சீஷராக்குவதற்குப் பிரசங்கியுங்கள்
‘ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவர் [அப்பொல்லோ] பேசுகிறதைக் கேட்டு, அவரைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவருக்கு விவரித்துக் காண்பித்தார்கள்.’—அப்போஸ்தலர் 18:26.
1. அப்பொல்லோ ‘ஆவியில் அனலுள்ளவராய்’ இருந்தாலும், அவர் இன்னும் எதை அறிந்துகொள்ள வேண்டியிருந்தது?
முதல் நூற்றாண்டில், எபேசு பட்டணத்து ஜெபாலயத்தில் அப்பொல்லோ பேச்சு கொடுத்துக் கொண்டிருந்ததை ஆக்கில்லா, பிரிஸ்கில்லா என்ற கிறிஸ்தவ தம்பதியினர் கவனித்தார்கள். அவர் தன் பேச்சாற்றலாலும் ஆதாரங்காட்டி இணங்க வைக்கும் திறமையாலும் கூட்டத்தாரின் கவனத்தை தன்வசப்படுத்தியிருந்தார். அவர் ‘ஆவியில் அனலுள்ளவராய்க் கர்த்தருக்கு [இயேசுவுக்கு] அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம் பண்ணிக்கொண்டு வந்தார்.’ எனினும், ‘யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அவர் அறிந்தவராயிருந்தார்’ என்பது தெளிவாக தெரிந்தது. தனக்குத் தெரிந்தவரையில் கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை அவர் பிரசங்கித்தார். ஆனால் அவர் கிறிஸ்துவை முழுமையாக அறிந்திருக்கவில்லை. யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதில் இயேசு கிறிஸ்துவின் பங்கைப் பற்றி அவர் இன்னும் அதிகம் அறிந்துகொள்ள வேண்டியிருந்தது.—அப்போஸ்தலர் 18:24-26.
2. பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் என்ன சவாலை ஏற்றுக்கொண்டார்கள்?
2 கிறிஸ்து கட்டளையிட்ட “யாவையும்” அப்பொல்லோ கைக்கொள்ளும்படி உதவ பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் உடனே முன்வந்தார்கள். (மத்தேயு 28:19, 20) அப்பொல்லோவைத் தங்களுடன் ‘சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவருக்கு விவரித்துக் காண்பித்தார்கள்’ என பதிவு சொல்கிறது. எனினும் அப்பொல்லோவைப் பற்றிய உண்மைகளை அறிந்த கிறிஸ்தவர்கள் சிலர் அவருக்கு போதிக்க தயங்கியிருப்பார்கள். எந்த உண்மைகளை? அப்பொல்லோவுடன் வேதவசனங்களை கலந்தாலோசிக்க பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் எடுத்த முயற்சிகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்த சரித்திர சம்பவத்தை மறுபார்வை செய்வது பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதில் கவனத்தை ஒருமுகப்படுத்த நமக்கு எப்படி உதவலாம்?
ஜனங்களிடம் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள்
3. பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அப்பொல்லோவுக்குப் போதிப்பதற்கு அவருடைய பின்னணி ஏன் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை?
3 யூத குலத்தில் பிறந்த அப்பொல்லோ அலெக்சந்திரியா பட்டணத்தில் வளர்ந்ததாக தெரிகிறது. அப்போது அந்தப் பட்டணம் எகிப்தின் தலைநகரமாகவும் உயர் கல்விக்கு மையமாகவும் விளங்கியது; அங்கு புகழ்பெற்ற பெரிய நூலகமும் இருந்தது. இப்பட்டணத்தில் கல்விமான்கள் உட்பட பெருமளவு யூதர்கள் வசித்தார்கள். எனவே செப்டுவஜின்ட் என அறியப்பட்ட எபிரெய வேதாகமத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பு இங்குதான் உருவானது. அப்பொல்லோ ‘வேதாகமங்களில் வல்லவராக’ இருந்ததில் ஆச்சரியமேதுமில்லை! ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளுமோ கூடாரம் பண்ணுகிற தொழிலை செய்து வந்தார்கள். அப்பொல்லோவின் பேச்சாற்றலைக் கண்டு அவர்கள் பயந்தார்களா? இல்லை. அன்பின் காரணமாக அவரையும் அவருடைய தேவைகளையும் கருத்தில் கொண்டு அவருக்கு உதவுவதற்கான வழிகளை தேடினார்கள்.
