அதிகாரம் 7
கடவுளைப் போல உயிரை உயர்வாக மதிக்கிறீர்களா?
“உயிரின் ஊற்று நீங்கள்தான்.” —சங்கீதம் 36:9.
1, 2. (அ) யெகோவா நமக்கு என்ன அருமையான பரிசைக் கொடுத்திருக்கிறார்? (ஆ) நாம் மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு யெகோவா எதைக் கொடுத்திருக்கிறார்?
யெகோவா நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அருமையான பரிசைக் கொடுத்திருக்கிறார். அதுதான் உயிர் என்ற பரிசு. (ஆதியாகமம் 1:27) நாம் மிகச் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நாம் நல்ல தீர்மானங்களை எடுக்க உதவும் நியமங்களை அவர் கொடுத்திருக்கிறார். “சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க” இந்த நியமங்களை நாம் பயன்படுத்த வேண்டும். (எபிரெயர் 5:14) அப்படிச் செய்யும்போது தெளிவாக யோசிப்பதற்கு யெகோவா நமக்குப் பயிற்சி தர நாம் அனுமதிக்கிறோம். கடவுளுடைய நியமங்களின்படி நாம் வாழும்போது நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அப்போதுதான், நியமங்கள் எவ்வளவு அருமையானவை என்பதை நாம் புரிந்துகொள்வோம்.
2 நம் வாழ்க்கையில் சிக்கலான சூழ்நிலைகள் வரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கு உதவும் நேரடிச் சட்டங்கள் பைபிளில் இல்லையென்றால் என்ன செய்வது? உதாரணத்துக்கு, சிகிச்சையின்போது இரத்தத்தைப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் எதுவும் பைபிளில் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் எப்படி நல்ல தீர்மானங்கள் எடுப்பது? அதற்கு உதவும் நியமங்கள் பைபிளில் இருக்கின்றன. உயிரையும் இரத்தத்தையும் யெகோவா எப்படிக் கருதுகிறார் என்பதை அவை நமக்குக் கற்றுத்தருகின்றன. அவற்றை நாம் புரிந்துகொண்டால், நம்மால் ஞானமான தீர்மானங்கள் எடுக்க முடியும்; நம் மனசாட்சியும் சுத்தமாக இருக்கும். (நீதிமொழிகள் 2:6-11) அந்த நியமங்களில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
உயிரையும் இரத்தத்தையும் கடவுள் எப்படிக் கருதுகிறார்?
3, 4. (அ) இரத்தத்தைப் பற்றிய தன்னுடைய கண்ணோட்டத்தை கடவுள் எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்? (ஆ) இரத்தம் எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது?
3 இரத்தம் புனிதமானது என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால், அது உயிரைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. உயிரை மிகவும் மதிப்புள்ளதாக யெகோவா கருதுகிறார். காயீன், தன் தம்பியைக் கொலை செய்த பிறகு யெகோவா அவனிடம், “உன் தம்பியின் இரத்தம் என்னிடம் நீதி கேட்டு இந்த மண்ணிலிருந்து கதறுகிறது” என்று சொன்னார். (ஆதியாகமம் 4:10) ஆபேலின் இரத்தம் அவருடைய உயிரைப் பிரதிநிதித்துவம் செய்தது. “உன் தம்பியின் இரத்தம்” என்று யெகோவா சொன்னபோது அவர் ஆபேலின் உயிரைத்தான் அர்த்தப்படுத்தினார்.
4 நோவாவின் காலத்தில் வந்த பெருவெள்ளத்துக்குப் பிறகு, மனிதர்கள் இறைச்சியைச் சாப்பிடலாம் என்று கடவுள் சொன்னார். ஆனால், “இறைச்சியை நீங்கள் இரத்தத்தோடு சாப்பிடக் கூடாது; ஏனென்றால், இரத்தம்தான் உயிர்” என்று குறிப்பாகச் சொன்னார். (ஆதியாகமம் 9:4) இந்தக் கட்டளை, நோவாவின் சந்ததியில் வந்த எல்லாருக்குமே பொருந்துகிறது. யெகோவாவைப் பொறுத்தவரை இரத்தம் உயிரைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. நாமும் இரத்தத்தை அப்படித்தான் கருத வேண்டும்.—சங்கீதம் 36:9.
