வாசகர் கேட்கும் கேள்விகள்
எசேக்கியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டு இருக்கும் மாகோகு தேசத்தானான கோகு யார்?
பரலோகத்தில் இருந்து தள்ளப்பட்ட பிறகு, சாத்தானுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்தான் மாகோகு தேசத்தானான கோகு என்று நம் பத்திரிகைகளில் பல வருடங்களாக சொல்லி வந்தோம். ஏன்? கடவுளுடைய மக்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நடக்கும் தாக்குதலுக்கு சாத்தான்தான் தலைவன் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் அடையாளம் காட்டுகிறது. (வெளி. 12:1-17) அதனால், சாத்தானுடைய இன்னொரு பெயர்தான் கோகு என்று நாம் புரிந்துகொண்டோம்.
ஆனால், இந்த விளக்கங்கள் சரியாக இருப்பது போல் தெரியவில்லை. ஏனென்றால் கோகுவுடைய அழிவைப் பற்றி யெகோவா இப்படி சொல்லியிருக்கிறார்: ‘நான் உன்னை இறைச்சியை தின்னுகிற எல்லா வகை பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகக் கொடுப்பேன்.’ (எசே. 39:4, ஈஸி டூ ரீட் வர்ஷன்) அதோடு, “அந்நாளில் நான் இஸ்ரவேலில் கோகை புதைக்கிற இடத்தை தேர்ந்தெடுப்பேன்” என்றும் சொன்னார். (எசே. 39:11, ஈஸி டூ ரீட் வர்ஷன்) ஆனால், பார்க்க முடியாத உருவத்தில் இருக்கும் சாத்தானை எப்படி ‘பறவைகளாலும் காட்டு மிருகங்களாலும்’ சாப்பிட முடியும்? அவனை எப்படி பூமியில் ‘புதைக்க’ முடியும்? நிச்சயமாக முடியாது. ஏனென்றால் சாத்தான் 1,000 வருடங்களுக்கு அதலபாதாளத்திற்குள் தள்ளப்படுவான் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது.—வெளி. 20:1, 2.
1,000 வருடங்களுக்குப் பிறகு சாத்தான் அதலபாதாளத்தில் இருந்து விடுதலை செய்யப்படுவான் என்று பைபிள் சொல்கிறது. அதோடு, “பூமியின் நான்கு திசைகளிலும் உள்ள தேசங்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றுவதற்காகவும், அவர்களைப் போருக்குக் கூட்டிச்சேர்ப்பதற்காகவும் புறப்பட்டுப் போவான்” என்றும் பைபிள் சொல்கிறது. (வெளி. 20:8) சாத்தான்தான் கோகு என்றால், அவனால் எப்படி தன்னையே ‘ஏமாற்றிக்கொள்ள’ முடியும்? அப்படியென்றால், வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் எசேக்கியேல் புத்தகத்திலும் சொல்லப்பட்டு இருக்கும் ‘கோகு’ நிச்சயம் சாத்தானாக இருக்க முடியாது.
அப்படியென்றால், மாகோகு தேசத்தானான கோகு யார்? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், கடவுளுடைய மக்களைத் தாக்கப்போவது யார் என்று பைபிளில் பார்க்க வேண்டும். ‘மாகோகு தேசத்தானான கோகின்’ தாக்குதலைப் பற்றி சொல்வதோடு ‘வடதிசை ராஜாவின்’ தாக்குதலைப் பற்றியும் ‘பூமியின் ராஜாக்கள்’ நடத்தும் தாக்குதலைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. (எசே. 38:2, 10-13; தானி. 11:40, 44, 45; வெளி. 17:14; 19:19) இந்த மூன்று தாக்குதல்களும் வெவ்வேறு தாக்குதல்களைக் குறிக்கிறதா? நம்மால் அதை உறுதியாக சொல்ல முடியாது! இருந்தாலும், ஒரே தாக்குதலை பல பெயர்களால் பைபிள் குறிப்பிடுவது போல் தெரிகிறது. இதை எப்படி சொல்லலாம்? அர்மகெதோன் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பு, பூமியில் இருக்கும் எல்லா தேசங்களும் கடவுளுடைய மக்களைத் தாக்கும் என்று பைபிள் சொல்கிறது. அதனால், இந்தத் தாக்குதல்கள் எல்லாம் ஒரே தாக்குதலாக இருக்கலாம் என்று தெரிகிறது.—வெளி. 16:14, 16.