4. அப்பொல்லோ தனக்குத் தேவைப்பட்ட உதவியை எங்கிருந்து, எப்படி பெற்றார்?
4 அப்பொல்லோ பேச்சாற்றல் மிக்கவராக இருந்தாலும் அவருக்குப் போதனை தேவைப்பட்டது. அவருக்குத் தேவைப்பட்ட உதவியை எந்தப் பல்கலைக்கழகமும் அல்ல, ஆனால் கிறிஸ்தவ சபையிலிருந்தவர்களே அளிக்க முடிந்தது. இரட்சிப்பிற்கான கடவுளுடைய ஏற்பாட்டைப் பற்றிய குறிப்புகளை அப்பொல்லோ அறிந்துகொள்ளவிருந்தார்; அவை இன்னும் திருத்தமான புரிந்துகொள்ளுதலை பெற அவருக்கு உதவும். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அப்பொல்லோவைத் தங்களுடன் ‘சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவருக்கு விவரித்துக் காண்பித்தார்கள்.’
5. ஆக்கில்லா, பிரிஸ்கில்லாளின் ஆவிக்குரிய தன்மையைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?
5 பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் ஆவிக்குரிய விதத்தில் திடமானவர்களாகவும் விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். ‘தங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து விசாரித்துக் கேட்கிற யாவருக்கும்’—பணக்காரர், ஏழை, கல்விமான், அடிமை என யாவருக்கும்—‘உத்தரவு சொல்ல எப்பொழுதும் அவர்கள் ஆயத்தமாயிருந்ததாக’ தெரிகிறது. (1 பேதுரு 3:15) ஆக்கில்லாவும் அவரது மனைவியும் ‘கடவுளுடைய வார்த்தையை சரியாய் பயன்படுத்த’ அறிந்திருந்தார்கள். (2 தீமோத்தேயு 2:15, NW) அவர்கள் வேதவசனங்களை ஊக்கமாய் படித்தவர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இருதயத்தைப் பாதிக்குமளவுக்கு ‘ஜீவனும் வல்லமையும் உள்ளதாயிருக்கும் தேவனுடைய வார்த்தையின்’ அடிப்படையில் அமைந்த போதனை அப்பொல்லோவை நெகிழ வைத்தது.—எபிரெயர் 4:12.
6. தான் பெற்ற உதவியை அப்பொல்லோ போற்றினார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
6 தனக்குப் போதித்தவர்களுடைய முன்மாதிரியை அப்பொல்லோ போற்றினார்; சீஷராக்குவதில் இன்னும் வல்லவரானார். தான் பெற்ற அறிவை நற்செய்தியை அறிவிப்பதில், முக்கியமாக யூதர்களுக்கு அறிவிப்பதில் திறம்பட்ட விதமாக பயன்படுத்தினார். கிறிஸ்துவைக் குறித்து ஆதாரங்காட்டி யூதர்களை இணங்க வைப்பதில் அப்பொல்லோ பெரும் உதவியாக இருந்தார். ‘வேதாகமங்களில் வல்லவராக’ இருந்ததால் கிறிஸ்துவின் வருகையை பூர்வ கால தீர்க்கதரிசிகள் அனைவரும் எதிர்நோக்கியிருந்தார்கள் என்பதை அவரால் நிரூபித்துக் காட்ட முடிந்தது. (அப்போஸ்தலர் 18:24) அடுத்து அப்பொல்லோ அகாயா நாட்டிற்குச் சென்றதாகவும் பதிவு சொல்கிறது; அங்கு அவர் ‘வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம் பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தார்.’—அப்போஸ்தலர் 18:27, 28.