5, 6. உயிரையும் இரத்தத்தையும் யெகோவா கருதும் விதத்தைப் பற்றி திருச்சட்டம் என்ன சொன்னது?
5 மோசேக்குக் கொடுத்த திருச்சட்டத்தில் யெகோவா இப்படிக் குறிப்பிட்டார்: “உங்களில் யாராவது . . . இரத்தத்தைச் சாப்பிட்டால் நான் அவனை ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன். ஏனென்றால், உயிரினங்களின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது.”—லேவியராகமம் 17:10, 11.
6 இஸ்ரவேலர்கள் உணவுக்காக ஒரு மிருகத்தைக் கொன்றால், அதன் இரத்தத்தைத் தரையில் ஊற்றிவிட வேண்டுமென்று திருச்சட்டம் சொன்னது. அந்த மிருகத்தின் உயிர் படைப்பாளராகிய யெகோவாவுக்குச் சொந்தமானது என்பதை அது காட்டியது. (உபாகமம் 12:16; எசேக்கியேல் 18:4) அதற்காக, அந்த மிருகத்தின் உடலில் ஒரு துளி இரத்தம்கூட இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டுமென்று அவர்களிடம் யெகோவா எதிர்பார்க்கவில்லை. இரத்தத்தை நீக்குவதற்கு அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்த பிறகு, சுத்தமான மனசாட்சியோடு அவர்களால் இறைச்சியைச் சாப்பிட முடிந்தது. மிருகத்தின் இரத்தத்துக்கு மதிப்புக் கொடுப்பதன் மூலம், உயிரின் ஊற்றுமூலரான யெகோவாவுக்கு அவர்கள் மதிப்புக் கொடுத்தார்கள். தாங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக மிருகங்களைப் பலி கொடுக்கும்படியும் இஸ்ரவேலர்களுக்குத் திருச்சட்டம் சொன்னது.—பின்குறிப்பு 19, 20.
7. இரத்தத்துக்கு தாவீது எப்படி மதிப்புக் கொடுத்தார்?
7 பெலிஸ்தியர்களோடு தாவீது போரில் ஈடுபட்ட சமயத்தில் இரத்தத்துக்கு அவர் எப்படி மதிப்புக் கொடுத்தார் என்று பார்க்கலாம். அவருக்கு ரொம்பத் தாகமாக இருந்தபோது அவருடைய வீரர்கள் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து, எதிரிகள் முகாம் போட்டிருந்த இடத்துக்குள் நுழைந்து அவருக்குத் தண்ணீர் கொண்டுவந்தார்கள். ஆனால், “தாவீது அதைக் குடிக்க மறுத்து, யெகோவாவுக்காகக் கீழே ஊற்றிவிட்டார்.” பின்பு அவர், “யெகோவாவே, இப்படிச் செய்வதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது! எனக்காக உயிரையே பணயம் வைத்துப் போன என் வீரர்களின் இரத்தத்தை நான் குடிக்க வேண்டுமா?” என்று சொன்னார். உயிரையும் இரத்தத்தையும் கடவுள் எந்தளவுக்கு உயர்வாகக் கருதுகிறார் என்பது தாவீதுக்குத் தெரிந்திருந்தது.—2 சாமுவேல் 23:15-17.
8, 9. கிறிஸ்தவர்கள் இன்று இரத்தத்தை எப்படிக் கருத வேண்டும்?
8 இயேசுவின் மரணத்துக்குப் பிறகு கடவுளுடைய மக்கள் திருச்சட்டத்தின்கீழ் இல்லை. ஆனாலும், திருச்சட்டத்தின் சில கட்டளைகளுக்கு கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்த்தார். உதாரணத்துக்கு, அவர்கள் மிருகப் பலிகளைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல்போனாலும், ‘இரத்தத்துக்கு விலகியிருக்க’ வேண்டுமென்ற கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. பாலியல் முறைகேட்டையும் சிலை வழிபாட்டையும் தவிர்ப்பது எந்தளவுக்கு முக்கியமாக இருந்ததோ அந்தளவுக்கு இரத்தத்துக்கு விலகியிருப்பதும் முக்கியமாக இருந்தது.—அப்போஸ்தலர் 15:28, 29.