இந்த பைபிள் வசனங்கள் எல்லாமே கடவுளுடைய மக்கள்மீது நடக்கும் கடைசி தாக்குதலைப் பற்றி சொல்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, மாகோகு தேசத்தானான கோகு யாராக இருக்க முடியும்? அது நிச்சயம் சாத்தானாக இருக்க முடியாது. அது பல தேசங்களின் தொகுதியாகத்தான் இருக்க வேண்டும். இந்தத் தேசங்களை எல்லாம் “வடதிசை ராஜா” முன்னின்று வழிநடத்துவானா? நம்மால் அதை உறுதியாக சொல்ல முடியாது! ஆனால், கோகைப் பற்றி எசேக்கியேல் புத்தகத்தில் யெகோவா சொன்னதை வைத்துப் பார்க்கும்போது, இந்தத் தேசங்களை ஒருவேளை வடதிசை ராஜா முன்னின்று வழிநடத்தலாம். கோகைப் பற்றி யெகோவா இப்படி சொன்னார்: “அப்பொழுது நீயும் உன்னுடனேகூடத் திரளான ஜனங்களும் வடதிசையிலுள்ள உன் ஸ்தானத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து, எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாயிருப்பார்கள்.”—எசே. 38:6, 15.
எசேக்கியேல் காலத்தில் வாழ்ந்த தானியேல் தீர்க்கதரிசியும் வடதிசை ராஜாவைப் பற்றி இப்படி சொன்னார்: “கிழக்கிலும் வடக்கிலும் இருந்துவரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம் பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய், சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.” (தானி. 11:44, 45) கோகு செய்யப்போவதைப் பற்றி எசேக்கியேல் சொன்ன விஷயமும் தானியேல் சொன்ன விஷயமும் ஒரே போல் இருக்கிறது.—எசே. 38:8-12, 16.
கடைசி தாக்குதலுக்குப் பிறகு என்ன நடக்கும்? அதைப் பற்றி தானியேல் இப்படி சொல்கிறார்: “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற [1914 முதல்] பெரிய அதிபதியாகிய மிகாவேல் [இயேசு கிறிஸ்து] அக்காலத்திலே எழும்புவான் [அர்மகெதோனில்]; யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் [மிகுந்த உபத்திரவம்] வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.” (தானி. 12:1) இந்த வசனத்தில் சொல்லியிருக்கிற விஷயமும் வெளிப்படுத்துதல் 19:11-21-ல் இயேசு செய்யப்போகும் விஷயமும் ஒரே போல் இருக்கிறது.
வெளிப்படுத்துதல் 20:8-ல் சொல்லப்பட்டு இருக்கும் ‘கோகும் மாகோகும்’ யார்? 1,000 வருடங்களுக்குப் பிறகு, கடைசி சோதனையின்போது யெகோவாவை எதிர்க்கிற... அவருடைய மக்களை தாக்குகிற... எல்லாரையும் இது குறிக்கிறது. மிகுந்த உபத்திரவத்தின் முடிவில் கடவுளுடைய மக்களை மாகோகு தேசத்தானான கோகு தாக்குவது போல் இவர்களும் கடவுளுடைய மக்களைத் தாக்குவார்கள். மாகோகு தேசத்தானான கோகுவுடைய கொடூரமான குணத்தை இவர்களும் வெளிக்காட்டுவார்கள். அர்மகெதோன் போரில் தேசங்கள் அழிக்கப்படுவது போல் ‘கோகும் மாகோகும்’ அழிக்கப்படுவார்கள். (வெளி. 19:20, 21; 20:9) அதனால், 1,000 வருடங்களுக்குப் பிறகு யெகோவாவையும் அவருடைய மக்களையும் எதிர்க்கிற எல்லாரையும் ‘கோகும் மாகோகும்’ என்று சொல்வது சரியாக இருக்கும்!
சீக்கிரத்தில் வரப்போகும் அந்த “வடதிசை ராஜா” யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு நாம் எல்லாரும் ரொம்ப ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், கடவுளுடைய மக்களுக்கு விரோதமாக செயல்பட, தேசங்களை யார் வழிநடத்தினாலும் சரி, நாம் இந்த இரண்டு விஷயங்களைப் பற்றி நிச்சயமாக இருக்கலாம்: (1) மாகோகு தேசத்தானான கோகும் அவனுடைய படையும் வீழ்த்தப்பட்டு, அழிக்கப்படும். (2) நம்முடைய ராஜா இயேசு கிறிஸ்து கடவுளுடைய மக்களைக் காப்பாற்றுவார். சமாதானமும் பாதுகாப்பும் இருக்கும் புதிய உலகத்தில் அவர்களை வாழ வைப்பார்.—வெளி. 7:14-17.