மற்ற போதகர்களின் முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
7. ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் எப்படி திறம்பட்ட போதகர்களாக ஆனார்கள்?
7 ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் எப்படி கடவுளுடைய வார்த்தையின் திறம்பட்ட போதகர்களாக ஆனார்கள்? ஊக்கமான தனிப்பட்ட படிப்பு, கூட்டங்களில் கலந்துகொள்ளுதல், அது தவிர அப்போஸ்தலன் பவுலுடன் நெருங்கிய கூட்டுறவு வைத்திருந்தது நிச்சயம் அவர்களுக்கு உதவியிருக்கும். கொரிந்துவில் பிரிஸ்கில்லாள், ஆக்கில்லாவின் வீட்டில் பவுல் 18 மாதங்கள் தங்கியிருந்தார். அவர்கள் ஒன்றாக சேர்ந்து கூடாரங்களைப் பண்ணினார்கள், பழுதுபார்த்தார்கள். (அப்போஸ்தலர் 18:2, 3) அந்த சமயத்தில் கருத்தாழமிக்க என்னென்ன வேதப்பூர்வ விஷயங்களையெல்லாம் உரையாடியிருப்பார்கள் என சற்று கற்பனை செய்து பாருங்கள். பவுலுடன் கூட்டுறவு வைத்திருந்தது அவர்களுடைய ஆவிக்குரிய தன்மையை கண்டிப்பாக பலப்படுத்தியிருக்கும்! “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்” என நீதிமொழிகள் 13:20 சொல்கிறது. அந்த அருமையான கூட்டுறவு அவர்களுடைய ஆவிக்குரிய பழக்கங்களை முன்னேற்றுவித்தது.—1 கொரிந்தியர் 15:33, NW.
8. பவுலுடைய ஊழியத்தைக் கவனித்ததிலிருந்து பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் என்ன கற்றுக்கொண்டார்கள்?
8 பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும், ராஜ்ய அறிவிப்பாளராக இருந்த பவுலை சிறந்த முன்மாதிரியான போதகராகவே பார்த்தார்கள். பவுல் ‘ஓய்வுநாள்தோறும் [கொரிந்துவிலுள்ள] ஜெப ஆலயத்திலே சம்பாஷணை பண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னார்’ என அப்போஸ்தலர் நடபடிகளிலுள்ள பதிவு சொல்கிறது. பின்னர் சீலாவும் தீமோத்தேயுவும் பவுலுடன் சேர்ந்துகொண்டபோது அவர் ‘ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினார்.’ ஜெபாலயத்தில் இருந்தவர்கள் ஆர்வம் காட்டாதபோது அந்த இடத்தில் பிரசங்கிக்காமல் அதிக சாதகமான மற்றொரு இடத்தில், அதாவது ஜெபாலயத்திற்கு அருகே இருந்த வீட்டில் பவுல் பிரசங்கிக்க ஆரம்பித்ததை பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் கவனித்தார்கள். அங்கே, சீஷராகும்படி “ஜெப ஆலயத் தலைவனாகிய” கிறிஸ்பு என்பவருக்கு பவுல் உதவினார். அவரை சீஷராக்கியது அந்தப் பிராந்தியத்தில் பெரும் பலன் தருமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதை பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் கவனித்திருக்க வேண்டும். “கிறிஸ்பு . . . தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்” என பதிவு சொல்கிறது.—அப்போஸ்தலர் 18:4-8.
9. பவுலின் முன்மாதிரிக்கு இசைய பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் எப்படி நடந்துகொண்டார்கள்?