9 இன்று நாமும் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம். யெகோவாதான் உயிரின் ஊற்றுமூலர் என்றும், எல்லா உயிர்களும் அவருக்குத்தான் சொந்தம் என்றும் கிறிஸ்தவர்களாகிய நமக்குத் தெரியும். அதோடு இரத்தம் புனிதமானது என்றும், அது உயிரைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்றும் புரிந்திருக்கிறோம். அதனால், இரத்தம் சம்பந்தப்பட்ட சிகிச்சை முறையைப் பற்றி தீர்மானம் எடுப்பதற்கு முன் பைபிள் நியமங்களை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சிகிச்சை முறைகளில் இரத்தத்தைப் பயன்படுத்துவது
10, 11. (அ) இரத்தத்தையோ அதன் நான்கு முக்கிய பாகங்களையோ ஏற்றிக்கொள்வதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளின் கருத்து என்ன? (ஆ) கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும்?
10 “இரத்தத்துக்கு . . . விலகியிருங்கள்” என்ற கட்டளையின் அர்த்தத்தை யெகோவாவின் சாட்சிகள் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். அதனால், அவர்கள் இரத்தத்தை நேரடியாகவோ வேறு எந்த விதத்திலோ சாப்பிடுவதும் இல்லை, குடிப்பதும் இல்லை. அதோடு, மற்றவர்களுடைய இரத்தத்தை ஏற்றிக்கொள்வதும் இல்லை. இரத்த தானம் செய்வதும் இல்லை. நம்முடைய இரத்தத்தையே சேமித்துவைத்து அதை மீண்டும் உடலில் ஏற்றிக்கொள்வதும் இல்லை. இரத்தத்தின் நான்கு முக்கிய பாகங்களான சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா ஆகியவற்றையும் ஏற்றிக்கொள்வதில்லை.
11 இந்த நான்கு முக்கிய பாகங்கள் சிறு சிறு பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை இரத்தத்தின் சிறு கூறுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தச் சிறு கூறுகளை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும். ஒருவருடைய சொந்த இரத்தத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சை முறைகளாக இருந்தாலும் அவர்கள் சொந்தமாகத் தீர்மானம் எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சையின்போது, மருத்துவ பரிசோதனையின்போது, அல்லது வேறு ஏதாவது நவீன சிகிச்சையின்போது தன்னுடைய இரத்தம் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும்.—பின்குறிப்பு 21.
12. (அ) மனசாட்சியின் அடிப்படையில் நாம் எடுக்கிற தீர்மானங்களை யெகோவா ஏன் முக்கியமானதாக நினைக்கிறார்? (ஆ) சிகிச்சை முறை சம்பந்தமாக நாம் எப்படி ஞானமான தீர்மானங்களை எடுக்கலாம்?
12 மனசாட்சியின் அடிப்படையில் நாம் எடுக்கிற தீர்மானங்களை யெகோவா முக்கியமானதாக நினைக்கிறாரா? ஆம், முக்கியமானதாக நினைக்கிறார். ஒரு விஷயத்தைப் பற்றி நாம் எப்படி யோசிக்கிறோம், அதை ஏன் செய்ய விரும்புகிறோம் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள யெகோவா விரும்புகிறார். (நீதிமொழிகள் 17:3; 24:12-ஐ வாசியுங்கள்.) அதனால், ஒரு சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கு முன், வழிநடத்துதலுக்காக நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். அதோடு, அதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். பிறகு, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட நம் மனசாட்சியின் அடிப்படையில் நாம் தீர்மானம் எடுக்க வேண்டும். மற்றவர்கள் தங்களுடைய தீர்மானத்தை நம்மீது திணிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. அதோடு, ‘என்னுடைய சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று நாமும் மற்றவர்களிடம் கேட்கக் கூடாது. ஏனென்றால், “ஒவ்வொருவனும் அவனவன் பாரத்தை சுமப்பான்” என்று பைபிள் சொல்கிறது.—கலாத்தியர் 6:5; ரோமர் 14:12.
யெகோவாவின் சட்டங்கள் அவருடைய அன்பைக் காட்டுகின்றன
13. இரத்தம் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கும் சட்டங்களிலிருந்தும் நியமங்களிலிருந்தும் நாம் அவரைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?
