப்புக்குரிய உறுப்பினர்களில் ஒருவருமான யோசேப்பு அங்கே இருக்கிறார். (மத்தேயு 27:57) அவர் “நல்லவர்” என்றும், “நீதிமான்” என்றும் சொல்லப்படுகிறார். அவர் ‘கடவுளுடைய அரசாங்கத்துக்காகக் காத்திருந்தவர்.’ அவர் “இயேசுவின் சீஷர்களில் ஒருவர். ஆனால், யூதர்களுக்குப் பயந்து அதை வெளியே சொல்லாமல் இருந்தவர்.” நியாயசங்கம் இயேசுவுக்குக் கொடுத்த தீர்ப்பை அவர் ஆதரிக்கவில்லை. (லூக்கா 23:50; மாற்கு 15:43; யோவான் 19:38) யோசேப்பு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பிலாத்துவிடம் போய் இயேசுவின் உடலைக் கேட்கிறார். பிலாத்து உடனே சம்பந்தப்பட்ட படை அதிகாரியைக் கூப்பிட்டு விசாரிக்கிறார். இயேசு இறந்துவிட்டதை அவர் உறுதி செய்தவுடன், இயேசுவின் உடலை எடுத்துக்கொண்டு போக யோசேப்புக்கு பிலாத்து அனுமதி கொடுக்கிறார்.
இயேசுவின் உடலை மரக் கம்பத்திலிருந்து யோசேப்பு இறக்குகிறார். அவரை அடக்கம் செய்வதற்கு முன், தான் வாங்கிவந்த சுத்தமான, உயர்தரமான நாரிழைத் துணியால் அவருடைய உடலைச் சுற்றிக் கட்டுகிறார். “முதல் தடவை ஒரு ராத்திரி நேரத்தில் [இயேசுவை] சந்தித்திருந்த” நிக்கொதேமுவும் இயேசுவின் உடலைத் தயார்படுத்த உதவி செய்கிறார். (யோவான் 19:39) வெள்ளைப்போளமும் அகில் தூளும் கலந்த விலை உயர்ந்த நறுமணக் கலவையைக் கிட்டத்தட்ட நூறு ராத்தல் (33 கிலோ) கொண்டுவருகிறார். யூதர்கள் அடக்கம் செய்கிற முறைப்படி, இந்த நறுமணப் பொருள்கள் இயேசுவின் உடலைச் சுற்றிக் கட்டப்படுகின்றன.
அந்த இடத்துக்குப் பக்கத்தில், ஒரு பாறையில் வெட்டப்பட்ட ஒரு புதிய கல்லறை இருக்கிறது. அது யோசேப்புக்குச் சொந்தமானது. இதற்கு முன் யாருமே அதில் அடக்கம் செய்யப்படவில்லை. இயேசுவின் உடலை அந்தக் கல்லறையில் வைத்த பிறகு, அதன் வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைக்கிறார்கள். ஓய்வுநாள் ஆரம்பிப்பதற்கு முன்பு, இதையெல்லாம் அவசர அவசரமாகச் செய்கிறார்கள். இயேசுவின் உடலைத் தயார் செய்வதற்கு மகதலேனா மரியாளும் சின்ன யாக்கோபின் அம்மாவான மரியாளும் உதவி செய்திருக்கலாம். ஓய்வுநாள் முடிந்த பிறகு, இயேசுவின் உடலில் போடுவதற்கு, “நறுமணப் பொருள்களையும் வாசனை எண்ணெய்களையும் தயார் செய்வதற்காக” அவர்கள் வேகவேகமாக வீட்டுக்குத் திரும்பிப் போகிறார்கள்.—லூக்கா 23:56.
அடுத்த நாளான ஓய்வுநாளில், முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் போய், “அந்த மோசக்காரன் உயிரோடு இருந்தபோது, ‘மூன்று நாட்களுக்குப் பிறகு நான் உயிரோடு எழுப்பப்படுவேன்’ என்று சொன்னது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. அதனால், அவனுடைய சீஷர்கள் வந்து அவன் உடலைத் திருடிக்கொண்டு போய், ‘அவர் உயிரோடு எழுப்பப்பட்டார்!’ என்று மக்களிடம் சொல்லிவிடாதபடி, மூன்றாம் நாள்வரை கல்லறையைக் காவல் காப்பதற்குக் கட்டளையிடுங்கள்; இல்லையென்றால், முதலில் செய்த மோசடியைவிட இந்த மோசடி படுமோசமாக இருக்கும்” என்று சொல்கிறார்கள். அதற்கு பிலாத்து, “காவலர்களைக் கூட்டிக்கொண்டு போய், உங்களால் முடிந்தளவு காவல் காத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 27:63-65.
ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையிலேயே, மகதலேனா மரியாளும், யாக்கோபின் அம்மாவான மரியாளும், மற்ற பெண்களும் இயேசுவின் உடலில் போடுவதற்காக நறுமணப் பொருள்களை எடுத்துக்கொண்டு கல்லறைக்குப் போகிறார்கள். “கல்லறை வாசலில் இருக்கிற கல்லை நமக்காக யார் உருட்டிப் போடுவார்கள்?” என்று அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். (மாற்கு 16:3) ஆனால், அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு, யெகோவாவின் தூதர் அந்தக் கல்லை உருட்டிப் போட்டிருந்தார். காவலர்கள் யாரும் அங்கே இல்லை, கல்லறையும் காலியாக இருக்கிறது!