9 ஊழியத்தில் பவுலுடைய உதாரணத்தை பிரிஸ்கில்லா, ஆக்கில்லா போன்ற மற்ற ராஜ்ய அறிவிப்பாளர்களும் பின்பற்றினார்கள். “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என பவுல் மற்ற கிறிஸ்தவர்களையும் ஊக்குவித்தார். (1 கொரிந்தியர் 11:1) பவுலின் முன்மாதிரிக்கு இசைய, அப்பொல்லோ கிறிஸ்தவ போதனைகளை இன்னும் திருத்தமாக அறிந்துகொள்ள பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் உதவினார்கள். அப்பொல்லோவும் தன் பங்கில் இன்னும் அநேகருக்கு உதவினார். ரோமிலும், கொரிந்துவிலும், எபேசுவிலும் இருந்தவர்கள் சீஷராவதற்கு பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் உதவினார்கள் என்பதில் சந்தேகமில்லை.—அப்போஸ்தலர் 18:1, 2, 18, 19; ரோமர் 16:3-5.
10. சீஷராக்கும் வேலையில் உங்களுக்கு உதவும் எதை அப்போஸ்தலர் 18-ம் அதிகாரத்திலிருந்து கற்றிருக்கிறீர்கள்?
10 அப்போஸ்தலர் 18-ம் அதிகாரத்தை கலந்தாலோசித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் பவுலிடமிருந்து கற்றுக்கொண்டதைப் போல, கடவுளுடைய வார்த்தையை நன்கு போதிப்பவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் சீஷராக்கும் திறமையை நாமும் வளர்க்கலாம். ‘வார்த்தையை மும்முரமாய் அறிவிப்பவர்களுடனும்,’ மற்றவர்களுக்கு ‘முழுமையாக சாட்சிகொடுப்பவர்களுடனும்’ நாம் கூட்டுறவு கொள்ளலாம். (அப்போஸ்தலர் 18:5, கிங்டம் இன்டர்லீனியர் டிரான்ஸ்லேஷன்) போதிப்பதில் ஆதாரங்காட்டி இணங்க வைக்கும் திறமையைப் பயன்படுத்தி ஜனங்களின் இருதயத்தை அவர்கள் எட்டும் விதத்தை நாம் கவனிக்கலாம். அத்தகைய திறமை சீஷராக்குவதற்கு நமக்கு உதவும். ஒருவர் நம்முடன் பைபிளைப் படிக்கையில் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அல்லது அக்கம்பக்கத்தாரும் அந்தப் படிப்பில் கலந்துகொள்ள அழைக்கும்படி அவருக்கு ஆலோசனை கூறலாம். அல்லது வேறு யாரேனும் பைபிள் படிக்க விரும்பினால் அதை நம்மிடம் தெரிவிக்கும்படி அவரிடம் சொல்லலாம்.—அப்போஸ்தலர் 18:6-8.
சீஷராக்குவதற்கு சந்தர்ப்பங்களை உருவாக்குங்கள்
11. புதிய சீஷர்களை எங்கே கண்டுபிடிக்கலாம்?
11 வீட்டுக்கு வீடு ஊழியத்தில், சந்தைவெளியில், பயணிக்கையில், சொல்லப்போனால் எல்லா இடங்களிலும் பிரசங்கிப்பதன் வாயிலாக சீஷர்களை உருவாக்கவே பவுலும் அவருடைய சக கிறிஸ்தவர்களும் முயன்றார்கள். சீஷராக்க முயலும் வைராக்கியமுள்ள ராஜ்ய வேலையாளாக, வெளி ஊழியத்தில் நீங்கள் இன்னும் அதிகமாக ஈடுபட முடியுமா? தகுதியானவர்களைத் தேடுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அவர்களுக்குப் பிரசங்கிக்க முடியுமா? நற்செய்தியை அறிவிக்கும் நம் சக பிரஸ்தாபிகள் சீஷர்களைக் கண்டுபிடித்திருக்கும் சில வழிகள் யாவை? முதலாவதாக, டெலிபோனில் சாட்சி கொடுப்பதைப் பற்றி கவனிப்போம்.