13 யெகோவா நம்முடைய நன்மைக்காகத்தான் சட்டங்களைக் கொடுத்திருக்கிறார். அந்தச் சட்டங்கள், நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகின்றன. (சங்கீதம் 19:7-11) அவருடைய கட்டளைகளால் நமக்கு நன்மை கிடைக்கும் என்பதற்காக மட்டுமே நாம் அவருக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்மீது நமக்கு அன்பு இருப்பதால்தான் கீழ்ப்படிகிறோம். அவர்மீது நமக்கிருக்கும் அன்பு, இரத்தம் ஏற்றிக்கொள்வதைத் தவிர்க்க நம்மைத் தூண்டுகிறது. (அப்போஸ்தலர் 15:20) அப்படிச் செய்வது, நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. இரத்தம் ஏற்றிக்கொள்வதால் வரும் சில ஆபத்துகளைப் பற்றி இன்று நிறைய பேருக்குத் தெரிந்திருக்கிறது. அதோடு, இரத்தம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வதுதான் சிறந்தது என்று நிறைய டாக்டர்கள் நம்புகிறார்கள். இதிலிருந்து, யெகோவாவின் வழிகள் அன்பும் ஞானமும் நிறைந்தவை என்பது தெளிவாகத் தெரிகிறது.—ஏசாயா 55:9-ஐ வாசியுங்கள்; யோவான் 14:21, 23.
14, 15. (அ) தன்னுடைய மக்களைப் பாதுகாக்க யெகோவா என்ன சட்டங்களைக் கொடுத்தார்? (ஆ) அந்தச் சட்டங்களுக்கு அடிப்படையாக இருக்கும் நியமங்களை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
14 கடவுளுடைய சட்டங்கள் அவருடைய மக்களுக்கு எப்போதுமே பயனுள்ளவையாக இருந்திருக்கின்றன. விபத்துகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, இஸ்ரவேலர்களுக்கு யெகோவா சட்டங்களைக் கொடுத்தார். உதாரணத்துக்கு, வீட்டின் மொட்டைமாடியிலிருந்து யாரும் தவறி விழாமலிருக்க அந்த வீட்டின் சொந்தக்காரர் அதற்குக் கைப்பிடிச்சுவர் வைக்க வேண்டுமென்ற சட்டம் கொடுக்கப்பட்டது. (உபாகமம் 22:8) மற்றொரு சட்டம் மிருகங்களோடு சம்பந்தப்பட்டது. ஒருவரிடம் அடங்காத ஒரு மாடு இருந்தால், அது யாருக்கும் உயிர் சேதமோ வேறு ஏதாவது காயமோ ஏற்படுத்திவிடாதபடி அவர் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. (யாத்திராகமம் 21:28, 29) இஸ்ரவேலர் ஒருவர் அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால், அந்த இரத்தப்பழி அந்த இஸ்ரவேலரைத்தான் சேரும்.
15 யெகோவா உயிரை உயர்வாக மதிக்கிறார் என்பதை அந்தச் சட்டங்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? வீட்டையும் நம் வாகனத்தையும் நன்றாகப் பராமரிக்க வேண்டும்; வாகனத்தைக் கவனமாக ஓட்ட வேண்டும்; பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நாம் உயிருக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்பதைக் காட்ட முடியும். சிலர், முக்கியமாக இளைஞர்கள், தங்களுக்கு எதுவும் ஆகாது என்று நினைத்துக்கொண்டு ஆபத்தான விஷயங்களில் துணிந்து இறங்குகிறார்கள். ஆனால், நாம் அப்படி நடந்துகொள்வதை யெகோவா விரும்புவதில்லை. நம்முடைய உயிரையும் சரி, மற்றவர்களுடைய உயிரையும் சரி நாம் மதிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.—பிரசங்கி 11:9, 10.
16. கருக்கலைப்பை கடவுள் எப்படிக் கருதுகிறார்?
16 தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உயிரைக்கூட யெகோவா உயர்வாகக் கருதுகிறார். திருச்சட்டத்திலிருந்து இதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இஸ்ரவேலர் ஒருவர் தெரியாத்தனமாக ஒரு கர்ப்பிணியைக் காயப்படுத்தியதன் விளைவாக அந்தப் பெண்ணோ அவளுடைய வயிற்றிலிருக்கும் குழந்தையோ இறந்துவிட்டால் அவர் கொலைக்குற்றம் செய்தவராகக் கருதப்படுவார். அந்த நபர் அதைத் தெரியாத்தனமாகச் செய்திருந்தாலும், உயிரிழப்பு ஏற்பட்டதால் உயிருக்கு ஈடாக உயிர் கொடுக்கப்பட வேண்டியிருந்தது. அதாவது அந்த நபர் கொல்லப்பட வேண்டியிருந்தது. (யாத்திராகமம் 21:22, 23-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய பார்வையில், பிறவாத குழந்தையும் உயிருள்ள ஒரு நபர்தான். அப்படியானால், கருக்கலைப்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான கருக்கலைப்புகள் செய்யப்படுவதைப் பார்ப்பது கடவுளுக்கு எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
17. யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன் ஒரு பெண் கருக்கலைப்பு செய்திருந்தால் எது அந்தப் பெண்ணுக்கு ஆறுதலாக இருக்கலாம்?
17 கருக்கலைப்பைப் பற்றி யெகோவா எப்படிக் கருதுகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஒரு பெண் கருக்கலைப்பு செய்திருந்தால் யெகோவா அவளை மன்னிப்பாரா? இயேசுவின் பலியின் அடிப்படையில் யெகோவா தன்னை மன்னிப்பார் என்று அந்த பெண் உறுதியாக நம்பலாம். (லூக்கா 5:32; எபேசியர் 1:7) அந்தப் பெண் உண்மையாக மனம் திருந்தியிருந்தால் அந்தத் தவறை நினைத்து நினைத்து வருத்தப்பட வேண்டியதில்லை. “யெகோவா இரக்கமும் கரிசனையும் உள்ளவர். . . . கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரத்துக்கு நம்முடைய குற்றங்களை அவர் தூக்கியெறிந்திருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 103:8-14.
வெறுப்புணர்வைத் தவிர்த்திடுங்கள்
18. நம் உள்ளத்திலிருந்து வெறுப்புணர்வை வேரோடு பிடுங்கியெறிய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் ஏன் செய்ய வேண்டும்?
18 கடவுள் தந்த உயிராகிய பரிசுக்கு நாம் உள்ளப்பூர்வமாக மதிப்புக் கொடுக்க வேண்டும். நம் உள்ளத்தில் மற்றவர்களைப் பற்றி என்னவெல்லாம் நினைக்கிறோம் என்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது. “தன் சகோதரனை வெறுக்கிற ஒவ்வொருவனும் கொலைகாரன்” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 3:15) நமக்கு ஒருவரைப் பிடிக்காமல் போனால், காலப்போக்கில் நம்மை அறியாமலேயே அவரை வெறுக்க ஆரம்பித்துவிடலாம். வெறுப்புணர்வை வளர்க்கும் ஒருவர் மற்றவர்களிடம் மரியாதையில்லாமல் நடந்துகொள்வார்; அவர்கள்மீது வீண்பழி சுமத்துவார்; அவர்கள் செத்துப்போனால் நன்றாக இருக்கும் என்றுகூட நினைப்பார். நாம் மற்றவர்களைப் பற்றி உள்ளத்தில் என்ன நினைக்கிறோம் என்பது யெகோவாவுக்குத் தெரியும். (லேவியராகமம் 19:16; உபாகமம் 19:18-21; மத்தேயு 5:22) யார்மீதாவது நமக்கு வெறுப்புணர்வு இருந்தால் அப்படிப்பட்ட உணர்வை நம் உள்ளத்திலிருந்து வேரோடு பிடுங்கியெறிய நாம் கடினமாக உழைக்க வேண்டும்.—யாக்கோபு 1:14, 15; 4:1-3.
19. யெகோவா வன்முறையைக் கருதும் விதம், நம்மை என்ன செய்யத் தூண்ட வேண்டும்?