12-14. டெலிபோனில் சாட்சி கொடுப்பதால் கிடைக்கும் பலன்களை விளக்குவதற்கு உங்கள் அனுபவத்தை அல்லது இந்தப் பாராக்களிலிருந்து ஓர் அனுபவத்தை சொல்லுங்கள்.
12 பிரேசிலில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது ஒரு கிறிஸ்தவ சகோதரி—அவரை நாம் மாரியா என அழைப்போம்—ஓர் அப்பார்ட்மென்டிலிருந்து வெளியே வந்த இளம் பெண்ணிடம் ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்தார். அந்தத் துண்டுப்பிரதியின் தலைப்பையே தன் அறிமுகத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு, “பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா?” என மாரியா கேட்டார். “எனக்கு ஆசைதான். ஆனால் நான் டீச்சராக இருப்பதால் என் நேரமெல்லாம் பாடம் சொல்லிக் கொடுப்பதிலேயே போய்விடுகிறது” என அந்தப் பெண் பதிலளித்தார். டெலிபோனில் பைபிள் விஷயங்களை கலந்துபேசலாம் என மாரியா சொன்னார். அந்தப் பெண் தன்னுடைய டெலிபோன் நம்பரை மாரியாவிடம் கொடுத்தார், அன்று சாயங்காலமே கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்?a சிற்றேட்டை உபயோகித்து டெலிபோனில் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
13 எத்தியோப்பியாவில் முழுநேர ஊழியம் செய்யும் சகோதரி ஒரு நபரிடம் டெலிபோனில் சாட்சி கொடுக்கையில் அமளியின் சத்தத்தைக் கேட்டு அதிர்ந்துபோனார். பிறகு போன் செய்யும்படி சகோதரியிடம் அந்த நபர் சொன்னார். அதன்படி சகோதரி பின்னர் போன் செய்கையில் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்; முன்பு போன் செய்த போது தானும் தன் மனைவியும் கோபத்தில் சண்டை போட்டுக்கொண்டிருந்ததாக சொன்னார். அவருடைய பதிலை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி, குடும்ப பிரச்சினைகளை சமாளிப்பதற்கு பைபிள் தரும் ஞானமான வழிநடத்துதலைப் பற்றி சொன்னார். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம் அநேக குடும்பங்களுக்கு உதவியிருப்பதைப் பற்றி அவரிடம் சொன்னார். அந்தப் புத்தகத்தை அனுப்பி சிலநாட்களுக்குப் பிறகு சகோதரி அவருக்கு மீண்டும் போன் செய்தார். “இந்தப் புத்தகம் எங்கள் மண வாழ்க்கையை காப்பாற்றியிருக்கிறது!” என சந்தோஷம் பொங்க அந்த நபர் சொன்னார். சொல்லப்போனால், குடும்பத்தார் அனைவரையும் உட்கார வைத்து, அந்தப் புத்தகத்தில் தான் கற்ற அருமையான குறிப்புகளை அவர்களோடு பகிர்ந்துகொண்டார். பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, சீக்கிரமே கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தார்.