19 உயிரை நாம் மதிக்கிறோம் என்பதை இன்னொரு விதத்திலும் காட்டலாம். “வன்முறையை விரும்புகிற எவனையும் [யெகோவா] வெறுக்கிறார்” என்று சங்கீதம் 11:5 சொல்கிறது. வன்முறை நிறைந்த பொழுதுபோக்கை நாம் தேர்ந்தெடுத்தால், வன்முறையை நாம் விரும்புகிறோம் என்று அர்த்தம். அதனால், வன்முறையான எண்ணங்களோ வார்த்தைகளோ படங்களோ நம் மனதுக்குள் போக நாம் அனுமதிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக நம் மனதைச் சுத்தமான எண்ணங்களாலும் மன அமைதி தரும் எண்ணங்களாலும் நிரப்ப வேண்டும்.—பிலிப்பியர் 4:8, 9-ஐ வாசியுங்கள்.
உயிருக்கு மதிப்பு தராத அமைப்புகளின் பாகமாக இருக்கக் கூடாது
20-22. (அ) சாத்தானுடைய உலகத்தை யெகோவா எப்படிக் கருதுகிறார்? (ஆ) கடவுளுடைய மக்கள் தாங்கள் “இந்த உலகத்தின் பாகமாக இல்லை” என்பதை எப்படிக் காட்டலாம்?
20 சாத்தானின் உலகம் உயிருக்கு மதிப்புக் கொடுப்பது கிடையாது. அதன்மீது இரத்தப்பழி, அதாவது கொலைப்பழி, இருப்பதாக யெகோவா கருதுகிறார். கடந்த நூற்றாண்டுகளில், யெகோவாவின் ஊழியர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்களின் சாவுக்கு அரசியல் அமைப்புகள் காரணமாக இருந்திருக்கின்றன. அந்த அரசியல் அமைப்புகளை, கொடூரமான... மூர்க்கமான... மிருகங்களுக்கு ஒப்பிட்டு பைபிள் சொல்கிறது. (தானியேல் 8:3, 4, 20-22; வெளிப்படுத்துதல் 13:1, 2, 7, 8) இன்றைய உலகில் ஆயுதங்களை விற்பனை செய்வது மிகப் பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது. உயிரைப் பறிக்கும் அந்த ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் மக்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று பைபிள் சொல்வது எவ்வளவு உண்மை!—1 யோவான் 5:19.
21 ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் “இந்த உலகத்தின் பாகமாக இல்லை.” அரசியலிலும் போரிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. அவர்கள் யாரையும் கொலை செய்வதும் இல்லை, மக்களைக் கொலை செய்யும் எந்த அமைப்புக்கும் ஆதரவு கொடுப்பதும் இல்லை. (யோவான் 15:19; 17:16) துன்புறுத்தப்படும்போதுகூட அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதில்லை. ஏனென்றால், எதிரிகளையும் நாம் நேசிக்க வேண்டுமென்று இயேசு கற்றுக்கொடுத்திருக்கிறார்.—மத்தேயு 5:44; ரோமர் 12:17-21.
22 மதங்களும்கூட லட்சக்கணக்கான மக்களின் சாவுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்ட எல்லாருடைய இரத்தமும் அவளிடம் காணப்பட்டது.” அப்படியானால், “என் மக்களே, . . . அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்ற கட்டளையை யெகோவா கொடுத்திருப்பதற்கான காரணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால், யெகோவாவை வணங்குபவர்கள் பொய் மதத்தோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை.—வெளிப்படுத்துதல் 17:6; 18:2, 4, 24.
23. மகா பாபிலோனைவிட்டு ‘வெளியே வருவதற்கு’ என்ன செய்ய வேண்டும்?
23 மகா பாபிலோனைவிட்டு ‘வெளியே வர’ வேண்டுமென்றால், எந்தவொரு பொய் மதத்தோடும் நமக்குச் சம்பந்தம் இல்லை என்பதை நாம் தெளிவாகக் காட்ட வேண்டும். உதாரணத்துக்கு, நாம் முன்பிருந்த மதத்தின் உறுப்பினர் பட்டியலில் நம்முடைய பெயர் இருந்தால் அதை நீக்கிவிடும்படி கடிதம் எழுத வேண்டியிருக்கலாம். அதுமட்டுமல்ல, அந்த மதத்தில் பின்பற்றப்படுகிற கெட்ட விஷயங்களை வெறுக்கவும் வேண்டும்; அதை விட்டுவிடவும் வேண்டும். பொய் மதங்கள் ஒழுக்கக்கேட்டையும், அரசியலில் ஈடுபடுவதையும், பேராசைப்படுவதையும் கண்டும்காணாமல் விட்டுவிடுவதோடு அவற்றை ஊக்குவிக்கவும் செய்கின்றன. (சங்கீதம் 97:10-ஐ வாசியுங்கள்; வெளிப்படுத்துதல் 18:7, 9, 11-17) இதன் விளைவாக கடந்த வருஷங்களில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
24, 25. யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதால் நாம் எப்படி மன நிம்மதியோடும் சுத்தமான மனசாட்சியோடும் இருக்க முடிகிறது?