14 டென்மார்க்கில், டெலிபோனில் சாட்சி கொடுப்பதன் மூலம் பைபிள் படிப்பை ஆரம்பித்த ராஜ்ய அறிவிப்பாளர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “டெலிபோனில் சாட்சி கொடுக்கும்படி ஊழியக் கண்காணி என்னை உற்சாகப்படுத்தினார். ஆரம்பத்தில், ‘அது என்னால் முடியவே முடியாது’ என சொல்லி ஒதுங்கிக் கொண்டேன். இருந்தாலும், ஒருநாள் தைரியத்தை திரட்டி ஒருவருக்கு முதலாவதாக போன் செய்தேன். சான்யா என்பவர் எதிர்முனையிலிருந்து பதிலளித்தார், சில நிமிடம் அவருடன் உரையாடிய பின்பு பைபிள் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள அவர் சம்மதித்தார். ஒருநாள் மாலை நாங்கள் படைப்பைப் பற்றி கலந்துபேசினோம்; உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?b என்ற புத்தகத்தைப் படிக்க விரும்பினார். இந்த விஷயத்தைப் பற்றி நேரில் வந்து பேச விரும்புவதாக சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். நான் போனபோது படிப்பதற்கு சான்யா தயாராக இருந்தார். அதுமுதற்கொண்டு ஒவ்வொரு வாரமும் படிக்கிறோம். அநேக வருடங்களாக பைபிள் படிப்புக்காக நான் ஜெபித்திருக்கிறேன், ஆனால் டெலிபோனில் சாட்சி கொடுப்பதன் மூலம் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முடியுமென கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை” என நம் கிறிஸ்தவ சகோதரி சொல்லி முடித்தார்.
15, 16. பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க பல்வேறு வழிகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலனை விளக்க எந்த அனுபவங்களை சொல்வீர்கள்?
15 ஆட்களை எங்கெல்லாம் சந்திக்கிறார்களோ அங்கெல்லாம் சாட்சி கொடுக்கும்படியான ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் அநேகர் வெற்றி கண்டிருக்கிறார்கள். ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு கிறிஸ்தவ சகோதரி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒரு வேனுக்கு அருகில் தன் காரை நிறுத்தினார். வேனிலிருந்த பெண் அந்த சகோதரியைப் பார்த்தபோது பைபிள் கல்வி புகட்டும் நம் வேலையின் நோக்கத்தைப் பற்றி சகோதரி விளக்கினார். அவர் சொன்னதைக் கேட்ட அந்தப் பெண் வேனைவிட்டு இறங்கி அந்த சகோதரியின் கார் பக்கம் வந்தார். “நீங்கள் எங்கிட்ட பேசினதில் எனக்கு சந்தோஷம். நான் உங்களுடைய பைபிள் பிரசுரங்களைப் படித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. அதுவுமில்லாமல், நான் மீண்டும் பைபிள் படிக்க விரும்புகிறேன். எனக்கு படிப்பு நடத்துவீர்களா?” என கேட்டாள். இவ்வாறு நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள சாதகமான சூழலை நம் சகோதரி உருவாக்கினார்.
16 ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு சகோதரி காப்பகம் ஒன்றைப் போய் சந்தித்த போது பின்வரும் அனுபவத்தைப் பெற்றார்: முதலில் அங்குள்ள சில வேலைகளை மேற்பார்வை செய்யும் டைரக்டரை அணுகி, அங்கு தங்கியிருப்பவர்களின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்துக் கொள்வதில் தான் மனமுவந்து உதவ வந்திருப்பதாக கூறினார். விருப்பமுள்ளவர்கள் அனைவரும் கலந்துகொள்வதற்கு வசதியாக வாரா வாரம் இலவசமாக பைபிள் படிப்பு நடத்த தான் ஆசைப்படுவதாகவும் அந்த சகோதரி சொன்னார். அங்கு தங்கியிருப்பவர்களை அவர்களது அறைகளுக்குப் போய் சந்திக்க அந்த டைரக்டர் அனுமதியளித்தார். சீக்கிரத்திலேயே அவர்களில் 26 பேருக்கு வாரத்தில் மூன்று முறை போய் பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார்; அவர்களில் ஒருவர் தவறாமல் நம் கூட்டங்களுக்கு வருகிறார்.
17. பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் என்ன அணுகுமுறை பெரும்பாலும் பயனளிக்கிறது?
17 ராஜ்ய அறிவிப்பாளர்கள் சிலர் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி நேரடியாக சொல்வதன் மூலம் நல்ல பலன்களைப் பெற்றிருக்கிறார்கள். 105 பிரஸ்தாபிகள் உள்ள ஒரு சபையினர் ஒருநாள் காலை தாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி சொல்ல விசேஷ முயற்சி எடுத்தார்கள். அன்று வெளி ஊழியத்தில் 86 பிரஸ்தாபிகள் கலந்துகொண்டார்கள்; இரண்டு மணிநேரம் செய்த ஊழியத்தில் குறைந்தது 15 புதிய பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார்கள்.
தகுதியானவர்களைத் தொடர்ந்து தேடுங்கள்
18, 19. இயேசுவின் எந்த முக்கியமான வழிநடத்துதலை நாம் மனதில் வைக்க வேண்டும், அதற்காக என்ன செய்ய நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும்?
18 ராஜ்ய அறிவிப்பாளர்களாக, இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை நீங்கள் முயன்று பார்க்க விரும்பலாம். சாட்சி கொடுக்கும் முறைகளை சிந்திக்கையில் உள்ளூர் பழக்கங்களையும் கவனத்தில் வைப்பது உண்மையில் ஞானமான செயல். எல்லாவற்றிற்கும் மேலாக, தகுதியானவர்களைத் தேடுவதற்கும் அவர்கள் சீஷராக உதவுவதற்கும் இயேசு கொடுத்த வழிநடத்துதலை நாம் மனதில் வைப்போமாக.—மத்தேயு 10:11; 28:19.
19 அதற்காக, ‘கடவுளுடைய வார்த்தையை சரியாய் பயன்படுத்துவோமாக.’ முழுக்க முழுக்க வேதாகமத்தின் அடிப்படையில் ஆதாரங்காட்டி இணங்க வைப்பதன் மூலம் அதை நாம் செய்யலாம். கேட்போரின் இருதயத்தை எட்டுவதற்கும் அவர்களை செயல்படும்படி தூண்டுவிப்பதற்கும் இது நமக்கு உதவும். ஜெபசிந்தையுடன் யெகோவாவை சார்ந்திருக்கையில் இயேசு கிறிஸ்துவின் சீஷராகும்படி சிலருக்கு உதவுவதில் கைகொடுக்கலாம். இது எவ்வளவு பயனளிக்கும் வேலை! எனவே, சீஷராக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு பிரசங்கிக்கையில், எப்போதும் யெகோவாவுக்கு புகழ் சேர்க்கும் வைராக்கியமுள்ள ராஜ்ய அறிவிப்பாளர்களாக இருப்போமாக. ‘நம்மை தேவனுக்கு முன்பாக உத்தமராக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிருப்போமாக.’—2 தீமோத்தேயு 2:15.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• அப்பொல்லோவுக்கு தேவனுடைய மார்க்கத்தை முற்றும் முழுமையாக ஏன் விவரிக்க வேண்டியிருந்தது?
• பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அப்போஸ்தலன் பவுலிடமிருந்து எவ்வழிகளில் கற்றுக்கொண்டார்கள்?
• சீஷராக்கும் வேலை சம்பந்தமாக அப்போஸ்தலர் 18-ம் அதிகாரத்திலிருந்து என்ன கற்றிருக்கிறீர்கள்?
• சீஷராக்குவதற்கு வாய்ப்புகளை நீங்கள் எப்படி உருவாக்க முடியும்?
[பக்கம் 19-ன் படம்]
பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அப்பொல்லோவுக்கு “தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் விவரித்துக் காண்பித்தார்கள்”
[பக்கம் 20-ன் படம்]
அப்பொல்லோ சீஷராக்குவதில் அதிக திறம்பட்டவரானார்
[பக்கம் 21-ன் படம்]
சென்ற இடமெல்லாம் பவுல் பிரசங்கித்தார்
[பக்கம் 23-ன் படங்கள்]
பிரசங்கிக்க வாய்ப்புகளை உருவாக்குங்கள்