24 யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன் நாம் எல்லாருமே ஏதோவொரு விதத்தில் சாத்தானுடைய உலகத்தில் செய்யப்படுகிற கெட்ட காரியங்களுக்கு ஆதரவு கொடுத்தோம். ஆனால், இப்போது நாம் அப்படிச் செய்வதில்லை. ஏனென்றால், மீட்புவிலையின் மதிப்பை ஏற்றுக்கொண்டு நம்மையே கடவுளுக்கு அர்ப்பணித்திருக்கிறோம். அதனால், ‘யெகோவாவிடமிருந்து கிடைக்கும் புத்துணர்ச்சியை’ நாம் அனுபவிக்கிறோம். நாம் கடவுளுக்குப் பிரியமாக நடப்பதால் மன நிம்மதியோடும் சுத்தமான மனசாட்சியோடும் வாழ்கிறோம்.—அப்போஸ்தலர் 3:19; ஏசாயா 1:18.
25 நாம் ஒருகாலத்தில் உயிருக்கு மதிப்பு கொடுக்காத ஒரு அமைப்பின் பாகமாக இருந்திருந்தாலும், மீட்புவிலையின் அடிப்படையில் யெகோவா நம்மை மன்னிப்பார். நாம் யெகோவா கொடுத்த உயிர் என்ற பரிசுக்கு உண்மையிலேயே நன்றியோடு இருக்கிறோம். அதனால், மற்றவர்கள் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ளவும், அவர்கள் சாத்தானின் உலகத்தைவிட்டு வெளியே வரவும், யெகோவாவோடு நெருங்கிய நட்பை வைத்துக்கொள்ளவும் நம்மால் முடிந்த எல்லா உதவியையும் செய்கிறோம்.—2 கொரிந்தியர் 6:1, 2.
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லுங்கள்
26-28. (அ) எசேக்கியேலுக்கு என்ன முக்கியமான வேலையை யெகோவா கொடுத்தார்? (ஆ) இன்று நாம் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்?
26 எருசலேம் சீக்கிரத்தில் அழிக்கப்படும் என்ற எச்சரிப்பு செய்தியை இஸ்ரவேலர்களுக்குச் சொல்லும் பொறுப்பை எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு யெகோவா கொடுத்தார். அதோடு, அழிவிலிருந்து தப்பிக்க அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று கற்றுக்கொடுக்கும்படியும் சொன்னார். அந்த மக்களை எச்சரிக்காவிட்டால், அவர்களுடைய சாவுக்கு எசேக்கியேல் பொறுப்பாளி ஆகிவிடுவார் என்றும் சொன்னார். (எசேக்கியேல் 33:7-9) அந்த முக்கியமான செய்தியை மக்களுக்குச் சொல்ல எசேக்கியேல் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார். இதன் மூலம் உயிருக்கு மதிப்புக் கொடுத்ததைக் காட்டினார்.
27 சாத்தானின் உலகம் சீக்கிரத்தில் அழிக்கப்படும் என்ற எச்சரிப்பு செய்தியை மக்களுக்குச் சொல்லும் பொறுப்பை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். அதோடு, அவர்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு, அழிவிலிருந்து தப்பிப்பிழைக்க அவர்களுக்கு உதவி செய்யும் பொறுப்பையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 61:2; மத்தேயு 24:14) அந்தச் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்ல நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அப்போதுதான் பவுலைப் போல நம்மாலும் இப்படிச் சொல்ல முடியும்: “எந்த மனுஷனுடைய சாவுக்கும் நான் பொறுப்பல்ல . . . கடவுளுடைய நோக்கங்களில் ஒன்றைக்கூட மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 20:26, 27.
28 வாழ்க்கையின் மற்ற அம்சங்களிலும் நாம் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும். அவற்றில் சிலவற்றைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் பார்க்கலாம்.